கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அலெஜாந்திரோ ஸாம்பிராவின் புனைவுலகம்

Monday, October 25, 2021

1.

சமகாலத்தில் அலெஜாந்திரோ ஸாம்பிரா (Alejandro Zambra) சிலியின் முக்கிய எழுத்தாளராக இருக்கின்றார். ஸாம்பிராவின் தலைமுறை என்பது சிலியில் பினோச்சோவின் சர்வாதிகாரம் முடிந்த தருவாயில் முகிழ்ந்த பரம்பரையாகும். ஆகவே கொடுங்காலத்தை நேரடியாக அனுபவிக்காதபோதும், தமது பெற்றோர், பேரர்களிடம் இருந்து அந்த இருண்டகாலத்தை அறிந்தவர்களாக ஸாம்பிரா போன்றவர்கள் இருக்கின்றார்கள்.  போன்ஸாய் (Bonsai),  மரங்களின் அந்தரங்க வாழ்க்கை (The Private Lives of Trees), வீடு செல்வதற்கான வழிகள் ( Ways of Going Home) என்பவை அவர் எழுதிய நாவல்களாகும். கடந்த ஆண்டு 'சிலியின் கவிஞர்கள்' என்றொரு புதிய நாவலை ஸ்பானிஷில் எழுதி வெளியிட்டிருக்கின்றார். ஆனால்  அது இன்னமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.


சிலியில் கவிதையும், கவிஞர்களுமே முக்கியமாக இருக்கும்போது நாவல்கள் எழுதுபவர்கள் அவ்வளவு கவனிக்கப்படுவதில்லை. ஸாம்பிராவின் நாவலான 'போன்ஸாய்' அதன் புதிய எழுத்து நடைக்காய் அதிகம் கவனத்தைப் பெறுகின்றது.. ஒருவகையில் ஸாம்பிரா, சிலியின் பிரபல்யமான ரொபர்த்தோ பொலோனோவின் (2666, The Savage Detectives) நீட்சி எனச் சொல்லலாம். அதேவேளை ஸாம்பிராவுக்கு பெரும் நாவல்கள் எழுதுவதில் நம்பிக்கை இருப்பதில்லை. இப்போது வந்திருக்கும் புதிய நாவலைத் தவிர, அவர் எழுதிய அனைத்து நாவல்களுமே 100-150 பக்கங்களுக்குள் முடிவடைந்து போய்விடுபவை. நாவலாசிரியராக மட்டுமின்றி ஒரு கவிஞராகவும், விமர்சகராகவும் சமகாலத்தில் இருக்கும் ஸாம்பிரா, எழுத்தில் புதிய வடிவங்களைத் தொடர்ச்சியாக முயற்சிப்பவர். அதனால்தான் அவரின் ஒரு புனைவான Multiple Choice முற்றுமுழுதாக  வினா, விடைகளாய் எழுதப்பட்டு வெளிவந்திருக்கின்றது. அது புனைவு என்று இதுவரை சொல்லப்பட்ட வடிவத்தை மீறுகின்ற ஒரு முயற்சியாகும்.


ஸாம்பிராவின் நாவல்கள் சிறிதென்றாலும், அவர் அங்கே சிலவரிகளாலும், சிறு பந்திகளாலும் பெரும் விடயங்களைச் சொல்லிச் செல்கின்றார். அதை நாம் அவற்றின் பின்புலங்கள் அறிந்தாலின்றி அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியாது. அவரின் போன்ஸாய் நாவல் ஒரு இணையின் வாழ்வைப் பற்றிச் சொல்கின்றது. அவர்கள் படிக்கும் காலங்களில் காதலர்களாக இருந்தபோது அனுபவித்தவைகள்  நனவிடை தோய்தலாகின்றன. நாவலின் தொடக்கத்திலேயே முக்கிய பெண் பாத்திரமான எமிலியா இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நாவல் அவரின் காதலராக இருந்த ஜூலியோவின் பார்வையினூடு விரிகின்றது. இவர்கள் இருவருமே ப்ரோஸ்ட்டை (Proust) வாசித்ததாகச் சொன்னாலும், அது பொய் என்று நமக்குத் தெரிகிறது. ப்ரொஸ்ட்டின் In Search of Lost Timeஐ வாசிக்காமலே இருவரும் மீள்வாசிப்புச் செய்கின்றோமென தங்களுக்குள் எமிலியாவும், ஜூலியோவும் சொல்லிக்கொள்கின்றார்கள். 


அதேபோல எமிலியா இறந்தது தற்கொலை செய்து என்றும், இல்லை அவர் ஒரு வாகனவிபத்தில் இறந்தார் எனவும் இந்நாவலில் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகிறது. அதுவும் நம்புவதற்கில்லையென நமக்கு இறுதியில் புரிகிறது. ஒரு பாத்திரம், மற்றவர்களை அவ்வளவு பாதிக்காமல் பொய்யைச் சொல்லி எப்படி வாழமுடியுமென்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணமாக இருக்கிறது. அதை மெல்லிய எள்ளலுடன் இந்த நாவல் முன்வைக்கிறது.


இதேமாதிரி பொய் சொல்லி வாழும் ஒருவரால், பிறரது வாழ்வு எப்படிப் பாதிக்கின்றது என்பதற்கு 'குடும்ப வாழ்வு' (family life) என்னும்  கதை நல்லதொரு உதாரணமாகும். தூரத்துச் சொந்தக் குடும்பம் ஒன்று விடுமுறைக்காக சில மாதங்கள் வேறொரு இடத்துக்குப் போக , அந்த வீட்டைப் பராமரிக்க வரும் ஒருவன், எப்படி தன்னை அந்த வீட்டின் சொந்தக்காரன் என்று ஒரு பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றுகிறான் என்பதை இந்தக் கதை சொல்கிறது. ஒருவகையில் இவ்வாறு பொய்களால் கட்டியமைக்கும் வாழ்வைத்தான் பல சிலியன்காரர்கள் வாழ்கின்றார்கள் என ஸாம்பிரா ஓரிடத்தில் கூறுகின்றார்.


ஸாம்பிராவின் மற்ற நாவலான 'மரங்களின் அந்தரங்க வாழ்க்கை' யில் முக்கிய பாத்திரமான ஜூலியன், அவரது step-daughter ஆன சிறுமியைத் தூங்க வைப்பதற்கான மரங்களின் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார். அந்தச் சிறுமி நித்திரையான பின், ஜூலியன் தனது கடந்தகாலக் காதல் கதைகளை வாசிக்கும் நமக்குச் சொல்கின்றார். இப்போது மரங்களினதும், ஜூலியனின் காதல் கதைகலும் ஒன்றையொன்று இடைவெட்டிக் கொள்கின்றன. இதன்நடுவில் அவரது மனைவியான வெரோனிக்கா இன்னும் வீடு திரும்பாதது பற்றியும் ஜூலியன் நினைவுகூர்கிறார். வெரொனிக்காவிற்கு இன்னொரு ஆடவனுடன் உறவு இருக்கலாமென்றும் நமக்கு மறைமுகமாக உணர்த்தப்படுகின்றது. அந்த ஆணின் விட்டிலேயே  வெரொனிக்கா அந்த இரவுக்குத் தங்கிவிட்டார் என்பதை நாம் ஊகித்தறிகிறோம். வெரொனிக்கா மனம் மாறி வீடு திரும்பினால் அவரோடு வருகின்ற சனிக்கிழமை விடுமுறை செல்லலாம் எனவும் ஜூலியன் நினைக்கின்றார். நேரமோ விடிகாலை நான்கு ஆகிவிட்டது. வெரொனிக்கா இன்னும் வீடு திரும்பாமல் இருக்கின்றார். ஒரு மாலையில் தொடங்கி, அடுத்தநாள் விடிகாலையில் முடியும் நாவலாக இது அமைந்திருக்கிறது.



2.

அலெஜாந்திரோ ஸாம்பிரா சிலியில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு கல்லூரியில் கற்பிக்கப்போனபோது அவரது எதிர்கால மனைவியைச் சந்திக்கின்றார். கடந்த மூன்றுவருட காலமாக அவரும் துணையும் மெக்ஸிக்கோவில் வசித்து வருகின்றனர். அது அவருக்கு  ஒருவர் தாய்நாட்டை விட்டுப் பிரிந்து வாழும் எல்லாவித உணர்வுகளையும் தருகின்றது என்கின்றார்.


அலெஜாந்திரோ ஸாம்பிராவில் புனைவுகளில் எழுத்தாளர் பாத்திரங்களே முதன்மையாக இருக்கின்றன. அதில் அவர்கள் நாவல்களை எழுதுகின்றவர்களாகவும் வருகின்றார்கள். அவர்கள் எழுதுகின்ற நாவல்களையே நாங்கள் வாசிக்கின்றமாதிரியும், சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கையையை நாவலுக்குள் நாவலாக வாசிக்கின்றமாதிரியும், எது நிஜம், எது புனைவு என்கின்ற மெல்லிய கோடுகளுக்கிடையில் ஸாம்பிரா எழுதிச் செல்வதையும் நாம் பார்க்கமுடியும்.


ஸாம்பிராவின் மூன்றாவது நாவலான 'வீடு செல்வதற்கான வழிகள்', சிலியில் 1985இல் நிகழும் பூகம்பத்துடன் ஒரு ஒன்பது வயதுச் சிறுவனின் நினைவுகளுடன் தொடங்கின்றது.  நகரொன்றில் தமக்கான தனித்துவங்களுடனும் தனிமையுடனும் இருக்கும் மனிதர்கள் அனைவரையும் பூகம்பம் ஒரேயிடத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றது. அப்போது சிலியில் பினோச்சேயின் இருண்ட ஆட்சி நடக்கின்றது. இந்தவேளை ஒன்பது வயதுச் சிறுவன், தன்னிலும் மூன்று வயது மூத்த கிளாடியாவைச் சந்திக்கின்றார். அவர் மீது வயதுக்கு மீறிய மெல்லிய ஈர்ப்பு இந்தச் சிறுவனுக்கு இருக்கின்றது. கிளாடியாவைக் கவரும் நோக்கில், கிளாடியாவின் வேண்டுகோளிற்கிணங்க, அவரின் மாமா ஒருவரை இந்தச் சிறுவன் உளவு பார்க்கச் சம்மதிக்கின்றார். தனியே வசிக்கும் கிளாடியாவின் மாமாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காய், தன் பெற்றோரிடம் வயிற்றுக்குப்பிரச்சினை எனப் பொய்சொல்லி பாடசாலைக்குக் கூடச் செல்லாது, தீவிரமாய் வேவு பார்க்கின்றார்.


இரண்டாவது பாகம், இந்நாவலை எழுதும் எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. இன்னும் சொல்லப்போனால் மேலே கூறப்பட்ட முதலாவது அத்தியாயம், இந்த நாவலாசிரியரால் எழுதப்படும் நாவலின் ஒரு பகுதியே ஆகும், இவ்வாறாக ஒரு நாவலிற்குள் இன்னொரு நாவலாகக் கதை வளர்கின்றது. நாவலாசிரியருக்கு எமெ என்கின்ற பெண்ணோடு நீண்டகால உறவு இருந்து இப்போது பிரிவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாவலாசிரியருக்குள் இன்னும் எமெ மீதான காதல் வற்றாத இருக்கின்றது.


மூன்றாம் பாகம், மீண்டும் நாவலாசிரியர் எழுதும் நாவலிற்குள் போகின்றது. முதலாம் பாகத்தில் சிறுவனாக இருக்கும் சிறுவன், தற்செயலாக தன் குழந்தைமைக்கால நண்பியான கிளாடியாவை நீண்ட வருடங்களின் பின் சந்திக்கின்றார். கிளாடியா இப்போது நியூ யோக்கில் வசிக்கின்றார். அவருக்கு ஆர்ஜென்ரீனா காதலர் ஒருவரும் இருக்கின்றார். கிளாடியா, தன் தகப்பனின் மறைவிற்காய் சிலியிற்குத் திரும்பி வருகின்றார்.


இந்த நாவலின் ஓரிடத்தில், 'நாம் யாரோ ஒருவரின் கதையை சொல்லத் தொடங்குகின்றோம், ஆனால் இறுதியில் நாம் நமது கதையையே சொல்லி முடிகின்றோம்' எனச் சொல்லப்படுவதைப் போல இந்நாவலாசிரியர் முதல் அத்தியாயத்தில் எழுதுவதாய்க் கூறும் கதையும், இரண்டாம் அத்தியாயத்தில் அவரைப் பற்றிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுவதும்.... எது நிஜம் எது புனைவு என்கின்ற இரண்டும் கலக்கப்பட்ட  ஓர் இடத்திற்கு  இந்நாவலை வாசிக்கும் நாங்கள் மூன்றாம் பாகத்தில் வந்தடைகின்றோம்.


உண்மையில் இந்த நாவல்,  சர்வாதிகார/கொடூர ஆட்சியில் வாழ்ந்த தலைமுறையினருக்கும், அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் இடையில் வரும் -அவ்வளவு எளிதில் தீர்க்கமுடியாத-  சிக்கல்களைப் பேசுகின்ற புனைவாகும். ஹிடலரின் ஆட்சியில் இருந்த ஜேர்மனியின் தலைமுறையிற்கும், அதற்குப் பிறகு வந்த தலைமுறையினருக்கும் வந்த முரணும் இதுவே. அதைப் போன்றே சிலியின் பினோச்சேயின் காலங்களில் தப்பிப்பிழைத்த தலைமுறையினர், பினோச்சேயின் காலங்களின் பின்னால் வந்த தலைமுறையினரின் கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாவலின் ஓரிடத்தில் 'நாம் போர் முடிந்துவிட்டதென மீண்டும் வீடு திரும்புகின்றோம். ஆனால் உண்மை என்னவென்றால், போர் இன்னும் எங்களின் மனங்களில் முடியவே இல்லை என்பதாகும்' எனச் சொல்லப்படுகின்றது. அதேபோல ஒவ்வொரு பெரும் அழிவின்/கொடுங்கோல் ஆட்சியின் முடிவின் பின்னாலும் அவை கொடுத்த வடுக்கள் அவ்வளவு எளிதில் மறைவதுமில்லை என்பதும் இந்நாவலை வாசித்து முடிக்கும்போது நமக்குப் புரிகிறது.


3.

ஸாம்பிராவின் நாவல்கள் கிட்டத்தட்ட இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. Secondary Characters தனக்குப் பிடித்தமானது எனச் சொல்லும் ஸாம்பிராவின் புனைவுகளில் கதைகளுக்குள் கதைகளென கதைகள் நீண்டபடியிருக்கும். போர்ஹேஸ் மீதும் பொலானோ மீதும் மதிப்புடைய ஸாம்பிரா, தனது நாவல்களை நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரும் நாவல்ளாய் எழுத விரும்புபவருமில்லை. ஒருவகையில் அவை Novella வகையைச் சேர்ந்தவை எனத்தான் சொல்லவேண்டியிருக்கும்.


தமிழ்ச்சூழலில் இலத்தீன அமெரிக்க நாவல்கள் என்றாலே அது மாய யதார்த்த வகையைச் சேர்ந்தவை என்ற பொது அபிப்பிராயம் நீண்டகாலமாக இருக்கின்றது. மாற்றம் என்பதே மாறாதது என்பதுபோல இலத்தீன் அமெரிக்க புனைவு மாற்றமடைந்து வருவதற்கு ஸாம்பிரா போன்றோர்கள் மிகச் சிறந்த உதாரணமாகும். இவ்வாறு ஸாம்பிரா போல மாயயதார்த்தத்திலிருந்து மீபுனைவுகளுக்கு (metafiction)  நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியாக நாம் தமிழில் ரமேஷ் பிரேதனின் அண்மைக்கால நாவல்களைச் சொல்லலாம். 


தினமும் எதையாவது எழுதிப் பார்க்கும் தனக்கு அது இணையத்தில் எழுதுவதாக இல்லாமல், தனது ஜேர்னல்களில் எழுதுவது உவப்பாக இருக்கின்றது என்கின்றார் ஸாம்பிரா. அதேபோல தான் மரணிக்கப்போகின்றேன் என்றால் உடனேயே அழிக்க விரும்புவது இந்த டயரிக்குறிப்புக்களாக இருக்கும் எனக் கூறினாலும், ஸாம்பிராவின் புனைவுகள் நம் சூழலில் நாம் தவறவிடாது வாசித்து உரையாட வேண்டியவையாகும்.


********************************.

( நன்றி: 'வியூகம்' இதழ்- 06)


0 comments: