கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்

Thursday, April 01, 2021

(தமிழில்: ஆசை)


1.

எனக்கு Thay (Thich Nhat Hanh)  எப்போது அறிமுகமானவர் என்பது சரியாக ஞாபகமில்லை. ஏழு வருடங்களுக்கு முன் ஓஷோவின் உரைகள் முழுவதையும் கிட்டத்தட்டக் கேட்டிருக்கின்றேன். ஓஷோ நம்முள்ளே வைத்திருக்கும் அனைத்தையும் உடைத்தெறியககூடியவர் என்பதை நாம் அறிந்ததே. ஒரு கருத்தாக்கத்தை அவர் உடைத்து இதைத்தான் கட்டியெழுப்ப விரும்புகின்றார் என்று  நமது மனம் இன்னொன்றைக் கற்பனை செய்வதை, அதையும் அடுத்தடுத்த உரைகளில் உடைத்தெறிந்து விட, நாம் பரிதாபமாய் விடப்பட்டிருப்போம். ஓஷோ எனக்கு தோளில் கைகளைப் போட்டபடி தொடர்ந்து நடந்துவரக்கூடிய ஒரு உற்றதோழர், ஆனால் அவரை ஒரு வழிகாட்டியாக மனது ஒருபோதும் நினைத்ததில்லை. 


நமது அறிவுஜீவிதப் பாவனைகளை ஒருவர் உடைந்தபின் யாரோ ஒருவரிடம் சரணாக அடைந்தால் நல்லதென மனது சோர்வுகொள்ளும். அப்படியான ஒரு பொழுதில்தான் தாயைக் கண்டுகொண்டேன். அவர் மிக எளிமையானவர். ஓஷோ போல அறிவுத்தளத்தில் வைத்து புத்தரை அணுகியவரில்லை. ஒஷோவின் உரையைக் கேட்பதுபோல தாயைத் தொடர்ந்து உற்சாகத்துடன் கேட்கமுடியாது. காதல் என்றால் என்ன என்று கேட்டால் கூட, ஒரு குறிப்பிட்ட சொற்களுக்குள் நின்று சொல்லிவிட்டு தாய் நகர்ந்துவிடக்கூடியவர், ஓஷோ என்றால் ஒரு பெருமழையைப் பொழிந்துவிட்டுத்தான் ஓய்வார். ஆகவே ஓஷோவின் உரைகளை நேரடியாகக் கேட்டது போலில்லாது, தாயை அவரின் நூல்களை வாசிப்பதினூடாகத்தான் நெருக்கங்கொண்டேன்.


இவ்வாறு தாயிடம் நெருக்கம் கொண்டு என் நண்பருக்கு அறிமுகஞ்செய்ய, நாங்கள் தாயை பிரான்சிலிருக்கும் அவர் வசித்துவந்த Bordeaux இற்குத் செல்லக்கூட தயார்படுத்தியிருக்கின்றோம் (இப்போது உடல்நல நிமித்தம் காரணமாக தாய் வியட்னாமுக்குத் திரும்பிவிட்டார்). அதன் நீட்சியில் நான் தாயினுடைய நூல்களில் வந்தவற்றை தமிழாக்கம் செய்து ஒரு முகநூல் பக்கத்தையும் தமிழில் அவருக்காகத் திறந்துமிருக்கின்றேன். பின்னர் அந்த நண்பரின் நிமித்தம், தாயினுடைய ஒரு நூலை முற்றாக மொழிபெயர்த்து கடந்தவருடத்தின் தொடக்கத்தில் முடித்துமிருந்தேன். இவ்வாறு தாயைப் பின் தொடர்ந்து வருபவனாக இருந்த எனக்கு ஆசை, தாயினுடைய ஒரு நூலை தமிழாக்கம் செய்திருக்கின்றார் என்று அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.


2.

இந்த வருடம் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்குச் சென்றபோதே க்ரியா பதிப்பகத்தில் இதை வாங்க முடிந்தது.  நல்லதொரு வடிவமைப்பில்/மொழிபெயர்ப்பில் வந்திருக்கின்றது. ஏற்கனவே கூறியதுமாதிரி தாய் மிக நேரடியாக எளிமையான வார்த்தைகளில் பேசுகின்றவர். எனவே தாயை அவ்வளவு அறியாத ஒரு வாசகருக்கு இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிடயங்கள் போன்று வாசிப்பில் இலகுவாகக் கடந்துபோகக் கூடியது. 


உண்மையில் தாய் இதை தன்னை நாடி வருபவர்க்கும்,  தியானத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்குமான, கையேடாகத்தான் இதிலுள்ள பலவற்றைப் பேசுகின்றார். தியானத்தில் திளைத்த மனதுக்கு சொற்கள் ஏதும் பயனைப்  பெரிதாகக் கொடுத்துவிடாது. கொஞ்ச எளிமையான சொற்களே போதும். ஒருவகையில் நாம் வாழ்க்கையின் தத்துவார்த்த விடயங்களுக்குச் செல்லாமல், இந்தக்கணத்தில் இருப்பதைப் பற்றித்தான் அதிகம் பேசுகின்றார். அலைபாயும் மனதை எளிமையான வார்த்தைகளின் வழி நம்மை மீளமீள நிகழுக்கு இழுத்துவருகின்றார்.


இந்த நூலில் இறுதிப்பகுதியில் மேற்கத்தைய நாடுகளிற்கான - முக்கியமாய் அமெரிக்காவிற்கான- பெளத்தம் பற்றி தாய் பேசுகின்றார். சிலவிடயங்களை அதற்காய்த் தெளிவாக வரையறுக்கவும் செய்கிறார். இந்தியாவில் தோன்றிய புத்தரை எப்படி சீனாவும், திபெத்தும் தமக்குரிய புத்தராக சுவீகரித்து, தமக்கென சீனப்புத்தர், திபெத்திய புத்தரென ஆக்கியதோ அப்படி அமெரிக்காவும் தனக்கான புத்தரை தன் கலாசாரம்/நிலப்பரப்புகேற்ப கண்டுபிடிக்கவேண்டுமென வலியுறுத்துகிறார். அவ்வாறு இல்லாதவிடத்து புத்தரை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ளமுடியாதெனச் சொல்கிறார். 


மேலும் அமெரிக்காவில் புத்தரையும், பெளத்தத்தையும், அவரவர் தமது மன அழுத்தங்களிலிருந்து விடுபடவே பெரும்பாலும் தேடி வருகின்றனரே தவிர, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வருவதில்லை எனவும் குறிப்பிடுகின்றார். பலர் தமது நாளாந்த வாழ்க்கையிலிருந்து தம்மை அறுத்துக்கொண்டே புத்த ஆலயங்களைத் தேடி அமைதி கிடைக்குமென வருகின்றனர். அங்கு வந்து தியானத்தின் மூலம் இன்னொரு சமூகத்தை உருவாக்கி வாழத்தொடங்கும்போது அது வெளியில் கடினமாகி இருப்பதைவிட இன்னும் கடினமாக இருக்க, அதிலிருந்தும் அந்நியப்படுகின்றனர் என தாய் எச்சரிப்பதும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது. இவ்வாறாக தாய் மேற்குலகிற்கான பெளத்தம் பேசுகின்ற இந்தப் புள்ளிகள், நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தோருக்கும், புத்தரை அறிய விரும்புகின்றவர்க்கும் முக்கியமானதென நினைக்கிறேன்.


எங்கிருந்தும், எவற்றிலிருந்தும்  நாம் எளிதாகத் தப்பித்துவந்துவிடமுடியாது, எதுவாயினும் நேரடியாகச் சந்தித்து அதைக் கடந்துவருவதன் மூலமே நாம் நிகழில் இருக்கமுடியும். இதைத்தான் புத்தர்  suffering தவிர்க்கமுடியாது ஆனால் painஐ வேண்டுமானால் குறைக்கலாம் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கின்றார்.


தாயை விரும்புகின்றவர்க்கு இந்த நூலைத் தமிழில் வாசிப்பது மகிழ்ச்சி தரக்கூடியது.  'Being Peace' என்ற தலைப்பை 'அமைதி என்பது நாமே' என்பதைவிட இன்னும் தெளிவாக தமிழாக்கி இருக்கலாம் போலவும் தோன்றியது.

...................


(Nov 14, 2020)

3 comments:

Thich nhat hanh said...



Thay (Thich Nhat Hanh) பற்றி இணையத்தில் தேடிய போது உங்களது நாமே அமைதி புத்தகத்தின் விமர்சனம் படித்தேன்,அதில் தாயினுடைய நூல்களில் வந்தவற்றை தமிழாக்கம் செய்து ஒரு முகநூல் பக்கத்தையும் தமிழில் அவருக்காகத் திறந்து இருப்பதாக தெரிவித்ததுள்ளீர்கள்,மேலும் தாயினுடைய ஒரு நூலை முற்றாக மொழிபெயர்த்துள்ளதை கூறியுள்ளீர்கள்.தங்களது முயற்சி க்கு பாராட்டுக்கள்.தாயின் நாமே அமைதி புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது,நான் மேலும் the miracle of mindfulness புத்தகத்தை தேடி படித்தேன்.தமிழில் தாயின் படைப்புகள் அவ்வளவாக இல்லை, தாய் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.தங்கள் தமிழில் மொழிபெயர்த்த தாயின் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். மேலும் தாயின் தமிழ் பதிப்பு முகநூல் பக்கத்தின் பெயரை குறிப்பிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி
சரவணன்.

7/19/2022 11:19:00 PM
இளங்கோ-டிசே said...

அன்பின் சரவணன்,

தாயினது நுல்களைத் தேடி வாசிப்பது மகிழ்ச்சி தருவது. தாயிற்காய் வைத்திருந்த எனது முகநூல் கணக்கு ஏதோ காரணத்தால் முடக்கப்பட்டுவிட்டது. ஆகவே அதில் தமிழாக்கம் செய்தவை காணாமற்போய்விட்டன. நான் தாயினுடைய ஒரு நூலை தமிழாக்கம் செய்து வைத்திருக்கின்றேன், இன்னமும் பிரசுரிப்பதற்கான உரிய அனுமதியைப் பெறாததால் அப்படியே இருக்கின்றது.

எனது இந்தத் தளத்தில் தாய் பற்றி அவ்வப்போது எழுதி வருகின்றேன். தேடினால் இங்கே அவை கிடைக்கும்.
இது அண்மையில் தாய் மறைந்தபோது எழுதிய பதிவுகள்:

https://djthamilan.blogspot.com/2022/04/thich-nhat-hanh.html
https://djthamilan.blogspot.com/2022/04/02_29.html
https://djthamilan.blogspot.com/2017/10/blog-post_15.html

நன்றி,
இளங்கோ

7/26/2022 09:33:00 AM
இளங்கோ-டிசே said...

தமிழாக்கிய சில:

https://djthamilan.blogspot.com/2021/05/thich-nhat-hanh.html

7/26/2022 09:39:00 AM