உங்களுக்காய் ஒரு நாள் இனிதாய் விடிகிறது. மென்வெயிலும் முற்றத்த்தில் சிறகடிக்கும் பறக்கும் சாம்பல்நிற flycatcher களும், செம்மஞ்சள்நிற ரொபின்களும் விடியலுக்கு வேறொரு வனப்பைத் தந்துவிடுகின்றன. என்றோ ஒருநாள் குதூகலத்தின் எல்லையில் நீங்கள் ஏவிவிட்ட வெடியொன்று பக்கத்து வீட்டுக் கூரையை உரசியதால் உங்களோடு முரண்பட்டு, முகத்தை இறுக்கமாய் வைத்திருப்பவர் கூட, புற்களைப் பராமரித்தபடி வழமைக்கு மாறாய் காலை வணக்கம் கூறுகின்றார். மேலும் இன்று நீங்கள் உங்களுக்கு மிகப்பிடித்தமான ஆடையையும் அணிந்திருக்கின்றீர்கள் என்பதால் உங்கள் பெருமிதம் உங்கள் உயரத்தை ஓரங்குலம் உயர்த்தியும் விட்டிருக்கின்றது.
காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி நடக்கத் தொடங்குகின்றீர்கள். உங்களுக்குப் பிடித்த Katy Perryயின் "You don't have to feel like a wasted space/ You're original, cannot be replaced/If you only knew what the future holds/ After a hurricane comes a rainbow" குரல் இழைய இழைய நீங்கள் வானத்தில் பறக்கத் தொடங்கியும் விடுகின்றீர்கள். ஏறும் பஸ்சில் நெரிசல்தானென்றாலும் உங்களுக்குப் பிடித்த அடிக்கடி சந்திக்கின்ற இரண்டு பெண்களும் ஏறிவிடுவதால் அது அலுப்பான பயணமாகவும் தெரியவில்லை. பஸ்சிலிருந்து இறங்கி சப்வே இரெயின் எடுக்கப்போகும்போது -மூன்றாவதான -மீண்டுமொருமுறை திருப்பிப் பார்க்கவைக்கும் பெண்ணைச் சந்திக்கின்றீர்கள்.
இரசிக்க விருப்பமிருப்பினும் பார்வையை எப்படியோ சுழித்து நெளித்து ஒரு பரவளைவாடியைப் போல - அந்தப் பெண் உங்கள் முன்னே நடந்துபோனாலும்- ஒருமாதிரியாக திசையை மாற்றிவிடுகிறீர்கள். யவனத்தை இரசிப்பதற்கும், யதார்த்தத்தில் வாழ்வதற்கும் காலங்காலமாய் நடக்கும் சமர் போலும். எனினும் நேற்றிரவு வாசித்த ஒரு பெண்ணின் நேர்காணலில் 'உங்களுக்குப் பிடிக்காத விடயம் என்ன'வெனக் கேட்கப்பட்டபோது, 'ஒரு ஆண் கொஞ்ச விநாடிகள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாலே வெறுப்பு வந்துவிடும்' என்ற சொல்லப்பட்ட பதிலில் இதற்கு ஒரு மேலதிகமான காரணமாய்க் கூட இருக்கலாம். ஆக நீங்கள் இரசிக்க விரும்பும் உங்கள் மனதை சமரசம் செய்துவிட்டு சப்வே இரெயின் பெட்டிக்குள் இப்போது நுழைகின்றீர்கள்.
இன்று வாசிக்க பத்திரிகையை எடுத்து வராததில், நேற்றுக் கனவில் கொண்டு வந்த பெண்ணை மீண்டும் நினைவில்கொண்டு விழிகளை மூடுவதும் திறப்பதுமாய் இருக்கின்றீர்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் ஏறுகின்றார். உங்களுக்கு எல்லாவற்றிலும் சந்தேகமும் குழப்பமும் இருப்பதை அறிவோம். ஆனால் உங்களுக்கு ஒருவர் கர்ப்பிணியா அல்லது உடலின் பருமனா என்று தெளிவாய்க் கண்டுபிடிக்கும் வித்தையும் இதுவரை கைவந்ததில்லை. எப்போதும் குழப்பமுற்றபடியே இருக்கையைக் கொடுப்பதா வேண்டாமா என அடிக்கடி யோசித்துக்கொண்டிருப்பீர்கள். அதுபோலவே வயதுமுதிர்ந்தவர்களில் எவருக்கு இருக்கையைக் கொடுப்பது என்பது பற்றியும் உங்களின் குழப்பங்களை நாங்கள் அறிவோம்.
உடல் பருமனா ஒருவருக்கு இருக்கையை எழும்பிக் கொடுத்தால், அது அவரின் எடையை அவமதிப்பாய்ப் போய்விடும், அதுபோலவே வயது முதிர்ந்த எல்லோரும் அப்படி இருக்கை கொடுப்பதை 'பெருந்தன்மை'யாக நினைப்பதுமில்லை. மேலும் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்துப் பேசுவதையே எந்தப் பெண்ணும் விரும்புவார் என்பதையும் நன்கறிவீர்கள். ஆனால் வயிற்றையும் இதற்காகக் கவனிக்கவேண்டும் என்பது கஷ்டமான ஒருவிடயம். வயிற்றைப் பார்த்து எதுவெனச் சரியாகத் தெரியாது ஒருவரின் முகத்தைப் பார்த்து இடம் தரவா வேண்டாமா என யோசிப்பதற்குள், அவர் இருக்கை தேவையில்லாத ஒருவராக இருப்பின் இவனென்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறான் என அவர் நினைத்தால் பிறகு இன்னும் சிக்கலாகிவிடும். இதற்காகவே எப்போதென்றாலும் ஒரு மூலை இருக்கையை தேர்ந்தெடுக்கும் ஒருவராக நீங்கள் இருக்கவும் கூடும்.
இன்று முழங்கால் தொடும் ஒற்றைக் கறுப்பாடையை அணிந்தவரைக் கண்டவுடன், அவரின் வயிறு தெளிவாகக் காட்டிக் கொடுத்துவிட, முடிவைச் சரியாக வந்தடைந்த சந்தோசத்தில் உங்கள் இருக்கையை கொடுத்துவிடுகின்றீர்கள். அவரின் மென்குரலில் ஒலித்த நன்றி உங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.
உங்கள் வேலைத்தளத்தில், அவ்வளவு எளிதில் மனம் விட்டு எதையும் பாராட்டாத நீங்கள் உங்கள் நெடுநாள் தோழி மென்நீல ஆடை அணிந்து வந்திருப்பதைக் கண்டு, 'இன்று நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்களென' கஷ்டப்பட்டு வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்கின்றீர்கள். அவருக்கு அது மிகவும் சந்தோசம் கொடுக்கின்றது. 'நான் வித்தியாசமாய் அழகு செய்து வரவில்லை, சாதாரணமாய்த்தான் இன்று வந்தேன்' என்கின்றார். 'இயல்பாய் இருப்பதுதான் மிகுந்த அழகானது அல்லவா' என நீங்கள் கூறுகின்றீர்கள்.
அவர் உங்களுக்கு வாரவிறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தி நினைவு வருகின்றது.' நீ இப்போது மொன்றியலிலா இல்லை நியூயோர்க்கிலா நிற்கின்றாயா?' என்று. ஒரு நீண்ட வாரவிறுதி வந்தபோது இரண்டிலொன்றுக்குப் போவதென அவருட்பட்ட நண்பர்களுடன் திட்டமிட்டதும் அது பிறகு நடக்காமல் போனதையும் நினைவுபடுத்தி உங்களை வெறுப்பேற்றுவதற்கு அல்லவெனவே நீங்கள் நம்பவிரும்புகின்றீர்கள். 'நான் நீங்கள் நினைத்த இரண்டு இடத்திலுமல்ல, நன்றாக தூங்கிக்கொண்டு வீட்டில் இருக்கின்றேன்' எனப் பதிலளித்துவிட்டு மீண்டும் நித்திரைக்குப் போகின்றீர்கள். பிறகு அவர் வழமையாக எல்லாப் பெண்களையும் துரத்தும் துர்க்கனவான- 'நான் இப்போது நிறையச் சாப்பிட்டு மிகுந்த எடை கூடிவிட்டேன்' என்கின்றார். 'இந்த வயதில் நீங்கள் சாப்பிடாது எப்போது விரும்பியதைச் சாப்பிடுவது? வேண்டுமென்றால் அடுத்தவாரவிறுதியில் hiking போகலாம் கவலைப்படவேண்டாம்' எனப் பதிலையும் இடையில் அனுப்பியும் விடுகின்றீர்கள்.
அவருக்கிருக்கும் காதலர் எடை கூடுதல்/குறைதல் பற்றி என்ன நினைக்கின்றாரோ தெரியாது ஆனால் சில மாதங்களுக்கு முன்கூட நீங்கள் 'பெண்கள் உடல் பருமன் கூடுதல் பற்றி நினைத்து வருந்துவதைப் போல பெரும்பாலான ஆண்கள் நாங்கள் கவலைப்படுவதில்லை. எந்த எடையும் எங்களுக்குப் பிடித்ததே' எனச் சொல்லியதும் உங்களுக்கு ஞாபகம் வரலாம். மேலும் உங்களில் சிலருக்கு, டிசே போன்றவர்களுக்கு ஈர்ப்பிருக்கும் chubbyயான பெண்களைத்தான் கூடப் பிடிக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்.
இவ்வாறாக உங்கள் தோழி இன்று காலைச் சாப்பாட்டுக்கு தன்னோடு வரும்படி அழைக்கின்றார். நீங்கள் ஒவ்வொருநாளும் காலையுணவிற்கென ஒரேவகையான bagelஐ கொண்டு வந்து நன்னிக்கொண்டு திரிவதையும் அவர் நன்கு அறிவார். 'நானொரு மினிமலிஸ்ட். உங்களோடு காலையுணவில் கலந்துகொள்கின்றேன். ஆனால் நான் கொண்டுவந்ததையே நன்னுவேன்...மன்னிக்க தின்னுவேன்' என்கின்றீர்கள். இப்போது தோழியோடு உணவகம் தேடிச் செல்லும்போது அவரது அழகும் குதியுயர்ந்த காலணிகளும், கடந்து போகின்றவர்களை ஈர்ப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் திரும்பிப் பார்ப்பதையும், அந்த விழியெறிதல்களை உங்கள் தோழியைச் சந்திக்கமுன்னர் நீங்கள் இடைமறித்து இடையில் அந்தப் பெண்களை நோக்கி ஒரு புன்னகையை தவழவிட்டுவிட்டீர்களென்றால் இந்த நாள் உங்களுக்கு மேலும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக மாறிவிடுகின்றது.
ஆனால் இதையும் நீங்கள் நினைவுகொள்ளவேண்டும். இந்த நாள் உங்களையறியாமலே இவ்வளவு அழகாக மலர்ந்ததற்கு நீங்கள் எந்த பிரயத்தனங்களைச் செய்யவில்லை என்பதையும். அது தன்னியல்பிலே மலர்ந்து விரியும் மலரைப் போன்றது. முகிழ்கின்ற மலர்களுக்கு உதிர்கின்ற பருவங்களும் உண்டு. ஆகவே ஒருநாள் என்பது நாம் எதிர்பார்க்காத எதனையுமே தன்னகத்தே வைத்திருக்கலாம்.
ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. எல்லாவற்றையும் கடந்துவிட்டோம் என்ற நினைத்த உங்களை கடந்தகாலத்திற்கு ஒவ்வொரு கற்களாக உதிரவைத்து அது அழைத்துப் போகவும், நீங்கள் கலங்கிக்கொள்கின்றீர்கள். உங்களின் இனிய நாள் இப்பொழுது இறுக்கமான ஒரு பொழுதாக மாறுகின்றது. மதியவுணவு அவ்வளவு எளிதில் இறங்க மறுக்கிறது. எண்ணங்கள் அலைபுரண்டோடுகின்றன, anxiety மெல்ல மெல்ல தேவையில்லா ஒரு செடியைப் போல உங்களில் படரத்தொடங்குகின்றது.தப்பமுடியாது, ஆனால் உற்றுப் பார்த்துக் கைகுலுக்கி எவரும் காயப்படாமல் நகரவேண்டும்.
ஒரு உலாத்தல் உங்களுக்குப் போதுமானது. ஆனால் இப்போது உங்களுக்கான இன்னொரு தோழி இருப்பது நினைவுக்கு வருகின்றது. சொற்களெல்லாம் குழைந்து மனதைக் குதறும் எண்ணங்களை அனுப்பிவிடுகின்றீர்கள். வரும் பதிலின் ஒருபகுதி இப்படியாக இருக்கவும் கூடும்.
"ஏனெனத் தெரியாது வாழ்வெம்மை தண்டிக்கிறது.
பின்னும் அதுவே தோள் மீது கை கோர்த்து இன்பங்களை அறிவிக்கிறது. பிரிதல் நோயாகி ரணங்களை தோற்றுவிக்கிறது. நாம் நேசிக்கும் தனிமை கூட சமயங்களில் நம்மை குடித்து காலி செய்கிறது. வாழ்தல் எனும் பெரும் சுமை இதயம் நசங்க எனை கூன் விழச்செய்கிறது.
இந்த சுவர்களே விரல்களாகி எனை தழுவுங்களேன் என கேவத்தோன்றுகிறது. ஆனாலும் என் ப்ரிய சிநேகிதா நேசித்தல் எனும் அற்புதம் ஒன்றே போதுமாயிருக்கிறது இதை கடப்பதற்கு.
ஆதனால் நேசம் கொள்வோம் எப்படியேனும் எதன் மீதேனும்."
சில வார்த்தைகள். மெல்லியதான அன்பு. சிலரேனும் உங்களை ஆற்றுப்படுத்த இருக்கின்றார்கள் என்பது மீண்டும் உங்களை வீழ்ச்சியிலிருந்து எழவைக்கின்றது. விடியலோடு உங்களுக்கு கையளிக்கப்பட்ட அழகிய நாள் ஒரு சூரியகாந்திப்பூவைப் போல திரும்பவும் தலைதூக்குகின்றது.
ஆகவே ஒருநாளில் எல்லாமும் நடக்கும்.கொல்லக்கூடிய வார்த்தைகளுக்கே ஆரத்தழுவிக்கொள்ளவும் தெரிகிறது. நீங்களும் இரண்டிலும் கலக்காது இரண்டையும் எதிர்க்காது இயல்பாய் இருப்பது எப்படியென்பதைக் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
இப்போது கோடையின் மென் வெம்மையுடனும், விரிந்திருக்கும் நீல வானத்துடனும், பூத்திருக்கும் ஊதாப்பூக்களுடனும், உங்களில் ததும்பும் பிரியங்களை எல்லோருக்குமாய் அனுப்பி வைக்கத் தொடங்குகின்றீர்கள்.
(நன்றி: 'அகநாழிகை', 2017)