கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

க‌ன‌டாத் தேர்த‌ல்- 2011

Tuesday, April 19, 2011

1.
கட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளில் இர‌ண்டு தேர்த‌ல்க‌ளைக் க‌ன‌டா க‌ண்டிருக்கின்ற‌து. இவ்விர‌ண்டு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ல‌துசாரிக‌ள் ஆட்சிய‌மைத்தாலும் அவ‌ர்க‌ளால் ஒரு பெரும்பான்மை அர‌சை அமைக்க‌ முடியாத‌து அவ‌ர்க‌ளுக்கு அவ‌தியைக் கொடுத்திருக்கிற‌து. இன்ன‌மும் கைக‌ளுக்குள் எட்டாத‌ பெரும்பான்மை அர‌சை அமைக்கும் க‌ன‌விற்காய் இப்போது மே 02ல் இன்னொரு தேர்த‌லை வ‌ல‌துசாரிக‌ள் அறிவித்திருக்கின்றார்க‌ள். ஆக‌ 5 வ‌ருட‌த்திற்குள் மூன்றாவ‌து தேர்த‌லைச் ச‌ந்திக்கிற‌து க‌ன‌டா.

நம‌து மேன்மைத‌ங்கிய‌ பிர‌த‌ம‌ர் ஸ்டீப‌ன் ஹார்ப‌ர், இம்முறை பெரும்பான்மையைத் த‌ங்க‌ளுக்குத் த‌ர‌வேண்டுமென‌ ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்றாடிக்கொண்டிருக்கின்றார். உல‌கில் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌தொரு நாடாக‌ மிளிர்ந்த்கொண்டிருந்த‌ க‌ன‌டா இப்போது ப‌ல்வேறு விட‌ய‌ங்க‌ளில் கீழிற‌ங்கிக் கொண்டிருக்கின்ற‌து என்று ப‌ட்டிய‌லிட்டுக் காட்டினாலும்,  'அதையெல்லாம் இப்போது ம‌ற‌ந்துவிடுங்க‌ள், க‌ன‌டாவின் ஏற்ற‌ம் பெற்றிருக்கும் பொருளாதார‌த்தைக் க‌வ‌னியுங்க‌ள்' என‌ ஒன்றை ம‌ட்டும் திரும்ப‌த் திரும்ப‌க் கிளிப்பிள்ளையாக‌  கூறிக்கொண்டிருக்கின்றார். அண்மையில் ப‌ல்வேறு மேற்கு நாடுக‌ளின் பொருளாதார‌ நில‌வ‌ர‌ம் ச‌ரிந்துகொண்டிருக்க‌ க‌ன‌டா எல்லோரின் எதிர்ப்பார்ப்புக‌ளுக்கும் அப்பால் நிமிர்ந்து நிற்ப‌து உண்மைதான். அத‌னால் தான் க‌ன‌டா டொல‌ரின் பெறுமான‌ம் அமெரிக்க‌ டொல‌ரின் பெறும‌தியைத் தாண்டி நிற்கிற‌து. ஆனால் இந்த‌ டொல‌ரின் வ‌ள‌ர்ச்சி யாருக்கு ந‌ன்மை த‌ருமென்றால் க‌ன‌டாவின் ப‌ண‌த்தின் பெறும‌தியில் முத‌லீடு செய்ப‌வ‌ர்க‌ளுக்கே அன்றி, சாதார‌ண‌ உள்ளூர்க் க‌ன‌டிய‌ர்க‌ளுக்கு அல்ல‌ என்ப‌தை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. க‌ன‌டாவின் டொல‌ர்ப் பெறும‌தி கூட‌வாக‌த்தான் இருக்கிற‌து, ஆனால் ம‌ச‌கு எண்ணெயின் விலையிலிருந்து சாதார‌ண பொருட்க‌ளின் விலைக‌ள் வ‌ரை எல்லாமே உய‌ர்ந்திருக்கின்றன. இப்ப‌டியே க‌னேடிய‌ டொல‌ரின் பெறும‌தி கூடிக்கொண்டு போனால் -மூல‌ப்பொருட்க‌ளின் செல‌வு அதிக‌ரிக்க‌- த‌ம‌து வ‌ர‌வு செல‌வில் துண்டுவிழுவ‌தைத் த‌டுக்க‌, பெரும் நிறுவ‌ன‌ங்க‌ள் முத‌லில் கையை வைக்க‌ப்போவ‌து அங்கே வேலை செய்யும் வேலையாட்க‌ளைக் குறைப்ப‌துதான். முத‌லீட்டிய‌ நாடுக‌ளின் நிறுவ‌ன‌ங்க‌ள் தாம் எதிர்வுகூறும் வ‌ர‌வு செல‌வுக்குள் வ‌ரும் இலாப‌த்தை எத‌ன் பொருட்டும் விட்டுக்கொடுக்க‌ ஒருபோதும் த‌யாராக‌ இருப்ப‌தில்லை. என‌வே க‌னேடிய‌ப் பொருளாதார‌ம் வ‌லுவாக‌ இருக்கிற‌து, க‌னேடிய‌ டொல‌ரின் பெறும‌தி அதிக‌ரிக்கின்ற‌து என்று எவ‌ரேனும் கூறினால் அத‌னால் எம‌க்கு என்ன‌ ந‌ன்மை இருக்கிற‌து என்று நாம் முத‌லில் கேட்க‌ வேண்டியிருக்கின்ற‌து. க‌ன‌டாவில் அதிக‌ள‌வு ம‌ச‌கு எண்ணெய் தோண்டியெடுக்க‌ப்ப‌ட்டாலும், ஏன் இப்ப‌டியான‌ அசுர‌வ‌ள‌ர்ச்சியில் எரிபொருள் விலை அதிக‌ரிக்கின்ற‌து என‌ எவ‌ரும் கேட்க‌ப்போவ‌தில்லை. சென்ற‌ வ‌ருட‌த்தை விட‌, இம்முறை கோடையில்  30% எரிபொருள் விலை உய‌ர்வு இருக‌க‌ப்போகின்ற‌தென‌ எதிர்வு கூறுகின்ற‌ன‌ர்.

2.
இதைத்தான் இன்னொருவித‌மாய் தீவிர‌ வ‌லதுசாரிக‌ட்சி சிறுபான்மை இன வேட்பாளர் போட்டியிடுவ‌த‌ற்கு வாய்ப்புக்கொடுத்தால் கூட‌, அவ‌ர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ப‌த‌ற்காய் நாம் வாக்க‌ளிக்க‌ வேண்டுமா அல்ல‌து அவ‌ர‌து க‌ட்சி எத்த‌கைய‌ விழுமிய‌ங்க‌ளுக்கு இட‌ங்கொடுக்கும் என்ப‌தைப் ப‌ற்றி யோசிக்க‌வேண்டுமா என‌ நாம் நினைத்துப் பார்க்க‌ வேண்டும். இம்முறைத் தேர்த‌லில் புதிய‌ குடியேற்ற‌வாசிக‌ளான‌ ந‌ம்மைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு யாரைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்ப‌தைவிட‌ யாரைத் தேர்ந்தெடுக்க‌க் கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும். யாரைத் தேர்ந்தெடுத்தால் ந‌ம‌து இருப்பும், க‌லாசார‌மும் இறுக்க‌ப்ப‌டும் என்ப‌தை நுட்ப‌மாக‌ நோக்க‌வேண்டும். ஆனால் மக்க‌ளுக்கு விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தவேண்டிய‌ இர‌வு ப‌க‌லென்று இடைவெளியில்லாது அல‌றும் வானொலி/தொலைக்காட்சிக‌ளும், 'எம் க‌ட‌ன் விள‌ம்ப‌ர‌ம் பிர‌சுரித்து வாழ்வ‌தே' என‌ இருக்கும் ப‌த்திரிகைக‌ளும் இந்த‌ விட‌ய‌ங்க‌ள் குறித்து அதிக‌ம் அக்க‌றை காட்டுவ‌தில்லை. மேலும் கீழைத்தேய‌ நாடுக‌ளில் ஒர‌ள‌வு அர‌சிய‌ல் விழிப்புண‌ர்வு பெற்று வ‌ரும் எங்க‌ளிட‌ம், இங்கும் இய‌ல்பாய் அர‌சிய‌ல் அறிவு இருக்கும் என‌ எதிர்ப்பார்ப்ப‌து கூட‌ ச‌ற்று அதிக‌ம் போல‌த்தான் தோன்றுகின்ற‌து. இல்லாவிட்டால் குடிவ‌ர‌வாள‌ர்க‌ளை வெறுக்கும் ஒரு மேய‌ரை, குடியேற்ற‌வாசிக‌ள் 50%ற்கு கிட்ட‌வாக‌ வாழும் ரொற‌ண்டோவில் இருந்து தேர்ந்தெடுக்க‌ மாட்டார்க‌ள். ஒரு இட‌துசாரி சில‌வேளைக‌ளில் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்யாம‌ல் இருக்க‌லாம். ஆனால் ஒரு வ‌ல‌துசாரி என்றுமே ஒடுக்க‌ப்ப‌ட்ட‌/விளிம்புநிலை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌தே செய்வ‌தில்லை என அறியாம‌லா நாம் இருக்கின்றோம்? இப்போது மேய‌ர் ஒவ்வொரு விட‌ய‌மாய் த‌னியார்ம‌ய‌மாக்க‌லும், நிதிக்குறைப்பும் செய்யும்போது, 'அய்யோ இப்போது இவ‌ரின் சுய‌ரூப‌ம் விள‌ங்குகிற‌தே' என‌ த‌லையில் கைவைப்ப‌தில் எந்த‌ நியாய‌மும் இல்லை. ஆக‌ மே வ‌ரும் தேர்த‌லிலாவ‌து  யாரைத் தேர்ந்தெடுக்க‌க் கூடாது என்ப‌தில் நாம் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌வேண்டும்.

மேலும் இம்முறை வ‌ல‌துசாரிக‌ள் புதிய‌ முகமூடிக‌ளோடு வ‌ருகின்றார்க‌ள். பெரும்பான்மை ஆட்சியைப் பெறுவ‌தற்காய் தேர்த‌ல் கால‌ம்வ‌ரை (அவ‌ர்க‌ள் இதுவ‌ரை வெறுத்தொதுக்கிய‌ எந்த‌ப் 'பேயோடும்') ச‌ம‌ர‌ச‌ம் செய்ய‌ இருக்கின்றார்க‌ள். ப‌ல‌ ஆண்டுக‌ளாய் விளிம்புநிலை/ சிறுபான்மை இன‌த்த‌வ‌ர் மீது காழ்ப்பை உமிழ்ந்து கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் தேர்த‌ல் திக‌தி அறிவித்த‌வுட‌ன் நேச‌மாய் ப‌ழ‌க வ‌ருகின்ற‌ போதாவ‌து நாம் யோசிக்க‌வேண்டாமா? இதுவ‌ரை நீங்க‌ள் எங்க‌ளுக்கு என்ன‌ செய்துகொண்டிருந்தீர்க‌ள் எனத்‌ திருப்பிக் கேட்க‌வேண்டாமா? ஆனால் ந‌ம‌க்குத்தான் தொலைதூர‌ப் பார்வை என்ப‌து எப்போதுமே இருந்த‌தில்லை. ஒரு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் கூட்ட‌த்தில் 'வ‌ண‌க்க‌ம்' என்று த‌மிழில் கூறினாலே ஏதோ அவ‌ர் பாராளும‌ன்ற‌த்திற்குள் எங்க‌ளுக்காய் குர‌ல் கொடுக்கின்றார் என்று நினைத்துப் புள‌ங்காகித‌ப்ப‌டுப‌வ‌ர்கள் அல்ல‌வா நாம்?

கடந்த ஐந்து வருடங்களாக கனடாவில் ஆட்சி செய்யும் வலதுசாரிகள் இதுவரை பொருளாதாரத்தைத் த‌விர‌ வேறு எதிலாவது சாதித்திருக்கின்றார்களா என்பதை யோசிக்கவேண்டும். ஏன் பொருளாதாரத்தில் கூட, கடந்தகால லிபரல் கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழாது சமர்ப்பித்ததைப் போல வலதுசாரிகளால்  செய்யமுடியவில்லை என்பதும் குறித்தும் யோசிக்கவேண்டும். துண்டு விழாத வரவு செலவுத்திட்டத்திற்காய் இனி கனடா 2015 வரை வ‌ழிமேல் விழிவைத்து காத்திருக்கத்தான் வேண்டும்.

வலதுசாரி அரசு செய்த சில 'சிறப்பான' விடயங்களை இனிப் பார்ப்போம்.

3.
எப்போதோ ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியிருக்கவேண்டிய கனேடியப் படைகள் இன்னும் முழுமையாக வெளியேறச் செய்யாது, வலதுசாரிகள் தொட‌ர்ந்து தடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆப்கானிஸ்தான் போருக்காய் மில்லியன்கணக்கில் பணம் செலவு செய்யப்படுகின்றது என்பது ஒருபுறமிருக்க, வாரமொருமுறை ஒரு கனேடியப் படையினராவது கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். அதை விட மிக முக்கியமானது கனேடியப் படைகள் ஆப்கானிஸ்தானில் செய்யும் அட்டூழியங்கள். இந்த அட்டூழியங்கள் ஆவணப்படுத்தப்பட்டு பொதுவெளிக்கு காட்சிப்படுத்த வேண்டிய காலத்தில் ஹார்பரின் அரசு இதை கவனமாகச் சென்ற வருடம் மறைத்ததை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. இதன் நீட்சியில் வலதுசாரிகளின் ஆட்சி கவிழும் நிலை வ‌ந்த‌போது, பாராளுமன்றத்தை ஹார்ப்பர் பலமாதங்களுக்கு ஒத்திவைத்து விடயத்தை ஆறப்போட்டதை நாம் கவனிக்கவேண்டும். இன்னும் கூட அந்த ஆவணங்கள் முழுமையாக வெளியிடப்படாததை இம்முறை வாக்களிக்கப் போகும் ஒவ்வொருவரும் நினைவிலிருத்தி வைக்கவேண்டும்.

இந்த வலதுசாரி அரசானது இஸ்ரேலியர்களுக்கு மிகத் தீவிரமான ஆதரவு நிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்க‌ள். அநேக கனேடிய அரசுகள் இஸ்ரேலின் மீது மென்போக்கைக் கொண்டிருந்தாலும்,  ஹார்ப்பரின் அரசு மிகவெளிப்படையாக எவ்வித விமர்சனங்களுமற்று எல்லாவிடயங்களுக்கும் ஆத‌ர‌வு கொடுத்துக்கொண்டிருப்பதை நாம் அறிந்ததே. இதற்காய் எத்தனையோ விடயங்களை நாம் பட்டியலிடலாம்... லெபனான் மீது இஸ்ரேல் சிலவருடங்களுக்கு முன் விமானத்தாக்குதல் செய்தபோது பத்துக்கு மேற்பட்ட கனேடியர்கள் கொல்லப்பட்டார்கள். தன் நாட்டு மக்கள் கொல்லப்பட்டபோதும் அது குறித்து எவ்வித மனக்கிலேசமும் இல்லாது நமது மேன்மைக்குரிய பிரதமர் இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்திக்கொண்டிருந்தவர். ஏன் அண்மையில் பாலஸ்தீன அகதிகளுக்காய் நிவாரணப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட கப்பல் மிலேச்சனத்தனமாய் இஸ்ரேலியப்படைகளால் தாக்கப்பட்டபோதும் நமது வலதுசாரிகள் மெளனமாகவும், பின்னர் இஸ்ரேலுக்கான ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்தவர்கள். இவ்வாறான பல காரணங்களால்தான் சில மாதங்களுக்கு முன் சர்வதேச மன்னிப்புச்சபை -எந்த அரசு என்று குறிப்பிடாது - இதுவரை காலமும் (உலகப்) பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் நாடாக இருந்த கனடா, இன்று பிரச்சனைகளின் ஒருபகுதியாக மாறி தன் விழுமியங்களை இழந்துகொண்டிருக்கின்றது' என அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த வலதுசாரி அரசு எவ்வாறு மில்லியன்கணக்கான ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தை வீணே செலவழிக்கிறது என்பதற்கு நாம் பட்டியலா இடவேண்டும்.  ஜீ8/ஜீ20 மாநாடுக‌ளில் எவ்வளவு மில்லியன்கணக்கான பணம் ஊதாரித்தனமாகச் செலவிடப்பட்டது என்பதை அனைவ‌ரும‌றிவோம். பாதுகாப்பிற்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டும் அரசவிழ்ப்பாளர்களின் மிகத்தீவிரமான எதிர்ப்பால் தன் மானம் இழந்து க‌ன‌டா உலகின் முன் அவமானப்பட்டத்தை நாமறிவோம். மேலும் ஜீ/20 மாநாடு நடந்த அரங்கிற்கு பத்து நிமிடத் தொலைவில் மிகப்பெரும் ஒன்ராறியோ வாவி இருந்தும், ஒரு செயற்கையான வாவியை அரங்கிற்குள் அமைத்து மில்லியன் கணக்கில் முட்டாள்தனமாய்ப் பணத்தைச் செலவிட்டதை நாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன?

4.
கனடாவின் மருத்துவத் திட்டம் உலகிற்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகின்றது. எல்லோரும் அடிப்படை மருத்துவ வசதிகளை இலவசமாகப் பெறலாம் என்பது அதன் முக்கிய அம்சம். இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயப்படுத்துவதை இவ்வரசு செய்துவருகின்றது. மற்றக் கட்சிகள் இவ்வாறு செய்வதைக் குற்றஞ்சாட்டும்போது ஹார்ப்பர் அது ஒரு மாற்றீட்டுத்திட்டம் (Alternative Plan) என மூடிம‌றைப்ப‌தை நாம் அறியாதவர்களும் அல்ல. தான் அர‌சு அமைத்தால், ம‌ருத்துவ‌னையில் அவ‌ச‌ர‌ச் சிகிச்சைக‌ளுக்காய் நீண்ட‌நேர‌ம் காத்திருக்க‌த் தேவையில்லை என‌ வாக்குறுதிய‌ளித்த‌ ஹார்ப்ப‌ர் அத்திட்ட‌த்தை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்டாத‌தையும் நாம் நினைவிலிறுத்திக் கொள்ள‌வேண்டும்.

அண்மையில் போர்க்க‌ள‌த்தில் பாவிக்க‌ப்ப‌டும் விமான‌ங்க‌ளுக்காய் (Stealth Jets) 150 மில்லிய‌ன்க‌ள் செல‌வ‌ழிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இவ்விமான‌ங்க‌ளை மேலும் ப‌த்திருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு ப‌ராம‌ரிப்ப‌த‌ற்கான‌ செல‌வும் மில்லிய‌ன்க‌ளைத் தாண்டுகின்ற‌து. ஆனால் இதையெல்லாவ‌ற்றையும் விட‌ ஹார்ப‌ரின் அர‌சு குறிப்பிட்ட‌ செல‌வை விட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு இவ்விமான‌ங்க‌ளுக்காய்ச் செல‌வ‌ழித்த‌தாய் த‌க‌வ‌ல் க‌சிந்திருக்கின்ற‌து. என‌வே அர‌சு செல‌விட்ட‌தை பொதுவில் வைக்க‌வேண்டும் என‌ எதிர்க்க‌ட்சிக‌ள் வினாவிய‌போது, எல்லாச் செல‌வையும் பொதுவில் வைக்க‌வேண்டிய‌தில்லையென‌ ஹ‌ர்ப்ப‌ர் கூறி உண்மையான‌ செல‌வை ம‌றைத்திருக்கின்றார். க‌ன‌டாவின் ச‌ரித்திர‌த்திலேயே ஹ‌ர்ப‌ரின் அர‌சு ம‌ட்டுமே ம‌க்க‌ளின் முன்வைக்க‌வேண்டிய‌ பொது ஆவ‌ண‌ங்களை எல்லாம் -ஒரு அர‌சு விரும்பினால் ம‌ட்டுமே வைக்க‌லாம்- என்று கூறியிருக்கின்ற‌து. ஆக‌ ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு அர‌சு ம‌க்க‌ளின் முன் வைக்க‌ வேண்டிய‌தையே த‌ய‌ங்காம‌ல் ம‌றைக்கிற‌து என்றால் (ஆப்கானிஸ்தானில் க‌னேடிய‌ இராணுவ‌ம் செய்த‌ குற்ற‌ங்களின் ஆவ‌ண‌ம் உட்ப‌ட‌) இவ‌ர்க‌ள் யாருக்கான‌ அர‌சு என‌ வினாவ‌ வேண்டியிருக்கிற‌து.. அதுவும், ஒரு பாராளும‌ன்ற‌த்தில் பெரும்பான்மை இருக்கைக‌ள் கிடைக்காம‌லே இப்ப‌டி 'ச‌ர்வாதிக‌ளுக்குரிய‌' விட‌ய‌ங்க‌ளைச் செய்துகொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பான்மை அர‌சு அமைத்தால் என்ன‌வெல்லாம் செய்வார்க‌ள் என‌ யோசித்துப் பார்க்க‌வே அச்ச‌மாயிருக்கிற‌து.

இந்த‌ வ‌ல‌துசாரி அர‌சான‌து, ப‌ல‌ அத்தியாவ‌சிய‌ விட‌ய‌ங்க‌ளில் நிதிக்குறைப்புச் செய்திருக்கின்ற‌து என்ப‌தையும், பெருநிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் தாராள‌மாய் வ‌ரிச்ச‌லுகை கொடுத்திருப்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. முக்கிய‌மாய் க‌ன‌டாவிற்கு வ‌ரும் புதிய‌ குடிவர‌வாள‌ர்க‌ளுக்கான‌ சேவைக‌ள் ப‌ல‌வ‌ற்றை ஹ‌ர்ப்ப‌ரின் அர‌சு நிறுத்தியிருக்கின்ற‌து. புதிதாய் இந்நாட்டிற்கு வ‌ரும் ஒருவ‌ர் த‌ன்னை ஒரு அந்நிய‌ராக‌ உண‌ராது, இங்குள்ள‌ வாய்ப்புக்க‌ளையும் வ‌ச‌திக‌ளையும் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ சேவைக‌ள் ப‌ல‌ க‌ன‌டாவில் தொட‌ர்ந்து வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்திருக்கின்ற‌து. இச்சேவைகளில் ப‌ல‌தை நிறுத்திய‌து ம‌ட்டுமின்றி, பெண்க‌ளுக்கான‌ ப‌ல‌ சேவைக‌ளையும் ஹ‌ர்ப்ப‌ரின் அர‌சு நிறுத்தியிருக்கின்ற‌து. அண்மையில் ஐ.நாடுக‌ள் ச‌பையில் வெளியிட்ட‌ அறிக்கையில் பெண்க‌ள் சார்பான‌ விட‌ய‌ங்க‌ளில் உல‌கில் க‌ன‌டா 19வ‌து இட‌த்தில் இருக்கிற‌து. இல‌ங்கை க‌ன‌டாவிற்கு முன்பான‌ ப‌ட்டிய‌லில் இருப்ப‌தும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌து. வ‌ல‌துசாரிக‌ள் பெரும்பான்மை அர‌சு அமைத்தால் க‌ருச்சிதைவு செய்வ‌தை ஒரு குற்ற‌மாக‌ ஆக்குவார்க‌ள் என்ப‌தும், கனடாவில் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும் ஓரினப்பாலினரின் திருமணத்தை இரத்துச் செய்வார்கள் என்பதும் சொல்லித்தெரிய‌வேண்டிய‌தில்லை. எனெனில் அதற்கான‌ எல்லா முஸ்தீபுக‌ளையும் ஹார்ப்ப‌ரின் அர‌சு செய‌லிலும் சொல்லிலும் நிக‌ழ்த்திக்கொண்டிருக்கின்றார்க‌ள்.

இவை எல்லாவ‌ற்றையும் விட‌ ஹார்ப்ப‌ரின் அர‌சு முன்வைக்கும் ஆப‌த்தான‌ விட‌ய‌ம் 'தேசிய‌ம்' ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து. லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ர்
இக்னாடிஃவ் அமெரிக்காவில் இருந்த‌போது க‌ன‌டா குறித்து விம‌ர்சித்த‌தை எல்லாம் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்தி, 'இப்ப‌டி க‌ன‌டாவை வெறுப்ப‌வ‌ரையா நீங்க‌ள் பிர‌த‌ம‌ர் ஆக்க‌ப்போகின்றீர்க‌ள்?' என‌ வ‌ல‌துசாரிக‌ள் கேட்கின்றார்க‌ள். ஆனால் என்ன‌ முர‌ண்ந‌கை என்றால், ஹ‌ர்ப்ப‌ரே வ‌ல‌துசாரி புஷ்சின் ஆட்சிமுறைக‌ளை அப்ப‌டியே பின்ப‌ற்றிக் கொண்டிருக்கின்றார். புஷ்சைப் போல‌ ம‌ற்ற‌ நாடுக‌ளை ஆக்கிர‌மிக்கும் போர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ஆத‌ர‌வு கொடுப்ப‌து, அமெரிக்காவில் இருக்கும் பெரும் சிறைச்சாலைக‌ளைப் போல‌ இங்கும் பிர‌மாண்ட‌மான‌ சிறைச்சாலைக‌ளைக் க‌ட்டுவ‌து, இதுவ‌ரை ந‌டைமுறையில் இல்லாத‌, தாங்க‌ள் வைத்திருக்கும் துப்பாக்கிக‌ளுக்கு உரிமை எடுக்க்க‌த் தேவையில்லை என‌ ச‌ட்ட‌த்தைக் கொண்டுவ‌ர‌ முய‌ல்வ‌து உட்ப‌ட‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் அப்ப‌டியே அமெரிக்கா வ‌ல‌துசாரிக‌ளின் ஆட்சிமுறையையே ஒத்திருக்கின்ற‌து. அதைவிட‌ ந‌கைச்சுவை என்ன‌வென்றால், க‌ன‌டாவில் இதுவ‌ரையில்லாத‌ ந‌டைமுறையாக‌ த‌ன‌து அர‌சை 'க‌னேடிய‌ அர‌சு' என்று அழைக்காது 'ஹார்ப்ப‌ரின் அர‌சு' என‌ அழைக்க‌வேண்டுமென‌ அர‌சாங்க‌ம‌ட்ட‌த்தில் ஹ‌ர்ப்ப‌ர் உத்த‌ர‌விட்டிருப்ப‌து.

5.
இதைவிட‌ த‌மிழ‌ர்க‌ள் அண்மைக்கால‌த்தில் இர‌ண்டு க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ந்த‌போது வ‌ல‌துசாரிக‌ள் எவ்வாறு ந‌ட‌ந்துகொண்டிருந்தார்க‌ள் என்ப‌தை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. நேற்றுக் கூட‌ வ‌ன்கூவ‌ரில் பேசிய‌ ஹார்ப்ப‌ர் இவ்வாறு வ‌ந்த‌வ‌ர்க‌ளை வ‌ழிநட‌த்திய‌வ‌ர்க‌ளை 'பாம்புத்த‌லைய‌ர்க‌ள்' (snakeheads) என‌ க‌டுமையான‌ திட்டித் தீர்த்திருக்கின்றார். க‌ன‌டாவில் இர‌ண்டாவ‌து க‌ப்ப‌ல் வ‌ந்த‌போது, அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ இப்ப‌டிக் க‌ப்ப‌லில் வ‌ருப‌வ‌ர்க‌ள் மீது க‌டும் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து உட்ப‌ட‌ ப‌ல‌ ச‌ட்ட‌ மாற்ற‌ங்க‌ளை ஹார்ப‌ரின் அரசு பாராளும‌ன்ற‌த்தில் முன்வைத்த‌து. எனினும் லிப‌ரலின‌தும், என்டிபியின‌தும் முய‌ற்சியினால‌ அச்சீர்திருத்த‌ங்க‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌மாக்க‌ப்ப‌டுவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. த‌ங்க‌ள் நாட்டில் உயிர்வாழ‌முடியாது என்ப‌தால் ப‌ல‌ அபாய‌ங்க‌ளைக் க‌ட‌ல்க‌ளில் ச‌ந்தித்தும், நிறைய‌க் க‌ட‌ன் பெற்றும் வ‌ரும் ம‌க்க‌ளை கொஞ்ச‌மேனும் ம‌னிதாபிமான‌த்தோடு புரிந்துகொள்ளாத‌ அர‌சை நாம் எப்ப‌டித் தேர்ந்தெடுக்க‌முடியும்? இவ‌ர்க‌ளின் (வெள்ளைய‌ரின்) மூத்தோர்க‌ள் நாடு நாடாக‌ ஆக்கிர‌மித்து அங்கிருந்த‌ வ‌ள‌ங்க‌ளையும், ம‌க்க‌ளையும் சூறையாடிய‌து போல‌வ‌ன்றி, இன்று மூன்றாம் உல‌க‌ நாடுக‌ளிலிருந்து இங்கே வ‌ருப‌வ‌ர்க‌ள் தாம் வ‌ள‌மாய் வாழ‌ சிறு இட‌ம் கேட்கின்றார்க‌ளே த‌விர‌ இங்குள்ள‌வ‌ர்க‌ளை ஆக்கிர‌மித்து வாழ‌ அல்ல‌ என்ப‌தை நாம் உறைக்கும்ப‌டி இவ‌ர்க‌ளுக்குச் சொன்னால் கூட‌ இவ‌ர்க‌ள் கேட்பார்க‌ளா என்ன‌? க‌ன‌டா போன்ற‌ மேற்கு நாடுக‌ள் ஏதோ பெரிய‌ம‌னிதாபிமான‌த்தால் ம‌ட்டும் புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ளை உள்ளெடுக்கிற‌து என்று நாம் நினைத்தால் இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் அறியாச் சிறுபிள்ளைக‌ள் ஆகிவிடுவோம் நாம். இவ‌ர்க‌ளின் ச‌ன‌த்தொகை மிக‌ ம‌ந்த‌மாக‌வே வ‌ள‌ர்ச்சியுறுவ‌தால் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சிக்கு நிறைந்த‌ ம‌னித‌வ‌லுத் தேவைப்ப‌டுகின்ற‌து. ஆக‌வே நிறைய‌ ம‌னித‌ர்க‌ளை உள்வாங்க‌வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் இந்நாடுக‌ளுக்கு ஏற்ப‌டுகின்ற‌து.   இதுவே மிக‌ முக்கிய‌ கார‌ண‌மாகும். இல்லாவிட்டால் இன்று பொருளாதார‌ம் ம‌ந்த‌ம‌டையும்போது புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ளை உள்ளெடுப்ப‌தை ஏன் மிக‌வும் க‌ட்டுப்ப‌டுத்துகின்றார்க‌ள் என்ப‌தை இந்த‌ அமெரிக்க‌/ஜ‌ரோப்பியா நாடுக‌ளை முன்வைத்து நாம் யோசிக்க‌வேண்டும்.

வ‌ல‌துசாரிக‌ளின் முன்வைத்து எழுதுவ‌தால் ஏதோ ம‌ற்ற‌க்க‌ட்சிக‌ள் எல்லாம் சிற‌ப்பான‌ க‌ட்சிக‌ள் என்ப‌தில்லை. வ‌லதுசாரிக‌ள் ஆட்சியில் இருப்ப‌தால் அவ‌ர்ளைப் ப‌ற்றியே நிறைய‌ப் பேச‌வேண்டியிருக்கிற‌து என்ப‌தோடு யாரைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்ப‌தை அல்ல‌, யாரைத் தேர்ந்தெடுக்க‌க் கூடாது என்ப‌திலேயே நாம் இந்நேர‌த்தில் அவ‌தான‌மாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தை இங்கே கவ‌ன‌ப்ப‌டுத்தியிருக்கின்றேன். வ‌ல‌துசாரிக‌ளே வெல்வ‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருப்ப‌தாய் க‌ருத்துக்க‌ணிப்புக்க‌ள் கூறுகின்ற‌ன‌. க‌ன‌டாவில் க‌ருத்துக்க‌ணிப்புக்க‌ளும், தேர்த‌ல் முடிவுக‌ளும் அவ்வ‌ளவு வித்தியாச‌ப்ப‌டுவ‌தில்லையென‌பதை நாம‌றிவோம். ஆக‌வே அவ்வாறு வ‌ல‌துசாரிக‌ள் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டாலும், ந‌ம‌க்கு இர‌ண்டாவ‌து தெரிவு இருக்கிற‌தென்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. அதாவ‌து வ‌ல‌துசாரிக‌ளை  ஒரு பெரும்பான்மை அர‌சை அமைக்க‌விடாது த‌டுக்க‌வாவ‌து நாம் முய‌ற்சிக்க‌வேண்டும்.

2 comments:

Puthiawan said...

கனடாவில் இயங்கும் வானொலி நிறுவத்தின் நிர்வாகப் பிரிவில் உள்ள தமிழர் ஒருவரும் பழமைவாதக் கட்சில் இம்முறை நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகின்றார். மாவீரர் தினம் தொடர்பாக அவர் வழங்கியிருந்த ஓர் தொலைக்காட்சி நிகழ்வு தொடர்பாக அவரிடம் கேட்ட கேள்விக்கு தான் எந்தவொரு காலத்திலும் பயங்கரவாதிகளிற்கு ஆதரவாக இருந்ததில்லை எனவும் தான் சார்ந்திருந்த நிறுவனத்திற்காகவே அவ்வொளித் தொகுப்புத் தயாரிக்கப்பட்டதாவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை கனடிய அரசாங்கம் தடைசெய்தது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அதனைத் தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடிய கார்ப்பர் அரசானது இரட்டைநாக்குடன் பேசும் போக்கினை ஆட்சிக்கு வந்த காலம் தொட்டே தொடர்ந்து வருகின்றது. அக் கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் இத்தமிழரும் அக்கட்சியின் போக்கிற்குத் தன்னை ஏற்கனவே தயார்படுத்தியுள்ளதாகவே கருமுடிகிறது.

4/19/2011 06:51:00 PM
DJ said...

புதிய‌வ‌ன்,
நீங்க‌ள் குறிப்பிடும் வேட்பாள‌ர் நான் வ‌சிக்கும் தொகுதியிலேயே வ‌ல‌துசாரிக‌ள்(ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி) சார்பில் போட்டியிடுகின்றார். இன்னொரு ப‌திவில் இத்தேர்த‌லில் ப‌ங்குபெறும் த‌மிழ் வேட்பாள‌ர்க‌ள் குறித்து எழுதலாம் என்று நினைத்தே இவை குறித்து எதுவும் எழுத‌வில்லை.

/கனடிய கார்ப்பர் அரசானது இரட்டைநாக்குடன் பேசும் போக்கினை ஆட்சிக்கு வந்த காலம் தொட்டே தொடர்ந்து வருகின்றது. அக் கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் இத்தமிழரும் அக்கட்சியின் போக்கிற்குத் தன்னை ஏற்கனவே தயார்படுத்தியுள்ளதாகவே கருமுடிகிறது./
என்று நீங்க‌ள் குறிப்பிடுவ‌தையே நானும் தேர்த‌லில் வாக்க‌ளிக்கும் ஒவ்வொருவ‌ரும் /இன்னொருவித‌மாய் தீவிர‌ வ‌லதுசாரிக‌ட்சி சிறுபான்மை இன வேட்பாளர் போட்டியிடுவ‌த‌ற்கு வாய்ப்புக்கொடுத்தால் கூட‌, அவ‌ர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ப‌த‌ற்காய் நாம் வாக்க‌ளிக்க‌ வேண்டுமா அல்ல‌து அவ‌ர‌து க‌ட்சி எத்த‌கைய‌ விழுமிய‌ங்க‌ளுக்கு இட‌ங்கொடுக்கும் என்ப‌தைப் ப‌ற்றி யோசிக்க‌வேண்டுமா என‌ நாம் நினைத்துப் பார்க்க‌ வேண்டும்./ என‌க் குறிப்பிட்டேன்.

4/20/2011 11:09:00 AM