ஒரு படைப்பு அதற்கான வாசகர்களைத் தன்னியல்பிலே கண்டடைந்துகொள்ளும்.
வாசித்து அலைந்து எழுதுபவனின் சில குறிப்புகள் - 03
In இன்னபிற, In வாசிப்புSunday, August 14, 2022
எழுத்து
.
ரொபர்த்தோ பொலானோவின் 'Savage Detectives' நாவல் பதின்மங்களில் இருக்கும் இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும். மெக்ஸிக்கோவில் இதுவரை இருந்த கவிதை முறையை மாற்றுகின்றோம் என்று தங்களுக்குள் அறைகூவல் விடுத்து ஒரு புதிய குழுவை (Visceral Realists) அமைத்து இவர்கள் இயங்கத் தொடங்குவார்கள். இந்த நாவல் கிட்டத்தட்ட பொலானோவின் இளமையில் நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டதென்றாலும், இந்த நாவலின் கதைசொல்லி பொலானோ அல்ல.
Visceral Realists அமைப்பைச் சேர்ந்த கார்ஸியா மாதரோவினாலே சொல்லப்படுகின்றது. அவ்வாறு சொல்லப்படும் கதையில் பொலானோவின் Alter egoவான, Arturo Belano ஒரு பாத்திரமாக வருகின்றது. இவ்வாறே தான் சம்பந்தப்பட்ட இளமைக்காலக் கதையைச் சொல்லுகின்றபோதும், தன்னையொரு உபபாத்திரமாகக் கொண்டு ஹெமிங்வே 'A Moveable Feast'ஐ எழுதியிருப்பார்.
இளமை கொப்பளிக்கும்போது எழும் கனவுகள்தான் எத்தகை அழகானது. இந்த உலகையே புரட்ட பெரும் புரட்சி செய்யவும், கலை இலக்கியங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்றும், கற்பனை செய்யாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்ன? அவ்வாறு மாற்றங்களைக் கொண்டுவர புறப்பட்ட ஒரு குழு எப்படி சிதைவுண்டு போகின்றது என்பதை நாம் இந்த நாவலில் பார்க்கின்றோம். இந்த நாவலின் முக்கிய பாத்திரமான ஒன்று நிகாரகுவாவிற்கு புரட்சி செய்யப்போய், இறுதியில் வெறுமை சூழ, ஒரு பூங்காவில் அக்டோவியா பாஸை சந்திக்கும்.
அக்டோவியா பாஸ் இந்த இளைஞர்களுக்கு ஒரு ஆதர்சமாக இருந்தவர். ஆனால் அந்தக் குழு உடைந்து போனது மட்டுமின்றி, இந்தப் பாத்திரத்திற்குள் எந்த பெரும் நெருப்பும் கனன்று எரிவதில்லை. ஒரு இடத்தில் யூலிஸஸ் லிமா என்கின்ற இந்தப் பாத்திரம், 'ஒருவருக்கு இருப்பதற்கு ஓரிடமும், செய்வதற்கு ஒரு வேலையும் நிச்சயம் வேண்டும்' என்று சொல்லும். ஆனால் துயரம் என்னவென்றால் யூலிஸஸ் லிமா என்கின்ற இந்தப் பாத்திரம் இந்த இரண்டும் இல்லாது தத்தளிப்பில் அலைந்து கொண்டிருக்கும்.
எழுபதுகளின் நடுப்பகுதியில் தொடங்கும் இந்த நாவலை ரொபர்த்தொ பொலானோ 1998 எழுதி முடித்து வெளியிடுகின்றார். அந்த நாவல் வருகின்ற காலப்பகுதியில்தான் இந்த நாவலில் வருகின்ற யூலிஸஸ் லிமா என்கின்ற இளமையில் அவ்வளவு துடிப்புமிக்க இருந்த நண்பரை, கார் விபத்தில் இழக்கின்றார். அந்த நண்பரின் உடலம் எவரும் அனுமதி கோராது மூன்று நாட்களுக்கு மேலாக வைத்தியசாலையில் இருந்த கொடுமையும் நிகழ்ந்திருக்கின்றது.
வாழ்க்கையெனும் பரம்பதத்தில் நாம் எங்கெங்கு எல்லாம் எடுத்துச் செல்லப்படுவோம் என்பது எவருக்கும் தெரிவதில்லை. ஆனால் இலக்கியம் அதை இன்னொருவகையில் இவ்வாறான உதிரிகளாக அடையாளமற்றுப் போகும் மனிதர்களை நினைவுகொள்ளும். ரொபர்த்தோ பொலானவை வாசிக்கும் என்னைப் போன்ற வாசகர்கள், நிஜவாழ்வில் எவருக்குமே தேவையற்று அநாதரவாய் இழந்து போன மனிதனை, யூலிஸஸ் லிமா என்ற பாத்திரத்தினூடாக உயிர்ப்புடன் வைத்துக் கொள்வோம்.
இந்த Visceral Realists இளைஞர்களுக்கு அக்டோவியா பாஸ் போல, இன்னொரு எழுத்தாளரான ஸிசாரோ டினாஜாரோ என்கின்றவரும் ஆதர்சனமானவர். அவரையே தங்கள் குழுவின் தாயைப் போன்றவர் என்கின்றனர். ஆனால் டினாஜாரோ இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் அதிகம் பேசப்படாதவர். அதேபோல அவரின் வாழ்வும் மர்மமானது. ஒரு பாலைவனத்தில் காணாமற்போனவர் எனச் சொல்லப்படுகின்றது. அதன்பின் அவரைப் பற்றி எவருக்கும் தெரிவதில்லை. ஒருவகையில் இந்த நாவலின் முதற்பாகமே அந்தப் பெண்ணைத் தேடி இந்த இளைஞர்கள் அந்தப் பாலைவனத்துக்குப் போவதற்கான முயற்சிகளைப் பற்றியதுதான்.
ஒருவர் எவற்றில் வீழ்ந்தார், மீண்டார், எழுந்தார் என்பதெல்லாம் ஒரு கலைஞனைக் குறித்து யோசிக்கும்போது வாசகர்கள் அவ்வளவு கவலைப்படுவதுமில்லை. ரொபர்தோ பொலானோ போன்ற எழுத்தாளர்கள் எவ்வகையான படைப்புக்களை நமக்குத் தந்திருக்கின்றார்கள் என்பதே நமக்கு முக்கியமானது. ஒருவகையில் தன் சமகாலத்து பெரும் எழுத்தாளர்களை எள்ளல் செய்து, நோபல் பரிசு போன்றவற்றை கடுமையாக விமர்சித்த பொலானோ இன்றைக்கு மார்க்குவெஸ், போர்ஹேஸ் போல இலத்தீன் அமெரிக்க உலகில் மிக முக்கியமான எழுத்தாளர். ஆனால் பொலானோ வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு உதிரி; பலரால் அவ்வளவு கவனிக்கப்படாத ஒரு எளியபடைப்பாளி.
தனது கலைக்கு நேர்மையாக இருந்த பொலானோ அவரது ஐம்பதாவது வயதில் (2003) காலமாகிப் போனாலும், இன்றைக்கு அவரே கற்பனை செய்திராத எல்லைக்கு அப்பாலும் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கின்றார்.
அது காலம் அவருக்கு மனம் உவந்தளித்த சிறந்தவெகுமதியாகும்.
****************
நன்றி: 'அகநாழிகை' - ஆடி, 2022
வாசித்து அலைந்து எழுதுபவனின் சில குறிப்புகள் - 02
In இன்னபிற, In வாசிப்புThursday, August 11, 2022
வாசிப்பு
“great writers are indecent people
they live unfairly
saving the best part for paper.
good human beings save the world
so that bastards like me can keep creating art,
become immortal.
if you read this after I am dead
it means I made it.”
~Charles Bukowski
நண்பரொருவர் 'நீங்கள் எப்படி எழுதுகின்றீர்கள்?' என ஒருநாள் சடுதியாகக்
கேட்ட்டார். சில வருடங்களுக்கு முன் இலங்கைக்குச் சென்றபோது இன்னொரு நண்பரினூடாக இந்த
நண்பர் அறிமுகமாயிருந்தார். பின்னர் அவர் கனடாவுக்கு வந்த தொடக்க காலங்களில் அவரோடு
ஒரளவு தொடர்பிருந்தது. பின்னர் தேய்பிறை போல அந்த நட்பு மங்கிப் போயிருந்தது.
திரும்பவும் அவர் தொடர்பில் வந்தபோது, அவர் இந்த இடைப்பட்ட காலங்களில் பெற்ற மாற்றங்கள் நான் கொஞ்சங்கூட
எதிர்பார்க்காதவை. இலங்கையில் அவருட்பட்ட நண்பர்களோடு ஹிக்கடுவைக்கு ரெயினில் போனபோது -வழமையாக
நான் ஒரு கால் விரலை இன்னொரு விரலுக்குள் மடித்து வைக்கும் பழக்கம் உள்ளவன்
ஐயோ இவனுக்குக்கு ஒரு கால்விரல் இல்லையே என கவலைப்பட்ட மிகுந்த அப்பாவியாக இருந்தவர்.
அவர் கனடா வந்ததன்பிறகும் ஒருவகையான அப்பாவித்தனத்தோடு இருந்தது நினைவினிலுண்டு. அத்தோடு
கொன்வென்ட் பாடசாலைகளில் படிக்கும் அநேக பிள்ளைகளுக்கு இருக்கும் பணிவு/கருணை என்பதும்
அளவுக்கதிகமாக அவருக்கு இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு இப்போது அவரைப்
பார்த்தபோது முற்றிலும் வேறொரு நபராக மாறியிருந்தார்.
இடையில் எவையவை நடந்து, அவர் இந்த மாற்றங்களுக்கு ஆளானார் என்பது என்னளவில் முக்கியமில்லை. ஆனால் நான்
பார்த்த பல பெண்கள் (ஆண்களை விட) அவ்வளவு சடுதியாக மாற்றங்களுக்கு உள்ளாகி நம்மை விஞ்சிப்
போகின்றவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த நண்பர் இப்போது (அவர் சார்ந்த மதம் வேறெனினும்)
புத்தருக்குள் ஆழப் போனவராக, ஒரு யோகா ஆசிரியராக மாறியிருந்தார். அதைவிட மிகச் சிறந்த பயணியாக மாறியிருக்கின்றார்.
ஒரளவு பயணங்கள் செய்து பயங்களை உதறித்தள்ளியவன் என்கின்ற எனக்கே தயக்கமாயிருக்கும்
சில இலத்தீன் அமெரிக்க நாடுகள், வட ஆபிரிக்கா என பல இடங்களுக்குத் தனித்து அவர் பயணித்திருக்கின்றார் என்பது மிகவும்
மகிழ்ச்சி தரக்கூடியது.
இப்போது என்னிடம் வந்து எப்படி எழுதுவது என்று கேட்டதற்கு, அவருக்கு இருக்கும் பயண அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்யவேண்டும்
என்ற ஆவலில் இருந்து எழுந்ததென நினைக்கின்றேன்.
அந்த நண்பருக்குச்
சொன்னது போலவே இங்கேயும் எழுதுவது என்பது எப்படியென்று நான் எதையும் பகிரப் போவதில்லை.
ஏதோ இது நன்கு எனக்குத் தெரிந்து அதை இரகசியம் போல பதுக்கி வைத்திருக்கின்றேன் என்பதல்ல இதன் அர்த்தம். வேண்டுமெனில் எல்லாமே 'விடாது முயற்சி' செய்வதில் இருக்கிறதென ஒர் எளிமைக்காகச் சொல்லிவிடலாம்.
ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கும்போது வரும் எல்லாத் தயக்கங்களும்
எழுதத் தொடங்கும்போதும் இருக்கும். ஆகவே நண்பருக்குச் சொன்னேன்; 'எது வருகின்றதோ எல்லாவற்றையும் தயக்கமின்றி எழுதிக் கொண்டு செல்லுங்கள்.
அதுதான் எழுதுகின்றபோது முக்கியமானது. பின்னர் எழுதி முடித்தபின் நீங்களே ஒரு விமர்சகராக
இருந்து அதை வெட்டிக் கொத்தி திருத்திக் கொள்ளலாம்' என்றேன். எழுதத் தொடங்கும் எல்லோருக்கும் உடனே வரும் தயக்கம், நான் நன்றாக/சரியாக எழுதுகின்றேனா இல்லையா என்பது. அது எந்தக்
கலையாயினும், அதில் ஈடுபடுகின்றவர்க்கு
வருகின்ற அச்சமே. ஆனால் நினைவில் வைத்திருக்கவேண்டியது, உங்களை விட சிறந்த எழுத்துக்களும், எழுத்தாளர்களும் இருந்தாலும், உங்கள் அனுபவங்களையும், உங்கள் வாழ்வையும் எழுத உங்களை விடச் சிறந்த எவரும் இல்லை. ஆகவே தயக்கமின்றி எழுதிப்
பாருங்கள் என்று சொன்னேன்.
அதேசமயம் எழுத்து ஒரளவு கைவந்தபின், 'போலச் செய்யும் பாவனை'களை நாம் தொடர்ந்து களைந்து வந்தபடியே இருக்க வேண்டும். ஒரு தேர்ந்த வாசகர் எமது
பாவனைகளை/போலச்செய்தல்களை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். வாசகர்களை விட எழுதும் எமக்கு, நாம் உண்மையில்
எழுத்தின் ஊற்று பொங்க எழுதுகின்றோமா அல்லது பாலை நிலத்தில் இல்லாத ஊற்றைத் தேடி வறட்சியாக
எழுதுகின்றோமா என்பது இன்னும் நன்கு தெரியும்.
இன்னொரு புள்ளி பலர் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் என்னளவில் முக்கியமானது. அது நீங்கள் தொடர்ந்து வாசிப்பவராக இருக்கவேண்டும்.
எழுதுவதற்கு, வாசிப்பது ஒரு
முன் நிபந்தனை அல்ல. ஆனால் ஒருவர் தொடர்ந்து எழுதப்போகின்றார் என்றால் வாசிப்பு முக்கியமானது.
ரொபர்தோ பொலானோ போன்றவர்கள் பாடசாலைப் படிப்பை இடைநடுவில் நிறுத்தினாலும், பெரும் வாசிப்பாளராக இருந்திருக்கின்றனர். வாசிப்பு உங்களுக்கு
மிகப்பெரும் வெகுமதியை எழுத வரும்போது தரும்.
எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் பெரும் வாசிப்பாளர்களாக இருக்கின்றார்கள்.
ஆனால் எழுதுவதில்லை. ஒரு காலத்தில் அவர்கள் எழுத்துக்கு வந்தால் நம்மையெல்லாம் மிஞ்சிச்
செல்லும் எழுத்தைத் தருவார்கள் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. ‘எழுதித்தீரா பக்கங்கள்’ எழுதிய 'காலம்' செல்வம் போன்றவர்கள் நீண்டகாலம் வாசிப்பவர்களாக இருந்தவர்கள்; சமகாலத்தில்
இலக்கியத்தில் நடைபெறுவதை அறிந்துகொண்டே வந்தவர்கள். ஆகவேதான் காலம் பிந்தி புனைவெழுத்தில்
நுழைந்தாலும், அந்த வரவு கனதியாகவும்
ஆழமாகவும் இருந்தது. அதேவேளை தொடக்க காலத்தில் நல்ல படைப்புக்களை தந்த எழுத்தாளர்களில்
பலர் பிற்காலத்தில் அதை தக்கவைக்க முடியாமைக்கானகாரணங்களில் முக்கியமானது அவர்கள் வாசிப்பதை
நிறுத்திவிட்டமையெனக் கண்டிருக்கின்றேன்.
மேலும் இன்றைக்கு நல்ல எழுத்துக்கள் என்று சொன்னவற்றை நாளை காலம்
கருணையின்றி தள்ளிச் சென்றுவிடவும் கூடும். அப்படிப் பலரின் எழுத்துக்களுக்கு நம் கண்முன்னாலே
நிகழ நாங்கள் சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டுமிருக்கின்றோம். ஆகவேதான் எழுதுவதென்பது
ஒருவகையில் நம்மோடு நிகழும் அந்தரங்கமான உரையாடல் என்கின்றேன். அதற்கப்பால் நிகழ்வதும், நமக்குக் கிடைப்பதும் மேலதிக வெகுமதிகள் என்பேன்.
எழுத்தை எந்தவகையிலும் உயர்வுநவிற்சியாக்காத ப்யூகோவ்ஸ்கி தன்னால்
ஒருபோதும் எழுதாமல் இருக்கமுடிவதில்லை என்கின்றார். ஒருவாரம் தன்னால் எழுதமுடியவில்லையெனில்
தனக்கு நித்திரை வராது, வாந்தி வந்து, அந்த நாட்களெல்லாம்
சோர்வாக இருக்கின்றனஎன்று சொல்கின்றார். 'இது கூட ஒருவகையில் நோய்தான், ஆனால் மற்ற நோய்களைப் போல அல்லாது நல்லதொரு வியாதி' என்கின்றார் ப்யூகோவ்ஸ்கி.
எனக்குத் தெரிந்த அளவில் எல்லாச் சிறந்த எழுத்தாளர்களும் (ஜெயகாந்தன்
போன்ற சில விதிவிலக்குகள் இருந்தாலும்) தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்.
ரொபர்தோ பொலானோ தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்ததால்தான் அவர் காலமாகின்ற காலத்தில்
கவிதைகளை விட்டு புனைவுக்குள் பிரவேசித்தபோது, அது பெரும் பாய்ச்சலாக நிகழ்ந்திருக்கின்றது. ஹெமிங்வே போன்றவர்களின் ஆரம்பகால
எழுத்துக்களை வாசித்தால் அவர்கள் புத்தகக் கடைகளையும், புத்தகங்களையும் தேடி எப்படியெல்லாம் அலைந்திருக்கின்றார்கள்
என்று தெரியும். பொலானோ புத்தகங்களை களவெடுக்கும் ஒரு திருடராக நீண்டகாலம் இருந்திருக்கின்றார்.
அவ்வளவு ஒரு வெறி வாசிப்பதில் அவருக்கு இருந்திருக்கின்றது.
இவ்வாறு சிறுவயதிலிருந்தே வாசிப்பில் தோய்ந்து இன்னும் புத்தகங்களை
வாங்கி வாசிப்பது அலுக்காத என்னுடைய ஒரு தோழிக்கு
புனைவுலகத்திற்கு வரக் கொஞ்சம் தயக்கமிருந்தது. அவரைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தினேன்.
அவரிடம் அவ்வளவு அனுபவங்கள் இருக்கின்றது. இப்போது கிட்டத்தட்ட auto fiction வகையில் எழுதியெழுதி
அவ்வப்போது எனக்கு வாசிப்பதற்கு அனுப்பி வைப்பார். அந்த வகை எழுத்தை அவரால் மட்டுமே
எழுதமுடியும் என்பது வாசிக்கும் எவராலும் எளிதாக உணரமுடியும். சில பகுதிகளை வாசிக்கும்போது
மிகவும் அவதிப்பட்டேன். வாசிப்பவரைத் தொந்தரவுபடுத்தும் அத்தகைய அனுபவங்கள்.
ஒருவகையில் அவர் தொடர்ந்து இப்படி எவ்விதத் தயக்கமில்லாமமலே
எழுதி முடித்து, நல்லதொரு எடிட்டிங்கும்
செய்வார் என்றால், பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவள்' போலவோ, பா.கண்மணியின் 'இடபம்' போலவோ வரும் எல்லாச் சாத்தியங்களும் அவரின் எழுத்துக்கு இருக்கின்றது.
இப்போது இதையெல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால், இதுவும் நாளை ஏதேனும் நன்றாக நான் எழுதிவிடக் கூடும் என்பதற்கான
-இன்னமும் கைவிட்டு விடாமல் இருக்கும்- எழுத்துப்
பயிற்சிக்குத்தான்.
*****************
நன்றி: 'அகநாழிகை' - ஆடி, 2022
வாசித்து, அலைந்து, எழுதுபவனின் சில குறிப்புகள் - 01
In இன்னபிற, In வாசிப்புWednesday, August 10, 2022
1. பயணம்
மழை பெய்து மரங்கள் சிலிர்த்துக்கொண்டிருந்தகாலையின் அமைதியில் நடக்கையில் மனது குளிர்ந்துவிடுகின்றது. முதல்நாள் இரெயினுக்குள் இருந்து குபுகுபுவென இறங்கிய கூட்டம் அவனுக்கு அவ்வளவு அச்சத்தைத் கொடுத்திருந்தது. இப்படி நாளாந்தம் வேலைக்குப் போய்வரும் ஒருவனாக நாட்களைக் கழித்து, வாழ்வின் எல்லைக்குக்கோடும் வந்துவிடுமோ என்ற யோசனையில் நேற்றைய பொழுது வீணே கழிந்தது. தினசரிகளைப் போல இணையமும், எப்போது திறந்தாலும் மனதைச் சோர்வடைய வைக்கும் சம்பவங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.
எல்லாமே கடந்துபோகும் மேகங்கள்தானெனநேற்றைய சுவடை மறைத்து, இன்றைய காலை அவ்வளவு அழகாக புலர்ந்துகொண்டிருந்தது. குருவிகள் கரைந்தபடி இருக்க, சூரியன் இன்னமும் வெப்பமுறாக் கதிர்களை மிகுந்த தண்மையாக வீசிக்கொண்டிருந்தது. கோடைகாலத்து வர்ண ஆடைகளை அணிந்து, நேர்த்தியானதமது வளைவுகளுடன் பெண்கள் நடந்துபோகையில் வாழ்தல் அவ்வளவு சலிப்பானதல்ல என்பதும் புரிந்தது.
பயணங்களைச் செய்யவேண்டும் என்றும், கோடை வந்துசேர்ந்தபின் அதை முழுமையாக இரசிக்கவேண்டும் என்றும் எண்ணங்கள் பெருகி வழிந்தோட, அவற்றை அசட்டைசெய்து, அறையிற்குள் முடங்கியபடி சூரியன் மறைய, பறவைகளின் மாலைநேரத்து இசையைக் கேட்டபடி புத்தகங்களுக்குள் அமிழ்ந்துவிடுகின்ற பிறிதொரு மனதும் அவனுக்கு வாய்த்து விடுகிறது.
சிறிய படகில் உலகைச் சுற்றிவரப் புறப்பட்ட பெண்ணெழுதிய பயண நூலொன்றில், புதிதாக மனிதர்கள் வசிக்காத தீவொன்றில் போய் இறங்கும்போது, அவள் தான் விட்டுவந்த மனிதர்களையும், வாகனங்கள் நிரம்பிய தெருக்களையும், சாம்பல்நிற அலுவலக அடுக்குகளையும் நினைத்துக்கொள்வாள். எல்லாவற்றுக்கும்
நிகராக எப்போதும் சமாந்திரமான உலகங்கள் சென்றுகொண்டிருக்கின்றன, நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்பது எங்களைப் பொறுத்தது
என்பாள்.
ஒருநாள் நண்பருடன் இத்தாலியில் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது, தெருவில் விற்க வைத்திருந்த கிளிம்டின் 'முத்த' ஓவியமொன்றைப் பார்த்துவிட்டு அவள் அதை வாங்கி தனது வீட்டுச் சுவரில் அலங்கரிக்கஆசைப்பட்டாள். மியூசிதியத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது வாங்கலாமென்று நினைத்து அதேயிடத்துக்கு மீண்டும் வந்தபோது அந்தத் 'தெருவோரக்கடையை' பொலிஸ் துரத்தி துடைத்துவிட்டிருந்ததில் ஏமாற்றமே அவளுக்கு மிஞ்சியது. "இதற்கெல்லாம் வருந்தாதே, என்னைப் போல ஒருநாள் கிளிம்டின் முத்தத்தை நேரே போய்ப் பார்ப்பாய்"என இவன் ஆறுதல்படுத்தினான். பின்னொருநாள் அவள் வியன்னாவிற்குப் போய் கிளிம்டின் அசலான இதே ஓவியத்தைப் பார்த்தபடி இவனுக்குத் தொலைபேசினாள். அவளுக்கான இன்னொரு உலகம் கிளிம்டிலிருந்து விரியத்தொடங்க, இப்போது ஆர்ஜென்ரீனாவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கின்றாள். அவ்வளவு தொலைவுக்கு ஏன் இப்போது அவசரமாகப் பறக்கிறாய் என்றால், டாங்கோ கற்க என்கின்றாள்.
இன்னொருத்தி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கே தனியே போகப் பயப்பிடுகின்றவள். அப்பாவின் துணையின்றி அவளுக்கு ஒருபோதும் வெளியுலகம் விரிந்ததில்லை. அவன் தொடர்ந்து அவளோடு கேரளாவின் இயற்கையை வியந்து பேசியபடியே இருப்பான். ஒருநாள் நீங்கள் உங்கள் பயணங்களை விரும்பியபடி தொடங்குவீர்களென்று கூறி அவளுக்கு உற்சாகமூட்டியபடியே இருப்பான். குடும்பத்தில் ஒரு நெருங்கிய உறவின் இழப்பு அவளை எல்லாத் தடைகளையும் தாண்ட வைத்தது. ஒருநாள் கொச்சினில் நின்றபடி நீ அன்று கேட்கஅனுப்பிய 'அன்னையும் ரசூலின்' காயல்பட்டணத்து பாட்டை நிஜமாக்கிவிட்டேன் என மின்னஞ்சல் அனுப்பினாள். பிறகு எண்ணற்ற பயணங்களை ஆசியாவெங்கும் செய்யத் தொடங்கினாள்.
இப்படியாக வேறொருத்தி சிலபுத்தகங்களை அறிமுகப்படுத்து என்றபடி வந்தபோது, அவன் காஃப்காவையும், குந்தேராவையும், ஹெஸேயையும் வாசிக்கப் பரிந்துரைத்தான். இவர்கள் இருவரையும் அவள் ஒருவகைப் பைத்தியக்காரத்தனத்துடன் வாசித்து முடித்தாள். அதுமட்டுமில்லாது அவன் அறிந்திராத காஃப்காவினதும், குந்தேராவினதும் எழுத்தின் நுட்பமான திசைகளையும் இவனுக்குத் துல்லியமாகக் காட்டினாள். ஒருநாள் அவளும் செக்கிற்குப் போய் காஃப்காவினது மியூசியத்தில் முன் சிரித்தபடி நின்ற புகைப்படங்களை அனுப்பிவைத்தபோது அந்த நாள் இய்ல்பாகவே வர்ணங்களைப் பூசிக்கொண்டது.
பயணங்கள் நாம் அறியாத இன்னொரு சமாந்திரமான உலகை மட்டுமில்லாது, பயணங்களைப் பற்றிப் பேசுவதாலும், எழுதுவதாலும் கூட பிறருக்கு வாழ்வதற்கான அர்த்தங்களையும் கொடுக்கலாமெனஅவன் உணர்ந்து கொண்டான்.
சற்சதுர அலுவலக கியூபிக்களில் சுருங்கிக்கொண்டாலும், வாழ்வின் தத்தளிப்புக்களில் சிக்கிக்கொண்டாலும் எதன் மீதோ நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பிறகு பழக்கமாயிற்று. மூன்று வருடங்களாக செலவுக்காகவும், சூழலியலுக்காகவும் சொந்தமாகக் காரை வைத்திருப்பதை விட்டொழித்தாலும், நேரந்தவறி அரைமணித்தியாலம் தாண்டி வரும் பஸ்களுக்காய்க் காத்திருக்கும்போது ஏற்படும் சலிப்பை, பின்வளவில் காடென அடர்ந்திருக்கும் மரங்களின் சலசலப்பில் கரைக்க ஒரளவு கோடையில் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.
அவனுக்குப் பயணங்கள் மட்டுமில்லாது பயணங்கள் பற்றிய கனவுகளிலும் தொலைவது பிடித்தமாயிருந்தது. நேசத்தை அறிவதற்கு, நேசத்தைத் தொலைத்து அதன் வலியையும் பட்டுத் தெளியத்தான் வேண்டும். அதுபோலபயணங்களைச் செய்வதற்காக ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ‘செளகர்யமான’ வாழ்வையும் காணிக்கை செய்யத் தயாராக இருக்கத்தான் வேண்டும்.
இழந்து பெறுகின்றவைகளின் அருமை அளவிடமுடியாதவை. அவையே நினைவில் நிலைத்து நிற்கக்கூடியவையும் கூட.
*****************
நன்றி: 'அகநாழிகை' - ஆடி, 2022