புத்தரும் நானும்

புத்தரும் நானும்
அனுபவப்புனைவு

சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்தொகுப்பு
திறனாய்வு

கள்ளி

கள்ளி
கதை

கவிதை

கவிதை
ஆங்கிலம்

அம்ருதா பத்தி தொடர்ச்சி...

Saturday, November 10, 2012


4.
நூலகம் இணையத் தளத்தைப் பலர் அறிந்திருப்பீர்கள்.  ஈழத்தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அங்கே எவரும் எங்கிருந்தும் இலவசமாகப் பார்வையிடமுடியும். தன்னார்வலர் பலரின் உழைப்பில் எவ்வித அரசியலுக்குள்ளும் நுழைந்துவிடாமல் நூற்கள்/பிரசுரங்கள்/சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கான முதல் விதையைத் தூவியவர்களில் ஒருவர் ஈழநாதன். அதற்காய் பல வழிகளிலும் உதவியுமிருக்கின்றார்.

நூலகம் போன்ற இன்னும் பல கனவுகளோடு இருந்த முப்பத்தொரு வயதான ஈழநாதன் இன்று நம்மிடையே இல்லை. அண்மையில் அவர் அகால மரணமடைந்திருக்கின்றார். 2004-2006 காலப்பகுதியில் இணையத்தில் தீவிரமாய் அவர் இயங்கிய காலங்களில் என்னைப் போன்ற பலர் அவரோடு நண்பராக முடிந்திருந்தது. ஈழநாதனின் மரணததைக் கேள்வியுற்ற பொழுதில் திருமாவளவன் எழுதிய ஒரு கவிதையின் சிலபகுதிகள்தான் நினைவுக்கு வந்தது.

"...போர்
தவிர்த்து
நீள்பயணம் நடந்து
நெடுநாள் கழிந்தும்
காலடிக்கீழ்
பெருநிழலாய்த்
தொடரும் போர்."


5.
கனடாவில் 'தேடகம்' குழுவினர் அண்மையில் இரண்டு நாள் கருத்தரங்கைப் பல்வேறு பேசுபொருளில் நடத்தியிருந்தார்கள். முழுதாய் எல்லா நிகழ்வுகளிலும் பங்குபெற முடியாவிட்டாலும் தற்பாலினர் குறித்த அமர்வு முக்கியமானதாய் இருந்தது. அதிலும் ஓரினப்பாலினரான விஜய் தனது சொந்த அனுபவங்களினூடாக வாசித்த கட்டுரை கேட்கக் கூடியவர்களை நெகிழச் செய்யக் கூடியது. சிறுவயதுகளிலேயே தன்னால் ஆண்கள் செய்யும் விளையாட்டுக்களில் ஈடுபடாது தனித்து இருப்பதைப் பார்த்து, மற்றவர்கள் எப்படித் தன்னை கொச்சையான மொழியில் கேலி செய்தார்கள் என்பதையும் அதைத் தாங்கமுடியாத தன் தகப்பன் தனக்கு உடனேயே சைக்கிள் பழக்கினார் என்பதையும் தன்னால் அதை ஒருநாளுக்குள் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றபோதும் விழ விழ அப்பா சைக்கிளைக் கற்றுத் தர முயற்சித்தார் என்பதையும் தன் அனுபவங்களினூடாக விபரித்திருந்தார்.

மேலும் தன்னோடு விளையாட வந்த நண்பர்கள் எல்லாம் பார்த்திருக்க, தான் சைக்கிள் பழக்வேண்டிய நிர்ப்பந்தத்தையும், இறுதியில் மழை வந்து தன்னைக் காப்பாற்றியது என்பது பற்றியும் அவ்வர் விபரித்தபோது கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. இவ்வாறாக பல்வேறு நிலைகளில் உறவுகளாலும் சமூகத்தாலும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டபோதும் எவரையும் வெறுக்காது எல்லோரையும் தன்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது என அவர் உரையை முடித்தபோது நாம் நமக்கிருக்கும் privilegeகளை மீண்டுமொரு நினைத்துப் பார்க்கும் நிலையை அவர் ஏற்படுத்தியிருந்தார்

அதேபோன்று தொலைவில் வளாகத்தில் பிற சமூகத்து மாணவர்களோடு அறையைப் பகிர்ந்தபடி இருந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒருமுறை தனக்குப் பிடித்த சோற்றையும் மீன்கறியையும் செய்து கையால் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது 'ஏன் நீ முள்ளுக்கரண்டியைப் பாவிக்கலாம்தானே?' என்று தன் நண்பன் கூறியபோது தனக்கு தன் (தமிழ் சார்ந்த) அடையாளம் குறித்த கேள்வி எழும்பியததையும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கேள்வியே தன்னைத் தான் பிறந்து வளர்ந்த சமூகத்திற்குள் மீண்டும் வரவேண்டிய விருப்பை ஏற்படுத்தியதனவும் பல்வேறு உதாரணங்களோடு பேசியிருந்தார்.

நம் சமூகம் தற்பாலினரையும் திருநங்கைகளையும் விளிம்புநிலையாக்கியப்போதும் அவர்கள் நம்மில் ஒருவராய் இருக்க எவ்வளவு போராட்டங்களை நடத்துகின்றார்கள் என்பதை அறிவதில் அவ்வளவு அக்கறை கொள்வதேயில்லை, நாம் எதை எம் அடையாளங்களாய் வைத்துக் கொள்ள விரும்புகின்றோமோ அதைத்தான் அவர்களும் உதறித்தள்ளாது வைத்துக்கொள்ளவும் விரும்புகின்றார்கள் என்பதையும் நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்? உண்மையில் இதையெல்லாம் புரிந்துகொண்டிருப்போம் என்றால் அவர்களை நம்மிலிருந்து விலத்தி ஒதுக்கி வைத்திருக்கவே மாட்டோம். நாம் நமக்குரிய சலுகைகளை உணர்ந்து விமர்சித்துக்கொண்டால் மட்டுமே இவ்வாறு விளிம்புநிலையாக்கப்பட்டவர்களின் துயரங்களையும் தத்தளிப்புக்களையும் விளங்கிக்கொள்ளமுடியும். ஆகக்குறைந்தது அவர்களும் நம்மில் ஒருவரே என்கின்ற எளிய புரிதலுக்கு வருவதற்காகவேனும் நமக்கு இயல்பிலேயே ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் சலுகைகளை முதலில் உதறித்தள்ளிவிட்டு வெளியே வரவேண்டும்.

--------------
நன்றி: அம்ருதா (கார்த்திகை/12)
புகைப்படங்கள்: (1) ஈழநாதனின் முகநூல்  (2) ரஃபேல்

0 comments: