இவனைப் போன்ற ஆண்களை புதுக்குடியிருப்புப் பக்கமாய் இருந்த
ஓர் அரசறிவியல் கல்லூரியில்தான் தங்க வைத்திருந்தார்கள். பெடியள் பல இடங்களுக்கு
இவர்களைக் கூட்டிச் சென்றார்கள். பல்வேறுமட்டங்களில் இருந்தவர்களைச் சந்திக்க
வைத்தார்கள். வந்திருந்த மாணவர்களில் பலருக்கு இயக்கத்தைப் பற்றி நிறைய
அறிய ஆர்வம் இருந்தது. நிறையக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருதார்கள். இவனுக்கு
அப்படியொரு நெருக்கம் வரவில்லை, ஆனால் எல்லாவற்றையும் உற்று அவதானித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் முகமாலை முன்னணிக் காவலரண்களுக்கு கூட்டிச் சென்றார்கள். பெரிய பெரிய
பண்ட்கள் கிலோமீற்றர்
கணக்கில்
நீண்டு கிடந்தன. அந்தப் பெரிய பண்ட்களை இணைத்து ஒருவர் ஊர்ந்துகொண்டு போவதற்கான
அளவில் பங்கர்கள் வெட்டப்பட்டிருந்தன. பெண்பிள்ளைகள்தான் அந்தக் காவலரண்களில்
நின்றார்கள். அதைச் சுற்றி சின்னச் சின்னதாய் பூக்கன்றுகளை ஏற்கனவே விழுந்து
வெடித்த செல்லின் கோதுகளில் நட்டிருந்தார்கள்.
சிலவற்றில் மஞ்சளும் சிவப்புமாய் பூக்களும் அரும்புகளும் நிறைந்தும் இருந்தன.
இராணுவத்திற்கு இயக்கத்தின் நடமாட்டங்களையும்
மற்றும் காவலரண்களையும் மறைக்க என, இவை எல்லாவற்றுக்கு முன்னால் பனையோலைகளால்
செய்த நீண்ட வேலி உருமறைப்புச் செய்து கொண்டிருந்தது. அதேபோன்று இராணுவத்தின்
நடமாட்டங்களைக் கவனிக்க என, பரண் மாதிரி சில இடங்களில் அமைத்தும் இருந்தனர்.
அவை பனையோலை வேலியை தொட்டும் தொடாத உயரத்தில் இருந்தன. அப்போது முகமாலைக்கு
பொறுப்பாய் இருந்த கேணல் ..... பனையோலையைப்
பிரித்து முன்னே இவர்களைக் கூட்டிச் சென்றார். இவனுக்கு இப்படிப் போனால், மற்றப் பக்கமிருக்கிற
ஆமி தப்பித் தவறித் தங்களைச் சுட்டுவிடாதோ என்ற பயம் வந்தது. மறுபுறத்தில்
ஆமியும் தகரத்தால் தங்களை உருமறைப்புச் செய்திருந்தது. ஆனால் ஆமிக்காரர்களும்
பயமின்றி நடமாடிக்கொண்டிருந்தது தெரிந்தது. இவன், தான் ஏதோ நோர்வேயிலிருந்தோ
ஜப்பானிலிருந்தோ வந்த சமாதானத் தூதர் போன்ற நினைப்பில் ஆமியை நோக்கிக் கையை
அசைத்து தனது நல்லெண்ணத்தைத் தெரிவித்தான்.
அந்தக் காலப்பகுதியிலேயே
விக்கி இவனுக்கு அங்கே அறிமுகமானான். விக்கி பிறந்தது வளர்ந்தது எல்லாம் வெளிநாடொன்றில்.
தமிழில் ஒரு வார்த்தை முழுதாய்ப் பேசுவதற்கே மிகவும் கஷ்டப்படுவான். எப்படி
உனக்கு வன்னிக்கு வருவதற்கு ஆர்வம் வந்ததென இவன் கேட்டான். தனக்கு இலங்கையைப்
பார்ப்பதென்பது நெடுநாள் ஆசை என்றும், அப்படி கொழும்பில் வந்துநின்றபோதுதான் பெடியள்
வெளிநாட்டு மாணவர்களுக்கென இப்படியொரு சிறப்பு நிகழ்வு செய்வதை அறிந்து வந்தேன்
எனவும் விக்கி கூறினான். கொஞ்ச நாட்களிலேயே விக்கியும் இவனும் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள்.
அதேவேளை வெளியில் போகாத
நேரம் தவிர, விக்கி ஒருவித மர்மமாய்த்தான் உள்ளே திரிவான். எல்லாவற்றையும் நின்று
நிதானித்து பொறுமையாய் ஆராய்ந்து கொண்டிருப்பான். சிலவேளைகளில் வன்னிக்கு முதன்முதலில்
விக்கி வந்திருப்பதால் அவனுக்கு எல்லாம் புதிய விடயங்களாய்த் தெரிவதால்தான்
இப்படி இருக்கின்றான் என இவனும் எண்ணிக்கொள்வான். ஆனால் விக்கி அடிக்கடி
தான் கொண்டுவந்திருந்த பையைத் திறந்து பார்ப்பதும் இவனைப் போன்ற யாராவது அருகில்
வருவதாகத் தெரிந்தால், உடனேயே பையை மூடிவிடுபவனாகவும் இருப்பது ஏன் என்று இவனால்
விளங்கிக்கொள்ள முடியவில்லை. வெளியில் போகும் நேரத்தில் கூட தனது இரண்டு பயணப்பைகளையும்
நன்கு இழுத்துப் பூட்டிவிட்டு திறப்பையும் தன்னோடே அவன் கொண்டுவருவான்.
ஒருநாள் பெடியள் தம்
நாளாந்த வாழ்வு எப்படியிருக்குமெனக் காட்டப்போகின்றோம் எனக்கூறி அடுத்தநாள் எல்லோரும்
விடிகாலை 5.00 மணிக்கு எழும்பி மைதானத்திற்கு வரவேண்டும் என்றனர். சொன்னதுபோலவே
அடுத்த நாள் 5.00 மணிக்கு விசிலடித்து எல்லோரையும் எழுப்பினார்கள். இவன் தூக்கக்
கலக்கத்தோடு பல்லும் மினுக்காமல் மைதானத்திற்கு அரக்கப் பறக்கப் போனான்.
உங்களுக்கு உடற்பயிற்சி சொல்லித்தரப்போகின்றோம் முதலில் இப்படியே ஒழுங்கைகளுக்குள்ளால்
ஐந்து கிலோமீற்றர் ஓடவேண்டும் என்றார்கள். இவனுக்கு இந்த வெள்ளனவே இப்படி ஓடவேண்டியிருக்கிறதென
ஒரே எரிச்சலாயிருந்தது. மறுபக்கம் பார்த்தல் மினி போன்றபெண்கள் விட்டால் இப்படி
ஐந்து கிலோமீற்றர் ஓடிவிட்டு, கடலுக்குள்ளும் இன்னும் ஐந்து கிலோமீற்றர் நீத்திவிடுவோம்
போன்ற உற்சாகத்தோடு இருந்தார்கள். இந்த நிலையில் தன்னால் ஓட ஏலாது என்றால் பெரிய அவமானமாய்ப்
போய்விடும் என்பது இவனுக்கு நன்கு விளங்கியது. முதலில் பெண்கள் அணி ஓடத்தொடங்கியது.
அவர்கள் போய் 1/2 மணித்தியாலத்திற்குப் பிறகுதான் ஆண்கள் அணி ஓடத்தொடங்கியது.
உடனேயே ஆண்களைப் பெண்களுக்குப் பின்னே ஓட விட்டால் ஓடுகின்ற பெண்களோடு அவர்கள்
சேட்டை விடக்கூடும் என்ற முற்கூட்டிய பாதுகாப்பு உணர்வே இதற்குக் காரணம். சும்மா
சொல்லக்கூடாது வெளிநாடு போனாலும் ஆண்கள் எப்பவும் ஆண்கள் என்பதைச் சரியாகவே இயக்கம் விளங்கி வைத்திருந்திருக்கிறது.
இவனும் ஓடத்தொடங்கினான்.
இவனோடு ஓடிய மற்ற ஆண்கள் எல்லோரும் நல்ல திடகாத்திரமாய் இருந்தார்கள். காற்றைக்
கிழித்துக் கொண்டு போவது போல ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலவேளை முன்னே ஓடும் பெண்களைப்
பிடித்துவிடும் எண்ணம் அவர்களுக்கு ஓடிற்றோ தெரியாது. இவன் மட்டுமே மூசி மூசி
தனியே கடைசியாக ஓடிக்கொண்டிருந்தான். ஓடுவது ஒரு துன்பமாக இருந்ததென்றால், இன்னொரு
பக்கம் வீடுகளுக்குள் இருந்த நாய்களெல்லாம் ஒழுங்கைக்குள் வந்து இவனை துரத்தத்
தொடங்கியது வேறொரு சித்திரவதையாக இருந்தது. இடையில் எங்கேயாவது குறுக்கு வழி
எடுத்து மீண்டும் தான் நின்ற அரசறிவியல் கூடத்திற்குப் போகலாம் என்றாலும் போய்ச்சேருவதற்கான
திசை ஒன்றுமாய்ப் புரியவில்லை. இவனுக்கு அந்த நேரத்திலும் மினியின் தந்தையார்தான்
தன்னை நுட்பமாய் இப்படி பழிவாங்குகிறார் என்ற நினைப்பு மேலெழுந்து, அவரை நாய்களுக்கு
மேலால் ஆத்திரத்தோடு மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தான்.
முதல்நாள் பெற்ற அனுபவத்தால்
அடுத்த நாள் விசில் அடித்து எழுப்பியபோதும் தெரியாதமாதிரி போர்வைப் போர்த்திக்கொண்டு
சத்தம் போடாமல் இருந்துவிட்டான். இவன் ஓட வரவில்லை என்று தெரிந்தும் பெடியள்
எவரும் வந்து இவனை எழுப்பவும் இல்லை. மினி இவன் வேண்டுமென்றுதான் ஓடுவதைத் தவிர்க்கிறான்
என்று அறிந்தால் கோபப்படத்தான் செய்வாள்.
ஆனால் அதற்காய் நாய்களிடம் கடி வாங்க இவன் தயாராகவில்லை.
விசில் சத்தமும் காலடிச்
சத்தங்களும் மெல்ல மெல்லமாகத் தேய்ந்து கொண்டிருக்க, இவன் தன் எட்டோ ஒன்பதோ
வயதுகளில் அறிந்த ஒரு விசில் கதையை நினைத்துச் சிரித்துக்கொண்டான். ஒரு பாடசாலையில்
ஒரு குழப்படிக்கார மூன்றாம் வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் படிப்பிக்கும்
ஆசிரியரை இந்தப் பையங்கள் வகுப்பை ஒழுங்கநடத்த விடாது குழப்பிக் கொண்டேயிருப்பார்கள்.
வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போதே ஒவ்வொருத்தராய் எழுந்து ரீச்சர் ஒண்ணுக்கு போக
வேண்டும், மூத்திரம் பெய்யப் போகிறேன் எனக் குழப்பிக் கொண்டிருப்பார்களாம். ஒருநாள்
ரீச்சர் வகுப்பில் எப்படிப் படிப்பிக்கின்றார் என்று பரிசோதிக்க கல்வித் திணைக்களத்திலிருந்து
அதிகாரிகள் வந்திருக்கின்றார்கள். பிள்ளைகள் எல்லாம் நான் ஒண்ணுக்கு இருக்கப்போகிறேன்
என்றெல்லாம் வழமை போலக் கேட்டுக் குழப்ப ஆசிரியருக்கு சரியான அவமானமாகப்
போய்விட்டது.இவர்களை எப்படித் திருத்தலாம் என்று யோசித்த ஆசிரியர் தனக்குத்
தெரிந்த இடக்கரடக்கல் முறையைப் பாவித்திருக்கின்றார். இனி இப்படி வெளிப்படியாக
எல்லாம் கேட்கக்கூடாது சிறுநீர் கழிக்கப்போவதாய் இருந்தால், என்னிடம் 'விசில்
அடிக்கப் போகிறேன்' எனக்கூறுங்கள். எனக்கு அதன் உள்ளர்த்தம் விளங்கும், எனவே
உங்களை பாத்ரூமிற்கு போக அனுமதி தருவேன் எனக் கூறியிருக்கின்றார். அதன் பிறகு
அந்த வகுப்பிலிருந்த பிள்ளைகளும் விசில் அடிக்கப் போகிறேன் எனச் சொல்லிப் போவார்களாம்.
ஒருநாள் இந்த வகுப்பிலிருந்த பையன் ஒருவன் தன் வீட்டில் நள்ளிரவு நித்திரையில்
எழும்பி தான் விசிலடிக்கப் போகின்றேன், என்னை வெளியில் கூட்டிச் செல்லுங்கள் எனக்
கேட்டிருக்கின்றான். அவனின் தந்தையாரோ, இப்படி இரவில் விசிலடிக்கக் கூடாது, பிறகு
சத்தத்தில் பாம்பு, பூச்சி எல்லாம் வீட்டுக்குள் வந்துவிடும். வேண்டுமென்றால் நாளை
காலையில் விசிலடிக்கலாம் என்று கூறியிருக்கின்றார். ஆனான் பையன் நான் இப்பவே விசிலடிக்க
வேண்டும் என்று அடம்பிடித்திருக்கின்றான். இப்படியே இவனை விட்டால் இவன் தன்னைத்
தூங்கவே விடமாட்டான் என்பதை விளங்கிய தகப்பன் இறுதியாகச் சொன்னார், சரி விசிலடிக்கப்
போகின்றாய் என்றால் வெளியில் போய் விசிலடிக்க வேண்டாம். வேண்டும் என்றால் என் காதடிக்கு
வந்து மெல்லமாய் விசிலடி என்றிருக்கின்றார். இவனுக்கு இப்பவும் அந்தக் கதையை
நினைக்கச் சிரிப்பு சிரிப்பாய் வந்தது. சத்தமாய்ச் சிரித்தால் தான் படுத்திருப்பதைக்
காட்டிக்கொடுத்துவிடும் என்பதற்காய் கஷ்டப்பட்டுத் தன் சிரிப்பை அடக்க முயன்றுகொண்டிருந்தான்.
எல்லா அமளியும் ஓயந்தபோது
போர்வைக்குள் இருந்து மெல்லத் தன் தலையை வெளியே எடுத்துப் பார்த்தான். இவனைப் போலவே
விக்கியும் விடிய எழும்பி ஓடப்போகவில்லை என்பதை அவன் படுத்திருந்த பகுதியில்
கேட்ட சத்தத்தை வைத்துத் தெரிந்தது. ஆனால் விக்கி எதையோ கட்டிலில் விரித்து வைத்தபடி
பேனையால் குறித்துக் கொண்டிருந்தது இவனுக்குத் தெரிந்தது. விக்கி இவனுக்கு முதுகுப்புறத்தைக்
காட்டிக்கொண்டு மற்றக் குடிலில் இருந்ததால் நல்லவேளையாக இவனை விக்கி பார்க்கவில்லை.
பிறகு தன் தோள்பையில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டு சற்றுத் தள்ளியிருந்த
பாத்ரூமிற்கு நடந்து போகத் தொடங்கினான். எல்லோரும் ஓடப்போய்விட்டார்கள் என்ற
நினைப்பில் விக்கி, பையின் சிப்பை சும்மா இழுத்துப் பூட்டிவிட்டு வழமையாகப் போடும்
கொளுவியைப் போட்டு பூட்டாமல் போயிருந்தான்.
விக்கி என்ன செய்துகொண்டிருக்கின்றான்
எனக் கையும் மெய்யுமாகப் பிடிக்க இதுதான் தருணம் என எண்ணி, இவன் ஓடிப்போய் விக்கியின்
பையைத் திறந்து பார்த்தான். உடுப்புகளுக்கு மேலே ஒரு விரிவான வன்னி மாவட்டத்தின்
வரைபடம் இருந்தது. சின்னச் சின்ன ஊர்களின் பெயர்கள் கூட அவ்வரைபடத்தில்
துல்லியமாய் இருந்தன. அதில் சில இடங்கள் சிவப்புப் புள்ளியில் குறிக்கப்பட்டிருந்தன.
விக்கி சாதாரண ஆளல்ல ஏதோவொரு பெரும் திட்டத்தோடுதான் வன்னிக்குள் வந்திருக்கின்றான்
என்பது இப்போது இவனுக்குத் விளங்கிவிட்டது. வேறு ஏதாவது தடயங்கள் பையின் அடியில்
இருக்கிறதா என் இவன் தேடிப் பார்க்க இன்னும் ஓர் அதிர்ச்சியாக விடயத்தைக் கண்டுபிடித்தான்.
ஒரு முழம் அளவு நீளத்துக்கு கத்தியொன்று அடிப்பாகத்தில் இருந்தது. ஆனால் அது
சற்றுத் துருப்பேறி பழைய கத்தி போலத் தெரிந்தது. இப்போது தெளிவாக எல்லாம் இவனுக்குப்
புரிந்துவிட்டது. விக்கி ஒரு உளவாளியேதான். வரைபடம் மட்டும் இல்லாது கத்தியும்
வைத்திருப்பதால் பெடியளிலை யாராவது பெரிய தலையை போட்டுத்தள்ளும் திட்டத்தோடு
வந்திருக்கின்றான் என்பதும் விளங்கிவிட்டது. விக்கி வருவதற்குள் எல்லாவற்றையும் முன்பு இருந்தமாதிரி அடுக்கிவைத்துவிட்டு, பையின்
சிப்பையும் மூடிவிட்டு சத்தம் போடாது இவன்
வந்து படுத்துவிட்டான். விக்கி எப்போதும் திரும்பிவரக் கூடும். தான் அவசரப்பட்டு
எதையாவது செய்துவிட்டால் ஒருவேளை விக்கி தப்பி ஓடியும் விடுவான், ஆறுதலாக அவனை
மடக்கிப் பிடிக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான். .
சற்று நேரத்துக்குப்பின் எதுவுமே தெரியாது போல படுக்கையிலிருந்து இவன்
எழும்பினான். விக்கி அதற்குள் குளித்துவிட்டு வந்திருந்தான். 'என்ன விக்கி நீ ஓடப்போகவில்லையா
என அப்போதுதான் விக்கியைப் பார்த்தவன்போல முகத்தை வைத்தபடி இவன் கேட்டான்.
'I don’t feel well யென விக்கி கூற 'same here' எனக் கூறிக்கொண்டு இவன் விக்கிக்கு அருகில் போனான். உடனே விக்கி கையில் வைத்து அதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஒரு படத்தை சட்டென்று படுக்கைக்கு கீழே மறைப்பதை இவன் கண்டான். இந்தப் படத்தில் இருப்பவரைத்தான் விக்கி போட்டுத்தள்ள இருக்கின்றான் போல என இவன் எண்ணிக் கொண்டான். ஏற்கனவே வன்னிக்குள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் குழுக்கள் நுழைந்து இயக்கத்தில் பல பேரைப் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்ததும் இவனுக்கு நினைவுக்கு வந்தது.
'I don’t feel well யென விக்கி கூற 'same here' எனக் கூறிக்கொண்டு இவன் விக்கிக்கு அருகில் போனான். உடனே விக்கி கையில் வைத்து அதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஒரு படத்தை சட்டென்று படுக்கைக்கு கீழே மறைப்பதை இவன் கண்டான். இந்தப் படத்தில் இருப்பவரைத்தான் விக்கி போட்டுத்தள்ள இருக்கின்றான் போல என இவன் எண்ணிக் கொண்டான். ஏற்கனவே வன்னிக்குள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் குழுக்கள் நுழைந்து இயக்கத்தில் பல பேரைப் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்ததும் இவனுக்கு நினைவுக்கு வந்தது.
விடிகாலையில் ஓடப்போனவர்களுடன் துணைக்குப் போன இயக்கப் பெடியங்களுக்கு
இந்தவிடயத்தை உடனடியாகக் தெரிவிக்க வேண்டும் என இவனது மனம் பரபரத்தது.
இயக்கம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டுதானே எல்லோரையும் பரிசோதிக்கும்,
அப்படியிருந்தும் எப்படி விக்கியால் கத்தியோடு உள்ளே வன்னிக்குள் உள்ளே நுழையமுடிந்தது
என இவன் யோசித்துப் பார்த்தான். கத்தியையே இப்படி தன்னோடு கூடக் காவிக்கொண்டு
திரிகின்றவன், பிஸ்ரல் மாதிரி சத்தமின்றி வேலை முடிக்கும் சாமான்களையும் எங்கேயாவது
ஒளித்து வைத்துத் திரியக்கூடும் என இவனது மனம் கணக்குப் போட்டது.
வெளிநாட்டில் எவனெவன் எவ்வளவு காசு கொடுக்கிறான் என்பது பற்றி இயக்கம்
எடுக்கும் கவனத்தில் ஒரு வீதம் கூட, வன்னிக்குள் யார் யார் நுழைகின்றார்கள்
என்றறிய எடுப்பதில்லையெனவும் அந்தவேளையில் அலுத்துக்கொண்டான். அப்படியே கவனம் எடுத்தால் கூட விக்கிக்கு அதில்
எப்படி மண்ணைத்து தூவி விட்டு வருவதெனத் தெரியுந்தானே. எனெனில் விக்கியே ஒரு உளவாளி,
ஆகவே வரும்போதே எப்படி வன்னிக்குள்ளேயிருந்தது வேலை செய்வது என தீவிரமாய்ப்
பயிற்சியெடுத்து, நன்கு திட்டமிட்டுத்தானே வந்திருப்பான் எனவும் ஒரு காரணத்தைத் தனக்குள்
இவன் உருவாக்கிக்கொண்டான். இப்படி இயக்கத்தையே
நுட்பமாய் ஏமாற்றி வந்த விக்கியைத் தான் கையும் மெய்யுமாய்க் கண்டுபிடித்துவிட்டேன்
என்பதையெண்ணி
இவனுக்குச் சற்றுப் பெருமிதம் வந்திருந்தது..
இந்தச் சிக்கலான பிரச்சினையை எப்படிக் கையாளுவது என்று யோசிக்கும்போதுதான் இவனுக்குள் இன்னொரு எண்ணமும் ஓடத்தொடங்கியது. நான் இப்போது
விக்கி ஓர் உளவாளி என்று இயக்கத்திடம் பிடித்துக் கொடுத்தால் இயக்கம் அவனை இன்னும்
தீவிர விசாரிக்கும். விக்கிக்கு நெருக்கமாய் இருந்தது அடுத்தது யார் என்று பார்த்தால்
இவன் தான் முதலிடத்தில்
இருப்பான். கடைசியில் இயக்கம் தன்னையும் சந்தேகித்து பங்கருக்குள்
போடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விக்கி தான் தப்பவேண்டும் என்பதற்காய்
எதையாவது புதுக்கதை கூறி தன்னை மாட்டிவிட்டாலும் விடக்கூடும். விக்கி ஓர் உளவாளி
அவன் எதையும் திறமையாய்த்தான் செய்வான் என்று நினைத்தும் இவன் இன்னும் குழம்பத் தொடங்கினான். மேலும் கிழக்கு மாகாணத்திலை ......... பிரிந்தன் பிறகு யார் தங்கடை ஆள், யார் வெளியாள் என்று தெரியாது இயக்கமே
அந்தரித்துக் கொண்டிருக்கும்போது, சற்று சந்தேகம் வந்தாலே தன்னையும் நிச்சயம்
இயக்கம் பங்கருக்குள் போடத்தான் செய்யும் என்ற பீதி இவனுக்குள் வழிந்தோடத் தொடங்கியது.
இதற்கெல்லாம் ஒரேயொரு தெளிவான வழி, விக்கியைக் காட்டிக் கொடுக்காமல் வன்னிக்குள் இருந்து
தான் தப்பி ஓடுவதுதான் என இவன் முடிவு செய்தான். அன்றைக்கு மத்தியானம் சேர்ந்து
சாப்பிடும்போது மினியிடம் 'எனக்கு மூச்சிழுப்பது சரியாய்க் கஷ்டமாயிருக்கிறது வன்னி வெயில் ஒத்துவரவில்லைப் போல, நாங்கள் நாளைக்கே கொழும்புக்குப் போவோம்' எனச்
சொன்னான். 'இன்னும் ஒருவாரம் பெடியளோடு நின்றுவிட்டுப் போவோம், கொஞ்சம் சமாளியுங்களேன்,
ப்ளீஸ்...!' என மினி இவனிடம் கெஞ்சினாள். கொஞ்சம் விட்டால் இவளே தன்னைப் பெடியளிடம்
பிடித்துக் கொண்டுவிடுவாள் போலிருக்கிறதே என்று இவனுக்குள் சிந்தனை ஓடியது. 'என்னாலை
முடியாது. இன்னும் ஒரு வாரம் நான் இங்கே இருந்தேன் என்றால் என்னைப் பிறகு சவப்பெட்டிக்குள்தான்
வைத்துக் கொண்டுதான் போக வேண்டியிருக்கும். அதுதான் உமக்கு விருப்பம் என்றால் நீர்
வன்னிக்குள் நில்லும், நான் நாளைக்கே வெளிக்கிடப் போகிறேன்' என்று இவன் கறாராகக்
கூறிவிட்டான்.
அடுத்த நாள் காலை மினி எல்லோரிடமும் அரை மனதோடு விடைபெற்றுக் கொண்டாள்.
இவன் மிகவும் கஷ்டப்பட்டுத் தன்னை ஒரு நோயாளி போலக் காட்டிக்கொண்டான். ஓமந்தை
தாண்டிப் போகும்வரை, இயக்கம் பின்னாலை வந்து தன் தோளில் கைவைத்து கைது செய்துவிடும்
என்ற கலக்கத்தோடே போய்க்கொண்டிருந்தான். கொழும்புக்குப் போய்ச் சேர்ந்ததும், முதல்
தாங்கள் நின்ற ஹொட்டலில் நிற்காமல் வேறு ஒரு ஹொட்டலில் மினியோடு போய்த் தங்கினான்.
பிறகு இவன் ஆறுதலாக இருந்து யோசித்தபோதுதான் விக்கியோடு நட்பாக இருந்த நாட்களில்,
வன்னியை விட்டு வந்ததன்பிறகு தொடர்புகொள்ள என தன் தொலைபேசி எண், மின்னஞ்சல்
முகவரி எல்லாம் கொடுத்தது இவனுக்கு நினைவு வந்தது. விக்கியைத் தப்பித் தவறி
இயக்கம் பிடித்தால், தனக்கும் விக்கியிற்கும் தொடர்பு இருக்கிறது பற்றிய விபரம்
எல்லாம் பெடியளுக்கும் தெரிந்துவிடும். தான் இடையில் வன்னியை விட்டு வந்ததோடு அதையும்
தொடர்புபடுத்திப் பார்த்தால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும் என்பதும் இவனுக்குப்
புரிந்தது. புதுவை 'பெடியள் கட்டிலுக்கு கீழேயும் இருப்பான்கள்' என்று சொன்ன கவிதையும்
இடையில் நினைவுக்கு வந்து இவனை பயமுறுத்திக் கொண்டிருந்தது.
ஒன்றரை மாதத்திற்கென திட்டமிட்ட இலங்கைப் பயணத்தை இவன் ஒன்றரை வாரத்திலேயே
முடித்துக்கொண்டு போவோம் என மினியைக் கட்டாயப்படுத்தினான். கொழும்பை விட்டு கனடா
புறப்படுவதற்கு முன்னர், பெடியள் தன்னைத் தேடி வர முன்னர், தானே பெடியளிடம்
நிரபராதியெனக் கூறிச் சரணடைந்துவிடுவோம் எனத் தீர்மானித்து, தான் சந்தித்த
............................அண்ணவை நந்தவனத்தில் முன் இருந்த தொலைபேசி நிலையத்தினூடு தொடர்புகொண்டான்.
அவர் லைனுக்கு வந்தபோது, 'அண்ணை, வன்னியைப் பார்க்க வந்த மாணவர்களில் விக்கி
என்பவர் ஒரு உளவாளி போலத் தெரிகிறது, மப், கத்தி எல்லாம் பாக்கிற்குள் வைத்துத்
கொண்டு ஒருபோக்க்காய்த் திரிகிறார். ஒருக்காய் அவரை இயக்கத்தை விட்டு விசாரிக்கச்
சொல்லுங்கோ' என தான் பார்த்த அனைத்தையும் ஒன்றுவிடாது அவரிடம் இவன் விபரமாய்க்
கூறினான். இறுதியாய், 'அண்ணை விக்கியிடம் எனக்கு எந்தத் தொடர்புமில்லை. வன்னிக்குள்தான்
முதன்முதலில் அவனைச் சந்தித்தனான்' என்பதையும் அழுத்தம் திருத்தமாய்க் கூறினான்.
அதற்கு அவரும் 'தம்பி, நீங்கள் .... மாஸ்ரருக்கு வேண்டியவர். உங்களையெல்லாம்
நாங்கள் சந்தேகப்பட மாட்டோம். எப்படி இப்ப அஸ்மா இருக்கிறது? கவனமாக உங்கள்
உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார்.
ஆனால் இப்படி நடந்தது பற்றியோ, ........ அண்ணாவுடன் தொலைபேசியில் கதைத்தது
பற்றியோ மினியிடம் எதுவும் கூறாமல் இவன்
கவனமாக மறைத்துக்கொண்டாள். இயக்கத்தின் மீது அதீதப் பற்றிருக்கும் மினி,
'இந்தச் சின்ன விசயத்திற்கா இப்படிப் பெரும் நாடகமாடினீர்கள்' எனக்கூறி விட்டு
தன்னைத் திரும்பவும் வன்னிக்குள் கூட்டிச் சென்றாலும் சென்றுவிடுவாள் என்ற பயம் தான் இதைச் சொல்லாததற்கான காரணம். இவளுக்கெங்கே இயக்கத்தைப்
பற்றி முழுதாய்த் தெரியப்போகிறது, இவ்வாறான விடயங்களை இயக்கம் எப்படி நாசூக்காய்
கையாளும் என்பதை இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்த எனக்குத் தெரியாதா
என்ன? என இவன் தனக்குள்
சொல்லியும் கொண்டான்.
இவன் இலங்கைக்குப் போய்வந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கும். ஒருநாள்
விக்கி என்ற பெயருடன் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இவனுக்கு அதைப் பார்த்தபோது
ஆச்சரியமாயிருந்தது. எப்படியோ விக்கி இயக்கத்தைச் சுழித்துத் தப்பிவிட்டான்
என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. கடிதத்தில் 'தன்னை நினைவிருக்கிறதா?'
என்று கேட்டுவிட்டு மேலோட்டமாய் சில விடயங்களை விக்கி அதில் எழுதியிருந்தான்.
இவனுக்குள் ஓர் உளவாளியான விக்கி எப்படித் தப்பினான் என்றறியும் ஆவல் எழத்தொடங்கியது.
உடனே ஒரு பதில் கடிதமாய், 'என்னால் முழு வன்னிப் பயணத்திலும் பங்குபெற முடியாமற்
போய்விட்டது. உனது மிகுதிப் பயணம் எப்படியிருந்தது?' எனக் கேட்டு ஓர் கடிதம்
அனுப்பினான். விக்கி அதற்கு, 'துரதிஷ்டவசமாய்
எனது பயணமும் இடைநடுவிலே முடிந்துவிட்டது. அங்கே வந்திருந்த மாணவர்களில்
யாரோ ஒருவர் நான் உளவு பார்க்க வன்னிக்குள் வந்திருப்பாய்த் தவறான தகவலைக்
கொடுத்திருக்கின்றார். இயக்கம் என்னை ஒருநாள் அழைத்து விசாரணை செய்தது. நான் நடந்த
உண்மையைக் கூறியபின், அவர்கள் என்னை ஒன்றுஞ் செய்யவில்லை. ஆனால் வன்னிக்குள் தொடர்ந்து
இருக்கவேண்டாம் திரும்பிப் போகச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்' என எழுதியிருந்தான்.
இவனுக்கு விக்கியின் இந்தப் பதிலைப் பார்த்தவுடன் என்ன முழுதாய் நடந்தது என்பதை
அறியும் குறுகுறுப்பு இன்னும் கூடிவிட்டது. 'அப்படியெனில் நீ வன்னிக்குப் போனதன்
உண்மையான காரணம் என்ன? உனக்குப் பிரச்சினையில்லாவிட்டால் என்னோடு பகிர்ந்து
கொள்ளேன்' என விக்கியைக் காட்டிக் கொடுத்தவன் இவன் தான் என்ற சந்தேகம் வராது
ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினான்.
'ம்...அதுவா? அதற்கு நான் எங்கள் பாட்டியின் காலம் வரை செல்லவேண்டும்.
எங்கள் பாட்டியைத் திருமணஞ் செய்தவருக்கும் பாட்டிக்கும் 20 வயது வித்தியாசம்.
பாட்டியின் பல விடயங்களில் தாத்தாவால் ஈடுகொடுக்கமுடியவில்லை. அந்தக் காலத்தில்தான்
பாட்டிக்கு இன்னொருவரோடு உறவு ஏற்பட்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இதைக் கண்டும்
காணாததுமாய் இருந்த தாத்தாவிற்கு பிறகு அடிக்கடி கோபம் வர பாட்டியை அடித்துத்
துன்புறுத்தத் தொடங்கிவிட்டார். ஒருநாள் இந்தச் சித்திரவதை தாங்காது பாட்டி தாத்தாவைக்
கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார். பிறகுதான் நடந்த விபரீதம் உறைக்க, தான்
சிறைக்குள் போனால் தன் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலமும் நாசமாகிவிடும் என்று நினைத்து தாத்தாவின் உடலை, பாட்டி
தன்னோடு உறவிருந்தவரின் துணையோடு இரகசியமாய் ஓரிடத்தில் புதைத்திருக்கின்றார்.
பின்னர் 'தாத்தாவைக் காணவில்லை, அவர் எங்கையோ ஓடிப்போய்விட்டார்' என்று எல்லோரிடமும்
கூறியிருக்கினறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
இது அறுபதுகளில் இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விடயம். எங்களை
எங்கள் அம்மா, இப்படி பாட்டி பற்றி எதுவும் கூறாமல்தான் வளர்த்தவர். சில வருடங்களுக்கு
முன் அம்மா கடும் சுகவீனமுற்று இருந்தபோதுதான் பாட்டியின் கதையை எனக்கும் என்
தங்கைக்கும் கூறினார். 'ஊர் உலகம் பாட்டியைக் கொலைகாரி என்று கூறினாலும் என்னால்
எங்கள் அம்மாவை ஒருபோதும் வெறுக்கமுடியாது' எனச் சொல்லிவிட்டுத்தான் அண்மையில் அம்மா காலமாகினார். அந்தச் சமயத்தில்தான், எங்கள் அம்மா பாட்டியின் நினைவாக
வைத்திருந்த ஒரு கத்தியையும் என்னிடம் தந்தவர். எனக்கும் அம்மாவினதும் பாட்டியினதும்
பிறந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. இந்தச் சமாதான காலத்தில்
வன்னிக்குள் போய் அவர்களின் ஊரைப் பார்ப்பது சரியாக இருக்குமென நினைத்துத்தான்
இலங்கைக்கு புறப்பட்டனான். ஆனால் பாட்டியின் வேரைத் தேடித்தான் இலங்கைக்கு வந்தேன்
என நான் ஒருவரிடம் கூறவில்லை. அப்படிக் கூறினாலும் பாட்டியைப் பற்றித் தவறாகத்தான்
அவர்கள் கூறுவார்கள், அதைக் கேட்க எனக்கு விரும்பமில்லை என்பதும் ஒரு காரணம்.
உனக்கு நினைவிருக்கா, நீயொரு நாள் எனது கட்டிலுக்கு அருகில் வரும்போது ஒரு புகைப்படத்தை
மறைத்தேனே, அது எனது அம்மாவும் பாட்டியும் நிற்கும் ஒரு கறுப்பு வெள்ளை படந்தான்.
நான் எவரிடமும் பாட்டியைப் பற்றிக் கூறாததைப் போலவே உன்னிடமும் அந்தவேளையில்
இதுபற்றிக் கூற விரும்பவில்லை. அதற்காய் என்னை மன்னித்துவிடு. அதுபோலவே இப்போது
எதற்காய் நான் உனக்கு என் பாட்டியின் கதையைக் கூறுகின்றேன் என்பதும் தெரியவில்லை'
என விக்கி அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். இவனுக்கு இதை வாசித்தபோது சரியான
அந்தரமாகப் போய்விட்டது. ஒரு நல்ல விடயத்திற்காய் வந்தவனை அவசரப்பட்டு
வீணாய்க் காட்டிக்கொடுத்துவிட்டேனே என நினைத்து வருந்தியதோடு குற்றத்தின் குறுகுறுப்பில்
நடந்த அனைத்தையும் மினிக்குச் சொல்லியும்
வருந்தினான்.
இதெல்லாம் நடந்து சில வருடங்களுக்குப் பின் பெடியள் அனுராதபுர விமானத்தளத்தைத்
தாக்கியபோது, தம்மிடம் இருந்த விமானங்களையும் அந்தத் தாக்குதலிற்குப்
பயன்படுத்தியதை இவன் மட்டுமில்லை முழு உலகமே கண்டுகொண்டது. மினி முன்பு இயக்கத்திடம்
விமானம் இருக்கிறதெனக் கூறியபோதெல்லாம் தான் நக்கலடித்து அவளைக் காயப்படுத்தியதையும்
இவன் அந்தக்கணத்தில் எண்ணிக்கொண்டான். பிறகு இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த
நிலப்பகுதிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் பறிபோய்க்கொண்டிருந்த கடைசிக் காலத்தில்,
பெடியள் தங்களிடமிருந்த இரண்டு விமானங்களையும் வேறுவழியின்றி கொழும்பில் கொண்டுபோய் மோதித் தகர்த்ததையும் கனத்துப்போன மனத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தான். விமானங்களுக்காய் அல்ல, இவ்வளவுகாலமும் இந்தியாவின் ரேடர்களையே சுழித்து
விட்டு பறந்துகொண்டிருந்த திறமையான பெடியள் அநியாயமாய்ப் போய்விட்டார்களே எனத்தான்
கவலைப்பட்டான். இந்த விடயங்களை அறிந்தால்
மினியும், மினியின் தகப்பனும் எவ்விதமான மனோநிலையில் இருப்பார்கள் என்பதையும்
இவனால் ஊகித்தறிய முடிந்திருந்தது.
இவன் வன்னிக்குள் போய் வந்ததற்கும், மீண்டும் போர் தொடங்கிய காலத்திற்கும் இடையில் ஒரு பனிக்காலத்தில் இவனுக்கும் மினிக்கும் இடையிலான
உறவு முறிந்திருந்தது. ஒரு காரணந்தான் என்றில்லாது பல்வேறு காரணங்களால் இனி
நிலைப்பதற்கு இந்த உறவில் எதுவுமில்லை என்றே இருவரும் பிரிந்திருந்தார்கள். மினியுடனான
கடைசிச் சந்திப்பின்போது, 'எனக்கென்னவோ நீங்கள் என்னோடு வன்னிக்கு வந்ததும்,
அங்கே நீங்கள் செய்த கூத்துக்களையும் பார்க்கும்போது நீங்கள் யாருக்கோ உளவு பார்க்க வந்தது போலத்தான்
தெரிகிறது. உங்களுக்குள் இருக்கும் கள்ளத்தனம் எல்லாம் ஒரு உளவாளிக்கு உரியதே'
எனச் சற்றுக் கடுமையாக இவனிடம் கூறிவிட்டுத்தான் மினி போயிருந்தாள். 'எல்லோருமே
இந்த உலகில் நேசிக்கவும் நேசிக்கப்படவுந்தான் பிறந்திருக்கின்றார்களே அன்றி,
வெறுக்கவும் வெறுக்கப்படவும் அல்ல' என கூறிய சம்பிக்கா கூட இப்படி தன்னைப்
பற்றிக் கூறவில்லையே, ஆனால் மினி சரியாகத் தன்னைக் கணித்துவிட்டாளே என்ற கவலை இவனுக்குள்
பெருகத் தொடங்கியது. இவ்வாறாகத்தான் இவன் ஓர் உளவாளியான கதை ஆரம்பிக்கின்றது.
(Sep, 2011)
நன்றி: காலம் 40 & 41 வது இதழ் (ஜனவரி 2013)
ஓவியம்: மு.நடேஷ்
0 comments:
Post a Comment