கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசித்து, அலைந்து, எழுதுபவனின் சில குறிப்புகள் - 01

Wednesday, August 10, 2022

 

1. பயணம்

 

ழை பெய்து மரங்கள் சிலிர்த்துக்கொண்டிருந்தகாலையின் அமைதியில் நடக்கையில் மனது குளிர்ந்துவிடுகின்றது. முதல்நாள் இரெயினுக்குள் இருந்து குபுகுபுவென இறங்கிய கூட்டம் அவனுக்கு அவ்வளவு அச்சத்தைத் கொடுத்திருந்தது. இப்படி நாளாந்தம் வேலைக்குப் போய்வரும் ஒருவனாக நாட்களைக் கழித்து, வாழ்வின் எல்லைக்குக்கோடும் வந்துவிடுமோ என்ற யோசனையில் நேற்றைய பொழுது வீணே கழிந்தது. தினசரிகளைப் போல இணையமும், எப்போது திறந்தாலும் மனதைச் சோர்வடைய வைக்கும் சம்பவங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.

எல்லாமே கடந்துபோகும் மேகங்கள்தானெனநேற்றைய சுவடை மறைத்து, இன்றைய காலை அவ்வளவு அழகாக புலர்ந்துகொண்டிருந்தது. குருவிகள் கரைந்தபடி இருக்க, சூரியன் இன்னமும் வெப்பமுறாக் கதிர்களை மிகுந்த தண்மையாக வீசிக்கொண்டிருந்தது. கோடைகாலத்து வர்ண ஆடைகளை அணிந்து, நேர்த்தியானதமது வளைவுகளுடன் பெண்கள் நடந்துபோகையில் வாழ்தல் அவ்வளவு சலிப்பானதல்ல என்பதும் புரிந்தது.

பயணங்களைச் செய்யவேண்டும் என்றும், கோடை வந்துசேர்ந்தபின் அதை முழுமையாக இரசிக்கவேண்டும் என்றும் எண்ணங்கள் பெருகி வழிந்தோட, அவற்றை அசட்டைசெய்து, அறையிற்குள் முடங்கியபடி சூரியன் மறைய, பறவைகளின் மாலைநேரத்து இசையைக் கேட்டபடி புத்தகங்களுக்குள் அமிழ்ந்துவிடுகின்ற பிறிதொரு மனதும் அவனுக்கு வாய்த்து விடுகிறது.

சிறிய படகில் உலகைச் சுற்றிவரப் புறப்பட்ட பெண்ணெழுதிய பயண நூலொன்றில், புதிதாக மனிதர்கள் வசிக்காத தீவொன்றில் போய் இறங்கும்போது, அவள் தான் விட்டுவந்த மனிதர்களையும், வாகனங்கள் நிரம்பிய தெருக்களையும், சாம்பல்நிற அலுவலக அடுக்குகளையும் நினைத்துக்கொள்வாள். எல்லாவற்றுக்கும் நிகராக எப்போதும் சமாந்திரமான உலகங்கள் சென்றுகொண்டிருக்கின்றன, நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்பது எங்களைப் பொறுத்தது என்பாள்.

 அதுபோலத்தான் இன்னொரு உலகம் வெளியில் விரிகையில் தனக்கான  தனி உலகில் இப்போது இருக்கின்றேன் என எண்ணிக்கொண்டான். கடந்த வருடம் இதே கோடையில் உலகின் இன்னொருபகுதியில், வேலை, இன்னபிற  பற்றிய பிரக்ஞையின்றி அலைந்துகொண்டிருந்தான் என்பதும் அவன் நினைவில் பிறகு  எழுந்துபோனது.

 பயணங்கள் என்பது பலருக்குப் பலவித அர்த்தங்களைக் கொடுக்கலாம். அவனுக்கு அது தெரிந்த வாழ்வு முறையிலிருந்து வெளியேறி இன்னொரு சமாந்தரமான உலகை வாழ்ந்து பார்ப்பதற்கான வழியென விளங்கிக்கொண்டான்.

 

ருநாள் நண்பருடன் இத்தாலியில் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது, தெருவில் விற்க வைத்திருந்த கிளிம்டின் 'முத்த' ஓவியமொன்றைப் பார்த்துவிட்டு அவள் அதை வாங்கி தனது வீட்டுச் சுவரில் அலங்கரிக்கஆசைப்பட்டாள்.  மியூசிதியத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது வாங்கலாமென்று நினைத்து அதேயிடத்துக்கு  மீண்டும் வந்தபோது அந்தத் 'தெருவோரக்கடையை' பொலிஸ் துரத்தி துடைத்துவிட்டிருந்ததில் ஏமாற்றமே அவளுக்கு மிஞ்சியது. "இதற்கெல்லாம் வருந்தாதே, என்னைப் போல ஒருநாள் கிளிம்டின் முத்தத்தை நேரே போய்ப் பார்ப்பாய்"என இவன் ஆறுதல்படுத்தினான். பின்னொருநாள் அவள் வியன்னாவிற்குப் போய் கிளிம்டின் அசலான இதே ஓவியத்தைப் பார்த்தபடி இவனுக்குத் தொலைபேசினாள். அவளுக்கான இன்னொரு உலகம் கிளிம்டிலிருந்து விரியத்தொடங்க, இப்போது ஆர்ஜென்ரீனாவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கின்றாள். அவ்வளவு தொலைவுக்கு ஏன் இப்போது அவசரமாகப் பறக்கிறாய் என்றால், டாங்கோ கற்க என்கின்றாள்.


இன்னொருத்தி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கே தனியே போகப் பயப்பிடுகின்றவள். அப்பாவின் துணையின்றி அவளுக்கு ஒருபோதும் வெளியுலகம் விரிந்ததில்லை. அவன் தொடர்ந்து அவளோடு கேரளாவின் இயற்கையை வியந்து பேசியபடியே இருப்பான். ஒருநாள் நீங்கள் உங்கள் பயணங்களை விரும்பியபடி தொடங்குவீர்களென்று கூறி அவளுக்கு உற்சாகமூட்டியபடியே இருப்பான். குடும்பத்தில் ஒரு நெருங்கிய உறவின் இழப்பு அவளை எல்லாத் தடைகளையும் தாண்ட வைத்தது. ஒருநாள் கொச்சினில் நின்றபடி நீ அன்று கேட்கஅனுப்பிய 'அன்னையும் ரசூலின்' காயல்பட்டணத்து பாட்டை நிஜமாக்கிவிட்டேன் என மின்னஞ்சல் அனுப்பினாள். பிறகு எண்ணற்ற பயணங்களை ஆசியாவெங்கும் செய்யத் தொடங்கினாள்.

இப்படியாக வேறொருத்தி  சிலபுத்தகங்களை அறிமுகப்படுத்து என்றபடி வந்தபோது, அவன் காஃப்காவையும், குந்தேராவையும், ஹெஸேயையும் வாசிக்கப் பரிந்துரைத்தான். இவர்கள் இருவரையும் அவள் ஒருவகைப் பைத்தியக்காரத்தனத்துடன் வாசித்து முடித்தாள். அதுமட்டுமில்லாது அவன் அறிந்திராத காஃப்காவினதும், குந்தேராவினதும் எழுத்தின் நுட்பமான திசைகளையும் இவனுக்குத் துல்லியமாகக் காட்டினாள். ஒருநாள் அவளும் செக்கிற்குப் போய் காஃப்காவினது மியூசியத்தில் முன் சிரித்தபடி நின்ற புகைப்படங்களை அனுப்பிவைத்தபோது அந்த நாள் இய்ல்பாகவே வர்ணங்களைப் பூசிக்கொண்டது. 


யணங்கள் நாம் அறியாத இன்னொரு சமாந்திரமான உலகை மட்டுமில்லாது, பயணங்களைப் பற்றிப் பேசுவதாலும், எழுதுவதாலும் கூட பிறருக்கு வாழ்வதற்கான அர்த்தங்களையும் கொடுக்கலாமெனஅவன் உணர்ந்து கொண்டான்.

சற்சதுர அலுவலக கியூபிக்களில் சுருங்கிக்கொண்டாலும், வாழ்வின் தத்தளிப்புக்களில் சிக்கிக்கொண்டாலும் எதன் மீதோ நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பிறகு பழக்கமாயிற்று. மூன்று வருடங்களாக செலவுக்காகவும், சூழலியலுக்காகவும் சொந்தமாகக் காரை வைத்திருப்பதை விட்டொழித்தாலும், நேரந்தவறி அரைமணித்தியாலம் தாண்டி  வரும் பஸ்களுக்காய்க் காத்திருக்கும்போது ஏற்படும் சலிப்பை, பின்வளவில் காடென அடர்ந்திருக்கும் மரங்களின் சலசலப்பில் கரைக்க ஒரளவு கோடையில் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.

அவனுக்குப் பயணங்கள் மட்டுமில்லாது பயணங்கள் பற்றிய கனவுகளிலும் தொலைவது பிடித்தமாயிருந்தது. நேசத்தை அறிவதற்கு, நேசத்தைத் தொலைத்து அதன் வலியையும் பட்டுத் தெளியத்தான் வேண்டும். அதுபோலபயணங்களைச் செய்வதற்காக ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ‘செளகர்யமான’ வாழ்வையும் காணிக்கை செய்யத் தயாராக இருக்கத்தான் வேண்டும்.

இழந்து பெறுகின்றவைகளின் அருமை அளவிடமுடியாதவை. அவையே நினைவில் நிலைத்து நிற்கக்கூடியவையும் கூட.

*****************

நன்றி: 'அகநாழிகை' ‍- ஆடி, 2022


0 comments: