-பகுதி 02 -
2.
அவளோடான ஒன்றரை வருடத்திற்கு மேலான நேசத்தில் மனமொடிந்துபோகிற மாதிரி பெரிதாய் எதுவும் எங்களுக்கிடையில் நிகழாதபோதும், ஏதோ ஒரு இடைவெளி எங்களுக்குள் வந்த மாதிரித் தோன்றியது. இந்தக் காலகட்டத்தில்தான் துஷாவினது நட்புக் கிடைத்தது. நான் சப்வேயில்தான் வளாகத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். துஷாவைச் சந்தித்தது சென்.கிளேயர் ஸ்ரேசனில்தான். இருவரும் வகுப்புக்களுக்குப் போகும் நேரம் ஒன்றாக இருந்ததனால் அடிக்கடி காலைவேளைகளில் அவளை நான் காண்பது உண்டு. ஆரமபத்தில் புன்னகையில் தொடங்கிய சந்திப்பு பிறகு ரெயினுக்குள் கதைத்துக்கொண்டு போகும்வரை நீண்டது. இருவரும் ஒரே வளாகத்தில் படித்துக்கொண்டிருந்ததால் பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தன.
அப்போதுதான் எங்கள் வளாகத்திலும் தமிழர் சிங்களவர் என்ற பிணக்குப்பாடு வந்து தமிழருக்கென ஒரு மாணவர் அமைப்பும், இலங்கையருக்கென இன்னொரு மாணவர் அமைப்பும் உருவாகி -இங்கேயும் ஈழத்தைப் போல- அரசியல் சூடு பிடிக்கத்தொடங்கியிருந்தது. நான் தமிழ் மாணவர் அமைப்பில் அங்கத்துவனாய் இருந்தாலும் அவ்வப்போது சிங்களவர்களால் நடத்தப்பெற்ற இலங்கையர் அமைப்புக் கூட்டங்களுக்கும் போவதுண்டு. ஒன்றுபட்ட 'தேசிய' இலங்கையில் எனக்கு பெரு விருப்புப் போல என்று நீங்கள் தவறாக நினைக்கக்கூடும். அப்படியேதுமில்லை, நல்ல வடிவான சிங்களப் பெட்டையள் அங்கே அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்ததுதான் முக்கிய காரணம்.
எங்கடை தமிழ்ப்பெட்டையள் காலநிலைக்கேற்பவோ, தங்கள் விருப்புக்கேற்பவோ ஆடைகள் அணிவதை 'புராதன தமிழ் மூளை' கொண்ட பலரால் அனுமதிக்கப்படுவதில்லை. கச்சானையை வாய்க்குள் போட்டுச் சப்பிக்கொண்டிருப்பது மாதிரி எப்போதும் புறணி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். சிலவேளைகளில் இதையும் மீறி பெண்கள் நடந்துகொண்டால், அந்தப் பெண் குறித்து இல்லாததும் பொல்லாததுமாய் மின்னஞ்சல்களை அனுப்பி குறிப்பிட்ட பெண்களுக்கு மனவுளைச்சல்களைக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் இலங்கையரின் அமைப்பில் பெரிதாக நடைபெறுவதில்லை. அதுவும் அவர்கள் கிறிஸ்மஸ் நேரங்களில் செய்யும் பார்டிகளும் பிறகு நடைபெறும் களியாட்டங்களும்...இதெல்லாம் தமிழ் மாணவர் அமைப்பில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
தமிழ் நிகழ்வுகளுக்கு வருகின்ற முக்கால்வாசி சனம், தாங்களும் அக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறி களிப்படைவதை விட்டு விட்டு 'எந்தப் பெட்டை எந்தப் பெடியனோடு கதைத்தாள், எந்தப் பெடியனோடு நெருக்கமாக ஆடினாள்' என்று கண்காணிப்பதிலேயே பெரும் நேரத்தைச் செலவளிப்பார்கள். இது பெடியங்களுக்கு மட்டுமான மனோநிலையல்ல, சாதாரணமாய் வருகின்ற பெண்களையும் தங்களைப் போலவே விடுப்பு பார்க்கும் மனோநிலைக்கு மாற்றிய பெருமை இவ்வாறான ஆண்களுக்கே உண்டு.
துஷாவிற்கு தமிழ் அமைப்பில் சேர அவ்வளவாய் விருப்பமிருக்கவில்லை. தமிழ் மாணவர் அமைப்பில் தீவிரமாய் விவாதிக்கப்படும் ஈழ அரசியல் அவளுக்குப் பிடிப்பதில்லை. அவளது தகப்பனிற்கும் மாமாவிற்கும் ஈழத்திலிருந்த ஏதோவொரு இயக்கம் பெரிதாய்க் கஷ்டம் கொடுத்து மயிரிழையில் தப்பிவிட்டதாய் ஒருமுறை சொல்லியிருந்தாள். எனக்கும் இடியப்பச் சிக்கலுள்ள ஈழப்பிரச்சினை அவ்வளவாய் விளங்கியதில்லை. எனவே நானும் அரசியல் பேசுவதிலிருந்து விலகியிருந்தேன். மேலும் துஷா போன்றவர்களுடன் பழகுவதற்கு அரசியல் தெரியாததுபோல இருப்பதுதான் சாலவும் சிறந்தது. ஆனால் ஈழ அரசியல் பேசுவதை அடியோடு மறுத்த துஷா, சங்கீத வகுப்புக்கும் வீணை வகுப்புக்கும் போனதுதான் எனக்கு வியப்பாயிருந்தது. சிலவேளை ஈழத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மாமாவும் அப்பாவும் தமிழ்த்துவத்தில் மீது பிடிப்பிருந்து அவளுக்கும் இது கடத்தப்பட்டிருக்கலாமோ தெரியாது.
அவள் ஒருமுறை வீணையைத் தாங்கியபடி நீலக்கலர் சாறியோடு இருந்து எடுத்த புகைப்படத்தைக் காட்டியது நினைவிருக்கிறது. இடுப்பை மூடியிருந்த சேலையைத்தாண்டி அவள் தொப்புளில் வளையமொன்றை அணிந்திருந்ததை முதன்முதலில் நான் கண்டறிந்ததும் அப்போதுதான். பிறகு நத்தார் விடுமுறைக்காய் 'இலங்கையர்கள் அமைப்பு' ஒழுங்குசெய்த கொண்டாட்ட இரவின்போது நான் கொஞ்சம் எஸ்கஸி எடுத்திருந்தேன். அன்றைய இரவில்தான் சிங்களத்தோழனின் Condo அறையில்தான் நான் அவளின் தொப்புளின் வளையத்தை ஆடையெதுவுமின்றிக் கண்டது. Condom அணியத்தயாரகியபோது அது அவசியமில்லை தான் pillsல் இருக்கின்றேன் என்றாள்.
II
அவன் என்னோடு இப்போது அவ்வளவாய்க் கதைப்பதில்லை, நேரில் சந்திக்க ஆர்வம் கூடக் காட்டுவதில்லை என்பதைப் பார்க்கும்போது அவனது பக்கத்தில் வேறு ஏதோ மும்முரமாய் நடந்துகொண்டிருக்கின்றது என்பதை என்னால் உய்த்துணர முடிந்தது. 'ஏன் நீ என்னை இப்போது முன்போல் சந்திப்பதில்லை, போனில் பேசுவதில்லை?' என்று ஒருமுறை கேட்டபோது தனது அக்காவின் திருமணம் விரைவில் நடைபெறப்போவதாகவும், அதற்கான் ஆயத்தங்களில் இருப்பதாகவும் கூறினான். ஒரு அக்காவின் திருமணத்திற்காய் நாலைந்து மாதங்களுக்கு மேலாய் இப்படி பிஸியாக இருப்பவனை இப்போதுதான் என் வாழ்வில் சந்திக்கின்றேன். நல்லவேளை அவனுக்கு நாலைந்து அக்காமாரோ தங்கச்சிமாரோ இல்லையென நினைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் நான் சமாதிக்குள் போகும்வரை அவனைச் சந்திக்கமுடியாதபடி 'திருமண' விடயங்களில் ஓடிக்கொண்டிருந்திருப்பான்.
தொடக்க காலத்தில் இப்படி அவன் ஆகியது எனக்கு மிகக் கஷ்டமாய்த்தானிருந்தது. சின்ன சின்ன செய்கைகளில் தன்னையொரு நல்ல துணையென அவன் காட்டியதால் அவனை விட்டு விலகுவது எனக்கு மன உளைச்சலைத் தருவதாய் இருந்தது. அப்போது தோழியொருத்திதான் என்னை ஆற்றினாள். அவளில்லாதிருப்பின் இவ்வளவு விரைவில் இந்த உளைச்சலிருந்து வெளியில் வந்து, எனது பட்டப்படிப்பை முடித்திருக்கவே முடியாது. அவனை எனது வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியிருந்தேன்.
பெப்ரவரியில் வந்த ஒருவார விடுமுறையில் நானும் தோழியும் மெக்ஸிக்கோவிற்குப் போயிருந்தோம். தங்கும் ஹொட்டல்,சாப்பாடு எல்லாம் சேர்ந்த பக்கேட்ஜ்தான் எடுத்திருந்தோம். நாங்கள் போயிருந்த காலம் அங்கு மழைக்காலம். அவ்வப்போது தூறுகின்ற மழையும், சட்டென்று வெயில் எறிப்பதுமாய் இருந்த காலநிலை எங்களுக்குப் பிடித்தமாயிருந்தது. அத்தோடு நாங்கள் தங்கியிருந்த ஹன்கூனில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களும் ஆண்களும் நன்கு அன்பாய் எங்களுடன் பழகியிருந்தார்கள். உல்லாசப்பயணிகளாய் வந்திருந்த அனேகர் ஹொட்டலின் சுற்றாடலுக்குள் முடங்கியிருக்க, நாங்களோ வெளியிடங்களுக்குப் பயமின்றித்திரிந்தோம். அவ்வாறு போகும்போது நாங்கள் மண்ணிறக்காரிகள் என்பதால் புறநகர்ப்பகுதியில் இருந்த சனங்களும் எங்களை வித்தியாசமாய்ப் பார்க்கவில்லை. தோழி ஏற்கனவே உயர்கல்லூரியில் இரண்டு மூன்று ஸ்பானிஸ் வகுப்புக்கள் எடுத்திருந்ததால், தெரிந்து வைத்திருந்த அடிப்படை ஸ்பானிஸ்... பாதை தொலைந்துவிடாதிருக்க..., உணவகங்களுக்குச் சென்று சாப்பிட..., அங்காடிகளில் பொருட்களை வாங்க... என நன்கு பிரயோசனபட்டது.
அந்த விடுமுறையில் நான் நிறைய விடயங்களை அறிந்துகொண்டேன். அவற்றில் பல எனக்குப்புதியதாகவும் பிடித்தமானதாகவும் இருந்தன. வகுப்புக்களில் பக்கங்களாய்ப் படித்த பலவற்றை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டேன். ஒரு பெண்ணாய் எனக்கான தனித்துவமான முடிவுகளை இனி எதிர்காலத்தில் எடுக்கமுடியும் என்ற துணிச்சலை இந்த நாட்கள் எனக்கு ஏதோவொரு புள்ளியில் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கென நம்புகின்றேன். எவ்வளவு குதூகலத்தோடு நான் ஹன்கூனிலிருந்தேனோ அதற்கு எதிர்மறையான மனோநிலையோடு ரொறொண்டோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினேன். எனினும் இந்தப் பயணம் இந்த உலகை வேறுவிதமாய்ப் பார்க்க, நான் யார் என்பதை ஆழமாய் அறிந்து கொள்ள உதவியதிலென... பல்வேறுவிதத்தில் என்றென்னும் நினைவில் கொள்ளக்கூடியதாய் அமைந்துவிட்டிருந்தது.
3.
துஷா அன்று எனது வீட்டுக்கு வந்தபோது வானம் கருஞ் சாம்பலாயிருந்தது. பனி கொட்ட இன்னும் ஆரம்பிக்கவில்லையெனினும் காற்றின் நிமித்தம் குளிர் மிக மோசமாய் இருந்தது. இனி எல்லா மரங்களும் இலைகளும் உதிர்ந்து நிர்வாணமாய் நிற்கப்போகின்றன. இந்தக் கொடுங்குளிரில் நிர்வாணமாய் நிற்பது மரங்களுக்கு மட்டுமே சாத்தியம். வழமையாக வரும் துஷாவைப் போல அவள் இன்றிருக்கவில்லை; எதையோ பறிகொடுத்தாற்போல அவளது முகம் இருந்தது. சிலவேளை இதுவரை இணைந்துகொள்ளாத தமிழ் மாணவர் அமைப்பில் சேர்ந்துவிட்டாளோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. எனெனில் அங்கு போகத் தொடங்கிவிட்டால் உங்களையறியாமலே ஒர் இருட்திரை உங்கள் முகங்களுக்கு முன் தொங்கத்தொடங்கிவிடும். சாச்சா...துஷா இப்படியொரு விஷக்குளத்தில் இறங்கியிருக்கமாட்டாளென்று என் மனம் கூறியது. நான் கேற்றிலில் நீரைச் சூடாக்கிக்கொண்டு பாலை அடுப்பில் வைத்து சூடாக்கத் தொடங்கினேன். குளிருக்குள் வந்தவளுக்கு அளவான சூட்டுடன் கொடுக்கும் தேநீர் பிடிக்கும் என்பது எனக்கு நன்கு தெரியும்.
'இப்ப ரீ தேவையில்லை, உன்னோடு கதைக்கவேண்டியிருக்கிறது.'
'அப்படியா..! சரி என்னவென்று சொல்.'
'இல்லை, இனி நாங்கள் இப்படிச் சந்திக்கிறது எல்லாம் சரிவராது போலத்தெரிகிறது.'
பிறகு, எங்களின் உரையாடல் கொதித்துக்கொண்டிருந்த பாலை விட அதிகம் சூடாகி, நான் அவள் முன்பொருமுறை நேசமுடன் வாங்கித்தந்த புத்தர் சிலையை நிலத்தில் எறிந்து எனது கோபத்தைக் காட்டும்வரை போய்முடிந்தது. உடைந்து நொறுங்கிய புத்தரின் கண்கள் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, துஷா என்னைவிட்டு என்றென்றைக்குமாய்ப் பிரிந்துபோனாள்.
துஷா என்னைவிட்டுப் போனதன்பிறகு புதிதாய் எவரையும் டேட்டிங் செய்யும் எண்ணம் வரவில்லை. கட்டற்றுத் துள்ளிக்கொண்டிருந்த இளமை வடிந்துபோயிற்றுப் போலும். ஏற்கனவே மூன்று பாடங்களில் பெயிலாக இருந்த நான் இம்முறையும் அந்தப் பாடங்களில் பாஸாகவிட்டால், ஒரு வருடத்திற்கு வளாகத்தில் probation தந்துவிடுவார்கள். பிறகு படிப்பதற்கான கடனுதவியையும் தரமாட்டார்கள். படித்துப் பட்டதாரியானவர்களே ஒழுங்காய் ஒரு வேலை எடுக்கமுடியாது சும்மா வீட்டிலிருக்கையில், அரைகுறையில் படிப்பு நிற்கும் நான் எவரிடமும் வேலை கேட்டும் போகமுடியாது. எனவே இம்முறை கொஞ்சம் கவனமெடுத்த்துப் படித்து, நான்காம் ஆண்டை முடித்தால் ஒரு பட்டத்தை எடுத்துவிடலாம் என்று வகுப்புக்களுக்கு ஒழுங்காய்ப் போகத்தொடங்கினேன். எனது பட்டமளிப்பு முடிந்தபோது இவள் நான்காண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தாள். துஷாவோடு சுற்றித்திரிந்ததில் இவளை மறந்து இடையில் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி வந்துவிட்டது.
ஒருநாள் பழைய ஞாபகங்கள் கிளற, எனது முன்னாள் 'கிளி' கூண்டைவிட்டுப் போயிற்றா அல்லது ஒரு துணைக்காய் மோனத்தவத்தில் இன்னும் காத்திருக்கிறதா என்பததை அறிய ஒரு மெயிலைத் தூதுவிட்டேன். வந்த நீண்ட பதிலில், ஏதோ நிர்ப்பந்தத்தால் அவள் வீட்டை விட்டு வெளியே வாழத் தீர்மானித்திருந்தது போலத் தோன்றியது. ஆயிரமாண்டுக்குப் பின் வராது வந்த மாமணியென அவளோடு நான் மீண்டும் சமரசமாகிவிட்டேன்.
(இன்னும் வரும்)
நன்றி:கூர் 2011
ஓவியம்: வான்கோ
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment