கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சா.கந்தசாமி - 'புது டில்லி'

Tuesday, May 31, 2022


ன்றைய காலங்களில் அதிக பக்கங்களுள்ள பெரும் புத்தகங்கள் வாசிக்க கஷ்டமாயிருக்கின்றது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் திரட்டப்பட்ட ஆக்கங்களின் பெருந்தொகுப்புக்களைக் கூட, வாசிக்க ஆர்வம் குறைந்து வருகின்றது. அதேவேளை அவர்களின் தனித்தனித் தொகுதிகளை வாசிப்பதில் ஆவலாகவே இருக்கின்றேன். அவ்வாறு கடந்த மாதம் இங்குள்ள நூலகத்திற்குப் போனபோது கண்டெடுத்ததுதான் சா.கந்தசாமியின் 'புது டில்லி' என்கின்ற புதினம்.

இந்த நாவலில் நான்கைந்து நபர்கள் மாறி மாறிக் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கதை நிகழ்கின்ற காலம் இந்திரா காந்தியின் கொலை நடந்த சமயம். ஆகவே மரணம் பற்றியும், கொலைகள் பற்றியும் சரித்திரத்தின் பல்வேறு பகுதிகள் தொட்டுப் பேசப்படுகின்றன. ராஜன் என்று தனித்து இருக்கின்ற, பிறரால் சுகஜீவியென அழைக்கப்படும் ராஜராஜன் என்கின்றவர் முக்கிய பாத்திரம். சென்னைக்கு வரும்போதெல்லாம் அவர் அடிக்கடி காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தங்கிக்கொள்வார். அங்கே தங்கும்போது அலுப்பு வரும்போது தியாகராஜா நகரில் சிவமணி என்பவர் வைத்திருக்கும் புத்தகக் கடைக்குப் போயிருவார். அவ்வாறு சிவமணியால் அறிமுகப்படுத்தபடும் ஒரு பேராசிரியரே வைத்தீஸ்வரனாவார். வைத்தீஸ்வரன் டெல்கி பல்கலைக்கழகத்தில் வேலை செய்பவர் என்றாலும் உலகமெங்கும் கருத்தரங்குகளுக்காய்ப் பயணிப்பவர். ராஜனுக்கும், வைத்தீஸ்வரனுக்கும் நல்லதொரு நெருக்கம் ஏற்பட அவர்கள் நிறைய இருப்பு சார்ந்தும், இறப்பு சார்ந்தும் பேசிக் கொள்கின்றார்கள். ராஜனுக்கு ஒரு நெருங்கிய நண்பர் இருக்கின்றார். அவர் ஜராவதம். ராஜனின் குழப்பங்களைத் தொடர்ந்து தெளிவுபடுத்தியபடி இருப்பவர் . படிப்பதற்கும், பேசுவதற்குமென ஜராவதம் தனது வீட்டில் பெரிய இடம் கட்டி வைத்திருக்கின்றார். ராஜனைப் பார்த்து 'உனக்கு பேசுவதில் பேராசை இருக்கிறது' என்று சொல்லி, ராஜனை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்.
இவ்வாறான சில முக்கிய பாத்திரங்களோடு இந்த நாவல் நகர்கின்றது. இந்திரா காந்தியின் மரணம் ஒரு பின்னணி என்றாலும், அப்போது ஏற்படும் பதற்றங்கள், அதைப் புரிந்துகொள்கின்ற மனோநிலை, சாவு பற்றிய கேள்விகள், தனி மனிதர்கள் வாழ்க்கையின் அர்த்தம் (அலெக்ஸாண்டர் முதல் புத்தர், ஆனந்தா இன்னும் பலரின் வாழ்க்கை பேசப்படுகின்றது) என்று பல விடயங்கள் தொடர்பும்/தொடர்ச்சியுமின்றி உரையாடப்படுகின்றது. மையமற்று பல்வேறு வெடிப்புக்கள் மட்டுமே பேசப்படுகின்றன என்பதால் இந்த நாவல் எனக்கு நெருக்கமாக இருந்தது. ஒருவகையில் இதை நகுலனின் நாவல்களின் நீட்சியெனச் சொல்லலாம். ஆனால் நகுலன் உள்வயமாக வாழ்க்கையைப் பார்க்க, இந்த நாவலின் பாத்திரங்கள் புறவயமாக, பிறரின் வாழ்வைப் பேசுவதன் மூலம் தமது இருப்பின் அர்த்தம்/அர்த்தமின்மைகளைப் புரிந்துகொள்ள முயல்கின்றன. இறுதியில் டெல்கியில் இருக்கும் வைத்தீஸ்வரன், ராஜனை டெல்கிக்கும், காசிக்கும் போய் ஆறுதலாகச் சுற்றிப் பார்த்து உரையாட அழைக்கின்றார். ராஜனும் நீண்டகாலம் அங்கே செல்லாததால் தனது நெருங்கிய நண்பரான ஜராவதத்தை அழைத்துச் செல்ல தீர்மானிக்கின்றார். ஆனால் ஜராவதத்துக்கு நடக்கும் ஓர் அசம்பாத சம்பவத்தோடு நாவல் நிறைவுபெறுகின்றது. ஒரு கொலையில் தொடங்கும் நாவல் இன்னொரு கொலையோடு முடிந்துவிடுகின்றது. சா.கந்தசாமியை ஒரேயொரு முறை நேரில் சந்தித்தேன். அவரின் மகன்களில் ஒருவர் அப்போது கனடாவின் மேற்குமுனையில் வாழ்ந்துகொண்டிருந்தார். அந்தப் பயணத்தின் நீட்சியில் கனடாவின் கிழக்குக்கரையான ரொறொண்டோவில் நடந்த ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். அந்தச் சந்திப்பில் நிகழ்ந்த ஏதோ ஒரு விவாதம் சற்று காரசாரமாகப் போனதாக நினைவு. அவ்வளவு உவப்பில்லாத ஓர் சூழ்நிலை இறுக்கமாக உருவாக, சா.கந்தசாமியின் நிகழ்வின் இடையிலே புறப்பட்டிருந்தார் என்பதாக ஞாபகம். எனக்கும் அன்றைய காலத்தில் 'கசடதபற' ஞானக்கூத்தன் போன்றோரிடம் விலத்தல் இருந்ததால், சா.கந்தசாமியுடன் உரையாட வேண்டுமென்ற ஓர் ஆர்வம் இருக்கவில்லை. அத்துடன் அவரை அவ்வளவாக அன்று வாசித்துமிருக்கவில்லை. இப்போது 'புது டில்லி'யை வாசிக்கும்போது, அவர் இன்று உயிரோடிருப்பின் இது எனக்குப் பிடித்த ஒரு நாவல் என்றேனும் அவரை நெருங்கிச் சென்று சொல்லியிருப்பேன்.


*************
(Mar 29, 2022)

0 comments: