(1)
பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி, ரொறொண்டோவிலுள்ள காவற்துறையால், 'கறுப்பினத்தவர்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளையினத்தவர்களைச் சேர்ந்தவர்களை விட மூன்று மடங்கு நிறுத்தப்படவும், அடையாள அட்டைகளைக் கேட்கவும் செய்யப்படுகின்றார்கள்' என்று கூறப்படுகின்றது. இத்தகைய நிறவேறுபாடு ரொறொண்டோ பொலிசிடம் இப்போதுதான் அடையாளங் காணப்படுகிறது என்பதல்ல. கிட்டத்தட்ட எட்டு வருடங்களிற்கு முன்னும் இவ்வாறு காவல்துறையினர் நிறவேறுபாடு காட்டுகின்றார்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. வழமைபோல அப்போது பொலிஸ் உயரதிகாரிகள் இது குறித்து கவனிக்கிறோம் என்று கிடப்பில் போட்டிருக்கின்றார்கள் போலும். இல்லையெனில் எட்டு வருடங்களின் பின் செய்யப்பட்ட இந்த ஆய்வு இன்னும் நிறவெறி இருக்கிறது என்று விரித்துக் கூறியிருக்காது. மிகுந்த அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கும் பொலிஸ் குறித்து வெளியிடப்படும் பிற குற்றச்சாட்டுக்கள் (இலஞ்சம் வாங்குதல்/போதைமருந்துக் கடத்தலிற்கு உடந்தையாக இருத்தல்) போன்றவை கூட கடந்தகாலத்தில் சாதாரண எடுத்துக்கொள்ளப்பட்டு 'காவற்துறையின் கண்ணியம்' காக்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் முக்கியமாய், இந்த அறிக்கையில் பொலிஸால் 'மண்ணிற' நிறமுடையவர்களும் இவ்வாறு கறுப்பின மக்களைப் போல நிறுத்தவும் அடையாள அட்டைகள் காட்டவும் கேட்கப்படுகின்றார்கள் என்பது கவனிக்கத்தது. இந்த 'மண்ணிற'வகைக்குள் அடக்குபவர்களில் நாங்களும் இருக்கின்றோம் என்பதை நினைவூட்டத்தேவையில்லை. மேலும் பொலிஸ் ஒருவரை நிறுத்தி விசாரிக்கும்போது அவர்களிற்கு உரிய ஒரு புத்தகத்தில் விசாரிக்கப்படும் நபர் நிறம், பெயர், முகவரி, உட்பட அவர் விசாரிக்கப்படுவதற்கான காரணமும் எழுதப்படவேண்டும் என்று அறிவுறுத்தபபடுகின்றது. ஆனால் தனிமனிதருக்குள்ள உரிமையில், தடுத்து நிறுத்தி விசாரிக்கப்படும் ஒருவர், தனது சுயவிபரங்களை (பெயர், முகவரி) என்பவற்றை பொலிஸிடம் கொடுக்காது இருக்கமுடியுமெனச் சட்டம் கூறுகின்றது. அதேசமயம் பொலீஸ் இவ்வாறு விபரங்களைக் கேட்கும்போது ஒருவர் கொடுக்க மறுத்தால், அவரைச் 'சந்தேகத்திற்குரிய நபர்' என்ற வகைக்குள் அடக்கி மேலும் தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தும் அபாயமும் இருக்கிறது என்று இந்த ஆய்வு கவனத்திற்கு உட்படுத்துகிறது.
பொலிஸ் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைக் குறைக்கும்பொருட்டு, பொலிஸின் தவறான விசாரணைகளை நாம் நமது தொகுதிகளில் நாம் தேர்ந்தெடுக்கும் கவுன்சிலர்கள், எம்பிமார்களின் கவனத்திற் கொண்டுவரலாம். பொலிஸ் என்பது நமது வரிப்பணத்தில் நமக்காக நடத்தபடுகின்ற் ஒரு அமைப்பே தவிர, அவர்கள் கூறும் அனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதை நாம் நினைவில் இருத்தியாக வேண்டும். மேலும் சிறுபான்மையாகவுள்ள (minorities) பல்வேறு சமூகங்களிலிருந்து காவற்துறைக்கு ஆட்களைச் சேர்க்கவேண்டும் என்று நாம் பொதுவெளியில் வலியுறுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, நிறத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்தை ஆக்குபவர்களாகவும், காவற்துறையில் நிறைய இடங்களில் இருப்பவர்களாகவும் இருக்கும்போது அவர்களால் 'மற்றவர்களை' (சிறுபான்மையினரை) அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ள முடியாது.
(2)
இதேபோன்று ரையசன் (Ryerson) பல்கலைக்கழகத்தை முன்வைத்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றையும் நாம் கவனிக்கவேண்டும். ஒராண்டு காலமாய் பல்கலைக்கழகத்தின் பல்வேறு மட்டத்தில் கலந்துரையாடியும், திறந்தவெளியில் கருத்துக்கேட்டும் வெளியிட்டப்பட்ட இவ்வறிக்கை ரையசன் வளாகத்தில் நிறவெறி உயர்மட்டத்தில் அதிகம் நிலவுவதாகக் கூறுகின்றது. முக்கியமான பல்கலைக்கழக அலுவலக உயர்மட்டத்தில் வெள்ளையினத்தவர் அல்லாத சிறுபான்மையினர் மிக்ககுறைவாக உள்ளதாகக் கூறுகின்றது. அத்துடன் சில பேராசிரியர்கள் மற்றும் பணிபுரிவோர் போன்றோர் பிற சிறுபான்மையினரைக் கவனத்திற்கொள்ளாது வகுப்பில் பகிடிகள் விடுவதாகவும், பிற மாணவர்கள் இவ்வாறு சிறுபான்மையினரை வகுப்புக்களில் கேலிசெய்யும்போது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ரையசனில் படிக்கும் பூர்வீகக்குடியைச் சேர்ந்த ஒருவர் 'வீடற்றவர்' (homeless) என அடையாளப்படுத்தப்பட்டு வளாகத்தின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வறிக்கையை எழுதியவர்கள், நிறவெறிக்கு எதிரான, காலனியாதிக்கத்திற்கு எதிராக, முஸ்லிம் வெறுப்புணர்வுக்கு எதிராக, யூதர் வெறுப்பு எதிராக பல்வேறு பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டுமெனப் பரிந்துரைந்திருக்கின்றது. மேலும் கறுப்பின மற்றும் பூர்வீகக்குடியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களைப் போன்ற சிறுபான்மை சமூகங்களிலிருந்து இன்னும் நிறையப் பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்தவேண்டுமென எதிர்பார்ப்பதாய்க் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கையை அடுத்து பல்கலைக்கழகத்தின் தலைவர், ஒரு குழுவை அமைத்து இவ்வாறான விடயங்கள் தொடர்ந்து நிகழாது பல்வேறுமட்டங்களில் விழிப்புணர்வு செய்யப்படுமெனக் கூறியிருக்கின்றாரெனப் பத்திரிகைச் செய்தியொன்று கூறுகின்றது.
(3)
ஜனவர் மாதத்தில், ரெண்டனில்(Trenton) இருக்கும் விமானப்படைத்தளத்தின் ஒரு பகுதியிற்குப் பொறுப்பாக இருக்கும் கேணல் ரஸல் வில்லியம்ஸ் (Russell Williams) இரண்டு பெண்களைக் கொன்ற குற்றத்திற்காய் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றார். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா, கனடாப் படைகள் செய்யும் அட்டூழியங்கள் நாம் அறியாததுமல்ல. அண்மையில் ஆப்கான் சிறைச்சாலைகளில் மிகக்கொடூரமாய் கனேடிய படைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று அறிக்கையை வைத்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்வதைத் தவிர்ப்பதன் பொருட்டே கனேடிய பிரதமர் ஹார்ப்பர் பாராளுமன்றத்தை நீண்டகாலத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். கனடாப் படைகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும், ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதை வலதுசாரி பிரதமரும் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களும் விரும்புகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் தேசியம் என்ற பெயரால் கனேடிய படைகள் செய்யும் துஷ்பிரயோகங்களையும் பாலியல் வன்புணர்ச்சிகளை மூடிமறைக்கத் தெரிந்த அரசுக்கு இப்படி ஒரு கேணல் தரத்தைச் சேர்ந்தவர் இரண்டு பெண்களைக் கொன்றதும், மேலும் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையும் மறைக்கமுடியாது விழிபிதுங்கி நிற்கவேண்டியிருக்கிறது. எந்த நாட்டு அரசும் தனது அதிகாரவர்க்க காவலாளிகளான இராணுவம் பொலிஸ் என்பவற்றை -அவை எந்தத் தவறைச் செய்தாலும்- விட்டுக்கொடுக்க அனுமதிப்பதில்லை. நாட்டின் இறையாண்மையைக் காரணங்காட்டி இவற்றை 'சாதாரண' விடயமாக்கிவிடுவார்கள்.
ஏன் இவ்வளவு குற்றச்சாட்டுக்கு உள்ளான கேணல் கூட இன்னும் சில வருடங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துவிடவும் கூடும். இராணுவம், பொலிஸ் என்ற அதிகார மையங்கள் எப்போதும் அப்பாவிகள் மீதே தனது பலத்தை நிரூபித்து தாம் தமது கடமைகளைச் செய்துகொண்டிருப்பதாய்க் கூறிக்கொண்டிருப்பார்கள். இந்தக் கேணலின் விவகாரத்தோடு, புதிய ஜனநாயக் கட்சியினர் (NDP) இராணுவ உயர்மட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், அதிகாரங்கள் குவிந்து துஷ்பிரயோகமும் செய்வதைத் தவிர்ப்பதன் பொருட்டும், இராணுவம் சாராத மக்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் அலுவலகர் ஒருவர், இவ்வாறான இராணுவமையங்களில் அமர்த்தப்படவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்திருக்கின்றார்கள். முன்னர் சோமாலியாவில் கனேடியப் படைகள் இவ்வாறான துஷ்பிரயோகம் செய்த காலங்களில் இவ்வாறான ஒரு சிவில் அலுவலகர் நியமிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் மக்கள் நலன் சார்ந்து தொழிற்படும் ஒரு அரசாக அல்லாத வலதுசாரிகளைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இவ்வாறான கோரிக்கைகள் எல்லாம் வலதுசாரி அரசின் காதில் ஏறுமா என்பதும் சந்தேகமே.
எழுதுவதற்கு உதவிய இணைப்புக்கள்:
(1) www.thestar.com/news/gta/article/761551--when-good-people-are-swept-up-with-the-bad
(2) www.thestar.com/news/gta/education/article/762011--ryerson-told-to-crack-down-on-racist-chill
(3) www.thestar.com/news/ontario/article/762152--cfb-trenton-chief-charged-with-murder-of-two-women
(நன்றி: வைகறை, Mar, 2010)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//'கறுப்பினத்தவர்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளையினத்தவர்களைச் சேர்ந்தவர்களை விட மூன்று மடங்கு நிறுத்தப்படவும், அடையாள அட்டைகளைக் கேட்கவும் செய்யப்படுகின்றார்கள்' //
4/02/2010 05:03:00 PMகனடா என்றல்ல பிரான்சிலும் இதே!
விடுதலை,சமத்துவம்,சகோதரத்துவம்
என்பது பொறிக்கப்பட்ட சுவரிலேயே இங்கே உள்ளது.
Post a Comment