சில நிகழ்வுகள்
தற்செயலைப் போலத்தான் நிகழ்கின்றன. ஆனால் அவற்றிற்கான விளைவுகளை
அறிந்துகொள்ள சிலசமயம் ஆயுட்காலத்தையே விலை கொடுக்கவும்
வேண்டியிருக்கும். பிரித்தானிய அரசியின் ஆதிக்கத்திற்குட்பட்ட
நாடொன்றிலிருந்து அவர்கள் பன்னிரெண்டுபேர் புறப்பட்டார்கள். மலபார்
தேசத்தில் முளைத்தெழும் ஒவ்வொரு மரஞ்செடியிலும் வாசனைத்
திரவியங்கள் காய்த்துக் குலுங்குவதான எண்ணற்ற கதைகளைக்
கேள்விபட்டுத்தான் இக்கடற்பயணத்தை ஆரம்பித்தார்கள். கீழ்த்திசை
நாடுகளிலிருந்து கப்பல்களில் வந்திறங்கிக் கொண்டிருந்த வாசனைப்
பொருட்கள், செல்வத்தை மேற்கு நாடுகளில் வாரியிறைத்துக் கொண்டிருந்தன.
வானில் இருக்கும் நட்சத்திரங்கள் மீதும், கையில் இருக்கும் பைபிளின்
மீதும் நம்பிக்கை வைத்தபடி, திரவியம் தேடும் கடற்பயணத்தை ஓர்
எளிய கிராமத்திலிருந்து இவர்கள் தொடங்கினார்கள்.
நன்னம்பிக்கைமுனையைத்
தாண்டும்வரை பயணம் எளிதாகவே இருந்தது. மடகஸ்காரை நெருங்கும்போது
கரும் மேகங்கள் திரளத் தொடங்கின. ஏதோ ஒரு பருவக்காற்றின்
நிமித்தம் வரும் மழையென ஊகித்து அவ்வளவு கவலைப்படாது சூரியன்
எழும் திசை நோக்கிக் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.. அன்றைய
இரவு எங்கிருந்து எப்படி வந்ததெனத் தெரியாது கடல் மூர்க்கமாய்க்
கொந்தளிக்கத் தொடங்கியது. பெரும் சூறாவளிக்கான ஆயத்தம் இதுவென
அங்கிருந்த கடலோடிகளில் மூத்தவர் தன் அனுபவ அறிவை வைத்துச்
சொன்னார். அசுரத்தனமான காற்று. கப்பல் தான் அடையவேண்டிய திசையை
விட்டு காற்றின் திசைக்கேற்ப அலையத் தொடங்கியது. கடலின் கொந்தளிப்போ,
இப்போதே கப்பலைக் கவிழ்த்து இந்தப் பன்னிரண்டு பேரின் உயிரையும் காவெடுத்துவிடுவேன் போல சாவின் மொழியைப் பேசிக்கொண்டிருந்தது. மலபார்
தேசம் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், எங்கேயாவது ஒரு கரையைக் கண்டாலே போதுமெனக் கடவுளை
நோக்கி அவர்கள் பிரார்த்திக்கத் தொடங்கினார்கள்.
புயலில்
ஒதுங்கி ஒரு கப்பல் நிற்பதை அந்தத் தீவு மக்கள் கண்டு, அதைத்
தங்கள் பகுதிக்கு பொறுப்பான தலைவருக்குத் தெரியப்படுத்தினார்கள்.
அந்தத் தலைவரும் தங்கள் மன்னருக்கு செய்தியை அறிவிக்கச் சொல்லி
ஒருவரை அனுப்பிவிட்டு முப்பத்தைந்து வீரர்கள் உள்ள தன் படையோடு காத்திருந்தார்.
கரைக்குப் போன இவர்கள் தாம் போர் செய்யவோ நிலம் பிடிக்கவோ
வரவில்லை, மலபார் தேசத்திற்கு வியாபாரத்திற்காய் மட்டுமே
வந்தவர்கள் என தெரியப்படுத்த விரும்பினார்கள். அதை நம்ப அந்தத்
தலைவன் தயாராக இருக்கவில்லை. அரசனிடமிருந்து வரும் செய்தி
அறிந்தபின்னால்தான், தன்னால் முடிவுகளை எடுக்கமுடியும் எனக் கூறினான்.
இவ்வாறு பெருந்தொகையான அந்நியர்களைச் சிறை வைப்பதற்கான வசதிகள்
அந்தக் கரையோரப் பகுதியில் இருக்கவில்லை. ஒவ்வொருவரின்
கால்களும் கயிற்றால் பிணைக்கப்பட்டு மூன்று மூன்று பேராக நான்கு
வீடுகளில் தங்க வைக்கப்பட்டார்கள். குடிப்பதற்கு நீரும், இரவுச்
சாப்பாடாய் சோறும், மரவள்ளிக்கிழங்கில் செய்யப்பட்ட கறியும்
அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அடுத்த நாள்
அரசனிடமிருந்து செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. கைது செய்யப்பட்ட
இவர்களை அரசன் வசிக்கும் அதிபாதுப்புடைய பிரதேசத்திற்கு
அவசரப்பட்டுக் கொண்டுவரவேண்டாம் என்றும், இந்த அந்நியர்களை
முதலில் தீவிர விசாரிக்கும்படியும் அந்தச் செய்தியில்
கூறப்பட்டிருந்தது. மேலும் இவர்களை முன்னே அனுப்பி நிலவரங்களை
அறிந்துவிட்டு, பெரும்படையுடன் அந்நியர்கள் எம் தேசத்தில்
படையெடுக்கும் அபாயமும் உள்ளதால், அவர்களைத் தொடர்ந்து
கண்காணிப்பில் வைத்திருக்கும்படியும் பணிக்கப்பட்டிருந்தது. ஆனால்
அவர்களை அரச கைதிகளைப் போல மரியாதையாக நடத்தும்படியும் அரசன்
வலியுறுத்தியிருந்தான். இவர்கள் தாங்கள் புறப்பட்டு வந்த நாட்டு
அரசின் அனுசரணையில் வந்த வர்த்தகர்களாகவோ அல்லது
படைவீரர்களாகவோ இல்லாததால், தம்மைத் தேடி எவரும் வந்து
காப்பாற்றப் போவதில்லையென எண்ணி வருந்தினார்கள். ஒரேயொரு வழி
தாங்களாகவே ஒரு வழியைக் கண்டுபிடித்துத் தப்பிச் செல்வதே. ஆனால்
இப்போது கைதியாகிருக்கும் இந்த நாடு ஒரு தீவாக இருப்பதால் கப்பலின்
துணையின்றித் தப்பிப் போகவும் முடியாது. அப்படித் தப்புவதாக
இருந்தாலும், ஏற்கனவே புயலில் சேதமடைந்த கப்பலை முதலில்
திருத்தியாகவும் வேண்டும். ஆனால் சேதமடைந்த கப்பலோ இங்குள்ள
மக்கள் செறிவாக வசிக்கும் ஒரு கடற்கரைப் பிரதேசத்திற்கு இழுத்துக்
கொண்டுவரப்பட்டு இருந்தது. என்ன செய்வதென நம்பிக்கை தரும்
எந்தத் திசையும் தெரியாது இவர்கள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
மாதங்கள்
பல உருண்டோடிக் கொண்டிருந்தன. இவர்களைக் காப்பாற்ற வெளியிலிருந்து
எவரும் வராததைப் போலவே, இந்நாட்டின் அரசிடமிருந்தும் ஒரு
உருப்படியான செய்தியும் வந்து சேரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் தம்
சொந்த நாடு திரும்பிச் செல்லும் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர்.
ஆரம்ப காலங்களில் வித்தியாசமாக நிறத்தில் இவர்களிருந்ததால்
நின்று அவதானித்த மக்களும் இப்போது அந்தப் பிரக்ஞை இல்லாது நடமாடிக்
கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் எங்கே சென்றாலும் இவர்களைப் பின்
தொடர்ந்து வந்து கொண்டிருந்த பதினைந்து காவலாளிகளும் இப்போது
இவர்களைப் பின் தொடர்ந்து வருவதையும் நிறுத்தியிருந்தார்கள்.
இவர்களும் உள்ளூர் மக்களைப் போல வேலை செய்து கொஞ்சம் காசு சேகரித்து
கால்நடைகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார்கள். தங்களுக்கென்று
தனிக்குடில் வேண்டுமென அந்தப் பிரதேசத் தலைவரிடம் விண்ணபித்து
அனுமதியும் வாங்கினார்கள். குடிலைச் சுற்றியுள்ள இடங்களில் தமது
உணவுக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்கவும் தொடங்கினார்கள்.
ஒரு
நம்பிக்கைக் கீற்று எங்கேயாவது இருந்து வராதா என ஏங்கிக் காத்திருந்து
வருடங்கள் நான்கு கழிந்துவிட்டிருந்தன. பலர் முற்றிலுமாய்
நம்பிக்கை இழந்து விட்டிருந்தனர். இவர்களில் ஒரு சிலர்
உடலுழைப்பிற்கான வேலை தேடிச் சற்றுத் தொலைவுக்கு இடம் பெயரத்
தொடங்கினார்கள். வேறு சிலர் இந்நாட்டுப் பெண்களைத் திருமணம்
செய்துகொண்டு தமக்கான குடில்களை அமைத்து வாழவும்
தொடங்கியிருந்தனர். இறுதியில் இவரும் ரொபர்ட்டும் மட்டுமே திருமணஞ்
செய்யாது மிஞ்சியிருந்தனர். ரொபர்ட்டு தன்னோடு கூடவிருந்த பைபிளை
தினமும் மனனம் செய்து செய்து, தன் வாழ்வு முழுவதையும் இயேசுவிற்கு
சமர்ப்பணம் செய்தவர் போல வாழ்ந்துகொண்டிருந்தார். இவர்கள்
இருவருமே இப்படித் தனியே வாழ்ந்துகொண்டிருந்ததால், மக்களில்
சிலருக்கு இவர்கள் இருவரும் தப்பியோடுவதற்கான திட்டத்தில்
இருக்கின்றார்கள் எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். மக்கள்
நினைத்ததில் அவ்வளவு பிழையுமில்லை. உண்மையில் இவர்கள் இருவரும்
அப்படியான ஒரு திட்டத்தை இரவுகளில் வளர்த்துக்
கொண்டுதானிருந்தார்கள். இந்தக் கடலோரத்தால் தப்பமுடியாது என்பதால்
நாட்டின் உள்பகுதியிற்குச் சென்று வேறொரு கடற்கரையால் தப்பியோடுவதே
இவர்களின் திட்டமாகவும் இருந்தது. இந்நாட்டுக்கு வடக்கே மலபார்
நாடு இருப்பதையும், அதற்குச் சற்று வடகிழக்கில் போனால் மதறாஸப்
பட்டினத்திலுள்ள கிழக்கிந்தியக் கம்பனியோடு தொடர்பு கொள்ளலாம்
என்பதையும் கண்டுபிடித்திருந்தார்கள். ஆனால் இந்நாட்டின்
உள்பகுதிகளுக்குள் போவதென்பது கடினமாக இருதது. அரசனின் படைகள்
முள்வேலிகள் அடைத்து, அதற்கு முன் நீண்ட அகழிகளை அமைத்து தீவிரமான
காவற்பணியில் ஈடுபட்டிருந்தனர். நாட்டின் உட்பகுதியிற்குள்
செல்பவர் எவராயினும் மூன்று வெவ்வேறு காவற்கோபுரங்களைத் தாண்டியே
போகவேண்டியிருக்கும். அண்மைக்காலமாய் மலைகள் சூழந்த இந்த அரசனின்
பிரதேசங்களைப் பிடிக்க அந்நியர்கள் சிலர் அடிக்கடி போர் தொடுத்தும்
கொண்டிருந்தார்கள்.
தனிமையையும், தாய்நாடு
திரும்புவதற்கான ஏக்கமும் அதிகரித்து அதிகரித்து மனம் பித்தாகிப்
பிறழ்ந்து போன ஒரு பொழுதில்தான் ரொபர்ட் ஒரு திட்டத்தை முன்வைத்தார்.
இவர்கள் பன்னிரண்டு பேரும் ஓரிடத்தில் சேர்ந்து ஒருசில நாட்களைக் கழிந்தால்,
தமது கடந்தகால வாழ்க்கையைக் கொஞ்சமாவது அசைபோட்டு மனதை
ஆற்றிக்கொள்ளலாம் என்று ரொபர்ட் கூறினார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு
திக்கில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அறிந்தவர் மூலமாக இச்செய்தி
அறிவிக்கப்பட்டு எல்லோரும் கிறிஸ்மஸ் தினத்தில் சந்திப்பதாக முடிவு
செய்யப்பட்டது. நிறையப்பேர் இந்த ஏழு வருடங்களில் மாறிப்
போயிருந்தனர். சிலர் தமது மனைவியரோடு வந்திருந்தனர். சிலருக்குக்
குழந்தைகள் கூட இருந்தன. அவர்களில் அநேகர் புதுச் சூழலுக்கும்
வாழ்க்கைக்கும் தம்மை மாற்றியதுபோல கலகலப்பாக இருந்தனர்.
அவர்கள்
எல்லோரும் சென்றபின், இன்னும் தனிமை அதிகம் சூழந்திருப்பதாய்
இவருக்குத் தோன்றியது. ஒருநாள் தஙகள் வீட்டில் வளர்த்த கோழிகளின்
முட்டைகளை அருகில் கூடும் சிறு சந்தைக்கு விற்பதற்குச் சென்றிருந்தார்.
அந்தச் சந்தையில் பணம் போன்றவை பெரிதாக புழக்கத்தில்
இருப்பதில்லை. ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை வாங்கும் பண்டமாற்றே
நடக்கும். தனது கோழி முட்டைகளைக் கொடுத்து ஒரு பலாக்காயை வாங்கினார்.
இதுவரை நாள் சந்தையில் காணாத ஒரு புதிய பெண் பலாக்காய்களை
விற்றுக்கொண்டிருப்பதையும் அவதானித்திருந்தார். இந்த ஏழு ஆண்டுகளில்
இந்நாட்டு மக்களின் சுதேசி மொழியையும் ஒரளவு கற்றிருந்தார். அடுத்த
முறை சந்தைக்குக்குப் போகும்போது, 'இதுவரை நான் உன்னை இங்கே காணவில்லை,
நீ இந்தச் சந்தைக்குப் புதிதா?' என அந்தப் பெண்ணிடம் வினாவினார். எவ்வாறு உன்னை அழைப்பதெனக் கேட்டபோது அசுந்தா எனத் தன் பெயரை அவள்
கூறினாள் தனிமைத்தீவில் பல்லாண்டுகளாய்த் தவித்துக்கொண்டிருந்த
வில்லியம்ஸிற்கு அசுந்தா இவரைக் காப்பாற்ற வந்த ஒரு படகு போலத்
தெரிந்தாள். அசுந்தாவைச் சந்திப்பதற்கெனவே -பொருட்களை விற்கவோ
வாங்கவோ அவசியமில்லாத பொழுதுகளில் கூட- அடிக்கடி சந்தைக்கு
செல்லத் தொடங்கினார். நாட்கள் செல்லச் செல்ல அது அசுந்தா மேல் காதலாக
மாற, தன்னைத் திருமணஞ்செய்ய சம்மதமா என இவர் அசுந்தாவிடம்
கேட்டார். எல்லாம் சுமுகமாக ஆனதன்பின் அசுந்தாவும் இவரும் திருமணம்
செய்வதற்காய் முறையான அனுமதியை அந்தப் பகுதியின் தலைவரிடம் சென்று
கேட்டார்கள். 'இப்போதாவது திருமணம் செய்ய முடிவு செய்தீர்களே,
நல்ல விடயம், சந்தோசமாக இருவரும் வாழுங்கள்' என அந்தத் தலைவர்
வாழ்த்தினாலும், அவருக்கு உள்ளுக்குள், இனித் திருமணம் செய்தால்
வில்லியம்ஸ் இங்கிருந்து தப்பியோடமாட்டார் என்ற நிம்மதியே
ஏற்பட்டது. இவ்வளவுகாலமும் ஒன்றாய்ச் சேர்ந்திருந்த ரொபர்ட்டைப்
பிரிவதுதான் இவருக்கு கஷ்டமாய் இருந்தது. ரொபர்ட்டும் 'இறுதியின்
நீயும் எல்லோரையும் போல தாய் நாடு திரும்பிப் போகும் கனவைக் கைவிட்டு விட்டாயா?' எனக்
கவலையுடன் கூறித்தான் விடை கொடுத்தார். இவரும் அசுந்தாவும்
தங்களுக்கென குடிலை அமைத்து காட்டுக்கு அண்மையாக வாழத்
தொடங்கினார்கள்.
சுனைகளில் நீராடி, மலர்களை
எப்போதும் சூடுவதில் பிரியம் கொண்ட அசுந்தாவின் உடல் எப்போதும்
சொற்களால் விபரித்து முடியா புதுவித உணர்வுகளை இவருக்குக் கொடுத்துக்
கொண்டிருந்தது. கர்த்தரில் நம்பிக்கை வைத்து பெறுகின்ற ஆன்மீக
விடுதலையை, உடல்களினூடாகவும் புலன்களினூடாகவும் கூடப் பெறமுடியும்
என நினைத்துக்கொண்டார். தொடக்கத்தில் தனது உடலை ஒரு ஆணுக்கு
இயல்பாகத் திறந்துவைக்கத் தயங்கிய அசுந்தா, போகப்போக
தயக்கங்களைக் களைந்து தன்னுடலை ஒரு நதியாகப் பெருகச் செய்து
இவரை ஒரு பெருவிருட்சமாக உள்ளிழுத்துக் கொண்டாள். ஆணிவேரும் அறுபட,
முடிவுறாதோடிய காமநதியில் அமிழ்ந்த இவர் தன் ஆன்மாவின்
கட்டுண்டுகிடந்த கயிறுகளை அசுந்தாவின் அல்குள் அறுத்து விடுதலை
செய்வதை உணர்ந்தார். அதை அசுந்தாவிடம் சொல்லவும் செய்தார். உடல்கள்
சங்கமிக்கும் பொழுதுகளில் மட்டும் ஆண்கள் எவ்வளவு
அன்பானவர்களாகவும், உளறுபவர்களாகவும் மாறிவிடுகின்றார்கள் என
எண்ணியபடி அசுந்தா இவரைத் தாபத்துடன் இன்னும் இறுக்கி அணைத்துக்
கொண்டாள்.
நான் கியூபாவில்
சென்று இறங்கியபோது நன்கு மழை பெய்துகொண்டிருந்தது. இரவுணவைக்
கொஞ்சமாய்ச் சாப்பிட்டு பாரில் இருந்து குடித்துவிட்டு, கொண்டுபோன
பிளாஸ்கில் இன்னும் கொஞ்ச வைனை நிரப்பிக்கொண்டு அறைக்குத்
திரும்பியிருந்தேன். கடற்கரையைப் பார்க்கும்படியாக என் அறை இருந்தது.
திரைச்சீலையை விலத்தினால் அலையலையடித்துக் கொண்டிருந்த அத்திலாந்திக்
சமுத்திரம் விரிந்து கிடந்தது. இந்த மழைக்குள்ளும் யாரோ ஒருவர்
கடற்கரையில் இருந்து குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவருக்கும்
என்ன கவலையோ தெரியாது. பிளாஸ்கிலிருந்த வைனும் கொஞ்சம் கொஞ்சமாய்
என்னையறியாமலே குறைந்துகொண்டிருந்தது. இந்த அறையிலிருந்தபடி
எத்தனைபேர் எத்தனைவிதமான உணர்வுகளோடு இந்தக் கடலைப் பார்த்தபடி
இருந்திருப்பார்கள் நினைத்துப் பார்த்தேன். மெல்ல மெல்லமாய் நீண்டநாள்
வர மறுத்த நித்திரையும் என்னை அரவணைக்கத் தொடங்கிற்று.
நள்ளிரவில்
சட்டென்று விழிப்பு வர, ஏதோ ஒரு பொருளின் அசைவும், பெண்ணொருவரின்
சிணுங்கலும் தலைக்கருகாமையில் கேட்பது போலத் தோன்றியது.
எலிவேற்றரில் இரவுணவிற்காய் காத்திருந்தபோது, பக்கத்து அறைக்குப்
புதிதாய் வந்திறங்கிய அந்த இணைகளின் காதல் சரசம் போலுமென
நினைத்துக்கொண்டேன். பெண்ணின் குரல் இப்போது கீச்சிடலாய் உச்சத்தில்
ஒலிக்கத் தொடங்கியது. இது இயல்பெனத் தெரிந்தாலும் தூக்கத்தைக்
கலைத்த கோபத்தில் அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தேன். இனியும்
இவர்களின் தழுவல்களின் மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தால் எதையெல்லாம்
மறக்கவேண்டுமென கியூபாவிற்கு வந்தேனோ அதையெல்லாம் மீள
நினைக்கும்படியாகிவிடும் என்ற அச்சத்தில், ப்ளாஸ்கையும் எடுத்துக்கொண்டு
இருபத்து நான்கு மணிநேரமும் திறந்திருக்கும் பாருக்குச் செல்லத்
தொடங்கினேன்.
இரவு விழித்திருந்து நீண்டநேரம்
குடித்ததால் அடுத்த நாள் நேரம் பிந்தியே என்னால்
எழும்பமுடிந்திருந்தது. பத்தரைக்கு காலையுணவை மூடிவிடுவார்கள் என்ற
அவசரத்தில் உணவுப்பகுதியிற்கு ஓடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான்
அவளைப் பார்த்தேன். அவளின் நிறத்தை வைத்து எந்த நாட்டிலிருந்து
வந்திருப்பாளென்று மட்டுக்கட்ட முடியாமல் இருந்தது. ஏதோ வெவ்வேறு
நாடுகளின் கலவையில் உதிர்த்தவள் என்பது மட்டும் உறுதியாய்த்
தெரிந்தது. என்னைப் பார்த்துச் சின்னதாய்ப் புன்னகைத்தாள். காலை
உணவிற்கு வரும்போதோ டவலையும், ஒரு பையையும் கூடவே
கொண்டுவந்திருந்தாள். நீச்சல் செய்தபின் மாற்றுவதற்கான ஆடைகள்
பையினுள் இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன். நான் மிச்சமாயிருந்த
காலையுணவை அவசரம் அவசரமாய் ஒரு பீங்கான் கோப்பையில் போட்டுக்கொண்டு
அவள் எங்கே போகின்றாள் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடற்கரைக்கு
அண்மையில் இருந்த ஓலையால் வேயப்பட்டிருந்த பாருக்குள் போவது
தெரிந்தது. நானும் என் உணவோடு பாரை நோக்கி நடக்கத் தொடங்கினேன். பீனா
காலடாவிற்கு ஓடர் கொடுத்துவிட்டு அவள் காத்திருப்பது தெரிந்தது.
என்னைக் கண்டதும், 'Are you following me?' எனச் சிரித்தபடி கேட்டாள்.
உண்மை அதுதான் என்றாலும், 'இல்லையில்லை, சமுத்திரத்தைப் பார்க்க
வந்தேன்' எனச் சமாளித்தேன். 'நான் ரொறொண்டோவிலிருந்து
வருகின்றேன்,ஆனால் இலங்கைதான் பூர்வீகம்' என அறிமுகம் செய்ய, தான்
இங்கிலாந்திலிருந்து வந்திருக்கின்றேன் என்றாள். 'கனடாவின்
கடுங்குளிரிலிருந்து தப்புவதற்கு இப்படி வந்தால் மட்டுமே
முடியுமென'க் கடலைப் பார்த்தபடி சொன்னேன். கியூபாவின் இசை பற்றிய
ஆராய்ச்சிக்காய் வந்த மாணவி என அவள் கூற, 'இசை என்ன இங்கிலாந்து
மகாராணி மாதிரி பக்கிங்காம் அரண்மனைக்குள்ளா இருக்கும்? இப்படிச்
சுற்றுலா விடுதியில் இருந்துகொண்டு அதை எப்படி ஆராயமுடியும்' என
கேலியாகக் கேட்டேன். 'அது எனக்கு நன்றாகவே தெரியும், கடந்த ஒரு மாத
காலமாய் கியூபாவின் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்திருக்கின்றேன்.
உடலுக்கு சற்று ஓய்வு வேண்டும் போலிருந்தது. அதுதான் இங்கே ஒரு வாரம்
தங்க வந்திருக்கின்றேன்' என்றாள். பிறகு 'இங்கிருக்கும் இசை வகைமைகளை
விட இளைஞர்கள்தான் இன்னும் சுவாரசியமானவர்கள்' என ஒரு கண்ணை
சிமிட்டிச் சொன்னாள். 'அப்படியெனில் ஆய்வின் முடிவுகளும்
தனித்துவமாய்த்தான் இருக்கும் போல' எனச் சிரித்தபடி கூறினேன்.
நான்
காலையுணவை முடித்து, எனக்கொரு கோப்பியையும் அவளுக்கு இன்னொரு பீனா
கொலாடாவையும் எடுத்துக்கொண்டு வந்தேன். 'Why dont you swim with me? என
அவள் கேட்க, என்ன பதில் கூறுவதென்று எனக்குக் குழப்பமாயிருந்தது.
இலங்கை போன்ற ஒரு தீவு நாட்டைப் பூர்வீகமாய்க் கொண்டவனுக்கு நீந்தத்
தெரியாதென்று ஒரு அந்நியத் தேசப்பெண் அறிவது எவ்வளவு அவமானமான
விடயம். அதை மறைத்துக்கொண்டு 'I don't feel like swimming right now'
எனச்சொல்லிவிட்டு 'வேண்டுமென்றால் நீ நீந்தும்போது கரையில் நான்
காவலிருக்கின்றேன்' என்றேன். 'எனக்கு எவரும் துணைக்குத் தேவையில்லை.
நானே என்னைக் கவனித்துக் கொள்வேன். ஆனால் உனக்கு வேறு
வேலையில்லையென்றால் என் ஆடைகளுக்கு காவலிரு' என்றாள்.
அடுத்த
நாளிரவு என் அறையில் இருந்து பேசிக்கொண்டிருக்கும்போது நான் அம்பனையின்
அரச பரம்பரையைச் சேர்ந்தவன் என அவளுக்குச் சொன்னேன். ஐம்பது
குடும்பங்களை விடக் குறைவான ஒரு கிராமத்தை, ஒரு இராசதானியின் அளவில்
வைத்து கதைகளைப் புனைந்து கொண்டிருந்தேன். பிளாஸ்கிலிருந்த வைன்
குறையக் குறைய இன்னும் உற்சாகம் எனக்குள் தடம்புரண்டோடத்
தொடங்கியது. ஒரு நாள் போரின் நிமித்தம், பதுங்குகுழி வெட்டியபோது
ஆறடி நிலத்துக்கீழே புதைந்துபோன ஒரு பழங்காலக் கட்டடத்தின்
தூண்களைக் கண்டெடுத்தோம் எனவும், அங்கு கிடைக்கபெற்ற மண்கலங்களும்
செப்புத் தகடுகளும் எங்களின் மூதாதையர் முன்னோர் காலத்தில்
முக்கியமானவர்களாய் இருந்திருப்பார்களெனவும் கதையை இன்னும்
வளர்த்தேன். வாழ ஒரு துண்டு நிலம் கூட இல்லாது துரத்தப்பட்டவன்
தன் சோகத்தைச் சொல்கிறான் போலுமென அவள் என்னை அணைத்துக்கொண்டு முதுகைத்
தடவியபடி மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். அன்றிரவு நாங்கள்
நம்முடல்கள் மேல் நிகழ்த்திய ஆய்வில் பக்கத்து அறைக்காரர்களுக்கு
நித்திரையே வந்திருக்காது. இதைத்தான் தமிழில் 'உன்னை
அவமானப்படுத்தியவனுக்கு அவனது முற்றத்திலேயே வைத்து பதிலடி கொடு'
என்று சொல்கிறாகள் போலும். காலை விடிந்தபோது நான் வேறொருவனாக
இருந்தேன். ஆடைகள் எதுவுமற்றுக் கிடந்த எங்கள் உடல்களை இரவில்
ஒழுங்காய் மூடியிராத திரைச்சீலைகளின் ஊடாக சூரியன் புதினம் பார்த்துக்
கொண்டிருந்தது. நான் அவசரமவசரமாய் எனது ஆடைகளையெடுத்து
அணியத்தொடங்கினேன். என்னதான் இரவில் இடக்குமிடக்காய் இருந்தாலும் ஒரு
நாட்டு அரசபரம்பரைக்குரியவன் பிறர் பார்வையில் இப்படித்
தெரியக்கூடாதல்லவா?
(இன்னும் வரும்)
நன்றி: தீராநதி (ஏப்ரல், 2011)
ஓவியம்: தீராநதியிலிருந்து பிரசுரிக்கப்படுகிறது. (ஓவியரின் பெயர் வேல் எனத்தொடங்குவது அவரின் கையெழுத்திலிருந்து தெரிகிறது. முழுப்பெயர் அறிந்தவர் கூறினால் இங்கே நன்றியுடன் இணைத்துக்கொள்வேன்)