நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

மோட்டார் சைக்கிள் டயரிகளை முன்வைத்து...

Monday, March 07, 2005

"திரு உருவைக் கலைத்துப்பார்க்கும்போது சே இன்னும் அழகாகத் தெரிகிறார். மனிதம் மிக அழகானது. அது ரத்தமும் சதையுமானது. திரு உருவாக்குதல் மனிதத்தைச் சிலையாக்குவது. அதிலிருந்து ஈரப்பசையை அகற்றுவது. வியந்து திகைப்பதைக் காட்டிலும் விமர்சித்துப் புரிய முயற்சிப்பதும் நமது புரிய இயலாமையை நாம் புரிந்து கொள்வதுமே இன்றைய தேவை. "
-அ.மார்க்ஸ் (பெப்ரவரி உயிர்மையில்)

(1)
சில நாள்களுக்கு முன் மோட்டார் சைக்கிள் டயரிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்ந்தது. எப்போதும் எனக்குள் ஆளுமைகளின் ஆரம்பகால வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வம் நீருற்றைப் போல் சுரந்து கொண்டேயிருக்கும். எவருமே பிறந்தவுடயே ஞானிகளாக ஆவதில்லையாததால் அவர்களின் பால்ய காலம் எப்படி ஆளுமைகளாக மாறப் பூச்சூடிக்கொள்கிறது என்பதை அறிவது மிகவும் சுவாரசியம் வாய்ந்தது. சிறுவயதில் சித்தார்த்தன் எப்படி புத்தரானார் என்று பாடமாக இருந்த தமிழ்ப்புத்தகத்தில் வாசித்ததிலிருந்து ஆரம்பித்த ஆர்வம் இன்னும் என்னிலிருந்து போகவில்லை.மோட்டார் சைக்கிள் டயரிகள் சேயினது வாழ்வில் மிகச் சிறிய பகுதியை இயல்பாகக் காட்டுகிறது. சம்பவங்களினூடு எப்படி சே ஒரு ஆளுமையாக மாறுகின்றார் என்பதைப் பார்ப்பவரிடையே படியவிடுகிறது. இது ஒரு கதாநாயகனுடைய கதையல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயணஞ்செயத இருவரது சம்பவங்கள் என்று திரைப்படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் சொல்வதை கவனமாகக்கொண்டால் படத்தோடு இலகுவாய் ஒன்றிப் போய்விடலாம். நண்பனுடன் சே பயணஞ்செய்வதுடன் படமும் ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் சே, ஒரு குறும்புத்தனம் மிக்கவராய், பெண்களுடன் குதூகலிக்கும் விரும்பும் ஒரு இளைஞனாக காட்டப்படுகிறார். இவை குறித்தகாட்சிகள் மிகவும் அங்கதச் சுவையுடன் படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் மோட்டார் சைக்கிளைத்திருத்தும் மெக்கானிக்கின் மனைவியோடு சேயிற்கு ஏற்படும் மையலும் அதனால் ஏற்படும் விளைவுகளும், பிறகு சிலியில் இரண்டு பெண்களோடு விருந்துண்ணும் காட்சிகளும் இரசித்துச் சிரிக்கக்கூடியவை.

ஒரு காட்சியில், சிலியில் பழுதாகிப்போன மோட்டார் சைக்கிளைத் தள்ளியபடி பசியாய் அவதிப்பட்டபடி சேயும் நண்பர்களும் நடந்துவருகின்றனர். கையில் காசென்று ஒன்றுமேயில்லாதபோதும், உணவு விடுதியொன்றில் நுழையும் இரண்டு பெண்களைக் கவனித்தபடி அவர்களுக்குப் பின் இவர்களும் நுழைகிறார்கள். சரியாய்ப் பசிக்கிறது இவர்களுக்கு. ஆனால் அந்தப்பெண்களிடம் நேரடியாகச் சொல்ல இவர்களுக்குத் தயக்கமாயிருக்கிறது. சேயின் நண்பர் ஒரு பொய்யை முதலில் அவிழ்க்கிறார். இன்றோடு நாங்கள் நாடுகள் சுற்றத்தொடங்கி ஒருவருடமாகிறது. ஆனால் அதைக் கொண்டாடமுடியாத நெருக்கடியில் இருக்கிறோம் என்று பெண்களைப் பார்த்துக்கூறுகின்றனர். உண்மையென நம்பிய பெண்கள், தங்களது செலவில் மதுபானங்களை இவர்களுக்கு கொண்டுவரும்படி உணவுவிடுதியாளருக்கு பணிக்கின்றனர். மதுபானம் வந்தபின்னும் சேயும் நண்பனும் அதை அருந்த மறுக்கின்றனர். ஏன் என்று அந்தப்பெண்கள் கேட்க, அடுத்த பொய்யை அவிழ்த்துவிடுகின்றார்,சேயின் நண்பர். எமது ஆர்ஜெண்ரினா கலாச்சாரப்படி உணவு அருந்தாமல், மதுவருந்துவது தவறென்று கூறுவார்களென்று. பெண்களுக்கு இவர்களின் விளையாட்டு விளங்கிவிட, சிரித்தபடி நல்ல சாப்பாட்டுக்கு உத்தரவிடுகின்றனர்.படம் முழுக்க சேயினது நேர்மை சொல்லப்படுகிறது. சிலவேளைகளில் பொய் சொல்ல சே மறுப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் உணவும் தங்குமிடமும் மறுக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இனி வாயைத் திறந்து கதைக்கவேண்டாம் என்று நண்பன் சேயிற்கு கட்டளையிடுகிறான். சேயினது மிருதுவான நெகிழ்ந்துபோகும் மனது காட்சிகளாலும் அவர் தன் தாயிற்கு எழுதும் கடிதங்களாலும், எழுதும் டயரிக்குறிப்புக்களாலும் சொல்லப்படுகின்றன. தொழிலாளரை மிருகங்களைவிடக் கீழாக மதிக்கும் சம்பவத்தில், சே தனது எதிர்ப்பைக்காட்டுவதற்கு ஒரு கல்லை அவர்களது வாகனத்தின் மீது எறிவது, இன்றும் பாலஸ்தீனியத்தில் சிறுவர்கள் யூத ஆக்கிரமிப்பாளர்கள் மீது எறிவது வரை தொடர்வது மனித இனத்தின் சாபக்கேடென்றுதான் சொல்லவேண்டும். சேயினது நேர்மை உட்சகட்டமாக வெளிப்படுவது வைத்தியர் ஒருவருக்கு அவரின் நூலின் மீதான விமர்சனத்தை சே வைக்கும்போது. பயணத்தின் போது கஷ்டப்படும் இவர்களுக்கு நல்ல உணவும், ஆடைகளும், பணமும் கொடுத்து, இவர்களது வைத்தியச்சேவைக்கும் உதவி செய்யும் வைத்தியர் தானெழுதிய புத்தகம் பற்றிய கருத்துக்கூற சேயுடன் கேட்கும்போது, மிக மோசமாக எழுதப்பட்ட கதை. இப்படி எழுதுவதைவிட எழுதாமல் இருப்பதே சிறந்தது என்று முகத்திற்கு நேரே சொல்கிறார். இப்படி ஒருவர் தனது முகத்திற்கு நேரே சொல்வதை அந்த வைத்தியர் எதிர்பார்க்கவில்லையெனினும், சேயினது நேர்மையைப் பாராட்டி கப்பலேற்றி விடுகிறார். இறுதியில் ஒரு தொழுநோய் விடுதியில் நின்று தமது வைத்தியசேவைகளை சேயும் நண்பனும் செய்கின்றனர். அங்கேதான் தாம் unjusticeற்கு எதிராய்ப்போராடவேண்டுமென்பதற்கான கோரிக்கையை சே முதன்முதலில் முன்வைக்கிறார். அவர் அதை நிச்சயம் ஏதோவொருவகையில் நிகழ்த்திக்காட்டுவார் என்பதை, இறுதிப் பிரிவுவிழா நடக்கும் இரவில் எவரும் கடந்துவிடாத ஒரு குளிராற்றைக் கடப்பதைச் சாதிப்பதன் மூலம் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார் என்றே நான் நினைக்கின்றேன். சே ஒரு ஆளுமையாக வளர்ச்சியடையவதை அவரது தாடி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வதைக் காட்சிகளினூடு காட்டுவதன் மூலமும் நாம் அடையாளங்க்கொள்ளாலாம் (எனினும் பயணத்தின் முடிவில் ஆர்ஜெண்ரினாவிற்கு விமானத்தில் பயணஞ்செய்யும்போது ஆரம்பத்தில் இருக்கும் சேயைப்போல மென் தாடியுடன் காட்சியளிக்கிறார்). இந்தப்படம் நிச்சயம் சேயினது வாழ்வினது குறுக்குவெட்டுமுகம் என்று சொல்லக்கூட முடியாது என்றுதான் நினைக்கின்றேன். சேயினது வாழ்வில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு துண்டு ஆனால் ஆழமில்லாது என்றுதான் படத்தைப் பார்த்து முடிக்கும்போது எனக்குத் தோன்றியது

(2)
சேயினது இந்தப் பயணத்தைப் பார்த்தவுடன் நான் சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு இலத்தீன் அமெரிக்க படமொன்று (பெயர் நினைவினில்லை) ஞாபகத்துக்கு வந்தது. அதில் இரண்டு பதின்மவயதுக்காரர் ஒரு காரையெடுத்து தமது நாட்டைச் சுற்றப்புறப்படுகின்றனர். அவர்களது முடிவிடம் ஒரு பெரிய கடற்கரையை அடைவதாக இருக்கிறது. பயணத்தின் இடைநடுவில் ஒரு பெண்ணையும் சேர்த்துக்கொள்கின்றனர். அவள் மிகவும் குறும்புக்காரியாகவும் இவர்களை எந்தநேரமும் சீண்டுபவளாகவும் இருக்கிறாள். அவள் கேட்டத்தற்கிணங்க இரண்டு பையன்களும் தங்களுக்கு (நிஜத்தில்) இல்லாத காதலிகளைப் பற்றி புனைவுகளை அவிழ்த்துவிடுகிறார்கள். இரண்டு பேருக்கும் யார் அந்தப்பெண்ணை அதிகம் நெருங்குவது என்று போட்டியினால் பொறாமை கிளைபரப்புகிறது; மாறி மாறி சண்டையும் பிடிக்கிறார்கள். அவர்களுக்கிடையிலான கோபம், பிரிவு எல்லாம் தன்னால் என்றறிகின்றபோது அந்தப்பெண் இரண்டு பேரிடமும் நேசம் கொள்கிறாள். ஒரு முறை ஒரு பையனுடன் உடலுறவு கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கின்றபோது, அந்தப்பையனின் பீதியைக்கண்டு, நீ இப்படியிருந்ததால்தான் உனது Ex-பெண்நண்பி உன்னை விட்டுப்பிரிந்து சென்றிருக்கவேண்டும் என்றெல்லாம் நக்கலடிக்கிறாள். பயணத்தினிடையே அந்த நாட்டினுடைய உள்நாட்டுப்பிரச்சினைகள், வறுமைகள் எல்லாம் சிறுசிறு காட்சிகளாக வந்துப்போகின்றன. இறுதியில் அவர்கள் அந்தக்கடற்கரையை அடைகின்றனர். பிறகு சொந்த இடம் மீண்டும் திரும்பும் பையன்கள் அந்தப்பெண்ணையும் தங்களுடன் திரும்பிவரும்படி அழைக்கின்றனர். ஆனால், அவள் அதை மறுத்து, தாயில்லாத சிறு குழந்தையுடன் இருக்கும் ஒரு ஆணுடன் அந்தக் கடற்கரைக்கருகில் தங்கிவிடுகிறாள். காலம் நகர்கிறது. நல்ல வேலைகளில் இருக்கும் இரண்டு பையன்களும் ஒரு கோப்பிக்கடையில் சந்திக்கின்றனர். இரண்டு பேரும் தமது பழைய நினைவுகளை மீள அசைபோட விரும்பமில்லாதவர்களாக இருக்கின்றனர். இறுதியாய் பிரிகின்ற நேரத்தில் ஒருவன் மற்றவனிடம் கேட்கிறான், அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது என்று தெரியுமா என்று. அவளுக்கு கான்சர் நோய் ஏற்கனவே இருந்து, அது மோசமாகி அவர்கள் அவளைப்பிரிந்து வந்த சில மாதங்களில் ஆஸ்பத்திரியொன்றில் அநாதரவாய் மரணித்துவிட்டாள் என்று சொல்வதோடு படம் முடிகிறது.

(3)
எனக்கும் இப்படி சின்னவயசில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற கனவு இருந்தது. இந்திய இராணுவம் ஈழத்தை விட்டுச்சென்ற காலத்தின் பின் பூத்த அமைதியின் சொற்பமான பொழுதில், எனக்கு அந்தவயதில் பெரிய உலகமாய்த் தெரிந்த யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. கீரிமலை கடற்கரையில் ஆரம்பித்து காங்கேசன்துறை பலாலி என்று ஒரு மேப்பும் மனதில் போட்டுக்கொண்டு திரிந்திருக்கிறேன். பிறகு அது சாத்தியமில்லாதபோது, நண்பர்கள் நான்கு பேர் இப்படிக் கிராமங்களினூடு பயணம் செய்கின்றதாயும், இறுதியாய் பயணத்தை முடித்து ஊர் திரும்பும்போது பொம்மரடியில் இறந்துவிடுவதாயும் ஒரு கதை எழுத முயன்றிருக்கின்றேன். மரணம் மூச்சுக்காற்றைப்போல இயல்பாய் இருந்த தேசத்தில் மரணத்தைத் தவிர்த்து எதையும் பேசவியலாது போலத்தான் தெரிகிறது.
.........
குறிப்பு: மோட்டார்சைக்கிள் டயரிகள் படத்தைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், மாண்ட்ரீஸரின் பதிவுதான் இந்தப்படத்தை விரைவில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலைத்தூண்டியது என்பதை குறிப்பிட்டாகவேண்டும். கறுப்பியும் இது குறித்து தனது பார்வையை தனது தளத்தில் வைத்திருக்கின்றார்.

8 comments:

Anonymous said...

பதிந்தது:தங்கமணி

undefined

7.3.2005

3/08/2005 12:10:00 AM
Anonymous said...

பதிந்தது:மாண்ட்ரீஸர்

டிஜே, நீங்கள் குறிப்பிடும் மற்றொரு படம் அதே கயேல் கார்சீயா பெர்னால் நடித்த Y tu mama tambien. அதுவும் ஒரு நல்ல படமே. நல்ல பதிவு...

//மரணம் மூச்சுக்காற்றைப்போல இயல்பாய் இருந்த தேசத்தில் மரணத்தைத் தவிர்த்து எதையும் பேசவியலாது போலத்தான் தெரிகிறது.//
சுளீர் என்கிறது.

8.3.2005

3/08/2005 12:12:00 AM
-/பெயரிலி. said...

/ஒரு இலத்தீன் அமெரிக்க படமொன்று (பெயர் நினைவினில்லை) ஞாபகத்துக்கு வந்தது/

இதிலே 'சே' ஆக நடித்தவருக்குப் பெயர் வாங்கித் தநத மெக்ஸிகன் படம் Y tu mama tambien

3/08/2005 12:15:00 AM
வன்னியன் said...

ம்... இடங்கள் சுத்திப்பாக்கிறது ஒரு அலாதியான அனுபவம்தான். அதுவும் ஆமியிற்ற இருந்து இடங்கள் விடுபட்ட உடன ஓடிப்போய்ப் பாக்கிறதில ஒரு தனி இன்பமிருக்கு. இத நண்பர்கள் வட்டத்துக்குள்ள புழுகித்திரியலாம். வேற இடங்களில சொல்லேலாது. திகிலான, சுவாரசியமான சம்பவங்கள் நிறைய இருக்கு. சொல்ல விருப்பந்தான். பாப்பம்.
-வன்னியன்-

3/08/2005 03:59:00 AM
வன்னியன் said...

உங்கட எழுத்துரு மாற்றியில தட்டச்சேக்க எழுத்துருவைத் தெரிவு செய்யும்படி சொல்லுங்கோ. இல்லாட்டி தங்கமணிக்கு வந்தமாதிரித்தான் (undefined)வரும்

3/08/2005 04:01:00 AM
Kannan said...

நல்ல பதிவு டிசே!

ரொம்ப நாட்களாக மோட்டர்சைக்கிள் டயரி வாங்கிப் படிக்கவேண்டும் என்று இருந்தும், தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்துவிட்டேன். இப்போது உடனே புத்தகமும் படித்து, படமும் பார்க்க ஆவல் அதிகமாகிவிட்டது.

3/08/2005 04:57:00 AM
சன்னாசி said...

டிஜே: தகவலுக்கு: மோ.ட பற்றிய எனது சுட்டியைக் கொடுக்கவிரும்பியிருந்தீர்களெனில் அது கீழ்க்கண்டது.... மேலே கொடுத்திருப்பது வேறெங்கோ போகிறது....
http://dystocia.blogspot.com/2005/02/blog-post_12.html

3/08/2005 08:45:00 AM
Anonymous said...

பதிந்தது:டிசே

மாண்ட்ரீஸர், பெயரிலி உங்கள் தகவலுக்கு நன்றி. இங்கேயிருந்த ஒரு ரீவி சானலில் (Show Case என்று நினைக்கின்றேன்), படம் ஆரம்பித்தபின்னர் தான் அந்தப்படத்தைப் பார்க்க தொடங்கியிருந்தேன். அதில் நடித்தவரும் இதில் சேயாய் நடித்தவரும் ஒருவர் என்பது எனக்குப் புதிய தகவல்.
தங்கமணி, undefined என்று பதிவிட்டிருந்ததைப் பார்த்துவிட்டு, ஏதோ என்னைத்திட்டுகின்றாரோ என்று முதலில் நினைத்தேன் :-). பிறகுதான் வன்னியன் சொல்ல விசயம் புரிந்தது. செயலியை சரியாகக் க்ளிக் செய்யாததால் தங்கமணியின் பதிவு அப்படி வந்துவிட்டது. பதிவிட முயன்றதற்கு தங்கமணிக்கு நன்றி. வன்னியன் நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். ஏற்கனவே உங்களின் வன்னியைச் சுற்றிய பயணத்தை வாசித்திருந்தேன். கண்ணன், நீங்கள் மோட்டார் சைக்கிள் டயரி புத்த்கமும், படமும் ஒரேநேரத்தில் வாசிக்க/இரசிக்க இருப்பதால், உங்களுக்கும் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருக்குமென்று நம்புகின்றேன். அந்த
அனுபவஙகளை நேரங்கிடைக்கும்போது பதிவிலிடுங்கள். மாண்ட்ரீஸர் தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திவிடுகின்றேன்.8.3.2005

3/08/2005 01:45:00 PM