அவன் 999 பக்கங்களில் எழுதத் திட்டமிட்ட தனது நாவலை பின்பக்கங்களிலிருந்து எழுத விரும்பினான். கனவிலும், காதலியைக் கொஞ்சும்போதும் நாவலைப் பற்றி சிந்தனைகள் ஓடுவதால் 999 பக்கங்களில் நாவலை எழுதுவது அவனுக்கு அவ்வளவு கடினமானதாய் இருக்கவில்லை. மேலும் எல்லாப் புகழ் மிகுந்த புனைகதையாளர்களும் சொல்வதுபோல இந்த நாவலை அவனல்ல, வேறு எதுவோ தான் எழுதவைத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் அவன் நம்பத் தொடங்கியிருந்தான்.
பின்பக்கங்களிலிருந்து எழுதத்தொடங்குகின்றேன் என்றவுடன் தனது வாசகர்கள் வேறு விதமான வாசிப்பைச் செய்யக்கூடுமென்பதால், 'பின்புறங்களில் அழகியல்-ஒரு தத்துவார்த்தமானஆய்வு' என்று தான் எழுதி, தனது சக வாசகியொருத்தியால் திருடப்பட்டு, தனக்குத் தெரியாமற் பிரசுரிக்கப்பட்டஅந்தப் பிரதியிற்கும் இதற்கும் தொடர்பில்லையெனவும் அவன் எனக்குச் சொல்லச் சொல்லியிருக்கின்றான். 999, 998, 997... என்று பக்கங்களிட்டு எழுதிக்கொண்டிருப்பதையே தான் பின்பக்கத்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்பதில் உணர்த்தவிரும்புகின்றேன் என்று வலியுறுத்தியிருந்தான்.
'பின்புறங்களின் அழகியல்... ' ஆய்வுக்குத் தனது பின்புறமே மிக முக்கியகாரணமாய் இருந்ததென்று அந்தவாசகி குற்றஞ்சாட்டியதற்கு உனது எதிர்வினை என்ன என்று நான் குறுக்கிட்டுக் கேட்டதற்கு, அவளை அவளது முகத்தை முதலில் கண்ணாடியில் பார்க்கச் சொல் என்றான். எப்படி எழுதினாலும் வாசிப்பதற்கு நான்குபேர் வருவார்கள் என்ற அவனது அசட்டுத்துணிச்சல் எனக்கு மிகுந்த வியப்பதைத் தந்தது. ஆகக்குறைந்தது அவன் தனது மனச்சாட்சியை சற்று உன்னிப்பாய்க் கவனிந்திருந்தால் கூட இந்த 999 பக்க நாவலை எழுதும் விபரீதத்தை நிறுத்தியிருக்கலாம்.
இப்படி தானும், எல்லாமும், வலையாக ஆகிக்கொண்டிருப்பதில் உளவியல் சிதைவுக்கு ஆளாகிக்கொண்டிருப்பது அவனுக்கும் விளங்கிக்கொண்டுதானிருந்தது. உளவியலுக்கான சிகிச்சை/ஆலோசனை பெறுவதே ஒரு கொலைக்கு நிகர்த்ததாய்ப் பார்க்கப்படும் சமூகத்தில் உளவியல் சிகிச்சைக்காய் போவது என்பது இன்னொரு உளவியல் பிரச்சினையாக மாறி விடவும் கூடும் என்ற அச்சத்தில் அதையும் தவிர்த்திருந்தான்.
இப்படி வலைகளைப் பற்றி தீவிரமாய் யோசித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்த பொழுதொன்றில்தான் அவனது முன்னாள் காதலி எக்ஸை சனநெருக்கமுள்ள தெருவில் கண்டிருந்தான். கிட்டத்தட்ட அவனும் எக்ஸும் தொண்ணூறு பாகையில்தான் சந்தித்திருந்தனர். இன்னும் திருத்தமாய்ச் சொல்லப்போனால் தொண்ணூறு பாகையைத்தாண்டிய சிலபாகையில் என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். எனென்றால் இவன் தான் அவளைக் கண்டானே தவிர, அவள் இவனைக் காணவில்லை. அவளின் பின்புறத்தை வைத்தே அவளை அடையாளங் கண்டிருந்தான் என்று சொல்வதில் அவனுக்கு எந்த வெட்கமுமில்லை. 'உனது பிருஷ்டத்தைப் பார்க்கும்போது எனக்கு - உனக்காய் எனக்குள் துடித்துக்கொண்டிருக்கும் இதயந்தான்- நினைவுக்கு வருகின்றது' என்று ஒருமுறை அவளோடு நெருக்கமாய் இருந்தபோது இவன் சொன்னது அவளுக்கு இப்போது நினைவில் இருக்குமோ தெரியாது.
வலையைப் பற்றிக் கதைக்கத் தொடங்கியவன் பிருஷ்டம், கலாசாரம் என்று எங்கையெங்கையோ பறக்கிற பட்டம் மாதிரி அலையவைக்கின்றானென்று நீங்கள் நினைக்கக்கூடாது. வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கிறது. எது எதற்கோ தொடங்கும் பயணம் எங்கு எங்கோ எல்லாம் சுற்றி அலைந்துவிட்டுத்தானே நினைத்த இடத்தை அடைந்திருக்கின்றது; சிலவேளைகளில் நினைத்த இடத்தை அடையாமலேயே இடைநடுவில் நின்றுமிருக்கிறதுதானே. ஃபிராய்ட் சொன்ன 'ஆழ்மனத்தில் நிகழா ஆசைகளே கனவாய் மாறுகின்றன' என்பது மாதிரி இவனுக்கும் பிறரின் பிருஷ்டம் ஒரு முக்கிய பிரச்சினை ஆகிவிட்டிருந்தது.
ஒருநாள் இவ்வாறுதான் அவனும் அவளும் பெரு நகரத்தை விட்டு ஒதுக்குப் புறமான நகரொன்றுக்குப் புறப்பட்டிருந்தனர். எதையும் திட்டம் போட்டுச் செய்வதில்லை. ஏனெனில் வாரக்கணக்காய், நாட்கணக்காய் திட்டம் போட்டால் அது நிகழாது போகும் என்றவொரு ஜதீகம் அவர்களிடையே இருப்பதால் மணித்தியாலங்களில் திட்டம்போட்டு உடனே நடைமுறைப்படுத்துவதுதான் அவர்களுக்கேற்றதாய் இருந்தது. இவ்வாறு சிலமணித்தியாலங்கள் ஒரு நகருக்கு பயணித்து போய்விட்டு, அங்கே என்ன பார்ப்பது என்று தேடத்தொடங்கியிருந்தனர்.
தனக்கு ஒரளவு பரீட்சயமான பெருநகருக்குள்ளேயே ஒழுங்காய் திசை பார்த்து பயணிக்கத் தெரியாத மேதாவியாகவே அவன் எப்போதும் இருந்திருக்கின்றான். அவனைப் போன்றவர்களில் துயர் கண்டுதான் யாரோ ஜிபிஎஸைக் கண்டுபிடித்திருக்கவேண்டும் என்ற நன்றியுணர்வு அவனுக்கு ஜிபிஎஸ் மீதுண்டு. ஆனால் அவளுக்கு அப்படியில்லை. வரைபடம் பார்த்துப் பயணிப்பதே பிடித்தமாயிருக்கிறது, ஜிபிஎஸ் மிகவும் இயந்திரத்தனமானது; நாம் எக்ஸ்ப்ளோர் பண்ணுவதற்கான எந்த வெளியையும் தருவதில்லை. நாமாய்த் தொலைந்து தேடிக் கண்டுபிடிப்பதே சுவாரசியமான பயணமாயிருக்கும் என்பது அவளது நிலைப்பாடு.
சரி, எங்கேயாவது ஒரு கடையில் ஒரு உள்ளூர் வரைபடம் வாங்கி இடங்களைப் பார்ப்போம என்றபோதுதான், அவனது கண்ணுக்குள் ஒரு புத்தகக்கடை தெரிந்தது. இந்தக் கடையில் வாங்கினால் விலை குறைவாக வாங்கலாம் என்று அங்கே போய், வரைபடத்துடன் மேலதிகமாய் இரண்டு, மூன்று புத்தகங்களும் வாங்கிவந்தார்கள். இப்படிச் செலவாகுமென்று தெரிந்திருந்தால், இதைவிட முதல் பார்த்த கடைக்கே போயிருக்கலாம் என்றானவன். ஆனால் அந்தப் புத்தகசாலையில் வாங்கிய நீட்ஷேயின் 'Beyond God & Evil'ல் இருந்து இன்னொரு பிரச்சினை புகைக்கத் தொடங்கியது.
அவன், "இங்கே பார் நீட்ஷே இப்படிச் சொல்லியிருக்கின்றார், Woman learns how to hate to the extent that she unlearns how - to charm' என்றான். உடனே அவள் எப்படி நீட்ஷே, தான் ஒரு பெண்ணாக இல்லாது இப்படிப் பெண்களைப் பற்றிச் சொல்லமுடியும் என்று ஒரு சண்டையை ஆரம்பித்தாள். அவனும் ஏன் நீட்ஷே அவருக்குத் தெரிந்த பெண்களின் மூலம் அறிந்ததை வைத்து இதை எழுதியிருக்கலாம் என்றான். இல்லை நீட்ஷே திருமணம் செய்யவேயில்லை என்று நீதானே சொன்னாய் என அவள் ஞாபகமூட்டினாள்.
இவ்வாறு அவனின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த நான், உனது கதை மிகவும் அலுப்பாக நகர்கிறது. தயவு செய்து நாவல் எழுதும் உன் கொடுங்கனவை நிறுத்திவைக்கமுடியுமா என்று மன்றாடும் தொனியில் கேட்டேன். உனது வாழ்க்கையில் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் தேவையற்றதும் அலுப்பான உரையாடல்களைச் செய்துகொண்டும் கேட்டுக்கொண்டுமிருக்கும் நீ இவ்வாறு கேட்பதற்கு தகுதியற்றவன் என அவன் கத்தத்தொடங்கினான். மேலும் நான் எழுத விரும்பும் காப்பியத்தை நிறுத்து என்று சொல்வது ஓர் அதிகாரமிக்க உரையாடல்; முதலில் ஃபூக்கோவைப் போய் படித்துவிட்டு வா, இல்லையெனில் ஆகக்குறைந்து நான்கைந்து நாட்களாய் தொடர்ந்து குடித்தபடி, நாறிக்கொண்டிருக்கும் நீ இன்றைக்கேனும் குளிக்கமுயற்சி செய் என்று எனது சுயத்தின் மீது எரியம்புகளை வீசத்தொடங்கினான்.
இன்றைக்கு இவனோடிருந்து மேலும் கதை கேட்கும் எண்ணமில்லாது போனதால் நான் எனது வீட்டை நோக்கி ஒரு பூங்காவும் அதன் நீட்சியில் சிறு காடுமிருக்கும் பாதையால் நடக்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு முன்னால் ஒரு பெண்ணும், ஆணும் மிகுந்த காதலோடு இணைந்து நடக்கக் கண்டேன்.
கல்லூரிக்குப் போகத் தொடங்கியதால், பழைய நண்பர்களோடு பொழுதைக் கழிப்பது குறைந்து, அவர்களும் தொலைவில் விலகிப்போனதுமாதிரி இவனுக்குத் தோன்றியது. கல்லூரியில் நடக்கும் வகுப்புகளுக்கு ஒழுங்காய்ப் போகாவிட்டாலும், கல்லூரியிலேயே தனது பொழுதை அதிகம் கழிக்கப் பழகியிருந்தான். கல்லூரியில் நடக்கும் அமெரிக்கன் ஃபுட்போல், கூடைப்பந்தாட்டம் போன்றவற்றைப் பார்ப்பது இவனுக்குப் பிடித்தமாயிருந்தது. கல்லூரி ஜிம்மிலும், பப்பிலும் பொழுதைத் தனியே கழிக்கப் பழகியிருந்தான். பப்பில் இருட்டு மூலையைத் தேடி ஆறுதலாய் இரசித்து இரசித்துக் குடிப்பது இவனுக்குப் பிடித்தமாயிருந்தது. சிலநாட்களில் பதினொரு மணியானால் பப்பின் ஒருபகுதி டான்ஸ் ப்ளோராகாக மாறிக் கொண்டாட்டமாகிவிடும். ப்ளோரில் ஆடுவதைவிட ஆட்டத்தைப் பார்ப்பதுதான் இவனுக்கு விருப்பாயிருந்தது.
ஆட்டம் உச்சமேற அபத்த/அங்கத/துரோக நாடகங்கள் பலசோடிகளுக்கிடையில் அரங்கேறும். பியர் போத்தல்களை உடைக்காது, கைகலப்பு வந்து பவுண்சர்கள் குழப்புபவர்களை வெளியே தூக்கிப் போடாது நடந்த ஆட்டநாட்கள் மிகக் குறைவானதே. ஆனால் இவற்றுக்கப்பாலும் சந்தோசமும் கொண்டாட்டமும் இரவின் வெளியெங்கும் ததும்பி வழிந்துகொண்டேயிருக்கும்.
இவ்வாறு ஒருநாள் தனிமையையும், மதுவையும், இரவையும் சுவைத்துக்கொண்டிருந்தபொழுதில் ஒருத்தி மிகவும் பதற்றத்துடன் ஒரு பியரைக் கையிலேந்தியபடி இவனோடு மேசையைப் பகிர்ந்துகொள்ளமுடியுமா என்று கேட்டபடி வந்தாள். 'பிரச்சினையில்லை, அமரலாம்' என்றான். ‘நாளை காலை ஒரு முக்கியமான பிரசன்டேசன் இருக்கிறது. ஒரு பாடத்தின் இறுதித்தேர்வாய் இந்தப் பிரசன்டேசனை வைத்திருக்கின்றார்கள். அதுதான் மிகவும் பதற்றமாயிருக்கிறது’ என்றபடி பியரை வாயில் வைத்தபடி உறிஞ்சினாள்.
அவள் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைக்கும், பியர் போத்தலில் பரவியிருந்த நீர்த்துளிகளுக்குமிடையில் இருக்கும் வித்தியாசந்தான் வாழ்வுக்கும் மரணத்திற்குமான வித்தியாசமாக்குமென நினைத்தபடி அவளின் பேச்சைக் கேட்கத் தொடங்கினான். அவளுக்கிருந்த பதற்றத்தில் அவள் இங்கே அங்கேயென விடயங்களைக் கதைத்துக்கொண்டிருந்தாள். அவனுக்குப் பதிலுக்குப் பேசுவதற்கென்று எதுவுமேயிருக்கவில்லை. அவளும் இவன் எதையும் பேசாது தன்னைக் கேட்டுக்கொண்டிருப்பதையே விரும்பியவள் போல இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள்.
விடைபெற்றுப்போகும்போது, தானிங்கே ரெசிடன்ஸிலேயே தங்கியிருக்கின்றேன், நேரமிருக்கும்போது நீ என்னோடு கதைக்கலாம் என்று அவள் தனது தொலைபேசியை இலக்கத்தைப் பகிர, அவனும் தனது இலக்கத்தைக் கொடுத்திருந்தான்.
அடுத்தநாள் காலை எழும்பியபோது, இவனுக்கு நேற்றிரவு நடந்தது நினைவுக்கு வர, தொலைபேசியில் அவள் பிரசன்டேசனுகுப் போகமுன்னர் வாழ்த்துத் தெரிவித்தான். 'நீ நன்றாகச் செய்வாய், எதற்கும் பயப்பிடாதே; அப்படிச் செய்யாதுவிட்டாலும் உலகம் அழிந்துபோய்விடாது' என்று நகைச்சுவையாக இவன் சொன்னான். அவளுக்கு இவனது அழைப்பு வியப்பாயிருந்தது என்பது அவளது நன்றி சொன்னகுரலிலேயே தெரிந்தது, அவளிருந்த பதற்றத்தில் இப்படி யாரோ ஒருவர் தனக்காய் யோசிக்கின்றார் என்ற நினைப்பு அவளுக்குத் தேவையாகவுமிருந்தது. ‘இந்தபிரசன்டேசன் நன்றாகச் செய்தேன் என்றால் இன்று மாலை எனது செலவில் பியர் வாங்கித்தருகினறேன்’ என்றாள் அவள்.
மாலை, அவன் கல்லூரி ஜிம்முக்குள் நின்றபோது தொலைபேசி அழைப்பு அவளிடமிருந்து வந்தது. தான் பப்பில் நிற்கின்றேன, வந்து சந்திக்கமுடியுமா என்று கேட்டாள். இன்று, நேற்றுப் போல பதற்றமில்லாது புன்னகைத்தபடி வரவேற்றாள். வெளியே கொட்டிக்கொண்டிருந்த பனியின் துகள்கள் அவள் தலைமயிரில் மல்லிகைப்பூக்கள் பூத்திருந்த மாதிரியான தோற்றத்தைக் கொடுத்திருந்தது. காதுகள் குளிரில் சிவந்திருந்தன. குளிர்க்கோட்டை கழற்றியபடி 'நான் திருப்திப்படுமளவுக்கு எனது பிரசன்டேசனைச் செய்திருக்கின்றேன்' என்றாள். ஏற்கனவே பியரிற்கு ஓடர் செய்திருப்பாள் போல. அவன் வந்திருந்ததுமே வெயிட்டர் ஒரு பெரும் குவளையில் பியரை நிரம்பிக் கொண்டு வந்து மேசையில் வைத்தார். பின் அவ்விரவு மிக நீண்டதானது. மாறி மாறி உரையாடல். அவனையும் அவளையும் அறியமுயன்ற அற்புதக்கணங்கள்.
இரண்டு பேரும் ஒருமிக்கும் புள்ளியென்று எதையும் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும்,தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தது அவ்விரவில் இருவருக்கும் பிடித்தமாயிருந்தது. மொழியாலும், கலாசாரத்தாலும்,மேற்கு-கிழக்கு என்று வெவ்வேறு பின்புலங்களாலும் இருவரும் தூரத் தூரவாகவே இருந்தனர். ஒவ்வா முனைகள் அதிகம் கவர்வதில்லையா, அதுபோல் எதுவோ அவர்களை இணைத்துவைத்தது போலும்.
பிறகான நாட்கள் எவ்வளவு இனிமையானவை. நேசம் இவ்வளவு கதகதப்பாய் இருக்கமுடியுமா என்று வியக்கவைத்த நாட்கள். பகலிலும் இரவிலும் திகட்டவே முடியாது என்று பொங்கிப் பிரவாகரித்த அன்பு. இப்படியொரு பெண்ணிடமிருந்து காமம் பீறிட்டுக் கிளம்பமுடியுமா என்று திகைத்து பின் திளைத்தபொழுதுகள். அவள் இருந்தபெண்களுக்கான ரெசிடன்ஸில் கூடவிருக்கும் அறைத்தோழிகள் வெளியில் போகும்போது, குறுகிய/நீண்ட பதற்றமும் கள்ளமும் காமமும் பின்னிப்பிணைந்தபொழுதுகள்.
கிட்டத்தட்டஒருவருடம் முடிந்து, வந்த இரண்டு வார கிறிஸ்மஸ் விடுமுறையில் தான் தனது பெற்றோரைப் பார்க்க தனது பிறந்த நகரிற்குப் போகப்போகின்றேன் என வெளிக்கிட்டிருக்கிறாள். கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முடிந்து ஸ்நோ பொழியும் அல்லோலோகல்லோலத்துடன் குளிர்காலத் தவணையிற்கான வகுப்புக்களும் ஆரம்பித்துவிட்டிருந்தன. இவனால் அவளைச் சந்திக்க முடியவில்லை. தொலைபேசி அழைப்புக்களுக்கும் எவ்விதமான பதில்களையும் காணவில்லை. அவளிலிருந்த ரெசிடென்ஸில் போய்த்தேடியபோது அவள் இப்போது அங்கே வசிப்பதில்லையெனச் சொன்னார்கள்.
அவளோடு அறையைப் பகிர்ந்த மற்ற நண்பிகளிடம் கேட்டபோது ஏதோ வேலை எடுத்து, ரெசிடென்சை விட்டு வெளியே வசிக்கப் போய்விட்டாள் என்றனர். அவளது தற்போதைய முகவரி தரமுடியுமா என்று இவன் கேட்டபோது தங்களுக்குத் தெரியாது என்று இவனைத் தவிர்க்கச் செய்தனர். இவனுக்குப் பித்துப்பிடித்தது மாதிரியிருந்தது. ஏன் அவள் அப்படிச் செய்கின்றாள் ஏதாவது பிழையைத் தான் செய்துவிட்டேனா என்று மூளையைத் தோண்டத்தொடங்கினான்.
திரும்பவும் தனிமையும, இருளும், கொடுமையான குளிரும் அவனைச் சூழத்தொடங்கின. ஆனால் இவை முன் போதில்லாது தாங்கமுடியாதவையாக யாராவது தன்னோடு வந்து பேசமாட்டார்களா என்று ஏங்க வைப்பவையாக அவனை மாற்றிவிட்டன. திகட்டத் திகட்ட அன்பைத் தந்தவள் இப்படி பெரும் இடைவெளியைவிட்டு ஒன்றும் சொல்லாமற் போய்விட்டாளென்ற நினைப்பு அவள் மீது ஒரே நேரத்தில் வெறுப்பையும், கோபத்தையும் உண்டாக்கின.
ஆகவும் நினைவுகள் வந்து அவன் உணர்வுகளை அரிக்கத்தொடங்கும்போது தனக்குத் தெரிந்தஅவளது தொலைபேசி இலக்கத்தில் அழைக்கத் தொடங்குவான். இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று நான்கு முறை அவ்விலக்கத்தை அழைக்கும்போது ஒரு ஆண் எடுத்து 'பிழையான இலக்கத்தை அழைக்கிறாய், நீ கேட்கும் அவள் இவ்விலக்கத்தில் இல்லை; இனி அழைக்கவேண்டாம்' எனச் சொல்லத்தொடங்கினான். ஒருநாள் பப்பில் இயலாத் தனிமையில் பொதுத்தொலைபேசியிலிருந்து அவளது இலக்கத்திற்கு அழைத்தபோது, ஒரு பெண் குரல் மறுமுனையில் எடுத்துக் கதைப்பது தெரிந்து. நிச்சயம் அவனால் அடையாளங்கொள்ளக்கூடியதாயிருந்தது. அவளேதான்.
'நீ சூஸன் தானே' என்று அவள் பெயரைச் சொல்லி இவன் கேட்கமறுமுனை துண்டிக்கப்படடுவிட்டது. திரும்பி நாலைந்துமுறை இவன் எடுப்பதும், எதிர்முனை துண்டிப்பதுமாயிருக்க, கடைசியாய் 'தயவுசெய்து வைத்துவிடாதே நான் சொல்வதைக் கேள். இப்போது என் நிலை எப்படியென்பது அறிவாயா? நீ என்னை உண்மையில் நேசித்திருப்பாயின் தொலைபேசியை வைக்காது நான் சொல்வதைக் கேள்' என்று உடைந்தகுரலில் பேசத் தொடங்கினான். இம்முறை மறுமுனை துண்டிக்காது மவுனத்துடன் இவன் பேசுவதைக் கேட்கத் தொடங்கியது. இறுக்கப்பூட்டியிருந்த அவள் மனது சற்று நெகிழ்ந்திருக்கவேண்டும் போல. இவன் 'என்ன நடந்தது உனக்கு?' என்று கேட்டு, எல்லாவிதமான தன் துயரங்களையும் சொல்லத் தொடங்கினான். அவளது மிகப்பெரும் மவுனம் இவனை ஒரு இராட்சதவிலங்காய் விழுங்கவும் தொடங்கியிருந்தது. அன்றிரவு குடித்த ஏழாவது பியர் தந்த உச்சபோதை போனதன் சுவடே தெரியாமற்போய்விட்டது.
மிகவும் இயலாதபட்சத்தில் இவன் 'நீயொரு வார்த்தை பேசமாட்டாயா?' என்று திருப்பத் திருப்பக் கேட்கத்தொடங்கினான். இறுதியில் அவள், 'சரி, தயவுசெய்து இனி தொலைபேசி எடுக்காதே, நான் வருகின்ற சனிக்கிழமை கல்லூரிக்கு இந்தநேரம் வந்து கதைக்கின்றேன்' என்றாள்.
சனிக்கிழமை வந்தது; வந்தாள். இப்போதிருக்கும் நான் முன்பு இருந்தவள் அல்ல. நாங்களிருவரும் இருந்த நல்லநினைவுகளோடு பிரிந்துவிடுவோம் என்றாள். ஏன் என்னநடந்தது? என்னில் என்னபிழையைக் கண்டாய்? தவறுகள் இருந்தால் சொல், நான் திருத்திக்கொள்கின்றேன். தயவுசெய்து என்னைவிட்டுப் போகாதே. நீயில்லாத் தனிமையை யோசிக்கமுடிவதில்லை என்று இவன் கெஞ்சத்தொடங்கினான். 'இல்லை தயவு செய்து என்னை மறந்துவிடு' என்று அவள் திருப்பத் திருப்பச் சொல்லத் தொடங்கினாள். என்னால் முடியாது என்று அவள் கையைப் பிடித்து இதழில் முத்தமிடமுனைந்துபோது, ' F*** off, you are abusing me... உனக்குக் காரணந்தானே வேண்டும். நான் இன்னொருத்தனுடன் சேர்ந்து வாழத்தொடங்கியிருக்கின்றேன். காரணம் போதுமா?' என்று கூறிவிட்டு இருட்டில் கரைந்துபோயிருந்தாள்.
அவன் அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஆறு நாட்கள் வீட்டுக்கு வராது வெளியில்தான் திரிந்திருக்கின்றான். சாப்பாடு, இயற்கை உபாதையெல்லாம் வெளியேதான். அந்த ஆறு நாட்களில் ஓரிருமுறை பொதுக்கழிப்பறையில் குளித்திருக்கின்றான். ஆடை காயும் வரை சிலமணித்தியாலங்கள் பாத்ரூம் கதவை மூடிப்போட்டு உள்ளேயே அமர்ந்திருக்கின்றான்.
அப்போது வெளியே மிகஉக்கிரமான குளிர். ஹோம்லெல்ஸ் நண்பர்கள்தான் இவனை அந்த ஆறு நாட்களும் காப்பாற்றியிருக்கின்றார்கள். குளிர் தாங்காதபோது, மிகவும் மலிவாய் தாங்கள் வாஙகி வைத்திருந்த கஞ்சாவை ஊதத்தந்து உடம்பின் குளிரை உறையச் செய்திருந்தார்கள். தங்களுக்குக் கிடைத்த சில கம்பளிகளை இவனோடு பகிர்ந்திருக்கின்றார்கள். இப்படிக் கழிந்த ஆறாவது நாளில்தான் இவனோடு உயர்கல்லூரியில் படித்த தோழியொருத்தி கண்டு, ரோட்டிலிருந்து எழுப்பிக்கொண்டுபோய், தனது வீட்டில் வைத்து பிட்டும் மாம்பழமும் பிசைந்து ஊட்டி விட்டிருக்கின்றாள். தனது சொந்தக்கையால் உணவை எடுத்துச் சாப்பிடமுடியாத அளவுக்கு மிகவும் பலவீனமாய் இருந்திருக்கின்றான்.
இவ்வாறு அவன் தனது கதையை எனக்குச் சொல்லி முடித்தபோது, 'இந்தக் காதலுக்காகவா இவ்வளவு சித்திரவதைகளை நீ அனுபவித்தாய், சும்மா தூசென இதைத் தட்டிப்போயிருக்கலாம்' என்று எல்லோரைப் போலவே எனக்கும் சொல்ல விரும்பமிருந்தாலும் அவன் குரலில் இன்னமும் கனிந்துகொண்டிருந்த நேசம் என்னை எதையும் பேசாது தடுத்து நிறுத்தியது. 'அந்தஆறு நாட்களில் உன்னை உனது பெற்றோர் தேடவில்லையா?' என்று சம்பிரதாயமான கேள்வியை நான் அவனிடம் கேட்டேன். 'ஓம். அவையளும் தேடினைவைதான். ஏலாத கட்டத்தில் பொலிஸிடமும் முறையிட்டிருக்கினம். நானும் டவுன் ரவுணுக்குள்ளேதான் ஒளித்துக்கொண்டனான். அத்தோடு பொலிஸும் பதின்மவயதுகள் என்றால் கொஞ்சம் தேடுவான்கள். பதினெட்டு வயதுக்குப் பிறகு என்டால் அவ்வளவு அக்கறை எடுக்கமாட்டான்கள். ஏனென்டால் இங்கை கனசனம் வீட்டை உறவுகளைவிடடு ஓடிப்போறது சாதாரணமாய் நடக்கிறதுதானே' என்றான்.
அவனை நான் சந்தித்தது, அவனின் இந்தக் கதையைக் கேட்டது எல்லாம் அந்த கல்லூரி வளாகத்தில்தான். நானும் அங்கே பகுதிநேரமாய் வகுப்புக்கள் எடுக்கத் தொடங்கியிருந்த காலம் அது. 'இதுவெல்லாம் நடந்து எவ்வளவு காலம் ஆகின்றது?' என்று கேட்டேன். 'நான்கு மாதங்களாகிவிட்டன. இப்போது இங்கே வகுப்புக்கள் எடுப்பதில்லை, ஆனால் வந்து வந்து போய்க்கொண்டிருப்பேன்' என்றான். ஏனென்று கேட்டதற்கு 'அவளை எங்கேயாவது பார்க்கும் சந்தர்ப்பம் வந்துவிடாதா என்பதற்காய்' என்றான். பிறகு இந்தநான்கு மாதங்களில் ஒருநாள் அவளைச் சந்தித்ததாகவும், அவளோடு தான் கதைக்க முற்பட்டபோது, தன்னோடு கதைக்கவேண்டாமென்று சொல்லி விலத்திப் போனதாகவும், தான் பின் தொடர்ந்தபோது கம்பஸ் பொலிஸிடம் அவள் முறையிட்டதாகவும் சொன்னான்.
'அநேகமாய் உலகிலிருக்கும் எல்லோருமே இவ்வாறான காயங்களைத் தாண்டித்தான் வந்திருப்போம். இவ்வாறான கொடுங்காலங்களைத் தாண்டிப் போய்ப்பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழகாயிருக்கும். ஏன் நீ நடந்துபோன விடயங்களை மறந்துவிட்டு முன்னே நகர்கின்ற வாழ்க்கையைப் பார்க்கக்கூடாது?' என்றேன். நான் சொல்வதை மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தவன் கொஞ்சநேர அமைதியைக் குலைத்து, 'என்னதான் இருந்தாலும் ஒரு தமிழ்ப்பெட்டையை நான் லவ் பண்ணியிருந்தால் இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டாள்தானே' என்றான்.
'தமிழ்ப்பெட்டை என்றில்லை, மனிதமனங்களே விசித்திரமானதுதான். கணந்தோறும் மாறிக்கொண்டிருப்பவை. மாறும் மனங்களிற்கு ஏன் தாம் மாறினோம் என்று சொல்வதற்கு சிலவேளைகளில் காரணங்களே இருப்பதில்லை. நீ இப்படி அவளுக்காய் ஏங்கிக்கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது, அவள் உன்னை நிராகரித்தற்கு ஒரு வலுவான காரணத்தை நீ தேடிக்கொண்டிருக்கின்றாய் என்பது. அதுதான் உன்னை இன்னும் கஷ்டப்படுத்துகின்றது. உலகில் நடக்கும் எல்லா விசயங்களுக்கும் ஏதேனும் காரணங்கள் இருக்கா என்ன? நீயும் உனது காதல் விடயத்தை இவ்வாறு எடுத்துவிட்டு நகரமுயற்சி செய்யேன்' என்று நான் கடைசியாய் அவனுக்குச் சொன்னதாகவும் நினைவு.
பிறகு சிலமாதங்களில் எனது பகுதி நேரவகுப்புக்கள் முடிந்து நான் அக்கல்லூரிக்குப் போவதை நிறுத்தியிருந்தேன். அவனைப் பற்றிய நினைவுகளும் மறக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவன் விழிகளுக்குள் தெரிந்தஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பு மட்டும் என்னைவிட்டுப் போகவில்லை. ஒருநாள் சப்வேயில் போகும்போது இரட்டைக் கொலை சம்பவம் பற்றிய செய்தி பேப்பரில் வந்திருந்தது. கொல்லப்பட்டஇரண்டுபேரில் அவனது படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது . மிகவும் அவசரப்பட்டுவிட்டானோ என்று மனம் பெரும் மழையின் ஏற்பட்ட மண்சரிவைப்போல அரிக்கத்தொடங்கியது.
உபகதை:
கொலை நடந்தஅன்று, இவன் அவளையும் அவளது புதிய காதலனையும் கண்டிருக்கின்றான். தங்களைப் பின் தொடரவேண்டாம் என்று அவர்கள் கேட்டும் இவன் பின்தொடர்ந்திருக்கின்றான். அவர்களும் தாம் வழமையாகப் போகும் திசையை மாற்றி கல்லூரிக்குப் பின்னாலிருக்கும் சிறு காடு இருக்கும் பகுதியால் சென்றிருக்கின்றனர். இவனுக்குத் தன்னைப் புறக்கணித்து அவனோடு கதைத்துக்கொண்டு போகும் அவளைப் பார்க்க வன்மம் மனதிற்குள் வெடித்துப் பரவியிருக்கிறது போலும். ஜீன்ஸிற்குள் வைத்திருந்த மடக்குக் கத்தியால் சடக்கென்று அவளோடு போன பெடியனின் கழுத்தில் நான்கைந்து முறை வெட்டியிருக்கின்றான். தடுக்கமுயன்ற அவளுக்கும் கன்னத்தில் வெட்டு விழுந்திருக்கிறது. அவனது உயிரடங்கிப் போகும்வரை இவன் அவளது தலைமயிரைப் பிடித்துக்கொண்டு பார்க்க வைத்திருக்கின்றான். பிறகு தனது பெற்றோர் இருந்த மாடியின் உச்சிக்குப் போய், இந்த பூமியிற்கு இனி வரக்கூடாது என்பதற்காய் மேலே பறந்து போவதற்காய் கீழே குதித்திருக்கின்றான்.
(எழுதியவனா, எழுத வைத்தவனா அல்லது கதையைக் கேட்டவனா எவன் இந்தக் கொலையைச் செய்தான் என்ற குழப்பத்தோடு இந்தக் கதை முடிவதற்கு, எழுதியவரைத் தெளிவுபடுத்தக் கேட்க முடியாது. ரோலண்ட் பார்த் ‘ஆசிரியரின் மரணம்’ பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியும் விட்டார். முடிக்கப்படாத 333 பக்க நாவலொன்றும் தற்கொலை செய்த அவனது வீட்டைக் கனேடிய பொலிஸ் தேடியபோது கண்டெடுக்கப்பட்டுமிருந்தது)
-------------------------------------------
ஓவியங்கள்: கிளிம்ட்
(நன்றி: 'அம்ருதா' - சித்திரை- 2018)
0 comments:
Post a Comment