ஓர் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கின்றீர்கள். அந்த எழுத்து உங்களை அப்படி வசீகரிக்கின்றது. நல்லதொரு படைப்பைத் தந்த அந்த எழுத்தாளருக்கு நன்றி சொல்ல விரும்பும்போது நீங்கள் என்ன செய்வீர்கள். நான் சங்கரியின் நாவலை வாசித்து முடித்த மகிழ்ச்சியில், அவரின் எழுத்துக்களில் எதையாவது தமிழாக்க வேண்டுமென விரும்பினேன். அதுவே இந்தக் கட்டுரை.
சங்கரி தனது நாவல்கள், தான் கட்டியமைக்க விரும்பும் சமூகங்களுக்கும், சொல்ல வேண்டிய கதைகளுக்குமான காதல் கடிதமே என்று ஓரிடத்தில் சொல்லியிருப்பார். அவ்வாறே நானும் இந்த தமிழாக்கத்தை, ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளருக்கு அனுப்ப விரும்பும் 'காதல் கடிதம்' எனச் சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகின்றேன்.
************
நாவலுடனான அந்தரங்கத் தொடர்பு
-சங்கரி சந்திரன்
(தமிழில்: இளங்கோ)
அந்த மூன்று தசாப்தங்கள் எனக்கு ஒரு வளர்ச்சிப் பாதையாக அமைந்தன. அந்த நேரத்தில், என் பெற்றோர் போரைப் பற்றிய கோபத்துடனும் துக்கத்துடனும் போராடுவதையும், அதிலிருந்து தப்பி வந்ததால் குற்ற உணர்ச்சியுடன் தத்தளிப்பதையும் நான் பார்த்தேன். வெவ்வேறு நாடுகளின் தூதரகங்களுக்கு வெளியே நடந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டதோடு, எனது மாமிகளும், மாமாக்களும் (இலங்கையில்) நடந்த சமீபத்திய அட்டூழியங்களைப் பற்றி மென்மையான தொனியில் பேசிய பல சந்திப்புக்களில் இடையில் தூங்கியுமிருக்கின்றேன். இங்கேயே 'இனக்கலவரம்', 'இனப்படுகொலை' போன்ற புதிய சொற்களைக் கற்றுக்கொண்டேன்.
*
முற்றுமுழுதாக வெள்ளையினத்தவர் மட்டுமே கற்ற என் பள்ளிக்கூடத்தில், ஒவ்வொரு ஆசிரியருக்கும் முன் 22 எழுத்துகள் கொண்ட எனது முழுப்பெயரை பொறுமையாக எழுதுவதில், என் சீனி சம்பல் சாண்ட்விச்களை நண்பர்களிடமிருந்து மறைப்பதில், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்களின்போது அப்பா வீட்டை விட்டு வருவதற்கு முன்பு அவரது நெற்றியில் பூசிய திருநீற்றைத் துடைக்குமாறு கெஞ்சுவதில் என நான் என் குழந்தைப் பருவத்தைக் கழித்தேன். கோவில்களுக்குச் செல்வதற்குப் பதிலாக 'பெவர்லி ஹில்ஸ் -90210' ஐப் பார்ப்பதற்கான எனது உரிமையை நிலைநாட்டுவதற்காக, உறவினர்களின் விருந்து நிகழ்வுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குச் செல்வதற்காக, என் சகோதரன் மீசையை வழிப்பதற்குப் பாவிக்கும் நுரையை நானும் பாவிக்க அனுமதிக்குமாறு என் அம்மாவிடம் கண்ணீருடன் இறைஞ்சுவதாக, என் பதின்மக் காலங்கள் கழிந்தன. நான் என் பெற்றோரிடமிருந்தும், என் சமூகத்திலிருந்தும் தப்பியோடிப் போய் என் இளமைப் பருவத்தைப் பின்னர் கழித்தேன். ஆனால், அவர்களை விலத்தி வந்தவுடன், அவர்கள் அருகில் இல்லையேயென அவர்களுக்காக ஏங்கியுமிருக்கின்றேன்.
எனது 23வது வயதில், சிட்னியில் இருந்து ஒரு விமானத்தில் ஏறி (கனடா)மொன்றியலுக்கும், பின்னர் இலண்டனுக்கும் சென்றேன், அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு நான் வீடு திரும்பவே இல்லை. இந்த இறுதி பத்தாண்டுகளில், நான் சில விடயங்களைச் செய்தேன். நான் சமூக நீதிக்காகப் பணியாற்றத் தொடங்கினேன், எனக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்., இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் மிலேச்சத்தனமாய்ப் படுகொலைகள் செய்யப்பட்ட செய்திகளைப் பார்த்தேன்.
அப்போது நான் இலங்கையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டேன். சிட்னியில் வசித்து வந்த என் அம்மம்மாவை அடிக்கடி தொலைபேசியில் அழைக்கத் தொடங்கினேன். 12 வருடங்களாக, நான் இலண்டனில் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அம்மப்பாவுடன் வாரந்தோறும் முப்பது வினாடிகள் உரையாடுவேன்; அதைத் தொடர்ந்து அம்மம்மாவுடன் நீண்ட நேரம் பேசுவேன், அவருக்கு என்னிடம் அம்பலப்படுத்த வேண்டிய இரகசியங்களும், சொல்லவேண்டிய புகார்களும் நிறைய இருந்தன.
இந்தப் பத்தாண்டுகளின் நடுப்பகுதியில், இலண்டன் மருத்துவமனையின் குளியலறைத் தரையில் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இந்த அனுபவம் ஒருபோதும் எளிதானது அல்ல. என் மன நலத்தையும், மீண்டும் கர்ப்பம் தரிக்கும் எனது வெறி குறித்தும் கண்டு அஞ்சிய என் கணவர், என்னை படைப்பு எழுத்து வகுப்பிற்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார். மீண்டும் ஒரு குழந்தையை உருவாக்கும் ஆறுதல் நமக்குக் கிடைக்கும் வரை, வார்த்தைகளின் உருவாக்கம் எனக்கு ஆறுதல் அளிக்கும் என்று அவர் நினைத்தார்.
ஆகவே, என் அலுவலகத்திற்கு எதிரே இருந்த ஓர் எழுத்து வகுப்புக்குச் சென்றேன். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வாரமும் எனது வாரத்தின் சிறந்த இரண்டு மணிநேரங்கள் அதுவாக அமைந்திருந்தது. எங்கள் ஆசிரியர், ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அந்தக் கதாபாத்திரத்திற்கு 'வேலை'களைச் செய்யக் கொடுக்குமாறு எங்களிடம் கேட்டார். நான், எப்போதும் எனக்கு மிகுந்த ஆறுதலை அளித்துக்கொண்டிருந்த ஒரு பாத்திரத்தை உருவாக்கினேன் - அல்லது அதை மீண்டும் உருவாக்கினேன்; அது எனது அம்மம்மா. நான் அந்தப்பாத்திரத்துக்கு காட்சிகளையும், செயல்களையும் வழங்கி, இறுதியாக ஒரு கதையையும் கொடுத்து வளர்த்தெடுத்தேன். அந்த வகுப்பின் குறிப்புகளிலிருந்து, என் தாத்தா பாட்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு இளம் தம்பதியினரை மையமாகக் கொண்ட "சூரியக் கடவுளின் பாடல்" (Song of the Sun God) என்கின்ற ஒரு நாவலை எழுதினேன்.
எனது அப்பா இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு, நமது வரலாறு, போர், கலாசாரம் மற்றும் சமூகம் பற்றி அவர் முன்னர் என்னிடம் சொன்ன அனைத்தையும் நான் நினைவில் வைத்திருந்ததற்கு, நன்றி தெரிவிக்க என்னை அழைத்தார். கடந்த நான்கு தசாப்தங்களாக அவர் சொல்லி வந்ததை நான் கூர்ந்து கேட்டது பற்றி அவர் (கனிவுடன்) ஆச்சரியப்பட்டார்.
*
அம்மப்பா இறந்த சில வருடங்களுக்குப் பிறகு, எனது அம்மம்மா ஒரு முதியோர் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தார். இது மிகவும் கதகதப்பும் கனிவும் நிறைந்த ஓர் அன்பான இடம், இங்கு வசிப்பவர்களில் பலர் இலங்கைத் தமிழர்கள், அதே போல் இங்கிருக்கும் ஊழியர்களும், பராமரிப்பாளர்களும் தமிழர்களாகவே இருந்தனர். அங்கு இருந்தவர்களில் பலர் தாம் இலங்கையிலே ஏற்கனவே ஒருவரையொருவர் அறிந்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். என் குழந்தைகள் நான் எனது அம்மம்மாவைப் பார்க்க முதியோர் இல்லத்திற்குச் செல்லும் பயணங்களில்போது என்னுடன் இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் அம்மம்மாவைப் பார்க்கச் செல்கையில், எனது கஸின்களையும், நண்பர்களையும் சந்தித்திருக்கின்றோம். அவர்கள் தங்கள் அம்மம்மாக்களையும் அப்பப்பாக்களையும் பார்க்க வந்திருக்கின்றார்கள். எந்தவொரு முதியவரின் அறையிலும், நான்கு தலைமுறை குடும்பங்கள் வரை பேசுவதும், சிரிப்பதும், கேட்பதும், சண்டையிடுவதும், கற்றுக்கொள்வதுமாகவும் இருக்கும்.
எனது அம்மம்மாவின் அறையில், என் சிறுவயதில் எனக்கு நினைவிருக்கும் தெய்வங்களுக்கென ஒரு சிறிய சன்னதி உள்ளது . அங்கே அம்மப்பாவுக்குச் பிடித்தமான பிள்ளையாரும், அம்மம்மாவுக்குப் பிடித்தமான முருகனும் உள்ளார்கள். அந்த இடத்தில் இப்போது அம்மப்பாவின் புகைப்படம் இருக்கின்றது. அதில் அவருடைய நெற்றியில் உள்ள திருநீறு தேய்ந்து போயிருந்தால், அதை நான் மீண்டும் அங்கே பூசி விடுவதும் உண்டு.
நாங்கள் எங்கள் அம்மம்மாவை முதியோர் இல்லத்தில் சந்திக்கும்போது, நாங்கள் அவரை தாழ்வாரங்களின் ஊடாக ஒரு நடைக்கு அழைத்துச் செல்வோம், மற்ற முதியவர்களின் அறைகளைக் கடந்து செல்லும்போது, அங்கிருப்பவர்களின் கதைகளையும், தனது கதையைப் போன்று அவர் எங்களிடம் சொல்லிச் சென்றபடி இருப்பார்.
அம்மம்மா ஒரு வசீகரமான கதைசொல்லி, ஒவ்வொரு கதையையும் எப்போதும் ஓர் அறிமுகத்துடன் தொடங்குவார், இன்றைய நாளுக்கு, பல தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கும் ஒரு கதையிலிருந்து அவை ஆரம்பிக்கும். அவருடைய கதைகள் பெரும்பாலும் பக்கத்து அறைகள் மற்றும் தாழ்வாரங்களில் உலாவும், அவருடைய நண்பர்களைப் பற்றிய அதிக ரகசியங்களையும் புகார்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்; மேலும் அந்த ரகசியங்களும் புகார்களும் எப்போதும் அவர்களின் இளமைப் பருவத்திலிருந்தே பொதுவாக உருவாகியிருக்கின்றன. அம்மம்மாவுக்கு மேலும் மேலும் வயதாகியபோது, அவருடைய கடந்த கால நினைவுகள், மிகவும் தெளிவாக இருந்தன, மேலும் சில வழிகளில் அவருடைய நிகழ்கால யதார்த்தத்தை விட அவை உண்மையானவையாகவும் இருந்தன.
இப்படியாக எல்லோரும் சேர்ந்து, இந்த முதியோர் இல்லத்தில், அம்மம்மாவின் கதைகளைக் கேட்பதும், எங்கள் உறவினர்களைச் சந்திப்பதும், அவர்களின் கதைகளைப் புரிந்துகொள்வதும் என்பது ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவது போன்றதாகும். இந்தக் கதைகள் 'சந்திரன்களின்' நான்காவது, ஆனால் இறுதி தலைமுறை அல்லாத, எனது குழந்தைகளையும், எங்கள் மூதாதையர் நிலத்துடன் இணைக்கின்றன.
இந்தக் கதைகள் எங்கள் குடும்பத்தின் கடந்த காலத்தையும், எங்கள் தாய்நாட்டின் வரலாற்றையும் உறுதியாகப் பிணைக்கின்றன. இந்தக் கதைகள், இந்த இடத்தில், எனது அடுத்த நாவலான "கறுவாத் தோட்டத்தில் தேநீர் நேரத்துக்கு' (Chai Time at Cinnamon Gardens) அடிப்படையாக அமைந்தன . அந்தப் புதினம், நாங்கள் கட்டியமைக்க விரும்பும் எங்கள் சமூகங்களுக்கும், நாங்கள் சொல்ல விரும்பும் கதைகளுக்குமான, எனது காதல் கடிதம் ஆகும்.
*********
( சங்கரி சந்திரன் ஆங்கிலத்தில் எழுதிய 'Personal Connection to the Novel' கட்டுரையின் தமிழாக்கம்)
0 comments:
Post a Comment