கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பிரசன்ன விதானகேயின் 'Paradise'

Friday, August 30, 2024

பிரசன்ன விதானகேயின் அநேக திரைப்படங்கள் எளிதான போலத் தோற்றமளித்தாலும் அவை ஆழமான உள்ளடுக்குகளைக் கொண்டவை. பிரசன்னாவின் திரைப்படங்களின் பாத்திரங்களின் உரையாடல்களை மட்டுமில்லை, காட்சிச் சட்டகங்களையும் கூர்மையாக அவதானிக்க வேண்டும். 'பரடைஸ்' என்கின்ற இத்திரைப்படத்தில் நாயகிக்கு வைக்கப்பட்டிருக்கும் 'பிரேம்'களே ஒவ்வொருபொழுதும் ஒரு கதை சொல்வதை நாம் கண்டுகொள்ள முடியும். அந்தக் காட்சிச் சட்டகங்கள் பேசப்படும்/நடக்கும் சம்பவங்களுக்கு அப்பால் ஒரு கதையை மறைமுகமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.

இலங்கை பொருளாதாரத்தில் அடிவாங்கி, நாடு திவாலாகிக் கொண்டிருந்த காலத்தில் கேரளாவில் இருந்து கேசவ்வும், அம்ருதாவும் இலங்கைக்குப் பயணம் செய்கின்றனர். இவர்கள் ஐந்து வருடங்களாகத் திருமணம் செய்த ஒரு இணை. தொலைக்காட்சித் தொடர் (?) இயக்குநனராக இருக்கும்கேசவ் தொடக்கத்தில் இருந்தே அலைபேசிக்குள் அமிழ்ந்து கிடப்பவராக இருக்கின்றார். அவரது வேலை தொடர்பாக அழைப்புக்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கேசவ்வின் துணையான அம்ருதாவோ ஒரு பயணியைப் போல புதிய இடங்களை/கதைகளை அறிய விரும்புகின்றார். இவர்கள் இருவருக்கும் பயண வழிகாட்டியாக மிஸ்டர்.அன்ட்ரூ இருக்கின்றார்.

இத்திரைப்படம் ஒருவகையில் இராமயணத்தைக் கட்டவிழ்க்கின்றது. அன்ட்ரூ, இந்த இணையை எல்லவில் இருக்கும் இராவணன் நீர்வீழ்ச்சி, குகைக்கு எல்லாம் அழைத்துச் செல்கின்றார். இந்தக் குகையில்தான் இராவணன் இன்னும் உறங்குகின்றார். என்றோ ஒருநாள் லங்கா சிக்கலில் மூழ்க்கும்போது எழுந்து வருவார் என்று ஒரு கதையைச் சொல்கின்றார். பின்னர் நுவரெலியாவில் இருக்கும் சீதா எலியவுக்குச் செல்லும்போது, இங்கேதான் சீதை சிறை வைக்கப்பட்டார். இந்தப் பாறையில் இருந்துதான் சீதை சூரிய ஒளியே பார்ப்பார் என அன்ட்ரூ சொல்கின்றார். சீதா எலிய கோயிலுக்குப் போன நமக்கு (அது இப்போது முற்றுமுழுதாக சம்ஸ்கிருதப்பட்ட இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஒரு கோயிலாக இருப்பதை கடந்த வருடம் சென்றபோது நான் அவதானித்து எழுதியிருக்கின்றேன்) அங்கே பாறையில் தெரியும் பெரும் குழி அனுமானின் காலடித்தடம் எனச் சொல்லப்பட்டு புனித இடமாக இருப்பதை அறிந்திருப்போம்.

இங்கேதான் அனுமான் வந்து சீதையைச் சந்தித்தார் என்றும், பின்னர் ராமன் வந்து சீதையை மீட்டுச் சென்றார் என்றும் சொல்கின்றபோது, அம்ருதா அடக்கிய சிரிப்பைக் கண்களால் காட்டியபடி செவிமடுக்கின்றார். பின்னர் அவர் அன்ட்ரூவிடம், 'அன்ட்ரூ, நீங்கள் உண்மையிலே சீதையை ராமன் வந்து காப்பாறியிருப்பார்ர் எனவா நினைக்கின்றீர்கள்?' எனக் கேட்கின்றார். சீதைக்கு தன்னைத்தானே காப்பாற்ற முடியாதா எனக் கேட்டுவிட்டு, நீங்கள் சொல்வது வால்மீகி எழுதிய இராமாயணம். ராமாயணத்துக்கு முந்நூறுக்கு மேற்பட்ட வடிவங்கள் இருப்பது தெரியுமா எனக் கேட்கின்றார்.

அப்படி அம்ருதா சொல்லிவிட்டு
, ஜைனர்களுக்கு இருக்கும் ஒரு இராமாயணத்தில் ராமன் ஒரு தேர்ச்சாரதி மட்டுமே. சீதை இராவணைக் கொன்றுவிட்டு வரும்போது அவரை அழைத்துச் செல்கின்ற சாரதியாக மட்டுமே அங்கே ராமர் இருக்கின்றார் எனச் சொல்கின்றார்.
இப்போது அன்ட்ரூவுக்கு தன்னோடு பேசிக்கொண்டிருக்கும் அம்ருதா ஒரு சாதாரண -எல்லாக் கதைகளையும் உண்மையென நம்பும்- ஒரு பெண் இல்லையென்பது புரிகின்றது. ஆகவேதான் இன்னொரு இடத்தில் ஒரு மதகுரு இங்கேதான் சீதை தீக்குளித்து தன் 'கற்பை' நிரூபித்து இராமனைக் கைபிடித்துச் சென்றார் என்று ஒரு கதையைக் கூறும்போது, அன்ட்ரூ 'இப்படித்தானே நான் ஒரு கற்பனைக் கதையைச் சொன்னேன், என்னை மன்னியுங்கள்' என்கின்றார். அம்ருதாவோ 'இல்லை இல்லை உங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது' என்கின்றார். தந்தை வயதிருக்கும் அன்ட்ரூவுக்கும், அம்ருதாவுக்கும் அதன்பிறகு சொல்லாமலே இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் உறவு முகிழ்ந்துவிடுகின்றது.

இந்தப் பொழுதுகளிலே கேசவ்வினுடையதும், அம்ருதாவினதும் அலைபேசிகளும், மடிக்கணனிகளும் திருடப்படுகின்றன. அதன்பின் கேசவ் வேறு ஒருமாதிரியான மனிதராக மாறிவிடுகின்றார். பொலிஸில் இது குறித்து முறையிடுகின்றனர். பொலிஸ் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நுவரெலியாவில் இருக்கும் சில தமிழ் இளைஞர்களை திருடர்களென முன்னிறுத்துகின்றது. இவர்கள்தானா களவெடுத்தவர்கள் என அடையாளங் காட்டக் கேட்கும்போது, தனது பொருட்கள் கிடைத்துவிடவேண்டுமென்கின்ற அவதியில் கேசவ் அவர்கள்தான் களவெடுத்தனர் எனச் சொல்லிவிடுகின்றார். அதிலிருந்து நிகழ்வதெல்லாம் துன்பகரமான நிகழ்வுகள். இந்தப் பொலிஸ் சித்திரவதையால் ஒருவர் பொலிஸ் காவலிலேயே இறந்துவிடுகின்றார்.

அப்போதும் கேசவ் சுற்றி நடப்பவைகளை கவனிக்கத் தவறுகின்றார். அம்ருதா இவையெல்லாம் மெளனமாக இருந்து அவதானித்துக் கொண்டிருக்கின்றார். பொலிஸிடம் அம்ருதா, இப் படி ஒருவர் அநியாயமாகக் கொல்லப்பட்டுவிட்டாரே, நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளமாட்டீர்களா என்று கேட்கும்போது, அவர் சொல்வார், இதில் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை, வேண்டுமெனில் ஒரேயொரு வாக்கு மட்டும் குறைந்துவிட்டது, அவ்வளவுதான்' என்று எள்ளலாகச் சொல்கின்றார்.

இந்த ஒரு காட்சி மூலமாகவே பிரசன்ன இலங்கையில் சிறுபான்மை இனங்களில் நிலை பற்றி நமக்கு மறைமுகமாகச் சொல்லிவிட்டார். மேலும் நாடு திவலாகிப் போய்க் கொண்டிருக்கும் காலத்தில்கூட இந்த இனத்துவேசமும், பொலிஸ்/இராணுவம் என்கின்ற அமைப்புக்கள் தமது அதிகாரத்தைக் கைவிடத் தயாரில்லை என்பதை இந்தக் காட்சியினூடாகக் காண்கின்றோம்.

ஒரு தமிழ்த் தோட்டதொழிலாளியின் சிறைமரணம் தொழிலாளர்களைக் கொந்தளிக்கச் செய்கின்றது. பொலிஸோ களவாடப்பட்ட அலைபேசிகளையோ/ கணனிகளையோ கண்டுபிடிக்க முடியாமல், அந்த சுற்றுலா விடுதியில் சமையல் வேலை செய்யும் தமிழ்/முஸ்லிம் இளைஞர்களும் இந்தக் களவுக்குக் கூட்டு என குற்றஞ்சாட்ட நிலைமை இன்னும் மோசமாகின்றது. ஒருவகையில் இந்தக் கொலைக்கும்/ நிகழ்வுக்கும் தாங்களும் ஒரு காரணமென்று நம்பும் அம்ருதா இறுதியில் கொடுக்கும் தீர்ப்பு அதிர்ச்சிகரமானது.

அந்தச் சம்பவத்தையிட்டு பொலிஸிடம் சாட்சி சொல்லும் அன்ட்ரூ அது தற்செயலாக நிகழ்ந்த விபத்து என்கின்றார். நாட்டை விட்டு வெளியேறும்போது அம்ருதா அன்ட்ரூவிடம், 'நீங்கள் நான் அதைத் தற்செயலாகத்தான் செய்திருப்ப்பேன் என்றா நம்புகின்றீர்கள்' எனக் கேட்கின்றார். அதுதான் இந்த திரைப்படத்தின் அடிநாதம்.

இராமாயணத்தை பிரசன்ன இன்னொருவிதமாக கட்டவிழ்த்துப்பார்க்கின்றார் என இத்திரைப்படத்தை வைத்துச் சொல்லலாம். ஏற்கனவே
300 இராமாயணங்கள் இருந்தால் ஏன் இன்னொரு வடிவமாக பிரசன்னாவின் கதை இருக்கமுடியாது. இங்கே ராவணன் என்கின்ற பாத்திரமே இல்லை. ஆனால் ராமனும், சீதையும் இருக்கின்றனர். சீதைக்கு மானை வேட்டையாடும் சந்தர்ப்பம் வரும்போது அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனச் சொல்கின்றார். அந்த மான் பல்வேறு நேரங்களில்/பல்வேறு வடிவங்களில் அம்ருதாவுக்குக் காட்சியளிக்கின்றது. அப்படித் தோன்றுவதன் மூலம் அம்ருதாவின் உள்மனதுக்கு அது எதையோஒவ்வொருமுறையும் உணர்த்தியபடி இருக்கின்றது. இங்கே அன்ட்ரூதான் அனுமான். இந்த அனுமான் ராமனை விட சீதைக்கு நெருக்கமாக இருக்கின்றார். சீதையை நன்றாகப் புரிந்துகொள்ளும் அன்ட்ரூ அவரை இறுதியாக இக்கட்டான ஒரு பெரும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றுகின்றார்.

இத்திரைப்படத்தில் சீதை, ராமன், அனுமன் கதைகள் குலைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. மேலும் பிரசன்னாவின் சீதை, கொடும் விடயங்கள் நடக்கும்போது சும்மா இருப்பதில்லை. ஒருகட்டத்தில் தன் சுயத்தில் இருந்து எழுந்து, கொடுமை செய்பவர் ராமனாக இருந்தாலும் அவனுக்குரிய தண்டனையைக் கொடுக்கவும் செய்கின்றார். ஆகவே சீதை பற்றிய ராமாயணக் கதையாடல் மாற்றியமைக்கப்படுகின்றது. இன்றைய ராமன்கள் எப்போதும் தமக்காய் சீதைகள் காத்திருப்பார்கள்/ தம் சொல் கேட்பார்கள் என்று கனவுகாண்கின்றார்கள். ஆனால் அந்தக் காலம் எப்போதோ மலையேறிப் போய்விட்டது.

ஆண்களுக்கு ஒரு விடயம் முக்கியமாகிப் போய்விட்டதெனில் அதையே கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அது போராட்டமாக இருந்தால் கூட மாற்றுவழிப் பாதைகளைப் பற்றி யோசிக்க முரண்டு பிடிப்பார்கள். ஆகவே பல போராட்டங்கள் எவ்வளவோ விலைகொடுத்தும் அதன் இலக்குகளை அடையமுடியாமல் தோல்வியடைந்திருக்கின்றன. ஆனால் பெண்கள் தமது போராட்டங்களின் போது சுற்றியிருப்பவற்றை அவதானிப்பவர்கள். அதனூடு தம் வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடியவர்கள். ஆகவேதான் போர்காலமானால் என்ன, பட்டினிக்காலமானால் என்ன நமது அன்னையர்களும், சகோதரிகளும் நம்மைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கின்றார்கள். அத்தோடு பெண்கள் தமது உரிமைகளுக்காகப் போராடிப் பெற்றவையெல்லாம் அதிக இழப்புக்கள் இல்லாமல் அமைதியாகவே இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நடந்தேறியிருப்பதை நாம் நேரடிச் சாட்சிகளாகப் பார்த்துமிருப்போம்.

இங்கேயும் கேசவ் ஒரு விடயத்துக்குள் மட்டும் சிக்குப்பட்டவனாக இருக்கின்றான். அவனால் தொலைந்துபோன தனது பொருட்களை மீளப்பெறுவதைத் தவிர வேறொன்றையும் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. ஆகவேதான் அம்ருதா இயற்கையை,இன்னபிற விடயங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக தன்னை வைத்திருக்கும்போது, 'இங்கே நான் அகப்பட்டிருக்க, எப்படி உன்னால் இப்படி சிரித்துக் கொண்டிருக்க முடிகின்றது' என்று கோபப்படுகின்றான். அந்தக் காட்சியில் அம்ருதா தனது கண்களால் காட்டும் மகிழ்ச்சியையும் எள்ளலையும் எந்த ஆணாலும் எளிதாகக் கடந்து போகமுடியாது.

இலங்கையில் இப்போது சிங்களவர்கள் சட்டென்று இதுவரை 'தமிழ் அரசன் இராவணன்' என்ற கதையாடலை மாற்றி இராவணன் தமது சிங்கள அரசன் என்கின்ற கதைகளை கட்டியமைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். அதன் மூலம் இலங்கைக்கான தமது வருகையை மகாவம்சம் சொல்லும் காலத்துக்கு முன்பாக நீட்சித்துப் பார்க்க விரும்பும் அவர்களின் பேரவா எனச் சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு இராவணனை தமது அரசனாக கட்டியமைக்கின்ற காலத்தில்தான் சமாந்திரமாக இன்னும் இலங்கையிலிருக்கும் சிறுபான்மை மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்கின்ற ஒரு கதையாடலையும் பிரசன்ன முன்வைக்கின்றார். அந்த மக்களை போட்டு மிதிக்கின்ற, அதிகாரத்தில் திளைக்கின்ற பொலிஸ் அதிகாரி கூட, I'm a dog. I'm good dog. I'm loyal to my master. you're my master, sir' என்று யாரோ ஒரு சுற்றுலாப் பயணிடம் தன்னை அடிமையாக்கும் நிலையைக் காட்டுவதை விட வேறு எப்படி ஒரு கறாரான விமர்சனத்தை சிங்கள அதிகார அமைப்புக்கள் மீது வைத்துவிட முடியும். இதை இன்னொருவகையாக இலங்கையில் மற்ற சக இனங்களை மதிக்காமல் அந்நியர்களிடம் அடிபணிந்து வாலாட்டுகின்ற அடிமை மனோநிலையை பொலிஸிக்கு மட்டுமில்லை இலங்கை அரசுக்கும் இருப்பதை விமர்சிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தவகையில் பலவித உள்ளடுக்குக்களையும், உரையாடல்களையும் தன்னகத்தே கொண்ட 'பரடைஸ்' திரைப்படம் முக்கியமானது. நமது ஈழ/புலம்பெயர் திரை செல்லவேண்டிய திசைக்கு முன்னோடியாக பிரசன்னவை முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராகச் சொல்லிக் கொண்டிருப்பவன் நான். இத்திரைப்படம் அதற்கு இன்னுமொரு தெளிவான உதாரணமாகும்.

 
***********

(Aug 05, 2024)

 

0 comments: