கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஹென்றி மில்லரும், ஜூனும்..

Wednesday, February 28, 2024

 

ஹென்றி மில்லருக்கு இயந்திரத்தனமான அமெரிக்க வாழ்க்கை ஒரு கட்டத்தில் வெறுக்கின்றது. அவர் தனது வேலையைத் துறந்துவிட்டு பிரான்ஸுக்குப் போய் விடுகின்றார். அதன்பிறகு 10 வருடங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பாமல் பிரான்ஸில் இருக்கின்றார். ஐரோப்பாவைச் சூழ்ந்த 2ம் உலக மகாயுத்தம் அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றது. ஹென்றி மில்லர் பிரான்ஸில் இருந்தபோதே அவரின் Tropic of Cancer மூலம் பிரபல்யமானவர்.  அமெரிக்காவில் இருந்தபோது எழுதத் தொடங்கியபோதும் அவருக்குத் தன் எழுத்தின் மேல் நம்பிக்கை வரவில்லை.

 

அதைப்போலவே மில்லர் எழுதிய இன்னொரு நாவல் Crazy Cock (originally titled Lovely Lesbians).  இந்த இரண்டு நாவல்களும் ஹென்றி மில்லர் இறந்ததன் பிறகே வெளி வந்திருந்தன. இந்த நாவல்கள் இரண்டும் குறித்த விபரங்கள் மிகுந்த சுவாரசியமானவை. ஹென்றி மில்லர் எழுத்தாளராக மாறவும், அதன் நிமித்தம் வந்த பிரபல்யத்துக்கும் ஜூன் மிகப்பெரும் காரணம் என்றாலும், ஜுனுக்குள் இருந்த அலைபாயும் மனதும் சுதந்திர உணர்வும் அவரை வாழ்வில் பல திசைகளுக்கு அலைக்கழித்தது. ஜூனுக்கு மில்லரோடு இருக்கும்போதே இன்னொரு பெண்ணோடு உறவிருந்தது. அவரை மில்லரோடு தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்து வந்து வாழவும் வைத்திருகின்றார். ஒருநாள் ஜூனும் அவரது காதலியும் மில்லருக்கு எதுவும் சொல்லாமல் பாரிஸிற்குப் பறந்து போயிருக்கின்றனர். தனது முழுநேர வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராகும் கனவோடு வறுமையோடு போராடிக் கொண்டிருந்த மில்லருக்கு இது பெரும் சரிவைக் கொணர்ந்திருந்தது. அந்த ஆற்றாமையையும், கோபத்தையும் கலந்து எழுதிய நாவல்தான் Crazy Cock. கிட்டத்தட்ட அவரது அமெரிக்க வாழ்வின் சுயசரிதைத் தன்மை எனலாம்.

 

ஜூனும் இல்லாது வறுமையின் நிமித்தம் அவரின் பெற்றோரோடு வாழ மில்லர் சென்றிருந்தபோதும் அவரது குடும்பம் முப்பதுகளில் இருந்த மில்லரை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மில்லர் பிரான்சுக்குப் போய் வாழ்கின்றபோதே, இந்த இரண்டு நாவல்களையும் அமெரிக்காவில் இருந்த ஜூனிடம் கொடுத்துவிட்டுச் செல்கின்றார்.

 

பிரான்ஸ் வாழ்க்கையின்போது மில்லரின் முதல் நாவல் பிரசுரமாகி பிரபல்யம் அடைந்ததும், பல நாடுகளில் அது தடை செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே. இதன் பிறகான சில வருடங்களில் மில்லரும் ஜூனும் பிரிந்து விடுகின்றனர்.. ஜூனிடம் கொடுக்கப்பட்ட இந்த நாவல்களின் பிரதிகள் என்னவானது என்று அக்கறைப்படாது மில்லரும் அடுத்தடுத்த நாவல்களென எழுதத் தொடங்கிவிட்டார். மில்லரைப் பிரிந்து 15 வருடங்களின் பின் ஜூன் மீண்டும் மில்லரைத் தொடர்புகொள்கின்றார். ஜுன் ஒருகாலத்தில் தன் உடலை மூலதனமாக்கியவர் என்பதால் அவருக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் வரத்தொடங்கிவிட்டன. ஜூன் நடந்துகொண்டிருந்தபோது வீடொன்றின் மேல்மாடியில் இருந்து தூக்கியெறியப்பட்ட தொலைக்காட்சி பெட்டி அவரின் வீழ்ந்ததால் கிட்டத்தட்ட படுத்த படுக்கையாகிவிட்டார். அப்போது ஜூனின் நிலைகண்டு மில்லரே தனது நாவல்களை ஆய்வுசெய்யும் ஒரு குடும்பத்தை ஜூனைப் பராமரிக்க அனுப்பி வைக்கின்றார். அப்படிப் பராமரிக்கச் சென்ற  பெண்ணே இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஜூன் மில்லரின் தொடக்க கால நாவல்களைப் பத்திரமாக வைத்திருப்பதைக் காண்கின்றார். ஆனால் ஜூனுக்கு அவற்றைக் கொடுக்க விரும்பமிருக்கவில்லை. ஏதோ ஒருவகையில் அந்த நாவல் பிரதி செய்யப்பட்டு அமெரிக்காவின் இன்னொரு கரையில்  வாழ்ந்து கொண்டிருந்த மில்லருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

 

தொலைந்து போனதாக நினைக்கப்பட்ட நாவல்களை கண்டெடுத்தவர் மகிழ்ந்தபோதும், மில்லர் அவ்வளவு மகிழவில்லை. அவர் இப்போது அமெரிக்காவிலும் நன்கு பிரபல்யம் அடைந்தவராகி விட்டார். நிறைய நாவல்களை எழுதிவிட்டார். அந்த நாவல்களில் இந்த முதல் நாவல்களின் தெறிப்புக்களையும் காணமுடியும். ஒருவகையில் இந்த இரு நாவல்களும் மில்லர் தனது பிற்கால நாவல்களை எழுதுவதற்கான பயிற்சிகள் எனக்கூட எடுத்துக் கொள்ளலாம். எனவே மில்லர் தான் இறக்கும்வரை இவையிரண்டும் வெளியிடக்கூடாதென அவரின் எழுத்துக்கள் அனைத்தையும் ஆவணப்படுத்திய பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.

 

மில்லரின் மரணத்துக்குப் பிறகே இந்த நாவல்கள் பிரசுரமாயின.  Crazy Cockஇற்கு   அமெரிக்காவில் இரண்டாம் பெண்ணிய அலை எழுந்தபோது பெண்களின் பாலியலை வெளிப்படையாக எழுதிய எரிக்கா யுங் நல்லதொரு முன்னுரையை எழுதியுள்ளார். மில்லரின் அநேக நாவல்கள் தன் வரலாற்றுத்தன்மை உடையதென்பதால் அநேகமான அவரின் பாத்திரங்களோடு மில்லரின் தனிப்பட்ட வாழ்வு ஒப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் இயல்பில் மில்லர் வேறொருவர். மில்லரே, 'எனது மிருக நடத்தைகளை/இருண்ட பக்கங்களையே எனது நாவல்களில் எழுதியிருக்கின்றேன்' என்றிருக்கின்றார். 

 

எல்லோருக்கும் ஏதோ ஒரு வடிகால் வாழ்வின் அலைச்சல்களுக்குள் தேவைப்படுகின்றது. மில்லருக்கு அது எழுத்தாக இருந்திருக்கின்றது. ஒருவகையில் மில்லர் ஜூனை எப்படி விளங்கிக் கொள்வது என்று புரியாத விசித்திரத்தால்தான் அவரது பல்வேறு நாவல்களில் வெவ்வேறு பெயர்களில் ஜூனை மில்லர் கொண்டு வந்திருக்கின்றார். 'எழுத்தாளரை நேசிக்கும்போது அவரின் எழுத்தின் மூலம் நீங்கள் சாகாவரம் பெறுவீர்கள்' என்ற தேய்வழக்கை நாம் பல இடங்களில் வாசித்திருப்போம். ஆனால் மில்லரின் எழுத்துக்களின் மூலம் ஜூன் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  

 

ஹெமிங்வே இப்படி பாரிஸில் வாழ்ந்த காலத்தில் அவரின் பிரசுரிக்காத கதைகள், இன்ன்பிற படைப்புக்களை சூட்கேஸில் வைத்து ஹெமிங்வேயின் மனைவி கொண்டுவரும்போது அது களவாடப்பட்டு தொலைந்து போகின்றது. அதைப்பற்றி சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி கூட ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். ஆனால் மில்லருக்கு இந்த விடயத்தில் அதிஷ்டம் அவருடன் இருந்திருக்கின்றது. எனவேதான் ஜூன் தன்னைப் பற்றி மோசமாகச் சித்தரித்திருந்தாலும் அவரின் இறுதிக்காலம்வரை இவ்விரு நாவலைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார். அது ஜூன், காலம் முழுக்க தன் மீது வைத்திருந்த மில்லரின் கனிவுக்கு கொடுத்த வெகுமதியாகக் கூட இருக்கலாம். 

 

*****************

 

(Nov 24, 2023)

 

3 comments:

Chandra said...

எழுதியபோதே வாசித்திருக்கிறேன். இப்போது மீண்டும்.

2/28/2024 11:00:00 PM
Anonymous said...

ஏற்கெனவே வாசித்த கட்டுரைதான்.

2/29/2024 12:53:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி சந்திரா மற்றும் அநாமதேய நண்பர்.

2/29/2024 07:24:00 AM