நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

நான் பார்த்த தமிழகம்

Sunday, March 27, 2005

{வியந்ததும், சிலிர்த்தும், திகைத்ததும் பற்றிய சில குறிப்புக்கள்}

(1)
சிறுவயதில் வாசித்த புத்தகங்களிலிருந்து தமிழகத்து நகரங்களும், தெருக்களும் எனக்குள் ஒரு பெருமரமாய் வேர்களைப்பரப்பியபடி இருந்தன. அவை, எனக்கு அருகிலிருந்த ஈழத்தின் ஒழுங்கைளையும், ஊர்களையும் விட மிகவும் பரீட்சயமாயிருந்தன. ஈழத்தின் அழகான பிரதேசங்களான கடலோரங்களையும், மலை சார்ந்த இடங்களையும் பார்ப்பதையும் விட தமிழகத்திற்கே எப்போதேனும் சென்றுவிடவேண்டும் என்றே சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டிருக்கின்றேன். ஈழப்போராட்டம் உக்கிரமாவதற்கு முன்பான பொழுதுகளில் சாதாரண படகுகளிலெல்லாம் தமிழகத்து விரும்பியபோதெல்லாம் ஈழத்திலிருந்து சென்றிருக்கின்றார்கள் என்ற குறிப்புக்களை வாசிக்கும்பொழுதெல்லாம் ஒருவித வியப்பு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. எனெனில் போர், தமிழகத்திற்குப் போவதென்பதை இமயமலையின் உச்சியிற்கு ஏறுவதைப்போல, பிறகு என் வயதொத்தவர்களில் ஏற்படுத்தியிருந்தது.

சென்ற வருடம் எதிர்பாராத ஒரு தருணத்தில் தமிழகத்திற்கான பயணம் வாய்த்திருந்தது. எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணம் சென்னையில் நடைபெற இருந்ததால் அம்மா, அக்கா குடும்பத்தினருடன் கொழும்பிலிருந்து பயணிக்கவேண்டியிருந்தது. ஒரு நள்ளிரவில் கொழும்பில் பயணத்தைத் தொடங்கி விடிகாலைப்பொழுதில் மீனம்பாக்கத்தில் வந்திறங்கியிருந்தோம். பதின்மத்தின் ஆரம்பத்தில் வாசித்த பாலகுமாரனின் 'பயணிகள் கவனிக்கவும்' எனக்குள் மீனம்பாக்க விமான நிலையத்தை பற்றிய நிலையான ஒரு சித்திரத்தை வரைந்திருக்க, ஒரு வித கிளர்ச்சியுடன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தேன். சனநடமாட்டம் அதிகமாகாத தெருக்களில் கார் விரைந்துசெல்ல, ஒரு சிறுவனுக்குரிய குதூகலத்துடன் விழிகள் விரித்தபடி சென்னையை இரசித்தபடி சாலிக்கிராமத்தை சென்றடைந்தேன்.

ஏற்கனவே திருமணத்திற்காய் வந்து நின்ற கூட்டத்தில் (நாங்கள் தான் கடைசியாய் இணைந்துகொண்டோம்) கஷ்டப்பட்டு ஒரிடம் பிடித்து நித்திரையில் கொஞ்சநேரம் ஆழ்ந்திருக்க, அக்கா பாண்டி பஜாரிற்கு போகின்றோம் வரப்போகின்றாயா என்று உலுப்பி எழுப்பினார். எனக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்த வேலையான நித்திரையை விட்டுவிட மனதிற்கு இசைவில்லையாயினும், பாண்டி பஜார் என்ற பெயர் எனது உடம்பில் இரசாயன மாற்றம் (காதலுக்கு மட்டுமா இரசாயன மாற்றம் நிகழவேண்டும்) எதையோ ஏற்படுத்தி உற்சாகத்தைத் தர ஓமென்று அவர்களுடன் புறப்பட்டுச்சென்றேன். கடைகளுக்கு போனால் பெண்களின் நிலவரம் என்னவென்று சொல்லதேவையில்லை, அத்தோடு திருமணத்திற்கான shopping என்றால் சொல்லவும் வேண்டுமா? நானொருவன் மட்டும் ஆணாயிருக்க மிகுதியெல்லாம் பெண்களாய் இருக்க, அவர்கள் ஒரு திருவிழாவாய் கடைகளுக்குப்போவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். என்னுடைய Chemistry பிழைத்துப்போய்விட்டதே என்று வையிரவருக்கு பின்னால் நாய் ஓடிக்கொண்டிருப்பதைப்போல அவர்களும் பின்னால் நானும் அலைந்தபடியிருந்தேன். பாண்டிபஜாரில் ஒரு வெள்ளிக்கடை இருக்கிறதே. கீழே, மேலே, பக்கவாட்டில் என்று எங்கும் ஒரே வெள்ளிமயந்தான். ஒரு குறிப்பிட்ட வயதில் வெள்ளியில் ஆசை மிகக்கொண்டு ஆபரணங்களாய் அணிந்துகொண்டு கனடாவில் திரிந்திருக்கின்றேன் (வீட்டுக்குத்தெரியாமற்தான்). இந்தக் கடைக்குப்போனால் அப்படியே என் முழு உடலையுமே வெள்ளியில் உருக்கி வார்த்துவிடுவார்கள் போல இருந்தது. இனியும் வைரவருக்கு நாய் மாதிரி உங்களுடன் திரியமுடியாது என்று அக்காவிற்கு கூறிவிட்டு ஒரு மூலைக்கடையில் விற்றுக்கொண்டிருந்த அந்த மாதத்து புதிய பார்வையையும், தீராநதியையும் வாங்கிக்கொண்டு வெள்ளிக்கடைக்கு (பெயர் ஞாபகத்திலில்லை) முன் போடப்பட்ட நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டேன். புத்தகங்களை வாசித்துக்கொண்டு கடந்துபோகும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமான விடயந்தானே. You so sweet yah என்று காதலனுடன் உருகிக்கொண்டிருந்த இளம்பெண்ணும், எங்கையோ வேலையில் இருந்த கணவனை வெருட்டிக்கொண்டிருந்த பேரிளம்பெண்ணும் பக்கத்து நாற்காலிகளில் இருந்து செல்போனிக்கொண்டிருக்க நானும் விரைவில் அஷ்டவதானியாகிக்கொண்டிருந்தேன். அதைவிட ஆப்பிள்களையும், மாதுளம்பழங்களையும் மிக நுட்பமான வியாபாரத்தந்திரங்களுடன் விற்றுக்கொண்டிருந்த இரண்டு நடைபாதை வியாபாரிகளையும் இரசித்துக்கொண்டு திருவிழா எப்போதாவது முடியட்டுமென்று இப்போது சலிப்பின்றி வேடிக்கை பார்கத்தொடங்கியிருந்தேன். பிறகு, எங்களுடன் வந்த ஒரு Group உற்சாகமேலீட்டால் சரவணா storesற்கு (யாரோ பாண்டிபஜாரில் பொருட்கள் வாங்கும்போது அங்கே நல்லபொருட்கள் வாங்கலாம் என்று நமது பெண்களுக்கு சொல்ல) ஓட்டோ பிடித்து ஓடிவிட்டதால் ஒருமாதிரி எல்லோரையும் ஒன்று சேர்ந்து வாகனத்தில் பசியோடு வீடு திரும்பினோம்.

சில மாதங்களாய் வெயில் உருக்கிக்கொண்டிருந்த சென்னையில், நான் சென்ற நாளிலிருந்து நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இந்த விடயத்தை ஒரு அவதானமாய் அங்கு பழக்கமான நண்பர்கள் சொன்னபோது, 'நல்லார் ஒருவர் சென்னை வரல் அவர் பொருட்டெல்லார்க்கும் பெய்யும் மழை' என்று எனது வரவை 'கொஞ்சம்' உயர்வு நவிற்சியாய் சொல்லி அவர்களுக்கு கடுப்பேத்திக்கொண்டியிருந்தேன். அப்படியே யாராவது சென்னை எப்படியிருக்கிறது என்று கேட்டபோதெல்லாம், 'சென்னையில் ஒரு மழைக்காலம்' என்றுதான் 'கவித்துவமாய்' கூறியுமிருக்கின்றேன். (இதை வாசிக்கும் தமிழகத்து நண்பர்களுக்கும் மற்றும் முதல்வருக்கும் ஒரு வேண்டுகோள், தண்ணீர் பஞ்சம் வந்து நீங்கள் கஷ்டப்பட்டால் என்னை இலவச விமானச்சீட்டுத் தந்து அழைத்தால் உங்களுக்கு மழை உத்தரவாதம் என்றும் சொல்லிக்கொள்கின்றேன்.)

எங்களுடன் இலண்டனிலிருந்து வந்த உறவினன் ஒருவன் இருந்தான். வந்த அன்றிரவே நாங்கள் இரண்டுபேரும், மற்ற ஆக்களுக்கு தெரியாமல் chicken 65 வெட்டுவது என்று திட்டமிட்டோம் (திருமண சமயத்தில் அசைவம் சாப்பிடுவதில்லை என்று ஒரு 'சம்பிரதாயம்' எங்கடை சனங்களுக்கு). மாலை மங்கி, வெப்பமும் தணிந்து இரவு திரையிட்ட பொழுதில், சன நடமாட்டம் குறைந்த ஒரு கடையில் போய் உட்கார்ந்து Chicken 65, பரோட்டா (நம்ம ஊரில் அது, கொத்துரொட்டி) என்று ஒரு பிடிபிடித்தோம். நாம் பேசிய தமிழ் பிடிபட அந்தக்கடையின் ஊழியர்களுக்கு கடினமாயிருந்தபோதும், மிகவும் அன்புடன் என்னவெல்லாம் வேண்டும் என்று பொறுமையாய் கேட்டு இனிதாய் உபசரித்தார்கள். அப்படியே இரண்டு பார்சல்கள் கட்டித்தரச்சொல்லி தங்கி நின்ற இடத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றோம். அதற்குக் காரணம் ஒன்றிருந்தது. திருமணத்திற்காய் வந்த உறவுகளில் இரண்டு உறவுக்காரப்பெண்கள் இருந்தார்கள். இந்தப் பெண்ணை நீயும், மற்றப்பெண்ணையும் நானும் காதலிக்க வைப்பது என்று கையெழுத்தில்லாத ஒரு சமரச உடன்படிக்கையை நானும் அந்த உறவுக்காரனும் செய்திருந்தோம். ஒரு திருமணத்திற்காய் வந்தவர்கள் மூன்று திருமணங்களைச் செய்துவிட்டு திருப்பினால், உறவுகளுக்கு செலவு குறையுமே என்ற எமது நல்ல எண்ணந்தான் இதற்கு காரணம். ஒரு மாதிரியாக ஒளித்துக்கொண்டு போய் chicken 65 ஐயும், பரோட்டாவையும் மொட்டை மாடியில் வைத்துக்கொடுத்துவிட்டு, அந்தப்பெண்களிடம் கதைக்கத் தொடங்கினோம். அவர்களும் Chicken Wingsஐ கடித்துக்கொண்டு, 'எங்களுக்கு வெளிநாட்டிலை இருக்கின்ற பெடியங்களை திருமணம் செய்யப்பிடிக்காது, அவங்கள் அங்கே செய்யிற குழப்படியெல்லாம் செய்துவிட்டு இங்கை வந்து girlsஐ marry பண்ணிக்கொண்டு போறாங்கள்' என்று எமது ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டார்கள். ச்சீய் இந்தப் பழம் புளிக்கும் என்னைத் தேற்றியபடி ஒரு காதலின் தோல்வியை அந்த மொட்டை மாடியிரவில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்களுக்கு நான் காணிக்கை செய்தேன்.

ஆனால் மொட்டை மாடி, மழையைச் சென்னைக்கொண்டு வந்த இந்தப்பெடியனைக் கைவிடத்தயாரில்லை. அடுத்த நாள் முன்னிரவில் நானும் அந்த உறவுக்காரப் பையனும் மொட்டை மாடியில் இருந்து கதைத்துக்கொண்டிருக்கும்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. தென்னை மரங்கள் கிளை விரித்திருந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் (நான் சூட்டிய பெயர் சென்னைத்தேவதை) கைகளை அசைத்தபடி நடமாடிக்கொண்டிருப்பதை மொட்டைமாடியின் விளிம்பிலிருந்து கண்டேன். என்னடாப்பா, பிள்ளைக்கு ஏதோ மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டதோ என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் தெரிந்து, புத்தகத்திலிருப்பதை மனப்பாடம் செய்வதற்காய் அந்தப்பெண் இப்படியொரு அவஸ்தையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என்று. எப்படியோ சென்னைத்தேவதையின் கவனத்தை ஈர்த்து நானொருத்தன் மாடியில் நிற்பதைப் பார்க்கவும் செய்துவிட்டேன். பிறகு மொட்டை மாடி எனக்கு வீட்டுக்குள் போய்க்கொண்டிருந்த FTVஐ விடவும் சுவாரசியமாக போய்விட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு சென்னைத்தேவதை படிப்பதற்காய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வருவதும், நானும் அந்தநேரங்களிலெல்லாம் மொட்டை மாடிக்கு வந்துவிடுவதும் நிகழ்ந்துவிடும் (மகள் ஏனிப்படி குறிப்பிட்ட நேரங்களில் எல்லாம் வெளியே புத்தகத்தோடு வருகின்றார் என்று சந்தேகப்படாத சென்னைப்பெண்ணின் தாயார் நீடுழி வாழ்க). எத்தனை முறைதான் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் பார்வைகளால் பேசிக்கொண்டிருக்க முடியும்? ஒரு நாள் நேரடித்தாக்குதலில் இறங்குவதென்று உறவுக்காரனையும் கூட்டுக்கொண்டு அந்தப்பெண் இருந்த தெருவிற்கு இறங்கிப்போனேன். ஆனால் நான் இறங்கிய நேரத்தில் ராகுவோ கேதுவோ சனியனோ இருந்திருக்க வேண்டும். விதி தன் பகடைக்காய்களை இரண்டாம் தடவையாக உருட்டத்தொடங்கிவிட்டது. நாம் அந்தப்பெண்ணின் இடத்தை அடைந்தபோது அவரது தகப்பன் வீரப்பத்திரசாமி மாதிரி பெரிய மீசையோடு வீட்டு முகப்பில் நின்றுகொண்டிருந்தார். எனக்கு காதலினால் வரும் படபடப்பைவிட அவர் ஏதாவது திருப்பாச்சி அரிவாளை உருவிவிடுவாரோ என்ற பதைபதைப்புத்தான் கூடிவிட்டது. (வாசிப்பவர்களுக்கு என் உணர்நிலை விளங்கவில்லையென்றால், 'காதல்' படத்தில் தன்னை பின் தொடரும் நாயகனை, தன் தந்தையைக் கூட்டிக்கொண்டு ஜஸ்கிறிம் வாங்கிக்குடித்து பயமுறுத்தும் நாயகி வரும் காட்சியை நினைவுபடுத்தவும்). சரி இனியெதுவும் பேசமுடியாது என்று தொடர்ந்து நடந்துகொண்டிருந்தால், அந்தத் தெரு இரண்டு வீடுகள் தாண்டியவுடன் முடிந்துவிட்டது. அட, ஈழத்தில், கனடாவில் இழக்காது பத்திரமாய் வைத்திருந்த உயிரை சென்னையில் காவு கொடுக்கவேண்டிவரப்போகின்றதே என்ற பயம் எனக்குள் வந்துவிட்டது. நாங்கள் அந்தப்பெண்ணின் வீட்டைக் கடந்துபோகமுன்னரே, எங்களது நடை, அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டே நாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று பெண்ணின் தந்தையாருக்கு நன்கு விளங்கியிருக்கும். தெருவும் முடிந்து இனி உடனே திரும்பிப்போனால், நிச்சயம் எங்களின் குழப்படி அவருக்கு தெரியாமற்போகாது என்பது நிச்சயம். அப்போதுதான் எனது உறவுக்காரனுக்கு ஆறறிவு விழித்துக்கொள்ள, முறைத்துக்கொண்ட அந்தப்பெண்ணின் தந்தையிடமே நேரே சென்று (சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட, சண்டைக்காரனின் காலில் விழுவது உத்தமம் என்று லண்டனிலும் சொல்லிக்கொடுத்திருக்கின்றார்கள் போலும்), 'நாங்கள் சென்னைக்குப் புதிது, எப்படி காவிரி கோனரிற்குப் போவதென்று சொல்லமுடியுமா' எனது cool யாய் கேட்டு எனது உயிரை மீளவும் கொண்டுவந்து தந்தான். சென்னைத்தேவதை அப்பாவியாய் எங்கள பரிதாப நிலையைக் கண்டு கொடுப்பிற்குள் சிரித்திருப்பார் என்றெல்லாம் உங்களுக்குச் சொல்லதேவையில்லை.

சில நாள்களின் பின் பாடசாலை ஆரம்பிக்கப்போவதால், உறவுக்காரன் லண்டனுக்குப் புறப்பட்டுப் போய்விட்டான். பிறகு எனது மொட்டைமாடிப் பொழுதுகள் நீண்டபோதும், கீழே சென்று, அந்தப்பெண்ணோடு கதைக்கும் ஆசை போய்விட்டது. அத்தோடு தனியே மொட்டை மாடியில் நேரங்கழிப்பதைப் பார்த்த எனது அக்காவிற்கும், மாமாவிற்கும் கொஞ்சம் சந்தேகமும் வர அடிக்கடி மேலே வந்து security guard வேலை அவர்கள் செய்யத்தொடங்கிவிட்டனர். இருந்த ஒரு மகளையும், எனக்கு கட்டிக்கொடுக்காது (என்னை விட மகளுக்கு வயதுகூடத்தான்) யாரோ ஒருவருக்கு கட்டிக்கொடுத்துவிட்டு, இப்போது உளவாளி வேலையும் பார்ப்பது நியாயந்தானோ என்று மாமாவிடம் கேட்க ஆசையிருந்தாலும், பெரியோரைக் கனம்பண்ணுதல் என்ற நல்லதொரு கொள்கையினால் இதை நான், அவரிடம் கேட்கவில்லை.

(2)
ஒரு மத்தியான பொழுதில் ஸ்பென்சர் பிளாசாவுக்கு நானும், உறவுக்காரனும் (லண்டனுக்குப்போகமுன்னர்), அந்த இரு இளம் பெண்களும் ஓட்டோவில் புறப்பட்டோம். ஆட்டோக்காரருடன் மிகவும் பம்பலடித்துக்கொண்டு ஸ்பென்சரில் போயிறங்கினோம். ஓட்டோக்காரரும் சென்னையில் பார்க்கவேண்டிய மற்ற இடங்களையும் விரிவாக எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். ஸ்பென்சர், நாம் போயிருந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெல்லிய இருட்டிலும், வெக்கையிலும் புழுங்கிக்கொண்டிருந்தது. என்னதான் என்றாலும், நாலைந்து தமிழ்ப்புத்தகங்கள் வாங்காமல் வருவதில்லையென்று லாண்ட்மாக்கில் 5%ற்கும் குறைவான இட ஒதுக்கீட்டில் ஒரு மூலையில் முடங்கிக்கிடந்த தமிழ்ப்பகுதியை தேடி ஐந்தாறு புத்தகங்களை தேடி எடுத்தேன். பிறகு நானும் ஒரு பெண்ணும் ஒரிடமும் உறவுக்காரனும் மற்றபெண்ணும் இன்னொரு இடத்தில் என சனநெரிசலில் தவறுப்பட்டு தேடிக்கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்தோம் (அன்றிரவே உறவுக்காரனுக்கு இலண்டனுக்குப் போகவேண்டியிருந்தது). இடையில் அண்ணாசாலையால் வரும்போது 'அண்ணாசாலையில் சென்னை அண்ணாசாலையில், ஒரு ஏழு வர்ண வானவில்லைப் பார்த்தேன்' என்று உரத்துப் பாடி, ஆட்டோக்காரரையும், வெளியில் போய்க்கொண்டிருந்தவர்களையும் கொஞ்சம் முழிக்கவைத்தோம்.

ஏ.வி.எம்மில் சுழலும் பூமிப்பந்தைத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அருகில்தானே இருக்கிறது என்று ஒரு மாலைப்பொழுதில் நடந்துபோய் பார்த்தால், மிகச்சிறிய உருண்டையில் உலகம் இருந்ததைப் பார்த்து சரியான ஏமாற்றமாயிருந்தது. அப்படியே பக்கத்தில் திருப்பாச்சி சூட்டிங் நடப்பதை அவதானித்தபோதும், நான் உள்ளே போனால் இயக்குநனர் விஜயை விட்டுவிட்டு என்னை த்ரிஷாவுடன் ஆடச்சொல்லிவிடுவோரோ என்ற பயத்தில் நான் உள்ளே போய் சூட்டிங் பார்க்கவில்லை. திருவள்ளுவர் கோட்டம் பார்க்க விருப்பமிருந்தும், ஒரு தமிழக நண்பர் அது நன்கு இப்போது பராமரிக்கப்படுவதில்லை என்று சொல்ல அந்த ஆசையை நிறைவேற்றமுடியாமல் போயிவிட்டது. அவ்வாறே கோயம்பேடு மார்க்கட்டையும், பஸ் ஸ்டாண்டையும் (அக்கா சொன்னார் ஆசியாவில் இது இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய பஸ்தரிப்பு நிலையம் என்று, தகவல் சரியா தெரியவில்லை) முழுதாக ஆறுதலாகச் சுற்றிப்பார்க்க முடியாமல் போய்விட்டது. அம்மா மற்றும் வந்திருந்த உறவுக்காரர் எல்லாம் திருப்பதி இன்னபிற கோயில்களுக்கு செல்ல, நான் மொட்டைமாடியை விட்டுப்பிரிய மனமில்லாததால், அக்காவோடு நின்று அவரது குழந்தையை day care செய்வதாய் சொல்லி தங்கிவிட்டேன்.

(3)ஒரு விடிகாலைப்பொழுதில் மகாபலிபுரத்திற்கு போனோம். அந்த நெடும்வீதியில்தால் சூர்யா 'காக்க காக்க' பாடலை Qualisல் ஆடிப்பாடினார் என்று டிரைவர் அண்ணா சொல்ல, நானும் என்னை சூர்யாவாய் கற்பனை செய்துகொண்டு ஜோதிகா எங்கையாவது தெருவில் நிற்கின்றாரோ என்று தேடிக்கொண்டு மகாலிபுரம் போய் சேர்ந்தேன். ஒரளவு அதிகாலையில் போனதால் மிகக்குறைவாக மக்கள் இருந்தார்கள். கடற்கரை மிகவும் அழகாகவிருந்தது (ம்..ட்சுனாமி வந்து எவ்வளவு சேதத்தை உண்டுபண்ணியதோ?). பிறகு சிற்பங்களை இரசிக்கப்போனோம். இத்தனைகாலமும் ஒரு கனவாய் இருந்ததை நெருங்கிப்பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியிற்கு அளவேயில்லை. ஆற அமர நெடுந்தூரம் நடந்து எல்லாம், சிற்பங்களையும் கோயில் மாதிரி அமைப்புடன் இருந்த கட்டடங்களையும் பார்த்தோம். பல்லவர் காலத்திலிருந்தே ஓய்ந்துவிடாத உளியின் சத்தம் இன்னும் அங்கே சிலைகள் செய்துகொண்டிருப்பவர்களிடம் தொடவதைக் கண்டேன். எவ்வளவு அற்புதமாய் சிலைகள் எல்லாம் செதுக்கிக்கொண்டிருக்கின்றார்கள். பிள்ளையார் எல்லாம் கம்பியூட்டருடன் இருப்பதைப் பார்க்கும்போது இவர்களது உழைப்பும் சரியான வழியில் அடையாளாங்காட்டப்படாததால் ஒருவித சமரசத்திற்கு வந்துவிட்டார்கள் என்ற நிஜத்தின் கொடுமை புரிந்தது.பிறகு அப்படியே செஞ்சியினூடாக போய்க்கொண்டிருக்கும்போது, உயர்ந்து நின்ற செஞ்சி மலைக்கோட்டை ஒரு காலத்தைப் பிரதிபலித்தபடி நின்றது கண்ணில் தெரிந்தது. அதில் ஏறிப்பார்க்க ஆவல் இருந்தாலும் ஒரு நாளிலேயே காஞ்சிபுரம் வரை போய் சென்னை திரும்பும் எண்ணம் இருந்ததால் சாத்தியமாகவில்லை. புளியமரங்கள் நிரையாக நின்ற வீதியும், பசுமை விரித்த வயல்களும் செஞ்சிக்கு அழகு கொடுத்தன. இடையில் இறங்கி வயலில் நின்று படமும் எடுத்துக்கொண்டோம். வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் 'கவனம் பார்த்து நடவுங்கள் முள்ளுவேலி ஆடுகளுக்காய் போடப்பட்டிருக்கிறது' என்று பரிவோடு சொன்னார்கள். வயலும், சற்றுப்பாழடைந்த மாதிரி இருந்த கிணறும் எங்கள் ஊரை நினைவுபடுத்தியது. ஊரில், சிறுவயதில் அம்மாவோடு புல்லுப் பிடுங்குவதறகாய் சென்ற வயல் எல்லாம் நினைவில் வந்துபோயிற்று.அப்படியே திருவண்ணமலையைப் போய்ச்சேர்ந்தோம். அந்தக் கோபுரங்களின் உயரத்தை எவர் பார்த்தாலும் ஒரு கணமாவது வியக்கத்தான் செய்வர். இதுவரைகாலமும் மாவிட்டபுரக்கோபுரத்தை பெரிதாக நினைத்த என்னை நான்கு திசைகளிலும் விரிந்த கிடந்த திருவண்ணாமலைக் கோபுரங்கள் திகைக்க வைத்தன. அதைவிட உள்ளே அமைந்திருந்த தீர்த்தக்கேணிகளும் (ஆனால் பராமரிப்பற்று இருந்தன) அந்த சூழலுக்கு மிகவும் இரம்மியத்தைக் கொடுத்திருந்தன. திருவண்ணாமலைக்கு போவது என் நெடுங்காலக் கனவாய் இருந்தது. யோகி ராம்சுரத்குமார் உயிருடன் இருந்தகாலங்களில் எப்படியாவது ஒருமுறையாவது திருவண்ணமலைக்கு சென்றிடவேண்டும் என்ற ஆசையிருந்தது. இன்றைய பொழுதில் என மன சஞ்சலங்கள், கவலைகள் என எதுவந்தாலும் நான் மனத்திரையில் கொண்டுவருவது யோகி ராம்சுரத்குமார்தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நம்பிக்கை மாதிரி எனக்கு அவர். இன்றும் எனது அறையில் சுவாமிப்படங்களைவிட அவரது படத்தைத்தான் படுக்கைக்கருகில் வைத்திருக்கின்றேன். திருவண்ணாமலையில் வந்ததற்கு ஆகக்குறைந்தது யோகி ராம்சுரத்குமாரினதும், ரமண மகரிஷியினதும் சமாதிகளைப் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரம் போதாததால் அவற்றையெல்லாம் பார்க்கமுடியாது போய்விட்டது. மதியப்பொழுதில், சரவணபவனில் Chicken 65 போல brocolli யில் செய்த சைவ உணவும் மிகவும் உருசியாகவிருந்தது. இப்படித்தான் மச்சாளின் திருமணப்பொழுதில் தமிழகத்து சாப்பாட்டை நல்லாய் வெட்டு வெட்டினேன். பன்னீர்கறியின் சுவைக்காய் இன்னொரு முறை கட்டாயம் தமிழகம் போகத்தான் வேண்டும். நாங்கள் சாப்பிடுவதைப் போலன்றி தமிழகத்தவர் வேறு மாதிரி சாப்பிடுபவர்கள் என்று சி.புஷ்பராஜாவின் 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' வாசித்தபோது பிறகு அறிந்தேன். நாங்கள் எல்லாக் கறிகளையும் ஒரே நேரத்தில் பிசைந்து சாப்பிடத்தொடங்கிவிடுவோம். தமிழகத்து வாசிகள் ஒவ்வொரு கறிகளுடன்தான் சாப்பிடுவார்கள். இப்படி தமிழகத்தில் ஒரேநேரத்தில் கறிகளைப் பிசைந்து சாப்பிடுபவர்கள் நரிக்குறவர் இனம் மட்டுந்தான் என்று பிறகு கேள்விப்பட்டேன். பரவாயிலலை நாங்களும் ஏதோ ஒருவிதத்தில் நாடற்றவர்களாய், நாடோடிகளாய் இருப்பதால் இப்படிச் சாப்பிட்டால் தவறில்லை என்று யார் கேட்டாலும் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். (வாசிக்கும் நண்பர்கள் பயப்பிடவேண்டாம் அடுத்தமுறை வரும்போது அப்படிச் சாப்பிட பழகிக்கொண்டு வருகின்றேன்).இறுதியில் காஞ்சிபுரத்தில் சில கோயில்களுக்குச் சென்றோம். பிறகு பெண்கள் காஞ்சிபுரத்தில் புடைவைகள் பார்க்க கடைகளுக்கு ஏறியிறங்கத் தொடங்கிவிட்டார்கள். கடைக்காரர்கள் கையால் நெய்வதற்கும் மெஷினால் நெய்வதற்கும் இடையிலுள்ள வித்தியாசங்களையெல்லாம் விளங்கப்படுத்தினார்கள். நானும், எதிர்காலத்தில் வரப்போகும் துணைக்காய என்ன கலரில் புடைவை வாங்கலாம் என்று கனவு கண்டுகொண்டு அவர்களின் பின் வழமைபோல அலையத்தொடங்கினேன்.

திருமண விசயத்திற்காய் வந்தததாலும், உறவுக்காரர்கள் நிரம்ப இருந்ததாலும் அதிக இடங்களுக்குப்போகவில்லை. பக்கத்திலிருந்த பெசண்ட் நகர் பீச்சிற்கோ அல்லது அசோக் நகரிலிருந்த உதயம் தியேட்டரில் ஒரு படமோ பார்க்கவில்லை என்பது மிகவும் சோகமான விடயந்தான். பாண்டிச்சேரிக்கும் (அய்யோ நீங்கள் நினைக்கின்ற விடயத்திற்கு அல்ல) கேரளாவிற்கும் போகாததும் மற்றொருபுறத்தில் கவலைதான். அதிலும் தமிழகத்தில் சந்தித்தவர்கள் எல்லாம், ஈழத்தவரின் பல விடயங்கள் (தேங்காய்ப்பூச்சாப்பாடு உட்பட) கேரள மக்களோடு ஒத்துக்கொள்ளப்போக்கூடியதென்று சொன்னதை, நேரில் சென்று அவதானிக்கமுடியாது போய்விட்டது. சிலவேளைகளில் ஆலப்புழையிலோ வேறெங்கோ கோபிகா போல ஒரு பெண் எனக்காய் வீணையை வாசித்துக்கொண்டு காத்திருந்திருக்கவும்கூடும் என்பதை நினைத்தால் இன்னும் நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது. பரவாயில்லை, இன்னொரு தமிழகப்பயணம் சாத்தியப்படாமலா போகப்போகின்றது. அடுத்தமுறை போனால், நிறைவேறாத ஆசைகளைப் பூர்த்தி செய்வதுடன், பிரியமுள்ள பல வலைப்பதிவு நண்பர்களையும் சந்திக்கமுடியுந்தானே. ஆகா இந்தக்கனவை இன்றிலிருந்து ஒரு செடியைபோல வளர்ப்பது கூட மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய்த்தானிருக்கிறது.

{எவரெவரோ எல்லாம், அவருக்கு இவருக்கு என்று சமர்ப்பணம் செய்யும்போது, இந்தப்பயணக்குறிப்பை சென்னையில் நின்ற வாரம் முழுதும் பரவசமான நிலையில் என்னை வைத்திருந்த சென்னைத்தேவதைக்கு காணிக்கையாக்குகின்றேன். நேரங்கனிந்தால், 'சென்னைத்தேவதையும் மழைக்காலமும்' என்று செல்வராகவனின் '7/G ரெயின்போ காலனி' போல மொட்டைமாடியைப் பின்னணியாகக்கொண்டு ஒரு திரைப்படத்தையும் எடுத்து அந்தத் தேவதைக்கே காணிக்கையும் செய்வேன் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.}

27 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஞாபகம் வருதெ! ஞாபகம் வருதே.

இண்டைக்கு நித்திரை வந்தமாதிரித்தான். ஊரைப்பற்றி எழுதி இப்படி தொல்லை கொடுக்கிறீரே. உம்ம தலைல இடியும் மழையும் விழ!

(சென்னை & சுற்று வட்டாரத்தை ஒன்றும் விடாமல் அலசி, என் கால் பட்ட புண்ணிய இடங்களின் நினைவுகளை அசைபோட ஆசை. ஒரு நாள் செய்யோணும். அதுவரைக்கும் இந்தமாதிரிப் பதிவுகளைப் படிச்சு பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியதுதான். இண்டைக்குத்தான் சென்னையில் பல வருடம் இருந்த மலேசியத் தமிழர் ஒருவரோடு கதைத்தேன். வீட்ட வந்தா, உங்கட பதிவு.

3/28/2005 01:37:00 AM
Narain Rajagopalan said...

ஆஹா! என்ன எழுத்து நடையெய்யா உமக்கு. பின்னி விட்டீர்கள். டீசே, பேசாமல், எழுதும்போது நான் அஸ்ஸிஸ்டென்டாக சேர்ந்து விடுகிறேன் ;-) அடுத்த முறை சென்னை வரும்போது உங்களின் பயணதிட்டத்தில் ஒருநாள் என்னோடு ஒதுக்குங்கள். டீக்கடைகள் தாண்டி, பஞ்சாபி தாபாவும், மகாபலிபுரத்திலிருந்து கொஞ்சமே தூரம், பாண்டிச்சேரி போகும் பாதையில் நல்ல பனங்கள்ளும், தென்னங்கள்ளும்,சாந்தி தியேட்டர் சப்வேயில் உலகின் புராதன தொழிலும், மிகச்சிறந்த புத்தகங்கள் தோசை சாப்பிடுவதின் விலையை விட குறைவாகவும், வாய்ப்பு இருந்தால், பெசன்ட் நகர் டப்பாச்சோறும், ஸ்டுடியோ 5வில் ஆங்கில படமும் கூட்டிப்போவதாக இப்போதே வாக்கு தருகிறேன்.

3/28/2005 01:39:00 AM
Thangamani said...

//ஆகா இந்தக்கனவை இன்றிலிருந்து ஒரு செடியைபோல வளர்ப்பது கூட மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய்த்தானிருக்கிறது. //

நல்ல நடை. கனவு நனவாக வாழ்த்துகள்!

நாரயணன் நான் சென்னையில் இருந்த காலங்களில் இப்படிப்பட்ட நல்ல விசயங்களைத் (நல்ல பனங்கள்ளும், தென்னங்கள்ளும்) தந்து ஆற்றுப்படுத்துவாரின்றி அல்லலுற்று அலைந்தேனே, நீங்கள் எங்கிருந்தீர்கள்?
:)

3/28/2005 01:49:00 AM
Vijayakumar said...

ஆகா டீசே, உங்களுக்குள்ளேயும் இருக்கும் சந்தோஷத்தில் இவ்ளோ சோகங்களா? மொட்டை மாடி நிலாவை நினைந்து தின பொழுதும் இராப்பொழுதும் சுகமாக தூங்கும் அருமை நண்பனே, தமிழகம் என்று சொல்லிவிட்டு சென்னை மட்டும் வந்து விட்டு போனால் எப்படி?

அப்படி தென் தமிழகத்துக்கும் வந்து எல்லையற்ற அழகை பருகிவிட்டு செல்லுங்களேன். பொதிகை மலை,குற்றாலம்,முக்கூடல் சங்கமம்,பரணி என்று எங்கள் ஊரிலும் வளம் கொழிக்கிறது டோய்.தமிழ்நாட்டுக்கு வந்த சொல்லுங்க, நான் அங்கிருந்த அப்படியே நம்மூருக்கு உங்களை அள்ளிக் கொண்டு போய் விடுகிறேன். ஆனால் மொட்டை மாடி நிலவுக்கு உத்திரவாதம் தரமுடியாது டே :-)

3/28/2005 02:13:00 AM
Anonymous said...

It was very interesting to read.
I like the piece.

3/28/2005 02:33:00 AM
Narain Rajagopalan said...

தங்கமணி, அடுத்தமுறை கண்டிப்பாக சென்னை வருமுன் ஒரு மடலிடுங்கள். கள்ளுக்கு நான் கியாரண்டி.

3/28/2005 03:31:00 AM
ROSAVASANTH said...

டீஜே, மிகவும் சுவாரசியமான, நெஞ்சை தொடும் பதிவு. செப்டம்பருக்கு பிறகு வாருமய்யா. நரேன் கள்ளுக்கு கேரண்டி என்கிறார்.(எனக்கும் சொல்லுமய்யா!) சென்னையில் கள்ளு நான் கேள்விபட்டதில்லை. ஆனால் சுண்ட கஞ்சி என்று ஒன்று பெசண்ட் நகர் பக்கம் கிடைக்குமய்யா! (மாத்திரை கீத்திரை கலக்காத) நல்ல நயம் சுண்ட கஞ்சிக்கு நான் கேரண்டி.

(சுண்ட கஞ்சி என்பது rice beer என்று அழைக்கு கூடிய சோற்றை பூமிக்கடியில் புதைத்து வைத்து உருவாக்கப்படும் கள்ளு.)

3/28/2005 04:19:00 AM
வசந்தன்(Vasanthan) said...

டி.சே. அருமையாயிருக்கு. நீர் கள்ளுக்குடிக்க அவுஸ்திரேலியாவுக்கு வாறதுக்குப் பதிலா தமிழகம் போகலாம். மற்றது சாப்பிடிற முறை பற்றி எழுதியிருந்தியள். என்ன நிறைய முற இதுக்காக நக்கலடிச்சிருக்கினம். ஆனா நான் மாறவேயில்ல, குழைச்சுச் சாப்பிடிறதிலயிருந்து சாப்பிட்டு முடிய கை சூப்பிறது வரைக்கும்.

3/28/2005 04:58:00 AM
Thangamani said...

மிக்க நன்றி நாராயணன்!
:))

3/28/2005 05:03:00 AM
வசந்தன்(Vasanthan) said...

மதி! இங்க பாருங்கோ. உங்கட ஊர்ப்பக்கம் போலக் கிடக்கு.
http://eelamfotos.blogspot.com

3/28/2005 06:04:00 AM
பத்மா அர்விந்த் said...

நான் சிறு வயதில் படித்த மணியனின் பயணக்கட்டுரையைவிட சுவையாக இருந்தது உங்கள் பத்வு. நான் சென்னையில் தங்கியதே இல்லை, என்வே மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன்.

3/28/2005 07:14:00 AM
Anonymous said...

பதிந்தது:கயல்விழி

நீங்கள் பார்த்த தமிழகம் நன்றாய் சொல்லியிருக்கிறீர்கள் DJ.

28.3.2005

3/28/2005 07:28:00 AM
இராதாகிருஷ்ணன் said...

சுவாரசியமான பதிவு. //வெள்ளிக்கடைக்கு (பெயர் ஞாபகத்திலில்லை) முன் போடப்பட்ட நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டேன்.// இந்த அனுபவப்பட்டியலில் சேர்ந்த அடுத்த தமிழன் நீங்கள் ;-)

3/28/2005 08:28:00 AM
சன்னாசி said...

டிஜே - நல்ல பதிவு; மலரும் நினைவுகள் ஆளை அமுக்கிவிடும் போல! பல்லவனில் இடிபட்டு நசுங்கிப் பிரயாணித்து 'நட'ராஜா சர்வீஸில் சென்னை முழுக்க சுற்றித் திரிந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. Sighh.....

ரோஸாவசந்த், நாராயண்: சென்னை நகருக்குள் கள் எங்கே கிடைக்கிறதென்று தெரியவில்லை, ஆனால் புறநகரில் (பொத்தேரி - அந்தப் பக்கம்...) ஒரு ரகத்தில், சுண்ணாம்பு ருசியுடன் கிடைக்கும்...

மற்றபடி, சென்னை எனும்போது மறக்கமுடியாமலிருப்பது கல்லூரி ஆரம்பகால ragging தான். இரவில் எவராவது சீனியர்களிடம் மாட்டிக்கொண்டால், தெருவில் எரிந்துகொண்டிருக்கும் சோடியம் வேப்பர் விளக்குகளின்முன் போய் நிறுத்தி, "ஊதியே அணைடா அதை" என்று உயிரை வாங்குவார்கள். பைத்தியக்காரன் மாதிரி அதன் கீழே நின்றுகொண்டு ஃப்பூ ஃப்பூ என்று ஊதிக்கொண்டிருப்பதைத் தெருவில் போகிறவர்கள் பார்க்கும் ஒரு பார்வை இருக்கிறதே... ஹிஹி!! இதுமாதிரி இன்னும் எத்தனையோ...

3/28/2005 09:16:00 AM
Vijayakumar said...

ஐய்ய்ய்ய்... சென்னையில கள்ளா? பாக்கெட் சாராயம் கண்டிருக்கிறேன்... எனிவே இன்னும் கொஞ்ச நாள்ல சென்னைக்கு வந்திருவேன். டிசே இல்ல தங்கமணி இல்ல ப்ளாக்கர் மக்கள் ஊர்பக்கம் வந்த கள்ளுக்கடையில ப்ளாக்கர் மீட்டிங் போட்டிரலாம். தலீவர் நாராயணன் தலைமை தாங்குவார் என பெருமையுடன் இந்த கணத்தில் சொல்லிக் கொள்கிறேன்....

3/28/2005 09:58:00 AM
Muthu said...

///நான் உள்ளே போனால் இயக்குநனர் விஜயை விட்டுவிட்டு என்னை த்ரிஷாவுடன் ஆடச்சொல்லிவிடுவோரோ என்ற பயத்தில் நான் உள்ளே போய் சூட்டிங் பார்க்கவில்லை.///

///சென்னைத்தேவதைக்கு காணிக்கையாக்குகின்றேன்.///

DJ,நடக்கட்டும் நடக்கட்டும் :-).
அருமையான ஒரு புத்தகமே எழுதிவிடுவீர்கள் போலத் தெரிகிறதே ..

3/28/2005 11:15:00 AM
கறுப்பி said...

h ஓகோ டீசே. என் இந்தியப் பயணத்தை மீண்டும் மீட்டுப்பார்க்க வைத்து விட்டீர்கள். உங்களைப் போல்த்தான் கேரளா சென்ற போது மம்முட்டி கண்ணுக்குத் தென்படுகிறாரா என்று என் கண்கள் தேடியதுண்டு (என்ர வயதுக்கு அவர்தானே) நானும் சாலிக்கிராமம் தான்.. முன் வீதியால் பல உதிரி நடிகர்கள் நடந்து செல்வதைக் கண்டிருக்கின்றேன். விஜெயும் கிட்டத்தில் தானே.
கே.கே நகரில் நான் குடித்த சாத்துக்குடி ஜூஸ் குடித்ததையும், கேரளாவில் கள்ளுக் குடித்ததையும் இன்னும் மறக்கமுடியவில்லை.

நாராயணன் டீசேக்கு மட்டுமா அந்த அழைப்பும் வரவேற்றும்? இல்லாவிட்டால் எனக்கும் கிடைக்குமா..

3/28/2005 12:48:00 PM
இளங்கோ-டிசே said...

நேற்று நள்ளிரவு இந்தப்பதிவை எழுதிவிட்டு, கவனமாகத் திருப்பிப்பார்க்காமல் பதிவிலிட்டு உறங்கப்போய்விட்டேன். இப்போது நிதானமாய்ப் பார்த்தால் வசன, எழுத்துப்பிழைகள் மலிந்து கிடப்பது தெரிகின்றது. இந்தப்பிழைகளையெல்லாம் சகித்துக்கொண்டு வாசித்து, பின்னூட்டங்களும் எழுதிய அனைத்து நண்பர், நண்பிகளுக்கும் மிக்க நன்றிகள்.
நரேன், ஏற்கனவே உங்களின் டீக்கடைப்பதிவில் சிலவிடயங்கள் கூறி தமிழகத்திற்கு திரும்பவருவதற்கான என் ஆசைத்தணலை ஊதிவிட்டது காணாது என்று, இதிலும் பலவிசயங்களைச் சேர்த்து அந்தத்தீயைக் கொழுந்துவிட்டெறியச் செய்திருக்கின்றீர்கள். குளிராய்க் கிடக்கிறதென்று கம்பளியைப் போர்த்திக்கொண்டு கிடப்பவனிற்கு கள்ளுக்குடிக்கும் கனவையெல்லாம் வளர்த்துவிடுவது நியாயந்தானா?
வசந்த், சுண்டக்கஞ்சியோடு கூட கருவாடும் இருக்குந்தானே. கட்டாயமாக நீங்கள் தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்ததன்பிறகு உங்களுக்கு கொஞ்சமாவது செலவு வைக்காமல் விடுவதில்லை என்று இப்போதே உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.
விஜய், உண்மைதான் சென்னைக்குறிப்பு என்றுதான் முதலில் குறிப்பிட நினைத்தேன். பிறகு காஞ்சியெல்லாம் போனதை எழுதியதால் அப்படிச் சொல்ல முடியாமற்போய்விட்டது. //பொதிகை மலை,குற்றாலம்,முக்கூடல் சங்கமம்,பரணி என்று எங்கள் ஊரிலும் வளம் கொழிக்கிறது டோய்// எழுத்தில் கூறுவதே இப்படி அழகாக இருக்கும்போது தென் தமிழகம் இன்னும் எவ்வளவு செழுமையாக இருக்கும். எங்களுக்கு இடங்கள் காட்டிக்கொண்டிருந்த டிரைவர் அண்ணாவும் உங்களை மாதிரித்தான் சொன்னவர். அவருக்கு ஊர் மதுரைப்பக்கம். தங்கள் ஊர்ப்பக்கம் வந்தால் தமிழகத்தின் சொர்க்கத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கலாமென்று கூறியது ஞாபகத்திலுண்டு. அதுசரி, விஜய், உங்கள் ஊரில் தாவணிகளோடும் மல்லிகைப்பூச்சரங்களோடும் திரியும் பெண்களைப் பார்த்து நான் மயங்கிக்கியங்கிப்போனால், எட்டுப்பட்டிகளையும் கூப்பிட்டு, பஞ்சாயத்து வைத்து கசையடிகள் ஒன்றும் தரமாட்டேன் என்று முன்னுக்கே வாய்மொழி உத்தரவாதம் ஒன்று எனக்கு தாருங்கள் (எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்).
மதி, உங்களின் அனுபவங்களை எல்லாம் எப்போது விரிவாக எழுதப்போகின்றீர்கள்? மொட்டைமாடி அனுபவங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை சென்சார் செய்துவிட்டாவது எழுதுங்கள், பரவாயில்லை :-).
மாண்ட்ரீஸர், //இரவில் எவராவது சீனியர்களிடம் மாட்டிக்கொண்டால், தெருவில் எரிந்துகொண்டிருக்கும் சோடியம் வேப்பர் விளக்குகளின்முன் போய் நிறுத்தி, "ஊதியே அணைடா அதை" என்று உயிரை வாங்குவார்கள். பைத்தியக்காரன் மாதிரி அதன் கீழே நின்றுகொண்டு ஃப்பூ ஃப்பூ என்று ஊதிக்கொண்டிருப்பதைத் தெருவில் போகிறவர்கள் பார்க்கும் ஒரு பார்வை இருக்கிறதே... // இரசித்துச் சிரித்தேன். ம்...எனக்கெல்லாம் இந்த ragging அனுபவங்கள் இல்லையென்பது கொஞ்சம் கவலைதான். ஆனால் சென்றவருடத்தில் ஈழத்தில் நின்றபோது பலரது ragging அனுபவங்களைக் கேட்டு இரசித்திருக்கின்றேன் (அவஸ்தைப்பட்டவனுக்குத்தானே அந்த வலிபுரியும் என்று நீங்கள் சொல்வதும் புரிகின்றது).
பத்மா அர்விர்ந், நான் நீங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன். இல்லாவிட்டால், சென்னையில் வசிக்காது வேறு நகரங்களிலும் வசித்திருக்கின்றீர்களா?
மற்றும், பின்னூட்டம் இட்ட தங்கமணி, வசந்தன், பத்மநாப ஜயர், கயல்விழி, ராதாகிருஷ்ணன், முத்து, கறுப்பி அனைவருக்கும் மீண்டும் நன்றி.
இறுதியாய், கள்ளுக்குடிப்பதற்காய் கூடும் கூட்டத்தைப் பார்த்தால், ஒரு தமிழினி மாநாடு போல வலைப்பதிவர் மாநாட்டை(காசி, மதி மன்னித்துக்கொள்க) கள்ளுக்குடித்துக்கொண்டு நடத்தலாம் போன்று கிடக்கிறது. Co-ordinator நரேன் என்ன சொல்கின்றீர்கள் :-) ?

3/28/2005 09:36:00 PM
Anonymous said...

பதிந்தது:சுதர்சன்

ஒரு சின்ன சைஸ் புத்தகம் அளவுக்கு பெரிய பதிவு. மிகவும் அருமையான நடை, சுவையான பதிவு.

29.3.2005

3/29/2005 06:37:00 AM
கறுப்பி said...

DJ
//கள்ளுக்குடிப்பதற்காய் கூடும் கூட்டத்தைப் பார்த்தால், ஒரு தமிழினி மாநாடு போல வலைப்பதிவர் மாநாட்டை கள்ளுக்குடித்துக்கொண்டு நடத்தலாம் போன்று கிடக்கிறது. Co-ordinator நரேன் என்ன சொல்கின்றீர்கள் :-) ? \\

எதிராகத் தொழிற்படத் தொடங்கி விட்டார் சந்திரவதனா. "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே" என்று எல்லோரையும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்

3/29/2005 11:10:00 AM
Narain Rajagopalan said...

இப்பத்தானய்யா பார்த்தேன். அட வலைப்பதிவு சனங்களா, போற போக்கைப் பார்த்தா, நான் கள்ளுக்கடை ஒனராக இருந்தாலேயொழிய, கட்டுப்படியாகாது போலிருக்கே.

இதனால், சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், எனக்கு ECR-ல் பாண்டிச்சேரி போகும் ஹைவேயில் சில இடங்களைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். பக்கத்துவீட்டு மனிதர்கள் ஊரிலிருந்து கொண்டுவரும் (தூத்துக்குடி) கள்ளான பதனீரை குடித்திருக்கிறேன் அவ்வளோதான். ஒரே ஒரு தடவ, கொடைக்கானலில் கள்ளு ஒரு சொம்பு குடித்திருக்கிறேன். இதனால், சென்னையில் நாராயணனுக்கு கள்ளுக்கடைகள் தெரியும் என்று நினைத்து ப்ளைட்டை விட்டு இறங்காதீர்கள். நான் பொறுப்பல்ல. தமிழினியில் "கள்ளுக்காவியம்" பாடவேண்டுமானால் நிகழ்ச்சியை நாகர்கோயில், கன்னியாகுமரியில் வைத்துக் கொள்ளுங்கள் ; ) மாண்டீ சொன்னது போல், பொன்னேரி தாண்டிப் போனால் கள்ளு கிடைக்கும், ஆனால், நம்ம மக்கள், பேட்டரி போட்டு காய்ச்சுவதால், பின்விளைவுகளுக்கு நான் கியாரண்டி கொடுக்க முடியாது. மற்றபடி, பதனீர் சென்னை காதி கிராப்டிலேயே கிடைக்கிறது. கொஞ்சமாய் கோயம்பேடு தாண்டி, மதுரவாயல், வானகரம் வழியாய், பூந்தமல்லி தொட்டு உள்ளே போனால் கள்ளு கிடைக்குமென்று நினைக்கிறேன்.

அழைப்பு எல்லோருக்குமே, ஆனால் சீசன், பொலீஸ் கெடுபிடியை பொறுத்தது.

சுண்டக்கஞ்சி, டப்பாச்சோறு விஷயங்களுக்கு ரோசாவசந்தினை தொடர்பு கொள்ளவும் ; )

//ஒரு தமிழினி மாநாடு போல வலைப்பதிவர் மாநாட்டை(காசி, மதி மன்னித்துக்கொள்க) கள்ளுக்குடித்துக்கொண்டு நடத்தலாம் போன்று கிடக்கிறது. Co-ordinator நரேன் என்ன சொல்கின்றீர்கள் :-) ?//

வாணாம் சாமி. இந்த விளையாட்டுக்கு நான் வரலை, ஐ யம் எஸ்கேப்பு.......

3/30/2005 01:15:00 AM
ROSAVASANTH said...

//வசந்த், சுண்டக்கஞ்சியோடு கூட கருவாடும் இருக்குந்தானே.//

டீஜே, கருவாடு என்ன, நண்டு எல்லாம் சேர்த்து கடற்கரையில் விருந்து படைக்கிறேனய்யா! (ஆனால் ஜாக்கிரதை, சுண்ட கஞ்சியில் போதை வர வைக்க தூக்க மாத்திரைகள் கலப்பதுண்டு, அப்படி ஒருமுறை நிரம்ப சாப்பிட்டு இரண்டுநாள் வேதனை! நான் நயம் சுண்டகஞ்சிக்கு கேரண்டி).

நாரயணன், இப்படி தூத்துகுடி கள்ளை பதனீர் என்று கேவலப்படுத்தியதை கண்டிக்கிறேன். தூத்துகுடி கள் என்றால் அது கள்தான். பதனீர் என்பது போதை தராத கள் புளிக்கும்(fermentation) முன்னர் உள்ள வடிவம். அது எல்லா ஊரிலும் பதனீர்தான். அது புளித்தால் எல்லா ஊரிலும் கள்தான். நீர் தூத்துகுடி பதனீர் குடித்திருக்கலாம், ஆனால் தூத்துகுடி கள்ளின் பெயர் பதனீர் அல்ல.

மத்தது செப்டம்பருக்கு பிறகு பாருமய்யா!

3/30/2005 01:38:00 AM
Narain Rajagopalan said...

//நாரயணன், இப்படி தூத்துகுடி கள்ளை பதனீர் என்று கேவலப்படுத்தியதை கண்டிக்கிறேன். தூத்துகுடி கள் என்றால் அது கள்தான்.//
தலவரே, ஜில்லான பதனீர் என்று எழுதலாமென்று நினைத்து, பிழையாகிப் போனது. நீங்கள் சொல்வதுதான் சரி.
"நான் சால்ட்கொட்டா, நீ சைதாப்பேட்டை ....." ;)

3/30/2005 01:47:00 AM
Anonymous said...

பதிந்தது:raji

நல்ல அரட்டை அரங்கம். இந்த இலக்கிய காரருக்கு விசுவின் அரட்டை அரங்கம் தோற்றுப்போய்விடும்

30.3.2005

3/30/2005 06:43:00 AM
Anonymous said...

ஐயா என்னையும் தயவு செய்து கள்ளுக் குடிக்கு சேர்த்துக் கொள்ளுங்க.. கள்ளுக் குடிக்க ஆசையாய் இருக்கு ( போன முறை இலங்கை போன போது கள்ளு குடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன் ஒரு கள்ளுக்கடையும் என் கண்னுக்கு தேரியவேயில்ல எல்லாம் காலஞ்செய்த சதி.....)

6/04/2005 09:57:00 AM
Unknown said...

//இலங்கை போன போது கள்ளு குடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன் ஒரு கள்ளுக்கடையும் என் கண்னுக்கு தேரியவேயில்ல //

பக்கத்துலே யாரும் போலீஸ்காரர் நின்றிருந்தால் வழி கேட்டு போயிருந்திருக்கலாமே?!

டிசே.. பின்னீட்டீங்க போங்க!

அப்புறம் அந்த சாப்பாடு மேட்டரெல்லாம் பொது இடங்களிலெல்லாம் தான் அப்படி. வீட்டிலே போய் பார்த்தீங்கன்னா எல்லாருமே நரிக் குறவர்கள் தான்!

6/05/2005 05:56:00 PM
Anonymous said...

சுட்டிக்கு நன்றி டிசே ஒரு வருசம் முன்னாடி வலைபதிய வராம போனது இப்ப ஏக்கமா இருக்கு..
:)

1/17/2008 11:41:00 AM