கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நான் பார்த்த தமிழகம்

Sunday, March 27, 2005

{வியந்ததும், சிலிர்த்தும், திகைத்ததும் பற்றிய சில குறிப்புக்கள்}

(1)
சிறுவயதில் வாசித்த புத்தகங்களிலிருந்து தமிழகத்து நகரங்களும், தெருக்களும் எனக்குள் ஒரு பெருமரமாய் வேர்களைப்பரப்பியபடி இருந்தன. அவை, எனக்கு அருகிலிருந்த ஈழத்தின் ஒழுங்கைளையும், ஊர்களையும் விட மிகவும் பரீட்சயமாயிருந்தன. ஈழத்தின் அழகான பிரதேசங்களான கடலோரங்களையும், மலை சார்ந்த இடங்களையும் பார்ப்பதையும் விட தமிழகத்திற்கே எப்போதேனும் சென்றுவிடவேண்டும் என்றே சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டிருக்கின்றேன். ஈழப்போராட்டம் உக்கிரமாவதற்கு முன்பான பொழுதுகளில் சாதாரண படகுகளிலெல்லாம் தமிழகத்து விரும்பியபோதெல்லாம் ஈழத்திலிருந்து சென்றிருக்கின்றார்கள் என்ற குறிப்புக்களை வாசிக்கும்பொழுதெல்லாம் ஒருவித வியப்பு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. எனெனில் போர், தமிழகத்திற்குப் போவதென்பதை இமயமலையின் உச்சியிற்கு ஏறுவதைப்போல, பிறகு என் வயதொத்தவர்களில் ஏற்படுத்தியிருந்தது.

சென்ற வருடம் எதிர்பாராத ஒரு தருணத்தில் தமிழகத்திற்கான பயணம் வாய்த்திருந்தது. எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணம் சென்னையில் நடைபெற இருந்ததால் அம்மா, அக்கா குடும்பத்தினருடன் கொழும்பிலிருந்து பயணிக்கவேண்டியிருந்தது. ஒரு நள்ளிரவில் கொழும்பில் பயணத்தைத் தொடங்கி விடிகாலைப்பொழுதில் மீனம்பாக்கத்தில் வந்திறங்கியிருந்தோம். பதின்மத்தின் ஆரம்பத்தில் வாசித்த பாலகுமாரனின் 'பயணிகள் கவனிக்கவும்' எனக்குள் மீனம்பாக்க விமான நிலையத்தை பற்றிய நிலையான ஒரு சித்திரத்தை வரைந்திருக்க, ஒரு வித கிளர்ச்சியுடன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தேன். சனநடமாட்டம் அதிகமாகாத தெருக்களில் கார் விரைந்துசெல்ல, ஒரு சிறுவனுக்குரிய குதூகலத்துடன் விழிகள் விரித்தபடி சென்னையை இரசித்தபடி சாலிக்கிராமத்தை சென்றடைந்தேன்.

ஏற்கனவே திருமணத்திற்காய் வந்து நின்ற கூட்டத்தில் (நாங்கள் தான் கடைசியாய் இணைந்துகொண்டோம்) கஷ்டப்பட்டு ஒரிடம் பிடித்து நித்திரையில் கொஞ்சநேரம் ஆழ்ந்திருக்க, அக்கா பாண்டி பஜாரிற்கு போகின்றோம் வரப்போகின்றாயா என்று உலுப்பி எழுப்பினார். எனக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்த வேலையான நித்திரையை விட்டுவிட மனதிற்கு இசைவில்லையாயினும், பாண்டி பஜார் என்ற பெயர் எனது உடம்பில் இரசாயன மாற்றம் (காதலுக்கு மட்டுமா இரசாயன மாற்றம் நிகழவேண்டும்) எதையோ ஏற்படுத்தி உற்சாகத்தைத் தர ஓமென்று அவர்களுடன் புறப்பட்டுச்சென்றேன். கடைகளுக்கு போனால் பெண்களின் நிலவரம் என்னவென்று சொல்லதேவையில்லை, அத்தோடு திருமணத்திற்கான shopping என்றால் சொல்லவும் வேண்டுமா? நானொருவன் மட்டும் ஆணாயிருக்க மிகுதியெல்லாம் பெண்களாய் இருக்க, அவர்கள் ஒரு திருவிழாவாய் கடைகளுக்குப்போவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். என்னுடைய Chemistry பிழைத்துப்போய்விட்டதே என்று வையிரவருக்கு பின்னால் நாய் ஓடிக்கொண்டிருப்பதைப்போல அவர்களும் பின்னால் நானும் அலைந்தபடியிருந்தேன். பாண்டிபஜாரில் ஒரு வெள்ளிக்கடை இருக்கிறதே. கீழே, மேலே, பக்கவாட்டில் என்று எங்கும் ஒரே வெள்ளிமயந்தான். ஒரு குறிப்பிட்ட வயதில் வெள்ளியில் ஆசை மிகக்கொண்டு ஆபரணங்களாய் அணிந்துகொண்டு கனடாவில் திரிந்திருக்கின்றேன் (வீட்டுக்குத்தெரியாமற்தான்). இந்தக் கடைக்குப்போனால் அப்படியே என் முழு உடலையுமே வெள்ளியில் உருக்கி வார்த்துவிடுவார்கள் போல இருந்தது. இனியும் வைரவருக்கு நாய் மாதிரி உங்களுடன் திரியமுடியாது என்று அக்காவிற்கு கூறிவிட்டு ஒரு மூலைக்கடையில் விற்றுக்கொண்டிருந்த அந்த மாதத்து புதிய பார்வையையும், தீராநதியையும் வாங்கிக்கொண்டு வெள்ளிக்கடைக்கு (பெயர் ஞாபகத்திலில்லை) முன் போடப்பட்ட நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டேன். புத்தகங்களை வாசித்துக்கொண்டு கடந்துபோகும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமான விடயந்தானே. You so sweet yah என்று காதலனுடன் உருகிக்கொண்டிருந்த இளம்பெண்ணும், எங்கையோ வேலையில் இருந்த கணவனை வெருட்டிக்கொண்டிருந்த பேரிளம்பெண்ணும் பக்கத்து நாற்காலிகளில் இருந்து செல்போனிக்கொண்டிருக்க நானும் விரைவில் அஷ்டவதானியாகிக்கொண்டிருந்தேன். அதைவிட ஆப்பிள்களையும், மாதுளம்பழங்களையும் மிக நுட்பமான வியாபாரத்தந்திரங்களுடன் விற்றுக்கொண்டிருந்த இரண்டு நடைபாதை வியாபாரிகளையும் இரசித்துக்கொண்டு திருவிழா எப்போதாவது முடியட்டுமென்று இப்போது சலிப்பின்றி வேடிக்கை பார்கத்தொடங்கியிருந்தேன். பிறகு, எங்களுடன் வந்த ஒரு Group உற்சாகமேலீட்டால் சரவணா storesற்கு (யாரோ பாண்டிபஜாரில் பொருட்கள் வாங்கும்போது அங்கே நல்லபொருட்கள் வாங்கலாம் என்று நமது பெண்களுக்கு சொல்ல) ஓட்டோ பிடித்து ஓடிவிட்டதால் ஒருமாதிரி எல்லோரையும் ஒன்று சேர்ந்து வாகனத்தில் பசியோடு வீடு திரும்பினோம்.

சில மாதங்களாய் வெயில் உருக்கிக்கொண்டிருந்த சென்னையில், நான் சென்ற நாளிலிருந்து நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இந்த விடயத்தை ஒரு அவதானமாய் அங்கு பழக்கமான நண்பர்கள் சொன்னபோது, 'நல்லார் ஒருவர் சென்னை வரல் அவர் பொருட்டெல்லார்க்கும் பெய்யும் மழை' என்று எனது வரவை 'கொஞ்சம்' உயர்வு நவிற்சியாய் சொல்லி அவர்களுக்கு கடுப்பேத்திக்கொண்டியிருந்தேன். அப்படியே யாராவது சென்னை எப்படியிருக்கிறது என்று கேட்டபோதெல்லாம், 'சென்னையில் ஒரு மழைக்காலம்' என்றுதான் 'கவித்துவமாய்' கூறியுமிருக்கின்றேன். (இதை வாசிக்கும் தமிழகத்து நண்பர்களுக்கும் மற்றும் முதல்வருக்கும் ஒரு வேண்டுகோள், தண்ணீர் பஞ்சம் வந்து நீங்கள் கஷ்டப்பட்டால் என்னை இலவச விமானச்சீட்டுத் தந்து அழைத்தால் உங்களுக்கு மழை உத்தரவாதம் என்றும் சொல்லிக்கொள்கின்றேன்.)

எங்களுடன் இலண்டனிலிருந்து வந்த உறவினன் ஒருவன் இருந்தான். வந்த அன்றிரவே நாங்கள் இரண்டுபேரும், மற்ற ஆக்களுக்கு தெரியாமல் chicken 65 வெட்டுவது என்று திட்டமிட்டோம் (திருமண சமயத்தில் அசைவம் சாப்பிடுவதில்லை என்று ஒரு 'சம்பிரதாயம்' எங்கடை சனங்களுக்கு). மாலை மங்கி, வெப்பமும் தணிந்து இரவு திரையிட்ட பொழுதில், சன நடமாட்டம் குறைந்த ஒரு கடையில் போய் உட்கார்ந்து Chicken 65, பரோட்டா (நம்ம ஊரில் அது, கொத்துரொட்டி) என்று ஒரு பிடிபிடித்தோம். நாம் பேசிய தமிழ் பிடிபட அந்தக்கடையின் ஊழியர்களுக்கு கடினமாயிருந்தபோதும், மிகவும் அன்புடன் என்னவெல்லாம் வேண்டும் என்று பொறுமையாய் கேட்டு இனிதாய் உபசரித்தார்கள். அப்படியே இரண்டு பார்சல்கள் கட்டித்தரச்சொல்லி தங்கி நின்ற இடத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றோம். அதற்குக் காரணம் ஒன்றிருந்தது. திருமணத்திற்காய் வந்த உறவுகளில் இரண்டு உறவுக்காரப்பெண்கள் இருந்தார்கள். இந்தப் பெண்ணை நீயும், மற்றப்பெண்ணையும் நானும் காதலிக்க வைப்பது என்று கையெழுத்தில்லாத ஒரு சமரச உடன்படிக்கையை நானும் அந்த உறவுக்காரனும் செய்திருந்தோம். ஒரு திருமணத்திற்காய் வந்தவர்கள் மூன்று திருமணங்களைச் செய்துவிட்டு திருப்பினால், உறவுகளுக்கு செலவு குறையுமே என்ற எமது நல்ல எண்ணந்தான் இதற்கு காரணம். ஒரு மாதிரியாக ஒளித்துக்கொண்டு போய் chicken 65 ஐயும், பரோட்டாவையும் மொட்டை மாடியில் வைத்துக்கொடுத்துவிட்டு, அந்தப்பெண்களிடம் கதைக்கத் தொடங்கினோம். அவர்களும் Chicken Wingsஐ கடித்துக்கொண்டு, 'எங்களுக்கு வெளிநாட்டிலை இருக்கின்ற பெடியங்களை திருமணம் செய்யப்பிடிக்காது, அவங்கள் அங்கே செய்யிற குழப்படியெல்லாம் செய்துவிட்டு இங்கை வந்து girlsஐ marry பண்ணிக்கொண்டு போறாங்கள்' என்று எமது ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டார்கள். ச்சீய் இந்தப் பழம் புளிக்கும் என்னைத் தேற்றியபடி ஒரு காதலின் தோல்வியை அந்த மொட்டை மாடியிரவில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்களுக்கு நான் காணிக்கை செய்தேன்.

ஆனால் மொட்டை மாடி, மழையைச் சென்னைக்கொண்டு வந்த இந்தப்பெடியனைக் கைவிடத்தயாரில்லை. அடுத்த நாள் முன்னிரவில் நானும் அந்த உறவுக்காரப் பையனும் மொட்டை மாடியில் இருந்து கதைத்துக்கொண்டிருக்கும்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. தென்னை மரங்கள் கிளை விரித்திருந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் (நான் சூட்டிய பெயர் சென்னைத்தேவதை) கைகளை அசைத்தபடி நடமாடிக்கொண்டிருப்பதை மொட்டைமாடியின் விளிம்பிலிருந்து கண்டேன். என்னடாப்பா, பிள்ளைக்கு ஏதோ மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டதோ என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் தெரிந்து, புத்தகத்திலிருப்பதை மனப்பாடம் செய்வதற்காய் அந்தப்பெண் இப்படியொரு அவஸ்தையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என்று. எப்படியோ சென்னைத்தேவதையின் கவனத்தை ஈர்த்து நானொருத்தன் மாடியில் நிற்பதைப் பார்க்கவும் செய்துவிட்டேன். பிறகு மொட்டை மாடி எனக்கு வீட்டுக்குள் போய்க்கொண்டிருந்த FTVஐ விடவும் சுவாரசியமாக போய்விட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு சென்னைத்தேவதை படிப்பதற்காய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வருவதும், நானும் அந்தநேரங்களிலெல்லாம் மொட்டை மாடிக்கு வந்துவிடுவதும் நிகழ்ந்துவிடும் (மகள் ஏனிப்படி குறிப்பிட்ட நேரங்களில் எல்லாம் வெளியே புத்தகத்தோடு வருகின்றார் என்று சந்தேகப்படாத சென்னைப்பெண்ணின் தாயார் நீடுழி வாழ்க). எத்தனை முறைதான் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் பார்வைகளால் பேசிக்கொண்டிருக்க முடியும்? ஒரு நாள் நேரடித்தாக்குதலில் இறங்குவதென்று உறவுக்காரனையும் கூட்டுக்கொண்டு அந்தப்பெண் இருந்த தெருவிற்கு இறங்கிப்போனேன். ஆனால் நான் இறங்கிய நேரத்தில் ராகுவோ கேதுவோ சனியனோ இருந்திருக்க வேண்டும். விதி தன் பகடைக்காய்களை இரண்டாம் தடவையாக உருட்டத்தொடங்கிவிட்டது. நாம் அந்தப்பெண்ணின் இடத்தை அடைந்தபோது அவரது தகப்பன் வீரப்பத்திரசாமி மாதிரி பெரிய மீசையோடு வீட்டு முகப்பில் நின்றுகொண்டிருந்தார். எனக்கு காதலினால் வரும் படபடப்பைவிட அவர் ஏதாவது திருப்பாச்சி அரிவாளை உருவிவிடுவாரோ என்ற பதைபதைப்புத்தான் கூடிவிட்டது. (வாசிப்பவர்களுக்கு என் உணர்நிலை விளங்கவில்லையென்றால், 'காதல்' படத்தில் தன்னை பின் தொடரும் நாயகனை, தன் தந்தையைக் கூட்டிக்கொண்டு ஜஸ்கிறிம் வாங்கிக்குடித்து பயமுறுத்தும் நாயகி வரும் காட்சியை நினைவுபடுத்தவும்). சரி இனியெதுவும் பேசமுடியாது என்று தொடர்ந்து நடந்துகொண்டிருந்தால், அந்தத் தெரு இரண்டு வீடுகள் தாண்டியவுடன் முடிந்துவிட்டது. அட, ஈழத்தில், கனடாவில் இழக்காது பத்திரமாய் வைத்திருந்த உயிரை சென்னையில் காவு கொடுக்கவேண்டிவரப்போகின்றதே என்ற பயம் எனக்குள் வந்துவிட்டது. நாங்கள் அந்தப்பெண்ணின் வீட்டைக் கடந்துபோகமுன்னரே, எங்களது நடை, அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டே நாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று பெண்ணின் தந்தையாருக்கு நன்கு விளங்கியிருக்கும். தெருவும் முடிந்து இனி உடனே திரும்பிப்போனால், நிச்சயம் எங்களின் குழப்படி அவருக்கு தெரியாமற்போகாது என்பது நிச்சயம். அப்போதுதான் எனது உறவுக்காரனுக்கு ஆறறிவு விழித்துக்கொள்ள, முறைத்துக்கொண்ட அந்தப்பெண்ணின் தந்தையிடமே நேரே சென்று (சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட, சண்டைக்காரனின் காலில் விழுவது உத்தமம் என்று லண்டனிலும் சொல்லிக்கொடுத்திருக்கின்றார்கள் போலும்), 'நாங்கள் சென்னைக்குப் புதிது, எப்படி காவிரி கோனரிற்குப் போவதென்று சொல்லமுடியுமா' எனது cool யாய் கேட்டு எனது உயிரை மீளவும் கொண்டுவந்து தந்தான். சென்னைத்தேவதை அப்பாவியாய் எங்கள பரிதாப நிலையைக் கண்டு கொடுப்பிற்குள் சிரித்திருப்பார் என்றெல்லாம் உங்களுக்குச் சொல்லதேவையில்லை.

சில நாள்களின் பின் பாடசாலை ஆரம்பிக்கப்போவதால், உறவுக்காரன் லண்டனுக்குப் புறப்பட்டுப் போய்விட்டான். பிறகு எனது மொட்டைமாடிப் பொழுதுகள் நீண்டபோதும், கீழே சென்று, அந்தப்பெண்ணோடு கதைக்கும் ஆசை போய்விட்டது. அத்தோடு தனியே மொட்டை மாடியில் நேரங்கழிப்பதைப் பார்த்த எனது அக்காவிற்கும், மாமாவிற்கும் கொஞ்சம் சந்தேகமும் வர அடிக்கடி மேலே வந்து security guard வேலை அவர்கள் செய்யத்தொடங்கிவிட்டனர். இருந்த ஒரு மகளையும், எனக்கு கட்டிக்கொடுக்காது (என்னை விட மகளுக்கு வயதுகூடத்தான்) யாரோ ஒருவருக்கு கட்டிக்கொடுத்துவிட்டு, இப்போது உளவாளி வேலையும் பார்ப்பது நியாயந்தானோ என்று மாமாவிடம் கேட்க ஆசையிருந்தாலும், பெரியோரைக் கனம்பண்ணுதல் என்ற நல்லதொரு கொள்கையினால் இதை நான், அவரிடம் கேட்கவில்லை.

(2)
ஒரு மத்தியான பொழுதில் ஸ்பென்சர் பிளாசாவுக்கு நானும், உறவுக்காரனும் (லண்டனுக்குப்போகமுன்னர்), அந்த இரு இளம் பெண்களும் ஓட்டோவில் புறப்பட்டோம். ஆட்டோக்காரருடன் மிகவும் பம்பலடித்துக்கொண்டு ஸ்பென்சரில் போயிறங்கினோம். ஓட்டோக்காரரும் சென்னையில் பார்க்கவேண்டிய மற்ற இடங்களையும் விரிவாக எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். ஸ்பென்சர், நாம் போயிருந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெல்லிய இருட்டிலும், வெக்கையிலும் புழுங்கிக்கொண்டிருந்தது. என்னதான் என்றாலும், நாலைந்து தமிழ்ப்புத்தகங்கள் வாங்காமல் வருவதில்லையென்று லாண்ட்மாக்கில் 5%ற்கும் குறைவான இட ஒதுக்கீட்டில் ஒரு மூலையில் முடங்கிக்கிடந்த தமிழ்ப்பகுதியை தேடி ஐந்தாறு புத்தகங்களை தேடி எடுத்தேன். பிறகு நானும் ஒரு பெண்ணும் ஒரிடமும் உறவுக்காரனும் மற்றபெண்ணும் இன்னொரு இடத்தில் என சனநெரிசலில் தவறுப்பட்டு தேடிக்கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்தோம் (அன்றிரவே உறவுக்காரனுக்கு இலண்டனுக்குப் போகவேண்டியிருந்தது). இடையில் அண்ணாசாலையால் வரும்போது 'அண்ணாசாலையில் சென்னை அண்ணாசாலையில், ஒரு ஏழு வர்ண வானவில்லைப் பார்த்தேன்' என்று உரத்துப் பாடி, ஆட்டோக்காரரையும், வெளியில் போய்க்கொண்டிருந்தவர்களையும் கொஞ்சம் முழிக்கவைத்தோம்.

ஏ.வி.எம்மில் சுழலும் பூமிப்பந்தைத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அருகில்தானே இருக்கிறது என்று ஒரு மாலைப்பொழுதில் நடந்துபோய் பார்த்தால், மிகச்சிறிய உருண்டையில் உலகம் இருந்ததைப் பார்த்து சரியான ஏமாற்றமாயிருந்தது. அப்படியே பக்கத்தில் திருப்பாச்சி சூட்டிங் நடப்பதை அவதானித்தபோதும், நான் உள்ளே போனால் இயக்குநனர் விஜயை விட்டுவிட்டு என்னை த்ரிஷாவுடன் ஆடச்சொல்லிவிடுவோரோ என்ற பயத்தில் நான் உள்ளே போய் சூட்டிங் பார்க்கவில்லை. திருவள்ளுவர் கோட்டம் பார்க்க விருப்பமிருந்தும், ஒரு தமிழக நண்பர் அது நன்கு இப்போது பராமரிக்கப்படுவதில்லை என்று சொல்ல அந்த ஆசையை நிறைவேற்றமுடியாமல் போயிவிட்டது. அவ்வாறே கோயம்பேடு மார்க்கட்டையும், பஸ் ஸ்டாண்டையும் (அக்கா சொன்னார் ஆசியாவில் இது இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய பஸ்தரிப்பு நிலையம் என்று, தகவல் சரியா தெரியவில்லை) முழுதாக ஆறுதலாகச் சுற்றிப்பார்க்க முடியாமல் போய்விட்டது. அம்மா மற்றும் வந்திருந்த உறவுக்காரர் எல்லாம் திருப்பதி இன்னபிற கோயில்களுக்கு செல்ல, நான் மொட்டைமாடியை விட்டுப்பிரிய மனமில்லாததால், அக்காவோடு நின்று அவரது குழந்தையை day care செய்வதாய் சொல்லி தங்கிவிட்டேன்.

(3)



ஒரு விடிகாலைப்பொழுதில் மகாபலிபுரத்திற்கு போனோம். அந்த நெடும்வீதியில்தால் சூர்யா 'காக்க காக்க' பாடலை Qualisல் ஆடிப்பாடினார் என்று டிரைவர் அண்ணா சொல்ல, நானும் என்னை சூர்யாவாய் கற்பனை செய்துகொண்டு ஜோதிகா எங்கையாவது தெருவில் நிற்கின்றாரோ என்று தேடிக்கொண்டு மகாலிபுரம் போய் சேர்ந்தேன். ஒரளவு அதிகாலையில் போனதால் மிகக்குறைவாக மக்கள் இருந்தார்கள். கடற்கரை மிகவும் அழகாகவிருந்தது (ம்..ட்சுனாமி வந்து எவ்வளவு சேதத்தை உண்டுபண்ணியதோ?). பிறகு சிற்பங்களை இரசிக்கப்போனோம். இத்தனைகாலமும் ஒரு கனவாய் இருந்ததை நெருங்கிப்பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியிற்கு அளவேயில்லை. ஆற அமர நெடுந்தூரம் நடந்து எல்லாம், சிற்பங்களையும் கோயில் மாதிரி அமைப்புடன் இருந்த கட்டடங்களையும் பார்த்தோம். பல்லவர் காலத்திலிருந்தே ஓய்ந்துவிடாத உளியின் சத்தம் இன்னும் அங்கே சிலைகள் செய்துகொண்டிருப்பவர்களிடம் தொடவதைக் கண்டேன். எவ்வளவு அற்புதமாய் சிலைகள் எல்லாம் செதுக்கிக்கொண்டிருக்கின்றார்கள். பிள்ளையார் எல்லாம் கம்பியூட்டருடன் இருப்பதைப் பார்க்கும்போது இவர்களது உழைப்பும் சரியான வழியில் அடையாளாங்காட்டப்படாததால் ஒருவித சமரசத்திற்கு வந்துவிட்டார்கள் என்ற நிஜத்தின் கொடுமை புரிந்தது.



பிறகு அப்படியே செஞ்சியினூடாக போய்க்கொண்டிருக்கும்போது, உயர்ந்து நின்ற செஞ்சி மலைக்கோட்டை ஒரு காலத்தைப் பிரதிபலித்தபடி நின்றது கண்ணில் தெரிந்தது. அதில் ஏறிப்பார்க்க ஆவல் இருந்தாலும் ஒரு நாளிலேயே காஞ்சிபுரம் வரை போய் சென்னை திரும்பும் எண்ணம் இருந்ததால் சாத்தியமாகவில்லை. புளியமரங்கள் நிரையாக நின்ற வீதியும், பசுமை விரித்த வயல்களும் செஞ்சிக்கு அழகு கொடுத்தன. இடையில் இறங்கி வயலில் நின்று படமும் எடுத்துக்கொண்டோம். வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் 'கவனம் பார்த்து நடவுங்கள் முள்ளுவேலி ஆடுகளுக்காய் போடப்பட்டிருக்கிறது' என்று பரிவோடு சொன்னார்கள். வயலும், சற்றுப்பாழடைந்த மாதிரி இருந்த கிணறும் எங்கள் ஊரை நினைவுபடுத்தியது. ஊரில், சிறுவயதில் அம்மாவோடு புல்லுப் பிடுங்குவதறகாய் சென்ற வயல் எல்லாம் நினைவில் வந்துபோயிற்று.



அப்படியே திருவண்ணமலையைப் போய்ச்சேர்ந்தோம். அந்தக் கோபுரங்களின் உயரத்தை எவர் பார்த்தாலும் ஒரு கணமாவது வியக்கத்தான் செய்வர். இதுவரைகாலமும் மாவிட்டபுரக்கோபுரத்தை பெரிதாக நினைத்த என்னை நான்கு திசைகளிலும் விரிந்த கிடந்த திருவண்ணாமலைக் கோபுரங்கள் திகைக்க வைத்தன. அதைவிட உள்ளே அமைந்திருந்த தீர்த்தக்கேணிகளும் (ஆனால் பராமரிப்பற்று இருந்தன) அந்த சூழலுக்கு மிகவும் இரம்மியத்தைக் கொடுத்திருந்தன. திருவண்ணாமலைக்கு போவது என் நெடுங்காலக் கனவாய் இருந்தது. யோகி ராம்சுரத்குமார் உயிருடன் இருந்தகாலங்களில் எப்படியாவது ஒருமுறையாவது திருவண்ணமலைக்கு சென்றிடவேண்டும் என்ற ஆசையிருந்தது. இன்றைய பொழுதில் என மன சஞ்சலங்கள், கவலைகள் என எதுவந்தாலும் நான் மனத்திரையில் கொண்டுவருவது யோகி ராம்சுரத்குமார்தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நம்பிக்கை மாதிரி எனக்கு அவர். இன்றும் எனது அறையில் சுவாமிப்படங்களைவிட அவரது படத்தைத்தான் படுக்கைக்கருகில் வைத்திருக்கின்றேன். திருவண்ணாமலையில் வந்ததற்கு ஆகக்குறைந்தது யோகி ராம்சுரத்குமாரினதும், ரமண மகரிஷியினதும் சமாதிகளைப் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரம் போதாததால் அவற்றையெல்லாம் பார்க்கமுடியாது போய்விட்டது. மதியப்பொழுதில், சரவணபவனில் Chicken 65 போல brocolli யில் செய்த சைவ உணவும் மிகவும் உருசியாகவிருந்தது. இப்படித்தான் மச்சாளின் திருமணப்பொழுதில் தமிழகத்து சாப்பாட்டை நல்லாய் வெட்டு வெட்டினேன். பன்னீர்கறியின் சுவைக்காய் இன்னொரு முறை கட்டாயம் தமிழகம் போகத்தான் வேண்டும். நாங்கள் சாப்பிடுவதைப் போலன்றி தமிழகத்தவர் வேறு மாதிரி சாப்பிடுபவர்கள் என்று சி.புஷ்பராஜாவின் 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' வாசித்தபோது பிறகு அறிந்தேன். நாங்கள் எல்லாக் கறிகளையும் ஒரே நேரத்தில் பிசைந்து சாப்பிடத்தொடங்கிவிடுவோம். தமிழகத்து வாசிகள் ஒவ்வொரு கறிகளுடன்தான் சாப்பிடுவார்கள். இப்படி தமிழகத்தில் ஒரேநேரத்தில் கறிகளைப் பிசைந்து சாப்பிடுபவர்கள் நரிக்குறவர் இனம் மட்டுந்தான் என்று பிறகு கேள்விப்பட்டேன். பரவாயிலலை நாங்களும் ஏதோ ஒருவிதத்தில் நாடற்றவர்களாய், நாடோடிகளாய் இருப்பதால் இப்படிச் சாப்பிட்டால் தவறில்லை என்று யார் கேட்டாலும் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். (வாசிக்கும் நண்பர்கள் பயப்பிடவேண்டாம் அடுத்தமுறை வரும்போது அப்படிச் சாப்பிட பழகிக்கொண்டு வருகின்றேன்).



இறுதியில் காஞ்சிபுரத்தில் சில கோயில்களுக்குச் சென்றோம். பிறகு பெண்கள் காஞ்சிபுரத்தில் புடைவைகள் பார்க்க கடைகளுக்கு ஏறியிறங்கத் தொடங்கிவிட்டார்கள். கடைக்காரர்கள் கையால் நெய்வதற்கும் மெஷினால் நெய்வதற்கும் இடையிலுள்ள வித்தியாசங்களையெல்லாம் விளங்கப்படுத்தினார்கள். நானும், எதிர்காலத்தில் வரப்போகும் துணைக்காய என்ன கலரில் புடைவை வாங்கலாம் என்று கனவு கண்டுகொண்டு அவர்களின் பின் வழமைபோல அலையத்தொடங்கினேன்.

திருமண விசயத்திற்காய் வந்தததாலும், உறவுக்காரர்கள் நிரம்ப இருந்ததாலும் அதிக இடங்களுக்குப்போகவில்லை. பக்கத்திலிருந்த பெசண்ட் நகர் பீச்சிற்கோ அல்லது அசோக் நகரிலிருந்த உதயம் தியேட்டரில் ஒரு படமோ பார்க்கவில்லை என்பது மிகவும் சோகமான விடயந்தான். பாண்டிச்சேரிக்கும் (அய்யோ நீங்கள் நினைக்கின்ற விடயத்திற்கு அல்ல) கேரளாவிற்கும் போகாததும் மற்றொருபுறத்தில் கவலைதான். அதிலும் தமிழகத்தில் சந்தித்தவர்கள் எல்லாம், ஈழத்தவரின் பல விடயங்கள் (தேங்காய்ப்பூச்சாப்பாடு உட்பட) கேரள மக்களோடு ஒத்துக்கொள்ளப்போக்கூடியதென்று சொன்னதை, நேரில் சென்று அவதானிக்கமுடியாது போய்விட்டது. சிலவேளைகளில் ஆலப்புழையிலோ வேறெங்கோ கோபிகா போல ஒரு பெண் எனக்காய் வீணையை வாசித்துக்கொண்டு காத்திருந்திருக்கவும்கூடும் என்பதை நினைத்தால் இன்னும் நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது. பரவாயில்லை, இன்னொரு தமிழகப்பயணம் சாத்தியப்படாமலா போகப்போகின்றது. அடுத்தமுறை போனால், நிறைவேறாத ஆசைகளைப் பூர்த்தி செய்வதுடன், பிரியமுள்ள பல வலைப்பதிவு நண்பர்களையும் சந்திக்கமுடியுந்தானே. ஆகா இந்தக்கனவை இன்றிலிருந்து ஒரு செடியைபோல வளர்ப்பது கூட மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய்த்தானிருக்கிறது.

{எவரெவரோ எல்லாம், அவருக்கு இவருக்கு என்று சமர்ப்பணம் செய்யும்போது, இந்தப்பயணக்குறிப்பை சென்னையில் நின்ற வாரம் முழுதும் பரவசமான நிலையில் என்னை வைத்திருந்த சென்னைத்தேவதைக்கு காணிக்கையாக்குகின்றேன். நேரங்கனிந்தால், 'சென்னைத்தேவதையும் மழைக்காலமும்' என்று செல்வராகவனின் '7/G ரெயின்போ காலனி' போல மொட்டைமாடியைப் பின்னணியாகக்கொண்டு ஒரு திரைப்படத்தையும் எடுத்து அந்தத் தேவதைக்கே காணிக்கையும் செய்வேன் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.}

I'M ARMED AND I'M EQUAL

Wednesday, March 23, 2005

{Arular By M.I.A}

இந்தப்பொழுதில், இசையின் தூறல் மெலியதாய் கணணியில் கசிந்தபடியிருக்கின்றது. Metalic குரலும்,அற்புதமான beatsம் இணைந்த *மாயா அருட்பிரகாசத்தின் (a.k.a M.I.A) 'அருளர்' இசைத்தட்டு இதமாய் மனதை நனைக்க, இரவு இனிமையாக விரிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்டு, அகதியாய் அந்நியப்பட்டு, தனது சொந்தமண்ணைத் துறக்கவும் முடியாமல் அவதிப்படும் ஒரு பெண்ணின் வாழ்வு பின்னணியில் மங்கலாய்த் தெரிய, பாடல்கள் இன்னமும் நெகிழ்வூட்டுகின்றன.



மாயா, திரைப்படம், ஒளிப்பதிவு சம்பந்தப்பட்ட முறைசார் கல்வியை ஒரு கல்லூரியில் கற்று பட்டமும் பெற்றவர். பிறகு ஒரு இசைக்குழுவின் பயணத்தின்போது, அவர்களின் இசைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவுசெய்யப்போய், இசையின்பால் ஈர்க்கப்பட்டு இன்றொரு முக்கிய இசைக்கலைஞியாகிவிட்டார். 2003ல் முதல் முதலில் வெளிவந்த Galang பாடல்மூலம் பிரித்தானியாவிலுள்ள இரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். அந்தப்பாடல் குழுக்களின் வன்முறையை, "shot gun get down get down/ Too late you down, d-down" என்றும் "Don't let'em get to you if he's got 1 you get 2" எனவும் பாடுபொருளாக்குகிறது. ரேடியோக்கள், தொலைக்காட்சிகள் எதிலும் அதிகம் ஒளி/ஒலிபரப்படாதுவிட்டாலும், மாயாவின் பாடல் இணையத்தின் மூலம் மிக விரைவில் பிரபலமாகின்றது. இந்தியா, மேற்கிந்திய நாட்டவர்களின் நடன அரங்கங்களை இந்தப்பாடல் நிறைக்க, தனது முதல் single ஆல்பத்தை வெளியிடுகின்றார். பிறகு, பலரால் பாராட்டவும், விமர்சிக்கவும்பட்டதுமான பாடலான, Sunshowers பாடலை மாயா எழுதுகின்றார். இது ஒரு முஸ்லிம் தற்கொலைப் போராளியைப் பற்றிக்கூறும் பாடல். அதிகாரத்திற்கு எதிராக அறைகூவல்விடும் வரிகள் அதில் இருக்கின்றது. "You wanna go?/ You wanna war?/ Like P.L.O I don't surrender" என்றும் "Beat heart beat/ he's made it to the newsweek/sweet-heart seen it/he's doing it for the people" என்று இறந்துப்போகின்றவனை பரிகசிக்காமல், பரிவுடன் பார்க்கின்றார் மாயா. இந்தப்பாடலில் இடையில் எப்படி ஒருவர் முஸ்லிமாய் இருப்பதால் சித்திரவதை அனுபவிக்கிறார் என்று
"Semi-9 and snipered him
on that wall they posted him
they cornered him
and then they just murdered him

he told them he didn't know them
he wasn't there they didn't know him
they showed him a picture then:
"Ain't that you with the MUSILMS?"
எதற்கும் பயப்பிடாமல் தனக்கு நியாயமாய் தெரிவதை தன் பாடல்களில் மாயா முன்வைக்கின்றார்.

இந்த பாடல்களிலுள்ள கூர்மையான வசனங்களைப்போலவே, ஒருவிதமான காந்தக்குரலில் நன்றாகப் பாடவும் செய்கின்றார். இந்த இரண்டு பாடல்களும் கொடுத்த வரவேற்பினைப் பார்த்தபின் பலர் மாயாவின் ஒரு முழுத்தொகுப்பான இசைத்தட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்று விமர்சனங்களை வாசிக்கும்போது தெரிகின்றது. இடையில் அவருடைய b/f ஒருவர், தனது beatsயை மாயா திருடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டியதால் சென்ற ஆண்டே வரவேண்டிய தொகுப்பு, பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இப்போதுதான் வெளிவந்திருக்கின்றது.



'அருளரில்' பதின்மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று skits (தமிழில் எப்படிச்சொல்வது?) தவிர்த்து பார்த்தால், பத்து முழுமையான பாடல்கள் இருக்கின்றன. இரண்டாம் பாடலான Pull up the peopleல், மிகவும் விமர்சிக்கப்பட்டதான, "I've got the bombs/ To make you blow" என்ற வரிகள் வருகின்றது. இதைவிட, "Every gun in a battle is a son and daughter too" என்றும், I'm a fighter/ fighter god என்றும் வருகின்றது. இதை பல விமர்சகர்கள் ஈழப்போராட்டத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படுத்தித்தான் எழுதியிருக்கின்றார்கள். மாயா ஒரு நேர்காணலில் கூறியது நினைவிற்கு வருகின்றது. ஈழப்போர், இந்தியாவில் அகதி முகாம் வாழ்க்கை என்ற பாதிப்பில் வெறுப்படைந்து, தான் முற்று முழுதாக ஒரு மேலைத்தேயத்துக்காரியாக மாறி பல வருடங்களாக இருந்ததாகவும், பிறகு, தன்னைப்போல அதிஸ்டமில்லாது போரிலிருந்து தப்பிவர முடியாத குழந்தைகளை நினைத்துப்பார்த்தபோதுதான் தனக்கு தனது வேரும் அடையாளமும் மிக அவசியம் என்ற உணர்வு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார். அதையேதான் ஒரு பாடலில், "I got brown skin/ but I'm a west Londoner,/educated but a refugee still..." என்று தன்னை உலகிற்கு பிரகடனப்படுத்துகின்றார். போரின்/வன்முறையின் பீதியை Bucky Done Gun என்ற பாடலின்,
"They're comin through the window
They're comin through the door
They're bustin down the big wall
And sounding the horn"
என்று மாயா சொல்கின்றார். ஆனால் இறுதியில், "I'm armed and I'm equal" என்று கதவை, சாளரத்தை, சுவரை உடைப்பவர்களைப் பார்த்து திருப்பிக்கேட்கவும் செய்கின்றார் (இன்னொருவிதமாய் பெண்ணிற்கெதிரான ஆணின் வன்முறையாகவும் இந்தப் பாடலை வாசிப்புச்செய்யலாம்). பத்து டொலர் பாடலில் intro தமிழில் வருகின்றது (கிட்டத்தட்ட தமிழ் பாடலைப்போலவே பின்னணியும் இருக்கின்றது). இந்தப்பாடல் ஒரு சின்னப் பெண்ணை, விலைமாதராக மாற்றும் சமூகத்தின் கேடுகெட்ட நிலையை எடுத்துக்கூறுகின்றது. பத்து டொலர் தந்தால் நீ என்னவும் செய்யலாம் என்று ஒரு விலைமாதின் ( "What can I get for ten dollar/ everything you want/anything you want") குரலாய் அந்தப்பாடல் ஒலிக்கின்றது. மேலைத்தேயத்தின் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ("Need a Visa? Got with a geezer/ Need some money/ Paid him with a knees-up") என்று நக்கலடிக்கவும் தவறவும் இல்லை.



Hombre, Amazon ஆகிய இரண்டு பாடல்களும் காதலையும், காமத்தையும் பேசுகின்றன. Hombreல், "Take my number call me/I can get squeaky/So you can come and oil me/My finger tips and the lips/ Do the work yeah" என்று கிறங்கலாய் கூறினாலும், அமேசனில் ஒரு dating அனுபவத்தை வித்தியாசமாய் சொல்கின்றார். "When we shared raindrops/ That turned into lakes/Bodies started merging/And the lines got grey..." என்ற என்னைக் கவர்ந்த அழகான வார்த்தைகளும் அந்தப்பாடலில் இருக்கின்றது. இப்படிக் கிறங்கினாலும் இறுதியில், "Now I'm looking at him thinking/ May be he's ok" என்று ஆக உருகாமல் இயல்பாய்ச் சொல்வது இன்னும் பிடித்திருந்தது. காதலைப் பாடும் இந்தப்பாடலில் கூட "Palm tree silhouette smells amazing/blindfolds under home made lanterns/ somewhere in the amason/ they're holding me ransom" என்றும், காதலின் களிப்பில் கூட "I'll scream for the nation" என்று நம்மைப் போன்ற பலரைப் போலத்தான் இந்தப்பெண்ணிற்கும் சொந்தமண் ஞாபகம் வந்து, இப்படித்தான் பாடமுடிகின்றது.

பாடல்கள் மட்டுமில்லாது இந்த இசைத்தொகுப்பின் முன்பக்கத்தைக் கூட வித்தியாசமாய்த்தான் செய்திருக்கின்றார் (ஓவியத்தில் மாயாவிற்கு மிகவும் ஈடுபாடுண்டு, அவரது இணையத்தளத்தில் ஓவியங்களைப் பார்க்கலாம்). பாலஸ்தீனிய முஸ்லிம் மக்களை பிரதிபலிக்க அவர்களது மொழியைக் கொண்ட எழுத்துக்களும், இலங்கை தேசப்படமும், அதில் தமிழீழப்பிரதேசம் பிரிக்கப்பட்டும் காட்டப்படுகின்றது. இறுதியில் நன்றி கூறும்போது கூட Mom, Grandma என்று எழுதாமல், Amma, Ammamma என்று எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, அவர் தமிழோடும் வாழவிரும்புகிறார் என்பதையும் தனது அடையாளத்தை மறைக்காமல் தனது இரசிகர்கள் முன் வெளிப்படையாக வைத்திருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லத்தான்வேண்டும்

மாயாவின் இந்த இசைத்தட்டு நன்றாகவிருந்தாலும், இது ஜரோப்பா, கீழைத்தேய சாயல் அதிகம் கலந்திருப்பதால், அமெரிக்காச் சூழலில் எப்படி (ஒரு விமர்சகர் சத்தம் அதிகமாய் இருப்பதாய் எழுதியிருந்தார்) ஏற்றுக்கொள்ளப்படும் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் யாரோ ஒருவர் கூறியதுமாதிரி, இந்தவருடத்தில் வெளிவந்த, அரசியலை நேரடியாகப்பேசும் இசைத்தொகுப்பு என்ற வகையில் அருளர் மிகவும் முக்கியமானது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். தமிழராய், தனது நாட்டில் மட்டுமில்லாது, கொங்கோ, பாலஸ்தீனியர் என்று உலகெங்கிலும் நடக்கும் போராட்டங்களுக்காயும், மனித இழப்புக்களுக்காயும் குரல் கொடுக்கும் மாயாவின் பரந்த மனதை நாமும் பாராட்டி அவரது பாடல்கள் நியாயத்திற்காய் என்றும் உரத்துக்குரல்கொடுக்கட்டும் என்று வாழ்த்துவோமுமாக.

இறுதியில், "You could be a follower,/ but who's your leader/ Break that circle, it could kill ya." என்று மாயா கூறும் இந்த வார்த்தைகளை உங்களினதும், எனதும் சிந்தனைக்குமாய் விட்டுச்செல்கின்றேன்.

{குறிப்புக்கள்: *மாயா என்று நான் எழுதியபோதும் அவர் தனது பெயரை மாயா என்றா அல்லது மியா என்றா உச்சரிக்கின்றார் என்பது சரியாகத் தெரியவில்லை. புகைப்படங்கள், இங்கிருந்து எடுக்கப்பட்டன. சாதாரண இசைத்தட்டுக்களின் விலையைவிட ஒன்றரை மடங்கு விலையிலும், குறைந்த நிமிடங்களிலும் (38 நிமிடங்கள் மட்டுமே) இருப்பதால், இளையவர்களால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கமுடியுமோ என்றொரு சந்தேகம் உள்ளது. நல்ல படைப்புக் கொடுத்துவிட்டும் அதை வெளியுலகத்திற்கு கொண்டுசெல்ல அவ்வளவு ஆர்வம் காட்டாத சோம்பலாயிருக்கும் ஈழத்தமிழரின் நிலை மாயாவிற்கு வராவிட்டால் சரி.}

பன்னிரண்டாவது அரங்காடலும், Robotsம்

Tuesday, March 15, 2005

ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் வாரநாள்களில், ஒரு இனிய கனவைப்போல வாரயிறுதி நாள்களை எனக்குள் வளர்த்தபடியிருப்பேன். உறங்குவதைப் போன்ற நிம்மதியான, பிறருக்கு தொந்தரவில்லாத விசயத்திற்கே நான் முன்னிடம் கொடுப்பவன் என்றபோதும் சிலவேளைகளில் அதையும் மீறி வேறு சில விடயங்களை வாரயிறுதிகளில் அதிசயமாய் செய்துவிடுவதுண்டு. ஒவ்வொரு வாரவிறுதி நாள்களும் முடிந்தபின், மிகவும் சோம்பலாய் கழியும் திங்கள் செவ்வாய்களில் அவற்றை அசைமீட்டபடியிருப்பேன். வகைப்படுத்தமுடியும்போது ஒவ்வொரு வாரயிறுதி நாள்களுக்கும் நவரசங்களில் ஒரு இரசத்தை நட்சத்திரப்புள்ளியாக வழங்கி, நானும் ஒரு சுயதொழில் செய்வதாக எனக்கு நானே சொல்லி திருப்திப்படுத்திக்கொள்வேன்.

கடந்து வந்த ஞாயிறில் இரண்டு விசயங்கள் செய்திருந்தேன் அல்லது கண்கள் கொண்டு பார்த்திருந்தேன் என்றும் சொல்லலாம். மதியக் காட்சியாக ரொரண்டோவில் நிகழ்ந்த மனவெளி கலையாற்றுக்குழு வழங்கிய 12வது அரங்காடலுக்கு சென்றதும், Robots என்ற படத்தை பின்மாலைப்பொழுதில் தியேட்டரொன்றில் அண்ணாவின் மகனுடன் பார்த்ததும் குறிப்பிடச்சொல்லக்கூடிய விடயங்கள்.



பன்னிரண்டு வருடங்களாக நடந்துவருகின்ற அரங்காடலில் இதுவே எனது முதலாவது பிரவேசம். ஒவ்வொரு வருடமும் இந்த நாடகங்கள் குறித்த விளம்பரங்கள், விமர்சனங்கள் வரும்போது அதைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் எழுவதும், பிறகு ஏதாவதொரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் இரசிக்கமுடியாமல் போவதும் நடந்திருக்கின்றது. நான்கு நாடகங்கள் இந்த முறை மேடையேற்றப்பட்டன. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் பிரதியான 'நரகோடு சுவர்க்கம்', சகாப்தனின் எழுத்துருவில், 'அரியது கேட்கின்', கவிஞர் புவியரசு தமிழ்ப்படுத்திய Mario Frattiயின், 'வதை' மற்றும் தர்ஷினி, செளமியா, பிரஷாந்தியின் கூட்டுப்பிரதியான 'மறுமுகம் ஆகிய' பிரதிகளே அன்றையபொழுதில் பல்வேறுதரப்பட்டவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டிருந்தது.

இத்தனைகாலமும் ஒரு இதமான, குதூகலம் கொப்பளிக்கின்ற பெண்ணாய் நான் கற்பிதம்செய்திருந்த அரங்காடல் நாடகங்களை, இருமிக்கொண்டு இறுதிநாள்களை எண்ணுகின்ற, பிணிகொண்ட ஒரு வயோதிகப்பெண்ணாய் தரிசிக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தை, என்ன செய்வாய் என் விதியே என்று அரற்றியபடி நாடகங்கள் முடிந்தபொழுதில் வீடு திரும்பினேன்.

கொஞ்சம் மனம் சலித்துபோய், எனக்குப்பிடித்தமான தொழிலை (அதுதான் நித்திரைகொள்ளுதல்) செய்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது, எனது அண்ணையின் மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னோடு Robots திரைப்படம் பார்க்கவரும்படி. சரி, எனது ஆசைதான் இப்படி நிர்மூலமாகிவிட்டதே, ஏன் அவனுடைய ஆசையைக் கலைப்பான் என்று பின்மாலைப்பொழுதில் அவனோடு படம் பார்க்கப் புறப்பட்டேன்.



Robots படத்தின் கதையை நான்கு வரிகளுக்குள் அடக்கிவிடலாம். Dish-Wash செய்யும் தந்தையின் துயரம் பொறுக்கமுடியாமல், தான் எதையாவது சாதித்து தன் பெற்றோரை மகிழ்ச்சியடையச்செய்வேன் என்று Robots Cityயிற்கு போகும் மகன் Rodneyயின் கதைதான் இது. சின்னச் சின்ன சங்கடங்கள் அனுபவித்து இறுதியில் செல்ல மகன் தான் நினைத்தை சாதித்து, பெற்றோரை பெருமிதத்துக்குள்ளாக்குவதோடு கதை முடிகின்றது. மிகு அற்புதமாய் animations செய்திருக்கின்றார்கள். Robin Williams, Halle Barry, Ewan McGregor காட்டூன் சித்திரங்களுக்கு குரல்கொடுத்திருக்கின்றனர். Robin Williamsன் நகைச்சுவை பற்றிச் சொல்லத்தேவையில்லை.

எனது அண்ணன் மகனோடு குழந்தையோடு குழந்தையாக, அவன் குதூகலித்ததைவிட இரண்டு மடங்கு நானும் குதூகலித்திருந்தேன். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் ஒரு குழந்தையின் மனநிலையில் இருக்க வைத்த கடந்த ஞாயிறையும், அதற்குக் காரணமான அண்ணையின் மகனுக்கும் கட்டாயம் நன்றி சொல்லதான் வேண்டும். மழலைகளைச் செல்வங்களாய் கொண்ட பெற்றோர்களே நீங்களும் இந்தப்படத்தை இரசியுங்கள் என்று அந்தப்படத்திற்கு unauthorized ad agentயாய் இருந்து நான் உங்களுக்குப் பரிந்துரைக்கின்றேன்.

மோட்டார் சைக்கிள் டயரிகளை முன்வைத்து...

Monday, March 07, 2005

"திரு உருவைக் கலைத்துப்பார்க்கும்போது சே இன்னும் அழகாகத் தெரிகிறார். மனிதம் மிக அழகானது. அது ரத்தமும் சதையுமானது. திரு உருவாக்குதல் மனிதத்தைச் சிலையாக்குவது. அதிலிருந்து ஈரப்பசையை அகற்றுவது. வியந்து திகைப்பதைக் காட்டிலும் விமர்சித்துப் புரிய முயற்சிப்பதும் நமது புரிய இயலாமையை நாம் புரிந்து கொள்வதுமே இன்றைய தேவை. "
-அ.மார்க்ஸ் (பெப்ரவரி உயிர்மையில்)

(1)
சில நாள்களுக்கு முன் மோட்டார் சைக்கிள் டயரிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்ந்தது. எப்போதும் எனக்குள் ஆளுமைகளின் ஆரம்பகால வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வம் நீருற்றைப் போல் சுரந்து கொண்டேயிருக்கும். எவருமே பிறந்தவுடயே ஞானிகளாக ஆவதில்லையாததால் அவர்களின் பால்ய காலம் எப்படி ஆளுமைகளாக மாறப் பூச்சூடிக்கொள்கிறது என்பதை அறிவது மிகவும் சுவாரசியம் வாய்ந்தது. சிறுவயதில் சித்தார்த்தன் எப்படி புத்தரானார் என்று பாடமாக இருந்த தமிழ்ப்புத்தகத்தில் வாசித்ததிலிருந்து ஆரம்பித்த ஆர்வம் இன்னும் என்னிலிருந்து போகவில்லை.



மோட்டார் சைக்கிள் டயரிகள் சேயினது வாழ்வில் மிகச் சிறிய பகுதியை இயல்பாகக் காட்டுகிறது. சம்பவங்களினூடு எப்படி சே ஒரு ஆளுமையாக மாறுகின்றார் என்பதைப் பார்ப்பவரிடையே படியவிடுகிறது. இது ஒரு கதாநாயகனுடைய கதையல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயணஞ்செயத இருவரது சம்பவங்கள் என்று திரைப்படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் சொல்வதை கவனமாகக்கொண்டால் படத்தோடு இலகுவாய் ஒன்றிப் போய்விடலாம். நண்பனுடன் சே பயணஞ்செய்வதுடன் படமும் ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் சே, ஒரு குறும்புத்தனம் மிக்கவராய், பெண்களுடன் குதூகலிக்கும் விரும்பும் ஒரு இளைஞனாக காட்டப்படுகிறார். இவை குறித்தகாட்சிகள் மிகவும் அங்கதச் சுவையுடன் படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் மோட்டார் சைக்கிளைத்திருத்தும் மெக்கானிக்கின் மனைவியோடு சேயிற்கு ஏற்படும் மையலும் அதனால் ஏற்படும் விளைவுகளும், பிறகு சிலியில் இரண்டு பெண்களோடு விருந்துண்ணும் காட்சிகளும் இரசித்துச் சிரிக்கக்கூடியவை.

ஒரு காட்சியில், சிலியில் பழுதாகிப்போன மோட்டார் சைக்கிளைத் தள்ளியபடி பசியாய் அவதிப்பட்டபடி சேயும் நண்பர்களும் நடந்துவருகின்றனர். கையில் காசென்று ஒன்றுமேயில்லாதபோதும், உணவு விடுதியொன்றில் நுழையும் இரண்டு பெண்களைக் கவனித்தபடி அவர்களுக்குப் பின் இவர்களும் நுழைகிறார்கள். சரியாய்ப் பசிக்கிறது இவர்களுக்கு. ஆனால் அந்தப்பெண்களிடம் நேரடியாகச் சொல்ல இவர்களுக்குத் தயக்கமாயிருக்கிறது. சேயின் நண்பர் ஒரு பொய்யை முதலில் அவிழ்க்கிறார். இன்றோடு நாங்கள் நாடுகள் சுற்றத்தொடங்கி ஒருவருடமாகிறது. ஆனால் அதைக் கொண்டாடமுடியாத நெருக்கடியில் இருக்கிறோம் என்று பெண்களைப் பார்த்துக்கூறுகின்றனர். உண்மையென நம்பிய பெண்கள், தங்களது செலவில் மதுபானங்களை இவர்களுக்கு கொண்டுவரும்படி உணவுவிடுதியாளருக்கு பணிக்கின்றனர். மதுபானம் வந்தபின்னும் சேயும் நண்பனும் அதை அருந்த மறுக்கின்றனர். ஏன் என்று அந்தப்பெண்கள் கேட்க, அடுத்த பொய்யை அவிழ்த்துவிடுகின்றார்,சேயின் நண்பர். எமது ஆர்ஜெண்ரினா கலாச்சாரப்படி உணவு அருந்தாமல், மதுவருந்துவது தவறென்று கூறுவார்களென்று. பெண்களுக்கு இவர்களின் விளையாட்டு விளங்கிவிட, சிரித்தபடி நல்ல சாப்பாட்டுக்கு உத்தரவிடுகின்றனர்.



படம் முழுக்க சேயினது நேர்மை சொல்லப்படுகிறது. சிலவேளைகளில் பொய் சொல்ல சே மறுப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் உணவும் தங்குமிடமும் மறுக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இனி வாயைத் திறந்து கதைக்கவேண்டாம் என்று நண்பன் சேயிற்கு கட்டளையிடுகிறான். சேயினது மிருதுவான நெகிழ்ந்துபோகும் மனது காட்சிகளாலும் அவர் தன் தாயிற்கு எழுதும் கடிதங்களாலும், எழுதும் டயரிக்குறிப்புக்களாலும் சொல்லப்படுகின்றன. தொழிலாளரை மிருகங்களைவிடக் கீழாக மதிக்கும் சம்பவத்தில், சே தனது எதிர்ப்பைக்காட்டுவதற்கு ஒரு கல்லை அவர்களது வாகனத்தின் மீது எறிவது, இன்றும் பாலஸ்தீனியத்தில் சிறுவர்கள் யூத ஆக்கிரமிப்பாளர்கள் மீது எறிவது வரை தொடர்வது மனித இனத்தின் சாபக்கேடென்றுதான் சொல்லவேண்டும். சேயினது நேர்மை உட்சகட்டமாக வெளிப்படுவது வைத்தியர் ஒருவருக்கு அவரின் நூலின் மீதான விமர்சனத்தை சே வைக்கும்போது. பயணத்தின் போது கஷ்டப்படும் இவர்களுக்கு நல்ல உணவும், ஆடைகளும், பணமும் கொடுத்து, இவர்களது வைத்தியச்சேவைக்கும் உதவி செய்யும் வைத்தியர் தானெழுதிய புத்தகம் பற்றிய கருத்துக்கூற சேயுடன் கேட்கும்போது, மிக மோசமாக எழுதப்பட்ட கதை. இப்படி எழுதுவதைவிட எழுதாமல் இருப்பதே சிறந்தது என்று முகத்திற்கு நேரே சொல்கிறார். இப்படி ஒருவர் தனது முகத்திற்கு நேரே சொல்வதை அந்த வைத்தியர் எதிர்பார்க்கவில்லையெனினும், சேயினது நேர்மையைப் பாராட்டி கப்பலேற்றி விடுகிறார். இறுதியில் ஒரு தொழுநோய் விடுதியில் நின்று தமது வைத்தியசேவைகளை சேயும் நண்பனும் செய்கின்றனர். அங்கேதான் தாம் unjusticeற்கு எதிராய்ப்போராடவேண்டுமென்பதற்கான கோரிக்கையை சே முதன்முதலில் முன்வைக்கிறார். அவர் அதை நிச்சயம் ஏதோவொருவகையில் நிகழ்த்திக்காட்டுவார் என்பதை, இறுதிப் பிரிவுவிழா நடக்கும் இரவில் எவரும் கடந்துவிடாத ஒரு குளிராற்றைக் கடப்பதைச் சாதிப்பதன் மூலம் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார் என்றே நான் நினைக்கின்றேன். சே ஒரு ஆளுமையாக வளர்ச்சியடையவதை அவரது தாடி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வதைக் காட்சிகளினூடு காட்டுவதன் மூலமும் நாம் அடையாளங்க்கொள்ளாலாம் (எனினும் பயணத்தின் முடிவில் ஆர்ஜெண்ரினாவிற்கு விமானத்தில் பயணஞ்செய்யும்போது ஆரம்பத்தில் இருக்கும் சேயைப்போல மென் தாடியுடன் காட்சியளிக்கிறார்). இந்தப்படம் நிச்சயம் சேயினது வாழ்வினது குறுக்குவெட்டுமுகம் என்று சொல்லக்கூட முடியாது என்றுதான் நினைக்கின்றேன். சேயினது வாழ்வில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு துண்டு ஆனால் ஆழமில்லாது என்றுதான் படத்தைப் பார்த்து முடிக்கும்போது எனக்குத் தோன்றியது

(2)
சேயினது இந்தப் பயணத்தைப் பார்த்தவுடன் நான் சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு இலத்தீன் அமெரிக்க படமொன்று (பெயர் நினைவினில்லை) ஞாபகத்துக்கு வந்தது. அதில் இரண்டு பதின்மவயதுக்காரர் ஒரு காரையெடுத்து தமது நாட்டைச் சுற்றப்புறப்படுகின்றனர். அவர்களது முடிவிடம் ஒரு பெரிய கடற்கரையை அடைவதாக இருக்கிறது. பயணத்தின் இடைநடுவில் ஒரு பெண்ணையும் சேர்த்துக்கொள்கின்றனர். அவள் மிகவும் குறும்புக்காரியாகவும் இவர்களை எந்தநேரமும் சீண்டுபவளாகவும் இருக்கிறாள். அவள் கேட்டத்தற்கிணங்க இரண்டு பையன்களும் தங்களுக்கு (நிஜத்தில்) இல்லாத காதலிகளைப் பற்றி புனைவுகளை அவிழ்த்துவிடுகிறார்கள். இரண்டு பேருக்கும் யார் அந்தப்பெண்ணை அதிகம் நெருங்குவது என்று போட்டியினால் பொறாமை கிளைபரப்புகிறது; மாறி மாறி சண்டையும் பிடிக்கிறார்கள். அவர்களுக்கிடையிலான கோபம், பிரிவு எல்லாம் தன்னால் என்றறிகின்றபோது அந்தப்பெண் இரண்டு பேரிடமும் நேசம் கொள்கிறாள். ஒரு முறை ஒரு பையனுடன் உடலுறவு கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கின்றபோது, அந்தப்பையனின் பீதியைக்கண்டு, நீ இப்படியிருந்ததால்தான் உனது Ex-பெண்நண்பி உன்னை விட்டுப்பிரிந்து சென்றிருக்கவேண்டும் என்றெல்லாம் நக்கலடிக்கிறாள். பயணத்தினிடையே அந்த நாட்டினுடைய உள்நாட்டுப்பிரச்சினைகள், வறுமைகள் எல்லாம் சிறுசிறு காட்சிகளாக வந்துப்போகின்றன. இறுதியில் அவர்கள் அந்தக்கடற்கரையை அடைகின்றனர். பிறகு சொந்த இடம் மீண்டும் திரும்பும் பையன்கள் அந்தப்பெண்ணையும் தங்களுடன் திரும்பிவரும்படி அழைக்கின்றனர். ஆனால், அவள் அதை மறுத்து, தாயில்லாத சிறு குழந்தையுடன் இருக்கும் ஒரு ஆணுடன் அந்தக் கடற்கரைக்கருகில் தங்கிவிடுகிறாள். காலம் நகர்கிறது. நல்ல வேலைகளில் இருக்கும் இரண்டு பையன்களும் ஒரு கோப்பிக்கடையில் சந்திக்கின்றனர். இரண்டு பேரும் தமது பழைய நினைவுகளை மீள அசைபோட விரும்பமில்லாதவர்களாக இருக்கின்றனர். இறுதியாய் பிரிகின்ற நேரத்தில் ஒருவன் மற்றவனிடம் கேட்கிறான், அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது என்று தெரியுமா என்று. அவளுக்கு கான்சர் நோய் ஏற்கனவே இருந்து, அது மோசமாகி அவர்கள் அவளைப்பிரிந்து வந்த சில மாதங்களில் ஆஸ்பத்திரியொன்றில் அநாதரவாய் மரணித்துவிட்டாள் என்று சொல்வதோடு படம் முடிகிறது.

(3)
எனக்கும் இப்படி சின்னவயசில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற கனவு இருந்தது. இந்திய இராணுவம் ஈழத்தை விட்டுச்சென்ற காலத்தின் பின் பூத்த அமைதியின் சொற்பமான பொழுதில், எனக்கு அந்தவயதில் பெரிய உலகமாய்த் தெரிந்த யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. கீரிமலை கடற்கரையில் ஆரம்பித்து காங்கேசன்துறை பலாலி என்று ஒரு மேப்பும் மனதில் போட்டுக்கொண்டு திரிந்திருக்கிறேன். பிறகு அது சாத்தியமில்லாதபோது, நண்பர்கள் நான்கு பேர் இப்படிக் கிராமங்களினூடு பயணம் செய்கின்றதாயும், இறுதியாய் பயணத்தை முடித்து ஊர் திரும்பும்போது பொம்மரடியில் இறந்துவிடுவதாயும் ஒரு கதை எழுத முயன்றிருக்கின்றேன். மரணம் மூச்சுக்காற்றைப்போல இயல்பாய் இருந்த தேசத்தில் மரணத்தைத் தவிர்த்து எதையும் பேசவியலாது போலத்தான் தெரிகிறது.
.........
குறிப்பு: மோட்டார்சைக்கிள் டயரிகள் படத்தைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், மாண்ட்ரீஸரின் பதிவுதான் இந்தப்படத்தை விரைவில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலைத்தூண்டியது என்பதை குறிப்பிட்டாகவேண்டும். கறுப்பியும் இது குறித்து தனது பார்வையை தனது தளத்தில் வைத்திருக்கின்றார்.

'உயிர்நிழல்' கலைச்செல்வன் மறைவு

Saturday, March 05, 2005

திரு.கலைச்செல்வன் மாரடைப்பாற் காலமாகிவிட்டார்.
இவர் எக்ஸ்சில் சஞ்சிகை ஆசிரியர். அவருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

-ப.வி.ஸ்ரீரங்கன்
............................................
கலைச்செல்வனின் இழப்பு மிகவும் துயரமானது. உயிர்நிழலில் ஆசிரியரான பின்னர் எழுதுவதைக்குறைத்துக்கொண்டாலும், பிரான்சிலிருந்த காத்திரமான இலக்கியவாதிகளில் இவரும் ஒருவர். உயிர்நிழலில் ஆசிரியராக இருந்த சமயம் கனடா வந்தபோது திருமாவளவனின் (கவிஞர் திருமாவளவனின் தம்பி, கலைச்செல்வன்) வீட்டில் இவரை, நானும் இன்னுமொரு தோழனுமாக சந்திருக்கின்றோம். நண்பர்கள், உறவுகள் நிரம்பியிருந்த வீட்டில், மற்றவர்கள் குறுக்கிடக்கூடாதென்று, எம்மைத் தனியே ஒரு அறைக்குள் கூட்டிச்சென்று பேசிய அவரது அன்பு நினைவு கூரக்கூடியது.

பல கனவுகள், நம்பிக்கைகள் என்று நானும் நண்பனுமாய் தொடர்ந்து விடாமல் பேசப்பேச எம்மைப் பேசவிட்டபடி சிகரெட் புகைத்தபடி விழிகளால் எம்மை படித்தபடி இருந்த கலைச்செல்வன் இன்று எம்மிடையே இல்லையென்பதை எப்படித் தாங்கிக்கொள்வது? சஞ்சிகை வெளியிடும் எண்ணமெல்லாம் எங்களுக்கு உண்டென்று கூறியதற்கு தனது அனுபவங்களை இவங்கள் பெடியங்கள்தானே என்று அலட்சியப்படுத்தாமல் எங்களுடன் விரிவாகப் பகிர்ந்திருந்தார். தனதும் இலக்சுமியினதும் வேலை செய்யும் முக்கால் வாசிப்பணம் உயிர்நிழல் வெளியிடுவதிலேயே போயிவிடுவதாகவும், இங்கே வந்தபோது எல்லா வீட்டிலும் விலைஉயர்ந்த Sofa-set, dining table இருப்பதைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது என்று நகைச்சுவையாகச் சொன்னதும் நினைவில் வருகிறது. ஈழத்து அரசியல், இலக்கியம் என்றெல்லாம் பலதும் பேசியபோது நேர்மையாகப் பலவிசயங்களை ஒப்புக்கொண்டபோது அவர்மீதான என் மதிப்பு மேலும் உயர்ந்தது. அவரை நேரில் சந்திக்க முன்னர், நான் யாரென்ற அடையாளந்தெரியாமலே மின்னஞ்சலில் உயிர்நிழலுக்காய் அனுப்பிய படைப்புக்களை பிரசுரித்து என்னை ஊக்குவித்த அவரை நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

அவரை இழந்த துயரத்தில் தவிக்கும், லக்சுமி, கலைச்செல்வனின் மகன், திருமாவளவன் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் அனைவருடன் எனது துயரையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

-டிசே
............................................
அமரர் கலைச்செல்வன் பற்றிய குறிப்புகளைப் படித்ததும் ஒரு உண்மை புலனாகிறது.அதாவது கலை ஒருபோதுமே எவரையும் மதிக்காமல் நடந்ததை நாம் அறியோம்.நாம் அவரைச் செல்லமாக் கலையென்பதும் அவரெமை பாவி(ப.வி.)என்பதும் இன்னும் எமது நெஞசில் பசுமையானது.நாம் பல இ.சந்திப்புகளில் அவரோடு இணைந்து செயற்பட்டுள்ளோம்.இன்று நினைத்தாலும் நெஞ்சில் பசுமையான பல நினைவுகள் வந்து போகின்றது;நாம் பார்த்திபன் நடராசன் சுசீஅண்ணன் சுகன் கவிஞர் சிவம் வீட்டில் நாட்கணக்காக உரை யாடிய 90களின் பல பொழுதுகள் இப்போது வந்து கண்முன் விரிகிறது.அவரது எக்ஸ்சில் பிளவுடன் நாம் அவரது உயிர் நிழலில் எழுதுவதைத் தவிர்த்தோம்.இப்போது நோக்கும்போது நம் சிறுபிள்ளைத்தன மேதாவிவேலை நம் முகத்தில் ஓங்கியடிக்கக் கண்ணீர் வருகிறது.நாம் அவ்வளவு பாசத்துடனான தோழமையுறவைக்கொண்டிருந்தோம்.அவரது தனிப்பட்ட வாழ்வைக் கிண்டலடித்து நாமொரு சிறுகதையைக் பாரீஸ் ஈழமுரசில் எழுதியதும்"வெண்பனிச் சகதி" எனும் தலைப்பில் பின்பு எமது அறிவின் கட்டுப்பெட்டித்தனத்தையெண்ணி வருந்தி பொழுதும் இப்போ எம் விழிகளை ஈராமாக்கியபடி.கலைச்செல்வன் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்கள்.அவரது அறிவுப் பலமே அதுதாம்.திரு. நா.கண்ணனைப் போல் எவ்வளவு கருத்துச் சேறடிப்புக்கும் அவர் உணர்ச்சி வசப்படுவதில்லை. இது ஒன்றே எனக்கு அவரிடம் அதிகம் விரும்பிய குணம்.அவர் இப்போது நம் மத்தியிலில்லை.ஆனால் அவரது மிகப்பெரிய அறிவுசார் விமர்சனப்பாங்கும் அவர்தம் ஆழ்ந்த சமூகப்பார்வையையும் நம்மத்தியில் விட்டுப் போய்யுள்ளார்கள்.இருக்கும்போது நாம் ஆய் ஊய் என்பதும் பின்பு சுடலை ஞானத்துடன் கருத்திடுவதையெண்ணும்போது வருத்தமாகவுள்ளது!தூண்டில் எனும் சஞ்சிகையையும் இந்த நண்பர்கள் குழாத்தையும் என்றும் மறக்கவே முடியாது. அதுவொரு காலம்.என்றபோதும் அவரது இழப்பாற்றுயருரும் லக்ஸ்மி அக்காவுக்கும் அவர்தம் குமரன் கபிலனுக்கும் கூடவே அவர் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் முடிந்தால் இறுதிச் சடங்கில் வந்தும் கலக்கிறோமென ஆறுதல் படுத்துகிறோம்.

-ப.வி.ஸ்ரீரங்கன்
............................................
குறிப்பு: மேலேயுள்ளவை எனது வேறொரு பதிவில் ஏற்கனவே பின்னூட்டங்களாய் இடப்பட்டிருந்தவை. கலைச்செல்வனின் மறைவு குறித்து, இரு பதிவுகள் நா.கண்ணனின் தளத்திலும், தோழியர் தளத்திலும் எழுதப்பட்டுள்ளன.