கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

என்னைப் போன்ற யாழ்ப்பாணியைப் புரிந்துகொள்ளல்

Sunday, June 07, 2020

சில நாட்களுக்கு முன் தற்செயலாய் ஒரு செய்யுளை வாசித்திருந்தேன்.  நீங்கள் நினைப்பது சரிதான் ,  அது ஒரு பெண்ணை வர்ணிப்பதுதான் . அந்தப் பாடல் தந்த பரவசத்தில் ஒரு கதை எழுதுவதற்கான விதை இதற்குள்ளே இருக்கிறதேயென்று அதன் மூலத்தைத் தேடிப் போனபோது இறுதியில் சென்று வீழ்ந்தது 'யாழ்ப்பாண வைபவ மாலை'யில்.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றை  (பிற பகுதிகளையும் தொட்டும்) நாம் ஆதியில் இருந்து வாசிக்கக் கூடியதான ஒரு நூலாக மாதகல் மயில்வாகனத்தார் எழுதிய இந்நூலே இருக்கின்றது. ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) காலத்தில் எழுதப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை போர்த்துக்கேயரிடமிருந்து (பறங்கியரிடமிருந்து) ஒல்லாந்தார் ஆட்சியைக் கைப்பற்றும் காலம் வரை நடந்த நிகழ்வுகளை விபரமாகப் பதிவு செய்கிறது.

இந்த நூலை ஏற்கனவே மேலோட்டமாக வாசித்ததாலும் இதுவரை 'எழுததெண்ணி' இதுவரை வாசித்திருக்கவில்லை. ஒரு பாடலுக்காய் உள்நுழைந்தவன், பின்னர் சிவா சின்னப்பொடி எழுதிய 'நினைவழியா வடுக்கள்' என்ற அனுபவக்குறிப்புகளும், அருளர் பிற்காலத்தில் பிதற்றிய சாதிய வெறுப்பும் நினைவு வர யாழ்ப்பாணத்தில் சாதிகள் வந்த பரம்பிய வரலாற்றை 'யாழ்ப்பாண வைபவமாலை'யில் இருந்து வாசிப்பது சுவாரசியமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் சில சாதிகள் தமிழ்நாட்டோடு தொடர்புடையவல்ல எனச் சொல்லப்படுகிறது. அவை எப்படி வரும் என்பதைப் பார்ப்பதற்காய் பிறகு 'யாழ்ப்பாண வைபவமாலை'க்கு முன்னும் பின்னுமாக இருந்த சில நூல்களைத் தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன்.

'யாழ்ப்பாண வைபவமாலை' எழுத மயில்வாகனத்தாருக்கு ஆதாரமாக இருந்த நூல்களில் 'வையா பாடலும்' , கைலாய மாலை'யும் இருந்திருக்கின்றன. அவை செய்யுள்களாகவும் அன்றைய அரசர்களைப் போற்றிப் பாடுவதாகவும் இருக்கின்றன. 'யாழ்ப்பாண வைபவமாலை'யில் தான் முதன்முதலில் அரசர்கள், ஆதிக்கசாதியினர் மட்டுமில்லாது பிற சாதிகளைப் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு 'வையா பாடலையும், கைலாய மாலை'யும் படித்தபின் 'யாழ்ப்பாண வைபவமாலை' யை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களையும் தேடத் தொடங்கினேன்.

ஆச்சரியமாக ஞானப்பிரகாச சுவாமிகள் 'யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' என்று நூலை எழுதியிருக்கின்றார். இந்த நூல்தான் நேரடியாக இன்னொரு நூலுக்கான விமர்சனம் எனத் தலைப்பிலே சொல்லி அதை விமர்சித்து 'உண்மை'களை வேறுபடுத்த வந்த ஈழத்து முதல் விமர்சன நூலாகவும் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

ஞானப்பிரகாசரின் 'யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' எவ்வளவு முக்கியமானதோ அதைவிட நான் முக்கியமாக கொள்வது இராசநாயகம் எழுதிய 'Ancient Jaffna'.  நம்மிடையே இருந்த மிகச் சிறந்த ஆய்வாளாராக இராசநாயகத்தைக் கொள்ளலாம். அவ்வளவு ஆதாரபூர்வமாக 'யாழ்ப்பாண வைபவமாலை'யைக் கட்டுடைத்து எழுதுகிறார். ஆங்கிலத்தில் மட்டும் எழுதியதோடு நிற்காது, அதை பிற்காலத்தில் 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்று எல்லோரும் வரலாற்றை விளங்கிக் கொள்ளவேண்டுமெனத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருக்கின்றார் (நான் வாசித்தது தமிழில் இருப்பது). இராசநாயகம் இலண்டனுக்குச் சென்று 'யாழ்ப்பாண வைபவமாலை'யையும் 'கைலாயமாலை'யும் பிரதியெடுத்து வந்திருக்கின்றார். பின்னர் 'கைலாயமாலை'யைத் தனது குறிப்பிக்களுடன் மீள்பதிப்பும் செய்திருக்கின்றார்.

இராசநாயகம் இப்படி 'Ancient Jaffna' வை எழுதியபோதும், ஞானப்பிரகாச சுவாமிகளின் ஆதரவுடன் முத்துத்தம்பிப்பிள்ளை என்பவரும் 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்கின்ற இன்னொரு நூலை 1918ல் வெளியிடுகின்றார். அந்த நூலுக்கு கோலாம்பூரில் இருந்த ஒரு தனவந்தர் நிதியுதவியும் அளிக்கின்றார்.

இந்தளவு நூல்களும் யாழ்ப்பாண வைபவமாலையை மூலநூலாகக் கொண்டு எழுதப்பட்டவை. அதுபோல இன்னொரு முக்கியமான நூலாக க.வேலுப்பிள்ளை எழுதிய 'யாப்பாண வைபவ கெளமுதி' (1918) இருக்கின்றது. அது அவ்வளவு விபரமாக எழுதப்பட்டுள்ளதுடன் பிற நூல்களைப் போல  இடைநடுவில் நிற்காது,  ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை அது நீண்டு செல்கின்றது.

இவை அனைத்தையும் தொடர்ச்சியாக வாசித்தபோது, பல தடவைகளில் ஒரே நூலைத்தான் வாசிக்கின்றேனோ என்கின்ற 'தோற்றமயக்கம்' தான் ஏற்பட்டது. ஏனெனில் எல்லாமே 'வரலாற்றை'க் கூறுவதால் அது அவ்வளவு மாறுபடாதுதானே இருக்கும். ஞானப்பிரகாசரும், இராசநாயகமும், முத்துத்தம்பிப்பிள்ளையும்  மாதகல் மயில்வாகனத்தார் 'யாழ்ப்பாண வைபவமாலை'யில்  உற்சாகமிகுதியில் வரலாற்றுடன் கர்ணபரம்பரைக் கதைகளைப் புகுத்தும்போது அதைத் தெளிவாக வெளியே நமக்கு எடுத்துக்காட்டுகின்றனர்.

முக்கியமான ஒன்று ஒல்லாந்தர் போர்த்துக்கேயரை வென்று யாழை அரசாள்கையில், பூதத்தம்பியின் கதையென மயில்வாகனத்தார் எழுதியிருப்பது உண்மையில் நிகழ்ந்ததை அல்ல.  ஆனால் நமது யாழ் சமூகமோ அந்தக் கதையையே பிறகு காலங்காலமாக கதையாகச் சொல்லி வருகின்றது. அதற்காய் பூதத்தம்பி என்பவரோ அந்திராசி என்பவரோ  வரலாற்றில் இல்லை என்பதல்ல அர்த்தம். ஆனால் பூதத்தம்பியும் அந்திராசியும் போருக்குப் போவது பூதத்தம்பியின் மனைவியான அழகவல்லியின் மீது அந்திராசி கொண்ட மையலால் அல்லவென ஞானப்பிரகாசரும், இராசநாயகமும் மறுக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அந்தப் போர் நிகழ்ந்த முறையைக் கூட அவ்வளவு தெளிவாக விபரிக்கின்றனர். அந்திராசி என்பவர் ஒரு சிங்களவரே தவிர தமிழர் அல்லவெனவும்  இவர்கள் இருவரும் உறுதியாகச் சொல்கின்றனர் (ஆனால் பிறகு வந்த நமது கதைகளில் அது யாழில் இருந்த இரண்டு சாதிகளுக்குள் இருந்த முறுகலாக இந்நிகழ்வு காட்டப்பட்டிருக்கின்றது).

இன்னொன்று குளக்கோட்டனின் கதை. குளக்கோட்டனை யாழ்ப்பாண வைபவமாலை, வையா பாடலை மூலமாகக் கொண்டு மனுநீதிச் சோழனின் மகனெனச் சொல்கின்றது. ஆனால் அதை குளக்கோட்டன் அவ்வாறு மனுநீதிச்சோழனின் மகனல்ல, முற்றிலும் வேறொரு மன்னன் என இவர்கள் இருவரும் நிரூபிக்கின்றனர். குளகோட்டனே வன்னியர்களை தமிழ்நாட்டிலிருந்து கோயில் வேலைகளுக்காய் அழைப்பித்தவன் என்றும் அந்த வன்னியர்களே பிறகு இன்றிருக்கும் வன்னியை ஆள்பவர்களாக மாறியவர்கள் என்பதையும் இவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வப்போது  வன்னியர்கள் பிறகு ஈழத்துக்குக் கடல்பயணங்களில் மூலம் வந்திருக்கின்றனர். அப்படி ஒருமுறை வரும்போது வன்னியர்கள் வந்த படகுகள் கடலில் மூழ்கியதால் கரையில் காத்திருந்த வன்னியப்பெண்கள் தம் கணவர்கள் இறந்தது அறிந்து தீமூட்டி இறந்ததால் நாச்சிமார்கள் ஆகினார்கள் என்றும் அதுவே பிறகு ஈழத்தில் நாச்சிமார் கோயில்களில் வழிபாட்டுக்குரியவர்களாகவும் அவர்கள் ஆனார்கள் எனவும் இவர்கள் சொல்கின்றனர்.

அவ்வாறே இந்த ஒர் பிரதேசத்தை ஆண்ட வன்னிய தலைவர் ஒருவருக்கு உதவி செய்ய வந்த நம்பிகள் தலைவனின் மகளை ஒரு வன்னிய தலைவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றார். அதன் நிமித்தம் நம்பித்தலைவர் வன்னித்தலைவரை கொன்றுவிட, தன் கணவன் இறந்த துயரில் போக்கிடமின்றி வன்னித்தலைவரின் மனைவியும் தற்கொலை செய்துவிடுகின்றார். பிறகு நம்பித்தலைவருக்குத் தண்டனை கொடுக்க யாழ் அரசன் வந்து அவனைச் சிரச்சேதம் செய்து விட,  அந்தக் குடிகளே ஒதுக்கப்பட்டு சிதறுண்டபோதே யாழில் ஒரு புதிய சாதி பிறக்கின்றது (அதைப் பற்றி சிவா சின்னப்பொடியின் நூலும் தொட்டுச் செல்கின்றது).

இன்று யாழ் சாதியமைப்பைப் பார்த்தால் அதில் சில சாதிகள் தமிழ்நாட்டில் இருப்பதற்கும் இலங்கையில் இருப்பதற்கும் தொடர்பில்லாதவை. அவற்றை இராசநாயகமும், சுவாமி ஞானப்பிரகாசரும் சிங்கள சமூகங்களிடையே இருந்து வந்த சாதிகள் என வரையறுக்கின்றனர். ஞானப்பிரகாசர் ஒரளவு இவர்கள் தமிழர் தரப்பிலிருந்து வந்திருக்கலாமென்று இரண்டு பக்கக் கதைகளைச் சொன்னாலும், இராசநாயகம் நளவர், கோவியர், தனக்காரர் போன்ற சாதிகள் சிங்களக் குடிகளில் இருந்து வந்தவர்கள் என்று உறுதியாகச் சொல்கின்றார்.

கோவியர் சிங்களக் கோவிகம ஆதிக்கசாதியில் இருந்து வந்தவர்கள் எனவும், சங்கிலியன் தனது ஆட்சியில் சிங்கள மக்களை அகற்றியபோது அவ்வாறு போக விரும்பாத சிங்களமக்களே வெள்ளாளருக்கு அடிமைகளாக மாறினார்கள் எனச் சொல்கின்றார். கோவியர் வெள்ளாளருக்குக் குறைந்தவர்  அல்ல என்பதால்தான் அன்று கோவியர் வீட்டில் நடக்கும் மணவிழாக்களுக்கு வெள்ளாளர் உணவருந்திச் செல்வது வழக்கம் என்றும், வேறு சில பழக்க வழக்கங்களையும் இராசநாயகம் முன்வைக்கின்றார். அதுபோல நளவர், கோவியர், தனக்காரர் போன்றவர்கள் சிங்களக் குடிகளிலிருந்து வந்தவர்கள் என்பதால் இன்றும் (இந்த நூல் எழுதப்பட்ட அன்றைய காலத்தில்)  இந்தச் சாதிப்பெண்கள் தாம் அணியும் சேலையை சிங்களப் பெண்கள் அணிவதுபோல சேலைத் தொங்கலைத் தோளிற்போடுகின்றனர் எனவும் எழுதுகின்றார்.

இதேபோல கோவியர்  சாதி பற்றி குறிப்பில் ஞானப்பிரகாசர் இவ்வாறு இவர்கள் சிங்களவராக இருந்திருக்கூடுமென்பதை ஒப்புக்கொண்டாலும், இன்னொரு பார்வையையும் முன்வைக்கின்றார். வெள்ளாளர்களுடன் இந்தியாவிலிருந்து குடிமைத்தொழில் செய்ய வந்த கோவியர்கள் கோயில்களைப் பராமரிப்பவர்களாக இருந்ததாகவும், பின்னர் பறங்கியர் அநேக கோயில்களை இடித்துத்தள்ளியபோது வேறுவழியின்றி உயிர்வாழ்தலுக்காய் தங்களை அடிமைகளாக வெள்ளாளர்களுக்கு விற்றுக்கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பல்வேறு கட்டுடைப்புக்களைச் செய்வதற்கு இந்த நூல்களில் பல விடயங்கள் இருக்கின்றன. நான் இந்த நூல்களை புனைவுகளுக்கான புள்ளிகள் இருக்கின்றதா என்ற சுவாரசியத்துடனேயே வாசித்திருந்தேன். இதன் அர்த்தம் அதற்காய்  இவ்வாறான விடயங்கள் முக்கியம் கொள்ளக்கூடாதென்பதில்லை. இது ஆய்வாளர்க்குரியது. நாம் யாழ்ப்பாண வைபவமாலையில் இருந்தே எவ்வளவோ விடயங்களையும் கட்டுடைத்துப் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு வன்னியர்கள் வந்து ஆதிக்குடிகளோடு சண்டையிட்டு வன்னியைத் தமதாக்கின்றனர். அப்போது வன்னியின் ஒவ்வொரு திசையிலும் ஆண்டுகொண்டிருந்தவர்கள் பூர்வீகக்குடிகள் எனச் சொல்லப்படுகின்றது அவர்கள் பறையர், சாணகர், வேடவர் போன்ற தலைவர்கள் எனக்  குறிப்பிடப்படுகின்றனர். மேலும் பறையர்கள் தமிழ்ச்சமூகத்தில் சாதி தொடங்கமுன்னர் இருந்த ஆதிக்குடிகள் என்ற புள்ளிகளும் இந்த நூல்களில் சொல்லப்படுகின்றது.

இதை எல்லாவற்றையும் விட, இந்த நூல்களில் நான் கண்டு இன்னொரு சுவாரசியமான விடயங்கள் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களுக்கு இருந்த சிங்களப் பெயர்களாகும். அதை இராசநாயகமும், ஞானப்பிரகாசரும் மட்டுமில்லை யாழ்ப்பாண வைபவமாலையை ஒல்லாந்தர் காலத்தில் எழுதிய மயில்வாகனத்தாரும் ஒப்புக்கொள்கின்றார். ஒருகட்டத்தில் இதை வாசிக்கும்போது யாழ்ப்பாணத்தில் இன்று முக்கியமான நகர்களாக இருக்கும் பெரும்பான்மையான இடங்கள் சிங்களவர்க்குரியது அல்லது சிங்களவர் வாழ்ந்த பிரதேசங்கள் என்ற உண்மை புலப்படும். ஞானப்பிரகாசர் இன்னும் தெளிவாக இன்று சிங்களப் பெயர்கள் தமிழுக்கு பெருமளவில் மாற்றப்பட்டாலும், அன்றைய காலத்தில் காணிகளுக்கு இருந்த சிங்களப்பெயர்கள் இன்னும் (உயில்களில்) இருக்கின்றதென நிரூபிக்கின்றார்.

ஆக, ஒருவகையில் யாழ்ப்பாண அரசர்களினதும், ஆதிக்கச்சாதியினரும் பெருமைகளைப் பேசும் இந்த நூல்களின் மூலமே நாம் யாழ்ப்பாணம் என்பது இறுக்கமான சாதிகளுக்கும், ஒற்றைக்கலாசாரத்துக்கும் உரிய நிலப்பரப்பு இல்லையென்பதை எளிதாக நிரூபிக்க முடியும்.

ஆனாலும் என்ன ஒரு குறிப்பிட்ட யாழ்ப்பாணிகள் இதையெல்லாம் இப்போது பேசவேண்டுமா என வருவர். இன்னுஞ் சிலர் சிங்களப் பேரினவாதம் முக்கியமில்லையா என கேட்பார்கள். இன்னொரு தரப்போ நீங்கள் இருக்கும் நாட்டில் வெள்ளை இனவாதம் இல்லையாவென எப்போதும் இருக்கும் 'அந்த மற்றொன்றை'ப் பேசக் கேட்பார்கள்.

ஆக, நானும் உங்களைப் போன்ற யாழ்ப்பாணிதான்.  யாழ்ப்பாணிக்குரிய எல்லாக் குணாதிசயங்களும் கொண்டமைந்தவன் என்பதால் நீங்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை என்பதையும் குறிப்பிட்ட விரும்புகின்றேன்.
..........................................................................

இதை எழுதுவதற்கும்,  மேலதிகமாய் வாசிக்க விருப்புபவர்களுக்குமான நூல் பட்டியல்:
(1) யாழ்ப்பாண வைபவ மாலை - மயில்வாகனப் புலவர்
(2) யாழ்ப்பாண வைபவ விமர்சனம் -  சுவாமி ஞானபபிரகாச சுவாமிகள்
(3) Ancient Jaffna ( தமிழில் யாழ்ப்பாணச் சரித்திரம்) -  செ.இராசநாயகம்
(4) யாழ்ப்பாண வைபவ கெளமுதி - க.வேலுப்பிள்ளை
(5) யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
(6) வையா பாடல் -வையாபுரி

(Dec 14, 2019)

0 comments: