கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஷோபாசக்தியிடம் கேட்ட இருபது கேள்விகள்

Tuesday, February 15, 2011

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பாகம் 02

ஷோபாசக்தி ஒரு நோட்டைத் தனது ஃபேஸ்புக்கில் எழுதிவிட்டு ஒரு நண்பருக்குப் பதிலளிக்கும்போது ."இதே வேண்டுகோளை முன்னர் xxxxx மும், டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன்." எனக் கூறியதே இரண்டாம் ஆட்டம் தொடங்குவதற்கான முதற்புள்ளியாக அமைந்தது.

எனது குறிப்பான (ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்) வாசிப்பவர்கள், அங்கே நான் ஷோபாசக்தி சிலரை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் என்று குறிப்பிடவே எழுதியிருந்தேன் என்பதை விளங்கியிருப்பார்கள். At the first place, I really don't want ask any questions to him. நிச்சயமாக அவரிடம் எனக்கு எந்தக் கேள்விகளும் எழுப்ப வேண்டியிருக்கவில்லை. எனெனில் நான் தொடர்ந்து ஷோபாசக்தியின் புனைவுகளையே வரவேற்பவனாகவும், அவரது அரசியலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இருப்பதாகவும் தொடர்ந்து கூறிவந்திருக்கின்றேன். எனவே அதன் அடிப்படையில் எனக்கு அவரிடம் கேள்விகள் கேட்பதற்கான   எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை.

ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம் குறிப்பில் ஒரு மூன்றாம் மனிதனாய், ஷோபாசக்தியின் ஃபேஸ்புக் பித்தலாட்டங்களை அவதானித்துவிட்டு அதை ஒரு வேண்டுகோளாய் வைக்கவேண்டுமெனவே எழுதினேன்.  அவரோடு நெருங்கி உறவாடக் கூடியவர்களே ஷோபாவின் இந்த சமனிலையற்ற ஆட்டத்தை ஷோபாவிற்குச் சுட்டிக்காட்டவில்லையே என்ற ஆதங்கத்தையும் எனது குறிப்பில் எழுதியிருந்தேன்.

ஆனால் அதேவேளை ஷோபாவை தொடர்ந்து பல்லாண்டுகளாய் நுட்பமாய் அவதானித்து வந்தவன் என்றவகையில் ஒரு கவனக்குறிப்பையும் இவ்வாறு இறுதியில் எழுதியிருந்தேன்...

'எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் 'காணாமற்போய்விட்டான் / தலைமறைவாகிவிட்டான்' என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்'.

ஆக, ஷோபாவை எவ்வாறு சரியாகக் கணிப்பிட்டேனோ, நேரம் பார்த்து அவர் எனக்கும் அடிக்கத் தொடங்கினார். அதாவது "டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன். "

ஏற்கனவே நடந்தவற்றை அறியாது வாசிக்கும் ஒருவர், ஏதோ நான் ஷோபாசக்தியிடம் கேள்வி கேட்கவேண்டுமென ஒற்றைக் காலில் நின்றதாகவும், பிறகு ஷோபாவிடம் பயந்து பின்வாங்கிய‌தாக‌வுமே எண்ணிக்கொள்வார்.  என்னிடம் கேள்விகள் இருக்கின்றன என்று நான் கூறாமலே ஷோபா எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றார், பெயர்களை இணைத்துப் பேசுகிறார் என்பதைப் பாருங்கள் (ஷோபாவின் விவாதத்திறமையின் நளினங்கள் குறித்து,  சில உதாரணங்களை அடுத்த பதிவில் எழுதலாம் என இருக்கின்றேன்).

இது ஷோபாவிற்குப் புதிதுமல்ல. ஷோபா பிரான்சில் பலருக்குச் செய்ததுதான்.. இறுதியில் யமுனா ராஜேந்திரனுக்கு 'காணவில்லை' எனவும் ஒரு 'சுவரொட்டி' சத்தியக்கடதாசியில் ஒட்டப்பட்டதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆக இதை நினைத்து எனக்கு வருந்த எதுவுமில்லை. ஆனால்  இதை இப்படியே விட்டால், உசாத்துணை (reference)  போடுவதுபோல ஷோபா இனிவரும் காலங்களில் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் என் பெயரையும் இழுப்பார் என்றெண்ணி அவருக்கான சில கேள்விகளை இவ்வாறு எழுதத்தொடங்கினேன்.

(பார்க்க: ஆடு அறுக்க முன்னரே அடுப்பிலே சட்டி வைக்கலாமா மேன்மை தங்கிய ஷோபாசக்தி?)

"....நான் முன்னர் எச்சரிக்கையாக எழுதியது இப்போது நிகழ்ந்திருக்கின்றது. 'டிசேயிடம் கேட்டேன், அவர் அதைச் செய்யவில்லை' என்கின்றார் ஷோபா. ஆக, இதன் மறைபொருள் நான் தெகிரியமாகச் சிங்கிள் சிங்கமாய் நின்று கேட்டும் டிசே போன்ற தூசிகள் எல்லாம் பயத்தில் ஓடிவிட்டாங்கள் எனவும் விரும்பினால் வாசிக்கலாம். உண்மையில் அந்த உரையாடலைத் தொடர விருப்பமில்லை. எனெனில் ஷோபா குறுக்குமறுக்குமாய் மறித்து தாச்சி விளையாடி... எப்படி என்றால் ஆவது அளாப்பி 'சிங்கம் வென்றது' என்று மார்தட்டுவார் எனபது நன்கு தெரியும். தோல்விதான் என ஏற்கனவே தெரிந்த முடிவுக்காய், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பாதையில் போய் என்ன பிரயோசனம்? நான் என்ன கைப்புள்ளயா என்ன? வடிவேலுக்காவது அடிவாங்குகிற அளவுக்கு படங்களில் காசு கொடுகின்றனர். நான் இப்படி அடிவாங்க ஷோபாவா எனக்கு காசு அனுப்புவார்?

இந்தாருங்கள் ஷோபா உங்களுக்கு வெற்றி என அவருக்குக்கேடயத்தை இப்போதே மனமுவந்து கொடுத்துவிடுகின்றேன். ஏன் கிண்ணத்துக்குப் பதிலாய் கேடயம் கொடுக்கின்றேன் என்றால் ஷோபா ஒரு சிங்கம். அவருக்கு கேடயம் கொடுத்தால் அதைக் கவசமாய் நெஞ்சில் அணிந்துகொண்டு அடுத்த போர்க்களத்துக்குச் சென்று வெற்றி வாகை சூடுவார். அந்தப் பெருமிதத்ததால் என்னை மாதிரியான கைப்புள்ளகளையும் மறந்துவிடுவார். நானும் என்பாட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

இவ்வாறுதான் சற்றுமுன்னர்வரை இருந்தேன். இருந்தும் ஒரேயொரு கவலைமட்டும் வந்தது. நாளை நான் மண்டையை போடும்போது ஷோபாவோ அல்லது அவரது இரசிகர்களோ என் கல்லறைக்கு முன் நின்று, 'கேளடா கேளடா என ஷோபாசக்தி நெஞ்சை நிமிர்த்திக் கேட்டும், இவன் ஷோபாவிடம் கேள்வி கேட்காது தப்பியோடிய கோழை' எனச் சபிக்கமாட்டார்களா என்ன? (புனை)பெயரில் 'தமிழன்' என்ற பெயரை வைத்துக்கொண்டு 'கோழை'யாய்ச் செத்தால் அது முழுத்தமிழ் இனத்துக்குமே அவமானம் அல்லவா?

ஆகவே சில கேள்விகளை சும்மா ஒப்புக்காய் எழுதிவிடுகின்றேன். தயவுசெய்து இனிவருங்காலங்களில் ஷோபா, 'இதே வேண்டுகோளை முன்னர் XXXXமும் டிசேயிடமும் வைத்தேன்' என்று சொல்கின்றபோது எனது பெயரை அகற்றி பெரும் வரலாற்றுக் கறையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமானால், இதே வேண்டுகோளை முன்னர் டிசேயிடம் வைத்தேன். அவர் ஒரு வாலிழந்த பல்லிபோலக் கேள்விகள் கேட்டார். நான் செத்த பாம்புக்கு அடிகின்றமாதிரி அவரது கேள்விகளுக்குச் சுழன்று சுழன்று பதில் அளித்து சும்மா தூவென எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டேன்' என எழுதவேண்டுமென இறைஞ்சிக் கேட்கின்றேன்.

இனிச் சும்மா வரலாற்றுப் பழியிலிருந்து தப்புவதற்காய் சும்மா சாட்டுக் கேள்விகள்..
(இப்போது ஷோபாவின் பதில்களையும் இணைத்திருக்கின்றேன் ~டிசே)

(1) எக்ஸிலில் வந்த விளம்பரங்களைக் கண்டித்து 'அறம்' பாடிய நீங்கள், எந்த 'அறத்தின்பாற்பட்டு' பெருநிறுவனங்கள் நடத்தும் தீராநதி, இந்தியா ரூடே, விகடன் போன்றவற்றிற்கு பேட்டி கொடுத்தீர்கள்/எழுதச் செய்தீர்கள்? (மேலதிக விளக்கம்: கற்சுறாவின் ஃபேஸ்புக்கில் உள்ளது)

ஷோபாசக்தி: (1) 90களில் இருந்த எனது கருத்து எப்போதுமே மாறாதிருக்க வேண்டும் என அவசியம் இல்லை. வெகுசன ஊடகங்களிலும் நமது கருத்துகள் வரவேண்டும் என 2000களில் முடிவெடுத்தேன். ஆனால் அதற்கான அறம் என்ன தேர்வு, என்ன என்பதை எனது புதுவிசை இதழ் நேர்காணலில் காலச்சுவடு/மாலதி மைத்ரி/சுகிர்தராணி குறித்த கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். 

(2) வால்பாறையில் நடந்த கூட்டத்தில் ம.மதிவண்ணன் தலித் என்பதற்காய் அவமானப்பட்டதை சுகிர்தராணி இங்கே (http://padamkadal.blogspot.com/2009/08/blog-post_12.html) பதிவு செய்திருக்கின்றார். நானறிந்தவரை அந்நிகழ்வில் பங்குபற்றிய அ.மார்க்ஸோ அல்லது நமது புகலிட 'தலித்தியத்தோழர்' சுகனோ இது குறித்து எதையும் பதிவு செய்ததாக அறியவில்லை? இவை குறித்து விரிவாக அறிந்திருக்கக்கூடிய 'தலித்தியப் போராளியான' நீங்கள் இதைப் பற்றி எங்கும் பதிவு செய்ததாகவும் இல்லை. அது ஏன்? காலம் கடந்தபின்பாயினும் சுகிர்தராணியின் கட்டுரைக்கான உங்கள் பதில் என்ன?

ஷோபாசக்தி: (2).அங்கு மதிவண்ணன் அவமானப்படுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. நான் அங்கே இருந்திருப்பின் பிரச்சினை கைவாறில் முடிந்திருக்கும்

(3) அருந்ததிரோய் உயிர்மை கொடுத்த முற்பணத்தைத் திரும்பிக்கொடுக்கவில்லை என்பதற்காய் ஒரு ஸ்டேட்டஸ் செய்தி விடுகின்றீர்கள். நல்ல விடயமே. நமக்கான சார்புகளைத்தாண்டி பாதிக்கப்பட்டவருக்காய் நாம் குரல் எழுப்பவேண்டுந்தான். ஆனால் இதே உயிர்மைதான் மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு' விடயத்தில் தம் வியாபார முகத்தைக் காட்டியது என 2-3 மூன்று இடங்களில் பதிவு செய்திருந்தேன். அண்மையில் ________ கூட அதே பதிலைக் கூறியிருந்தேன். அந்த விடயத்துக்கு ஏன் எதுவுமே கூறவில்லை? அருந்ததிரோய் ரேஞ்சில் மட்டுந்தான் பேசுவீர்களா? என் பல்லி மூளையோ, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என சொல்கிறது. அஃது உண்மைதானா?

ஷோபாசக்தி: (3.4).பாருங்கள் நண்பரே புத்தகங்களை வெளியிடுவதற்காக காலச்சுவடு உயிர்மை போன்ற நிறுவனங்களிடம் நமது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் செல்வது எனக்கு உள்ளபடியே வருத்தத்தைத் தருவது. மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது

(4) 50, 000 ரூபாயை அருந்ததி ரோய் திரும்பிக்கொடுக்காமல் இருப்பது 'நேர்மையற்றது' என்கின்ற முடிவுக்கு வருகின்றீர்கள். நல்லதே. உங்களிடமும் இன்னுமிரு நண்பர்களிடமும் தமிழகத்தில் இருந்து X எனும் நண்பர் 50 நூற்களை விமானத்தில் அனுப்பி வைக்கின்றார். அந்நூலின் விலை கனடாவிலேயே 30 டொலருக்குத்தான் விற்கப்படுகின்றது. ஆக 50 * 30 = 1500 டொலர்ஸ் + விமானச் செலவு. ஒரு கனடியன் டொலர் = 40 இந்திய ரூபாய் என்றாலே. அனுப்பிய புத்தகங்கள் மட்டுமே 60, 000 ரூபாய்  வரும். விமானச் செலவை விடுவோம். அவை தடிமனான புத்தகங்கள். அந்த எக்ஸ் நண்பர் நீங்கள் அந்தச் செலவை அனுப்பவில்லை என என்னிடம் நேரடியாகச் சொன்னார். உங்களிடம் கேட்டால், அந்த நூலை எழுதியவர் எமது 'வளர்ப்புத் தந்தை' போன்றவர் எனக் கூறி தப்பிவிடுகின்றீர்கள் என்றும் கூறுகின்றார். (வாசிக்கும் மற்றவர்களுக்கு சார்பு நிலை வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காய்..., இதைச் சொன்னவர் வளர்மதி இல்லை எனவும் கூறிவிடுகின்றேன்).  ஆக, 50, 000 ரூபாய் நீங்கள் அந்த நண்பருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறதல்லவா? அருந்ததிரோயின் நேர்மையற்றதனத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதுகுறித்து ஏன் உங்கள் மனச்சாட்சியின் நேர்மையைக் கேள்வி கேட்கவில்லை?

*டிசே யின் குறிப்பு :மேலும் 3/4 ற்குப் பதில் சொல்வதாய் ஷோபா எழுதியிருக்கின்றார். இது நேரடியாக ஷோபாவின் மீது நான் முன்வைக்கும் கேள்விக்கு அவர் தன் நிலையில் இருந்து பதிலளிக்கவில்லை என்பதைச் சுட்ட விரும்புகின்றேன்)

(5) கறுப்பு தொகுப்பில் அலன் சோகலின் மோசடிக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கின்றீர்கள். அது குறித்து வெளிப்படையாக நீங்கள் எழுதியிருக்கின்றீர்களா? 'கறுப்பு' வாங்கி வாசிக்கும் வாசகர்களிடம் இதற்காய் மன்னிப்புக் கேட்டிருக்கின்றீர்களா? (இதேயிடத்தில் ஒன்றைக் கூறவேண்டும், இந்தக் கட்டுரையை மட்டும் வைத்து உங்களோடும் அ.மார்க்சோடும் இருக்கும் பகையால் 'காலச்சுவடு' கண்ணன் முழுத்தொகுப்பையே நிராகரித்தபோது, ரோசாவசந்த், திண்ணைதூங்கி நான் உட்பட  உங்களுக்கு ஆதரவாகவே 'பதிவுகள்' தளத்தில் பேசினோம் என்பதையும் ஒருகுறிப்புக்காய் கூறிக்கொள்கிறேன்)

ஷோபாசக்தி: (5) அது நாங்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம். எனக்கோ சுகனுக்கோ ஆங்கிலம் தெரியாததால் நடந்த சம்பவம். தெரிந்து செய்த பிழையன்று..அறியாமையால் செய்த தவறு. அறியாமையை அறிக்கையிட அப்போது கொஞ்சம் வெட்கப்பட்டோம். அவ்வளவே.

(6) சனதருமபோதினியில் சாருவின் 'உன்னதசங்கீதம்' எந்த அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டது? தொகுப்பாளர் என்றவகையில் அந்தக் கதை குறித்து உங்களுக்கு என்ன அபிப்பிராயம் உண்டு?

ஷோபாசக்தி: (6).அது ஒரு சிறந்த கதை என்பதே எனது கருத்து. அல்லாத பட்சத்தில் பிரசுரித்திருக்க மாட்டோம். எனக்கு ஆங்கிலம்தான் தெரியாதே தவிர தமிழ் நன்றாகவே தெரியும்.

(7) இன்று இலங்கையில் நடைபெறும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு, காலி எழுத்தாளர் மாநாடு என எல்லாவற்றுக்கும் ஓடி ஓடிப்போய் கையெழுத்து இடுகின்றீர்கள். நண்பர்களுக்கு அனுப்பி ஆதரவும் கேட்கின்றீர்கள். உங்களது அரசியலைத் தெளிவாக வைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனது கேள்வி என்னவென்றால் ஒரு பேச்சுக்கு இலங்கை அரசுக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் போரில் வெற்றி பெற்று அவர்கள் தனிநாடும் அடைந்திருந்தால் இதேமாதிரிதான் செயற்பட்டிருப்பீர்களா? அப்படித்தான் செயல்பட்டிருப்பீர்கள் என்பதை உங்களின் 'நான் புலிகளை 100% எதிர்க்கிறேன். இலங்கை அரசை 200% எதிர்க்கிறேன்' என்ற கோசமும் வலுச்சேர்க்கிறது. எனெனில் 200% எதிர்ப்பைச் செய்வதாகச் சொன்ன அரசு அதிகாரம் செலுத்தும் நிலத்திலே இப்படி உங்களின் 'ஆதரவுத்தளம்' செயற்படும்போது, 100% எதிர்ப்பைக் காட்டிய புலிகள் வென்றிருந்தால் இன்னும் நிறைய ஆதரவு கொடுத்திருப்பீர்கள் என்பதே யதார்த்தமாகும். அப்படியாயின் புலிகள் செய்த எல்லாவற்றையும் மறந்து -பகை மறப்பும் மீள் நல்லிணக்கமும் மக்களைக் காரணங்காட்டி செய்யச் சொல்லும்- அ.மார்க்ஸ் போல நீங்களும் கூறுவீர்களா?

ஷோபாசக்தி: (7).ஆம்...யார் வென்றிருந்தாலும் பகை மறப்பும் சமாதானமுமே முதன்மையானவை என்றே வலியுறுத்துவேன். புலிகள் போரியல் வெற்றியின் உச்சங்களில் இருந்து ஒரு அரசுமாதிரியையே கட்டமைத்திருந்த காலத்திலும் இதையே கூறினேன்

(8) பத்மநாப அய்யரை அவரின் பெயரில் 'அய்யர்' இருக்கின்றது என்ற ஒரு காரணத்தை வைத்தே நீங்கள் எல்லாம் செத்த பாம்புக்கு அடிப்பதுபோல அவரைச் சாடுனீர்கள் (இங்கே எனக்கு அய்யரோடு தனிப்பட்ட நெருங்கிய பரிட்சயம் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது). கனடாவுக்கு வந்த பலமுறைகளில் ஒரேயொரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருக்கின்றேன்). நானறிந்தவரை அய்யர், தான் பிரமாண சாதியில் பிறந்ததை முன்வைத்து எவரையும் ஒடுக்கியதாகவோ ஒதுக்கியதாகவோ கேள்விப்பட்டதில்லை. எவரும் அப்படி எழுதியும் வாசித்ததுமில்லை. நீங்கள் இவ்வளவு கிழித்தும் உங்கள் தொகுப்புக்கள்/படைப்புக்களை தானே வாங்கி அய்யர் தன் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதுவல்ல என் கேள்வி. நீங்கள் உங்கள் சத்தியக்கடதாசியில் ஹரி தனது முழுப்பெயருடன் எழுதிய மத்தியகல்லூரி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தீர்கள். ஹரிக்கும் அவரது பின்னால் வரக்கூடிய பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோலவே பத்மநாப அய்யரும் இருக்கின்றார். சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல? அய்யர் என்ற பெயர் இருப்பதால் மட்டுமே பத்மநாப அய்யரோடு தேவையில்லாமல் தனவிய நீங்கள் எப்படி ஹரியின் முழுப்பெயரோடு உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கச் செய்தீர்கள்? இதற்குப் பெயர் தான் நேர்மையா? அறமா?

ஷோபாசக்தி: (8.)ஹரி போன்ற யாழ்ப்பாணத்திலிருந்த பதின்ம வயது இளையவரையும் பழுத்த இலக்கிய இயல் வாழ்நாள் சாதனையாளரான பத்மநாபரையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவது தவறு. ஹரி எழுதவந்த குறுகிய காலத்திலேயே சாதிப் பெயரைத் துறந்துவிட்டார். பத்மநாபர் இப்போதும் சுமககிறார். அவரும் துறக்கும்வரை 'தனகுவதை'த் தவிர வேறு வழியில்லை.

(9) தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.

ஷோபாசக்தி: (9)  மிகவும் சுருக்கமாகச் சொல்கிறேன்: தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.


(10) நீங்கள் ரயாகரன், கலாமோகன் உட்பட யமுனா ராஜேந்திரன் வரை விடாது துரத்தி அவர்களை 'அம்பலத்தியிருக்கின்றீர்கள்'. ஆனால் இன்று சுகன் தான் கூறியவற்றுக்கு மாறாய் நடந்துகொண்டிருப்பதை (அண்மையில் பானுபாரதியும் தன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கின்றார்) பார்த்துக்கொண்டிருந்தும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுதவில்லை (ஒரேயொரு கட்டுரை சுடப்படும் இளைஞர் பற்றிய சுகனின் புரட்டுக்கதையைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்) நான் கேட்பது சுகனின் கோட்பாடு/அரசியல் சரிவுகளை முன்வைத்து ஒரு கட்டுரை ஏன் இதுவரை எழுதவில்லை?

ஷோபாசக்தி:  (10) சுகனின் கோட்பாடு அரசியல் சரிவுகள் என நீங்கள் குறிப்பிடுவது எதையோ?

(11) அனைவருக்குமான திறந்த உரையாடல்கள் என்பது இணையத்தில் முக்கியமானது. நமது இயக்கங்கள் அனைத்தும் அவ்வாறு இருக்காத‌தால்தான் தம்மில் தாமே மண்ணை அள்ளிப்போட்டது மட்டுமில்லாது அவர்களை நம்பிய மக்கள் மீதும் மண்ணை அள்ளிப்போட்டார்கள். 'சனநாயக வெளி' பற்றி அக்கறையுள்ள நீங்கள் ஏன் பின்னூட்டங்களை தடுத்தீர்கள்? வளர்மதி தனது பின்னூட்டங்கள் தடுக்கப்பட்டதென்கிறார்.  ரஃபேலும் அதைக் குறிப்பிடுகின்றார். வேறு சிலரும் முன்னர் அவ்வாறு கூறியதாக நினைவு. பெயர்கள் சரியாக நினைவுமில்லை. நீங்கள் சத்தியக்கடதாசியிலிருந்து 'ஷோபாசக்தி டொட் கொம்' ற்குப் போனபோதும் நீண்டகாலமாய் பின்னூட்டப்பகுதி மூடப்பட்டே இருந்தது. ஆக இதுவும் சனநாயக வெளி என்கின்றீர்களா? இப்போது பேஸ்புக்கிலும் அதைத் தொடர்கின்றீர்கள். உங்களைச் சீண்டுகின்றார்கள் என்பதற்காய் அவர்களை அகற்றுகின்றீர்கள். இணையம் போன்ற வெளியிலேயே எம்மால் சகிப்புத்தன்மையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கும்போது, எங்களைப் போன்றவர்கள் சனங்களை முன்னிட்டு அரசியலோ அல்லது இலக்கியந்தான் பேசமுடியும் என நம்புகின்றீர்களா? சனத்தோடு புழங்கும் வெளியில் இதேபோன்ற ஆட்கள் எரிச்சலூட்டும்போது கிடைக்கும் தும்புக்கட்டையாலோ அல்லது துவக்காலோ போடாமல் விடமாட்டோம் என்பது என்ன நிச்சயம்? ஆக இணையத்திலேயே சகிப்புத்தன்மை இல்லாத நாங்கள் சனங்களுக்கான அரசியலோ, எதுவோ பேசுவதென்பது சுத்த பம்மாத்துதான் என்கின்றேன். ஆமா/இல்லையா என்பதை ஒற்றைவரியில்லாது விளக்கத்துடன் தரவும்.

ஷோபாசக்தி: (11).தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு. என்னுடைய தியேட்டரில் உங்களுடைய ஆபாசப் படத்தை ஓட்டவிடாமல் நான் தடுத்தால் அதன் பெயர் பொறுப்புணர்வு.

(12) இந்தக் கேள்வி குழந்தைப் போராளி சம்பந்தமானது. கேட்கும்போதே தயக்கங்கள் இருந்தன. இப்போது அது  Too personal போன்று தோன்றுவதால் அதை பொதுவெளியில் வைக்க விரும்பவில்லை. அதேசமயம் ஷோபா இதற்குப் பதில் அளித்திருந்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதற்கு நன்றி (~டிசே)

(13) சாதியம் குறித்து... நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி எங்களுக்கு ஓர் பெரியாரோ அம்பேத்காரோ அயோத்திதாசரோ நாராயணகுருவோ இல்லாதுபோனது சாபமே. ஆனால் இவர்களைப் போன்ற பலரும் இருந்துகூட இன்னமும் இந்தியாவில் சாதியம் வீரியமாகவே இருக்கின்றது. அண்மையில் கூட ஆதவன் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். புலிகளின் காலத்தில் சாதி ஒழிப்பு நடைபெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால் சாதி நாசூக்காய் மறைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பொதுவெளியில் பலர் தம் சாதித்திமிரைக் காட்டத் தயக்கமிருந்தது. எனெனில் புலிகளால் தண்டனை கொடுக்கப்படுமென்று.

அண்மையில் தேவதாசன் பதிவுசெய்த விடீயோவில் கோயிலில் ஒரே இடத்தில் பொங்கிப்படைப்பதை, தலித்துக்களும் இருக்கின்றார்கள் என்பதால் ஆதிக்க சாதி தனிக்கொட்டில் போட்டுப் பொங்க அதை உடைத்த தலித்துக்களை பொலிஸ் கைது செய்திருக்கின்றது. புலிகளிடம் இருக்கும் துவக்குப் பயத்தால் இவ்வாறு தனியே கொட்டில்போட்டுப் பொங்க ஆதிக்கசாதியினர் போயிருக்கமாட்டார்கள் என ஒருவர் ஒரு வாதத்தை வைக்கின்றார் என வைப்போம். அதாவது அவர் புலிகளின் காலத்தில் இருப்பதைவிட இப்போது சாதித்திமிரும் ஒடுக்குமுறைகளும் அதிகம் என முடிவுக்கு வருகிறார் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்? இப்போதைய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எவ்வாறான போராட்டங்களை முன்வைப்பீர்கள்.?


ஷோபாசக்தி: (13).புலிகள் காலத்தில் துப்பாக்கி நிழலில் சாதியம் மறைந்திருந்தது. அது இப்போது வெளிவருகிறது என்ற கருத்துத்தான் எனது கருத்தும். புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன். இன்றைக்கு உகந்த போராட்ட வடிவம் எது என்ற எனது கருத்தை அறிய எனது 'வசந்தத்தின் இடிமுழக்கம்' என்ற கட்டுரையைப் படிக்கவும்.



(14) எதிர்காலத்தில் ஈழத்தில் முன்னால் புலிகள் ஒரு அரசியல் கட்சியாக பரிணாமித்து, தமிழ்ப்பிரதேசங்களில் முக்கிய கட்சியாக மாறுகின்றனர் என வைப்போம். அரசியலில் பலம் பெறுகின்ற அவர்கள் இலங்கை அரசிடமும், உலகிடமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியும் (விரும்பினால் பிரிந்துபோகின்ற உரிமையும் தரவேண்டுமென) ஒரு பொதுசன வாக்கெடுப்பை ந‌ட‌த்த‌க் கேட்கின்றார்கள் என வைப்போம். அவ்வாக்கெடுப்பில் அங்குள்ள மக்கள் தனிநாட்டுக்கு ஆதரிக்கின்றன‌ர் என (சும்மா ஒரு ஆசைக்குத்தான்) வைப்போம். ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. தனிநாடு வந்தால் அது எப்படி முன்னர் புலிகளின் மாதிரி அர‌சு இருந்ததோ அதே பிரின்சிப்பல்கள் பின்பற்றப்படுமென்று. நீங்கள் மக்களின் முடிவுக்கு தலைசாய்த்து புதிய நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது புலிகளின் மிச்சங்கள் இன்னும் இருக்கின்றது என்பதற்காய் எதிர்ப்பீர்களா (இந்தக்கேள்விக்கு hint: இப்போது மக்களைக் காரணங்காட்டித்தான் எல்லா இடங்களிலும் ஓடி ஓடிக் கையெழுத்திடுகின்றீர்கள்...மக்களின் முன் மகிந்தா ஒரு பொருட்டாக இல்லாதபோது,  அம்மக்களின் முடிவின் முன் புலிகளும் ஒரு பொருட்டில்லையென இந்த அப்பாவி மனம் நம்புகிறது)


ஷோபாசக்தி: (14). நான் எப்போதுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன். தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்

இந்தக் கேள்விகள் வளர்மதியினதுடையது...

(நினைவூட்டல்...
Shoba Sakthi டீசே மேலதிக விளக்கத்திற்காக மறுபடியும் சொல்கிறேன். வளர்மதியின் கேள்விகள் நியாயம் என நீங்கள் கருதும் பட்சத்தில் அந்தக் கேள்விகளோடு உங்களிற்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் தயவு செய்து அநதக் கேள்விகளை வெறுமனே கட் அன்ட் பேஸ்ட் செய்து உங்களது கேள்விகளாக வையுங்கள். நான் கண்டிப்பாக பதில் சொல்வேன். பதில்களுக்கு மட்டுமல்ல கேள்விகள் கேட்பவருக்கும் பொறுப்புணர்வு தேவையென்பதாலேயே இந்தக் கோரிக்கை.
November 13, 2010 at 9:31pm )

1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?

2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?

3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930 கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.

4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?

5. வித்தியாசம் வித்தியாசம் என்கிறீர்களே வித்தியாசத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்று சொல்ல முடியுமா?

6. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?

7. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

(இறுதி 1-6 வரையான கேள்விகளுக்கு ஷோபா விரிவாகவே தனது தளத்தில் பதிலளித்திருப்பதால், அவற்றின் விடைகளே இங்கே பதியவில்லை)
-----------------

எனது அசல் கேள்விகளான 14ற்கும் பதிலளித்து ஷோபா, இவ்வாறு கேட்டிருந்தார்....

Shoba Sakthi வளர்மதியின் கேள்விகள் அபத்தமானவை என்றும் பொருட்படுத்த்தக்கவையல்ல என்றும் எத்தனை தடவைதான் சொல்வது. மறுபடியும் நான் டிசேயிடம் கேட்பது நீங்கள் தொகுத்த அவரின் கேள்விகள் வலுவானவையெனவும் சரியானவையெனவும் நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில அவை உங்களுடைய கேள்விகளாயும் மாறிவிடும். மகிழ்ச்சியாகப் பதில் தருகிறேன். தனிக் கட்டுரையாகவே எழுதிவிடலாம். வளர்மதியின் கேள்விகளை உங்களது கேள்விகளாக முன்வைக்கிறீர்களா என்பதைத் தயவு செய்து தெளிவுபடுத்தினீர்கள் எனில் வேலையைத் தொடங்கிவிடுவேன்.

நான் அதற்கு இவ்வாறு பதிலளித்திருந்தேன்:
ஷோபா, வளர்மதியின் கேள்விகளுக்கான பதில்களை நானும் எதிர்பார்க்கின்றேன் (அவை என் கேள்விகளுமென நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சினையில்லை). வேண்டுமெனில் கேள்வி இல.5 ஐத் தவிர்த்துவிட்டு பதில் எழுத வேண்டுகிறேன்

வளர்மதியின் 6 கேள்விகளுக்கு ஷோபா இப்போது பதிலளித்திருக்கின்றார். ஆனால் அவற்றை டிசே தமிழனின் கேள்விகளாக்கிவிட்டார். ஆகக்குறைந்து, வளர்மதி தொடக்கத்தில் கேட்டு,  அதையே டிசேயும் கேட்டிருந்தார் என்றாவது வளர்மதிக்கு கிரெடிட் கொடுத்திருக்கலாம். ஆனால் அவற்றை குறிப்பிடாதது மட்டுமின்றி பேஸ்புக்கில் நடந்த ஒரு விவாதத்தை இடைநடுவில் இருந்து பொதுத்தளத்தில் எடுத்துப்போட்டு அதற்குப் பதிலளிக்கிறேன் என ஷோபாசக்தி தொடங்கியதை எந்தவகையான அறம் என்பதை ஷோபாவிடம் அல்ல, வாசிக்கும் உங்களிடம் முன்வைக்கின்றேன்.

மேலும், வளர்மதியின் கேள்விகள் (மூன்றாம் கையால் வைக்கப்படுவது என்றும் ஷோபா இப்போது சொல்லிக்கொண்டு திரிகிறார்; இதுகுறித்து வரும் பகுதிகளில் எழுதுவேன்). உண்மையில் வளர்மதி என்னிடம் எந்தப்பொழுதிலும் தனது கேள்விகளை ஷோபாசக்தியிடம் கேட்கச் சொல்லிக் கேட்டதில்லை என வெளிப்படையாக முன்வைக்கின்றேன். ஷோபா புலிகளிடம் இருந்தபோது உளவுத்துறைக்குள் இருந்து வேலை செய்திருக்கலாம்; பல திடுக்கிடும் உண்மைகளைக் கூடக் கண்டும் பிடித்திருக்கலாம். ஆனால் இங்கே நடக்காத ஒரு விடயத்தை நடந்த்தாய் 'பாவனை' செய்வது மிக அநியாயமானது.

நான், ஏன் எனது கேள்விகளோடு இப்போது வளர்மதியின் கேள்விகளையும் இணைத்தேன் என்றால், நான் ஷோபாவோடு முரண்பட்டு எழுதிய முதலாவது நோட்டிலேயே ஷோபாவிற்கு இது பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றேன்.

வளர்மதி உங்களுக்கு இளங்கோவன் அன்பன் என்பவரின் பகுதியில் ஜந்தோ பத்துக் கேள்விகள் கேட்டிருந்தார். அவை முக்கியமான கருத்தியல் கேள்விகள். அதற்கான உங்கள் பதில் சுயவிமர்சன்மாகவும் உங்களை முன்னகர்த்திச் கொள்வதாகவும் இருந்திருக்கும். 'மாற்று அரசியலை' ஒருகாலத்தில் நம்பிக்கையோடு பார்த்துப் பின் சலித்துபோன எங்களுக்கும் கூட உதவியிருக்கும். சரி வளர்மதியோடுதான் 'ஆற்றைப் பார்த்துக் கோபம்' என்றிருந்தால் கூட, வேறு யாரோ திருப்பிப் போட்டு பதில் அளிக்கச் சொல்லியிருந்தார்களே. அப்போதும் மவுனந்தானா?

இளங்கோவன் அன்பனின் ஃபேஸ்புக்கில்,  வளர்மதி இதே 7 கேள்விகளை முன்வைத்து ஆகக்குறைந்து 4-5 மாதங்களாகி இருக்கும். எத்தனையோ அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் தனது '24மணிநேர சேவை' (இது அவரே குறிப்பிட்டதுதான்) மூலம்  பதிலளித்து வந்த ஷோபா இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து ஏன் புறக்கணித்து வந்தார் என்பதையும் வாசிப்பவர்க‌ள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

மேலும், டிசே தமிழனின் ஆறு கேள்விகள் என்று எழுதிய பதிவில் எவ்வாறு
வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனக்கூறி 'வாசகத் தோழர்கள் பொறுத்தருள்க. என் கடமையைச் செய்ய என்னை அனுமதியுங்கள்'  என‌க்கூறி என்னமாதிரி பில்ட் அப் (build-up) கொடுக்கின்றார் எனப் பாருங்கள். அதேபோன்று எனது அசல் 14 கேள்விகளும் தவிர்க்கப்பட்டு மிக நுட்பமாக இந்த 6 கேள்விகள் மட்டுமே அவ‌ர‌து த‌ள‌த்தில் முன்வைக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இப்போது சற்று காலச்சக்கரத்தைச் சுழற்றுவோம். 'என்னிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை?' என்றும் 'கேள்வி கேட்காமல் டிசே தமிழன் ஓடிவிட்டார்' எனவும் எழுதவும் துணிகிற ஷோபாசக்தி இந்த முன்னுரை/முக்குகின்ற உரையைத் தவிர்த்து- நேரடியாக -கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டியதுதானே?  முதலிலே ஒரு அறிமுகம் கொடுத்து கேள்வி/பதில்களை வாசிக்கமுன்னரே வாசகருக்கு தானொரு அறிவுஜீவி என்கின்ற தோரணையைக் கொடுப்பது.   இந்த 'முன்னுரையின்' பின்பு ஒரு வாசகர் முன் அனுமானமின்றி உள்ளே போகமுடியுமா?

மேலும், கேள்விகள் கேட்பவன் ஒரு முட்டாளாக இருக்கிறான் ஆகவே வாசகத் தோழர்களே பொறுத்தருள்க எனத் 'தெளிவாக' ச் சொல்லி, ஆனாலும் பாருங்கள் 'நான் எப்போதும் நல்லவனப்பு, எவன் என்றாலும் பதில் சொல்லாமல் தப்பியோடுபவன் அல்ல' என்கின்ற தோரணையை 'என் கடமையைச் செய்ய அனுமதியுங்கள்' மூலம் கட்டமைப்பது....

ஆம் நண்பர்களே. இதுதான் ஷோபாசக்தி. நீங்கள் இந்தச் சுழலிருந்தும், அவரது நளினமான விவாதத் திறமைகளிலிருந்தும் (ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்கு spider man மாதிரித் தாவுவது வரை)  உங்களைக் காப்பாறிக்கொள்ளாமல் விட்டால் ஷோபாவுடன் உரையாடுவது என்பது 'சொந்தச் செலவிலே சூனியம் வைப்பது' போன்றதுதான்.

(இன்னும் வரும்)

0 comments: