கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காந்தி*

Saturday, December 22, 2012


-பேஸ்புக் குறிப்புகள் 01-

1.
காந்தி வளரிளம்பருவத்தினர் அநேகருக்குப் பிடிக்காதது போலவே எனக்கும் பிடிக்காது போயிருக்கின்றார். அதைவிட வேறு பல காரணங்களும் சேர்ந்து காந்தியைப் பிடிக்காது செய்திருக்கலாம் என்பதை இப்போது எம்டிஎமின் கட்டுரையை வாசிக்கும்போது தோன்றுகின்றது. உதாரணமாக காந்தியின் மீது பேரன்பு வைத்திருந்த எம்டிஎமின் ஆச்சியால் தெலுங்கு மாநிலப் பிரிப்புக்காய் உண்ணாவிரதம் இருந்த பொட்டி சிறிராமுலு அதன் நிமித்தம் இறந்துபோனதைத் தாங்கமுடியாது இருந்ததை எம்டிஎம் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறே என் சிறுவயதுகளில் மகாத்மாவின் தேசம் என்கின்ற இந்தியா, திலீபனை உண்ணாவிரதம் இருந்து இறக்கவிட்டிருந்ததை -தாங்க முடியாத- இந்தியாவின் மீதும் காந்தியின் மீதும் வெறுப்பின் ஒரு படிமமாக மாறிவிட்டிருக்கின்றது போலும். அகிம்சையை உலகிற்கு எடுத்தியம்பிய ஒரு நாடு நம்மை எல்லா வழிகளிலும் கைவிட்டிருந்தது என்பதை இயக்கங்கள் பல தோன்றிய 80களில் மட்டுமின்றி ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த 2009 வரை நாம் தெளிவாகவே கண்டுணர முடியும். மேலும் 50களிலிருந்து தொடங்கிய இனமுரண்களுக்கு முதலில் தமிழர் தரப்பு எடுத்துக்கொண்டது காந்தியின் அகிம்சையையும் சத்தியாக்கிரகத்தையுமே என்பதையும் நாமறிவோம். இயக்கங்களுக்கு ஒருகாலத்தில் அடித்தளமிட்டவையும் காந்திய வழியில் அமைக்கப்பட்ட காந்தியப்பண்ணைகள் என்பது இங்கே ஓர் உபகுறிப்பு. ஆக இவ்வாறாக காந்திய வழியில் இயன்றளவு (போராடியவர்களில் சுயநலத்தை இப்போதைக்கு ஒருபுறத்தில் வைத்தாலும்) முயற்சித்துப் பார்த்த ஈழப்போராட்டத்தின் வரலாற்றை அறிகின்ற 'காந்திய தேசம்' என்ன செய்திருக்கவேண்டும்? நிச்சயமாக பல இயக்கங்களைத் தனித்தனியே பிரித்து ஆயுதங்களை அள்ளி  மட்டும் வழங்கியிருக்காது என்பதை நாம் எதிர்பார்ப்போமா அல்லது மாட்டோமா? ஆனால் கடந்த காலத்தில் நடந்ததுதான் என்ன?

எம்டிஎமின் ஆச்சி கூறுவதைப் போல பொட்டி சிறிராமுலு காந்தி இருந்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார் என நம்புவதைப் போல திலீபன் விடயத்தில் (87ல்) காந்தியையே அல்லது அவரைச் சரியாகப் பின் தொடர்பவர் ஒருவர் இருந்திருந்தால் திலீபன் உட்பட நம் ஈழப்பிரச்சினை கூட ஏதோவொரு வகையில் தீர்த்துவைக்கபபட்டிருக்கலாம் என நம்புவதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. காந்தியின் பெயரை வைத்துக் கொண்டு பிறகு இந்திய அரசியல் அரியாசனங்களில் ஏறிய எவருக்கும் காந்தி ஒரு வெறும் பெயரே. இல்லாதுவிடின் இந்திரா காந்தி நம் இயக்கங்களுக்கும் எல்லாம் தாரளமாக ஆயுதங்கள் வழங்கி அனுப்பியிருக்கமாட்டார்.வேறு சுமூகமான வழிகளில் நம் மேல் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை  அல்லவா தீர்த்திருக்கவேண்டும். எனெனில் காந்தி ஒருபொழுதும் ஆயுதங்களை வழிபட்டவருமில்லை. ஆயுதங்களால் பிரச்சினைகளால் தீருமென்று எவருக்கும் போதித்தவருமில்லை.

2.
ரொறொண்டோவில் உயர்கல்லூரியை முடித்துவிட்டு இன்னொரு தூர நகருக்குப் பல்கலைக்கழகத்துப் போனபோது என் தோழி எனக்கு அன்பளிப்பாய்த் தந்தது காந்தியின் சத்திய சோதனை. அதனை அப்போதும் ஏன் இப்போதும் கூட முழுதாய்ப் படித்து முடிக்கவில்லை. இலக்கியம் மீது அவ்வளவு ஆர்வமில்லாதபோதும் என் தோழிக்கு சத்தியசோதனை முக்கிய நூலாக இருந்தது. காந்தி தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த ஒழுக்க விதிமுறைகள்/போராட்ட வழிமுறைகள் பல அவருக்கு வியப்பையும் மதிப்பையும் கொடுத்திருந்தது. பதின்ம வயதிலிருந்த அவருக்குக் காந்தி அன்றே எப்படிப் பிடித்துப்போயிருந்தார் என்பது இன்றும் எனக்கும் ஒரு வியப்பான விடயந்தான். அதே தோழி காந்தியை ஒரு மேன்மைமிக்க மனிதராக உரையாடியபோதெல்லாம் நான் மட்டுமில்லை எனது சகோதரர் கூட காந்தியின் மீது கடும் விமர்சனங்களை வைத்து அவரின் நம்பிக்கைகளை மாற்ற முயற்சித்தும் இருக்கின்றோம். அன்றைய காலத்தில் நான் அம்பேத்காரை வாசிக்கவேயில்லை. ஏன் அவரை அறிந்திருக்கவே இல்லை என்றுதான் நேர்மையாகக் கூறவேண்டும். ஆக அம்பேத்காரை வாசிப்பதால் வரும் காந்தி மீதான விமர்சனமாக அது இன்றைய காலத்தில் இருப்பதைப் போல  இருந்திருக்கச் சாத்தியமில்லை. அப்படியெனில் ஏன் காந்தியின் மீது இவ்வளவு கடும் வெறுப்பு வந்திருக்கும்? அது ஈழப்போராட்ட அரசியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதென நினைக்கிறது. காந்தியின் தேசம் என்கின்ற ஒரு நாடு 'அமைதிப் படை' என்கின்ற நாகரீகமான பெயரில் வந்து செய்து அட்டூழியங்களின் ஊடாக வந்த அனுபவங்களினூடு எழுப்பப்பட்ட கற்றலாக இருக்கலாம். 

பல்கலைக்கழகக் காலத்தில் மைக்கலோடு திண்ணை/பதிவுகள் இணையத்தளத்தினூடாக நட்பு ஏற்பட்டு எந்த விடயங்கள் குறித்தும் அவரோடு விவாதிக்கவும் கடுமையாகச் சர்ச்சிக்கவும் முடிந்திருந்தது. தனியே இலக்கியம் என்றில்லாது என்னைப் பல திசைகளில் நெறிப்படுத்தியவர் அவர். பெரியாரை மட்டுமில்லை, அயோத்திதாச பண்டிதர், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரை அவரே விரிவாக அறிமுகப்படுத்தியவர். நாம் ஒரேயொரு முறை நேரடியாகச் சந்தித்த நிகழ்விலும் (ஜெயமோகன் 200ல1ல் இங்கே வந்தபோது) எஸ்விஆரும் கீதாவும் தொகுத்த பெரியார்:சுயமரியாதை சமதர்மம் நூலை வாசிக்க மொன்றியலில் இருந்து கொண்டுவந்து தந்தவர். அது உட்பட உபபாண்டவம், ஜீரோ டிகிரி என பல நூற்களைத் தந்தவர் (இப்போதும் அவை அவருடன் திருப்பிக்கொடுக்காது என்னிடம் இருக்கின்றன). 

மைக்கல் நட்பில் நிமித்தம் அவர் எழுதிய/எழுதும் கதைகளை எனக்கும் அனுப்பிக் கொண்டிருப்பார். அப்படி அனுப்பிய ஒரு கதைதான் ''மகாத்மாவின் பொம்மைகள்'. எனக்குக் கதை பிடித்திருந்தாலும் கதையில் வரும் காந்தியை எனக்குப் பிடிக்காது என எழுத காந்தி பற்றிய உரையாடலாய் அது நீண்டிருந்தது. காந்தி மீது அம்பேத்கார் வைத்த விமர்சனங்களுக்கு அப்பால் காந்தி அந்தளவுக்கு வெறுக்க வேண்டிய மனிதர் அல்ல என காந்தியைப் பற்றி மைக்கல் சொன்னதாய் நினைவு. என்னைப் போல அன்றி மைக்கல் தன் வாழ்வில் ஒருபகுதியை ஈழப்போராட்டத்திற்காய் ஆயுத இயக்கமொன்றில் இணைந்திருந்தமையும், அவை கொடுத்த அனுபவங்களினூடு காந்தியை இன்னும் ஆழமாய் அவர் புரிந்திருக்கவும் கூடும் என இப்போது நினைக்கும்போது தோன்றுகின்றது. எனெனில் எனக்கு அப்போது காந்தி என் அரசியல் வெறுப்பின் படிமம். அதற்கப்பால் அவர் வேறு எதுவுமாய் இருந்ததில்லை.

ஆனால் மைக்கலோடு நடந்த உரையாடல், காந்தியைப் பிடிக்கவில்லை எனினும் அவரைப் பற்றி எழுதப்படுவதை முதலில் விலத்தாமல் படிக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தந்திருந்தது. அந்தவகையில் தமிழ்ச்சூழலில் காந்தியை மீள விமர்சனங்களோடு கொண்டு வந்திருந்த பிரேம், அ.மார்க்ஸின் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். காந்தி பற்றி சில ஆண்டுகளுக்கு முன் அணங்கில் பிரேம் X பொதியவெற்பன் நடத்திய விவாதம் கூட ஒருவகையில் முக்கியமானது. எந்த விடயம் பற்றியும் அறிமுகங்கள் சரியான ஒருவரிடம் இருந்து வராவிட்டால் அது மேலும் கற்பதைத் தடுத்துவிடும் என்பதற்கு ஜெயமோகன் ஓர் உதாரணம் என்பதால் அவரின் காந்தி பற்றிய கட்டுரைகளை அவ்வளவாய் வாசிக்க விரும்புவதில்லை. மேலும் காந்தியை மீளக்கண்டுபிடித்துத் தமிழ்ச்சூழலுக்குக் கொண்டுவந்தவர்கள் நிறப்பிரிகையோடோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்டவர்களே அன்றி ஜெயமோகனைப் போன்றவர்கள் அல்ல. ஆனால் யார் எவர் கூட ஒருவரைப் பற்றி எழுதுகின்றோரே அவரே முக்கியமானவர் ஆகிவிடுவதைப் போல ஜெயமோகந்தான் காந்தியை மீளக்கண்டுபிடித்ததுபோல விம்பம் இப்போது தமிழ்ச்சூழலில் வந்துவிட்டது.

ஆக, இன்னும் காந்தியை எவ்வாறு வாசித்துப் புரிந்துகொள்கிறேன் என தெளிவாகச் சொல்லமுடியாது. ஆனால் இன்றையபொழுதில் காந்தியை வெறுப்பின் அடையாளமாய்த் தூக்கியெறியாது அவரை ஒரு மாணவராய் வாசிக்க விரும்புகின்றேன் என மட்டுந்தான் கூறமுடியும்.

காந்தி என்கின்ற நிறையக் கனவுகளோடு இருந்த எளிய மனிதர் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் மீது வெறுப்பில்லை போலத்தான் இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. ஆனால் காந்தியைத் தம் தேச அடையாளமாக்கிவிட்டு அவரை எங்கோ தூக்கியெறிந்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு 'தேசம்' மீதுதான் என்னுடைய எல்லாப் பிணக்குப்பாடுகளும். 

இறுதியில் எம்டிஎம் இப்படித் தன் கட்டுரைய முடித்திருப்பார்.

“காந்தியையா சுட்டுக்கொன்றார்கள்? என்ன தேசம் உங்கள் இந்தியா?” என்று கேட்டார் ஒரு எத்தியோப்பிய இளம்பெண். எனக்கு அவமானத்திலும் சோகத்திலும் நாடி நரம்புகளெல்லாம் கூசி அடங்கிவிட்டது. “நாம் காந்தியை கொன்று இருக்கக்கூடாது” என்ற ரமேஷ்-பிரேதனின் கவிதை வரி நினைவுக்கு வந்தது.

என்னிடமும் ரமேஷ் - பிரேதனின் 'காந்தியைக் கொன்றது தவறுதான்' என்ற கவிதைத் தொகுப்பிருக்கின்றது. அதில் காந்தியைப் பற்றியே பத்திற்கு மேற்பட்ட கவனிக்கத்தக்க   கவிதைகள் இருக்கின்றன.

இந்தியா என்கின்ற (காலனித்துவத்தின் பின்னான) தேசத்தில் இருக்கின்ற எம்டிஎமிற்கோ அல்லது ரமேஷிற்கோ காந்தியைத் தாங்கள் கொன்றது என்பதில் துயரமும் இயலாமையும் இருப்பதைப் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் இந்திய தேசம் தன் தேச நலன்களுக்காய் அயல்நாடுகளை விளையாட்டுப் பொம்மைகளாக ஆக்குவதை, அங்கே நிகழும் அழிவுகளில் அகம் மகிழ்வதை அதன் அயல்நாடுகளில் ஒன்றான தீவு மனிதனான என்னைப் போன்ற பலர் நன்கறிவர். ஆகவே என்னைப் பொறுத்தவரை காந்தியை கொல்லப்படாமலிருக்கச் சந்தர்ப்பங்கள் குறைவாகவே இந்தியாவில் இருந்திருக்கும்.  எனெனில் காந்தி கனவு கண்ட ஒரு தேசத்திற்கு மாறாக இன்னொரு 'இந்தியா' அவர் காலத்திலேயே உருவாகிவிட்டிருந்திருக்கின்றது. ஆகவேதான் மோசமான காலனித்துவ ஆட்சியாளர் கூட கொல்லாமல் விட்டிருந்த காந்தியை அவர் தேசத்து நாட்டைச் சேர்ந்த ஒருவரால் கொன்றிருக்க முடிந்திருக்கின்றது. இவ்வாறு ஒரு காந்தியைக் கொன்றவர்களுக்கு பக்கத்து நாடுகளில் இருக்கும் மனிதர்களைக் கொல்லவோ அல்லது கொல்கின்றவர்களுக்கோ துணைபுரிவதற்கோ காந்தி ஒரு பொருட்டே அல்லத்தானே.

காந்தியைப் போன்ற ஒருவரையே கொல்கின்றவர்களின் நீட்சியில் அரசியல் செய்ய வருவோருக்கு, ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வது பெரிய விடயமே அல்ல. இந்தியா உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு எனச் சொல்லிச் சொல்லியே தாம் செய்யும் அட்டூழியங்களை மறைக்கும்போது காந்தியை அவர்கள் கொன்றிருக்காவிட்டால் -காந்தியின் அகிம்சையை கேள்வியே கேட்கமுடியாத படிமமாக்கி- இன்னும் எத்தனையோ எல்லாம் மறைத்திருப்பார்கள் என நினைக்கும்போது அச்சமாகவே இருக்க்கிறது. 

ஆக, உண்மையில் காந்தி எப்போதோ இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். இப்போது காந்தி ஒரு கடந்தகால அடையாளம் மட்டுமே. இல்லாவிட்டால் சில வாரங்களுக்கு முன் கசாப்பைக் கூட தூக்கிலிட்டிருக்கமாட்டார்களல்லவா?


(1) எம்.டி.எம்மின் கட்டுரை:http://mdmuthukumaraswamy.blogspot.ca/2012/11/blog-post_24.html
(2) மைக்கலின் 'மகாத்மாவின் பொம்மைகள்':http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=10203241&format=print&edition_id=20020324 

Saturday, November 24, 2012 at 1:04pm

* 'காந்தியைக் கொன்றது சரிதான்' என்றுதான் பேஸ்புக் குறிப்பில் தலைப்பிட்டிருந்தேன். எம்டிஎம்மின் விருப்புப்படி தலைப்பை மாற்றியிருக்கின்றேன்.

நாமிருக்கும் நாட்டில்...

Saturday, December 15, 2012



னடாவிலிருந்து ஏறத்தாள 20ற்கு மேற்பட்ட தமிழ்ப்பத்திரிகைகள் வெளிவருகின்றன. வாரப் பத்திரிகையாக ஆகக்குறைந்தது பத்திற்கு மேற்பட்ட பத்திரிகைகளை வெள்ளி மாலைகளில் அநேக தமிழ்க்கடைகளில் காணமுடியும். கனடாவில் தமிழ்மக்கள் செறிவாக வாழும் ரொறொண்டோ பெரும்பாகத்தில் இருந்தே இப்பத்திரிகைகளில் அநேகம் வெளிவருகின்றன. இப்பத்திரிகைகள் அனைத்துமே இலவசமாக விநியோகிக்கப்படுவதால் பத்திரிகையின் பக்கங்களை விளம்பரங்கள் ஆக்கிரமிப்பதை அதன் இயல்புகளில் ஒன்றேயெனத்தான் எடுத்துக் வேண்டியிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட நூறு இதழ்களுக்கு மேலே வந்த சில வருடங்களுக்கு முன் நின்று போன 'வைகறை' பத்திரிகை ஒரு முக்கியமான  பதிவு என்பேன். ஈழத்தமிழர்களால் எப்போதும் முன்னிலைப்படுத்தும் அரசியலை அது முக்கியமாய்த் தாங்கி வந்திருந்தாலும் பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டோர் அதிலே எழுத முடிந்திருக்கின்றது. மேலும் நல்ல பல விவாதங்களை நடத்த அந்தப் பத்திரிகை இடங்கொடுத்துமிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் இன்னும் வெளிப்படையாகப் பேசத் தயக்கமுள்ள தற்பாலினர் பற்றி மிக நீண்ட ஒரு நேர்காணலை 'சிநேகித'ன் என்கின்ற தற்பாலின நண்பர்களை சுமதி மூலம் நேர்கண்டு அதை எவ்விதத் தயக்கமோ தணிக்கையோ இன்றி வெளியிட்டுமிருக்கிறது.

இவ்வாறாக பல்வேறு பத்திரிகைகள் வாராந்தம் வருகின்றதாலோ என்னவோ, இலக்கிய சஞ்சிகைகள் தொடர்ந்து வெளிவருவதென்பது கனடாவில் மிக அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறாக கலை இலக்கிய சஞ்சிகைகள் சில வெளிவந்திருந்தாலும் அவற்றின் ஆயுள் சொற்பகாலத்திலேயே முடிந்துவிடுகின்றன. கனடாவில் பல்வேறு விடயங்களில் ஆளுமையுள்ள படைப்பாளிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் இருந்தாலும் அவர்களின் பங்களிப்பும் ஈடுபாடும் பிற புலம்பெயர் தேசங்களோடு ஒப்பிடுகையில் ஓப்பிட்டளவில் குறைவாக இருக்கின்றது என்பதை ஒரு பலவீனமாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. தீவு நாடொன்றிலிருந்து எல்லோரும் வந்ததாலோ என்னவோ ஒவ்வொருவரும் தனக்குரிய சிறிய சிறிய இலக்கிய/அரசியல் குழுக்களோடு தனித்துப் போய் இருந்துவிடுகின்றனர் போலும்.

இவ்வாறான விடயம் ஒருபக்கமிருந்தாலும் கனடாவிலிருந்து 'காலம்' சஞ்சிகை தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருப்பதை - இலக்கியம்/கலை சார்ந்து இயங்குபவர்களுக்கு- ஒரு முக்கிய நிகழ்வெனத்தான் கூறவேண்டும். விரைவில் காலம் தன் 40 வது இதழை வெளியிட உள்ளது. 'காலம்' தன் காலத்தின் அச்சில் மிக நீண்டகாலமாக தொண்ணூறுகளில் தொடங்கி இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 20 வருடப் பயணத்தில் 40 இதழ்கள் மட்டுந்தானா என்று ஒருவருக்குக் கேள்வி எழும்பக் கூடுமெனினும் -எண்ணிக்கையில் அல்ல  தரத்தில்தான்- சிறுசஞ்சிகைகளில் முக்கியத்துவம் இருக்கின்றதென மீண்டுமொரு நினைவூட்ட வேண்டியிருக்கின்றது. இல்லாதுவிட்டால் பத்துப் பதினொரு இதழ்கள் மட்டுமே வந்த 'நிறப்பிரிகை' இதழ்கள் பற்றியோ அல்லது 'புதுசு' இதழ்கள் பற்றியோ நாமெல்லோரும் மீண்டும் மீண்டும் விதந்து பேசுகின்ற அவசியம் வந்திருக்காது.

'காலம்' சஞ்சிகை பற்றி என்னைப் போன்ற பலர் முன்வைத்த விமர்சனமானது காலம்' ஈழ/புலம்பெயர் படைப்பாளிகளை விட இந்திய படைப்பாளிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது பற்றியது. இதை நானும் வேறு பல நண்பர்களும் 'காலம்' ஆசிரியரான செல்வத்திடம் நேரடியாகச் சொல்லியுமிருக்கின்றோம். எமக்கு எப்படி இது குறித்து விமர்சனமிருக்கிறதோ அப்படியே செல்வத்திடம், 'படைப்புச் சார்ந்து ஈழம்/தமிழகம்/புகலிடம் எனப்பிரிப்பதில் உடன்பாடில்லை. அவர்கள் எவரும் உயர்ந்தவருமல்ல, நம்மில் எவரும் தாழ்ந்தவருமல்ல என்ற அடிப்படையிலேயே படைப்புக்களை தேர்ந்தெடுக்குக் கொள்கின்றேன்' என்று தனக்கான விளக்கத்தை எம்மிடம் கூறியிருமிருக்கின்றார். அவரளவில் அது நியாயமான கருத்தே. இவ்வாறாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தபின்னரோ என்னவோ அதிக ஈழத்து/புலம்பெயர் படைப்புக்கள் காலத்தில் வருகின்றன என்பதைச் சில நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அந்தளவில் செல்வத்தோடு நம் விமர்சனங்களை முன்வைத்து வெளிப்படையாக உரையாடலாம் என்பது மகிழ்ச்சியான விடயமே.

காலம் இதழின் ஒரு முக்கியமான விடயம் என்னவெனில் பல படைப்பாளிகளுக்கு சிறப்பிதழ் வெளியிடுவது. ஈழத்தின் ஆளுமைகளான ஏஜே கனகரத்தின, கா.சிவத்தம்பி, மாற்கு, மு.தளையசிங்கம், குமார் மூர்த்தி என்பபலருக்கு சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கின்றது. பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் படைப்பாளி என்றளவில் என்னைக் கவர்கின்ற அசோகமித்ரனுக்கும் அண்மையில் காலம் சிறப்பிதழ் வெளியிட்டுக் கெளரவப்படுத்தி இருக்கின்றது.

'காலம்' இதழ் போன்று அடிக்கடி வராமல் விட்டாலும், தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவா இணையாசிரியராகவும் கொண்டு 'கூர்' தொகுப்பு ஆண்டு இதழாக 2008ல் இருந்து வெளிவரத்தொடங்கியுள்ளது. இத்தொகுப்பு கனடாவிலிருக்கும் படைப்பாளிகள் மட்டும் எழுதுவதற்குரிய தொகுப்பு என்பது சிறப்பம்சமும், சிலவேளைகளில் மற்றொரு விதத்தில் பலவீனமாகவும் தெரியக்கூடும். அண்மைய வருடங்களில் 'கூர்' பல்வேறு துறைசார்ந்தவர்களின் படைப்புக்களைத் தாங்கி தனக்குரிய ஓர் அடையாளத்துடன் வெளிவரத் தொடங்கியுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.
  
ண்மையில் English Vinglish மற்றும் Barfi ஆகிய இரண்டு இந்திப் படங்களைப் பார்த்திருந்தேன். இங்கிலீஷ் விங்கிலீஷில் நீண்டநாளைக்குப் பிறகு சிறிதேவியின் வரவு என்பதால் அவரின் ஒருகாலத்தைய இரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இங்கிலீஷ் விங்கிலீஷ் கதையைப் போல நிறையக் கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன. அநேக புலம்பெயர் சமூகங்களுக்கு தொடக்க காலத்திலிருக்கும் மொழிப்பிரச்சினையே இப்படத்தின் கதைக்களம். அதை நகைச்சுவையாகக் கூறியிருக்கின்றார்கள் என்பதை விட விதந்துரைக்க வேறொன்றுமில்லை. இன்றைய வெள்ளையின அரசுக்கள் (இங்கிலாந்து/அமெரிக்கா/கனடா/அவுஸ்திரேலியா) தம் நாட்டுக்குப் புலம்பெயர்கின்றவர்களைக் கட்டுப்படுத்த தமது தேசிய மொழிகளில் பேசவும் எழுதவும் கூடியவராகவும் ஒருவர் இருக்கவேண்டும் என்கின்ற சட்டங்களை இறுக்கிக் கொண்டு வருகின்றதை நாமெல்லோரும் அறிந்திருப்போம். கனடா போன்ற நாடுகளுக்கு சனத்தொகை குறைவாக இருப்பதால், புதிய குடிவரவாளர்கள் அதன் பொருளாதாரத்திற்கு இன்றியமையாது தேவைப்படுகின்றனர். அதேசமயம் இங்கு பெரும்பான்மையாக வாழும் வெள்ளையினத்தவர்களுக்கு, இவ்வாறான குடிவரவாளர்களால் அவர்களின் வசதியான தொழில்கள் இல்லாமற் போகின்றது என்ற கற்பிதமான எண்ணமும் உண்டு. ஆனால் அரசுக்கு குடிவரவாளர்களும் தேவை அதேசமயம் இவ்வாறான வலதுசாரி சிந்தனையுள்ளவர்களைச் சமாளிக்கவும் வேண்டும். அவ்வாறான நிலையிலேயேதான் குடிவரவாளர்களுக்கான புதிய சட்டங்களை இந்நாடுகளில் இயற்றியபடி வருகின்றனர்.

இங்கிலிஷ் விங்கிலீஷ் ஆங்கில மொழி தெரியாமையை நகைச்சுவையாக்கினாலும் ஒரு புதிய மொழியை இயன்றால் கற்றுவிட முடியும் என்கின்ற நல்ல செய்தியைச் சொல்வதால் நாம் அதை வரவேற்கலாம். ஆனால் அதேசமயம் நகைச்சுவை என்றரீதியில் இப்படத்தில் ஆணாதிக்கத்தை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப் போல ஏற்றுவதைத்தான் சகிக்க முடியாதிருக்கின்றது. தனது மனைவிக்கு ஆங்கிலம் தெரியாதென்பதால் பொது இடங்களில் பிறரின் முன் தாழ்த்திப் பேசுகின்ற கணவர், அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தவுடன், இதுவரை காலமும் தான் செய்த எந்தத் தவற்றுக்கும் மன்னிப்புக் கேட்காமல் 'நீ என்னை (இன்னமும்) காதலிக்கின்றாயா?' எனக் கேட்டு எல்லாவற்றையும் மழுங்கடிப்படிப்பது என்பது ஒருபுறம். இன்னொரு புறம் ஆங்கிலம் கற்ற அவரது மனைவி மீண்டும் இந்தியா திரும்பும்போது, விமானத்தில் வாசிப்பதற்காய் ஆங்கிலப் பேப்பரைக் கேட்டுவிட்டு அதை மறைத்து இந்திப் பேப்பர் இருக்கிறதா எனத் திருத்திக் கேட்பது என்பதுஅவர் எப்படி இந்தியாவிலிருந்து புறப்படும்போது எப்படி இருந்தாரோ அவ்வாறே அவர் மீண்டும் பழைய நிலைக்குப் போகின்றார் என்பதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படியாயின் கணவரின் எல்லாப் பேச்சுக்களையும் கேட்டு ஒடுங்கிய மனைவியாகத்தான் ஒரு பெண் இருக்கவேண்டுமா என இந்தப்படம் நம்மிடம் கோருமா என்கின்ற கேள்வி எழும்புவதைத் தவிர்க்கவும் முடியவில்லை. இதனால்தான் சிலவேளைகளில் (நகைச்சுவை போன்ற) வேறு முலாம் பேசிக்கொண்டு வரும் படைப்புக்களில் நாம் கவனமாக இருக்கவேண்டியிருக்கின்றது. இந்தக் கணத்தில்தான் கமலின் மிக மோசமான திரைப்படமான 'உன்னைப் போல ஒருவன் (இந்திப்படமான A Wednesday ) எவ்வித சண்டைக்காட்சிகளுமில்லாததால் அது ஒரு முக்கிய படமென விதந்துரைத்த ஒரு படைப்பாளியின் கருத்து நினைவுக்கு வருகின்றது. அண்மைக்கால மற்றொரு உதாரணம் ஒரு குறிப்பிட்ட சாதியை விதந்துரைந்துக் கொண்டு வந்த படமான சுந்தரபாண்டியன் என்கின்ற தமிழ்ப்படம்.

Barfi படத்தைப் பார்க்கும்போது தமிழ்ச்சூழலில் இதைப் போல ஒரு திரைப்படம் வர  இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ எனதோன்றியது. அய்யோ இவ்வாறான படத்தை எடுத்தால் யார் பார்க்க வருவார், காசைத் தொலைக்கவேண்டி வருமே எனத்தான் உடனேயே தமிழ்ச்சூழலில் குரல்கள் எழும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் Barfi படத்தைக் கூட எல்லாவிதமான வணிகச் சமரசங்களோடுதான் சினிமாவாக எடுத்திருக்கின்றார்கள். ஆனால அதில் எந்த அலுப்பும் எம்மில் தொற்றவிடாது, தேவையற்ற காட்சிகளால் நெளியவிடாது, அழகாக எடுத்திருக்கின்றார்கள் என்பதுதான் முக்கிய விடயம். வாய் பேசவோ காது கேட்கவோ முடியாத ஒரு பாத்திரத்தையும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு பாத்திரத்தை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டு முழுநீளப்படத்தையும் எடுப்பதென்பது அவ்வளவு எளிதில்லை. படம் முடியும்வரை அதனோடு ஒன்றிப்போகச் செய்தது என்றால் அதனது திரைக்கதை வடிவம். திரைக்கதையின் முக்கியத்தைத் தமிழில் உணர்ந்தவர்கள் என்பது மிக அரிதானவர்களே. தமிழ்ச்சூழலில் அநேகர் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டுத்தான் திரைக்கதையை எழுதத் தொடங்குகின்றார்களோ என்பது அவர்களின் படங்களைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

சாதாரணப் படங்களில் வரும் முக்கோணக் காதல் தான் Barfi படத்தின் கதை. அதை எப்படி நெகிழ்ச்சியான சிற்சில தருணங்களால் கட்டி எழுப்புகின்றார்கள்  என்பதுதான் இப்படத்தின் சிறப்பு. இதுவரை பார்த்த எந்தப் படத்திலும் என்னைக் கவரவே செய்யாத இலீயானாவைக்கூட இப்படத்தில் பிடித்திருக்கின்றது என்றால் படத்தின் திரைக்கதையையும் அதன் இயக்குநனரையும் தான் பாராட்ட வேண்டும். பிரியங்கா சோப்ராவிற்கு இருக்கும் 'இமேஜிற்கு' அவர் இந்தப் படத்தில் ஏற்று நடிக்கும் பாத்திரத்தை தமிழில் நடிக்கும் நடிகைகள் அல்ல, கதாநாயகர்கள் முதலில் பார்த்துக் கற்கவேண்டும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிறு சிறு செய்கைகளைக் கூட பிரியங்கா அவ்வளவு தத்ரூபமாகக் கொண்டுவருகின்றார்.

நடைமுறையில் ஆட்டிசத்தால் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை மூன்ற மடங்களவில் பாதிப்படைகின்றனர் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறான திரைப்படங்களில் ஒரு விமர்சனமாக நான் நினைப்பது சிலவேளைகளில் ஆட்டிசம் போன்ற உக்கிரமான ஒரு பிரச்சினையை சற்று கூட அழகியல்படுத்தி அதன் உண்மைத்தன்மையை வலுவிழக்கச் செய்கிறதோ என்பது. எனெனில் ஆட்டிசத்திலேயே பல்வேறு நிலைகள் உள்ளன. எனவே சிலவேளைகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான மனோநிலையையும் அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் நாளாந்தம் அனுபவிக்கும் அல்லாடல்களையும் சிலவேளைகளில் அழகியல்படுத்தும் இவ்வாறான படங்களில் இல்லாமற் செய்துவிடுகின்ற அச்சம் எனக்குண்டு. எனினும் இவ்வாறான disorder னால் பாதிக்கப்பட்டவர்களும் நம்மைப் போன்ற சக மனிதர்களே என்கின்ற பார்வையை பொதுப்புத்தியில் ஏற்படுத்த  Barfi  போன்ற திரைப்படங்களை நாம் வரவேற்க வேண்டும். இப்படம் சிலவிடயங்களை சற்று அழகியல்படுத்துகிறதே தவிர அபத்தமாகவோ ஆபாசமாகவோ மாற்றுத்திறனாளிகளைச் சித்தரிக்கவில்லை என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

ண்மையில் 'உதவி' நிறுவனத்திற்காய் உதவுவதற்காய் ரொறண்டோவில் 'உதவி' பற்றிய அறிமுக விழாவும் சில புத்தங்களின் வெளியீடும் நடைபெற்றது. 'உதவி' அமைப்புப் பற்றிய விபரங்களை அவர்களின் இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம் (www.uthavi.net). 'உதவி' ஏன் உருவாக்கப்பட்டது?' என்பதற்கு அவர்கள் 'இலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும் குடும்ப உறுப்பினரை இழந்து, சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு உதவ 'உதவி' உருவாக்கப்பட்டுள்ளது.' எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். எப்போதும் பெரியளவிலேயே எதிர்பார்க்கும் தமிழ்ச்சமூகம் பெருந்தொகையாக இந்நிகழ்விற்கு சமூகமளிக்க இல்லையெனினும் அங்கே உரையாற்றியவர்களின் உரை சிறப்பாக இருந்தது.  இன்றைய மலையகத்தின் நிலைமைகள் (எவ்வாறு மலையகத் தமிழர்களின் சனத்தொகைச் செறிவு திட்டமிட்டுக் குறைக்கப்படுகின்றது, தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன) என்பது குறித்து புகைப்படங்களுடன் ஒரு உரையும் சேர்க்கப்பட்டிருந்தது. பொது ஊடகங்களாலும் தமிழ் பேசும் சமூகங்களாலும் அதிகம் கவனிக்கப்படாது கைவிடப்படுகின்ற மலையக மக்களின் நிலை -இலங்கையில் போர் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்ற காலத்தில் கூட- எவ்வித முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை என்பது நாம் அனைவரும் கவலை கொள்ளவேண்டிய  ஓர் விடயமாகும். 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிப்பளை என்னும் அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த கிராமத்திலிருந்து பல புத்தகங்களை - முக்கியமாய் மாணவர்களின் படைப்புக்களை- அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். நாமாக அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கூறுவதை விட அவர்கள் தங்கள் குரல்களிலேயே பேசியிருப்பது முக்கியமாய் இருந்தது. ஒரு பெரும் பயணத்திற்கு, முதல் காலடி என்பது எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே 'உதவி'க்கும் ஒரு சிறு விதை ரொறொன்டோவில் இந்நிகழ்வு மூலம் தூவப்பட்டிருக்கின்றது. விரும்பியவர்கள் இதனோடு இணைந்து பல்வேறு வழிகளில் உதவலாம். வளர்த்து எடுத்துக் கொள்ளலாம் அதற்கு இவ்வாறாக உதவும் மனப்பான்மையுள்ளவர்கள் ரொறொன்டோவில் மட்டுந்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. உலகில் எங்கிருந்தாலும் ஈழத்திலிருக்கும் சிறார்களுக்கு எவரும் 'உதவி' ஊடாக தம் பங்களிப்பைச் செய்யமுடியும்.

னடாவிலிருக்கும் மீராபாரதி 'பிரக்ஞை: ஓர் அறிமுகம்' என்கின்ற கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கின்றார். சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தத்தம் தனிமனித வாழ்விலிருந்தே அனைத்தையும் தொடங்கவேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்நூலில் கட்டுரைகள் பல எழுதபப்ட்டிருக்கின்றன. 'பிரக்ஞை'யை எப்படி மேற்குலகில் ஆய்வாளர்கள் பார்கின்றார்கள் என்பதை பல்வேறுபட்ட ஆளுமைகளின் கட்டுரைகளைத் தொகுத்து தனது கருத்துக்களை மீராபாரதி இந்நூலில் முன்வைக்கின்றார். ஒரு காலத்தில் தீவிர அரசியலில் ஈழத்திலும் புலம்பெயர்தேசத்திலிருந்து  முழுமையாக இயங்கி, எமது அரசியலில் தளங்களில் எங்கோ தவறிருக்கின்றதென்பதை உணர்ந்து பின்னர் அரசியலில் இருந்து விலகி, தன் சுயம் பற்றித் தொடங்கிய தேடலின் ஒருபகுதியாக இந்நூல் வெளிவந்திருக்கின்றதுஅவர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்ற மாதிரி அடுத்த நூலாக கீழைத்தேய பார்வையில் பிரக்ஞை குறித்து எழுதுவதை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அதுமட்டுமின்றி எவ்வாறு அவர் ஒருகாலத்தில் தீவிரமாக இயங்கிய கூட்டு அரசியலிலிருந்து விடுபட்டு இவ்வாறான தியானம், பிரக்ஞை போன்றவற்ற்குப் போனார் என்பதையும் இதன்மூலம் அவர் அடைந்த மற்றும் கற்றுக்கொள்கின்ற விடயங்கள் எவை என்பதையும் விரிவாகஎழுதவேண்டும்

அவர் கூறுகின்றபடி சமூக மாற்றமானது தனி மனித மாற்றத்திலிருந்து தொடங்காதவிடத்து எங்கோ ஓரிடத்தில் தேங்கித் தத்தளித்தபடியே இருக்கும் என்பது நாம் இன்றைய காலத்தில் பல்வேறு உதாரணங்களுடன் விளங்கிக் கொள்ள முடியும். எல்லாமே முடிவடைந்து ஒரு பாழ் சூழ்நிலையிலிருந்து எல்லாவற்றையும் மீண்டும் தொடங்க வேண்டியிருக்கின்ற ஈழத்தமிழ்ச் சமூகம், இவ்வாறான புதிய முயற்சிகளை - எவ்வித முன்முடிவுகளும் இல்லாது- கற்றுக்கொள்ளவோ தேடவோ செய்வது அவசியமாக இருக்கின்றது. புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும், பயணிக்கவும் விரும்பும் சமூகமாக நாம் மாறும்போது நாம் விரும்பிய மாற்றங்களையும் மாறுதலையும் என்றேனும் ஒருகாலத்தில் இழப்புக்களின்றி எளிதாய் அடையவும் கூடும்..


நன்றி: 'அம்ருதா' (மார்கழி)