நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது

Saturday, February 12, 2011

- பகுதி 01
1.
ஷோபாசக்தி இப்போது டிசே தமிழன் கேட்ட 6 கேள்விகள் என ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருக்கின்றார்.  ஆனால் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்ட பின்னணிக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.  ஃபேஸ்புக்கினுள் ஷோபாவும் நானும் தொடர்ச்சியான ஒரு உரையாடலை அண்மைக்காலமாய்ச் செய்து வந்திருக்கின்றோம். எனது தனிப்பட்ட விருப்பு சார்ந்து 'டிசே தமிழன்' என்ற பெயரில் இருக்கும் ஃபேஸ்புக்கில் 45 நண்பர்களை மட்டுமே இணைத்து private access கொடுத்து ஒரு மூடிய தளமாகவே வைத்திருக்கிறேன்.  ஆனால், இப்போது ஷோபா என்னை முன்னிறுத்தி ஒரு பதிவை அனைவரும் பார்க்கக்கூடிய பொதுத்தளத்தில் எழுதியிருக்கின்றார். ஆனால் இது ஃபேஸ்புக்கினுள் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியே. உண்மையில் ஷோபாவின் இப்பதிவு தலையுமின்றி வாலுமின்றி இடைநடுவில் நின்று அந்தரத்தில் ஆடுகின்றது.

'நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றேன்' என ஷோபா குறிப்பிட்டிருந்தார் என்றால் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. எனது பெயரைக் குறிப்பிட்டிருப்பதால் நான் நடந்தவற்றை ஆதியிலிருந்து அந்தமாகப் பொதுத்தளத்தில் முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஷோபா எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார்.  ஷோபா என்னிடம் அனுமதி கேட்காமல் எங்களுக்குள் நடந்த உரையாடலை பொதுத்தளத்தில் வைத்தது  என்னளவில் சோர்வையே ஏற்படுத்தியிருந்தது.  ஆனால் அவரைப் போலின்றி, அவருக்கு நான் இப்படி ஃபேஸ்புக்கில் நடந்த அனைத்தையும் பொதுத்தளத்தில் வைக்கப்போகின்றேன் எனக் கூறியே இங்கே இவற்றை எழுதத் தொடங்குகின்றேன் என்பதையும் குறிப்பிட விழைகிறேன்.

அத்துடன், ஷோபா டிசே தமிழன் கேட்ட கேள்விகள் எனக் கூறுபவை முதலில் வளர்மதியிடம் இருந்து வந்தவை. அதற்கான எந்த கிரடிட்டும் வளர்மதிக்கு ஷோபா கொடுக்கவில்லை என்பது எரிச்சலையே ஊட்டுகின்றது. ஆகவே அந்தக் கேள்விகளின் மூலம் வளர்மதி என முதலில் தெளிவுபடுத்தி விடுகின்றேன். அத்துடன் நான் ஷோபாவிடம் கேட்ட மிகுதி அசல் 14 கேள்விகள் இருக்கின்றன. அதை இப்போது தனது தளத்தில் நுட்பமாக மறைத்திருக்கின்றார். அந்தக் கேள்விகளையும் -ஷோபாவைப் போல மறைக்காது-   இங்கே முன்வைத்து ஷோபாவின் பதில்களையும் தரப்போகின்றேன். அத்துடன் ஷோபாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரின் பதில்களை வைத்து ஒரு 'பொழிப்புரை' எழுதுவதாகக் கூறியிருக்கின்றேன். அதையும் இனிவரும் நாட்களில் செய்வேன்.

இனி நடந்தவை....!

இலங்கைச் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு அண்மையில் நடந்தது நாமனைவரும் அறிந்ததே. அதை முன்னிட்டு சில மாதங்களுக்கு அதற்கான எதிர்ப்பு, ஆதரவு என்ன எல்லாத்தளங்களிலும் அறிக்கைகள் மாறி மாறி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தன. அறிக்கைகளில் அரசியலில் எரிச்சலுற்று, நான் பேஸ்புக்கில் -அறிக்கை எத்தனை 'அரி'க்'கை' யடா...!- என நிலைத்தகவல் எழுத, ஒருசாராரின் அறிக்கையைப் பிரதிநிதிப்படுத்திய ஷோபா, நான் அவரது அறிக்கையையும் கேலி செய்வதாக நினைத்து, எனது நிலைச்செய்தியின் கீழ் சில பின்னூட்டங்களை எழுதினார்.

அவரோடு அதற்கு முன் ஃபேஸ்புக்கில் எந்த விரிவான உரையாடலையும் செய்திராத நான் இவ்வாறு ஒரு நோட்டை அதன் நீட்சியில் அவருக்கு எழுதினேன். (பார்க்க: 'ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்' ). அந்தப் பதிவுக்கு ஷோபாசக்தி எழுதிய முதற்பின்னூட்டம் இப்படியாக அமைந்தது: Shoba Sakthi சரி நண்பா நீங்கள் இங்கே வைத்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவோம். நான் பதில் சொவல்வதில்லை என்ற விசயம் குறித்தும் பேசுவோம். முதலில் நீங்கள் கொழும்பில் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனெனில் விவாதம் இதைக் குறித்ததுதானே! பின்பு மிகுதி நியாயத்தைப் பேசுவோம்.

ஷோபாவின் இக்கேள்வியைச் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் வாசிப்பதற்கான ஒரு அறிக்கையை நான் எழுதினேன். (பார்க்க 'மாற்றை முன்வைத்தல்')

அதற்கு ஷோபாசக்தி, இந்த அறிக்கைக்கு தான் முதல் ஆளாக கையெழுத்து வைக்கிறேன். பிற நண்பர்களுக்கும் அனுப்பி கையெழுத்து வைக்கச் சொல்வோம் என எழுதியிருந்தார். ஆனால் இந்த அறிக்கைகளையே 'அரிக்கைக'ளாக நினைத்த நான் ஷோபாவின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காது, 'ஷோபா இது அறிக்கையில்லை. இது உங்களுக்கு மறுமொழியாக - நான் சொல்லவிரும்பியதை- அறிக்கை வடிவத்தில் எழுதியிருந்தேன். அறிக்கை வடிவத்தைத் தேர்ந்தெடுத்ததும், கீழே பெயர்களைப் பட்டியலிட்டதும் கூட இந்த அறிக்கை அரசியலை நக்கலடிக்கவே தவிர உண்.மையான அறிக்கைக்காய் இல்லை. ஏற்கனவே -அறிக்கை எத்தனை 'அரி'க்'கை' யடா- எழுதியவன்/நக்கலடித்தவன் அதேபோக்கில் ஓர் அறிக்கை எழுதுவான் என நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள் எனவே நான் நினைக்கின்றேன்.' என நான் ஒதுங்கிப்போய்விட்டேன். ஷோபாவும் நானும் அதன்பிறகு எவ்வித உரையாடல்களைச் செய்யவுமில்லை. இதை ஒரு 'பகை' மறப்பெனவும் எடுத்துக்கொள்ளவும்.

ஆமாம், அதுவே உண்மை. ஆனால் சில தினங்களுக்கு முன் ஷோபா ஒரு பதிவை எழுதி என்னையும் ரக் (tag) செய்திருந்தார்.  அங்கிருந்து தொடங்கியது இரண்டாம் ஆட்டம்.

(தொடர்ந்து வரும்...)

0 comments: