கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 87

Tuesday, April 22, 2025

 

லக்கியம் போல அரசியல் எனக்கு நெருக்கமானதில்லை. ஆனால் இலக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் அரசியலுள்ளது என்கின்ற தெளிவு இருக்கின்றது. கனடாவில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, பெரும்பாலும் வாக்களித்து என் 'ஜனநாயக் கடமை'யை செய்பவன். மேலும் வெளிப்படையாக, இங்குள்ள ஒரளவு இடதுசாரி சார்புள்ள 'புதிய ஜனநாயகக்கட்சி'யை (New Democratic Party) ஆதரிப்பவன் எனச் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

நான் வேட்பாளர்களைப் பார்த்தல்ல, கட்சியை மட்டும் பார்த்து வாக்களிக்கும் ஒருவன். நண்பர்கள் அவ்வப்போது தனிப்பட்ட வேட்பாளர்களைப் பார்த்தும், அடிப்படைவாதக் கட்சிகள் வென்றிடாதிருக்க தந்திரோபாயமாக வாக்களிக்க வேண்டும் என்று சொல்கின்றபோது, அவ்வப்போது அவர்களோடு நட்பு முரண் உரையாடல்களைச் செய்ததும் உண்டு.

இம்முறை முதன்முறையாக லிபரல் கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதாக இருக்கின்றேன். அந்த வேட்பாளர் ஜூவனிட்டா நாதன் (Juanita Nathan). ஜூவனிட்டா நீண்டகாலமாக அரசியல் களத்தில் இருப்பவர். பாடசாலை டிரஸ்டியாக, பின்னர் கவுன்சிலராக என அவர் தொடர்ந்து வென்று பொதுமக்களோடு எப்போதும் இருப்பவர்.

அவரை நான் அரசியல் களங்களில் அல்ல, நமது இலக்கியக் கூட்டங்களிலும், சமூகம் சார்ந்த நிகழ்வுகளிலுமே பெரும்பாலும் சந்தித்திருக்கின்றேன். எளிமையாக அணுகக்கூடிய ஒருவர். தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களின் மீதும் அக்கறையுடைய ஒருவர் என்பதை அவரது கடந்த கால அரசியல் வாழ்வை அவதானித்தவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இம்முறை லிபரல் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், அவர் இதுவரை காலமும் அரசியல் களத்தில் நின்ற தொகுதி அவருக்கு ஒதுக்கப்படாது ஒரு குறையே. என்கின்றபோதும் இப்போது நிற்கும் தொகுதியான Pickering-Brooklin இல் அவர் புதிய முகமாக இருந்தாலும் அவர் ஒரு சிறந்த வேட்பாளராக இருப்பாரென்பதே என் கணிப்பு.

ஜூவனிட்டாக்கு இருக்கும் தமிழ் மீதான ஆர்வத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சில வருடங்களாக கல்விபயின்று, கடந்தவருடம் மொழியியலில் முதுமாணிப்பட்டத்தையும் (MA in linguistics. Focus on Dravidian Languages including Tamil) பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


டந்த சனிக்கிழமை அவர் சித்திரை 28,  நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தனது அலுவலகத்தைத் தன் தொகுதியில் திறந்திருந்தார். அவரைப் போன்றவர்கள் அரசியல் களங்களில் வெற்றிபெறுவது நாம் வெற்றி பெறுவதைப் போன்ற மகிழ்வைத் தரக்கூடியது என்பதால், அவரை வாழ்த்துவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்தேன்.

என் நண்பர்களுக்கு என் அரசியல் சார்பு தெரியுமென்பதால், உனக்கு பரவாயில்லையா எனக் கேட்டார்கள். லிபரல் கட்சியை விட, எனக்கு ஜுவனிட்டாவின் அரசியல் வாழ்வு தெரியும்; அவரை நான் சந்திப்பதில் ஒருபோதும் மறுப்பேதுமில்லை என நண்பர்கள் அனைவருமாக அவருக்கு வாழ்த்துச் சொல்லச் சென்றிருந்தோம்.

ஜூவனிட்டா நிற்கும் தொகுதியில், பழைமைவாதக் கட்சிக்கும் வேட்பாளராக பல தமிழர்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவரை ஒருவர் இழுத்து விழுத்தும் நம் தமிழ் கலாசாரத்தால், அவர்கள் அனைவரும் விலக்கப்பட்டு வேற்றின பெண்மணி ஒருவர்தான் இப்போது பழைமைவாதக் கட்சியில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

அப்படி ஒரு பழைமைவாத வேட்பாளரை ஆதரித்து அதற்காய் உழைத்த நண்பர் ஒருவரையும் இச்சந்திப்புக்கு முன்னர் சந்தித்திருந்தோம். அந்த நண்பர் ஜூவனிட்டாவின் தொகுதியில் வாழ்பவர் என்பதால், நீங்கள் ஜூவனிட்டாவுக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டோம். அவரின் பழைமைவாத தமிழ் வேட்பாளர் களத்தில் இல்லாததாலோ என்னவோ, ஜூவனிட்டாவுக்கு வாக்களிப்பேன் என்றார். ஆக, நாம் ஒரு வாக்கை ஏற்கனவே ஜுவனிட்டாவுக்குச் சேகரித்துவிட்டோம் என நினைக்கின்றேன்.

இலங்கையிலோ/இந்தியாவிலோ தேர்தல் நடந்தால், தாங்களே நேரடியாக களத்தில் நிற்பதாக ஆவேசம் காட்டும் புலம்பெயர் தமிழர்கள், தாம் வாழும் நாடுகளில் நிகழும் தேர்தல்களின்போது அவ்வளவாக ஆவேசம் காட்டுவதில்லை. ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் அரசுக்கள் நம் மீது மட்டுமில்லை, நம் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்க்கையையும் பாதிக்கச் செய்வது என்ற உண்மையை உணர்ந்து நல்லாட்சி செய்யக்கூடிய அரசுக்களை தேர்ந்தெடுக்க முன்வரவேண்டும். இங்கே நடக்கும் தேர்தல்களைப் பற்றி இன்னும் விரிவாக உரையாடவேண்டும்; களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும்.

நான் இருக்கும் தேர்தல் தொகுதியில் ஜூவனிட்டா போட்டியிடவில்லையென்றாலும், நேரமும்/காலமும் வாய்க்கும்போது அவரின் தேர்தல் பரப்புரைகளின்போது, தன்னார்வளராக வேலை செய்யும் விருப்பம் இருக்கிறது. ஜூவனிட்டாவின் தொகுதியில் இருக்கும் நண்பர்களை அவருக்கு வாக்களிக்க வேண்டுமென மனமுவந்து கேட்கின்றேன். உங்கள் வாக்கு வீணாகாது நல்லதொரு நாடாளுமன்ற உறுப்பினரையே நீங்கள் தேர்வு செய்கின்றீர்களென்பது உறுதி!


ஜூவனிட்டாவைச் சந்தித்தபோது அவர் 'என்னிடம் நீங்கள் என்டிபி ஆதரவாளர் அல்லவா, எங்கே இப்படி?' என்று வியப்புடன் கேட்டார்.

'அப்படி வேறொரு கட்சிக்கு நீண்டகால ஆதரவாளனாக இருந்தவனை உங்கள் பக்கம் இம்முறை கொண்டுவந்தது உங்களின் நீண்டகால உழைப்பும், சமூகம் சார்ந்த அர்ப்பணிப்பும்' என்றேன்.

எப்போதும் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாது, நல்லவை நிகழும்போது அவற்றை மனமுவந்து பாராட்டவும் பின்னிற்கக் கூடாது. அப்போதுதான் ஆரோக்கியமான அரசியல் சூழலை நாம் உருவாக்க முடியும் என நம்புகின்றேன்.

**********


(சித்திரை 08, 2025)


0 comments: