கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிகோ - சஞ்சயன் செல்வமாணிக்கம்

Friday, June 26, 2020


பிரபஞ்சனின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். அதிர்வு இருக்காது. ஒரு சாந்தமான அழைப்புடன் தனது கருத்தை ஆழமாகப் பகிர்வார்.

கனடா வாழ் இளங்கோவுடைய 'மெக்ஸிகோ' நாவல், அவரின் நினைவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் முதற்பரிசு வென்றது. நாவலும், பிரஞ்சனின் குரலைப்போன்றதே.



கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிக்க மெக்ஸிகோ செல்லும் கதாநாயகன், அங்கு ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். விடுமுறையை ஒன்றாகவே கழிக்கிறார்கள். காதலாகிறது. இடையிடையே முன்னாள் காதலியும் வந்துபோகிறார். இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் கதை முடியும்போது, கதையின் நாயகனை இறுகத் தழுவி “என்னினமடா நீ” என்று அணைத்துக்கொள்ளத் தோன்றியது.

நன்கு கனிந்தவொரு வாழைப்பழத்தை உண்ணுவதைப்போன்ற இலகுவான உணர்வுடன் நகர்கிறது நாவல். சிக்கல்கள் எதுவுமில்லாத கதை. ஒரு நாள் காலை துயியெழுந்ததில் இருந்து மாலை கண்ணயரும்வரை நடந்தவற்றை சுவராஸ்யமாகச் சொல்வதுபோன்ற ஒரு பயணக்கதை. கதையை ஐந்து ஆறு வரிகளில் சொல்லிவிடலாம்.


ஆனால், பயணம், வாழ்கையனுபவம் என்பதன் ஊடாக நாவலை ரசிக்கவைப்பது உலகைக் கொண்டாடும் இளையோரின் மனங்களும், மெக்ஸிகோ நாடுபற்றிய விபரணங்களும், உரையாடல்களும், பாத்திரங்களின் சுயசிந்தனைகளும் முக்கியமாக நாவலின் இறுதியில் தோன்றும் மனிதரின் விசித்திர மனமுமே.


இன்றைய காலத்துத் தமிழை இந்த இளங்கோவால் அடக்கியாள முடிகிறது. எசமானனின் பின்னே செல்லும் விசுவாசமான நாய்போன்று ஆர்ப்பாட்டமில்லாத அட்டகாசமான மொழியைப் பெற்றிருக்கிறார்.


அத்தியாயம் 35இல், தோழியுடன் காமுறும் பொழுதை, அவளது உடை தோளிலில் இருந்து கழ‌ன்று விழும் நிலையை, அந்தக்கணத்தில் அவரது மனநிலையை, சத்தமில்லாத பூனையின் காலடிகளைப்போன்று லாவகமான மொழியில் எழுதியிருக்கிறார். மொழி நாவலின் பெரும் பலம்.


இளையபல்லவன், காஞ்சனா தேவியையும் மஞ்சள‌ழகியையும் மஞ்சத்தில் கிடத்திய காட்சிகளுக்கு ஒப்பானவை இவை. ஆனால் இங்குள்ள மொழியின் தன்மையை மீண்டும் ஒருமுறை சிலாகித்துக் குறிப்பிடாது இருக்கமுடியாது. காலமற்றம் போன்று, இலக்கியத்திற்கும் மொழிமாற்றம் அவசியம்தான் என்றே நினைக்கிறேன்.


“தான் காதலித்து, தன்னை விட்டுப் பிரிந்த பெண், இன்னொரு ஆணைக் காதலிக்கிறாள் என்பதைத்தான் எந்த ஆணாலும் தாங்கமுடியாது” என்று ஆரம்பிக்கும் ஒரு உரையாடல் 118ம் பக்கத்தில் வருகிறது. மிக அழகான உரையாடல் அது. ஆழமான சிந்தனைகளுக்கும் சுயவிமர்சனங்களுக்கும் இட்டுச்செல்கிறது.


ஆண், பெண் ஆகியோருக்கிடையிலான லௌகீகம்பற்றிய இருபாலாரினதும் சிந்தனைகள மிகவும் நுட்பமாக உரையாடல்களில் புகுத்தியிருப்பதை வாசிக்கும்போது, எம்மில் பலர் பெண்கள் பற்றியிருக்கும் சிந்தனைகளை மீளாய்வுசெய்யவேண்டியிருப்பதை உணரக்கூடும். அதற்கு எமது வயதும், நாம் வளர்ந்த காலமும் சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம்.


தற்காலத்து ஆண் பெண் உறவுகளும் அதுபற்றிய சிந்தனை வடிவங்களையும் எனது காலத்துடன் ஒப்பிட்டு தலையைப் பித்துக்கொள்வதில் அர்த்தமில்லை. காலம் தன்பாட்டில் நகர்ந்துகொண்டிருக்கிறது. நாம்தான் நின்ற இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.


123ம் பக்கத்தில்...

“பெண்கள் ஒருபோதும் தங்கள் ஆட்டங்களில் சுவார‌சியத்தை கைவிடுபவர்களில்லை. ஆட்டம் என்கிற களத்திற்குள் அவர்கள் நுழையும்போது, அவர்கள் எல்லாவிதமான தயார்ப்படுத்தல்களுடனயேயே வருகிறார்கள். புறச்சூழல் கடும் நெருக்கடியைக் கொடுத்தாலும், தம்மிடமிருக்கும் கடைசி வித்தைவரை ஒரு ஆணிடம் காட்டித்தான் விலகிப்போவார்கள்.

அவளுக்குள் இருக்கும் இயற்கையின் பேரருளை, பேரின்பத்தை உணர்கின்ற ஆண்கள் மிக அரிதானவர்கள். மிகுதி அனவரும் தாம் ஆட்டங்களில் தோற்றதாய் மனப்பிரமையுடன் பெண்களைப்பற்றி தேவையில்லாக் கதைகளைப் பரப்பியபடி இருப்பவர்கள்!”


இதைச் சொல்பவள் கதையின் நாயகி.


அவள், தனது உரையாடல்களின் ஊடாக நாவல் முழுவதும், தற்காலத்துப் பெண்களின் சிந்தனைகளை தெளித்தபடியே நடந்துகொண்டிருக்கிறாள். அது ஒருவித புரிதலுக்கும் இட்டுச்செல்கிறது என்பதுதான் உண்மை. இளங்கோவும் இளையவர் என்பதால்தான் அவருக்கும் இதுபற்றிய புரிதல் இருக்கிறது என்று நினைக்கிறேன். என் தலைமுறை எழுத்தாளர்களால் இப்படியான விடயத்தை, இந்தளவு, இன்றைய காலத்தின் மொழியில், உணர்வு கலந்து எழுதமுடியாது என்றுதான் சொல்லவேண்டும்.


வாழ்க்கையை பிய்த்து பிய்த்து, கழற்றிப் பூட்டும் உரையாடல்கள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவை. அப்படியான பல அத்தியாயங்கள் நாவலின் இறுதிப்பகுதியில் இருக்கிறது. அவற்றை அனுபவம் கலந்த விசாலித்த பார்வையுடனுடன் எழுதியிருக்கிறார் இளங்கோ.


35ம் அதிகாரம் வரை, ஒளிமிகுந்த ஒரு நாள்போன்று நகர்ந்த நாவல் திடீரென்று இருண்டு, 44ம் அதிகாரத்தில் காற்று நின்றுபோன, அதைத்த, புழுக்கமான பொழுதில், மூச்சு முட்டுவதுபோன்று மாறுகிறது. மாரடைப்பு வந்தவன், காற்றுக்காய் நெஞ்சை உயர்த்தி உயர்த்தி அலைவதுபோல அவதிப்பட்டேன்.


38ஆம் அத்தியாயத்திலும், நாவலின் வேறு சில இடங்களிலும் நாவலானது எனக்காவே எழுதியதுபோலிருக்கிறது. இப்படித்தான் ராஜ் கௌதமன் எழுதிய `சிலுவைராஜ் சரித்திரமும். வாசித்துப் பத்தாண்டுகளுக்கு மேலானபின்பும், இன்றுகூட, சிலுவையும் நானும் மிக நெருங்கிய தோழர்கள். சோர்ந்துபோகும் நேரங்களில் முதுகைத் தட்டித்தருபவன். இளங்கோவின் நாயகனும் இந்தப்பட்டியலில் சேர்ந்துகொள்ளக்கூடும்.


தத்துவ விசாரங்கள் நிறையவே இந்த நாவலில் உண்டு. உரையாடல்கள், தனிமனித சிந்தனைகளின் ஊடாக அவை அழகாக வெளிப்படுகின்றன. எனக்குப் மிகவும் பிடித்தது 36ஆம் அத்தியாயம். அங்கு மனச்சாட்சி, மன்னிப்புபற்றிப் பேசப்படுகிறது. அதுபோன்றதே 38ம் அத்தியாத்தில் பேசப்படும் வார்த்தைப்பாம்பு எப்படியானது என்னும் பகுதியும்.


இந்த நாவலின் நாயகன் மெக்சிக்கோவில் அலைவது போன்று, எனக்கும் இந்தியாவில் காடுகள், பாலைவனங்கள், சரித்திர மற்றும் அகழ்வாராய்ச்சிக் தளங்கள், கிராமங்கள், சிற்பங்கள், ஆறுகள், விளிம்புநிலை மனிதர்கள் என்று நாட்கணக்கில் அலையவேண்டும் என்ற ஆசை பல பத்து ஆண்டுகளாக உண்டு. நாவலில் வரும் தோழியைப்போன்று ஒருத்தி கிடைத்தால் மெக்சிக்கோ என்ன உலகையே சுற்றலாம். இல்லையா இளங்கோ?


இந்த நாவலைப்பற்றி ஒரு வசனத்தில் சொல்வது என்றால்...


இலையுதிர்காலத்திற்கு முன்பான இளவேனில் போன்றது.


***


அன்பு இளங்கோ!


அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.


கொண்டாடப்படும் மகத்தான நாவல்களை எழுதியவர்கள் எல்லாரும் மனிதர்களின் தீராத வலிகளைத்தான் எழுதினார்கள். உங்களுக்கும் அவ்வித்தையின் முடிச்சை அவிழ்கத் தெரிந்திருக்கிறது.


***


நன்றி: சஞ்சயன் செல்வமாணிக்கம்

0 comments: