பகுதி-01
1.
பொலித்தீன் பையைத் தன்னுடல் முழுதும் சுற்றிக்கொண்டு எரிந்துகொண்டிருக்கும் நண்பனைப் பற்றிய கனவு அவனைத் திடுக்குறச்செய்து விழிப்படையச் செய்தது. நேரம் என்னவாயிருக்குமென சிவப்பு ஒளியில் மிளிர்ந்துகொண்டிருந்த அலாரமைப் பார்த்தபோது 3.25 A.M என்றிருந்தது. இனி விடியும் வரைக்கும் நித்திரை வராது என்ற நினைப்பு அவனுக்கு இன்னும் எரிச்சலைக் கொணர்ந்தது . இப்போதுதான் முதற்தடவையாக நண்பன் எரிந்துகொண்டிருக்கும் கனவு வருகின்றது என்பதல்ல; முன்னரும் பலமுறை வந்திருக்கின்றதுதான். ஒவ்வொருமுறையும் அலறிக்கொண்டு அதலபாதாளத்திற்கு விழும் கணத்தோடு ஓர் உறைநிலை கனவில் வந்துவிடுகிறது. பிறகு மருள மருள உருளும் விழிகளுடன் நீள்விழிப்பு. சிறுவயதில் இப்படியான கொடுங்கனவுகள் வரும்போது அருகில் படுத்திருக்கும் அம்மா அவனுக்கு விபூதியைப் பூசியவுடன் ஏதோ ஒரு பாதுகாப்புணர்வு வந்துவிடுவதுண்டு. புலம்பெயர்ந்து வந்ததன்பின் எவ்வாறுதான் விபூதியைப் பூசினாலும் நண்பன் பற்றியெரியும் கனவு வராமல் நின்றுவிடுவதில்லை; சிக்கலாகவும் வேதனையாகவும் ஆகிவிட்ட புலம்பெயர் வாழ்வில் கோமாதாவின் கோமியத்திலும் ஏதோ புதிரின் முடிச்சு விழுந்திருக்கவேண்டும். அதனால்தான் இங்கு திருநீறு பூசினாலும் துர்க்கனவு நுங்கு போல வழுக்கித் தூர நகர்வதில்லை, முருங்கைமரத்துப் பிசின்போலத் தொடர்ந்து ஒட்டியபடி வந்தபடி இருக்கிறது.
மிடில் ஃபீல்ட் ரோட்டில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு ஒருக்காய்ப் போனால் இந்தத் துர்க்கனவின் கொடுமை கலைந்துபோகுமோ தெரியாது. ஆனால் இவன் ஐயப்பன் கோவிலுக்கு, அங்கே குளிர்த்திச் சோறு நிறையக் காய்கறிகளோடு கொடுக்கும் நேரத்திற்கு மட்டுமே சரியாகப் போகின்றவன். தன்னை வழிபடுவதற்காய் அன்றி, கோயிற்சோறு சாப்பிடத்தான் இவன் இவ்வளவு சிரத்தையாக வருகின்றான் என்று தெரிந்தால் ஐயப்பனுக்குக் கோபம் வராதா என்ன? அதனால் தான் அவர் இவனுக்கான வரத்தை அருள் பாலிப்பதில்லையோ தெரியவில்லை. அத்தோடு ஐயப்பன் கோயிலுக்குப் போகும் ஒவ்வொருதடவையும், முன்னால் பிஞ்ச் சந்தியிலிருக்கும் சமோசா கடையில் நாலைந்து சமோசாவையை -குளிர்த்திச் சோற்றுக்கு முன்- ஒரு starterயாய் சாப்பிட மறப்பதுமில்லை.
சமோசா சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்குப் போவதில் ஒரு பிழையுமில்லை. ஆனால் அன்றைக்கொரு நாள் சமோசா சாப்பிட்டுவிட்டு குளிர்த்திச் சோற்றுக்காய் காத்திருக்குக்கும்போது பல்லுக்குள் ஏதோ இழுபடுதே என்று நாக்கால் துழாவிப் பார்த்துக்கொண்டிருந்தான். மரக்கறி சமோசாவிற்குள், முதல்நாள் வைத்த பழைய உருளைக்கிழங்கையோ அல்லது மரவள்ளிக்கிழங்கையோ போட்டிருக்கின்றார்களோ என்று விரலால் இழுத்துப் பார்த்தபோது, அது இறைச்சித் துணுக்காயிருந்தது கண்டு இவனுக்குச் சற்று அதிர்ச்சியாய்த்தானிருந்தது. சமோசா தந்த கடைச்சனம் அவசரத்தில் அசைவ சமோசாவை எடுத்துத் தந்துவிட்டார்கள் போலும். மச்சத்தைச் சாப்பிட்டுவிட்டு எப்படி இங்கே கோயிலில் நிற்பதென, வரிசையிலிருந்து வெளியே போக மனம் அந்தரப்பட்டாலும், இறைச்சி படைத்த கண்ணப்பன் நாயனாருக்கே அருள்பாலித்த கடவுள் தன்னையொன்றும் செய்யமாட்டாரென்று ஒரு சாட்டை மனதுக்குள் நினைத்துக்கொண்டு வரிசையில் சோற்றுக்காய்க் காத்திருக்கத் தொடங்கினான்.
(i)
அவனை அவர்களது வளாகத்து நிகழ்வில்தான் முதன்முதலில் சந்தித்திருந்தேன். அப்போது அவன் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். முதலாமாணடு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ஒன்றில் அவன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவனாக இருந்தான். நான் வேறொரு வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தாலும், எங்களுக்கும் அழைப்பு வந்ததால் நானும் என்னுடைய தோழிகள் சிலருமாய் Frosh Week நிகழ்வுக்குப் போயிருந்தோம். சற்று நகைச்சுவை கலந்து, அவன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியது வந்திருந்தவர்களையும் கொஞ்சம் கலகலக்கச் செய்திருந்தது. பிறகு இரவு விருந்திற்கான உணவை எடுப்பதற்காய் நாங்கள் அருகருகில் வரிசையில் நிற்கவேண்டி வந்தபோது, 'நல்லாய் MC செய்தீர்கள்' என ஆங்கிலத்தில் சொன்னேன். 'நான் கோபம் வரும்போது ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளைப் பேசுவேன, மற்றபடி தமிழ்தான் உரையாடலுக்கான மொழி' என்று என்னைக் கொஞ்சம் வெட்டிப் பேசியபோது முதலில் எனக்கு அவனை அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை.
இந்தத் திமிர் பிடித்தவனைவிட, இரசிப்பதற்கு நிறையப் பெடியங்கள் அங்கு இருந்ததால் அவன் குறித்து நான் பிறகு பெரிதாக அக்கறைப்படவில்லை. ஆனால் அன்று நான் அணிந்து போயிருந்த சேலைதான் எனக்குச் சரியாகக் கஷ்டத்தைத் தந்துகொண்டிருந்தது. You see...தந்தூரி சிக்கனும் பிரியாணியும் தந்த ருசியில் அளவு கணக்கில்லாது சாப்பிட்டுவிட்டேன் போலும். சேலையை விட கொஞ்சம் தளர்வான ஆடை ஏதேனும் அணிந்து வந்திருந்தால் இவ்வளவு கஷ்டப்படவேண்டியிருந்திருக்காது. அழைப்பிதழில் Dress Code முக்கியமென.... பெண்கள் 'சேலையும்' ஆண்கள் 'கோர்ட் சூட்டும்' அணிந்து வரவேண்டுமென எழுதிப் போந்த முட்டாளை மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்தேன். ரெட் வைனையும் இரவுச் சாப்பாடோடு சேர்த்து அருந்தியதால் ஒருவித மந்தநிலை எனக்குள் வந்திருந்தது. விருந்து முடிந்து, நடனம் ஆடுவதற்கான தளத்தில் இசையும் பேரிரைச்சலோடு எழத்தொடங்கிவிட்டது. ஆடு ஆடு என்கின்றன கால்களும் குடித்த வைனும், ஆனால் ஆடினால் சிக்கலாகிவிடும் என்று வயிற்றுக்குள் போன மட்டன் பிரியாணி முணுமுணுப்பது போலத் தோன்றியது. கூடவே வந்திருந்த தோழிகளும் ஆடத்தொடங்கிவிட்டனர், வந்து தங்களோடு ஆடென்று ஒவ்வொரு பாடலும் முடிகிற மற்றும் தொடங்குகின்ற நேரங்களில் வந்து, கதிரையில் இருந்த என் கைகளை இழுத்து அரங்கத்துக் கூட்டிச் செல்ல மிகவும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இனித்தான் கவனமாயிருக்கவேண்டும். ஒளி மங்கலாக மாறத் தொடங்கத் தொடங்க, நல்லாய்த் 'தண்ணி'யை மோண்டு குடித்துவிட்டு நிற்கின்ற எந்தப் பெடியனும் நாயைப் போல ஆகிவிடும் ஆபத்துண்டு. ஓர் அற்புதமான கொண்டாட்ட மனோநிலையை எப்படிக் கணநேரத்தில் குழப்பிவிடுவது என்ற வித்தையை எங்கள் தமிழ்ப் பெடியங்களிடம் தான் கேட்கவேண்டும். இவர்கள் குடிபோதையில் தங்களுக்குள்ளே அடிபடுவார்கள், இல்லாவிட்டால் தங்களின் காதலிகளைக் காரணங்காட்டி அடிபடுவார்கள், சிலவேளை காரணம் எதுவுமில்லாமலே அடிபடுவதற்காகவே அடிபடுவார்கள். எனவே எந்த நேரத்தில் எந்த எரிமலை வெடித்துக் கிளம்பும் என்று எவருக்கும் தெரியாது. எரிமலை வெடித்தால் கூடப்பரவாயில்லை. பிறகு அது வருடக்கணக்காய் கண்ணிவெடிகள் மாதிரி விட்டு விட்டு ரொறொண்டோ நகர் முழுதும் அங்கு இங்குமாய் வெடித்துக்கிளம்பி பிரச்சினைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
இப்படி ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் போதையில் ஊறிய ஒருவன் என்னோடு தனவிக்கொண்டிருந்தான். ஒழுங்காய் நின்று ஆடவே வலுவில்லாதவன் அவ்வப்போது 'சோளி கே பீச்சே க்யா ஹே?' என்று என்னைப் பார்த்து இளித்துக் கேட்டுக்கொண்டிருந்தான். எனக்கு வந்த எரிச்சலுக்கு அவனுக்குச் செவிட்டில் அறையவேண்டும்போலத்தான் தோன்றியது. ஆனால் அறைந்தால் எல்லோரினதும் கவனமும் எங்கள் மீது குவிந்துவிடும். இந்தக் கொண்டாட்ட மனோநிலையும் பிறகு எல்லோரிடமிருந்து விடைபெற்றுப் போய் விடவும் கூடும். மெல்ல மெல்லமாய் அவனோடு சேர்ந்து ஆடுகின்றமாதிரி அவன் திசையில்போய் என்னுடைய ஹீல்ஸால் நன்றாக மிதித்துவிட்டேன். அவனுடைய பார்ட்டி ஷூவையும் தாண்டி அவனது கால்களுக்குள் வலி போயிருக்கும். ஒற்றைக்காலில் கெந்தியபடி கொஞ்சம் தடுமாறித் தடுமாறி ஆட்ட அரங்கைவிட்டு நகர்ந்திருந்தான்.
'ஏன்டா நொண்டுகின்றாய்?' என்று யார் கேட்டாலும் 'ஒரு பெட்டை ஹீல்ஸால் மிதித்துவிட்டாள்' என்று சொல்ல அவனது ஆம்பிளைத்தனம் விடாது என்பது என்னைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும் இனி சோளிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்க நினைக்கும்போதெல்லாம் காலில் ஹீல்ஸ் இருந்தது மட்டும் தெளிந்த உண்மை என்பது அவனுக்கு நினைவுக்கு வருமென நினைக்கின்றேன்.
இப்படியாக இந்த Frosh Week Partyயில் நல்லதொரு நினைவுப்பரிசை வம்புக்காரனுக்கு கொடுத்துவிட்ட சந்தோசத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது, என்னெதிரே இவன் ஆடிக்கொண்டிருந்தை முதலில் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பெடியன் பரவாயில்லை, கொஞ்சம் நல்ல ஸ்ரெப்ஸோடு ஆடுகின்றாந்தான், ஆனால் தானொரு Usher என்ற நினைப்பில் கை காலை அரங்கில் விரித்து ஆடியதுதான் சற்று விநோதமாய் இருந்தது.
நான் இந்த திமிர்க்காரனின் ஆட்ட நகர்வுகளை மறுதலித்து எனக்கான வெளியில் ஆடிக்கொண்டிருக்கும்போது, 'என்ன பாட்டுப் பாடி ஆடினால்தான் என்னோடு சேர்ந்து ஆடுவீர்களா?' என்று சிரித்தபடி கேட்டான். ஆ....! இவ்வளவு நேரமும் இங்கு நடந்ததை ஒருவரும் அவதானிக்கவில்லை என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேனே, இவன் பார்த்திருக்கின்றான் போலிருக்கிறதே என்று எனக்குள் சிறு பதற்றம் பரவத்தொடங்கியது. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், 'அப்படியொன்றுமில்லை உங்கடை யூனிப்பெடியங்களுகளுக்கு சும்மா காற்றில் கை காலை மட்டும் அசைக்கத்தான் தெரியும் என்று நண்பர்கள் சொல்லியிருக்கின்றார்கள்; இப்போது அதை நேரிலேயே பார்க்கிறேன்' என்று சற்று ஏளனமாகச் சொன்னேன்.
அநேகமான ஆண்களைப் போல, இவன் என்னிடம் என் கைத்தொலைபேசியின் எண்களைக் கேட்டான். நானும் அநேகமான பெண்களைப் போல 'அந்நியர்களிடம் எனது எண்களைப் பரிமாறிக்கொள்வதில்லை ' எனத் தெளிவாகப் பதில் கூறினேன். அப்படியா, சரி என்று அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அவன் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தான். அதிகம் பேசமுடியாதபடிக்கு இசை மிகுந்த அதிர்வாயிருந்தது. முக்கியமாய் எனது சேலை நுனியை ஒருமுறையாவது இழுத்துப் பார்க்கவேண்டும் என்பதற்கான எந்த நகர்வையும் அவன் எடுக்காதது எனக்குச் சற்றுப் பிடித்திருந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டி வீடு திரும்பும்வேளையில், 'வேண்டும் என்றால் உனது தொலைபேசி எண்ணைத்தா, எப்போதாவது எனக்கு உன்னை அழைக்கவேண்டும் போலிருந்தால் அழைத்துக் கதைக்கின்றேன்' என அவனது எண்களை வாங்கிக்கொண்டேன். அதன் பின் வந்த நத்தார் விடுமுறையில் வகுப்புக்கள் இல்லாது வந்த தனிமையில் யாராவது நண்பர்களை அழைத்துப் பேசுவோம் என்று கைத்தொலைபேசியை scroll செய்து கொண்டுபோனபோது MCயென இவனது பெயர் சேகரம் செய்து வைத்திருந்தது தெரிந்தது.
முதன்முதலாக அவனை அழைத்தபோது என்னை மீண்டும் அவனுக்கு நினைவுபடுத்தவேண்டியிருந்தது. சிலவேளைகளில் எனக்குத் தந்ததுபோல இப்படி நிறையப் பெண்களிடம் தன் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருப்பானோ என்ற சந்தேகம் வரத்தான் செய்தது. அன்றைய பொழுது அவ்வளவாய் அவனோடு கதைக்கமுடியவில்லை. கல்கரியில் படித்துக்கொண்டிருக்கும் அக்கா விடுமுறைக்காய் தங்களோடு வந்து நிற்கின்றார் என்றான். தமது அக்கா, அண்ணா, அப்பா, அம்மாமார்களுக்கு முன்னால் ஏன் தான் எங்கடை பெடியள் இவ்வளவு பம்மிப் பவ்வியமாய் நடிக்க மிகக் கஷ்டப்படுகின்றார்களோ தெரியவில்லை. இப்படிப் பதுங்குகின்ற பூனைகள் பிறகு பொதுவெளியில் பெண்களைக் கண்டால் எப்படிப் பிறாண்டுபடுவார்கள் என்பதை நாமறியாதவர்களா என்ன?
இப்படித் தொடங்கியது கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கும் மேலாய் டேட்டிங் போவதுவரை நீண்டிருந்தது. எப்போதுமே புதிதாய்த் தொடங்கும் எதுவுமே புத்துணர்ச்சியாகவும் வேகமாகவும் இருப்பது போல எங்கள் உறவும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால், கிட்டத்தட்ட சித்தியடையமாட்டேன் என்று நினைத்து, பரீட்சை எழுதப் பயந்துகொண்டிருந்த ஒரு பாடத்தின் பரீட்சைக்கு, என்னோடு கூடவே வந்து நான் பரீட்சை எழுதி முடியும் வரை என்னோடு அவன் கூட இருந்ததை நினைத்தால் இதமாக இருக்கிறது. 'நீ பரீட்சையில் பாஸ் பண்ணுவாய்' என்று பரீட்சை ஹோலுக்குப் போகமுன்னர் எனது நெற்றியில் அவனிட்ட விபூதி இப்போதும் மணப்பதுபோலத்தான் தோன்றுகின்றது. அது இரவு நடந்த பரீட்சை என்றபடியால் பத்து மணியாகிவிட்டது. வெளியே சரியான குளிரும். வீட்டை திரும்பி வரும்போது அவன் கதகதப்புக்காய் குடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை வாங்கி நான் முதன்முதலாய் உள்ளிழுத்துப் புகையும் விட்டுமிருக்கின்றேன்.
(இன்னும் வரும்)
நன்றி: கூர் 2011
நன்றி: ஓவியம்
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உங்கள் மொழிநடையின் அழகைவிடத் தேடித்தேடி நீங்கள் வைக்கிற தலைப்புகள் அழகு :))
5/10/2011 07:26:00 PMPost a Comment