கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ரைனெர் ரில்க

Monday, May 11, 2026

 

'வசந்தம் வராத காட்டில்  பறவையின் ஓர் அழைப்பு'
தமிழாக்கம்: பிரசாந்தி சேகரம்

***

.ஒருமுறை ஸ்பெயினில் ப்ளமிங்கோ நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய அரங்கு. முன்வரிசை இருக்கை. நடனமாடிய பெண் நுனிக்காலில் தரையை அழுத்தி எழுந்த தருணந்தோறும் என் இதயத்துடிப்பைத் துல்லியமாக உணர்ந்தேன். அவ்வளவு intense & intimate ஆன நடன நிகழ்வு. அந்த ஒன்றரை மணி நடனநிகழ்வைப் பார்த்த அந்த நாள் முழுதும் பரவசத்தின் திளைப்பில் அலைந்தபடி இருந்தேன்.
 

அந்த ஞாபகங்களை அப்படியே தத்ரூபமாக நினைவுபடுத்துவது போன்று பிரசாந்தி தமிழாக்கிய ரில்கவின் 'ஸ்பானிய நடனக்காரி' கவிதை இருந்தது.

"கையில் பிடித்திருக்கும் ஒரு தீக்குச்சி
வெண்மையில் இருந்தது
வெடிக்கும் தீப்பிழம்பாக மாறுமுன்
எவ்வாறு அங்குமிங்கும்
துடிக்கும் நாக்குகளை நீட்டுகிறதோ
அவ்வாறு தொடங்குகிறது
அவளின் நடனம்
பார்வையாளர்கள் சூழ்ந்திருக்க
வேகமும் வெளிச்சமும் வெப்பமும் பரப்பி
சுற்றிச் சுழல்கிறாள் அவள்
....

சட்டென சுற்றிலும் முற்றிலும்
அவளின் எல்லாமும் தீப்பிடிக்கிறது
ஒரெயொரு பார்வையில்
தன் கூந்தலைப் பற்றவைத்து
ஒரு சுற்றில்
திடீரெனத் தனது ஆடை முழுவதையும்
தனித்துவமான ஒரு கவித்துவத்துடன்
அடங்காத் தீயில் விசிறிவிடுகிறாள்
அதிலிருந்து
திடுக்கிட்டு விழித்தெழும்பிய
பாம்புகள் போல
நீள்கின்றன சடசடத்த நிர்வாணக் கைகள்
பிறகு அணையும் தருவாயில்
அந்தத் தீ இருக்கக் கண்டு
மிகுந்த ஆணவத்துடன்
ஆளுமை செழிக்கும் சைகையுடன்
அனைத்தையும் ஒருசேர அள்ளியெடுத்து
வீசியெறிகிறாள்."

என இன்னும் தொடரும் இக்கவிதையைப் பார்க்கும்போது ரில்கவும் நானும் ஒரே நடனத்தைத்தான் வெவ்வேறான கால நீட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோமா என்று எனக்கு இந்தக் கவிதை அவ்வளவு நெருக்கமானது.

ரைனர் ரில்க தமிழ்ச் சூழலில் அவரது கவிதைகளைப் போல, அவரின் 'இளம் கவிஞர்களுக்கு எழுதிய கடிதங்களாலும்' அறிமுகமானவர். அக்கடிதங்களை ரில்க அவரின் இருபதுகளில் எழுதியவர் என்பது மட்டுமின்றி அவரின் இறுதிக்காலம்வரை தொடர்ந்து பல்வேறு மனிதர்களுக்கு கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தவர். ஒருவகையில் பார்த்தால் ரில்கவிற்கு கவிதைகள் மீதிருந்து பித்தைப் போல கடிதங்கள் எழுதுவதிலும் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு கடிதங்களை காதலிகளுக்கு, தோழிகளுக்கு எண்ணிறைந்து எழுதியிருக்கின்றார்.

அநேக கவிஞர்களைப் போல ரில்கவின் வாழ்க்கை தத்தளிப்புக்களால நிரம்பி வழிந்திருக்கிறது. கவிதைகள் எழுதுவதும், பிறகு கவிதைகளை எழுதும் மனநிலையைத் தொலைப்பதும், அதை மீளக் கண்டுபிடிப்பதற்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்பதும் என்று தொடர்ந்து அலைபாயும் வாழ்வை அகமும் புறமாகக் கொண்டவர் ரில்க.

ரில்கவின் கவிதைகளை மேலோட்டமாகப் பார்த்தாலே அவர் எந்தளவுக்கு காதல் கவிதைகளை எழுதியிருந்தாரோ அந்தளவுக்கு தனிமை குறித்தும் எழுதியிருக்கின்றார் என்பது எளிதாகப் புரியும். ரில்க மறைந்து கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகள் கடந்தபின்னும் ரில்க சமகாலத்தில் உயிர்த்தெழுவது அவர் தனிமனிதர்களின் அகவுலகின் தனிமையை அசலாக எழுதிச் சென்றிருப்பதால்தானோ என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகின்றது.

தமிழில் ரில்கவின் கவிதைகள் அவ்வப்போது தமிழாக்கப்பட்டிருந்தாலும், பிரசாந்தி சேகரத்தால் 'வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு' என்கின்ற தொகுப்பில் ரில்கவில் ஒரு நூறு கவிதைகள் ஒரே நேரத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதுதான் தனித்துவமானது. இந்நூலின் முதல் சிறப்பு என்பது ரில்கவின் கவிதைகள் அவர் எழுதிய மூலமொழியான ஜேர்மனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டதாகும்.

ரில்க, காஃப்கா அனைவரும் செக்கில் பிறந்தவர்கள். முதலாம் உலக மகாயுத்ததின் முன் ஜேர்மன், ஆஸ்ரியா, ஹங்கேரி, செக் எல்லாவற்றையும் உலகப்படத்தில் விளங்கிக் கொள்வதென்பது சிக்கல் வரக்கூடியது. ரில்கவோ, காஃப்காவோ செக்கில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவர்கள் ஜேர்மனியர்கள் என்கின்ற அடையாளத்தில் வருபவர்கள். ஒருவகையில் செக்கில்/ஆஸ்திரியாவில் பிறந்த அந்நியர்கள் இவர்கள் எனலாம். எனவேதான் அவர்கள் எப்போது நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்கள் போல ஒரு விடுபட்ட தன்மையோடும், தனிமையோடும் அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் இருந்தார்கள். அது அவர்களின் படைப்புக்களிலும் பிரதிபலித்திருக்கின்றது. எங்கும் வேரூன்ற முடியாத அவதி என  இந்தத் தவிப்பைச் சொல்லலாம்.

அது ஹெர்மன் ஹெஸ்ஸேக்கும், மிலான் குந்தேராவுக்கும் வேறுவகையில் நடந்திருக்கின்றது. ஆகவேதான் ஹெஸ்ஸே சுவிற்சர்லாந்திலும், குந்தேரா பிரான்சிலும் தமது இறுதிக் காலங்களைக் கழித்தவர்கள். ரில்கவும் அப்படித்தான் ஒவ்வொரு நகராக அலைந்து இறுதியில் சுவிற்சர்லாந்தில் போய் அடைக்கலமானவர்.

ரில்கவின் முதல் காதல் லூவுடன் (Lou) தொடங்குகின்றது. ரில்க இருபதின் தொடக்கத்தில் இருக்கும்போது, லூவுக்கு முப்பதுகளின் மத்தி. ஆனால் அந்த மூன்று வருட உக்கிரமான காதல் ரில்க என்கின்ற கவிஞனை ஆளுமையுடையனாக வளர்த்தெடுத்திருக்கின்றது. ரஷ்ய பின்னணியில் இருந்து வந்த லூவால் அன்றைய ரஷ்யாவுக்கு அடிக்கடி ரில்கவினால் பயணிக்கவும் முடிந்திருக்கின்றது.

ரில்கவின் தளும்பும் மனது காதல்களை மட்டுமில்லை, அரசியல் சார்புகளையும் சிக்கலாகவே முடிவு எடுத்திருக்கின்றன. ஒருபக்கம் ரஷ்யப் புரட்சியை வரவேற்றவர், இன்னொருபுறம் முஸோலினியின் பாஸிசம் அந்த நாட்டுக்குத் தேவையென்று இறுதிக்காலத்தில் சொன்னவர்.  இதற்கிடையில் ஜேர்மன் (ஆஸ்திரியா) முதலாம் உலகப்போருக்குப் போனபோது,  படைவீரராகவும் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர். வயதின் காரணமாகவும், எழுத்தாளராக இருந்ததன் நிமித்தமும் இராணுவ சேவையில் இருந்து மிக விரைவில் விடுவிக்கப்பட்டவர். அது பிறகு அவரின் இறுதி பத்தாண்டு காலத்தில் மிகப் பெரும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியதும் என்றும் கூறுகின்றார்கள்.

ரில்க வாழ்க்கையில் இருத்தலியச் சிக்கலையும், இந்த அந்நியப்படுதலையும் தனது காதல்களாலும், பயணங்களாலும் கடந்து வந்தவராக ஒருவகையில் வகைப்படுத்தலாம். சிறுவயதுகளில் பெண்குழந்தை  இல்லாத காரணத்தால் பெண்களின் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தாயாரால் வளர்க்கப்பட்ட ரில்க, காலம் முழுதும் பெண்களின் கதகதப்புக்குள்ளேயே வாழ்ந்து முடித்தவர். மனைவி, காதலிகள், தோழிகள் ரில்கவின் ஆளுமையை மட்டுமின்றி அவரின் கவிதைகளைச் செதுக்குபவர்களாகவும், அவரை வறுமை எட்டவிடாது கனிவுடன் பராமரித்தவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

*

பிரசாந்தி ஜேர்மனிக்கு சிறுவயதிலே சென்றவர். அவருக்கு பத்தாவது வகுப்பிலே ரில்க பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார். பிறகு பல்கலைக்கழகக் காலத்தில் மாலைநேர நண்பர்களின் கவிதை உரையாடல்களில் ரில்க அவருக்கு ஞாபகப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இவ்வாறு ரில்க இளம்வயதில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் பின்னர் ரில்கவின் அசலான ஆவணங்களைத் தேடி மூன்று நாட்கள் தொலைதூர நகருக்குச் சென்று தங்கி நுணுக்கமாகப் பார்க்கின்றார்.

ஒரு படைப்பாளிக்கு இப்படி பிரசாந்தி போல ஓர் அணுக்கமான வாசகர் கிடைப்பது அவர்களின் பெரும்பேறெனச் சொல்வேன். அதிலும் பிரசாந்தியின் பின்னுரையை வாசிக்கும்போது அவர் கிட்டத்தட்ட ஒருதலைக்காதலாக ரில்கவை நேசிக்கின்றாரோ என்றளவுக்கு அவ்வளவு நெருக்கமாக நம்மை உணரவைக்கின்றார்.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு  மொழிக்கு அதன் சாரம் தொலைந்துவிடாது மொழிபெயர்ப்பது என்பது எளிதானதல்ல. அதிலும் கவிதைகளை தமிழாக்குவது என்பது இன்னும் சவாலானது. சிலவேளைகளில் நாம் அந்தப் படைப்பாளிகளில் தோய்ந்து அவர்களின் மூலமொழியில் வாசிக்கும்போது அப்படியொரு பரவசம் உணர்வைத் தரும். ஏனென்றால் நாம் தனித்து ஒரு கவிதையை மொழிபெயர்ப்பதில்லை. நாம் அந்தப் படைப்பாளியின் வாழ்கையில் தோய்ந்தெழுவதால் நமக்கு அவர்களின் ஒவ்வொரு வாக்கியங்களுக்கு அப்பால் தொக்கி நிற்கும் அர்த்தங்கள் தெரியும். ஆனால் சிலவேளைகளில் மொழிபெயர்த்துப் பார்க்கும்போது அது தனியே அந்தக் கவிதையாக வாசிக்கப்படும் ஆபத்து இருக்கின்றது. அல்லது ஏன் இந்த மிக எளிய கவிதையை மொழிபெயர்த்தார் என்று மொழியாக்கத்தை வாசிப்பவர் நினைக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.



சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியை தமிழாக்கும்போது நான் கிட்டத்தட்ட அவரின் அனைத்து நாவல்களையும் வாசித்தும், நிறைய நேர்காணல்களைப் பார்த்தும் முடித்திருந்தேன். எனவே என்னால் அவரின் கவிதைகளின் பின்னால் ஒளிந்து நின்ற அர்த்தங்களை அல்லது இது எதனோடு தொடர்புகொண்டு நிற்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள எளிதாக முடிந்திருந்தது. ஆனால் அதை நான் தமிழ்ப்படுத்தியபோது சிலவேளை மிகச் சாதாரண கவிதைகளாக அதைத் தனித்து வாசிக்கும்போது தோன்றியுமிருக்கின்றது. மேலும் ப்யூகோவ்ஸ்கி அந்தமாதிரி கெட்டவார்த்தைகளைப் பாவிப்பவர். எம்மிடையே இருக்கும் கெட்டவார்த்தைகளை அதற்குப் பாவித்தால் அது ஆங்கிலத்தில் வாசிப்பதுபோல ஒருவகைப் பரவசத்தைத் தராது. இந்தச் சந்தர்ப்பங்களில் நான் ஒரு தோற்றுப்போன மொழிபெயர்ப்பாளராக ப்யூகோவ்ஸ்கியின் முன் நின்றிருக்கின்றேன்.

பிரசாந்தி இந்நூலின் பின்னிணைப்பில் மொழிபெயர்ப்பின் ஒரு புதுப்பரிணாமம் குறித்து உரையாடுகின்றார். ரஷ்ய மொழியாக்கங்களில் அந்த மொழிபெயர்ப்பாளரே இன்னொரு படைப்பாளியாக முகிழும் தருணங்களையும், அதுபோல 'ரில்கவிடமிருந்து', 'ப்ராஸ்டிடமிருந்து' என்று அழைத்து மொழியாக்கங்களைச் செய்வதைக் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்க வேண்டியதொன்று.

மேலும் டொச்சில் ஒரு சொல்லிலே மூன்று அர்த்தங்களை இணைத்து எழுதுவார்கள், அதை எப்படி பிரித்து தமிழில் எழுவது என்கின்ற சிக்கல்களையும் பிரசாந்தி முன்வைத்து இதில் எழுதியிருப்பது சுவாரசியமானது.  நேரடி மொழிபெயர்ப்பில் 'காய்ந்த காடு' என்பதை, 'பூக்காத காடு' என்பதற்குச் சென்று இறுதியில் எப்படி 'வசந்தம் வராத காட்டை' அவர் வந்தடைந்தார் என்பது மொழிபெயர்க்கும்போது நாம் வந்தடைகின்ற பரவசமான தருணங்கள் எனச் சொல்வேன்.  இவ்வாறு 'Silent Spring' என்ற சொல்லுக்கு ஏ.ஜே.கனகரத்ன, 'ஒலிக்காத இளவேனில்' என்கின்ற அழகான தமிழாக்கத்தைக் கண்டுபிடித்தவர் என்பது இந்நேரத்தில் நினைவுக்கு வருகின்றது (இதே பெயரில் 17 ஈழ/புலம்பெயர் பெண் கவிஞர்களின் ஒரு தொகுப்பும் வெளிவந்திருக்கின்றது).

'காதல் கொண்ட பெண்' கவிதையின் ஒரு பகுதி இப்படி வரும்.

'..இருப்பினும்
இலைகள் துளிர்க்கும் இந்தப் பொழுதுகளில்
என்னுள் ஏதோவொன்று விடுவிக்கப்பட்டுள்ளது

அறிந்திராத இருண்ட காலத்திலிருந்த ஏதோவொன்று
அது எளிய கதகதப்பான என் வாழ்வை
யாரோ ஒருவரின்
கைகளில் கொடுத்துள்ளது
நேற்று நான் யாராக இருந்தேன்
என்றறியாத ஒருவரின் கைகளில்'

நாம் ஒவ்வொரு புதிய நேசத்துக்குப் போகும்போது இப்படித்தானே 'நேற்று நான் யாராக இருந்தேன்/ என்றறியாத ஒருவரின் கைகளில்'தான் எமது வாழ்க்கையை ஒப்படைக்கத் தயாராகச் செல்கின்றோம். அதுவே காதலின் அழகும் ஆபத்தும் எனக் கூடச் சொல்லலாம்.

பிரசாந்தி 'வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பை' நேரடியாக ஜெர்மனிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். ஒருவகையில் வசந்தம் வந்துவிட்ட  தமிழ் எனும் பெருங்காட்டிற்கு, ரில்க என்னும் பறவையை பரவசமாக அழைத்துக் கொண்டு அவர் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்.

அந்தப் பறவையின் நூறு பாடல்களை நாம் ஆறவமர இருந்து இனி இரசிக்கலாம்.

***