கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணங்கள்

Friday, November 09, 2012

1.
பயணங்கள் எப்போதும் சுவாரசியமானவை. பயணம் போய்ச் சேரும் இடத்திற்கு மட்டுமில்லை, அதற்கு முன்பான ஆயத்தங்கள், தேடல்கள் போன்றவற்றோடேயே ஒரு மகிழ்ச்சியான மனோநிலை வந்துவிடும். ‘பயணிக்க விரும்பமில்லை’ எனக் கூறுபவர்கள் மிக அரிதாகவே இருப்பார்கள் எனத்தான் நினைக்கிறேன். மேலும் சங்கப்பாடலே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கின்றபோதே பயணஞ் செய்தல் என்பது நம் கலாசாரத்தின் ஒருபகுதியாக இருந்திருக்கவேண்டும் போலத் தோன்றுகிறது.. சிறுவயதிலில் போரின் நிமித்தம் அலைந்துழலும் வாழ்வு வாய்த்திருந்ததால், எவ்விதத் தடையுமில்லாது பயணிப்பது என்பது பெருங் கனவாய் இருந்தது. அதனால் தான் என்னவோ இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறியபோது வந்த சமாதான காலத்தில் நான் பத்து அல்லது பதினொரு வயதில் எழுதிய கதையும் காங்கேசந்துறை-பலாலி- யாழ் நகரம் நோக்கி நடந்து போகும் நான்கு சிறுவர்களைப் பற்றியதாகவே இருந்திருந்தது. ஒரு பத்து இருபது கிலோமீற்றர் நீளமான அந்தப் பயணத்தின் முடிவிலும் மீண்டும் போர் தொடங்குவதாகவும் அந்தச் சிறுவர்கள் அனைவரும் விமானத் தாக்குதலில் கொல்லப்படுவதாகவும் அந்தக் கதையை முடித்திருந்தேன். பயணம் தரும் மகிழ்ச்சியை விட மரணந்தரும் அச்சமே அன்றைய காலத்தில் மிகப் பெரியதாக இருந்திருக்கிறது போலும்.

எங்கே பயணித்தாலும் அந்த இடங்களில் இருக்கும் வசதிகளோடு சமாளிக்கக் கூடியவர்களே பயணங்களே மகிழ்வுடைய நிகழ்வுகளாக மாற்றுகின்றார்கள்.. சிலர் தாம் பயணிக்கும் இடங்களுக்கும் தமது வீட்டில் இருக்கும் வசதிகளைக் காவிக்கொண்டு செல்ல விரும்புவார்கள். அவர்களால் போகுமிடங்களிற்கேற்ப தங்களைத் தகவமைக்க முடியாது. கியூபா போன்ற வெப்ப வலய நாடுகளுக்கு கனடாவிலிருந்து போகும் பலர் அங்கே கரப்பான் பூச்சி இருக்கிறது, நுளம்பு கடிக்கிறதென்று புகார் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இது கனடாவிற்கு சுற்றுலாப் பயணியாய் வரும் ஒருவர், ‘இங்கே ஒரே பனிக்கட்டியாய் இருக்கிறது, இதை இல்லாமற் செய்ய முடியுமா?’ எனக் கூறுவதற்கு நிகர்த்தது. ஒவ்வொரு இடங்களுக்கென ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. அதுவேதான் அந்த இடத்திற்குரிய இயல்பும் அழகும் என எடுத்துக்கொண்டால் நாம் பயணிக்கும் ஒவ்வொரு இடங்களையும் சுவாரசியமான நினைவுகளாய் மாற்றிக் கொள்ள முடியும்.

என்னோடு கூடவே அதிகம் பயணிக்கும் என் நண்பர், ஒவ்வொரு நாட்டினுடைய கலாசாரங்களையும் அவர்களின் உணவுகளினூடாக அறிந்து கொள்ள முடியுமென்று கூறுவார். Eat, Pray Love என நாவலாய் எழுதப்பட்டு அண்மையில் திரைப்படமாய் எடுக்கப்பட்ட கதையும்  பயணஞ் செய்தலை மிக அழகியலாக காட்சிப்படுத்துகின்றது. விளையாட்டுத்தனமும், வெகுளித்தனமுமாய் இருந்த சேகுவேராவை அற்புதமான புரட்சியாளனாக மாற்றுவதற்கு அவர் செய்த பயணங்களும் ஒரு காரணம் என்பதைத்தானே மோட்டர் சைக்கிள் டயரி நமக்கு எடுத்து இயம்புகிறது. ஆக ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமான முறைகளினூடு தாம் பயணிக்கும் இடங்களை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள் போலும்.

2.
இம்முறை கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் வருவதென நண்பரும் நானும் தீர்மானித்து, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகிய மூன்று நாடுகளைத் தேர்ந்தெடுத்தோம். இம்மூன்றின் தலைநகர்களான வியன்னாவும் (Vienna), ப்ராட்டிஸிலாவாவும் (Bratislava), வூட்டாபெஸ்ட்டும் (Budapest) , டானுபி(Danube) என்கின்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. முன்னோர்காலத்தில் ஆற்றங்கரையில் அல்லவா நாகரீகங்கள் தோன்றியுமிருக்கின்றன. அதை இன்னும் மறக்காமல் இவர்களும் ஆற்றின் ஓரத்தில் தலைநகரங்களை ஆக்கினார்களோ தெரியாது. அநேக ஐரோப்பிய நகரங்களைப் போல கலைகளின் நகர்கள் என்றேதான் இவற்றையும் கூறவேண்டும். இப்படிக் கூறுவதால் மற்ற நாடுகள் கலைகளின் சுவடுகள் இல்லாத நாடுகள் என்கிற அர்த்தமில்லை. இவர்கள் கலைகளை ஆராதிப்பவர்கள் ஆகவே அவற்றை ஏதோ ஒருவகையில் அழிந்துபோகாமல் காப்பாற்றியபடி இருக்கின்றார்கள். மேலும் அவர்களுக்கு தம் புராதனம் மீது  அளவிட முடியாப் பெருமையும் இருக்கிறது.

சென்ற வருடம் ஹலண்டில் ஒரு வரலாற்று மியூசியத்திற்குப் போயிருந்தேன். அங்கே பழம் பெருமைமிக்க தங்கள் கடற்கலங்களை மிகப் பிரமாண்டமாய் வடிவமைத்தும் கண்ணைக்கவரும் பல நூற்றாண்டு ஓவியங்களையும் காட்சிக்காய் வைத்திருந்தார்கள். அதன் மூலம் அவர்களின் நூற்றாண்டு காலப் பெருமை விளங்கிக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் எனக்கு அவற்றைப் பார்த்தபோது இந்தக் கப்பற்களைக் கொண்டுதானே எத்தனையோ வளமான நாடுகளை அடிமையாக்கி தம் காலனித்துவ நாடாக்கி அங்கிருந்த செல்வங்களைச் சுரண்டினார்கள் என்பது நினைவுக்கு வந்தது. மற்றது இவ்வாறான கப்பல்கள் மூலந்தானே மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய அடிமை வியாபாரங்களையும் அமோகமாய் நடத்தினார்கள் என்கிற எண்ணங்கள் எல்லாம் வந்து போயிற்று.

2.
ஆஸ்திரியாவிற்குப் போனபோது, வியன்னாவில் பிரபல்யம் வாய்ந்த ஓவியரான கிளிம்டின் (Klimt) நூற்றைம்பதாவது பிறந்தநாளைக் கோலாகலமாய்க் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிம்டின் ஓவியங்கள் பல்வேறு மியூசியங்களில் பகுதி பகுதியாய் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் அவரின் புகழ்பெற்ற முத்தம் (Kiss ) உள்ளிட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெல்பேடேயர் மாளிகையைத் தேர்ந்தெடுத்துப் போயிருந்தோம். பல்வேறு ஓவிய முயற்சிகள் செய்து பார்த்த கிளிம்டிற்கு தனித்துவமான ஓர் அடையாளத்தைக் கொடுத்தது தங்க வர்ணம் பூசிய Kiss மற்றும்  Portrait of Adele Bloch-Bauer I போன்ற ஓவியங்களே ஆகும்.

அங்கிருந்து மொசார்ட்டின் நினைவிடமிருக்கும் வியன்னாவின் மத்தியிற்குப் பயணித்தோம்மொஸாட்டின் நினைவிடத்திற்கு பின்னால் Hofburg என்கின்ற மாளிகை இருக்கிறது. புராதனத்தின் பழுப்பு மிளிர அதைப் பார்ப்பது இன்னும் நெகிழ்வைத் தரக்கூடியது. நாங்கள் போயிருந்த மாலைப் பொழுதில் மழை வேறு பெய்துகொண்டிருந்தது. இங்கேதான் ஹிட்லர் ஆஸ்திரியாவைக் கைப்பற்றியபின் உரையாற்றினார் என்ற தகவல் குறிப்பை வாசித்தபோது இம்மாளிகை அவ்விரவில் இன்னொருவிதமாய் என் மனதில் விரிந்துகொண்டு போனது. ஆஸ்திரியா, அரசர்களுக்கும் அரசிகளுக்கும் குறைவில்லாத நாடென்பதால் எங்கு திரும்பினாலும் ஏதோ வரலாற்றுத் தடம் இருக்கின்றது. வியன்னா நகரைவிட்டு நீங்கி ஒரு அரசியின் கோடைகால மாளிகையை எட்டிப் பார்த்தோம்.. மிகப் பிரமாண்டமான வெள்ளைப் பளிங்கு மாளிகை, மலையில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முகப்பு வாயில் அமைந்த உயரத்தை ஏறி அடைந்தபோது வியன்னாவின் ஒரு பகுதியை மேலிருந்து பார்க்கக் கூடியதாக இருந்தது. அப்போது சூரியனும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்ததில் முழுநகருமே தங்கமாய் ஒளிர்வது போலத் தோன்றியது.

ஒரு நாட்டை அதன் தலைநகரினாலோ அல்லது பெருநகரங்களினூடாக மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது. உண்மையான அழகும் துடிப்பும் சிறுநகர்களிலேயேதான் மறைந்து கிடக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். நாங்களும் வியன்னாவை விட்டு விலகி ஆஸ்திரியாவின் சிறுநகர்கள் சிலவற்றுக்குப் போவோம் எனத் தீர்மானித்து இரெயினும் படகும் இணைந்த ஒரு பயணத்தை(Melk-Kram) மேற்கொண்டோம். பலநகர்களை ஊடறுத்துப் போன இரெயில் பயணம் Melkல் இருந்த ஒரு பழமை வாய்ந்த தேவாலயத்திற்கருகில் தரித்து நின்றது. எனக்கு வரலாற்றைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வமிருப்பதில்லை.ஆனால் என்னோடு வந்த நண்பருக்கு வரலாறு என்பது அள்ள அள்ள முடிவிலாச் சுவாரசியங்களைத் தந்துகொண்டிருக்கும் ஒரு வற்றா ஊற்று. ஆகவே அவர் தேவாலயத்தை மிகவும் ஆராய்ந்து கொண்டிருந்தார். எனக்கு அங்கிருந்த மாடவிதானத்தில் வரையப்பட்டிருந்த ஓவியங்களும், இரண்டு மாடிகளில் அமைந்திருந்த நூலகமுமே கவர்ந்திருந்தன.

பொன்னிறப் பூச்சுப் பூசிய, எங்கும் கிடைக்க முடியாத அசல் பிரதிகள் அங்கே பல்வேறு பிரிவுகளில் வைத்திருந்தார்கள். தேவாலயத்தின் எங்கும் புகைப்படம் எடுக்க அனுமதித்தவர்கள் நூலகத்தை மட்டும் புகைப்படம் எடுக்க முடியாதென உறுதியாய்ச் சொல்லியிருந்தார்கள். இத்தேவாலயத்தின் அமைப்பையும் நூலகத்தையும் பார்த்துவிட்டு எனது நண்பர் இது தனக்கு உம்பர்த்தோ ஈக்கோவின் 'ரோஜாவின் பெயரை’ நினைவுபடுத்துகிறது என்றார். தேவாலயத்தையும் அதனோடு அமைந்திருந்த இயற்கை மூலிகைத் தோட்டத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, படகெடுத்து இன்னொரு நகருக்குப் (Kram) புறப்பட்டோம். நதி வழியே படகு நகர்ந்தபோது கண்ணில் தென்பட்ட சில மலைகளில், உடைந்துபோன கோட்டைகளின் மிச்சங்கள் இருப்பதைக் கண்டோம். இன்னொருபுறம் மலைகளில் வைனுக்கான திராட்சைகளைப் பயிரிட்டிருந்தார்கள்.

3.
வியன்னாவிலிருந்து ஸ்லோவாக்கியாவிற்கு பஸ்ஸில் போக ஒரு மணித்தியாலம் அளவே எடுக்கும். அவ்வளவு அருகில் இருக்கிறது ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிரட்டிஸிலாவா. இங்கேயும் நிறையக் கோட்டைகள் இருக்கின்றன. ஸ்லோவாக்கிய மக்கள் ஆட்டுத் தயிரைத் தமது உணவுகளில் நிறையப் பாவிக்கின்றார்கள். நாங்கள் போயிருந்த நேரம் சில பப்புகளில் மாணவர்கள் பரீட்சை நேரத்தில் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பார்கள் என்பதால் பியர்களை மலிவு விலையில் வேறு அவர்களுக்காய் விற்றுக்கொண்டிருந்தார்கள்.  

பிரட்டிஸிலாவாவில் இருந்து மூன்று மணி நேர இரெயின் பயணத்தின் ஹங்கேரியின் தலைநகரான வூட்டாபெஸ்டை அடைய முடிந்திருந்தது. ஒரு நதி இரண்டாய்ப் பிரிக்க இருந்த வூடாவையும் பெஸ்டாவையும் பாலம் கட்டி இணைத்துத் தலைநகர் ஆக்கியிருக்கின்றார்கள். புகைப்படங்களில்/திரைப்படங்களில் பார்த்திருந்ந்த சோவியத்து (ரஷ்ய) கட்டிடக் கலைகளை இந்நகர் நினைவுபடுத்தியபடியிருந்தது. அவர்களுக்கு மிளகாய் ஒரு முக்கிய அடையாளம். பல கடைகளில் அதைக் கட்டித் தூங்க வைத்திருந்தார்கள்.

பயணங்கள் எப்போதும் எங்களை புத்துயிர்ப்பாக்குகின்றன. எப்படி நூற்கள் எங்களுக்குத் தெரியாத இடங்களை அறிமுகப்படுத்துகின்றனவோ அதைப் போன்றே ஒவ்வொரு பயணமும் நமக்குத் தெரியாத புதிய நிலப்பரப்பை, மொழியை, கலாசாரத்தை நெருக்கம் கொள்ளச் செய்கின்றன. ஒவ்வொரு நகரமும் ஒரு பயணியை முதலில் அந்நியனைரைப் போலத்தான் முகர்ந்து சந்தேகத்துடன்தான் வரவேற்கிறது. ஆனால் நமக்கு அந்நகரின் மீது பிரியத்தினால்தான் இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கின்றோம் என அந்நகர் அறிகின்றபோது அது எங்களை  நெருக்கமாய் அணைத்துக் கொள்கிறது. பின்னர் நாம் அறிந்து கொள்வதற்கான தன வழிகளை அகலத் திறந்து வைத்துப் புன்னகைக்கின்றது. ஒரு நண்பனைரைப் போல நெருக்கம் கொள்கின்ற ஒரு நகரிலிருந்து பிறகு பிரியாவிடை பெற்றுப் போவது என்பதும் அவ்வளவு எளிதான விடயமும் அல்ல. 

(இன்னும் வரும்...)
நன்றி: அம்ருதா (கார்த்திகை, 2012)

0 comments: