ரொபர்ட் தப்புவதற்கு கச்சிதமாய் ஒரு திட்டத்தைத் தீட்டிவிட்டு, தனக்கு நம்பிக்கைக்குரிய சிலரைத் தேர்ந்தெடுத்துத் தகவல் அனுப்பியிருந்தார். சிலர் இங்கேயே நீண்டகாலம் வாழ்ந்துவிட்டதால், தாங்கள் வந்த நாட்டுக்குத் திரும்பிப்போகும் எண்ணத்தைக் கை கழுவியிருந்தனர். வில்லியம்ஸ் இங்கிருந்து தப்பிப் போவதா, இல்லை தொடர்ந்து இருப்பதா என்ற இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவித்தார். அருகில் தூங்கிக்கொண்டிருந்த அசுந்தாவைப் பார்த்தபோது அவருக்கு யசோதராவைக் கைவிட்டுப் போன புத்தரின் நினைவுதான் வந்தது. இறுதியில் இந்த மரம், வந்த மண்ணில் வேரிறக்காதெனத் தீர்மானித்து ரொபர்ட்டோடு தப்பிச் செல்வதென முடிவெடுத்தார்.
குறிக்கப்பட்ட நாளின் மூன்றாம் சாமத்தில் வில்லியம்ஸ் இரவோடு இரவோய்க் கரைந்து, நகர் விட்டு நீங்கியிருந்தார். இச்செய்தி அறிந்தபோது அசுந்தாவிற்கு அடுத்து என்ன செய்வதெனத் திகைப்பாயிருந்தது. இன்னொரு பக்கத்தில் அரசருடைய படைகள் இந்தத் தப்புதலுக்கு அசுதாவின் உதவியும் இருந்திருக்குமென சந்தேகித்து நெருக்குதல்கள் கொடுக்கத் தொடங்கினார்கள். ஊரும், ஒரு வெள்ளைக்காரனோடு வாழ்ந்தவளென ஒதுக்கி வைக்கத் தொடங்க அசுதாவின் சந்தைக்குக் கூடப்போகாது வீட்டுக்குள் ஒதுக்கத் தொடங்கினாள்.
ஒருநாள் அசுந்தாவும் நகர் நீங்கி அடர் வனம் சூழ்ந்திருந்த வடக்குத் திசை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அரசரின் விசுவாசுகளும் சனங்களும் அவள் வில்லியம்ஸோடு இணையத்தான் போயிருக்கின்றாள் என நினைத்துத் தூற்றத் தொடங்கினர். அசுதா சனம் குறைந்த காட்டுப் பகுதியில் ஒரு குடிலை அமைத்து வாழத் தொடங்கினாள். அந்த நிலப்பரப்பு இன்னொரு அரசனுக்குச் சொந்தமாக இருந்தது. அவ்வப்போது அரசனின் படைவீரர்கள் அந்தப் பகுதியில் காவல் நடவடிக்கைக்காய் வந்து போவார்கள். அப்படி வந்த ஒரு படைவீரனுக்கு அசுதா மீது மையல்வந்து அசுதாவோடு சேர்ந்து வாழத் தொடங்கினான். தொடக்கத்தில் அவன் பேசும் மொழியை அறிந்துகொள்ள அசுதா கஷ்டப்பட்டாலும் சில மாதங்களில் கொச்சையாகவேனும் பேசக் கற்றுக்கொண்டுவிட்டாள்.
காலியிலும், கொழும்பிலும் கோட்டைகளைக் கைப்பற்றியவர்களுக்கு இந்நிலத்து மன்னன் பெரும் தலைவலியாக இருந்தான். அடர்ந்த காடு அவனுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்துக் கொண்டிருந்தது. அவனோடிருந்த படைவீரர்களும் தம் மன்னனுக்காய் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர். ஒருநாள் அந்நியர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்கென அசுந்தாவோடு இருந்தவனும் போயிருந்தான். அந்த வேளையில் அசுதா நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். விரைவில் வேலை முடித்து உன்னிடம் மீளவந்து விடுவேன் என அவன் கூறிச் சென்றான். அசுந்தா உயிருடன் அவனைப் பார்த்த கடைசி நாளாக அது இருந்தது. அவனும் அவனோடு சென்ற ஏழுபேரும் காட்டுக்கு வெளியே தந்திரமாக வரவளைக்கப்பட்டு அந்நியர்களால் சுற்றிவளைக்கப்பட்டார்கள். தாம் கைதுசெய்யப்பட்டால் தமது அரசன் மறைந்திருக்கும் இடத்தின் இரகசியங்களை அந்நியர்கள் அறிந்துவிடுவார்களென்ற அச்சத்தில் அந்த ஏழுபேரும் தமது குறுவாள்களால் கழுத்தைக் கீறி தற்கொலை செய்து கொண்டார்கள்.
காலங்காலமாய் தன் மரபில் தற்கொலைச் சடங்குகள் நிகழும்போது கண்களைத் திறக்கும் வற்றாப்பளை அம்மனும் ஒரு முறை விழிவிரித்து சோகத்தை உள்வாங்கிக்கொண்டாள். இதன்பின் ஒன்றிரண்டு மாதங்களில் அந்நிலத்து அரசனும் கற்சிலைமடுக்கருகில் தந்திரமாய் கொல்லப்பட, அந்நிலப்பரப்பே பெரும் கொந்தளிப்பில் கொதிக்கத் தொடங்கியது. எல்லாத் துயரங்களையும் அசையாய்ச் சாட்சியாய்ப் பார்த்துக்கொண்டிருந்த அம்மனைப் போல, நாட்டில் நடக்கும் விபரீதங்களை அசுந்தாவும் தன் குழந்தையோடு இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
இவையெல்லாம் நிகழ்ந்து சில ஆண்டுகளின் பின், இடைவிடாது சில நாட்கள் பொழிந்த மழையின் காரணமாய் அசுந்தா நோயுற்றாள். தொற்று நோய் பரவி நிறையப் பேர் அங்குமிங்குமாய்ச் செத்துக் கொண்டிருந்தார்கள். தன் குழந்தைக்காகவேனும் உயிர் வாழவேண்டுமெனும் நினைப்பில், மதம் பரப்ப வந்த வெள்ளைக்காரப் பெண் தொற்று நோயிற்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த ஓலைக் குடிசையொன்றில் அசுந்தா தன் குழந்தையோடு போய்த் தங்கினாள். ஒரு சில நாட்களில் நோய் முற்றி அசுதா இறக்க, கவனிக்க எவருமேயில்லாத அசுதாவின் குழந்தையின் அழகில் மயங்கி அந்த வெள்ளைக்காரப் பெண் தன் நாட்டுக்கு, வளர்க்க எடுத்துச் சென்றிருந்தார்.
கட்டிலில் உட்கார்ந்திருந்த அவளின் மடியில் படுத்திருந்த நான் 'உன் முக அமைப்பு எனக்கு ஒரு கீழைத்தேயப் பெண்ணை நினைவுபடுத்துகிறது' என்றேன். 'இன்னமும் நீ உன் பழைய காதலியின் நினைவிலிருந்து வெளியே வரவில்லைப் போலும்' எனச் சிணுங்கிக்கொண்டு அவள் சொன்னாள். 'இல்லை உண்மையாகவே நீ எனக்கு ஏதோ நெருக்கமானவளைப் போன்று தோன்றுகிறாய்' என்றேன். 'யாருக்குத் தெரியும், எங்களின் மூதாதையர் யாருக்கோ இலங்கையோடு தொடர்பிருக்கிறதென எங்களின் கிராண்ட் கிராண்ட்மா கூறுவார். அந்தவகையில் சிலவேளைகளில் நீயெனக்குச் சொந்தக்காரனோ தெரியாது' எனச் சிரித்தபடி சொன்னாள். 'என்றாலும் நீதானே கூறினாய் உனது பூர்வீகம் டவரன்ஹில்லில் இருந்து தொடங்குகிறதென... ' நான் இழுத்தேன்.
இறுதியில் நான் அரசபரம்பரைச் சேர்ந்தவனல்ல என்ற உண்மையைக் கூறாவிட்டாலும், எனக்கு ஒழுங்காய் நீந்தத் தெரியாதென்பதை மட்டும் அவளுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் 'எங்கள் அரச பரம்பரைக்குச் சொந்தமாய் ஒரு பொய்கை இருந்ததென்றும் அதற்கு கீரிமலைக் கேணி எனப் பெயர் எனவும், அது ஒழுங்காய்ப் பராமரிக்கப்படாததால் அங்கே முதலைகள் இருந்ததால் என் பெற்றோர் என்னை நீச்சலடிக்க அனுமதிப்பதில்லை' எனவும் சொன்னேன். 'அதனாலென்ன உங்களுக்குத்தான் பெருங்கடலே இருக்கிறதே அங்கே நீச்சல் பழகியிருக்கலாமே' எனத் திருப்பிக் கேட்டாள். 'இந்து சமுத்திரத்தில் பழகியிருக்கலாந்தான், ஆனால் நானொரு அரச பரம்பரையைச் சேர்ந்தவனென்பதால் கண்டகிண்ட இடங்களிலெல்லாம் நீராட முடியாதல்லவா?' என அதற்கும் மறுமொழிந்தேன். என்னுடைய விசர்க்கதையால் அவளுக்கு எரிச்சல் வந்திருக்கவேண்டும். You are right எனச் சொல்லிவிட்டு First Accept your mistakes, then only you can learn more என்றாள். எங்கள் தமிழ்ப்பரம்பரையிற்கும் இதற்கும் எட்டாப் பொருத்தம் என மனதுக்குள் கூறிக்கொண்டேன்.
அவள் மேலே அணிந்திருந்த மெல்லிய ஆடைகளைக் களைந்துவிட்டு நீச்சலுடைக்கு மாறியிருந்தாள். என்னையும் இழுத்துக் கொண்டு கடலுக்குள் இறங்கத் தொடங்கினாள். நான் உப்புத்தண்ணீரைக் குடித்து குடித்து நீருக்குள் மூழ்குவதும் எழுவதுமாகவும் இருந்தேன். நாங்கள் நீந்தி முடிந்து வெளியே வந்தபோது, பசித்த வயிற்றுக்குத் திறந்த வெளியில் படைத்து வைத்திருந்த மதிய உணவு தேவார்மிதமாய் இருந்தது. அன்றைய மாலை அவள் இன்னொரு பெருங்கடலைத் தனக்குள் நிரப்பி என்னை நீந்தவிட்டாள். இந்தக் கடலில் எப்படி நீராடுவதென்பதில் எனக்கு எந்தச் சிககலுமிருக்கவில்லை. அதன் ஆழ அகலங்களுக்குள் நான் ஒரு கண்டுபிடிப்பாளனைப் போல குதூகலத்தோடு செல்வதும் மீள்வதுமாகவும் இருந்தேன். அவள் ஒரு பொழுது பேரலலையாக எழுந்து என்னை உள்ளிழுத்தபோது என் அம்பனை இராசதானியையே காணிக்கையாகக் கொடுக்கத் தயாராக இருந்தேன்.
கனடாவிற்கு நான் புறப்பட ஒருநாள் முன்னர், அவள் இங்கிலாந்திற்கு வெளிக்கிட ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். கியூபாவில் என் நாட்களை அழகாக்கியதற்காய் அவளை அணைத்து இறுதியாய் முத்தமிட்டபோது அவளது பாஸ்போர்ட் மேசையிலிருந்து தவறிக் கீழே விழுந்திருந்தது. அதையெடுத்துக் கொடுத்தபோது, அவளது புகைப்படம் இருந்த பக்கத்தில் -அவளின் பெயருக்கருகில்- குடும்பப் பெயராக 'அசுந்தா' என எழுதப்பட்டிருந்தது.
000000000000000000000000000
Nov, 2011
ஓவியம்: Nicole Helbig & Darly Urig
(நன்றி: தீராநதி, ஏப்ரல் 2012)
0 comments:
Post a Comment