அண்மையில் நானும் நண்பரொருவரும் ஒரு கதையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு அந்தக் கதை மிகச் சாதாரணமாகத் தெரிந்தது. அந்த எழுத்தாளரை விரிவாக வாசித்தவன் என்றவகையில் அது என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் நண்பர் அந்தக் கதையில் வந்த சில வரிகள் மிக முக்கியமானவை. அதிலிருந்து நமது வாசிப்பு அனுபவத்தை வேறுவிதமாக வார்த்துக் கொள்ளலாம் என்றார். நான் அந்தத் திசையில் நின்று அதுவரை யோசிக்கவில்லை. எனக்கும் பிறகு அந்தக் கதையை வேறுவிதமாக வாசித்து யோசிக்க முடிந்தது. ஹெமிங்வே அடிக்கடி 'ஆத்மார்த்தமான ஒரு சில வரிகள் மனதில் தோன்றிவிட்டால் போதும், நல்லதொரு கதையை எழுதிவிடலாம்' எனச் சொல்வார்.
என் பதின்மங்களில் பாலகுமாரனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு அவரை ஆசானாகக் கொண்டு அவரது அனைத்து நூல்களையும் எவ்வித விமர்சனமுமின்றி வாசித்து ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். அவரது ஒவ்வொரு நூல்களையும் பொருளாதார நெருக்கடி அன்றையகாலத்தில் இருந்தபோதும் அவ்வளவு மனநிறைவுடன் வாங்கிக் குவித்திருக்கின்றேன். பாலகுமாரன் தனது நாவல்களில் தேவகோட்டை வா.மூர்த்தி என்ற தன் முதன்மையான வாசகரின் கடிதங்களைத் தொடர்ந்து பிரசுரித்துக் கொண்டிருப்பார்.
படைப்பாற்றல் என்பதை ஓஷோ இன்னும் விரிவாக வரையறை செய்வார். ஓஷோ வந்தடைகின்ற புரிதல்கள் அநேகமாக ஸென் மரபில் நூற்றாண்டுகளாய்ப் பின்பற்றப்படி வருபவை. எந்த ஒருவர் தனது படைப்பாற்றலை பணத்துக்காகவும், புகழுக்காகவும் பயன்படுத்தத் தொடங்குகின்றாரோ அப்போதே அது படைப்பு என்னும் பேரானந்தம் தரும் தன்மையிலிருந்து விலகிப் போய்விடுகின்றது என்கின்றார் ஓஷோ. அதனால்தான் நிறைய நல்ல படைப்பாளிகள் அவர்கள் வாழும் காலத்தில் மதிக்கப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்படுவதோ இல்லை என்கின்றார். ஒருவர் தனது புதிய படைப்பாற்றலைத் தனக்கானதாகக் கண்டுணர்ந்து அதை இந்த உலகத்தின் முன் வைக்கையில் அவரது ஆயுட்காலம் கிட்டத்தட்ட முடிந்துவிடுகின்றது. ஆகவே அநேக படைப்பாற்றல் மிக்கவர்கள் அவர்களின் மறைவின் பின்னரே கண்டுகொள்ளப்படுகின்றனர் எனச் சொல்கின்றார் ஓஷோ.
அதே போன்று எல்லா மதத்தினரும் தமது கடவுளர்கள் மிகச் சிறந்த சிருஷ்டிகரமானவர்கள் எனச் சொல்கின்றனர். ஆனால் ஒருவர் அசலான படைப்பாற்றலோடு -அது எந்த வகையாக இருந்தாலும்- தான் விரும்பியதில் ஈடுபடும்போது கடவுளர் தன்மையை அடைந்துவிடுகின்றார் என ஓஷோ அடிக்கடி குறிப்பிடுகின்றார். அது இந்தச் சமூகம் படிநிலைகளில் கீழே வைத்திருக்கும் சுத்திகரிப்புத் தொழிலாக இருந்தாலும்!
எனது ஆசிரியரான தாய், அவருக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் தனது ஆடைகளைத் தானே தோய்க்கச் செய்பவர். அதைக் கண்டு ஒரு மாணவர், தாய் உங்களுக்கு இந்த உலகிற்காகச் செய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கும், என்னை உங்கள் ஆடைகளைத் தோய்க்க அனுமதியுங்கள் எனக் கேட்டபோது, இதுவும் தனக்கு ஆனந்தம் தரும் விடயம் என்று சொல்லி தாய் தன் ஆடைகளைத்தானே தோய்ப்பார். இதை ஏன் சொல்கின்றேன் என்றால் படைப்பாற்றல் என்பதை இன்று மேனிலையாக்கம் செய்த சில விடயங்களோடு மட்டும் நாம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதாலாகும்.
ஆகவேதான் எழுத்தும் வாசிப்பும் எனக்கு மிகப்பெரும் நிறைவைத்தரும் விடயம் என்றாலும் அதை பலர் செய்வதுபோல மேனிலையாக்கம் செய்யமாட்டேன். தமக்கு வாய்த்துவிட்ட சில படைப்பாற்றல்களை வைத்து மற்றவர்களைச் சாதாரணமாக்கி அறிவுரைகூறும் விடயங்களும் எனக்கு உவப்பானதில்லை. ஒரு சிறந்த படைப்பாளி அகத்தில் உணரும் அமைதியையும், மகிழ்வையும் விட ஒரு கிராமத்தில் மிகச் சாதாரணமாக தன் நாளாந்த வாழ்வோடு இருக்கும் ஸென் துறவி அடையும் நிறைவும் விடுதலையும் பெரிதல்லவா?
படைப்பாற்றல் என்ற ஒன்றை வைத்து, எவரை/எதை எடைபோட்டாலும் அது அபத்தமாக முடியும். முன்னர் ஒரு காலத்தில் தமிழ்ச்சூழலில் வாசிப்பு/எழுத்து என்பது உள்வட்டத்துக்குரியது என்று பிரகடனமாகச் சொல்லப்பட்டது அது ஒருவகையில் எழுதுபவர்களையும் வாசிப்பவர்களையும் இரண்டு பிரிவாக்கியது. வாசிப்பு/எழுத்து என்பது ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமானது, அதில் உணர்வதை எல்லோராலும் சிலவேளைகளில் உணரமுடியாது போகலாம். ஆனால் அதற்காய் எழுதுவது உள்வட்டத்துக்குரியது என்பது ஒரு மேனிலையாக்கச் செயலே. ஒருவருக்கு எழுதுவதும் வாசிப்பதும் நிறைவைத் தருகின்றது என்றால் இவ்வாறு பிரகடனங்களையெல்லாம் செய்து துவிதநிலையாக்கம் செய்யத் தேவையில்லை. நீங்கள் எங்களோடு நிற்கவேண்டும் இல்லாவிட்டால் பயங்கரவாதிகளோடு நிற்கின்றீர்கள் என்று அர்த்தம் என ஒருவகையில் -பிற்காலத்தில்- ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தியதைப் போன்றது.
எமக்கு மனநிறைவை தரும் எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், அதற்கு அநேகமாக நீண்டகால வரலாறும், மிகச் சிறந்த முன்னோடிகளும் இருப்பார்கள். அவர்களைத் தாண்டி நம்மால் எதைச் சொல்லமுடியும் என்று வரும் சோர்வும் புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் அதுவே நம் சோம்பலுக்குக் காரணமாகிவிடக் கூடாது.
இப்படியான ஒரு நிறைவைக் கண்டடைந்ததால்தான் எல்லா வசதி வாய்ப்புக்களையும் விலக்கி வைத்து க.நா.சுப்பிரமணியம் எழுத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அதே நிறைவுதான் அசோகமித்திரனை ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து விலகச் செய்து போதிய வருமானம் இல்லாவிட்டாலும் முழுநேர எழுத்தாளராக்கியது. அந்த முழுமை அசோகமித்திரனுக்குத் தெரியும் என்பதால்தான் அவர் நாகேஸ்வரா பார்க்கில் இருந்து ஒரு பக்கம் ஏற்கனவே ஏதோ எழுதி நிரப்பப்பட்ட தாள்களில் தனது கதைகளைத் தொடர்ந்து எழுதவும் அவரைச் செய்திருக்கின்றது.
இளையராஜாவிடம் பலர் எவ்வாறு இந்தப் பாடலை இவ்வாறு இசையமைக்க முடிந்தது என்க் கேட்கின்றபோது அவர் அநேகவேளைகளில் அது எனக்கே தெரியாது என்றோ இல்லை அவருக்குப் பிடித்த கடவுளை நோக்கிக் கையைக் காட்டியோ பதிலளித்துவிடுவார். ஆனால் நமக்குத் தெரிவது அவர் இசையமைக்கும்போது அவ்வளவு நிறைவடைந்துவிடுகின்றார் என்பது. அந்த அனுபவத்தை எளிய வார்த்தைகளால் விபரிக்க அவருக்கு மொழி ஒருபோதும் கை கொடுப்பதில்லையென்றபோதும்!
அவருக்கு அவரது ஆன்மீக விடுதலை, இசையாலே எப்போதோ கிடைத்துவிட்டது. அவர் பின்பற்றும் ரமணர் எல்லாம் அவருக்கு ஒர் அடையாளமே தவிர, அவரின் நிறைவும், கடவுளும், ஆன்மீகமும், இசையேதான். அந்த நிறைவை ஒவ்வொரு கலைகளிலும் ஈடுபடுவர்கள் உணர்வதால்தான் பொருள் புகழ் என்பவற்றுக்கப்பால் அவரவர் கலைகளில்/விருப்பங்களில் தோய்ந்து கிடக்கின்றார்கள். அது நம் பலருக்கு பைத்தியக்காரத்தனமாகவும், உலகோடு ஒத்தியங்காத முட்டாள்கள் எனவும் யோசிக்க வைக்கின்றது. இவ்வாறிருப்பவர்கள் எல்லோருமே இப்படித்தானா எனறு கேட்டால் இங்கேயும் போலிகளும், பாவனை காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அவர்கள் நமக்கு முதன்மையானவர்கள் அல்ல. தன்னெஞ்சு உண்மை அறியும் என்று அவர்களை அவர்களின் மனச்சாட்சியோடு உரையாட மட்டும் சொல்லலாம்.
இப்போது இதையெல்லாம் ஏன் பல்வேறு திசைகளில் எண்ணங்கள் சுழித்தோட எழுதுகின்றேன் என யோசிக்கும்போது ஒரு படைப்பை மிகவும் குப்பையாக இருக்கின்றது எனச் சொல்லும் ஒருவருக்கு எப்படியான எதிர்வினை செய்வது என்பதன் நிமித்தமாகக் கூட இருக்கலாம். ஒருவர் ஒரு படைப்பை வாசித்து நிராகரிக்க அவருக்கு அனைத்து உரிமையும் இருக்கின்றது. ஒரு வாசிப்பு அல்லது விமர்சனம் நாம் எப்படி ஒரு படைப்பை விளங்கிக்கொள்கின்றோம் அல்லது மறுக்கின்றோம் என்ற புரிதலில் வரும்போது நாம் நம்மை அறிவதற்கான(வளர்வதற்கான/evolving) தருணங்களைத் தரும். அதுவே எம்மை அடுத்த கட்டங்களுக்கு நகர உதவி செய்யவும் கூடும். அவ்வாறு வாசித்து எழுதவும் செய்வதால் ஏதோ ஒருவகையில் சில நேரங்களிலாவது அந்த நிறைவை நான் அடைந்திருக்கின்றேன். மேலும் லியோ படத்துக்குப் பத்துப் பந்திகளில் கட்டுரை எழுதிவிட்டு இன்னொரு முறை அதைப் பார்ப்பேன் எனச் சொல்பவரிடமும், நான் எழுத்தின் உன்னதத் தெறிப்புக்களை உணர்ந்த தமிழ் பிரபாவின் 'கோசலை' ரமணிச்சந்திரனின் நாவல் போல் இருக்கின்றது என்று இரண்டு வரிகளில் நிராகரித்துப் போகின்ற ஒருவரிடமும் உரையாட முடியுமா என்பதில் தயக்கம் எனக்கு இருக்கின்றது. அதேவேளை லியோ இரண்டாம் முறை பார்க்கின்ற இரசனை உடையவரோடு உரையாடமாட்டேன், இலக்கியம் உள்வட்டத்துக்குரியது என்றெல்லாம் சொல்லி விலத்தவும் மாட்டேன்.
இப்போது இந்த (மானசீக) உரையாடல் கூட என்னை நானே அறிந்துகொள்ள முயற்சிக்கின்ற தருணங்கள்தான். எனவே எல்லோருக்கும் உரையாட அனைத்து வெளிகளும் திறந்திருக்கின்றன. ஆனால் ஒருபோதும் நிறைவைத் தராத ஒரு விடயத்தை பிறதுக்காய்/பிறருக்காய் செய்ய முயலாதீர்கள் என வேண்டுமானால் மெல்லிய குரலில் சொல்லிக் கொள்கின்றேன்.
****************
புகைப்படங்கள் : நன்றி - Google தேடல்
( Nov 28, 2023)
0 comments:
Post a Comment