நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ப‌ற‌ந்துபோன‌ இரும‌ர‌ங்க‌ளும் ப‌ச்சைய‌ம் இழ‌ந்த‌ காடுக‌ளும் - 03

Friday, May 13, 2011

டிசே த‌மிழ‌ன் - க‌லீஸ்தினோ

-ப‌குதி 03

III.
இவ்வளவு காலமும் என்னைப் புறக்கணித்துவிட்டு இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒரு மெயிலை இவன் அனுப்பியிருந்தான். எல்லாவற்றையும் மறந்து அல்லது கடந்தகாலத்தை நினைவூட்டாது இருவரும் மீண்டும் டேட்டிங் செய்யத் தொடங்கியிருந்தோம். ஒரு நாள் இர‌வு நாங்கள் 'கெல்சி'யிற்கு சாப்பிடப் போயிருந்தோம். இவன் கழிவறைக்குப் போயிருந்த‌ நேர‌ம் இவனது கைத்தொலைபேசியை சும்மா தோண்டியபோது துஷா@.... என்ற பெயரில் தொலைபேசி எண் ஒன்று பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். அட இது எனது தோழிக்கு பழக்கமான துஷாவல்லவா என்று இழையொன்றின் நுனியைப் பிடித்து, பிறகு துஷாவிற்கும் இவ‌னிற்கும் க‌ட‌ந்த‌கால‌த்தில் இருந்த‌ உற‌வின் முழுப் பரிமாணத்தையும் அறிந்துகொண்டேன்.

நான் மிகுந்த சிக்கலுக்குள் -இவன் திரும்பி வந்த காலகட்டத்தில்- இருந்தேன். அந்தக் காலகட்டத்தைப் போல நான் மனவுளைச்சலுக்கு உள்ளான ஒருபொழுது என்றுமே இருந்த‌தில்லை. எனது நிலைப்பாட்டை... எனது சுயத்தை.... எனது பெற்றோருக்காவது விளங்கப்படுத்த முடியுமென அவர்களோடு போராடிக்கொண்டிருந்தேன். அவர்கள் என் மீதான எல்லா கயிறுகளையும் இறுக்கத்தொடங்கியிருந்த‌ன‌ர். தற்கொலை செய்யலாமோ என்று கூட பலமுறை அந்த நேரங்களில் நினைத்துக்கொண்டதுண்டு. இவ்வளவு காலமும் என் வாழ்வின் ஒரு பகுதியாயிருந்த பெற்றோரைச் சட்டென வெட்டிவிட்டும் போக முடியவில்லை. என்னிடம் எதுவும் கேட்காமலே எனக்கான திருமண விடயத்தை அவ‌ர்க‌ள் தீவிரமாகத்தொடங்கினர்.

இந்த விடயத்திலிருந்து உடனடியாகத் தப்பவேண்டும், இல்லாவிட்டால் காலமுழுக்க கண்ணீரோடு கழிக்கவேண்டியிருக்கும் என்ற யோசனையிலிருந்தபோதே இவன் மீளவும் எமது உறவை தூசி தட்டி புதுப்பிக்க விருப்பி எனக்கொரு மெயிலை அனுப்பியிருந்தான். இப்போதைக்கு தெரியாத பேயிற்குக் கழுத்தை நீட்டுவதை விட தெரிந்த பிசாசுக்கு சம்மதம் தெரிவிப்பது நல்லதென நினைத்து. இவனைத் திருமணம் செய்வதற்குச் தெரிவித்து இருந்தேன்.

4
இவளுடைய நச்சரிப்பதுத் தாங்க முடியாமல் தான், இப்போது ஐயப்பன் கோயிலில் எண்ணெய் சாத்துவதற்காய் கால்கடுக்க நிற்கவேண்டியிருக்கிறது. குளிர்த்திச் சோற்றுக்காய் நிற்கும் மற்ற கியூவில் போய் நிற்க எனக்கு விருப்பமிருந்தாலும், 'கோயிலுக்குப் போவது கும்பிடத்தான்' என்பதில் உறுதியாய் நிற்பவளின் விழிகள், நான் மற்றக் கியூவில் போய் நின்றால் சிவந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. ஐயப்பன் ஒரு பிரமச்சாரி என்றும் பெண்கள் எல்லாம் ஐயப்பன் கோயிலுக்குள் போகக்கூடாது என்றும் அல்லவா கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்படி நீங்கள் பெண்களை விடுகிறது நியாயமா என்று இந்த அறங்காவல் சபையிடம் யாராவது கேள்வி கேட்டு பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடை செய்தால், நான் நிம்மதியாய் எனக்குப் பிடித்த குளிர்த்திச் சோற்றைச் சாப்பிட்டுவிட்டு என்பாட்டில் போய்விடலாம். சா...என்ன உலகமிது. புலம்பெயரப் பெயர த‌மிழ்ப்பெண்க‌ள் ம‌ட்டுமில்லை, சாத்திர சம்பிரதாயங்களும் மாறிவிடுகின்றன.

ம்...இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வியப்பாய்தானிருக்கிறது; இடையில் நான் பல திருகுதாளங்களைச் செய்தபின்னும் எந்தக் கேள்வியும் கேட்காது என்னை அதேமாதிரி இவள் ஏற்றுக்கொண்டிருக்கின்றாள். எவ்வளவுதான் நாங்கள் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதில் சிலையாக நிற்கும் சாமிகளைவிட உறுதியாகத்தான் இவளைப் போன்ற பெண்கள் நிற்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இவ‌ளைப் போன்ற‌ பெண்களை நடமாடுந் தெய்வங்கள் என்று அழைப்பதில் எவ்விதத் தப்பும் இல்லைத்தான். இப்போது சுடிதாரில் வந்திருக்கிற இவளுக்கு, நான் அணிந்து வரக்கட்டாயப்படுத்திய தாலி இன்னும் அழகைக் கொடுக்கிறது. ஆனால் வளாக காலத்தில் எங்கள் இருவருக்குமிடையில் இருந்த அந்நியோன்னியம், எல்லாவற்றையும் பகிரும் ஆவல் எல்லாம் எங்கையோ இந்தத் திருமணத்தின்பின் வடிந்துபோனதுபோலத்தான் தோன்றுகின்றது. ஏன் இரவுகளில் கூட அவ்வளவு உற்சாகமில்லை; ஒவ்வொருமுறையும் ஏதோவொரு சாட்டுச்சொல்லி கவனத்தைத் திசை திருப்பிக்கொண்டிருப்பது ஏனென்றும் விளங்கவில்லை.

IV.
இவனோடான திருமணத்தின்பின் நான் யாரென்பது மிகத் தெளிவாக எனக்கு விளங்கியது. என்னைச் சிலவேளைகளில் இவன் ஒரு விளையாட்டுப் பொருளாய்ப் பாவித்தது குறித்த கோபமிருந்தாலும் என் மீது இவன் இப்போது வைத்திருக்கும் அன்பில் எவ்விதச் சந்தேகமுமில்லை. எனது நிலையை எப்படி இவனுக்கு எடுத்துச் சொல்வது என்பதும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இப்படியே இருக்கமுடியாது. எனக்குரியதற்ற இந்தவெளியில் நான் எல்லாவற்றையும் மூர்க்கமாய் நிராகரித்துக்கொண்டும் கோபித்துக்கொண்டும் இருப்பது எனக்குப் விளங்கத்தான் செய்கின்றது. எனக்கான முடிவை விரைவில் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

V
(ஏழு மாதங்களுக்குப் பின்...)
கலீஸ்தினோ, தயவு செய்து இதற்கு மேல் என்னை எதுவும் வற்புறுத்தாதே. நான் சொல்லும் உண்மையை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகமோ அல்லது இதை வாசிக்கப்போகின்றவர்களோ இன்னும் தயாரில்லை. ஆனால் உண்மை எப்போதும் எல்லோரையும் திருப்திப்படுத்துவதாகவும் இருப்பதில்லை. அது ஒரு அழியாச்சுடர் போலத் தன்விருப்பில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது. சிலவேளை இன்றைய சூரிய நாட்களில் சுடரின் ஒளி மறைக்கப்பட்டாலும், மின்மினிகள் உலகிறகு அவசியமான நாட்களில் சுடரின் மகிமையை இந்த உலகம் விளங்கிக்கொள்ள முயலுமென நினைக்கின்றேன். அதுவரை காலம் காத்திருக்கலாம்; ஆனால் எனது வாழ்நாட்களுக்கு அவ்வாறான பொறுமை இருக்கப்போவதில்லை.

இப்போது எனக்கான தெரிவுகளை நானே எடுத்துக்கொள்ளும் வலிய ஒருவளாக மாறிவிட்டேன். எனெனில் என் தெரிவுகளில் மட்டுமே நான் நானாக இருக்கமுடியும். பிறருக்காய் எனது வாழ்வை நான் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.இவ்வாறு நான் கூறுவது சிலருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கக்கூடும்; ஆனால் இதுவே நான். இங்கே எனக்கு முன் எத்தனையோ பேர் என்னைப் போல எங்கள் சமூகத்தில் வாழ விரும்பியிருக்கலாம். ஏன் சிலவேளை வாழ்ந்துமிருக்கலாம்.

பிரிய கலீஸ்தினோ நீ என் மீது வைத்திருகும் அக்கறையால்தான் இவ்வளவற்றையும் உனக்குப் பொறுமையுடன் கூறுகின்றேன். எல்லா உண்மைகளும் இச்சமூகத்திற்குத் தெரியவரும்போது என்னை மிதித்துப்போடவே இச்சமூகம் விரும்பும் என்பதை நீயறியாததல்ல. ஆனாலும் அவசரப்பட்டு, நான் கூறிய எதையும் உட‌னே பதிவு செய்துவிடாதே. நாங்கள் ஏற்கனவே திட்டமிருந்தபடி வன்கூவரின் ஒதுக்குப்புறமான நகருக்குப் போய் எங்கள் அடையாளங்களைக் களைந்து வாழத்தொடங்கும் பொழுதுகளில் வேண்டுமானால் மட்டும் பொதுவில் எழுது.

உன்னிடமிருக்கும் நம்பிக்கையைப் போல எனக்கு டீஜேவிடம் இல்லை. அவன் எங்களை விட மூன்று வயது சிறியவனாக இருக்கலாம். ஆனால் இந்த வயதிலும் பல விடயங்களின் சீரியஸ்தன்மையை விளங்காது விளையாட்டுப் பிள்ளை போலவே இருக்கின்றான். நாங்கள் படித்த மானிடவியலின் முக்கிய கூறுகள் பற்றி கொஞ்சம் அவனுக்கு விளங்கப்படுத்து. முக்கியமாய் விளிம்புநிலை மனிதர்கள் குறித்து மிகுந்த தெளிவற்றவனாகவே அவன் இருப்பது போலத்தோன்றுகின்றது.

நீ என்னிடம் இப்போது கதை கேட்டுக்கொண்டிருப்பதைப்போல எனது முன்னால் துணையான அவனிடம், டீஜே சிலவிடயங்களை கேட்டறிந்துகொள்வதை -நீ சொல்லி- நானறிவேன். எனது கதை, எனது முன்னாள் துணையின் குரலில்லாது முழுமை பெறாது என்பதை நீங்கள் இருவரும் கூறியதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் என்றோ ஒருநாள் நீங்கள் இருவரும் சேர்ந்து எழுதப்போகும் எனது கதையை 'ஆண்களுக்கான மொழியில்' மட்டும் பதிந்து எனது குரலை ஒடுக்கிவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது.

அதுபோலவே எங்களின் உண்மையான வலிகளும், நெருக்கடிகளும், அகச்சிக்கல்களும் சித்தரிக்கப்படாது எங்களின் கதை ஒருவகையான கேலியுடன் எழுதப்படவும் வாசிக்கப்படவும் கூடும் என்றே நம்புகின்றேன். ஆனால் இவற்றையெல்லாம் விட என் கதை பகிரப்படவேண்டுமென ம‌ன‌ம் அவாவி நிற்கிறேன். எல்லா அவமதிப்புக்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் அப்பால் நான் எனது தெரிவுகளுடன் வாழவிரும்புகின்றேன் என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும். எனெனில் எங்கள் சமூகத்தில் என்னைப் போன்ற பலர் தமக்கு விருப்பமான துணைகளுடன் வாழ்வதற்கு இவ்வாறான அகச்சிக்கல்களுக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

என்றேனும் ஒருநாள் நீயோ டீஜேயோ, அவனை மீண்டும் சந்தித்தால், சூழலின் கைதியினால் மட்டுமே நான் அவனைத் திருமணஞ்செய்துகொள்ளும் முடிவை எடுக்கவேண்டியதாயிற்று எனச் சொல். அதற்காக நான் உண்மையில் இன்று மிக மனம் வருந்துகின்றேன் என்பதையும் அவனுக்கான எதிர்கால வாழ்வுக்காய் என் பிரார்த்தனைகள் என்றும் இருக்கும் என்பதையும் அவனுக்கு என் சார்பில் தெரியப்படுத்துங்கள்.

குறிப்பு-1: (கலீஸ்தினோவுடையது) என் தோழியின் கதையைக் கேட்டு எழுதியபின் இதைப் பிரசுரிக்கமுன்னர் அவரைத் தொலைபேசியில் தொட‌ர்புகொள்ள‌ முய‌ன்ற‌போது, இல‌க்க‌ம் பாவ‌னையில் இல்லை என‌க்கூறிய‌து. இக்க‌தையை அவ‌ர் கூறத்தொடங்கியபோதே தான் இன்னும் சில மாதங்களில் எவரது தொடர்புமில்லாது தனது பெண் துணையுடன் வேறொரு நகரின் புறநகருக்குப் போய்விடுவேன கூறியிருந்தார். இப்போது முழுதாக எங்கள் எவரின் தொடர்பு எதுவுமின்றி இருக்கவே விரும்புகின்றார் எனது தோழியென நினைக்கின்றேன். அவர் கூறிய கதையை விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச் சூழல் குறித்த பதற்றமும், எனக்குள்ளேயிருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக் கூற விரும்புகின்றேன்.

குறிப்பு-2: (டிசேயினுடையது) நான் அவனின் கதையைக் கேட்டதால் அவனைப் பற்றியே கூறமுடியும். அவனுக்கு எல்லா உண்மைகளையும் அறிந்தபோது திகைப்பாக இருந்தது. இப்படி அரைகுறையான நிலையில் இருவரும் இருப்பதைவிட அவள் அப்படிப் போனது சரியான முடிவே என்றான். பிறகு இடைப்பட்ட வருடங்களில் இலங்கைக்கு போய் ஒரு பெண்ணை மணம் முடித்து வ‌ந்திருக்கின்றான். சிலவேளைகளில் நீங்க‌ள் க‌ன‌டாவில் கோயில் எங்கையும் போகும்போது சேலையும் தாலியும் கட்டிய தன் துணையை இரசிக்கின்றவர்களின் ஒருவனாய் அவனை நீங்கள் பார்க்கலாம். ஒருமுறை, நான் துஷாவின் தொலைபேசி எண்ணை எனக்குத் தந்து உதவமுடியுமா எனக் கேட்டதன் பிறகு, தன்னை இனிச் சந்திக்கவோ தொலைபேசியில் அழைக்கவோ வேண்டாமென கடுமையான கோபத்தில் கூறிவிட்டான். அந்த நாள் 2007 கார்த்திகை 09.

குறிப்புக்களாய் எழுதியது 2006, திருத்தி ஒழுங்கமைத்தது 2008 இலையுதிர்க்காலம்)
நன்றி: கூர் 2011

0 comments: