கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பச்சை தேவதை

Sunday, November 14, 2004

சல்மாவின் 'பச்சை தேவதை'
சில அவசரக்குறிப்புக்கள்

சல்மாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாய் பச்சை தேவதை வந்திருக்கிறது. முதலாவது தொகுப்பு (ஒரு மாலையும் இன்னொரு மாலையும்) பெற்ற கவனத்தை இந்தத் தொகுப்பு பெறவில்லையெனினும் அண்மைக்காலத்தில் வெளிவந்த கவிதைத்தொகுப்புகளில் அதிகம் ஏமாற்றம்தராத தொகுப்பு இதுவென துணிந்து சொல்லாம். சல்மாவின் உலகம் எப்போதும் மனித உறவுகளை அதிகம் கவனித்தபடியே இருக்கிறது. அது வீட்டில் இருந்தால் என்ன, வெளியில் திரிந்தால் என்ன உறவுகளே முக்கிய கவனப்பொருளாகின்றன.


தாய்மை எப்போதும் நிறைவைத்தருவதும், எல்லாத் துன்பங்களிலிருந்தும் பெண்ணை ஆசுவாசப்படுத்தவும் கூடும் என்ற நம்பிக்கைகளை சல்மாவின், இருட்தேர் கேள்விக்குட்படுத்துகிறது. '...என் தாய்மையைத்/ தன் கண்ணீரால் கடைந்து/ திரள்கின்ற பிரியத்தில்/ தம் பங்கை எடையிடுகிற இளம் மனங்கள்/சோர்வின் விதையையே/ ஊன்றினாலும்/ஒடாத தேராய்க் கூடவேயிருக்கிற/இருளின் வடம்பிடிப்பேன்/அவர்களின் துணையோடு...' என்ற வரிகளில் தாய்மையின் வெறுமையையும். அதனூடு நீள்கின்ற விரக்தியையும் படிப்பவரிடையே படியவிடுகிறது. இன்னும், நானில்லாத அவனது உலகத்தில், ஒரு தாய்க்கும், பிள்ளையிற்கும் இடையில் விழும் இடைவெளியையும், பாசத்திற்கான போராட்டமும் பேசப்படுகிறது. '..தனது குழந்தைப் பருவத்தை/ துடித்துக் கடக்கும் அவனும்/ கைப்பற்ற நானும்/ போராட்டத்தினூடே/ கரைகிறது பழைய நெருக்கம்...' காலங்காலமாய் இந்த பாசப்போராட்டம் தாய்மார்களுக்கு இருக்கும் போலத்தான் தோன்றுகிறது. பிள்ளைகள் தமது வளரிளம்பருவத்தை அனுபவிக்கத் துடிக்கின்ற பொழுதுகளில், அதுவரை எல்லாமாக இருக்கும் தாய்மார்கள் இலகுவாய் மறக்கப்படுவதன்/புறக்கணிக்கபடுவதன் வாதையை சல்மாவின் இந்தக் கவிதை பேசுபொருளாக்கிறது.

பெண்கள் உணரக்குரிய வலியை, தனிமையை, 'நிலை', 'விடுபடல்', 'தனித்தொரு பொழுது', 'புழு' போன்ற கவிதைகள் பேசுகின்றன. தனித்தொருபொழுதில், 'கைபிடிச்சுவரில் விழிதீட்டும் ஆந்தையும்', புழுவில், 'தன் உணவை/ என் உடலிருந்தே/ உறிஞ்சியபடி/ என் குரல்வளையை பற்றும்' புழுவும், அவற்றின் உருவங்களை மீறிய வேறொரு வெளியில் அர்த்தம்கொள்வதை முழுக்கவிதையும் வாசிக்கும்போது புரிந்துகொள்ளலாம்.
அதேவேளையில் பெண்கள் மட்டுமே உணர்ந்து எழுதக்கூடிய பல்வேறு விதமான படிமங்கள், காட்சிப்படலங்கள் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் நிரம்பிக்கிடக்கிறது. ஒரு பின்னேரப்பொழுது, 'மாதவிடாய் ஈரம் நிரம்பிக் கனக்கிற பஞ்சைப் போல' கனத்து விடுவதாயும், ஒரு ஆண்குறி, 'எங்கோ துளிர்த்துப் பெருகிய வன்மென நீள்கின்ற'தாகவும் அமைந்து விடுகிறது.
காலம் நகர்ந்துகொண்டிருப்பதாயும், பழசை எல்லாம் அடித்துப்போட்டு போய்விடும் என்பதை, சல்மாவின் வரிகள் மறுக்கின்றன. 'நகர்வதில்லை காலம்/ படிந்து உறைகிறது/ ஒவ்வொன்றின் மீதும்' (காலப்பதிவு ) என்றும், 'உன் அசுத்தங்களை/ அடித்துக் கொண்டுபோக/ இது நதியில்லை/ ஏரி' (ஏரி ) என்றும் எதிர்மறையில் கூறுகின்றது.
முதல்தொகுப்பில் தனிமையை/வலிகளை மிக உக்கிரமாய் பதிவுசெய்ததைப்போலவே இந்தத்தொகுப்பிலும் சல்மாவின் பல கவிதைகள் பதிவு செய்கின்றன. அதிலும். 'இருளில்/ இருப்பதென்பது/ வெறுமனே/ இருளோடிருத்தல் மட்டுமில்லை' (இருளோடிருப்பதென்பது), 'ஒரு மனநோயாளியென/ அறியப்பட்ட உன்னோடு/ இருந்து கொண்டிருக்கும் வேளைகளில்/கனத்துவிடும் என் வாதைகளுக்கு/ உன்னிடத்தான கருணை மட்டுமே/ காரணமெனச் சொல்லமாட்டேன்' (ஒரு மனநோயாளியென அறியப்படும் உன்னொடு), 'உன் ஞாபகங்களை/ நினைவிலேற்றிக்கொளவதென்பது/ பல்லாண்டு காலப் பாலையின் வெம்மையை/ மேலும் தொடரத்தானேயன்றி/ வேறெதற்காகவுமேயில்லை/ (விரியும் பாலை), போன்ற வரிகளில் வெறுமை ததும்பி வாசிக்கும் மனங்களைக் கனக்கச்செய்கின்றது.

பெண்கள், அதிர்ச்சியிற்காகத்தான், பெண்ணுடலை எழுத்தில் பயன்படுத்துகின்றனர் என்று எழும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறமாதிரி, பெண்ணுடல் மீது காலங்காலமாய் நிகழ்த்தப்படும் வன்முறைகளையும், தாம்பத்தியத்தில் கூட ஏற்படும் உறவுகள் சிலவேளைகளில் தவிர்க்கமுடியாத பாலியல் வல்லுறவாக நீட்சிகொள்வதை...'உன்னை நிறுவிடவியலாத/ உன் வருடலில் கிளர்ச்சியுறாத/ இவ்வுடலின் மீது/ பெரும் விருட்சமெனப் படர்கிறது வன்மம்' ( விடியும் பொழுதில்) என்றும் 'இருளின் தடித்த போர்வை கிழித்து/ என்மீது தடுக்கி விழுந்துகொண்டிருக்கும்/ உன் ஸ்பரிசங்களில்/ தளர்வுற்று மயங்கிச் சரிகிறது/ நீ தொடவியலாத தனிமை' ( )ஆகவும், 'தடயங்கள் பதிந்து/ புதைவுண்ட உடலில்/ தோண்டி உயிர்ப்பித்தல் என்பது/ ஒரு கதவைத் திறப்பது போல/ எளிதானதில்லை' ( இரவின் நிழல்கள்) என்றும், 'துணைவேண்டும் இரவொன்றில்/ அடிபடிந்துன்மீது படினென்கிற/கர்வத்துடன்/ மர்மம் பூணும் உன் புன்னகை (உன் நம்பிக்கைகளின் திசைமீறி)என்றும் உறவின் மீதான நம்பிக்கையீனங்களை, வேதனைகைளை சொல்கின்றன சல்மாவின் இந்தக்கவிதை வரிகள்.

இந்தத்தொகுப்பில், 'பயங்கள்', 'எல்லை', 'ஒரு பூ மலர', 'நம் வீடு' போன்றவற்றை வித்தியாசமான வாசிப்புத்தருகின்ற கவிதைகள் என அடையாளப்படுத்தலாம்.
'இன்றும்
என்னை வீழ்த்திக்கொண்டிருப்பது
உன் வலிமையில்லை
உன் பயங்கள்'
இந்த வரிகள் சொல்லும் விடயந்தான், அநேகமான பெண்களின் முக்கிய பிரச்சினையாக, அகமனக் குளத்தில் கல்லெறிந்து உறவுகளில் நம்பிக்கையீனங்களைக் கொண்டுவருகின்றதோ என்று ஒரு கணம் எண்ணவும் தோன்றுகிறது.

2 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

வணக்கம்,பதிவுகளில் உங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.வலைப்பதிவுகளில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
வாருங்கள் நிறைய எழுதுங்கள்.

11/14/2004 07:30:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி ஈழநாதன். நேரங்கிடைக்கும்போதெல்லாம் நிறைய எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

11/14/2004 09:22:00 PM