எனக்கிருக்கும் தொலைதூரத்து நண்பர்களில் அநேகம் இலக்கியம் சார்ந்து பரிட்சயமானவர்கள்தான். ஆனால் அவர்களிலும் நான் அதிகம் தேடிப் போவது எங்கேனும் ஒரு மூலையில் தம்மியல்பில் எழுதி, வாசித்துக் கொண்டிருப்பவர்களை! அவர்களை வெஸ் அண்டர்சனின் “வூட்டாபெஸ்ட் ஹொட்டலில்’ வரும் இரகசிய இயக்கமான “Society of the Crossed Keys” போல நான் கற்பனை செய்துகொள்வதுண்டு.
பயணமொன்றின் நடுவில்
நின்றபோது நண்பரொருவரைச் சந்தித்தேன். அவர் கிட்டத்தட்ட என்னைமாதிரி
உள்ளொடுங்கியவர்; எல்லாவற்றின் மீதும் கூர்மையான விமர்சனம் வைத்திருப்பவர். எவரையும் அளவிறந்து 'போற்றிப்பாடடி கண்ணே' எனப் பாடாதவர் என்பதால்
அவரோடு மிக உற்சாகமான உரையாடலாக
அந்தச் சந்திப்புப் போய்க் கொண்டிருந்தது. அப்போது தமிழகத்துக்கு வெளியே இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றிய
பேச்சொன்று வந்தது.
நல்லவேளை நான் அந்தத் தவறேதும் செய்யவில்லை. இந்த நண்பரோடு எப்போதாவது அவர் நல்ல படைப்பை எழுதினால் இரண்டு வரி பாராட்டுவதோடுஅல்லது என் ஆக்கங்களில் ஏதேனும் கருத்துக் கேட்பதோடு மெஸஞ்சரில் நின்றுவிடுவேன். ஒருநாளுமே இலக்கியம் பேச தொலைபேசி எடுக்காததால்தானோ என்னவோ, அவர் தன் வீட்டுக்கு என்னை அழைத்து பிரியாணி, மீன் குழம்பு, மீன் பொறியல் (வறுவல்) என அறுசுவை உணவு எனக்கிட்டாரோ தெரியவில்லை. தமிழகத்தில் நின்ற ஒரு மாதகாலத்தில் தெரிந்த நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டது என்பதும் இந்த நண்பரின் வீட்டில் மட்டுந்தான்.
எழுதும் அநேக
ஆண்கள், தமக்கு எல்லாம் தெரியும் என்றோ,தம் அசல் முகங்களை
பிறருக்கு மறைத்து முகமூடியிட்டு பேசத் தொடங்கினாலோ, பிறரிடமிருந்து – முக்கியமாக பெண்களிடமிருந்து- தப்பிவிடலாம் எனவும் நினைக்கின்றார்கள். பெண்கள் சிலவேளைகளில் இவ்வாறான விடயங்களை – தேவையில்லாத சிக்கல்கள் வருமென்பதால்- பொதுவெளியில் பேசுவதில்லை. ஆனாலும் ஆகவும் அலட்டிக் கொள்ளும் ஆண்கள் குறித்து கவனமாக இருக்கச் சொல்ல -நமக்குப் புலப்படாத ‘Society of
Crossed Keys’ போன்ற அமைப்பைப் போன்று- தங்களுக்கிடையில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவே செய்கின்றனர்.
எனது நண்பர்
உள்ளொடுங்கியவராக, பிறரோடு அவ்வளவு பேசப் பிரியப்படவோ, எந்தக் குழுவிலும் தன்னை ஐக்கியமாக்க மறுப்பவரோ என்றாலும் அவரின் படைப்புக்கள் கவனிக்கப்பட்டிருக்கின்றன. உரிய நேரத்தில் உயரிய
விருதுகள் வழங்கப்படவும் செய்யப்பட்டிருக்கின்றது. அது அவரது படைப்பாளுமைக்கான
அங்கீகாரம். அந்தப் பெருமிதத்திற்கு நிகரான வேறொன்றும் படைப்பாளியை மகிழ்ச்சிப்படுத்தப் போவதில்லை.
நான், என்
நண்பர் குறிப்பிட்ட இந்த ‘படங்காட்டும்’ எழுத்தாளர் எழுதுபவற்றை பின் தொடர்ந்து வாசிப்பதை
எப்போதோ விட்டுவிட்டேன், அதற்கு அவர் முன்பு செய்த
(எனக்கல்ல) ஒரேயொரு ‘நற்காரியம்; மட்டும் போதுமானதாக இருந்தது என்று குறிப்பிட்டேன்.
நான்கு பேரைத்
தெரியும் என்று படங்காட்டி, வேண்டுமானால் யாரேனும் பிரபல்யம் அடையலாம், ஆனால் அதன் மூலம் எவரும்
தம் படைப்புக்களை சமகாலத்தில் கூட, நிலைநிறுத்த முடியாது
என்பதை அந்த ‘கடல் கடந்த’ எழுத்தாளர்
எப்போதாவது ஒருநாள் உணரக்கூடும். அதுவரை நாம் பொறுமையாக இருக்க
வேண்டியதுதான்.
00000000
இவ்வாறு தனிமையில்
இருந்து எழுதும் இன்னொரு நண்பரை பிறகொருநாள் சந்தித்தேன். அவரின் முதல் தொகுப்பே தரமானது, கவனமும் பெற்றது. எனினும் அவர் ஊரில் இருக்கும்
சில இலக்கியக்குழுக்களின் பெற்ற அனுபவங்களால் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொண்டவர். அவர் சொன்ன சில
கதைகளைக் கேட்டு, ‘டேய் எப்படியெல்லாம் நீங்கள்
பெரும் வாசிப்பாளர்/விமர்சகர்கள் என்று 'பாவ்லா' காட்டினீர்கள்' என்று சிலரைப் பார்த்து நினைக்கத் தோன்றியது. இவர்களில் சிலர் வாசிப்பதேயில்லை. முன்னுரை/முகவுரை மட்டும் வாசித்துவிட்டு கதை கதையாய்ப் பேசியிருக்கின்றார்கள்
போலும். நண்பர், ஒரு குழு தன்
தொகுப்பையே வெளியே விற்பனைக்கு கிடைக்கச் செய்யாது சதி செய்தது என்றபோது
அவரை ஆறுதற்படுத்துவதற்காக, ஐரோப்பாவில் நான்கைந்து இலக்கியக் குழுக்கள் இருக்கின்றன, நான் கூட ஆறேழு
புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றேன். வருகிற எல்லாப் புத்தகங்களுக்கு நான் முந்தி நீ
முந்தியென அறிமுகக் கூட்டங்கள் செய்வார்கள். ஆனால் இவர்கள் என் நூல் பற்றி
சிறுமூச்சுக் கூட விடமாட்டார்கள். அதற்காக
எல்லாம் கவலைப்படவா முடியும். நீங்களும் உள்ளூர்க் குழுக்கள் பற்றிக் கவலைப்படாது எழுதுங்கள். உங்களை வாசிக்க என்னைப் போன்ற பலர் இருக்கின்றார்கள் எனச்
சொன்னேன். அதன் பின்னர் நம்
உரையாடல் அவர் எழுத விரும்பும்
நாவல், எடுக்க இருக்கும் திரைப்படம் என வேறு திசைகளில்
சென்று உற்சாகமாகப் போய் முடிந்தது
.
இன்னொரு நண்பரொருவரைச்
சந்தித்தபோது, நீங்கள் வந்திருக்கும் நாட்டில் இருக்கும் ஒரு சிலர் இங்கேயுள்ள
குழுவொன்றில் அதிகம் பாதிப்பைச் செய்கின்றனர். எதையாவது இது குறித்து நீங்கள்
சொல்ல/எழுதக் கூடாதா என்றார். இதென்னடா வம்பாய்ப் போச்சு. நானென்ன சமாதான உடன்படிக்கை செய்து வைக்க நோர்வேயின் எரிக் சொல்ஹைமா என்று குழப்பம் வந்தது. எந்தக் குழுவிலும் நான் இல்லை. கனடாவில்
இருந்தாலும் இலக்கியம் சார்ந்து எவரோடும் நெருங்கிய நட்புமில்லை/பகையுமில்லை. இது சார்ந்த எந்தப்
பிரச்சினை/கிசுகிசு என்றாலும் கூட, அதன் தணல்
அடங்கியபிறகுதான் எப்போதாவது என் காதுக்கு வரும்.
அப்போது கூட இவற்றைக் கேட்காமல்
இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்துக் கொள்வேன். இலக்கியம் ஆட்களைச் சேர்த்து இலாப நட்டக் கணக்குப்
பார்க்கும் வியாபாரமா என்ன? எனக்கு வாசிப்பும், பயணங்களும் தரும் நிம்மதியே போதும் என்று அவரிடம் சொல்லித் தப்பிக்கப் பெரும்பாடாகிவிட்டது.
இப்படி இன்னொரு
நண்பருடன் சேர்ந்து கதைத்துக் கொண்டிருந்தபோதும் நிகழ்ந்தது. அவர் அறிந்த சில
இலக்கியவாதிகள்/குழுக்கள் சில வெளிநாட்டு அமைப்புக்கள்/நபர்களிடம் இருந்து நிதியுதவி பெற்று தமக்கான நிலையை நாட்டுவதற்காக கஷ்டப்படுகின்றனர் என்றொரு அதிர்ச்சியைத் தந்தார். அந்த நிகழ்ச்சி நிரலைப்
பார்க்க சற்றுப் பயமாகவும் இருந்தது. அதை நம்புவதா என்பதிலும்
எனக்குக் குழப்பம் இருந்தது. இவற்றையெல்லாம் கேட்காமல் இருப்பது சிலவேளைகளில் நல்லது. ஆனால் ஏதோ ஒருவகையில் காதில்
இவ்வாறான விடயங்கள் வந்து இறுதியில் விழத்தான் செய்கின்றன.
000000000
இத்தகைய காரணங்களால்தான்,
இலக்கிய வாசிப்பும் எழுத்தும் அந்தரங்கமான ஓர் விடயம் என்பது
இன்றைய காலங்களில் இன்னும் எனக்குள் உறுதிப்படுகின்றது. இவற்றையெல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால்,
இலக்கியமும் கசடும்/காழ்ப்பும் எல்லாம் சேர்ந்ததுதான் என்று சொல்லத்தான். எழுத்தும் வாசிப்பும் இற்றைவரை எனக்கு மிகப் பிரியமானவை என்றாலும் நான் அதை பலரைப்
போல மேனிலையாக்கம் செய்யப் போவதில்லை. நெருக்கமான விடயங்களிலிருந்துதான் விலகலையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.
இங்கே சிலர்
தமது முன்னோடிகளாக/ஆசான்களாக/வழிகாட்டிகளாக சில எழுத்தாளர்களைச் சொல்லிக்
கொண்டிருப்பார்கள். அப்படி இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அந்த முன்னோடிகள்/வழிகாட்டிகள்
தவறாக/பிறழ்வாக எதையாவது எழுதும்போது/பேசும்போது இந்த சிஷ்யர்களே பிறரை
விட, தம் எதிர்வினையை அதிகம்
காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அப்படி இருந்தால்தான் அது நம்மைப் பண்படுத்தும்
இலக்கியம். அந்த அறத்தையும்/நேர்மையையும்
கற்றுத்தராதுவிடின் இலக்கியம் நம்மில் எதை விதைத்திருக்கும்?. ஆனால் இங்கே
பெரும்பாலும் நிகழ்வது என்னவென்றால், பிறரை விமர்சிக்கும் அதே குரல்கள் தமக்கு
நெருக்கமானவர்கள்/வழிகாட்டிகள் வழி தவறும்போது நிஷ்டைக்குப்
போய் உறங்கிவிடுவதுதான்.
அப்படியாயின் இலக்கியம்
நமக்கு எதைத் தந்திருக்கின்றது. ஒன்றுமேயில்லையா?
00000000000000000
ஓவியம்: வான்கோ
(May 06, 2023)
0 comments:
Post a Comment