கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காந்தி*

Saturday, December 22, 2012


-பேஸ்புக் குறிப்புகள் 01-

1.
காந்தி வளரிளம்பருவத்தினர் அநேகருக்குப் பிடிக்காதது போலவே எனக்கும் பிடிக்காது போயிருக்கின்றார். அதைவிட வேறு பல காரணங்களும் சேர்ந்து காந்தியைப் பிடிக்காது செய்திருக்கலாம் என்பதை இப்போது எம்டிஎமின் கட்டுரையை வாசிக்கும்போது தோன்றுகின்றது. உதாரணமாக காந்தியின் மீது பேரன்பு வைத்திருந்த எம்டிஎமின் ஆச்சியால் தெலுங்கு மாநிலப் பிரிப்புக்காய் உண்ணாவிரதம் இருந்த பொட்டி சிறிராமுலு அதன் நிமித்தம் இறந்துபோனதைத் தாங்கமுடியாது இருந்ததை எம்டிஎம் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறே என் சிறுவயதுகளில் மகாத்மாவின் தேசம் என்கின்ற இந்தியா, திலீபனை உண்ணாவிரதம் இருந்து இறக்கவிட்டிருந்ததை -தாங்க முடியாத- இந்தியாவின் மீதும் காந்தியின் மீதும் வெறுப்பின் ஒரு படிமமாக மாறிவிட்டிருக்கின்றது போலும். அகிம்சையை உலகிற்கு எடுத்தியம்பிய ஒரு நாடு நம்மை எல்லா வழிகளிலும் கைவிட்டிருந்தது என்பதை இயக்கங்கள் பல தோன்றிய 80களில் மட்டுமின்றி ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த 2009 வரை நாம் தெளிவாகவே கண்டுணர முடியும். மேலும் 50களிலிருந்து தொடங்கிய இனமுரண்களுக்கு முதலில் தமிழர் தரப்பு எடுத்துக்கொண்டது காந்தியின் அகிம்சையையும் சத்தியாக்கிரகத்தையுமே என்பதையும் நாமறிவோம். இயக்கங்களுக்கு ஒருகாலத்தில் அடித்தளமிட்டவையும் காந்திய வழியில் அமைக்கப்பட்ட காந்தியப்பண்ணைகள் என்பது இங்கே ஓர் உபகுறிப்பு. ஆக இவ்வாறாக காந்திய வழியில் இயன்றளவு (போராடியவர்களில் சுயநலத்தை இப்போதைக்கு ஒருபுறத்தில் வைத்தாலும்) முயற்சித்துப் பார்த்த ஈழப்போராட்டத்தின் வரலாற்றை அறிகின்ற 'காந்திய தேசம்' என்ன செய்திருக்கவேண்டும்? நிச்சயமாக பல இயக்கங்களைத் தனித்தனியே பிரித்து ஆயுதங்களை அள்ளி  மட்டும் வழங்கியிருக்காது என்பதை நாம் எதிர்பார்ப்போமா அல்லது மாட்டோமா? ஆனால் கடந்த காலத்தில் நடந்ததுதான் என்ன?

எம்டிஎமின் ஆச்சி கூறுவதைப் போல பொட்டி சிறிராமுலு காந்தி இருந்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார் என நம்புவதைப் போல திலீபன் விடயத்தில் (87ல்) காந்தியையே அல்லது அவரைச் சரியாகப் பின் தொடர்பவர் ஒருவர் இருந்திருந்தால் திலீபன் உட்பட நம் ஈழப்பிரச்சினை கூட ஏதோவொரு வகையில் தீர்த்துவைக்கபபட்டிருக்கலாம் என நம்புவதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. காந்தியின் பெயரை வைத்துக் கொண்டு பிறகு இந்திய அரசியல் அரியாசனங்களில் ஏறிய எவருக்கும் காந்தி ஒரு வெறும் பெயரே. இல்லாதுவிடின் இந்திரா காந்தி நம் இயக்கங்களுக்கும் எல்லாம் தாரளமாக ஆயுதங்கள் வழங்கி அனுப்பியிருக்கமாட்டார்.வேறு சுமூகமான வழிகளில் நம் மேல் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை  அல்லவா தீர்த்திருக்கவேண்டும். எனெனில் காந்தி ஒருபொழுதும் ஆயுதங்களை வழிபட்டவருமில்லை. ஆயுதங்களால் பிரச்சினைகளால் தீருமென்று எவருக்கும் போதித்தவருமில்லை.

2.
ரொறொண்டோவில் உயர்கல்லூரியை முடித்துவிட்டு இன்னொரு தூர நகருக்குப் பல்கலைக்கழகத்துப் போனபோது என் தோழி எனக்கு அன்பளிப்பாய்த் தந்தது காந்தியின் சத்திய சோதனை. அதனை அப்போதும் ஏன் இப்போதும் கூட முழுதாய்ப் படித்து முடிக்கவில்லை. இலக்கியம் மீது அவ்வளவு ஆர்வமில்லாதபோதும் என் தோழிக்கு சத்தியசோதனை முக்கிய நூலாக இருந்தது. காந்தி தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த ஒழுக்க விதிமுறைகள்/போராட்ட வழிமுறைகள் பல அவருக்கு வியப்பையும் மதிப்பையும் கொடுத்திருந்தது. பதின்ம வயதிலிருந்த அவருக்குக் காந்தி அன்றே எப்படிப் பிடித்துப்போயிருந்தார் என்பது இன்றும் எனக்கும் ஒரு வியப்பான விடயந்தான். அதே தோழி காந்தியை ஒரு மேன்மைமிக்க மனிதராக உரையாடியபோதெல்லாம் நான் மட்டுமில்லை எனது சகோதரர் கூட காந்தியின் மீது கடும் விமர்சனங்களை வைத்து அவரின் நம்பிக்கைகளை மாற்ற முயற்சித்தும் இருக்கின்றோம். அன்றைய காலத்தில் நான் அம்பேத்காரை வாசிக்கவேயில்லை. ஏன் அவரை அறிந்திருக்கவே இல்லை என்றுதான் நேர்மையாகக் கூறவேண்டும். ஆக அம்பேத்காரை வாசிப்பதால் வரும் காந்தி மீதான விமர்சனமாக அது இன்றைய காலத்தில் இருப்பதைப் போல  இருந்திருக்கச் சாத்தியமில்லை. அப்படியெனில் ஏன் காந்தியின் மீது இவ்வளவு கடும் வெறுப்பு வந்திருக்கும்? அது ஈழப்போராட்ட அரசியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதென நினைக்கிறது. காந்தியின் தேசம் என்கின்ற ஒரு நாடு 'அமைதிப் படை' என்கின்ற நாகரீகமான பெயரில் வந்து செய்து அட்டூழியங்களின் ஊடாக வந்த அனுபவங்களினூடு எழுப்பப்பட்ட கற்றலாக இருக்கலாம். 

பல்கலைக்கழகக் காலத்தில் மைக்கலோடு திண்ணை/பதிவுகள் இணையத்தளத்தினூடாக நட்பு ஏற்பட்டு எந்த விடயங்கள் குறித்தும் அவரோடு விவாதிக்கவும் கடுமையாகச் சர்ச்சிக்கவும் முடிந்திருந்தது. தனியே இலக்கியம் என்றில்லாது என்னைப் பல திசைகளில் நெறிப்படுத்தியவர் அவர். பெரியாரை மட்டுமில்லை, அயோத்திதாச பண்டிதர், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரை அவரே விரிவாக அறிமுகப்படுத்தியவர். நாம் ஒரேயொரு முறை நேரடியாகச் சந்தித்த நிகழ்விலும் (ஜெயமோகன் 200ல1ல் இங்கே வந்தபோது) எஸ்விஆரும் கீதாவும் தொகுத்த பெரியார்:சுயமரியாதை சமதர்மம் நூலை வாசிக்க மொன்றியலில் இருந்து கொண்டுவந்து தந்தவர். அது உட்பட உபபாண்டவம், ஜீரோ டிகிரி என பல நூற்களைத் தந்தவர் (இப்போதும் அவை அவருடன் திருப்பிக்கொடுக்காது என்னிடம் இருக்கின்றன). 

மைக்கல் நட்பில் நிமித்தம் அவர் எழுதிய/எழுதும் கதைகளை எனக்கும் அனுப்பிக் கொண்டிருப்பார். அப்படி அனுப்பிய ஒரு கதைதான் ''மகாத்மாவின் பொம்மைகள்'. எனக்குக் கதை பிடித்திருந்தாலும் கதையில் வரும் காந்தியை எனக்குப் பிடிக்காது என எழுத காந்தி பற்றிய உரையாடலாய் அது நீண்டிருந்தது. காந்தி மீது அம்பேத்கார் வைத்த விமர்சனங்களுக்கு அப்பால் காந்தி அந்தளவுக்கு வெறுக்க வேண்டிய மனிதர் அல்ல என காந்தியைப் பற்றி மைக்கல் சொன்னதாய் நினைவு. என்னைப் போல அன்றி மைக்கல் தன் வாழ்வில் ஒருபகுதியை ஈழப்போராட்டத்திற்காய் ஆயுத இயக்கமொன்றில் இணைந்திருந்தமையும், அவை கொடுத்த அனுபவங்களினூடு காந்தியை இன்னும் ஆழமாய் அவர் புரிந்திருக்கவும் கூடும் என இப்போது நினைக்கும்போது தோன்றுகின்றது. எனெனில் எனக்கு அப்போது காந்தி என் அரசியல் வெறுப்பின் படிமம். அதற்கப்பால் அவர் வேறு எதுவுமாய் இருந்ததில்லை.

ஆனால் மைக்கலோடு நடந்த உரையாடல், காந்தியைப் பிடிக்கவில்லை எனினும் அவரைப் பற்றி எழுதப்படுவதை முதலில் விலத்தாமல் படிக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தந்திருந்தது. அந்தவகையில் தமிழ்ச்சூழலில் காந்தியை மீள விமர்சனங்களோடு கொண்டு வந்திருந்த பிரேம், அ.மார்க்ஸின் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். காந்தி பற்றி சில ஆண்டுகளுக்கு முன் அணங்கில் பிரேம் X பொதியவெற்பன் நடத்திய விவாதம் கூட ஒருவகையில் முக்கியமானது. எந்த விடயம் பற்றியும் அறிமுகங்கள் சரியான ஒருவரிடம் இருந்து வராவிட்டால் அது மேலும் கற்பதைத் தடுத்துவிடும் என்பதற்கு ஜெயமோகன் ஓர் உதாரணம் என்பதால் அவரின் காந்தி பற்றிய கட்டுரைகளை அவ்வளவாய் வாசிக்க விரும்புவதில்லை. மேலும் காந்தியை மீளக்கண்டுபிடித்துத் தமிழ்ச்சூழலுக்குக் கொண்டுவந்தவர்கள் நிறப்பிரிகையோடோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்டவர்களே அன்றி ஜெயமோகனைப் போன்றவர்கள் அல்ல. ஆனால் யார் எவர் கூட ஒருவரைப் பற்றி எழுதுகின்றோரே அவரே முக்கியமானவர் ஆகிவிடுவதைப் போல ஜெயமோகந்தான் காந்தியை மீளக்கண்டுபிடித்ததுபோல விம்பம் இப்போது தமிழ்ச்சூழலில் வந்துவிட்டது.

ஆக, இன்னும் காந்தியை எவ்வாறு வாசித்துப் புரிந்துகொள்கிறேன் என தெளிவாகச் சொல்லமுடியாது. ஆனால் இன்றையபொழுதில் காந்தியை வெறுப்பின் அடையாளமாய்த் தூக்கியெறியாது அவரை ஒரு மாணவராய் வாசிக்க விரும்புகின்றேன் என மட்டுந்தான் கூறமுடியும்.

காந்தி என்கின்ற நிறையக் கனவுகளோடு இருந்த எளிய மனிதர் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் மீது வெறுப்பில்லை போலத்தான் இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. ஆனால் காந்தியைத் தம் தேச அடையாளமாக்கிவிட்டு அவரை எங்கோ தூக்கியெறிந்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு 'தேசம்' மீதுதான் என்னுடைய எல்லாப் பிணக்குப்பாடுகளும். 

இறுதியில் எம்டிஎம் இப்படித் தன் கட்டுரைய முடித்திருப்பார்.

“காந்தியையா சுட்டுக்கொன்றார்கள்? என்ன தேசம் உங்கள் இந்தியா?” என்று கேட்டார் ஒரு எத்தியோப்பிய இளம்பெண். எனக்கு அவமானத்திலும் சோகத்திலும் நாடி நரம்புகளெல்லாம் கூசி அடங்கிவிட்டது. “நாம் காந்தியை கொன்று இருக்கக்கூடாது” என்ற ரமேஷ்-பிரேதனின் கவிதை வரி நினைவுக்கு வந்தது.

என்னிடமும் ரமேஷ் - பிரேதனின் 'காந்தியைக் கொன்றது தவறுதான்' என்ற கவிதைத் தொகுப்பிருக்கின்றது. அதில் காந்தியைப் பற்றியே பத்திற்கு மேற்பட்ட கவனிக்கத்தக்க   கவிதைகள் இருக்கின்றன.

இந்தியா என்கின்ற (காலனித்துவத்தின் பின்னான) தேசத்தில் இருக்கின்ற எம்டிஎமிற்கோ அல்லது ரமேஷிற்கோ காந்தியைத் தாங்கள் கொன்றது என்பதில் துயரமும் இயலாமையும் இருப்பதைப் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் இந்திய தேசம் தன் தேச நலன்களுக்காய் அயல்நாடுகளை விளையாட்டுப் பொம்மைகளாக ஆக்குவதை, அங்கே நிகழும் அழிவுகளில் அகம் மகிழ்வதை அதன் அயல்நாடுகளில் ஒன்றான தீவு மனிதனான என்னைப் போன்ற பலர் நன்கறிவர். ஆகவே என்னைப் பொறுத்தவரை காந்தியை கொல்லப்படாமலிருக்கச் சந்தர்ப்பங்கள் குறைவாகவே இந்தியாவில் இருந்திருக்கும்.  எனெனில் காந்தி கனவு கண்ட ஒரு தேசத்திற்கு மாறாக இன்னொரு 'இந்தியா' அவர் காலத்திலேயே உருவாகிவிட்டிருந்திருக்கின்றது. ஆகவேதான் மோசமான காலனித்துவ ஆட்சியாளர் கூட கொல்லாமல் விட்டிருந்த காந்தியை அவர் தேசத்து நாட்டைச் சேர்ந்த ஒருவரால் கொன்றிருக்க முடிந்திருக்கின்றது. இவ்வாறு ஒரு காந்தியைக் கொன்றவர்களுக்கு பக்கத்து நாடுகளில் இருக்கும் மனிதர்களைக் கொல்லவோ அல்லது கொல்கின்றவர்களுக்கோ துணைபுரிவதற்கோ காந்தி ஒரு பொருட்டே அல்லத்தானே.

காந்தியைப் போன்ற ஒருவரையே கொல்கின்றவர்களின் நீட்சியில் அரசியல் செய்ய வருவோருக்கு, ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வது பெரிய விடயமே அல்ல. இந்தியா உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு எனச் சொல்லிச் சொல்லியே தாம் செய்யும் அட்டூழியங்களை மறைக்கும்போது காந்தியை அவர்கள் கொன்றிருக்காவிட்டால் -காந்தியின் அகிம்சையை கேள்வியே கேட்கமுடியாத படிமமாக்கி- இன்னும் எத்தனையோ எல்லாம் மறைத்திருப்பார்கள் என நினைக்கும்போது அச்சமாகவே இருக்க்கிறது. 

ஆக, உண்மையில் காந்தி எப்போதோ இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். இப்போது காந்தி ஒரு கடந்தகால அடையாளம் மட்டுமே. இல்லாவிட்டால் சில வாரங்களுக்கு முன் கசாப்பைக் கூட தூக்கிலிட்டிருக்கமாட்டார்களல்லவா?


(1) எம்.டி.எம்மின் கட்டுரை:http://mdmuthukumaraswamy.blogspot.ca/2012/11/blog-post_24.html
(2) மைக்கலின் 'மகாத்மாவின் பொம்மைகள்':http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=10203241&format=print&edition_id=20020324 

Saturday, November 24, 2012 at 1:04pm

* 'காந்தியைக் கொன்றது சரிதான்' என்றுதான் பேஸ்புக் குறிப்பில் தலைப்பிட்டிருந்தேன். எம்டிஎம்மின் விருப்புப்படி தலைப்பை மாற்றியிருக்கின்றேன்.

0 comments: