கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நெரூடா

Monday, September 25, 2017

நெரூடாவின் வாழ்க்கை மிக நீண்டது மட்டுமில்லாது மிகச் சிக்கலானதும் கூட. வலதுசாரிகளுக்கு இருக்கும் தெரிவுகளைப் போல, இடதுசாரிகளாய் இருக்க விரும்புகின்றவர்களுக்குத் தெரிவுகள் அவ்வளவு எளிதாய் அமைவதில்லை. அவர்கள் ஆதரிக்கும் கம்யூனிசக் கட்சியோ, தலைவர்களோ எப்போது மாறுவார்கள், என்ன செய்வார்கள் என்பதையும் எவராலும் இலகுவாய் ஊகித்தறியவும் முடியாது. ஆனாலும் இடதுசாரிகளாய் இருப்பதை ஏன் பலர் விரும்புகின்றார்கள் என்றால், அதுவே ஒடுக்கப்படும்/சுரண்டப்படும் மக்களுக்கு அருகில் நின்று பேசமுடிவதற்கான ஓர் புறச்சூழலை உருவாக்கித் தருகின்றது. நெரூடாவும் அவ்வாறான ஒரு இடதுசாரி வாழ்வு முறையை இளமையில் தேர்ந்தெடுத்து, இறுதிவரை அதினிலிருந்து வழுவாது இருந்து வாழ்ந்து முடித்துமிருக்கின்றார்.

மார்க்வெஸிலிருந்து போர்ஹேஸ் வரை பல்வேறு வகையிலான படைப்பாளிகளால் கவிதைகளுக்காய்ப் பாராட்டப்பட்டவர் என்பதோடு அவர் காலத்தில் கார்ஸியா லோக்கஸ், பிகாஸோ உள்ளிட்ட பலரோடு நட்பாகவும் இருக்கும் நல்வாய்ப்பையும் பெற்றவர் நெரூடா. சே குவேரா எப்படி ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகளுக்கு முன்னுதாரணமாய்க் காட்டப்படுகின்றாரோ, அவ்வாறே நெரூடா எப்படி ஒரு படைப்பாளி உழைக்கும் மக்களுக்குள்  தன் படைப்புக்களினூடாக ஊடுருவ முடியுமென்பதற்கு ஒரு உதாரணமாய் இன்றும் காட்டப்படுகின்றார்.

நெரூடா என்கின்ற இப்படம் நெரூடாவின்  சொற்பகால- ஒன்றரை வருடத்திற்கும் குறைவான- வாழ்க்கையைக் காட்சிப்படுத்துகின்றது. நெரூடா செனட்டராக இருக்கும் 1948 காலத்தில் அன்றைய சிலியின் ஜனாதிபதி, உழைப்பவர்க்கு எதிராய் இருந்து அவர்களைச் சித்திரவதைக் கூடங்களில் அடைக்கின்றார் என்பதை நெரூடா வெளிப்படையாக பாராளுமன்றத்தில் கண்டித்துப் பேசுவதிலிருந்து படம் தொடங்குகின்றது.

இந்த எதிர்ப்புத் தெரிவிப்பு பின்னர் நெரூடாவைத் தலைமறைவு வாழ்க்கையிற்குத் தள்ளுகின்றது. நெரூடா தலைமறைவாகின்ற காலத்திலேயே சிலியின் கம்யூனிசக் கட்சியும் தடை செய்யப்படுகின்றது. நெரூடா நண்பர்களின்/உறவுகளின்//பாலியல் தொழிலாளர்களின் உதவியுடன் மறைந்து வாழத்தொடங்குகின்றார். நெரூடாவை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி கைதுசெய்து சிறையில் அடைப்பதற்குத் தேடத்தொடங்குகின்றார்.  மிகப்பெரும் ஒரு வேட்டை தொடங்குகின்றது. தானில்லாதுவிட்டால் பொலிஸும் இல்லை, பொலிஸ் இல்லாவிட்டால் தன் வாழ்வும் சுவாரசியமில்லை என   -ஆபத்தானதெனத் தெரிந்தும்- ஒரு வினையான விளையாட்டை நெரூடா ஆடத்தொடங்குகின்றார். இறுதியில் நெரூடா குதிரைப்பயணமொன்றைச் செய்து ஆஜெண்டீனாவைச் சென்றடைகின்றார். இவரைத் தேடிய பொலிஸிற்கோ ஒரு விபரிதமான முடிவு ஏற்படுகின்றது.

நெரூடா தலைமறைவாவதும், அவரை அரசு தேடுவது எவ்வளவு உண்மையோ,  அதேயளவிற்கு இந்தத் திரைப்படத்தில் வருவது போல ஒரு பொலிஸ் அதிகாரி இவ்வளவு நெருக்கமாய் நெரூடாவை கைது செய்யுமளவிற்கு நெருங்கியிருக்கவில்லை என்பதும் உண்மையாகும். மிக நுட்பமான இந்தப் பொலிஸ் பாத்திரம், இந்தப்படத்தை நெறியாள்கை செய்தவரின்  ஒரு கற்பனையான பாத்திரம். அதேவகையில் ஒருவரை அரசோ/பொலிஸோ தேடுகின்றபோது,  அதிகாரத்தரப்பிலிருந்து நிகழும் ஒவ்வொரு செயற்பாட்டையும், தேடப்படுகின்றவர் அறிவதில்லை. ஏன் சிலவேளை தம்மை எவர் பிந்தொடர்கின்றார் என்பதைக்கூட ஏதாவது அசம்பாவிதம் நிகழும்வரை அறிவதுகூடக் கடினமாக தேட்ப்படுகின்றவர்களுக்கு இருக்கும். அப்படி ஒருவர் தீவிரமாய்த் தேடப்பட்டிருக்கின்றார் என்பதை பிற்காலங்களில் எவரேனும் வெளியீடுவார்களாயின் மட்டுமே அறியமுடியும். ஒருகாலத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பிற்குள் இடதுசாரிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட பல படைப்பாளிகள் இருந்திருக்கின்றார்கள் என்பதை பின்னர் FBIவெளியிட்ட ஆவணங்களின் மூலம் அறியமுடிந்திருக்கின்றது.

நெரூடாவின் இந்தத் தலைமறைவு வாழ்க்கை, உயிருக்கு அச்சம் இருக்கும் சூழல் என்பவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இது எங்களின் தேசத்திலும் நடந்திருக்கக்கூடியதென்பது நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கை/இந்திய இராணுவத்தாலும், சக இயக்கத்தவர்களாலும் தேடப்பட்டு இப்படித் தலைமறைவாகியவர்களின் ஆயிரக்கணக்கான கதைகள் நம்மிடையே இருக்கின்றன. அப்படித் தப்பித்தவர்கள் ஏதோ ஒருவகையில் அதிஷ்டசாலிகளாகவும், பிடிபட்டு சித்திரவதைக்குள்ளனவர்கள் துரதிஷ்டசாலிகளாகவும் வகுத்துப் பார்ப்பதற்கும் காலத்தைத்தான் நாம் சாட்சியிற்கு அழைக்கவேண்டும். அதுமட்டுமில்லாது தாம் தேடப்படுகின்றோம் என்றோ அல்லது அதைக் கூட அறியாமலே இந்தப் பொறிக்குள் அகப்பட்டு தமது வாழ்வைத் தொலைத்தவர்க்குக் கூட நம்மிடையே நூற்றுக்கணக்கில் உதாரணங்கள் இருக்கின்றன.

நெரூடாவிற்கு நிகழ்ந்தது 50 வருடங்களுக்கு முன்னர் என்றால், நமக்கு அண்மையில் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. பாலைவனத்தில் இருக்கும் ஒரு சித்திரவதைக்கூடத்திற்குப் பொறுப்பதிகாரியாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகின்ற பினோச்சோதான்  கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு சல்வதோர் அலெண்டேயின் ஆட்சியைக் கவிழ்ந்து மிகக்கொடூரமான சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவந்திருக்கின்றார். நெரூடாவின் 1973 மரணம் மாரடைப்பால் நிகழ்ந்தது என்றாலும், அன்றையகாலத்தில் பினோச்சோயின் இராணுவ ஆட்சியிற்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடுமென்று நெரூடாவிற்கு, பினோச்சோதான் ஒரு மருத்துவரினூடாக நஞ்சு ஊசி செலுத்தியிருக்கலாம் என்கின்ற சந்தேகமும் இருக்கின்றது. சல்வதோர் அலெண்டே கொல்லப்பட்ட பத்துநாட்களுக்குள் அலெண்டேயிற்கு நெருக்காக இருந்த நெரூடாவும் மரணிக்கின்றார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

நாம் கடந்துவந்த யுத்தக் காலத்தை பல்வேறுமுறைகளில் நாங்கள் வெளிக்கொணரலாம். நமக்கு அதிகார அரசு/இராணுவம் மட்டும் நிகழ்த்தியதை மட்டுமில்லை, நாம் நம்பிய இயக்கங்கள் தங்களுக்குள்ளே முரண்பட்டு மிகமோசமாக நிகழ்த்தியவற்றையும் மறைக்காமல் பேசவேண்டும், ஆவணப்படுத்தவேண்டும். அந்தவகையில் நெரூடாவின் இந்த தலைமறைவு/உயிர்தப்பல் போன்றவற்றை நினைக்கும்போது, செழியன் எழுதிய 'ஒரு மனிதனின் நாட்குறிப்புகளிலிருந்து' நினைவுவருகின்றது. எதையெதையோ திரைப்படமாக எடுத்து, தங்களைத் தாங்களே கீழிறக்கிக்கொள்ளும் நம் நெறியாளர்கள், தமக்கு முன்னும் சிறப்பான பிரதியொன்று நல்லதொரு திரைக்கதை வடிவமாவதற்குக் காத்திருப்பதையும் ஒருமுறை நினைத்துக்கொள்ளலாம்.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி/2017)

0 comments: