-பெர்ன்ஹார்ட் ஸீலிங்கின் 'The Guilt about the Past' ஐ முன்வைத்து-
(ஈழம்: 2009ன் நிகழ்வுகளுக்கு...)
1.
'கடந்தகாலம் பற்றிய குற்றவுணர்வு' (The Guilt about the Past) என்கின்ற இந்நூல் ஆறு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றது. சட்டப் பேராசிரியரான பெர்ன்ஹார்ட் ஸீலீங் (Bernhard Schlink), ஒக்ஸ்போர்ட் கல்லூரியில் பேசியவற்றின் தொகுப்பே இக்கட்டுரைகளாகும். இத்தொகுப்பிலிருக்கும் 'கூட்டுக் குற்றவுணர்வு', 'கடந்தகாலத்தை சட்டத்தினூடாக தேர்ச்சிபெறுதல்', 'மன்னிப்பும் மீளிணக்கமும்' மற்றும் 'கடந்த காலத்தைப் பற்றிய கதைகள்' ஆகியவற்றைக் கீழே சற்று ஊன்றிப் பார்போம். பெர்ன்ஹார்ட் 'தி ரீடர்' (The Reader) என்கின்ற பிரபலமான நாவலை எழுதியவருமாவர். 'தி ரீடர்' நாவலும் நாஸிப்படையில் பணியாற்றிய ஒரு பெண்ணின் 'கடந்தகாலம் பற்றிய குற்றத்தை' முதன்மைப்படுத்துவதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். பதின்மத்திலிருக்கும் ஒருவனுக்கு மத்தியவயதிலிருக்கும் இப்பெண்ணோடு காதல் முகிழ்வதையும், பிற்காலத்தில் தான் காதலித்த இப்பெண்ணே, யூதர்களை அடைத்துவைத்த முகாமிற்குக் காவலாளியாக இருந்ததையும் அறிந்துகொள்கின்றான். வதைமுகாமில் அடைத்துவைக்கப்பட்ட யூதர்கள் தீ விபத்தில் கொல்லப்பட்டதற்கு இப்பெண்ணும் ஒரு முக்கிய காரணியென குற்றஞ்சாட்டப்படும்போது இந்த இளைஞனுக்கு ஏற்படும் குற்றவுணர்வே இக்கதையின் முக்கிய தொனியாக இருக்கிறது.
'கடந்தகாலம் பற்றிய குற்றவுணர்வு' நூலில் நுழைவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இதை எழுதிய பெர்ன்ஹார்ட் ஒரு சட்டப்பேராசிரியராக இருந்தபோதிலும், அவர் ஜேர்மனியில் நாஸிகளால் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஒரு சாட்சியாக இருந்தவருமல்ல; பாதிக்கப்பட்ட யூதர்களின் தலைமுறையைச் சார்ந்தவருமல்ல. ஜேர்மனியத் தந்தைக்கும், ஸ்விடிஷ் தாயிற்கும் பிறந்த பெர்ன்ஹார்ட் ஒரு ஜேர்மனியராவார். மேலும் பெர்ன்ஹார்ட் 1944ல் பிறந்தவர் என்பதால் அவர் நாஸிகளின் படுகொலைக்குப் பின்பாகத் தோன்றிய ஜேர்மனிய முதல்தலைமுறையைப் பிரதிபலிப்பவராவர். அறுபதுகளின் தலைமுறையைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொள்ளும் பெர்ன்ஹார்ட் எப்படித் தமது தந்தையர்களும், பேரர்களும் செய்த அழிவுகளைத் தனது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்கின்றார்கள் என்பதை ஒரு முக்கிய பேசுபொருளாக இந்நூலில் எடுத்துக் கொள்கின்றார். தானும் தன்னைச் சார்ந்த தலைமுறையும் சந்தித்த அவமானங்களையும், எதிர்கொண்ட கேள்விகளையும், தடுமாற்றங்களையும் போல அன்றி, வேறுவிதமாகவே இந்த அழிவுகளை தமக்குப் பின் வரும் ஜேர்மனியத் தலைமுறை எதிர்கொள்ளும் எனவும் குறிப்பிடுகிறார்.
இந்நூலின் முதலாம் அத்தியாயத்தில், கடந்த காலம் பற்றிய குற்றவுணர்வு தனிப்பட்ட மனிதர்களுக்குரியதா அல்லது கூட்டு மனங்களுக்குரியதா என்கின்ற கேள்விகளை பெர்ன்ஹார்ட் முன்வைக்கின்றார். அதாவது ஒரு இனத்தில் குறிப்பிட்ட சிலர் குற்றங்களை இழைத்தமைக்காய், முழு இனமுமே அதற்கான குற்றவுணர்வைக் கொண்டிருக்க வேண்டுமா என்பதை வாசிப்பவர்களிடம் முன்வைக்கிறார். அதற்கு முன், ஆதிகாலத்திலிருந்து எப்படி ஒரு குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்படும் முறை மாறிக்கொண்டிருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகின்றார். ஒரு காலத்தில் ஒரு இனக்குழுமத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றஞ்செய்தால் அவர் சார்ந்திருக்கும் முழு இனக்குழுமமுமே அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இருந்ததைக் குறிப்பிடுகின்றார். பின்னர் தண்டனை வழங்கும் முறை, குற்றத்தைச் செய்தவரை மற்ற இனக்குழுமத்திற்கு கையளிக்கின்ற வழக்கம் இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றார். அவ்வாறு கையளிக்கப்படும் குற்றம் செய்த நபரை விரும்பினால் கொல்லவோ அல்லது தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கவோ மற்ற இனக்குழுமத்திற்கு உரிமை இருந்ததைக் கவனப்படுத்துகின்றார். நமது காலத்தில் குற்றங்களுக்கு விசாரணை செய்வதையும்,தண்டனை வழங்குவதையும் அரசும், காவல்துறையும் எடுத்துக்கொண்டன என்கிறார் பெர்ன்ஹார்ட்.
டர்பாரிலோ,கொசோவாவிலோ நடக்கும் படுகொலைகளைப் பற்றித் தன்னால் விரிவாகக் கதைக்கமுடியாது. ஆனால் தான் வாழும் ஜேர்மனியில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி ஒரு ஜேர்மனியனாகத் தன்னால் பேசமுடியும் என்கிறார். தீர்ப்பு வழங்கும் முறைகள் எவ்வாறு காலத்திற்குக்காலம் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதையும், அதற்கு உதாரணமாக 1945ற்குப் பின்பான ஜேர்மனியும், 1989ற்குப் பின்பான இணைந்த (கிழக்கு/மேற்கு)ஜேர்மனியும் நாஸிப்படையிலிருந்து குற்றஞ்செய்தவர்களுக்கு வழங்கிய தண்டனைகளையும் எடுத்துக் காட்டுகின்றார். பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு இணைந்த ஜேர்மனியின் பின், சட்டத்தில் பல திருத்தங்கள் ஏற்பட்டன எனவும், எந்த ஜேர்மனியின் (கிழக்கினதாஅல்லது மேற்கினதா) சட்டங்களைப் பின்பற்றுவதென்ற சிக்கல்கள் எழுந்ததையும் சுட்டிக்காட்டுகின்றார்.
இதன் நீட்சியிலே, நாஸியில் இருந்த ஒருவர் அக்காலத்தில் குற்றம் புரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுதல் அவசியம் என வலியுறுத்தும் பெர்ன்ஹார்ட், ஆனால் ஒருவர் நாஸிப்படையில் இருந்திருக்கிறார் என்ற ஒரேயொரு காரணத்தை மட்டும் வைத்து தண்டிக்கப்படுதல் அவசியமா என்ற கேள்வியை எழுப்புகின்றார். நாஸிகள் யூதர்களைக் கொன்றபோது, ஜேர்மனியராக(அல்லது நாஸிப்படையில் இருந்த) ஒருவர் அதை எதிர்க்காததை நாம் தவறென்று சுட்டிக்காட்டலாம். ஆனால் அதற்காக அவரைக் குற்றவாளியாக்க முடியுமா என்கிறார் பெர்ன்ஹார்ட். அதாவது ஒருவர் குற்றம் செய்யும்போது அவருக்கு தண்டனை கிடைக்க நாம் போராடியிருக்கவேண்டும். ஆனால் அதேசமயம் அவ்வாறு குற்றஞ்செய்தவர் தண்டனை பெற நாம் போராடியிருக்காவிட்டால், நாம் அந்தக் குற்றத்தைச் செய்தவருக்கு நிகரான தண்டனையைப் பெறவேண்டுமா எனக் கேட்கிறார் பெர்ன்ஹார்ட்.
2.
இந்நூலை வாசிக்கும்போது, பெர்ன்ஹர்ட் நாஸிகளின் அட்டூழியம் நடந்து முடிந்த, முதலாம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே அவரது இளமைக்கால்ம் யூதப்படுகொலைகளைச் செய்த நாஸிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலமாகவே இருந்திருக்கிறது. பெர்ன்ஹாட் போன்றவர்கள் மீது அன்பான தந்தையர்களாகவும், பேரர்களாகவும் இருந்த பலர் மிக மிலேச்சனத்தனமாய் யூதர்களைக் கொன்ற கொலையாளிகள் என்பதை அறிகின்றபோது 'நமது தந்தையரை கொல்வது எப்படி'? என்கின்ற கேள்விகள் இயல்பாய் பெர்ன்ஹார்ட்டின் தலைமுறைக்கு எழுந்திருக்கும் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. எனவே இந்தக் குற்றவுணர்விலிருந்தும், யூதர்களைக் கொன்ற வரலாற்றுப் பெரும்பழியிலிருந்தும் பெர்ன்ஹார்ட்டின் தலைமுறை வெளிவரவேண்டியுமிருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் இந்நூலிலிருக்கும் கட்டுரைகள் மிகவும் பொதுவான தளத்திலும், பெர்ன்ஹார்ட்டின் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தும் எழுதப்பட்டிருப்பதையும் நாம் நினைவில் இருந்தவேண்டும்.
இரண்டாவது பகுதி 'கண்டித்தலும் மன்னித்தலும்' மற்றும் 'மறத்தலும் மீளிணக்கம் செய்வதும்' பற்றிப் பேசுகிறது. இதற்கு தன் வாழ்விலிருந்து பெர்ன்ஹார்ட் ஒரு சொந்த அனுபவத்தைத் தருகின்றார். தான் சிறுவனாக இருக்கும்போது அன்றன்றைய நாளில் செய்த நல்லவைகளுக்கு நன்றி சொல்லியும், பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்கவும்படியும் கடவுளிடம் பிரார்த்திக்கும்படி கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருந்த அம்மாவால் தான் வளர்க்கப்பட்டேன் என்கிறார் பெர்ன்ஹார்ட். ஒருமுறை தான் தன் சகோதரர்களுக்குத் தவறிழைத்து விட்டேன், அதனால் மன்னிக்கும்படி கடவுளிடம் பிரார்த்தித்தேன் எனத் தன் தாயிடம் கூறியபோது, கடவுளிடம் அல்ல, நீ தவறிழைத்த சகோதரர்களிடமே நேரில் மன்னிப்புக் கேட்கவேண்டுமென அம்மாவினால் அறிவுறுத்தப்பட்டேன் என்கிறார் பெர்ன்ஹார்ட். ஆக கடவுளிடம் முழு நம்பிக்கையுள்ள அம்மா கூட முதலில் தவறிழைத்த மனிதர்களிடந்தான் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார் என்கிறார். அப்படி எனில் நமக்கேன் மன்னிப்பு வழங்கும் கடவுள் வேண்டியிருக்கிறதென கேள்வி எழுப்பும் பெர்ன்ஹார்ட் அதற்கும் ஒரு பதிலையும் தருகின்றார். குற்றமுள்ள நெஞ்சோடு ஒருவர் வாழ்வதென்பது மிகவும் கடினம், நாம் தவறிழைத்த மனிதர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களிடமே நாம் நமது மன்னிப்புக்களை நேரடியாகக் கோரலாம். ஆனால் இன்று உயிரோடு இல்லாத மனிதர்களுக்கு நாம் இழைத்த தவறுகளின் நிமித்தம் பெருகும் குற்றவுணர்வுகளை எப்படிக் கரைக்க முடியும்? ஆகவேதான் நமக்கு மன்னிப்பு அளிக்கும் ஒரு கடவுள் வேண்டியிருக்கிறார் என்கிறார். ஆனால் இப்படித் தான் கூறுவதை நாத்திகவாதிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார் .
பெர்ன்ஹார்ட், சட்டத்தை ஒரு கருவியாக்கி நினைவூட்டலையும், மறத்தலையும் எளிதாக்க முடியுமா என தன் மூன்று கருத்தாங்கங்களை தனது கட்டுரையொன்றில் முன்வைக்கிறார். முதலாவது கருத்தாக, 'நினைவூட்டல், மீட்சிக்கான இரகசியம்' (Remembering is the secret of redemption) என்கிறார். யூதமக்கள் தொடர்ந்தும் தங்களுக்குள்ளும், தொடர்ந்து வரும் தம் தலைமுறைகளுக்கும் நாஸிகளின் படுகொலைகளை எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றார்கள் எனும் பெர்ன்ஹார்ட், இதன் மூலம் தங்கள் மீது எதிர்காலத்தில் எப்போதாவது நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளை எதிர்க்க தங்களை தயார்ப்படுத்தி விழிப்புநிலையில் வைத்திருக்கின்றனர் என்கின்றார். இந்த கருத்தாக்கமானது பெர்ன்ஹார்ட் முன்வைக்கும் மூன்றாவது கருத்தாக்கமான 'கடந்தகாலத்தில் நடந்த (அநீதியான) நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாது தடுக்க, நினைவூட்டல் என்பது மிக அத்தியாவசியமானது' என்பதற்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும் இருக்கிறது.
இரண்டாவது கருத்தாக்கமாய் 'ஒருவரின் குடும்பத்திலும் சமூகத்திலும் அவரின் தனித்துவ அடையாளம், நம்பிக்கை, உறுதிப்பாடு என்பவற்றை உறுதிப்படுத்துவது' என்பது நினைவூட்டலும், (நடந்ததற்கான)குற்றவுணர்வும். கவலையுணர்வும் கொள்வதற்கான முன்நிபந்தனைகளாகும் என்கிறார். இதற்கு பெர்ன்ஹார்ட் நாஸிகள் செய்த படுகொலைகளுக்குப் பின்பான ஜேர்மனியை எடுத்துக்கொள்கின்றார். நாம் உண்மையில் யூதர்களுக்கு நடந்தவைகளிற்கு குற்றவுணர்வும்,கவலையும் கொள்கின்றோம் என்றால் ஒவ்வொரு யூதர்களுக்கும் அவர்களது தனி அடையாளம், அவர்களை நாம் வெறுக்கமாட்டோம் என்கின்ற நம்பிக்கை, இனி இவ்வாறு நிகழாதெனும் உறுதிப்பாடு ஆகியவற்றை அவர்களுக்கு வழங்குவதே இதற்கான முன் நிபந்தனைகளாகும் என்கின்றார். இந்த இடத்திலேயே பெர்ன்ஹார்ட், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாஸிகளுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். அதேபோன்று பழைய (ஹிடலரின்)அரச அமைப்பில் பங்களித்தவர்கள் குற்றங்களைச் செய்யாவிட்டால் கூட, புதிய ஜேர்மனிய அரசின் சட்டங்களுக்கு ஒத்தியங்காவிட்டால், அவர்களும் கூட்டுக் குற்றவுணர்விற்கு(collective guilt) பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். எனெனில் இவர்கள் இன்னமும் புதிய சனநாயக நெறிகளுக்கு இசையாவிட்டால் இவர்களிடம் இன்னமும் பழைய சிந்தனைப்போக்கே (யூத வெறுப்பே) இருக்கிறது என்பதைப் பெர்ன்ஹார்ட் சுட்டிக்காட்டுகிறார்.
3.
'மன்னித்தலும் மீளிணக்கமும்' அத்தியாயத்தில், மீளிணக்கத்திற்கான முக்கிய நிபந்தனையாக அனைத்து உண்மைகளும் ஒடுக்கியவர்களின் தரப்பில் இருந்து பேசப்படவேண்டும் என்கிறார். தாமும் தமது சந்ததியினரும் செய்த ஒடுக்குமுறைகள்/படுகொலைகளை பரந்தமனதோடு ஒத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்போடு திறந்த உரையாடல்களை செய்யவேண்டும் என பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகின்றார்.. அதேபோன்று இந்த மீளிணக்கத்தின்போது, பாதிக்கப்பட்டவர் ஒடுக்கியவரை மன்னித்துவிட்டால் கூட, அத்தரப்பு நடந்த ஒடுக்குமுறைகளை முற்றாக விளங்கி, அவற்றை மறந்துதான் மன்னிக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை எனகிறார். மேலும் மீளிணக்கச் சூழல் என்பது, பாதிக்கப்பட்ட தரப்பும் தன்னைப் போன்ற சமமான மனிதர்களே என்கின்ற புரிந்துணர்வோடும், அவர்கள் அவ்வாறு வாழ உறுதிசெய்துகொண்டுமே நிகழ்த்தப்படவேண்டும் என்பதையும் பெர்ன்ஹார்ட் வலியுறுத்துகிறார். மீளிணக்கம் என்பது நோபல் பரிசுகளை இரண்டுதரப்புக்களின் முக்கியதஸ்தர்களுக்கும் கொடுத்துவிட்டவுடனேயே எளிதாக நிகழ்ந்துவிடக்கூடிய ஒரு விடயமல்ல என்பதைக் குறிப்பிடுகிறார். ஜேர்மனியர்கள் யூதர்களுக்கு நிகழ்த்திய படுகொலைகளுக்கு பின் மீளிணக்கம் ஒரளவு வெற்றியடைந்திருந்தாலும் அது முழுமையானதில்லை எனும் பெர்ன்ஹார்ட், இன்னமும் ஜேர்மனி கடந்தகாலத்தில் பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட நாடுகளோடு மீளிணக்கம் செய்யத் தயாராகவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட 'உண்மை மற்றும் மீளிணக்கக் குழு' நல்லவிடயமே என்றாலும் நினைத்த அளவுக்கு அது முன்னேற்றத்தைக் காணவில்லை என்பதையும் கவனப்படுத்துகின்றார். இதற்கான முக்கிய காரணமாக ஒடுக்குமுறைகளைச் செய்த தரப்பு மனந்திறந்து தனது ஒடுக்குமுறைகளையும், குற்றங்களையும் பொதுவெளியில் பேச முன்வராமையைக் குறிப்பிடுகின்றார். எனினும் இன்றைய சூழலில் ஒரளவு முன்னேற்றமுடைய செயற்பாடாக 'மன்னித்தலும் மீளிணக்கம் செய்தலுமே' இருக்கின்றது என்பதையும் பெர்ன்ஹார்ட் ஒப்புக்கொள்கின்றார்.
இந்நூலின் இறுதி அத்தியாயத்திற்கு, 'கடந்தகாலத்தைப் பற்றிய கதைகள்'(Stories about the Past ) என தலைப்பிடப்பட்டிருக்கிறது. நாம் கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை புனைவுகளாக்கும்போது அது கடந்த காலத்தில் நிகழ்ந்தப்பட்ட அழிவுகளின் வீரியத்தை இல்லாமற் செய்துவிடுமா? என்ற கேள்வியை பெர்ன்ஹார்டு இங்கே எழுப்புகின்றார். மேலும் யூதர்கள் மீது நடந்த படுகொலைகளை புனைவாக்கும்போது அங்கே நகைச்சுவை, அழகியல் போன்றவற்றை புகுத்துவதும் சரியா எனவும் கேட்கிறார். இதற்கு மாற்றாய் நமக்கு இருக்கும் சிறந்தொரு வழி, நடந்தவற்றை இயன்றளவு வீரியம் குறையாது ஆவணப்படமாக்கலே எனும் பெர்ன்ஹார்ட், கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை சில பகுதிகளாய்க்கொண்டு கதைகளாகவோ, திரைப்படங்களாகவோ ஆக்குவதும் தவறில்லை எனக் குறிப்பிடுகிறார். 'ஆஷ்சுவிட்ஷ் படுகொலைகளின் பின் கவிதை என்பதே இல்லை' (After Auschwitz , there is no poetry) என தியோடர் கூறியதை பெர்ன்ஹார்ட் நினைவூட்டுகிறார் . திரைப்படங்களிலோ, கதைகளிலோ யூதப்படுகொலைகளின் சம்பவங்களை சித்தரிப்பதில் தவறில்லை எனும் பெர்ன்ஹார்ட் ஆனால் கதாபாத்திரங்கள் அன்றைய காலத்தின் உண்மை நிலவரங்களைக் கட்டாயம் பிரதிபலிக்க வேண்டும் என்கிறார். எவ்வாறு ஒரு எஸ்.எஸ்.காவலாளி பொதுவாக அன்றைய நாஸி வதைமுகாமில் இருந்திருப்பாரோ அவ்வாறே அவரின் பாத்திரம் படைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அந்தக் காலகட்டத்தில் ஒரு ஜேர்மனியர் யூதருக்கு உதவுகின்றார் என்றால் அது ஒரு விதிவிலக்கான நிகழ்வாக மட்டுமே சித்தரிக்கப்படுதல் அவசியமென்கிறார்.
எனினும் ஒரு கதையோ திரைப்படமோ எப்போதும் ஒருசாராரின் உணர்வுகளை காயப்படுத்தக்கூடும் என்பதையும், மேலும் அதனால் அப்படைப்புக்கான எதிர்ப்பும் எழுமென்பதையும் பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகிறார். இதற்கான ஒரு உதாரணமாய் , ஜேர்மனியப் படமான 'மற்றவர்களின் வாழ்க்கை' (The Lives of Others) எடுத்துக்கொள்கிறார். கிழக்கு ஜேர்மனியில், ஒரு நாடகக்குழு அரசுக்கு எதிராக நாடகம் போடுவதை உளவறிய அரசின் உளவுத்துறையான ஸ்ரேசியால் ஒருவர் இந்நாடகக் குழுவை கண்காணிக்க வேலைக்கு அமர்த்தப்படுகின்றார். அந்நாடகக்குழு அரசுக்கு எதிராக இயங்குவது தெரிந்தும் அந்த உளவுத்துறை நபர், அவர்களை அரசுக்குக் காட்டிக் கொடுக்காது இறுதியில் தப்பவிடச் செய்கிறார் என்பதை இப்படத்தைப் பார்த்த நம் அனைவருக்கும் தெரியும். இப்படம் வெளிவந்தபோது ஸ்ரேசியினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது எதிர்ப்பைக் தீவிரமாகக் காட்டியதாக பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகின்றார். ஸ்ரேசியின் உண்மையான அடக்குமுறைகளை இது அதிகம் அழகியல்படுத்தி அதன் வீரியத்தைக் குறைக்கிறது என்பது அவர்களின் வாதமாய் இருந்ததாகக் குறிப்பிடும் பெர்ன்ஹார்ட், அதேசமயம் இப்படம் உலகம் முழுதும் மிகவும் வரவேற்பைப் பெற்றதையும்,ஜேர்மனியின் ஒருபகுதியினர் ஆதரித்ததையும் கவனப்படுத்துகின்றார். எனவே இவ்வாறான முரண்களுடனேயே கடந்தகாலத்தைப் பற்றிப் பேசும் படைப்புக்கள் வெளிவரும் எனக்கூறும் பெர்ன்ஹர்ட், நாம் இவ்வாறான சித்தரிப்புக்களை விதிவிலக்காக விளங்கிக்கொள்ளும் போதிய அறிவைப் பெற்றிருக்கவேண்டும் என்கிறார்.
'The Lives of others' திரைப்படத்தை பெர்ன்ஹார்ட் விவரிக்கும்போதுதான், நாங்கள் 'ஏதிலிகளினூடாக' திரையிட்ட 'The Boy in the Striped Pyjamas' திரையிட்டபின் நிகழ்ந்த கலந்துரையாடல் நினைவுக்கு வந்தது. இக்கதையில் வதைமுகாமில் இருக்கும் யூதச் சிறுவனோடு நாஸிப்படையில் உயர்பொறுப்பிலிருக்கும் அதிகாரியொருவரின் மகனுக்கு நட்பு முகிழ்கின்றது. இறுதியில் ஒரு தவறால் அந்த அதிகாரியின் ம்கனும், யூதச் சிறுவனோடு சேர்ந்து விஷவாயு செலுத்தப்படும் அறைக்குள் அகப்பட்டு இறப்பதாய்ப் படம் முடியும். இத்திரையிடலின் கலந்துரையாடலில், இப்படத்தின் முடிவு 'ஒரு நாஸிச்சிறுவனும் சேர்ந்து இறப்பதாலேயே நமக்கு அதிகம் துக்கம் வருகின்றமாதிரியான எண்ணத்தை விளைவிக்கின்றது' என்றொரு புள்ளியைச் சுட்டிக்காட்டியிருந்தேன். எத்தனையோ பல்லாயிரக்கணக்கான் யூதச்சிறுவர்கள் அநியாயமாய்க் கொல்லப்பட்டதை, இங்கே பாருங்கள் நாசிச் சிறுவன் ஒருவனும் செத்திருக்கின்றான் எனச் சித்தரிப்பதன் மூலம், 'கடந்தககாலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை வீரியமிழக்கச் செய்யும் ஒரு செயல்' என்கின்ற விமர்சனத்தை நாம் இப்படத்தின் மீதும் முன்வைக்கலாம். ஆகவே இவ்வாறான திரைப்படங்களைப் பார்க்கும்போதோ, புனைவுகளையோ வாசிக்கும்போதோ நாம் இவ்வாறான நிகழ்வுகள் மிக மிகச் சொற்பமான விதிவிலக்கான சம்பவங்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
பெர்ன்ஹார்ட்டின் 'கடந்தகாலம் பற்றிய குற்றவுணர்வு' மிக முக்கியமான ஒரு நூலென நாம் எடுத்து அதை எழுத்தெண்ணி ஊன்றி வாசிக்கத்தேவையில்லை. மேலும் இந்நூல் ஒடுக்கப்பட்டவரின் சந்ததியைச் சார்ந்தவரால் அல்ல, ஒடுக்கிய இனத்தின் தலைமுறையைச் சேர்ந்தவரால் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். எனினும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த கொடூரங்களைத் தாண்டி ஒடுக்கிய/ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கான சில முக்கிய புள்ளிகளை இந்நூல் கவனப்படுத்துகின்றது என்பதைக் கூறத்தான் வேண்டும். முக்கியமாய் ஆயுதப்போராட்டம் முடிந்தும், ஒரு குழப்பமான சூழ்நிலை கவிழ்ந்திருக்கும் இலங்கையில் இன்று பகைமறப்பையும் மீளிணக்கத்தையும் முன்வைக்கும் எல்லாத் தரப்பினரும் இந்நூலை அவசியம் வாசிக்கவேண்டும். குறிப்பாய் 'மன்னித்தலும் மீளிணக்கமும்' என்ற அத்தியாயத்தில் ஒடுக்கியதரப்பு, ஒடுக்கப்பட்ட தரப்பை தன்னைப் போன்ற சகமனிதராய் மதிக்கவும், அமைதிச் சூழ்நிலைகளை உருவாக்கவும் பாடுபட்டால்தான்... அதன்பின்னரே மீளிணக்கம் சாத்தியம் என்கின்ற பெர்ன்ஹாட்டின் கருத்துக்களை ஊன்றிப் படிக்கவேண்டும். மேலும் மீளிணக்கம் என்பதற்கு கடுமையான உழைப்பும், இவ்வாறு மீளிணக்கம் தொடங்கிய பல இடங்களில் அவை நினைத்தவளவில் சாத்தியமாகவில்லை என்கின்ற பெர்ன்ஹார்ட்டின் அவதானங்களையும் நினைவில் இருத்த வேண்டும். இல்லாதுவிட்டால் போர் முடிந்த உடனேயே 'பகைமறப்பு', 'மீளிணக்கம்' என்று உரையாடுவது இன்னொரு 'ஆடறுக்க முன் சட்டி வைத்த கதையாக' எவருக்கும் உபயோகமின்றி புஸ்வாணமாகப் போய்விடுமென்பதையும் மெல்லிய குரலில் கூற வேண்டியிருக்கிறது.
மேலதிகமாய் உதவியவை:
(1) 'Guilty as charged' by Thomas Hurka (The Globe and Mail)
(2) 'Look Back in horror' by Joanna Bourke (The Sunday Times)
நன்றி: 'காலம்'- 2011
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
முன்னரும் இது பற்றி நீங்கள் எழுதி இருந்த சிறு குறிப்பொன்றை வாசித்து வாசிக்கத் தேடினேன். இப்போது வாசிக்க ஆவலாக உள்ளேன்; குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இறுதி அத்தியாயத்தை.
5/19/2011 01:02:00 AM//முக்கியமாய் ஆயுதப்போராட்டம் முடிந்தும், ஒரு குழப்பமான சூழ்நிலை கவிழ்ந்திருக்கும் இலங்கையில் இன்று பகைமறப்பையும் மீளிணக்கத்தையும் முன்வைக்கும் எல்லாத் தரப்பினரும் இந்நூலை அவசியம் வாசிக்கவேண்டும். குறிப்பாய் 'மன்னித்தலும் மீளிணக்கமும்' // இதே தரப்பினரின் சிந்தனை வளர்ச்சி இன்று புலிகள் போரிட்டதால்தானே இத்தனை மக்கள் இறந்தனர், இல்லா விட்டால் ஒருவரும் இறந்திருக்கமாட்டார்கள் என்று சொல்கின்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றது.
Post a Comment