After Dark by Haruki Murakami
1.
ஹருக்கி முரகாமியின் 'இருளின் பின்' (After Dark), ஒருநாளின் நள்ளிரவிலிருந்து விடியும் வரை நடக்கும் நிகழ்வுகளைக் கொண்ட ஒரு நாவலாகும். இந்நாவலில் அறிமுகப்படுத்தபபடும் எல்லாக் கதாபாத்திரங்களும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ இன்னொரு பாத்திரத்தை/நிகழ்வைப் பாதிக்கின்றவர்களாய் இருக்கின்றார்கள். இக்கதையில் மேரி, எரி என்கின்ற இரு சகோதரிகளைச் சுற்றியே கதை நிகழ்கின்றது. மேரி என்கின்ற 19வயது இளைய சகோதரி, ரோக்கியோவின் களியாட்டப் பகுதியுள்ள ஓர் உணவகத்தில் யாருக்காவோ/எதற்காகவோ காத்திருப்பதுடன் தொடங்கும் கதை, இறுதியில் மேரி அடுத்த நாள் காலை தன் வீட்டுக்குத் திரும்புவதுடன் முடிவடைகிறது. இந்த இடைவெளியில் அவர் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் நிகழும் சம்பவங்கள் மிகுந்த சுவாரசியமாக இந்நாவலில் விபரிக்கப்படுகின்றது.
மேரிக்கு எரி என்கின்ற மூத்த சகோதரி ஒருவர் இருக்கின்றார். அவரைப் போன்று தான் மிகுந்த அழகில்லை என்கின்ற எண்ணமும் மேரிக்கு இருக்கின்றது. தமக்கை வசதியான ஜப்பானியர்கள் படிக்கும் கல்லூரிக்குக் கற்கப்போக, அங்கே கற்பது பிடிக்காத மேரி சீனக்குடிவரவாளர்கள் நிரம்பியிருக்கும் பகுதியிலுள்ள ஒரு சீனக்கல்லூரிக்குப் படிக்கப் போகின்றார். அழகான எரி தன் இளம்வயதிலேயே பதின்மர்களுக்கான சஞ்சிகைகளில் மொடலிங் செய்பவராக, ரியலிட்டி ரீவிக்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவராக புகழ்பெற்று விடுகின்றார். சீனப் பள்ளிக்குப் போகும் மேரி சீனமொழியில் பேசுவதில் வல்லவராய் இருப்பதுடன், தன் தமக்கைக்கு நேர் எதிரான குணங்களுடையவராக இருக்கிறார்.
தன் வீட்டை விட்டு ஓடிவந்திருக்கின்றாரா அல்லது யாரையாவது சந்திக்க வந்திருக்கின்றாரா என்கின்ற எவ்விதத் தெளிவும் இல்லாது, கஃபேயில் ஆறுதலாக புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவராக மேரி, ஹருக்கி முரகாமியால் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றார். அங்கே தற்செயலாய் ஓரு இளைஞனை மேரி சந்திக்கின்றார். அவன் மேரியின் சகோதரியான எரியை அறிந்தவன். மேலும் மேரியையும், எரியோடு சேர்த்து சிலவருடங்களுக்கு முன் நேரடியாகச் சந்தித்துமிருக்கின்றான். ஆனால் மேரிக்கு இந்த இளைஞனை அவ்வளவு ஞாபகம் இல்லை. இளைஞன் மேரியோடு பேசுவதில் ஆவலாக இருப்பவனாயிருப்பினும் மேரிக்கு அவனோடு அளவளாவுவதில் அவ்வளவு விருப்பமில்லை. இளைஞன், எரி இப்போது எப்படி இருக்கின்றார் எனக் கேட்கிறார். மேரி, தன் சகோதரி நீண்ட உறக்கத்தில் இரண்டு மாதங்களாய் இருக்கின்றார் என்கின்றார். இதைக் கேட்கும் அந்த இளைஞனுக்கு மட்டுமில்லை, வாசிக்கும் நமக்கும் எப்படி ஒருவர் இரண்டு மாதங்களாய் -கோமாவும் இல்லாமல்- நீண்ட உறக்கத்திலிருக்க முடியும் என்ற வியப்பு ஏற்படுகிறது.
இப்போது கதை மூத்த சகோதரியான எரியை நோக்கித் திரும்புகின்றது. அவர் மேரி கூறியதைப் போலவே நீண்ட தூக்கத்திலேயே இருக்கின்றார். வாசிக்கும் எம்மை நகரும் விடீயோக் கமராவைப் போல எரியை அவதானிக்கும்படி முரகாமி அழைத்துச் செல்கின்றார். எரியுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனும் அறிமுகப்படுத்தப்படுகின்றான். அவனுக்கு வாசிக்கும் எங்கள் வசதிக்காய் 'முகமில்லாத மனிதன்' (The man without face ) என ஒரு பெயரை முரகாமி தருகின்றார். ஏன் எரி இப்படி நீண்ட தூகத்தில் இருக்கின்றார்? யார் அந்த 'முகமில்லாத மனிதன்'? நாவல் முடியும்வரை அவை சுவாரசியமான புதிர்களாய் அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன.
இப்போது மீண்டும் கதை, கஃபேயிலிருக்கும் மேரியை நோக்கித் திரும்ப தொடங்குகின்றது. வந்த இளைஞன், தான் தன் நண்பர்களுடன் இந்நள்ளிரவு முழுக்க இசைநிகழ்வுக்காய் பயிற்சி எடுக்கப்போகின்றேன் எனவும் பயிற்சியின்போது இன்னொரு இடைவெளி எடுக்கும்போது மேரி கஃபேயிலிருந்தால் வந்து தான் சந்திப்பதாகவும் கூறி விடைபெறுகின்றான். நேரம் நள்ளிரவைத் தாண்டியும் விட்டது. நகரிலிருந்து புறப்படும் கடைசி ரெயினும் போய்விட்டது. இனி விடிகாலை வரை மேரி தன் வீட்டுக்குத் திரும்பமுடியாது என்பதும் அந்த இளைஞனுக்குத் தெரியும்.
மேரி இப்போது ஏற்கனவே தான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் ஆழ்ந்துவிடுகின்றார். அப்போது அசாதாரண உயரமும், எடையும் கொண்ட ஒரு பெண்மணி மேரியைத் தேடி அந்தக் கஃபேயிற்கு வருகின்றார். மேரியிடம், தான் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கின்றேன், உனக்குச் சீனமொழி பேசமுடியுமென உன்னை ஏற்கனவே சந்தித்துச் சென்ற இளைஞன் கூறியிருக்கின்றான். உன்னால் எனக்கொரு மொழிபெயர்ப்பாளராக இருந்து உதவமுடியுமா? எனக் கேட்கின்றார். இதற்கு முன் அறிமுகமேயில்லாத பெண்ணோடு மொழிபெயர்ப்பாளராகச் செல்வதா அல்லது வேண்டாமா என மேரி முதலில் யோசித்தாலும் ஹரோக்கி என்கின்ற அப்பெண்மணியோடு அவர் நிர்வாகிக்கும் 'லவ்' ஹொட்டலுக்குச் செல்கின்றார்.
போகும் வழியில் ஹரோக்கி தான் ஒரு மல்யுத்த வீராங்கனையாக (Wrestler) இருந்ததாகவும் போட்டிக்களுக்காய்ப் பல நாடுகளுக்குச் சென்றதாகவும், ஒரு நிகழவில் தன் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதிலிருந்து போட்டிகளில் தொடர்ந்து பங்குபெற முடியாமல் போய்விட்டது என்கின்றார். இப்போது வருமானம் ஏதுமில்லாமல், இந்த லவ் ஹொட்டலை நிர்வகிப்பவராக வேலை செய்கின்றார் எனவும் கூறுகின்றார் ஹரோக்கி. மேலும், 'இந்நகரில் நள்ளிரவில் என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?' என மேரியிடமும் கேட்கின்றார். மேரி மெளனமாய் இருப்பதைப் பார்த்து, 'உன்னைப் போன்றே பதின்மங்களைத் தாண்டியே நானும் வந்திருக்கின்றேன். உன்னைப் போன்ற பெண்கள் இக்களியாட்டப் பிரதேசங்களுக்கு நள்ளிரவுகளில் வரக்கூடாது. எதுவுமே நடக்கலாம். பகலில் பார்க்கும் இடம் போல இது இரவில் இருப்பதில்லை. இரவில் இத்தகைய இடங்கள் இன்னொரு முகமூடியை அணிந்துகொள்கின்றன' என்கிறார் ஹரோக்கி. மேலும் தான் நிர்வாகிக்கும் லவ் ஹோட்டல்களில் அநேகமாய் இரவைக் கழிக்க இணைகளும், பாலியல் தொழிலாளர்களுமே வருவார்கள் எனவும் கூறுகின்றார்.
2.
லவ் ஹொட்டலின் நான்காம் மாடியில், சீனமொழி மட்டும் பேசக்கூடிய பெண் அடிவாங்கி இரத்தக் காயங்களோடு மூலையில் ஒடுங்கிக்கிடக்கிறார். மேரி, தான் பொலிஸின் ஆளில்லை, தன்னை நம்பிக் கதைக்கலாம் என்கின்றபோதும் முதலில் அந்தச் சீனப் பெண் தயங்குகின்றார். இறுதியில் அந்தப்பெண் தான் இந்த நிலைக்கு வந்த நிலைமை பற்றிக் கூறுகின்றார். பாலியல் தொழில் செய்வதற்கென ஜப்பானில் இயங்கும் ஒரு சீனக்குழுவால் அவர் ஜப்பானுக்கு கள்ளமாக வரவழைக்கப்பட்டிருக்கின்றார். அந்தப் பெண்ணுக்கும் மேரியின் வயதே இருப்பதால் மேரிக்கும் அவர் மீது ஒருவிதப் பரிவு வருகிறது.
அன்று வாடிக்கையாளரோடு வந்த இப்பெண்ணுக்கு மாதாந்த உதிரப்பெருக்கு ஏற்பட்டுவிட, வாடிக்கையாள ஆண் கோபத்தில் இவரைத் தாக்கிவிட்டு இவரது உடைகள் உட்பட அனைத்து உடைமைகளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கின்றார். உடைகளை எடுத்துச் சென்றதுகூட -இந்த வன்முறையை- உடனேயே வேறு யாருக்குத் தெரிவித்து எவரும் வந்துவிடக்கூடாது என்கின்ற முற்பாதுகாப்பிற்காகவே ஆகும். ஆடைகளில்லாதுவிடின் உடனேயே வெளியே ஓடிப் போய் இப்பெண் எவரிடமும் உதவி கேட்கமுடியாதவல்லவா?
இறுதியில் அப்பெண்ணுக்கு மாற்றுடை கொடுத்து, அவர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றாரோ அந்தச் சீனக்குழுவுக்கும் செய்தி கொடுக்கப்பட்டு அப்பெண்ணை அந்தக்குழு பொறுப்பெடுத்துக் கொள்கின்றது. தனது ஹொட்டல் அறைக்கு உரிய பணம் தராதற்கு மட்டுமின்றி, ஒரு பெண்ணின் மீது மூர்க்கத்தனமாய் தாக்குதல் நடத்தியதற்குமாய் அந்த வாடிக்கையாளர் தண்டிக்கப்படவேண்டுமென வீறாப்பில், ஹரோக்கி பாதுகாப்புக் கமராக்களை பின்னோக்கிச் சுழற்றி அந்த வாடிக்கையாளரைக் கண்டுபிடித்து படத்தைப் பிரதி எடுத்தும் கொள்கின்றார். மேலும் சீனக்குழுவிற்கும் தொலைபேசி அழைத்து அந்த வாடிக்கையாளர் தண்டிக்கப்படவேண்டுமென்பதற்காய் அந்தப் புகைப்படத்தையும் அவர்களிடம் ஹரோக்கி கொடுத்துவிடுகின்றார்.
இதற்கிடையில் மேரியைக் கொண்டுபோய் கஃபேயில் மீண்டும் விட்டுவிடும் ஹரோக்கி, இரவில் தங்குவதற்கு ஓரிடம் வேண்டுமென்றால் தன் ஹொட்டலுக்கு எந்த நேரமும் வரலாம் என அழைப்பையும் விட்டுச் செல்கின்றார். மீண்டும் தேநீரும்,பாடலும், புத்தகம் வாசிப்பதுமாய் மேரி இருக்க, இசைப் பயிற்சிக்குப் பின்பான இடைவேளையில் முதலில் மேரியைச் சந்திக்க அந்த இளைஞன் வருகின்றான். அவன், தான் இனி இசைக்குழுவை விட்டு முற்றுமுழுதாக விலகி, விரைவில் சட்டம் படிக்கப் போவதாய்க் கூறுகின்றான். அதைத் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களையும், தன் எதிர்காலக் கனவுகளையும் மேரியுடன் பகிர்கிறான். மேரி முதற் சந்திப்பைப் போலவன்றி, இப்போது அவனோடு அளவளாவத் தொடங்குகின்றார். அப்போதுதான், அவன் மேரியின் சகோதரியான எரி ஒருநாள் தன்னோடு சில தனிப்பட்ட விடயங்களைப் பகிர்ந்தாள் என்கின்ற விடயத்தைக் கூறுகின்றான். அத்துடன் அவள் நிறைய மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றாள் என்பதையும் தெரிவிக்கின்றான். மேரிக்கு தன் தமக்கை எளிதில் வெளிவரமுடியாத பெரும் சிக்கலில் மாட்டியிருக்கின்றாள் என்பது விளங்குகின்றது.
3.
கதை இப்போது சீனப்பெண்ணை மூர்க்கமாய்த் தாக்கிய வாடிக்கையாளனைச் சுற்றி நகரத்தொடங்குகின்றது. அவனொரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றான். அதிகமாய் இரவில் தன் வேலைத்தலத்தில் தங்கி நெடுநேரம் வேலை செய்யும் ஒருவனாக இருக்கின்றான். அன்றும் தனக்குக் கிடைத்த இடைவெளியில்தான் சீனப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு லவ் ஹொட்டலுக்குப் போயிருக்கின்றான். மீண்டும் தன் வேலைத்தளத்திற்கு வரும் அவன் நிதானமாக வேலையை முடித்து, யோகா செய்து சவரஞ்செய்து வீட்டுக்குப் புறப்படுகின்றான். போகும்வழியில் மனைவி பால் வாங்கி வரச் சொன்னது நினைவுக்கு வருகின்றது. பால் வாங்கும் கடையின் முன்னாலிருக்கும் குப்பை போடும் இடத்தில், தான் அபகரித்து வந்த சீனப்பெண்ணின் ஆடைகள் தோற்பை உள்ளிட்ட எல்லாவற்றையும் வேறொரு பையினுள் பாதுகாப்பாய்ப் போட்டு வைத்துவிடுகின்றான். ஆனால் அந்தப் பெண்ணின் கைத்தொலைபேசியை மட்டும் வேண்டுமென்றே கடையிலுள்ள விற்பனை பொருட்களிடையே மறைத்து வைத்தும் விடுகின்றான்.
மேரியோடு கதைத்துக் கொண்டிருந்த இளைஞன் மீண்டும் இசைப்பயிற்சி செய்வதற்காய்த் திரும்புகின்றான். மேரியை காலைச் சாப்பாட்டுக்காய்க் கூட்டிக்கொண்டு போக விரும்புவதாய்க் கூறிவிட்டுப் போகின்றான். அவனும் சில பொருட்களை வாங்க வேண்டி கடையொன்றுக்குப் போக, அந்தக்கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி ஒலிக்க, யாரோ தவறவிட்டுச் சென்றுவிட்டார்கள் போலும், போனைத் தேடுகின்றார்கள் போலும் என தொலைபேசி அழைப்பை எடுக்கின்றான். எதிர்முனையில், 'நீ என்ன செய்துவிட்டுப் போனாய் என்று எங்களுக்குத் தெரியும், இதற்கான விலையை நீ ஒருநாள் கொடுப்பாய்' என அச்சுறுத்தும் குரல் கேட்கின்றது. இந்த இளைஞனுக்கு வியப்பாயிருக்கிறது. தன் நிலையை விளங்கப்படுத்தவும் அவனுக்கு எதிர்முனையில் பேசியவன் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. பயத்தோடும் பதற்றத்தோடும் அந்தக்கடையை விட்டு இந்த இளைஞன் நகர்ந்து செல்கின்றான்.
...இவ்வாறாக நாவல் இன்னும் நீளும். ஹருக்கி முரகாமியின் நாவல்களில் வரும் முக்கிய ஆண்பாத்திரங்கள் அநேகமாய் தனிமைப்பட்டவர்களாய் அல்லது தனிமையை விரும்புவர்களாய் இருப்பவர்களாய் படைக்கப்பட்டிருப்பதைப் போல இதில் வரும் இளைஞனும் இருக்கின்றான். முக்கியமாய் பெண்கள் மீது ஈர்ப்பிருப்பவர்களாய் இருப்பினும் அவர்களை கவரமுடியாத் தாழ்வுணர்ச்சியுடன் இருப்பவர்களாய் முரகாமியின் அநேக ஆண்பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும். இந்நாவல் நள்ளிரவில் தொடங்கி விடிகாலையில் முடியும் குறுகிய காலப்பகுதிக்குரிய கதை என்றாலும் ஹருக்கி முரகாமி தன் எழுத்தால் எம்மையும் அந்தச் சூழலுக்குள் ஒரு பார்வையாளரைப் போல ஆக்கிவிடுகின்றார்.
மேரி ஒவ்வொரு பாத்திரத்தையோ, சம்பவங்களையோ சந்திக்கும்போது நமக்கு அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்கின்ற பதற்றம் வந்துவிடுகின்றது. அதேபோல் மேரியின் சகோதரியான எரி பற்றி விபரிக்கப்படும்பகுதிகள் முழுதுமே ஒருவித மாய யதார்த்தத்தில் எழுதப்பட்டிருக்கும். மேரி, எரி தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கின்றார் எனத்தான் கூறுகின்றார். அப்படியாயின் அவர் தூங்குவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த 'முகமற்ற மனிதன்' யார்? அதுமட்டுமில்லாது ஒரு அத்தியாயத்தில், தூக்கத்திலிருந்து சற்று விழிக்கும் எரி, நிலத்திலிருக்கும் ஒரு பெனசிலை எடுக்கின்றார். பிறகு பார்த்தால் அதே பென்சிலே சீனப்பெண்ணைத் தாக்கிய வாடிக்கையாளன் வேலை செய்யும் மேசையில் இருப்பதாய்க் கூறப்பட்டிருக்கும். இவ்வாறாக எரியின் உறக்கமே பல்வேறு விதமான விசித்திரப்புதிர்களால் நெய்யப்பட்டிருக்கும். இருநூறு பக்கங்களுக்கும் குறைவான நாவல் என்றாலும் வாசிப்புச் சுவாரசியத்திற்கு குறைவே இல்லாதது.
ஹருக்கி முரகாமிக்குப் பிடித்தமான பூனைகள் இந்நாவலிலும் முடிவதற்கு சில அத்தியாயங்கள் முன் பூங்காவில் தோன்றுகின்றன. மேரியும், அந்த இளைஞனும் ரூனா மீனை அப்பூனைகளுக்கு சாப்பிடக் கொடுத்து அவைகளை வருடியபடி இருக்கின்றனர். ஒருவகையில் பார்த்தால் இந்தப் பூனைகளைப் போல் நாமும் வாழ்வில் யாருடையதோ அரவணைப்புக்காக காத்திருக்கவோ அல்லது அலைக்கழியவோ வேண்டியிருக்கிறது அல்லவா?
............
Photos: Thanks to Google Images (search words: after dark, haruki murakami)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//
11/04/2011 12:46:00 PMரோக்கியோவின் களியாட்டப் பகுதியுள்ள
//
டோக்யோ அல்லது தோக்கியோ-ன்னு எழுதியிருக்கலாம். Tokyo = ரோக்கியோ-ன்னு யாருக்குப் புரியும்?
ஜோ,அப்படியும் பாவிக்கலாந்தான். ஆனால் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் 'ரோக்கியோ' என்றுதான் எழுதுவோம். ஆகவே அவரவர் அவர்களின் தனித்துவங்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அப்படியே பாவித்திருந்தேன். மற்றும்படி தமிழகத்துக்கும் எங்களுக்கும் நிறைய விடயங்களில் உச்சரிப்புக்களில் வித்தியாசங்களிருக்கிறது. பல வருடங்களுக்கு முன் இது குறித்து வலைப்பதிவுகளில் விரிவாக விவாதித்தும் விட்டாயிற்று. நான் வசிக்கும் நகரான Torontoவை 'டொராண்டோ' என்றுதான் தமிழகத்தவர்கள் எழுதுகின்றார்கள். ஆனால் தமிழகத்தவர்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப்படுவதாய்க் கூறப்படுகின்ற அ.முத்துலிங்கம் உள்ளிட்ட இங்கே வசிக்கும் நாமெல்லோரும் றொரொன்ரோ/றொரொண்டோ என்றுதான் எழுதுகின்றோம். ஆனால் எல்லோருக்கும் விளங்குகிறது அல்லவா? அது போலவே இதெனவும் எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி.
11/04/2011 08:06:00 PMPost a Comment