கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 43

Friday, August 09, 2024

ஒரு நாள் தியானம்

ஒருமுறை வடகோவை வரதராஜனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஏதேனும் ஒரு நல்ல புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது, அவையே பெரும்பாலும் தனக்கு சிறுகதைகளை எழுதுவதற்கான உந்துதலைத் தந்திருக்கின்றதெனச் சொன்னார். இன்னமும் அவரின் கதைகளை வாசிக்காதவர்கள், 'நிலவு குளிர்ச்சியாக இல்லை' என்கின்ற அவரின் தொகுப்பை தேடி வாசிக்க வேண்டும். 30 வருடங்களுக்கு முன் வந்ததாயினும், இப்போது வாசிக்கும்போதும் உயிர்ப்புடன் இருக்கும் சிறந்த கதைகள் உள்ள தொகுப்பு அது.


யுவன் சந்திரசேகரின் படைப்புக்களோடு பரிட்சயம் உள்ளவர்க்கு அவர் தொடர்ந்து எழுத்தில் வைக்கும் கிருஷ்ணன், சுகவனம், பத்மினி, இஸ்மாயில் போன்ற பத்திரங்கள் நினைவில் நிற்கும். அதுபோலவே அவரில் கதைகளில் வரும் முக்கியபாத்திரமோ/ கதைசொல்லியோ, எழுத்தாளனாகவோ/ வாசிப்பவனாகவோ இருப்பதை அவதானிக்க முடியும். யுவனின் ஒவ்வொரு கதையிலும் யதார்த்த்தில் இருந்த எழுத்தாளரோ/நூல்களோ அல்லத் அவராக உருவாக்கிக் கொண்ட எழுத்தாளர்கள்/நூல்களோ வந்துவிடும்.

'சரி செய்ய முடியாத சிறு தவறுகள்' என்கின்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் பன்னிரண்டு கதைகளிலும் இந்த ஒழுங்கை நாம் காணமுடியும். இதில் சில கதைகள் கதைசொல்லி தான் வாசித்த கதைகளிலிருந்து அல்லது உருவாக்கிக் கொண்ட பாத்திரங்களிலிருந்து வாசகருக்குக் கதைகளைப் புதிகாகச் சொல்கின்றார். ஆனால் அங்கே மறைந்தும் மறையாதமாதிரி கிருஷ்ணன் என்கின்ற பாத்திரம் உள்ளியங்கிக் கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கின்றோம்.

இத்தொகுப்பில் பல மனிதர்கள் வேறொரு மனிதர்கள்/சம்பவங்களினூடாகத் தோன்றிக் கொண்டிருக்கின்றனர். 'உடன் இருந்த்தல்', 'திகைப்பு', 'வழிகாட்டி' என்று இத்தொகுப்பில் அதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 'கனவுப் பலன்', 'வழிகாட்டி' ஒருவித அமானுஷ்யமாக கதைசொல்லலில் பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால் எப்படி சல்மான் ருஷ்டி தனது அபுனைவுகளிலும், நேர்காணல்களிலும் தனக்கு அறிவியலில்தான் நம்பிக்கை இருக்கின்றது, அனுமாஷ்யங்களில் இல்லை என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பாரோ, அதுபோல யுவனின் அந்த 'அனுமாஷ்யங்களை' ஏதோ ஒருவகையில் அறிவியலில் விதிகளுக்குள் இறுதியில் கொண்டு வந்துவிடுகின்றனர். 

 

அதைச் சரியாக 'கிருஷ்ண லீலை' கதையில் நாம் பார்க்கமுடியும். இந்தக் கதையில் வரும் பாத்திரமான கண்ணனுக்கு, கிருஷ்ணன் தொடர்ந்து ஒரு மானிடராகத் தோன்றி ஆறுதல் கொடுப்பவராகவும், குறும்புகள் செய்பவராகவும், அடாவடி செய்பவராகத் தோன்றிக் கொண்டிருக்கின்றார். ஒரு பேச்சுத்துணையாக எப்போதும் கிருஷ்ணன் இருப்பதை இந்தப் பாத்திரத்தின் பேரப்பிள்ளை ஒரு தற்செயலான உரையாடலின் மூலம் தகர்த்துவிடும். Particles, Wave பற்றி விஞ்ஞானபூர்வமான யாரோடான உரையாடலில் இறுதியில் பேரன் சொல்வார்: 'இவன் என்னவாகப் பாக்க விரும்புறானோ, அப்படியேதான் தெரியும் அது'ன்ற முடிவுக்கு எப்பவோ வந்திருச்சு ஸையின்ஸூ' என்று சொல்வதுடன் கதை முடிகின்றது. அதுவரை அமாஷ்யமான இருந்த கிருஷ்ணன் என்கின்ற பாத்திரத்துக்கு முடிவுக்கு வருகின்றது.

அமானுஷ்யங்களின் நம்பிக்கை இல்லை என்கின்ற சல்மான் ருஷ்டிதான் தன் எழுத்துக்களில் மாய யதார்த்தமாக கதைகளைப் பின்னுகின்றவர், அதுபோலவே யுவனின் இந்தக் கதை மட்டுமில்லை 'வழிகாட்டி' என்கின்ற கதைகூட அப்படியான தொலைந்துபோன ஒரு தாத்தாவை காடுகளில் திசை தெரியாது அலையும் பேரன் கண்டுகொள்வதைச் சொல்கின்றது. 40 வருடங்களுக்கு மேலாக காடுகளில் அலைந்து திரியும் ஒருவர், காட்டுப் பித்தத்தால் அவரை விட்டு போகின்ற புதுமனைவி என எல்லாத் துயரங்களையும் தனது மலையேறல் பயணங்களுக்காகத் தாங்கிக் கொள்கின்ற ஒருவர், சட்டென்று தனது மலையேறல் பயணங்களை விட்டுவிடுகின்றார். அதற்கு அவர் சொல்கின்ற காரணம், இதுவரை என் கனவுகளில்/உள்மனதின் அடுக்குகளில் வழிகாட்டியாக வந்துகொண்டிருந்த -வீட்டை விட்டு ஓடிப்போன- தாத்தா, நேரே வந்து தொலையும் போது உதவுகின்றார் என்றால், இனி மலையேறுதல் ஆபத்தானது என்றுதானே அர்த்தமென மலையேறுதலை அத்தோடு முடித்துவிடுகின்றார். நமக்கு இதுவகையில் அபத்தமாகவும், திகைப்பாகவும் இருக்கும், ஆனால் சிலவேளைகளில் இப்படி ஒரு விடயத்தில் பித்துப் பிடித்தலைபவர்களுக்கு சட்டென்று அதன் மீது ஆர்வம் நீங்கிப் போவதற்கு இப்படியொரு 'தற்செயலான' காரணங்கள் இருப்பதைக் கண்டிருப்போம்.

யுவனின் கதைகள் இருக்கும் பலமும் பலவீனமும் அவரின் கதைகளை எந்த வகையென எளிதாகத் தொகுத்துச் சொல்லமுடியும். ஒரு கதையை எடுத்தால் கூட அது இந்தக் கருப்பொருளில்தான் கதையைச் சொல்கின்றது என அறுதியிட்டுச் சொல்ல முடியும். எண்ணற்ற திக்கில்/உடைக்கப்பட்ட கண்ணாடிப் பிம்பங்களில் பல்வேறு சம்பவங்களை அடுக்கி ஒவ்வொரு கதையாக்கின்றார். சில இவை கதைகளா/கட்டுரைகளா என்று கூட நமக்கு குழப்பம் வரக்கூடும். கட்டுரைகளாக எழுத வேண்டியதைக் கூட கதைகளாக்கிவிட்டாரோ என்று நினைப்பதுண்டு. பிறகு சட்டென்றுதான் யுவன் கவிதைகள்/சிறுகதைகள்/நாவல்/மொழிபெயர்ப்புகள் என்று நூல்களை வெளியிட்டிருக்கின்றாரே தவிர கட்டுரைகளாகவோ/அல்புனைவுகளாகவோ எதுவுமே எழுதவில்லை என்பதும் உறைத்தது. ஆகவே அவர் சொல்லவேண்டியதை எல்லாம் புனைவுகளாக்கிக் கொண்டிருக்கின்றார் எனவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறாக நாம் அவர் படைப்புக்கள் மீது வைக்கும் கேள்விகளை/சந்தேகங்களைக் கூட யுவன் தன் கதைகளில் வரும் பாத்திரங்களினூடாக சொல்லி நம்மைத் திகைக்க வைப்பதையும் உணரலாம். ஆகவேதான் யுவன் கதைகளில் ஆசிரியரும் வாசகரும் மாறி மாறி ஊடிழைப் பிரதியாக வந்தபடி இருக்கின்றனர். எப்போது ஆசிரியர் வாசகர் ஆகின்றார், வாசகர் ஆசிரியர் ஆகின்றார் என்கின்ற கணங்கள்தான் யுவனின் கதைகளைச் சுவாரசியமாக்கின்றன.

நமக்கு வயதாகும்போது நினைவுகள் சுருங்கிப் போகத் தொடங்குகின்றன. சில சம்பவங்கள் நடந்தவையா இல்லையா என்ற சந்தேகங்கள் நமக்குள் வரத் தொடங்குகின்றன. ஒருவகையில் வருடக்கணக்கில் நிகழ்ந்தவற்றை நிமிடங்களாகவும்/கணங்களாகவும் நம் அகவுள்ளம் சுருக்கத் தொடங்குகின்றன. அப்படியான ஒரு அனுபவமே யுவனின் கதைகளை வாசித்து முடிக்கும்போது வருகின்றன. நம்மால் அவரின் கதைகளை அப்படியே மீண்டும் நினைவுகூர முடிவதில்லை. அவற்றில் நிகழும் சம்பவங்களை/உரையாடல்களை மட்டும் சுருக்கி வைத்தபடி நகர்ந்து விடுகின்றோம்.

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த கதைகளாக 'வழிகாட்டி', 'சிங்கத்தின் குகையில்', 'போர்க்கலை' போன்றவற்றைச் சொல்வேன். ஆனால் சட்டென்று ஒருவர் இவை எதைப் பற்றிய கதைகள் என்று விவரிக்கச் சொல்லிக் கேட்டால் என்னால் அவற்றை பிற எழுத்தாளர்களின் படைப்புக்களைப் போல சொல்லமுடியாது. ஒருவகையில் ஆற்று நீரை கையில் அள்ளியிருக்கின்றோம் என்று தெரிவதும், ஆனால் கைகளில் அதைப் பத்திரமாகத் தேக்கி வைக்க முடியாது இருப்பதும் போன்ற உணர்வுதான் யுவனின் கதைகளை வாசிக்கும்போது ஏற்படுகின்றது.

அந்த அனுபவம் என்னைப் பொருத்தவரை வாசிப்பில் வசீகரமானது எனச் சொல்வேன்.

************

 

( Aug 02, 2024)

0 comments: