இன்று பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு சுவாரசியமான செய்தி கண்ணில்பட்டது. கனடாவில் சிறந்த இசைக்கலைஞர்களுக்காகக் கொடுக்கப்படும் அதியுயர்விருதான Junoவைப் (கிட்டத்தட்ட Grammy போல) பெற்ற ஒரு கலைஞன், subway பாட்டுக்காரனாயிருக்கின்றார் என்பது. ஒரு விருதல்ல, இரண்டு விருதுகளைப்பெற்றபின்னும், ரொரண்டாவில் அதிக சனப்புழக்கமுள்ள Bloor சப்வேயில் பாடிக்கொண்டிருக்கிறார் என்று பத்திரிக்கையில் புகைப்படத்துடன் வந்திருந்தது.. கென்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆபிரிக்கா இசையுடன், Jazz/Bluesயை இணைத்து புது இசைக்கோர்வைகளையெல்லாம் முயற்சித்திருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது. இசைப்பதற்கு மிகக்குறைந்த இடங்கள் உள்ள இந்த நகரில், அதிக திறமையுள்ள இசைக்கலைஞர்கள் இருப்பதுதான் தன்னை ஒரு புகையிரதப்பாடகனாக்கியது என்று அவர் கூறியதுபோதும், இப்படி நேரடியாக மக்களுக்காய் வாசிப்பது கூட தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எவ்வித சுயபச்சாபமும் இன்றி பேசியது இன்னும் பிடித்திருந்தது.
....
ஒவ்வொரு முறையும் வேலை முடிந்து சப்வேயிற்குள் செல்லும்போது, படிக்கட்டுகளில் அருகில் இசையை நிறைத்தபடி இருக்கும் கலைஞர்கள் மீதும், மூலைகளில் முடங்கியபடி do you have any change என்று கேட்பதைத் தவிர வேறெந்தத் தொந்தரவும் தராத வீடற்ற மனிதர்கள் ((homeless people) மீதும் பரிவாய் பார்வைகளை வீசியபடித்தான் போய்க்கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கொஞ்சம் சில்லறைகள் சேர்த்து, பணம் அறவிடாது இசையை, மிருதுவாய் காதுகளில் பரப்பியபடி இருப்பவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைப்பேன். சிலவேளைகளில் அவ்வாறு செய்யமுடிகின்றபோதும், அநேகவேளைகளில் அப்படிப் போட்டால், மற்ற மனிதர்கள் ஒருமாதிரியாகப் பார்ப்பார்களோ என்ற பொதுப்புத்தியில் பின்வாங்கியிருக்கின்றேன். வேலை முடிந்து வரும் அலுப்பை, இவர்களின் இசையில், ஓரத்தில் நின்று ஆறுதலாகக் கேட்டபடி கரைக்கவேண்டும் என்பதுதான் என் நெடுநாளைய விருப்பம். ஆனால், இயந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களின் பின்னால், நானும் ஓடாவிட்டால் என்னை வேறுவிதமாய் பார்த்துவிடுகிறார்கள் என்ற பயத்தில், சனத்திரள்ப் பெருஜோதியில் இலகுவில் ஜக்கியமாகிவிடுவேன். இன்றும் வேலை முடிந்து வரும்போது, தன்னிலை மறந்தநிலையில் ஒரு பெண் மிக அற்புதமாய் கிற்றார் வாசித்தபடியிருந்தார். இசையோடு அந்தப்பெண்ணையும் இரசிக்கும் வாய்ப்பு கைக்கெட்டியதூரத்திலிருந்தாலும், நான் நவீனமனிதனுக்குரிய அடையாளத்துடன் அந்த இடத்தைவிட்டு காற்றைவிடவும் விரைவாக அகன்றிருந்தேன்.
.....
எப்போதும் கைவிட்டுப்போன/புறக்கணிக்கப்பட்ட விசயங்களின் நனவிடைதோய்தல்களில் இருக்கும் என்னால், ஏன் மனதிற்குப் பிடித்த, இதமான அனுபவங்கள் தரும் இந்தமாதிரியான விடயங்களை இயல்பாய் செய்யமுடிவதில்லை என்ற எண்ணம் அடிக்கடி எழும். ஆறிப்போன புண்ணைத் தோண்டிப்பார்ப்பதில் ஒரு சுகமிருக்கிறதென்று ஒரு கதைக்கு வைத்துக்கொண்டாலும், வாழ்க்கையில் நிகழ்ந்த/நிகழும் அற்புதமான கணங்களையேன் ஒரு வண்ணத்துப்பூச்சியின் வர்ணங்களைப்போல இலகுவில் மனதில் தேக்கிவைக்கமுடியாதிருக்கின்றதென்றது என்ற உளவியலின் புதிர் இன்னும் புரியவில்லை.
....
நல்ல இசையையும், அதையிசைக்கும் கலைஞியையும் தவறவிட்டுவிட்டேனென்று, சப்வேயிற்குள், 50cent, Oliviaவுடன் பாடும், Candy Shopஐ இரசித்துக்கொண்டு வந்தபோது, தனியார் பாடசாலைகளில் படிக்கும் சில மாணவிகளைக் கண்டேன். அவர்களை குட்டைப்பாவாடையுடன் பார்த்தபோது எனக்குள் பலவருடங்களாய் இருக்கும் கேள்வியை, மனத்தின் அலை ஒரு துரும்பைப்போல எடுத்தெறிய, ஞாபகத்திற்கு மீண்டும் வந்தது. குட்டைப்பாவாடை போடுவது அவரவர் சுதந்திரம் என்றபோதும், இறுக்கமான ஒழுக்கக்கட்டுப்பாடுகள் எங்களிடம்தான் இருக்கின்றது என்று வியாபார உத்தியிற்கு நிகராய் உரத்துப்பேசும் கத்தோலிக்க பாடசாலைகள் எப்படி இந்தமாதிரியான குட்டைப்பாவாடைகளை தமது யூனிபோர்மாய் அங்கீகரிக்கின்றன என்ற சூட்சமம் இன்னும் விளங்கவில்லை. நான் பார்த்தவரையில் பல பெண்கள் அதை அணிந்துகொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதைத்தான் அவதானித்திருக்கின்றேன். பஸ்சில், சப்வேயில் ஆசனங்கள் இருந்தாலும் அந்தக்குட்டைப்பாவாடைகளுடன் அமர்வதன் அசெளகரியம் கருதி அதிகமான பொழுதில் நின்றபடியேதான் பயணிக்கின்றார்கள். எனது அண்ணாவின் மகனும் கத்தோலிக்கப்பாடசாலைக்குத்தான் போகின்றான். அண்ணிதான், வீட்டில் அவனது குழப்படியைக் கண்டுவிட்டு இவனை கத்தோலிக்கப்பாடசாலைக்கு அனுப்பாவிட்டால் திருந்தமாட்டான் என்று அனுப்பியவர். எனக்கு அவன் public schoolற்குப் போவதே விருப்பம். அத்தோடு, என்ன குழப்படி என்றாலும் அவன் அந்தந்தக்காலத்தில் அவற்றைச்செய்து திருந்திக்கொண்டு வாழ்வில் நகர்வது நல்லதே தவிர, இப்படி இருக்கக்கூடாது ஒரு ஒழுக்க அட்டவணையை முன்கூட்டியே தயாரிப்பவர்களிடம் போனால் அவன் சடுதியாக தவறான திசைக்குப்போகும் சாத்தியம் அதிகமுள்ளதெனத்தான் அண்ணா குடும்பத்தினரிடம் நான் அடிக்கடி கூறுவேன்.
எனினும் அண்ணாவின் மகனின் அசாதாரண வளர்ச்சியைப்பார்க்கும்போது (இதைப்பற்றிப் பிறகு கூறுகின்றேன்) இப்படிச் சொல்வது கூடப்பயமாயிருக்கிறது. 'சிச்சியா நீங்கள் private பாடசாலைக்குப் போய் பெண்களை குட்டைப்பாவாடையுடன் இரசிக்கவில்லையென்ற பொறாமையில்தான், கத்தோலிக்கப் பாடசாலைக்கு அனுப்பிய என்னையும் இடையில் நிறுத்தி, public பாடசாலைக்கு போகச்சொன்னீர்களா என்று தனது பதினைந்தாவது வயதில் என்னைப்பார்த்து அவன் கேட்கவும்கூடும்.
.....
அவனுக்கு இயல்பாய் இருக்கும் குறும்புத்தனம் போலவே புத்திசாலித்தனமும் அதிகம். என்னைச் சீண்டிப்பார்க்காவிட்டால் நானும் அவனது புத்திசாலித்தனத்தைப் பிறரைப்போல் மனதாரப் பாராட்டியிருப்பேன். ஆனால் அவன் தனது புத்திசாலித்தனத்தை எல்லாம் என்னிடம் முதலில் பரீட்சித்துப்பார்ப்பதில் தான், உள்ளது பிரச்சினை. சில வாரங்களுக்கு முன், எங்கள் வீட்டுக்கு வந்தபோது அம்மா அவனைச் சாமி கும்பிடச்சொன்னார். ஜந்து வயது இருக்கும் அவன், வீட்டிலுள்ள ஒவ்வொருத்தரின் பெயரையும் சொல்லி அவர்கள் நல்லாயிருக்கவேண்டும் என்று வழிபட்டான். இவன் சிச்சியா என்று விளிக்க, நானும், எனக்காய் இவன் ஏதோ விசேடமாய் கடவுளிடம் கேட்கப்போகின்றான் என்று காதைக் கூர்மையாக்கிக்கொண்டேன். ஆனால் பாருங்கள் அவன் என்ன கடவுளிடம் கேட்டான் என்று: எந்தநேரம் பார்த்தாலும் சிச்சியா computerற்கு முன்னாலே இருக்கின்றார். அப்படி இருக்காமல் நல்ல புத்தியை அவருக்கு கொடுவென்று என்று வழிபடத்தொடங்கிவிட்டான். அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டதும் அம்மாவிற்கும் நல்ல சந்தோசம். தான் மனதிற்குள் நினைப்பதையே தன் பேரனும் சொல்லிவிட்டான் என்று அம்மாவும் உவகைகொண்டதில் பிழையில்லைத்தானே. கடவுளிடம் முறையிட்டதுடன் நிற்பாட்டினால் கூடப் பரவாயில்லை. பிறகு இரண்டு அண்ணாமாருக்கும் தொலைபேசி எடுத்து, தனது பிரார்த்தனையின் நல்நோக்கத்தை விபரிக்க எல்லாம் தொடங்கிவிட்டான். அத்தோடு, தங்களின் வீட்டுக்கு வந்தாலும், எவரோடும் கதைக்காமல் உடனே அங்கேயும் computer அறையினுள் நான் சத்தம்போடாமல் நுழைந்துவிடுவேன் என்ற துணைச்சாட்சியையும் கூடவே சேர்த்துக்கொண்டான். சரி, குடும்பத்திற்குள்ளேயென்றால் கூட பரவாயில்லை, கொஞ்சம் சமாளிக்கலாம். அவ்வவ்போது தோழிகளிடன் தொலைபேசும்போது இவனுக்கும் இடையில் கதைக்கக்கொடுப்பேன். அப்படி ஒரு சிநேகிதியுடன் அண்மையில் கதைக்கும்போது, இந்த விசயத்தை அந்தத்தோழிக்கும் போட்டுக்கொடுத்துவிட்டான் (தோழிகள் என்றாலும் பரவாயில்லை, கொஞ்சம் அசடுவழிந்தால், சரி பிழைத்துப்போ என்று திருப்பவும் நண்பனாக்கிக்கொள்வார்கள். ஆனால் ஒரு காதலி ஒருவர் இருந்து, இப்படி என் 'மற்றத் திறமைகளையும்' புகழ்ந்தால் என் நிலை என்னாவது? காதலுக்கு பொய்தாண்டா அழகடா என்று சொன்னால் கேட்கும் வயதிலா அவன் இருக்கின்றான்). என்னுடைய புகழை அகிலமெங்கும் பரப்ப, கொஞ்சக்காலம் போனால், தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்கக்கூட தயங்கமாட்டான் போலத்தான் அவன் போகின்ற போக்கைப் பார்த்தால் தெரிகின்றது. அவன் இவ்வாறு எதையாவது எழுதத்தொடங்கமுன்னர், என்னுடைய 'சுயசரிதை'யை நானே எழுதி, சரணாகதி அடைவதுதான் நல்லது போல இப்போது தோன்றுகின்றது.
.......
அவனை கத்தோலிக்கப் பாடசாலைக்குச் சேர்ப்பதற்கு, முன் தகுதியாய், ஞானஸ்தானம் பெற்றிருக்கவேண்டுமென்று பாடசாலை நிர்வாகத்தில் சொல்லிருந்தார்கள். அண்ணி கிறிஸ்தவ மத நம்பிக்கையுடையவர் (அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அல்லது எல்லா மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவர் என்றும் சொல்லலாம்). இந்த வழிபாட்டு முறையிலும் நமது 'புத்திசாலிக்கு' சில தினங்களுக்கு முன் ஒரு சந்தேகம் வந்து வழமைபோல் என்னிடமே நேரடியாக வந்தான் (உலகத்தில் அப்பாவியாக இருப்பதைப் போல ஒரு துன்பம் இல்லையப்பா). இங்கே (எங்கள் வீட்டுக்கு) வந்தால் 'அப்புசாமி' என்று கும்பிட்டு விபூதி பூசுகின்றேன். வீட்டிலோ அல்லது பாடசாலையிலோ விபூதி பூசாமல், ஆமேன்(Amen)என்று கைகளை நெஞ்சுக்கு குறுக்காய் வைத்துச் சொல்கின்றேன். எது சரியான முறை என்று கெதியாய் சொல்லுங்கோ என்று கேட்டான். எனது நிலை அப்பமிழுத்த குரங்கின் நிலை போல் ஆயிற்று. எனினும் கொஞ்சம் சமாளித்தபடி, நீ உனக்குப் பிடித்த இரண்டு முறையிலும் கும்பிடலாம், உனது அம்மா ஆமேன் என்றும், உனது அப்பா அப்புசாமி என்றும் கும்பிடுபவர்கள். எனவே நீ எப்படியும் கும்பிடலாம், you're luckydடா என்று கொஞ்சம் சமாளித்தேன். 'Yeah' என்றபடி கொஞ்சம் யோசித்துக்கொண்டு போய் சுவாமிப்படத்திற்கு முன் நின்று, அப்புசாமி என்று வழிபாட்டைத் தொடங்கி ஆமேன் என்று முடித்துவிட்டு இது எப்படி இருக்கிறதென்றான். ஆகா, இப்படியே போனால் இவன் விரைவில், புதிய மதம் ஒன்றைத் தொடங்கி, என்னையும் அந்தமதத்தின் முதலாவது சிஷ்யனாக மாற்றிவிடுவேனோ என்று பயம், அவனது வழிபாட்டைப் பார்த்தவுடன் எனக்கு வந்துவிட்டது.
.........
பாடசாலைக்குப் போகமுன்னர் நல்ல தமிழில் பேசிக்கொண்டிருந்தான். இப்போது முக்கால்வாசி ஆங்கிலத்தில் கதைப்பதைப் பார்த்துவிட்டு, இனி நீ தமிழ் வகுப்புக்களுக்கு போகவேண்டும் என்று ஒருமுறை கூறினேன். அது Stupid class,என்னால் போகமுடியாது என்று அடம்பிடித்தான். சரியடா, நீ தமிழ் கிளாஸிற்குப் போகத்தேவையில்லை, உனக்குப் பிடித்த stupid classற்குப் போ (அப்படியே தமிழ் வகுப்புக்குப் போவதற்கு சம்மதம் சொல்வான் என்ற நப்பாசைதான்) என்று கூறினேன். அவனோ, You are stupid என்று சொல்லிவிட்டு கனக்க அலம்பத்தொடங்கிவிட்டான். எல்லோருக்கும் தெரிந்த உண்மை இவனுக்கும் தெரிந்துவிட்டதே என்ற கவலை ஒருபுறமிருந்தாலும், நான் எப்ரல் முதலாந்திகதியை விமரிசையாகக் கொண்டாடியதும் தெரிந்துவிட்டதோ என்ற சந்தேகம்தான் இப்போது என்னை அதிகம் தொந்தரவு செய்கின்றது (உள்ளுணர்வாலே அனைத்தையும் அறியும்மழலைச் சித்தனாய் இருப்பானோ தெரியாது). ஒருநாள் பாடசாலைக்குப் போய் வந்துவிட்டு, எல்லோருக்கும் செல்லப்பெயர் (Nick Name) இருக்கின்றது தனக்கு இல்லையென்றான். சரி, உனக்கு
Robotsல் வரும் Rodneyயா அல்லது
The Incrediblesல் வருகின்ற Dashயா பிடிக்கும் என்று நானும் அண்ணாவும் கேட்டோம். தனக்கு Dashயே செல்லப் பெயராய் வைக்கும்படிச் சொல்லிவிட்டு, Dash மாதிரி மூச்சைப்பிடித்தபடி ஓடிக்காட்டி, தனக்கு அந்தப்பெயர் பொருத்தமானதே என்பதையும் நிரூபித்துக்காட்டினான். வருகின்ற மாதம் தியேட்டருக்கு வருகின்ற Star Warsஐ பார்த்துவிட்டு புதிதாய் ஒரு Nick name வைக்கின்றானோ தெரியாது. எப்படியென்றாலும், நான் இரசித்துப்பார்க்கும் பெண்களின் எண்ணிக்கையை, அவனது செல்லப் பெயர்கள் தாண்டாது என்பதில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையிருக்கிறது.
.....
இப்போது சொல்லுங்கள், ஜந்து வயதில் இப்படி இருப்பவன், நாளை public பாடசாலைக்கு அனுப்பினால், குட்டைப்பாவாடைப் பெண்களை தான் பார்த்துவிடுவேன் என்ற பொறாமையில்தான் சிச்சியா அனுப்பினார் என்று ஒரு குற்றப்பத்திரிக்கை வாசிப்பானோ, இல்லையோ?
..........
இறுதியாய், தொலைக்காட்சியில் இரவுச் செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ரொரண்டோ zooவில் ஒரு குரங்கிற்கு, புதிதாய் பிறந்த குட்டிக்கு என்னபெயர் வைப்பது என்று மக்களிடம் உதவி கேட்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்குத் தெரிந்தளவில், அந்தக் குட்டிக்கு வைப்பதற்கு எனது பெயரைத் தவிர வேறொன்றும் சிறப்பாக இருக்காது என்று தோன்றுவதால், எனது பெயரைச் சிபார்சு செய்வதாய் இருக்கின்றேன். வாசிக்கும் உங்களுக்கும், நான் சொல்வதில் சம்மதம் என்றால் நாளை, சென்னையிலும், நீயு ஜெர்சியிலும் நடைபெறவுள்ள வலைப்பதிவர் ஒன்றுகூடலுக்கு சென்று எனக்கு வோட்டுப் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.