எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி' இறந்த நண்பனின் ஒருவனை முன்னிட்டு மற்ற மூன்று நண்பர்களின் நினைவுகள் கிளைக்கும் ஒரு நாவல். அத்தியாயங்கள் எதுவுமே பிரிக்கப்படாது இருப்பதுபோல ஒரே தொடர்ச்சியில் வாசிக்க வைக்கக்கூடிய நாவல். கதை மூன்று வெவ்வேறு தளங்களில் நகர்கின்றது; நண்பனின் இறப்பின்போது நிகழ்வது ஒன்று. மரணச்சடங்கு முடிந்தபின் இம்மூன்று நண்பர்களும் காட்டுக்குச் சென்று இழப்பை ஆற்றிக்கொள்வது மற்றொன்று. மூன்றாவது இம்மூன்று நண்பர்களும், தமக்கும் காலமான நண்பனுக்குமான கடந்தகால நினைவுகளை மீள அசைபோடுவது. எவ்வாறு இந்நாவல் ஒருவித வெறுமையுடனும் தொடங்குகின்றதோ அவ்வாறே முடிகின்றது. கசப்பின் நிழலும் வாழ்வின் மீதான அபத்தத்தின் வெளியும் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றது. உண்மையில் இம்மூன்று நண்பர்களும் இறந்த நண்பனை நினைவுகொள்வதன் மூலம் தம் வாழ்வைத் திரும்பிப் பார்க்கின்றனர். தான் தோன்றித்தனமான, கிறுக்குத்தனமான வாழ்வை வாழ்ந்து சொற்ப வயதில் இறந்துபோயிருந்த நண்பன் அவனளவில் அவன் விரும்பிய வாழ்வை வாழ்ந்திருக்கின்றான் என்பதற்கு அண்மையான முடிவுகளை எட்டுகின்றனர். 'உறுபசி'யை வாசிக்கும் நமக்கும், தகப்பனை அடிக்க விறகுக்கட்டை கொண்டோடும்..., லொற்றரி ரிக்கெட் வாங்கி அதிஷ்டத்தை பரிசோதிப்பதை ஒரு முழுநேரத் தொழிலாகக்வே கொள்ளும்... தன் துணை மீது நேசமும் உக்கிரமான காமமும் கொண்டிருக்கும்... தன் கல்லூரிக் காலத்தில் கம்பராமாயணத்தை எரித்து கல்லூரியில் இருந்து நீக்கப்படுபவனை... ஒரு புலனாய்வுப்பத்திரிகைக்கு பிழை திருத்த வேலை செய்யபோய் செய்திகளில் வரும் கொலைகளையும் பாலியல் வன்புணர்ச்சிகளையும் தானே செய்வதாய் மனப்பிறழ்வு அடையும் இறந்தபோன சம்பத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்ற குழப்பமே ஏற்படுத்துகின்றது. அந்தச் சிக்கலே நம்மை இன்னும் கேள்விகளைத் தொடுக்கவைத்து ஓர் எளிதான முடிவை சம்பத்தின் முன்வைத்து எடுக்க வைக்க முடியாது செய்துவிடுகின்றது. அதேசமயம் நாம் கூட சம்பத்தைப்போல ஆகிவிடக்கூடுமோ என்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஒருசேரத் தருகின்றது. எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவல் குறித்து எழுதியபோது அதில காமத்தை எஸ்.ரா மிக எளிதாகக் கடந்துவிடுகின்றார் என்ற விமர்சனத்தை வைத்திருந்தேன். ஆனால் இந்த நாவலில் காமம் மிக அற்புதமாகவும், மிகைப்படாமலும் விபரிக்கப்படுகின்றது என்பதைக் குறித்தாக வேண்டும்.
....................................................
Wes Anderson இயக்கிய 'Darjeeling Limited' முழுத் திரைப்படமுமே இந்தியாவிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றது. நெறியாள்கையாளர் Wes Andersonற்கு சத்தியத் ரேய் மீது மிகுந்த மதிப்பு இருக்க்கின்றது. இப்படத்தை ரேயிற்கு காணிக்கை செய்த்தை மட்டுமின்றி ரேயின் படங்களில் வரும் சில கமராக் கோணங்களும் வருகின்றன. மூன்று சகோதரர்களைப் பற்றிய கதை இது. இந்தியாவில் அனைவரும் சந்திப்பதாய் ஒரு சகோதரர் முடிவு செய்து மற்ற இருவரையும் அழைக்கின்றார். இவர்கள் மூவரும் தமது தகப்பன் இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு இப்போதுதான் முதன்முதலில் சந்திக்கின்றனர். டார்ஜிலிங்குப் போகும் புகைவண்டியிலேயே கதை நிகழ்கின்றது. இப்பயணம் ஒரு ஆன்மீகப் பயணம் என்று இத்திட்டத்தை வகுக்கும் சகோதரர் கூறிக்கொண்டாலும், அவர் இந்தியாவில் யேசுவிற்கு தன்னை அர்ப்பணித்திருக்கும் தாயைத் கண்டுபிடிக்கவவே இப்பயணத்தை ஒழுங்கு செய்திருக்கின்றார் என்பதை மற்றச் சகோதரர்கள் பின்னர் கண்டுபிடிக்கின்றனர். தாய், அமெரிக்காவில் தகப்பன் இறந்தபோதுகூட மரணநிகழ்வுக்குப் போனதில்லை என்பதோடு இவர்கள் அவரைக் கண்டுபிடிக்கும்போதுகூட சாமர்த்தியமாக இவர்களை விலத்திவிட்டுப் போய்விடுகின்றார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது சுவாரசியமானது. பயணத்தின் நடுவில் புகைவண்டியில் வேலை செய்யும் ஒரு பெண்ணோடு ஒரு சகோதருக்கு காதல் வருகின்றது. Sweet Lime பெண் என அழைத்து உறவும் வைத்துக்கொள்கின்றார். இக்காட்சியை ஜெயமோகனின் கண்ணாடி கொண்டு பார்த்தால், நாம் உடனேயே இது ஒரு 'ஐரோப்பிய சிந்தனைவாதம்' என உடனேயே ஒரு அடி பிடறியில் போட்டுவிட்டு நகர்ந்துவிடலாம். இல்லை, ஏற்கனவே காதலன் இருக்கும் பெண் விரும்பித்தான் உறவு கொண்டார் என இயல்பாய் எடுத்து தலையைப் பிய்க்காமலும் இரசிக்கலாம். அது அவரவர் விருப்பைப் பொறுத்தது.
இந்தப்படத்தில் புகைவண்டியில் வேலைசெய்பவராக நடிக்கும் பெண்ணில் ஈர்ப்பு ஏற்பட்டு தேடிப்பார்த்தபோது அவர் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்தவர் என்பது தெரியவந்தது. அமரா கருணாகரன் என்பது முழுப்பெயர். அமரா கரண் என சுருக்கி வைத்திருக்கின்றார். மாயா, அசினைப் போல நான் அமராவிற்கு இனிவருங்காலங்களில் அடிமையானாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இப்படத்தைப் பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். மிக ஆறுதலாகவே காட்சிகள் நகர்கின்றன. பெரிய ஆச்சரியங்ககளையும், சடுதியான திருப்பங்களையும்,நெஞ்சை உலுக்கும் முடிவுகளையும் எதிர்பார்க்கும் ஒருவருக்கு இப்படம் நிச்சயமாகப் பிடிக்காது என்பதையும் முன்னராகவே கூறிவிடுகின்றேன். இப்படத்திற்கு முன்னராக அண்டர்சன், Hotel Chevalier என்கின்ற 13 நிமிடக்குறும்படம் எடுத்திருந்தார். அக்குறும்படமே பின்னர் Darjeeling Limit ஐ முழுநீளப்படமாக எடுக்க ஒரு உந்துதலாக இருந்திருக்கிறது. இப்படம் தொடங்குவதன் முன் Hotel Chevalier குறும்படமும் காண்பிக்கப்படுகின்றது.
....................................................
நோரா ஜோன்ஸ் முதன்முதலாக நடிகையாக நடித்த 'My Blueberry Nights' படம் Wong Kar-wai ஆல் எடுக்கப்பட்டது. யார் இந்த சீன நெறியாள்கையாளர் என்பதை... தமிழ்வலைப்பதிவுகளில் நிறையப் பதிவுகள் எழுதப்பட்ட In the mood for love படத்தை எடுத்தவர் என்றால் எல்லோருக்கும் எளிதாக விளங்கும். கதையை எளிதாகச் சொல்வதனால் காதலில் தோல்வியுற்ற பெண் தனக்குப் பொருத்தமான துணையை கண்டடைதல் எனக் கூறலாம். படத்தின் பெரும்பகுதி உணவங்களிலும் இரவுகளிலும் நிகழ்கிறது. தன் காதலனால் கைவிடப்பட்ட எலிசபெத் (நோரா ஜோன்ஸ்) தன் துயரைப் போக்க ஜெரோமி (ஜூட் லோ) நடத்த உணவகத்திற்குப் போகத் தொடங்குகின்றார். வாடிக்கையாளரால் ஒருபோதும் வேண்டப்படாத ப்ளுபெர்ரி பை (blueberry pie)யைச் சாப்பிட்டுக் கொண்டு கடை மூடும் பின்னிரவுவரை எலிசபெத் உரையாடிக்கொண்டிருப்பார். பிறகு தன் காதலின் நினைவுகளை மறப்பதற்காய் வெவ்வேறு நகரங்களுக்குச் சென்று பகலும் இரவுமென உணவங்களில் உணவு பரிமாறுபவர்களாய் வேலை செய்யத்தொடங்குகின்றார். தனது வருமானத்தின் மூலம் ஒரு காரை வாங்கி பயணம் செய்யவேண்டும் என்பது எலிசபெத்தின் கனவாக இருக்கிறது. வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு உணவங்களில் வேலை செய்துகொண்டு அங்கு நடப்பவற்றை ஜெரோமிக்கு கடிதங்களாய் எழுதுகின்றார். ஆனால் ஒருபோதும் தான் இருக்கும் முகவரியை எலிசபெத் எழுதுவதேயில்லை. எலிசபெத் எங்கேயிருக்கிறார் என ஜெரோமி அறிய முயலும் முயற்சிகளும் தோல்விகளிலேயே முடிகின்றன. இதன் நடுவில் எலிசபெத் சந்திக்கும் இருவர் (அதிலொருவர் Natalie Portman) எலிசபெத்தை மிகவும் பாதிக்கின்றனர். எலிசபெத் கார் வாங்கினாரா, அவரது முன்னால் காதலனுடன் சேர்ந்தாரா, எலிசபெத்தைத் தேடிய ஜெரோமிக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இப்படத்தைப் பார்ப்பவர்க்கு விட்டுவிடுவோம். எளிமையான கதை, ஒரு சில முக்கிய பாத்திரங்கள் மற்றும் நோரா ஜோன்ஸின் இயல்பான நடிப்புடன் அலுப்படையாது படம் நகர்வதுதான் முக்கியமானது.
....................................................
2.0 சில கேள்விகள்
ஜெயமோகன் 'அறம்' மற்றும் 'சோற்றுக்கணக்கு' ஆகிய இரண்டு நல்ல யதார்த்தவாதக் கதைகளை அண்மையில் எழுதியிருக்கின்றார். தொடக்கத்தில் இருந்தே எனக்கு ஜெயமோகனின் சிறுகதைகள் பிடிக்கும் எனச் சொல்லிக்கொண்டே வந்திருக்கின்றேன். முக்கியமாய் ஜெயமோகன் தனது கதை நகரும் சூழலுக்குள்ளும், பாத்திரங்களுக்குள்ளும் நம்மை எளிதாகப் பொருத்திக்கொள்ளக்கூடியதாக செய்துவிடுவார். 'அறம்' கதையில் பெரியவர் பாக்கைச் சீவல்களாக ஆக்குவதும்..., 'சோற்றுக்கணக்கில்' கெத்தேல் சாகிப் உணவு பரிமாறுவதும்... விரிவாகப் பேசப்படுவது நம்மை அதற்குள் உள்ளிழுத்துக் கொள்ளும் உத்திதான். பிறகு கதையோடு நாமும் ஒரு மறைமுகமான பாத்திரமாக நகர்ந்துகொண்டிருப்போம். இந்த இரு கதைகளுமே உயிரோடு வாழ்ந்த இருவரைப் பற்றி புனைவின் மொழியில் பேசுவதால் நம்மை இன்னும் வசீகரிக்கின்றது. இதில் எவையெவை யதார்த்ததில் நடந்திருக்கும் என மனம் அறிய விரும்புவதால் தொடர்ந்து எம்மை அசைபோடச் செய்கின்ரன. மற்றது தமிழர்க்கும் தமிழ்ச்சூழலுக்கு என்றுமே விருப்பமான மிகை உணர்ச்சிச் சூழலில் கதை நகர்த்தபடுவதால் பொதுவாக அனைவர்க்கும் வாசித்தவுடனேயே இவ்விரு கதைகளும் பிடித்தும் போய்ப்விடுகின்றது. இன்னுமொரு விடயம், மிக எளிமையான சொற்களால் அமைக்கப்பட்ட எவ்வித சிக்கல்களுமில்லாத வாக்கிய அமைப்புக்கள். ஆக இவற்றின் அடிப்படையில் எனக்கும் இவை நல்ல சிறுகதைகள் எனச் சொல்வதில் தயக்கங்களில்லை.
இப்போது இந்த இரண்டு கதைகளையும் சற்று இழையிழையாகப் பிரித்துப் பார்ப்போம். அதாவது சில பொதுப்பண்புகளை அடையாளங் காணமுயல்வோம். ஜெமோவின் புனைவுகளில் வரும் பாத்திரங்களுக்கு குறி இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் சாதிய அடையாளங்கள் துருத்திக்கொண்டேயிருக்கும். 'அறத்தில்' வருவது பெரியவர்தான். ஆனால் அவரின் பேச்சு மொழி பிராமணப் பேசுமொழியாக இருக்கிறது. அதேபோல 'சோற்றுக்கணக்கு' கதையைச் சொல்பவர் ஒரு 'வேளாளன்' எனக் கூறப்படுகின்றது. சரி, அறத்திலாவது பெரியவர் செளஷ்டிரா சாதியினராக இருப்பதை இப்போதைக்கு விடுவோம். ஆனால் சோற்றுக்கணக்கில் ஏன் கதைசொல்லி ஒரு வெள்ளாளன் என தேவையில்லாது புகுத்தப்படுகின்றது என யோசித்துப் பார்க்கவேண்டும் (‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன்). இக்கதையில் சாதி அடையாளம் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்படுகின்றது ஏன் எனக் கூறுகின்றேன் என்றால், கதையில் உணவுக்கடை வைத்திருக்கும் முஸ்லிம் பாத்திரம் எல்லோருக்கும் கணக்குப் பார்க்காது உணவு பரிமாறும் ஒரு அற்புதமான மனிதர். சாப்பிட விரும்பும் எவரும் சாப்பிடலாம்; காசு கொடுக்க விரும்பும் எவரும் பெட்டிக்குள் விரும்பிய காசைப் போட்டுவிட்டுப் போகலாம் என உயர்வாக நினைக்கும் ஒரு மனிதாபிமானி, வரும் ஒவ்வொருவரையும் பார்த்து இவரின்ன சாதியென பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. கதையிலேயே அந்த முஸ்லிம் பாத்திரம் மிகக் கொஞ்சமாகவே கதைப்பார் எனவும் சொல்லப்படுகிறது. எனவே இங்கேதான் ஜெமோ தன் விருப்பை நாசுக்காய் செருகிவிடுகின்றார். அதுவும் சும்மா அல்ல, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அல்லவா விழுத்திவிடுகின்றார். ஒன்று அந்தக் கதை சொல்லிப் பாத்திரத்தை தெளிவாக 'வெள்ளாளன்' என வாசகருக்குச் சொல்லிவிடுகின்றார். கதைக்கு அவசியமில்லாத அச்சாதி அடையாளம் இல்லாவிட்டால் நாம் விரும்பினால் வெள்ளாளன் என்றோ தலித் என்றோ அல்லது சாதாரண ஒரு மனிதன் என்றோ...எவராகவோ அடையாளங்கண்டுகொண்டிருப்போம். இரண்டாவது விடயந்தான் இன்னும் முக்கியமானது...கதைசொல்லி ஒரு வெள்ளாளன் எனச் சொல்லிக் காட்டுவது முஸ்லிம் பாத்திரத்தால். ஆக, கவனித்தீர்களா, முஸ்லிம்களும் நுட்பமாக சாதி பார்ப்பவர்கள்தான் எனக் கத்தியைச் சொருகிவிட்டு நகர்வதுதான் ஜெயமோகனுக்குள் ஒளிந்திருக்கும் 'அறம்'.
பசிக்கும் எவரும் விரும்பியவாறு சாப்பிடலாம் என மிகுந்த மனிதாபிமானத்தோடு நினைக்கும் அந்த முஸ்லிம் பாத்திரம், ஒரு வெள்ளாளனுக்கு அவன் வெள்ளாளன் என்று சொன்னால் சாதாரணமாகவோ அல்லது பெருமையாக நினைக்கும் வெள்ளாளனைப் போல, ஒரு பள்ளனிடமோ பறையனிடமோ நீ ஒரு பள்ளனோ/பறையனோ எனச் சொல்லும்போது எவ்வளவு அசிரத்தையாக உணரும் என்கின்ற எளிய உண்மையை அறியாதவராக இருப்பாரா என்ன? அன்னமிடுகின்றபோது எதையும் அளந்து போடாத மனம், சாதியை மட்டும் உற்றுப்பார்ப்பது என்பது இயல்பாய் இருக்ககூடுமா என்ன?
கதையில் இது ஒரு சிறுபகுதி இதற்குள் முட்டையில் மயிரைப் புடுங்கும் மடையா எனத் திட்டுபவர்களை இப்போது நான் உங்களை 'கூகை' நாவலுக்குள் அழைத்துப் போகின்றேன். நீங்கள் முழு நாவலையும் வாசிக்கவேண்டும் என்கின்ற அவசியமுமில்லை. முதலாவது அத்தியாயத்தை மட்டும் வாசியுங்கள். இரண்டு தலித்துக்கள், தம் கிராமத்திலிருந்து நகரம் ஒன்றுக்குச் செல்கின்றார்கள். அவருக்கு அங்கே ஒரு உணவுக்கடையில் தோசை/இட்லி சாப்பிட பெரு விருப்பமாய் இருக்கின்றது. நீண்டகாலக் கனவும் கூட. கையில் போதியளவு காசிருக்கிறது. ஆனால் இவர்கள் தலித்துக்கள் என்றால் சாப்பிட இலை விரிக்க மாட்டார்கள். சுற்று முற்றும் பார்த்துவிட்டு உணவகத்திற்குள் நுழைகின்றார்கள். கடைக்காரர் உற்று உற்றுப் பார்க்கின்றார். இவர்கள் புதியவர்களாக இருப்பதால் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என அவரால் அடையாளங்காண முடியவில்லை (ஜெயமோகன் படைத்திருந்தால் சும்மா சட்டெனச் சாதியை கடைக்காரர் நுகர்ந்து பிடித்திருப்பார்). எனவே அவர் பரிமாறுகின்றார். அவர்கள் சந்தோசத்துடன் சாப்பிடத்தொடங்குகின்றார்கள். ஆனால் என்ன பரிதாபம்...சாப்பாட்டின் இடைநடுவில் இவர்களின் ஊர்க்காரர் ஒருவர் அங்கே வந்துவிடுகின்றார். அவர் ஆதிக்கச் சாதிக்காரர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அடி உதை இவர்கள் இருவருக்கும் விழுகின்றது. ஊரில் கையைக் கட்டி வாயைப் பொத்தி நிற்கும் சாதிக்கு எங்களோடு நிகராக மேசையில் சாப்பிடக் கேட்கிறதா? என ஊர் வரை துரத்தி துரத்தி அடிவிழுகிறது. பிறகு இப்படியொரு மாபெரும் குற்றத்தைச் செய்தற்கான தண்டனை ஊருக்குள் வைத்துக் கொடுக்கப்படும்வரை கதை நீளுமென நினைக்கின்றேன்.
இப்போது மீண்டும் அந்தச் சோற்றுக்கணக்குக் கதை வாருங்கள்... இங்கேதான் நாம் எழுத்தின் அறம் குறித்துப் பேசவேண்டும். அறம் என்பது சாதியை வைத்து எத்தனையோ பேர் எத்தனை இடங்களில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாம் சாதியை எழுத்தில் முன் வைப்பதென்பது கூட மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் வைக்கவேண்டும். அதுவும் கூகையை எழுதியது வேறு ஒருவருமல்ல. ஜெமோவிற்குப் பிடித்த சோ.தர்மன். இந்தக் கதையை எழுதும்போது ஜெமோ என்றபடைப்பாளிக்கு ஒருகணம் ஒருவிடயம் மின்னல் வெட்டியிருக்கவேண்டும். இதை வெள்ளாளன் என அந்த முஸ்லிம் பாத்திரத்தினூடாக சொல்லவைத்ததைப் போல ஒரு தலித் பாத்திரத்தை அமைத்திருந்தால் அதன் மனம் எவ்வளவு பதைபதைத்திருக்கும்...அது நியாயமில்லை அல்லவா என உணர்ந்திருக்கும். 'உன்னைப் பார்த்தால் வெள்ளாளன்' போல இருக்கிறது என்று வருவதைத் தவிர்த்திருக்கச் செய்திருக்கும்.
இதைத் தீவிரமாக முன்வைப்பதற்கு என்ன காரணம் என்னவென்றால், நான் 'சோற்றுக்கணக்கு'க்கதையோடு மிக ஒன்றி வாசித்துக் கொண்டிருக்கும்போது....முக்கியமாக ஜெமோ அங்கே கோழிக்கறி/மீன் குழம்பு பரிமாறப்படுவதை எழுதியதை வாசிக்கும்போது நாவில் ருசி வந்தமாதிரியே இருந்தது (சிலவேளை இக்கதையை மதிய உணவுக்கு முன் வாசித்ததாலோ தெரியவில்லை). ஆனால் சட்டென்று அந்த முஸ்லிம் பாத்திரம் தொடர்பேயில்லாது 'நீ வெள்ளாளன்' என்றபோது 'ஆகா கடைசியில் "ஜெமோவின் "நான்" இங்கேயும் பல்லிளிக்கிறதே' என எரிச்சல் வந்ததே இதற்குக் காரணம். ஜெமோ யதார்த்தத்தைத்தானே எழுதியிருக்கின்றார்...இப்படியெல்லாம் கதையை அறுவைச் சிகிச்சை செய்யவேண்டுமா என சபித்தபடி போகின்றவர்க்கு... 'அறம்' கதையில் தெருவில் இருந்த ஆச்சியில் குண்டித்தசை தெருவோடு ஒட்டிக்கிடந்தது என்பதை யதார்த்தம் என ஏற்றுக்கொள்கின்றீர்களா எனவும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். அங்கே 'யதார்த்தத்தை' கொஞ்சம் உயர்வுநவிற்சியாக்க முடியுமென்றால், 'சோற்றுக்கணக்கில்' யதார்த்ததில் நடந்திருந்தாலும் தேவையில்லாததைத் தவிர்த்திருக்கலாம் என்பதையே சொல்லவருகின்றேன். அவ்வாறு தவிர்ப்பதால் அந்தக் கதை எந்தக் 'கீறலை'க் கூட அடைந்திருக்கப் போவதில்லை. இங்கேதான் நாம் ஜெமோ என்ற படைப்பாளியில் 'அறம்' குறித்தும், அவர் யாருக்கு 'சோற்றுக்கணக்கு' காட்டவிரும்புகின்றார் என்பதையும் இந்தக்கதைகளைச் சிலாகிப்பது போலவே நாம் நேர்மையாகப் பேசவேண்டும்.
....................................................
3.0 குறும்படம்
'Hotel Chevalier'
4 comments:
டிசே, பகை மறப்பு சாத்தியமாகுமோ என்னவோ வாசகர் வட்டம் சாத்தியமே இல்லை எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது :) ப்ளூபெர்ரி ஏற்கனவே பார்த்ததுதான். டார்ஜிலிங் பகிர்விற்கு நன்றி.
2/06/2011 01:54:00 PMபொன்னொச்சிக் குறிப்புகள்.. காரணப் பெயரா இளங்கோ?
2/06/2011 02:36:00 PMஅய்யனார், அஸின் கூட அண்மையில் தான் ஃபேஸ்புக், ரூவிற்றர் போன்றவற்றில் இல்லை எனக் கூறியிருந்தார். எனினும் அவரின் உயிர் இரசிகர்கள் அஸினை எல்லாத் தளங்களிலும் புகழடையச் செய்துகொண்டிருக்கின்றார்களில்லையா? அதேபோன்று நானும் ஜெயமோகனின் வாசகர் வட்டத்தை அதிகாரபூர்வமற்றுத் தொடங்கி அவர் 'புகழை'த் தரணியெங்கும் பரப்ப நினைப்பதில் தவறில்லைத்தானே :-)
2/07/2011 09:14:00 AM....
கிருத்திகன்,
இவ்வாறு அவ்வப்போது குறிப்புகள் எழுதும்போது, எங்கள் (ஊரில்) வீட்டிலும் அயலிலும் நின்ற எனக்குத் தெரிந்த மரங்களினதும் பூக்களினதும் பெயர்களை வைக்கலாமென விரும்பினேன். அஃது மட்டுமே காரணம்.
எனக்குப் பிடிச்ச பூ... பூநாறி. அத விடுவம் :))
2/07/2011 04:13:00 PMஉறுபசி நாவலைவிட எஸ்.ரா.வின் முன்னுரை எனக்கு மிக நெருக்கமாயிருக்கிறது. அது ஏன் என்று தேடிக்கொண்டேயிருக்கிறேன்.
Post a Comment