கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புஷ்பராணியின் 'அகாலம்'

Tuesday, August 07, 2012

-புஷ்பராணியின் ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகளை முன்வைத்து-


ஈழப்போராட்டத்தின் சாட்சிகளில் ஒன்றாய், முதன் முதன்முதலாக ஒரு
பெண்ணுடைய அனுபவங்களிலிருந்து 'அகாலம்' முகிழ்ந்திருக்கின்றது. ஈழப்போராட்டத்தின் தொடக்ககால முன்னோடியான புஷ்பராணியைப் பலர் ஏற்கனவே அறிந்திருப்பார்கள்.அவருடையஅனுபவங்களினூடாகவே 'அகாலம்' என்கின்ற இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.1970களில் ஈழத்தில் நடந்த அகிம்சைப் போராட்டங்களில் பங்குபெற்றி அதன் நீட்சியில் ஆயுதம் ஏந்திப் போராடுதலே விடுதலைக்கான ஒரு வழி என்கின்ற ஆரம்பப் புள்ளிவரை வந்த ஒரு செயற்பாட்டாளராக புஷ்பராணி தன்னை இந்நூலில் நிலை நிறுத்திக் கொள்கிறார்

இந்நூலில் 1975ம் ஆண்டு நடந்த உலகத் தமிழாராய்ச்சி படுகொலைகள் பற்றிய விபரங்களை நேரே நின்ற பார்த்த ஒரு சாட்சியாக புஷ்பராணி எழுதுவது மிக முக்கியமான ஒரு பதிவாகும். இதுவரை ஒருசாரார் தமிழாராய்ச்சி மாநாட்டில் இறந்த 9 பேரும் மின்சாரக் கம்பி தாங்கி இறந்தார்கள் எனவும், இன்னொரு சாரார் பொலிஸின் காட்டுமிராண்டித் தாக்குதலால்தான் இறந்தார்களெனவும் தமக்குத் தெரிந்தமாதிரி எழுதிக்கொண்டிருக்கும்போது புஷ்பராணி உள்ளதை உள்ளபடி 'அகாலத்தில்' உரைக்கின்றார். 1975ம் ஆண்டு ஜனவரி 10ல் 'மாநாட்டில் வந்த ஊர்திகளில் ஒரு ஊர்தியில் கட்டப்பட்டிருந்த உலோகத்தாலான கொடிக்கம்பம் மின்சாரக் கம்பியைத் தொட்டதினால் ஊர்தியில் வந்த இருவர் முதலில் பலியானார்கள். அதனால் ஏற்பட்ட குழப்பத்தைக் காவல்துறையினர் பயன்படுத்திக் கொண்டார்கள். மாநாடு குறித்து அரசிற்கு ஏற்கனவே இருந்த புகைச்சல் அங்கே கண்ணீர்ப் புகைக்குண்டுகளாகவும், துப்பாக்கிக் குண்டுகளாகவும் வெடித்தன. மொத்தமாக ஒன்பது தமிழர்கள் அன்று கொல்லப்பட்டனர் ('அகாலம்' 55)'.

இவற்றையெல்லாம் விட, தான் நம்பிய இயக்கத்திற்காய் புலோலி வங்கிக் கொள்ளையின் மூலம் கிடைத்த நகைகளைக் கொழும்புக் கடத்த உதவியதற்காய் புஷ்பராணி கைது செய்யப்பட்டு மிகக்கொடூரமான சித்திரவதை பொலிஸாரினால் செய்யப்படுகின்றார்தன் கடும் சிறை அனுபவங்களினூடும் புஷ்பராணி, தான் நம்பிய இயக்கத்து உறுப்பினர்களை காட்டிக் கொடுக்காது இலட்சியப் பிடிப்புள்ள உறுதியான ஒரு தோழியாக இருந்திருக்கின்றார்பின்பு வெலிக்கடைச் சிறையில் அத்தனை அவலங்களோடும் சிங்களத் தோழிகளோடு அவருக்கு முகிழும் நட்பு மற்றும் அனைவரையும் நேசிக்கும் மிகச் சிறந்த மனிதப்பண்பு என இந்நூலில் புஷ்பராணியின் அனுபவங்களை விரிவாக வாசிக்க முடியும்.

வெலிக்கடைச் சிறைக்கு புஷ்பராணி கொண்டு செல்லப்படும்போது அங்கே கைதிகளாக இருந்த தமிழ் இளைஞர்கள் புஷ்பராணியைச் சித்திரவதை செய்த பொலிஸாரைக் கொலை செய்வோமென சூளுரைக்கின்றார்கள். கூறியது போலவே அந்தப் பொலிஸ்காரர்கள் பின்னாளில் இயக்கங்களினால் கொல்லப்படுகின்றார்கள். இந்நூலில் அச்சம்பவங்களை விபரிக்கும் புஷ்பராணி இக்கொலைகளை ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது மறுதலிக்கின்றாரா என்பது வாசிப்பவருக்குச் சற்று மங்கலாகவே தெரிகிறது. அதே போன்று நூலை முடிக்கும்போது புஷ்பராணி கூட்டணியினர் மீது அதிகம் சாய்ந்து விடுபவராகச் சென்றுவிடுவதும் சற்று வியப்பாய்த்தானிருக்கிறது. உணர்ச்சியரசியலை ஊட்டி ஒரு தலைமுறையையே ஆயுதங்களின் பக்கம் திரும்பி, என்றுமே நிகழமுடியாத ஒரு பெருங்கனவைத் திணித்தவர்களான கூட்டணியினரை அவ்வளவு எளிதாக ஈழப்போராட்டம் என்னும் வரலாற்றிலிருந்து விடுதலை செய்துவிட முடியாது என்பதை நாமனைவரும் அறிவோம். கூட்டணியினர் ஏனைய இயக்கங்களைப் போல ஆயுதந்தாங்கியவர்கள் இல்லை என்றாலும் அடுத்த தேர்தலைத் தமிழீழத்தில் சந்திப்போம் என முழங்கி, பின்னால் வந்த எல்லா தலைமுறைக்கும் போர் என்னும் சாபத்தை வாங்கித் தந்தவர்கள் அவர்களல்லவா? இன்னும் நூலில் கூட்டணியினர் பலர் தொடக்க காலத்தில் புலிகள் மற்றும் ரெலோவினால கொல்லப்பட்டார்கள் என்பதைப் பதிவு செய்கின்ற புஷ்பராணி பிறகான காலங்களில் கூட்டணியில் இருந்தவர்கள் இலங்கை அரசாலோ அல்லது அதனோடு சேர்ந்தியங்கும் குழுக்களாலோ கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதை எங்கும் பதிவு செய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இவ்வாறான சில விமர்சனங்களுக்கு அப்பாலும், இந்நூலில் பல சம்பவங்களை, போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்து இன்று வரலாற்றில் இல்லாமலே போனவர்களை எல்லாம் விரிவாக புஷ்பராணி பதிவு செய்திருப்பதை மிக முக்கியமானதாய்க் கொள்ளவேண்டும். இறுதியில் புஷ்பராணி 'எனது அன்பான வாசகரே' என்ற அத்தியாயத்தில் 'ஆயுதப் போராட்டத்திற்கான எண்ணக் கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்றவகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப் போராட்டத்தில் நல்ல போராட்டம், மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே. அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறொன்றிற்கும் அது பயன்படாது' என்று கூறுவது கவனத்தில் கொள்ளவேண்டியது. இன்னமும் ஈழத்தில் முடிந்துவிடாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஏதோ ஒருவகையில் முன்னேடுக்க விரும்பும் அனைவரும் -முக்கியமாய் ஈழத்தில் ஒடுக்குமுறைக்குள் வாழ்கின்ற அடுத்த தலைமுறை- புஷ்பராணியின் நூலிருந்து தனக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வரலாற்றின் இன்னொரு வட்டத்தில் நுழைந்து மீண்டுமொரு பேரழிவிற்குள் மக்களைக் கொண்டு செல்வதாகவே முடிந்துவிடும் அபாயமே நம் முன்னால் இருக்கின்றது.

புஷ்பராணியின் அரசியல் செயற்பாடு தொடங்குவதே, அன்று கீரிமலையில் புத்தவிகாரை கட்டப்பட்டதற்கும் அதைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்றங்கள் நடத்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே தொடங்குகின்றது. இன்றும் மகிந்த ராஜபக்சே அதையேதான் இன்னொருவிதமாய்ச் செய்வதாக புஷ்பராணி இந்நூலில் குறிப்பிடுவும் செய்கின்றார். ஆக வரலாறு மீண்டும் ஒரு வட்டத்தில் முடிந்து அதே விதமான இன்னொரு வட்டத்தில் தொடங்குவதை நாம் அவதானிக்க முடியும். ஆனால் தமிழர்கள் தாம் கடந்தகாலத்தில் செய்த தவறுகளை இன்னொரு முறை செய்ய முடியாது. ஒடுக்குமுறைக்கும் அநியாயங்களுக்கும் எதிர்ப்புக் காட்டவேண்டுந்தான் ஆனால் அது கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து புதிய சிந்தனைகளின் வழி நகரவேண்டும் என்பதை முன் நிபந்தனையாகக் கொள்ளுதல் வேண்டும்இந்நூலில் இருந்து முக்கியமான ஒரு கற்றலாய் 'உணர்ச்சி அரசியலில்' இருந்து விடுபடுதலாக இருக்கவேண்டும்..இல்லாவிட்டால் இவ்வெதிர்ப்பு அரசியல் எதிர்காலத்தில் எளிதாக வன்முறை அரசியலுக்குள் நுழைந்துவிடுகின்ற அபாயம் இருப்பதை நாமனைவரும் அறிவோம்.

முன்னுரையில் கருணாகரன் குறிப்பிடுவதைப் போல புஷ்பராணி 'தன்னுடைய சாதி, தன்னுடைய குடும்ப நிலைமை, தன்னுடைய திருமண வாழ்க்கை எனச் சகலதைப் பற்றியும் அவர் முற்றிலும் வெளிப்படையாகவே பேசுகிறார். எதற்கும் அவர் கூச்சப்படவில்லை. எதையிட்டும் அவர் தயக்கங்களைக் காட்ட விரும்பவில்லை. எதையும் மறைக்கவேண்டும் என்று அவர் உணரவில்லை. திறக்கப்பட்ட புத்தகமாகவே தன்னுடைய அனுபவங்களை அவர் விரித்து வைக்கிறார்' என்பதை இந்நூலை வாசிக்கும் அனைவருமே எளிதாக அறிவர். இத்தகைய விடயங்களில் இதுவரை ஈழப்போராட்டத்தின் வரலாற்றை எழுதிய ஆண்கள் கூட சற்றுப் பின் தங்கியே நிற்கின்றார்கள் என்பதை ஒரு அவதானமாக நாம் முன்வைக்க முடியும். ஒரு ஆணுக்கு அரசியல் மட்டுமே உலகமாக இருக்கும்போது, ஒரு பெண்ணுக்கு அவளது அரசியலோடு முழு வாழ்க்கையையுமே தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால் எல்லாவற்றையும் பேசவேண்டியிருக்கின்றது என்பதே யதார்த்தம். அந்த வித்தியாசமே புஷ்பராணியின் 'அகாலத்தை' இன்னும் முக்கியப்படுத்துவதாய் இருக்கின்றது. நம் ஈழப்போராட்ட தலைமை முழுதுமே ஆண்களாலே காலத்துக்குக் காலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணுக்கு அல்லது பெண்களுக்கு போராடத்தின் தலைமைக்கான வகிபாகம் உரியமுறையில் வழங்கப்பட்டிருந்தால்  எம் போராட்டம் இத்தகைய அழிவுக்குச் சென்றிருக்காதோ எனச் சிந்திப்பதற்கான தொடக்கப் புள்ளியாக புஷ்பராணியின் 'அகாலத்தை' நாம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு நேர்காணலில் 'நான் எப்போது அடிமையாயிருந்தேன், விடுதலை பெற' என மிகுந்த ஓர்மத்துடன் கூறும் புஷ்பராணி என்கின்ற தொடக்ககாலப் போராளியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கின்றது.

அதேபோன்று, நம்பிக்கை தராத இன்றைய காலத்து ஈழத்து நிலைமையை... 'எங்களது முற்றங்களிலிருந்து ஆயுதப்படையினர் எப்போது நீங்குவார்கள் என்பதும் தெரியாது. தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வுகள் கிட்டும் என்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லைஇலங்கை அதிபரின் குரலில் சமாதானத்தின் தொனியை அல்லாமல் வெற்றியின் எக்காளத்தையே நான் காண்கிறேன் ( 192)' எனப் புஷ்பராணி எழுதுகின்றார். இது புஷ்பராணியின் குரல் மட்டுமில்லை இன்றைய ஈழத்து யதார்த்தம் அறிந்த பெரும்பான்மையானவர்களின் குரல்களாகவும் இவையே இருக்கின்றன என்பதே உண்மையாகும்.

(நன்றி: 'அம்ருதா, ஓகஸ்ட், 2012)

3 comments:

அப்பாதுரை said...

படிக்கத் தூண்டும் விமரிசனம்.
புத்தகம் எங்கே கிடைக்கும்? பதிப்பக தொடர்பு விவரம் வெளியிடுவீர்களா?

8/11/2012 07:50:00 PM
DJ said...

அப்பாத்துரை,
'அகாலம்' புத்தகத்தை 'கருப்பு பிரதிகள்' வெளியிட்டிருக்கிறது. அவர்களின் மின்னஞ்சல் முகவரி இது:karuppupradhikal@gmail.com, Cell:94442 72500. அவர்களோடு தொடர்புகொண்டால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அண்மையில் பெறக்கூடிய விபரத்தைத் தரக்கூடும்.

8/11/2012 08:39:00 PM
அப்பாதுரை said...

நன்றி

8/14/2012 03:11:00 PM