Sylvia: திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
சில்வியா, இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருப்பதுடன் படம் ஆரம்பிக்கின்றது. அவரது கவிதைகள் பத்திரிக்கைகளில் நிராகரிக்கப்படுகின்ற துயரத்துடன், Ted Hughesன் கவிதையால் ஈர்க்கப்பட்டு, இருவரும் காதலிக்கத்தொடங்குகின்றனர். பிறகு நானகு மாதங்களில் இருவரும் திருமணமும் செய்துகொள்கின்றனர். மாலைப்பொழுதுகளில் நண்பர்களுடன் சிறு அறைகளில் கவிதை வாசிப்புக்கள் நிகழ்கின்றன. Faster, Faster என்று ஆண் கவிஞர்கள் கிண்டலடித்தாலும், ஆண்களுக்கு நிகராய் கவிதைகளை வேகத்துடன் சில்வியா வாசிக்கின்றார். கவிதைகளை மனிதர்களின் முன்னால் மட்டுமல்லாது, காதலின் களிப்பில் மாடுகளுக்கு முன்னாலும் Miltonனா அல்லது Chaucerரா பிடிக்கும் என்று ரெட்டிடம் (டெட்?) கேட்டு, கவிதைகள் சொல்கையில், சில்வியாவின் இதமான மனது தெரிகின்றது.
Tedற்கு நியுயோர்க்கில் கவிதைக்கான பரிசு கிடைக்க, சில்வியா ரெட்டோடு அமெரிக்காவிற்கு மீண்டும் குடிபெயர்கின்றார். அங்கே சில்வியாவின் தாயால், மூன்றுவருடங்களுக்கு முன் சில்வியா தூக்கமாத்திரை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றார் என்ற செய்தி ரெட்டிற்கு சொல்லப்படுகின்றது. இப்படி அடிக்கடி மனவழுத்தத்திற்கு ஆளாகும் தன் மகளை கவனமாகப் பார்த்துக்கொள் என்று ஒர் தாயின் நிலையிலிருந்து சில்வியாவின் தாயார் கேட்டுக்கொள்கின்றார். பிறகு அவர்கள் கடற்கரையுடன் இருக்கும் பண்ணைக்கு விடுமுறைக்குச் செய்கின்றனர். ரெட் வற்புறுத்திக்கேட்டும், சூழல் இனிமையாக இருந்தும், சில்வியாவால் கவிதைகள் எழுதமுடியவில்லை. சமைப்பதிலும், பான் கேக்குகளை விதவிதமாய்ச் செய்வதையும் ஒரு படைப்பாய் செய்து சந்தோசம் காண்கின்றார். இப்படி கவிதைகள் எழுதாமல், சில்வியா இருப்பதைப் பார்க்க ரெட்டிற்கு சினமாய் இருப்பினும், அதை அவ்வளவாக வெளிக்காட்டாமல் இருக்கின்றார். பிறகு அமெரிக்காச் சூழல் தமது படைப்புக்களுக்கான் உந்துசக்தியைத்தராது என்று ரெட் சில்வியாவை இங்கிலாந்திற்கு அழைத்துச்செல்கின்றார். அங்கே தனது முதலாவது குழந்தையைப் பெறுகின்றார் சில்வியா. ரெட் கவிதைகள் எழுதிக் குவித்து பிரபலமடைய, சில்வியா ஒரு குடும்பப்பெண்ணுக்குரிய அனைத்தையும் செய்யவேண்டிய நிலையில் கவிதைகள் எழுதவேண்டியிருப்பதையே நிறுத்த வேண்டியிருக்கின்றது. அது அவருக்கு இன்னும் மனவழுத்த்தைத் தருகின்றது. ரெட்டிற்கு வேறு பெண்களுடன் தொடர்புகள் இருக்கின்றனவோ என்ற சந்தேகமும் வருகின்றது சில்வியாவிற்கு. ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுப்பாய் வெளியிட்டபோதும், அது உரிய கவனத்தை விமர்சகர்களிடம் பெறாது வீணே போகின்றது. விமர்சகர்களும், சில்வியாவை ரெட் என்ற கவிஞனின் மனைவியாய் பார்க்கப்படுவது, சில்வியாவிற்கு இன்னும் அசெளகரியத்தைத் தருகின்றது. அதை உடைப்பதற்காய், தன்னை Mrs.Hughes என்று அறிமுகப்படுத்துவதைத் தவிர்த்து, சில்வியா பிளாத் என்ற அறிமுகம் செய்து தனது எதிர்ப்பை இயன்றளவு காட்டுகின்றார். பணப்பற்றாக்குறை, குழந்தைகள் வளர்ப்பு என்ற பல சிக்கல்களினால், தமது வீட்டை விற்றுவிட்டு இங்கிலாந்தின் கிராமப்புறமான வீட்டிற்கு குழந்தைகளுடன் குடிபெயர்கின்றனர்.
அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும்போது, சில்வியாவிற்கு, ரெட் இன்னொரு பெண்ணுடன் கொண்டிருக்கும் தொடர்பு வெட்டவெளிச்சமாய்த் தெரிகின்றது. The truth talks to me என்று மிக நிதானமாய்ச் சொல்லி, Get out என்று ரெட்டைப் பார்த்துச் சொல்கின்றார். இவ்வாறு கூறுகின்றபோதும், ரெட்டின் பிரிவு சில்வியாவை மிகவும் வருத்துகின்றது. தனது 23வயதில் முதன்முதலில் ரெட்டை சந்தித்து காதல் வயப்பட்டு திருமணஞ்செய்ததிலிருந்து மிக அபரிதமான அன்பை சில்வியா ரெட் மீது வைத்திருக்கின்றார். தன்னைப்போலவே உறவில் நேர்மையாக ரெட் இருப்பார் என்ற சில்வியாவின் நம்பிக்கை இடிந்துபோக, குழந்தைகளை காரில் இருத்திவிட்டு ஆற்றில் தற்கொலை செய்ய நினைக்கின்றார். ஆனால் குழந்தைகளைப் பிரிந்து போக இளகிய மனங்கொண்ட சில்வியாவால் முடியாதுபோகவே, பிறகு குழந்தைகளுடன், இன்னொரு இடத்திற்குச் சென்று வாழத்தொடங்குகின்றார் (Yates வாழ்ந்த வீட்டில்).
மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு சில்வியா திரும்புகின்றார். ரெட்டைப் பிரிந்த முதல் மாதத்தில் மிக உக்கிரமான, அற்புதமான பல கவிதைகளை எழுதுகின்றார். 'கடவுள் என் மூலமாக வலிகளை கவிதைகளில் பேசுகின்றார்' என்று, கவிதைகள் மிகவும் கடுமையாக இருக்கின்றது என்ற ஒரு விமர்சகரிற்குப் பதிலாக சில்வியா சொல்கின்றார். ரெட்டினதும், சில்வியாவினதும் நண்பர் ஒருவர் ரெட்டைப் பிரிந்த வாழ்க்கை இப்போது எப்படி இருக்கின்றது என்கின்றபோது, தான் தனது குழந்தைகளுடன், சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, தனக்குப் பிடித்தமான கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பது தனக்கு இன்றைய பொழுதில் மிகப்பிடித்தமாய் இருக்கின்றது என்கின்றார். இனி தான் ஒரு புதிய காதலனைத் தேடவேண்டும் என்று தனது வாழ்க்கை துளிர்ப்பதை சற்று நகைச்சுவையுடன் கூறுகின்றார். இப்படிக் கூறுகின்றபோதும், ரெட்டின் மீதான் அளவிலாக் காதலைத் தொலைக்க முடியாது சில்வியா தடுமாறுகின்றார். ஒரு கிறிஸ்மஸ் நாளில் ரெட் குழந்தைகளைப் பார்க்க வருகின்றார். 'சில்வியா உன்னையும் தான் பார்க்க வந்தேன், உட்கார்ந்து ஆறுதலாகப் பேசமுடியுமா?' என்று ரெட் கேட்கின்றார். முதலும், கடைசியுமாய் சில்வியா, Are you still fucking her? என்று கேட்கின்றார். விடையை மெளனமாகத் தந்தபடி ரெட் சில்வியாவின் வீட்டை விட்டு அகல்கின்றார். பனிக்காலங்களில் மிகவும் மனவழுத்தம் கூடி சில்வியா I'm edge of the world என்று கூறியபடி தவித்துக்கொண்டு பொழுதுகளைக் கழிக்கின்றார். இறுதியில் நண்பன் மூலம், ரெட்டை ஒரு இரவு விருந்திற்கு சில்வியா அழைக்கின்றார். அழகாய்க் கழிகின்றது அந்த இரவு. உடலுறவு கொண்டபின், ரெட்டைத் தான் மிகவும் missed பண்ணியதாகவும், இனி எமது வாழ்வில் வசந்தம் துளிர்க்கப்போகின்றதும் என்று சில்வியா கூறுகின்றார். 'அந்தப்பெண்ணை விட என்னைத்தானே நீ மிகவும் நேசிக்கின்றாய்' என்று ஒரு பேதைப்பெண்ணின் இயல்புடன் ரெட்டுடன் வினாவுகின்றார்.
இனி நாங்கள் மீண்டும் Devon நகரிற்குச் சென்று, அழகான வசந்தத்தையும் இரசிக்கவும், தனக்கு இவ்வளவு காலமாய் இடைஞ்சல் செய்யும் பனிக்காலத்தையும் உன் துணையுடன் கடக்கவும் முடியுமென்றும் கூறுகின்றார். குழந்தைகளுடனும், நமது படைப்புத்தொழிலுடனும், ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் கழிக்கப்போகும் காலத்தை கனவுடன் விபரிக்கின்றார் சில்வியா. இறுதியாய், 'நீ அந்தப்பெண்ணை முற்றுமுழுதாய் விட்டு விட்டு என்னோடும் குழந்தைகளோடும் வருவாய்தானே?' என்று அன்பு ததுப்ப ரெட்டிடம் கேட்கின்றார். 'இல்லை' என்கின்றார் ரெட்டி. 'ஏன்?' என்கின்றபோது, அந்தப்பெண் கருத்தரித்துவிட்டார் என்று ரெட் கூற சில்வியாவின் கனவுகள் நொருங்குகின்றன. (இந்தக்காட்சியில் மிக நுட்பமாக ஆண்களின் சூட்சம விளையாட்டு சித்தரிக்கப்பட்டிருந்தது போல எனக்குத் தெரிந்தது. ஏற்கனவே ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்கி வந்த, ரெட் அதை முதலில் கூறமுடியாது சில்வியாவுடன் உடலுறவு கொண்டு, தமது வாழ்வு இயல்புக்கு வந்தமாதிரியான பாவனையுடன் நடந்துகொள்கின்றார். அந்தப்பெண்ணுக்கு குழந்தை பிறந்து தன்னோடு மட்டும் இரு என்று மற்றப்பெண் கேட்டாலும், சில்வியா மூன்றாவது முறையாக கரு தரித்திருக்கின்றார் என்று ஒரு சாட்டுச்சொல்லிக்கொண்டபடி இருபெண்களோடும் உறவைத் தொடரலாம் என்ற ஆணின் நுட்பமான திறன் வெளிப்படுவதாய்த் தெரிந்தது.)
ஏற்கனவே மனவழுத்தததால் அவ்வவ்போது நொடிந்துபோகும் சில்வியா இறுதியாய், தனது கவிதையொன்றில் கூறியதுமாதிரி,
'Dying
Is an art, like everything else,
I do it exceptionally well.
I do it so it feels like hell.
I do it so it feels real.
I guess you could say I've a call.'
அவனிற்குள் தலையை வைத்து, காபன்மொனக்சைட்டைச் சுவாசித்து தனது முடிவை மிகக் கச்சிதமாய் எடுக்கின்றார்.
Gwyneth Paltrow, சில்வியா பிளாத்தாய் மிக இயல்பாய் நடிக்கின்றார். Daniel Craig, Tedயாய் நடித்திருப்பினும், சில்வியாவின் பாத்திரத்தின் முன் ஈடுகொடுக்கமுடியாமல் சிலவேளைகளில் தடுமாறுகின்றார். இந்தப்படத்தை ஒரே நாளில் கிட்டத்தட்ட இரண்டும் முறை பார்த்தேன். அதியற்புதமாய் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் ஏதோ அதிக நெருக்கத்தை சில்வியாவின் வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. வாழ்வில் நேர்மையாக இருந்தால் கட்டாயம் நேர்மையாய் எல்லா விடயங்களும் நமக்கும் நடக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த என் நம்பிக்கையை இன்னொரு முறை சில்வியாவின் வாழ்க்கை நிராகரித்திருந்தது. ஏன் சில்வியா ரெட் தன்னைப் புறக்கணித்தவுடன் வேறொரு துணையைத்தேடாமல், ஒரு பெரும் பிணியைப்போல ரெட்டின் நினைவுகளுடனும், அவரின் அவ்வப்போதைய வரவுகளிலும் ஒட்டிக்கொண்டிருந்தார் என்பதற்கான காரணம் சில்வியாவைத் தவிர எவருக்கும் புரியப்போவதில்லை. துணையின் மீது அளவற்ற காதல் கொண்டு குழந்தையாய் உருகிய சில்வியாவில் எனக்குத் தெரிந்த பல கீழைத்தேய பெண்களின் வாழ்வினைக் கண்டேன். எந்தத்தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், பெண்களுக்கு என்று பொதுவான பல விசயங்கள் இருக்கின்றன என்பதற்கு சில்வியாவின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டும் கூட. இந்தச் சமயத்தில் மிக இளவயதில் தற்கொலை செய்துகொண்ட சிவரமணியின் நினைவு வருவதையும் தவிர்க்கமுடியவில்லை.
....
சில்வியாவின் கவிதையொன்றின் இணைப்பை (Lady Lazarus ) தருகின்றேன். தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் மிகவும் சந்தோசமாயிருக்கும். (எனக்குத் தெரிந்த மொழியில் பெயர்த்து, எனக்குப் பிடித்தமான சில்வியாவைச் சிதைக்க விருப்பமில்லை).
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
பதிந்தது:நாராயணன்
4/13/2005 12:14:00 AMநன்றாக இருக்கிறது. இது ஹாலிவுட் படமா இல்லை பிரிட்டிஷ் படமா? கவிதை மொழிபெயர்ப்பெல்லாம், மாண்டீயின் வேலை ;-)
13.4.2005
டிஜே,
4/13/2005 12:20:00 AMநீண்ட விபரமான பதிவு.
ஆனால், சில்வியா பாத், கூடவே சிவரமணி ஆகியோர் பெண்களின் துன்பத்தின் மீதான, அவர்களுக்கு ஆணோ சமூகமோ இழைக்கும் அநீதிகளின் குறியீடுகளாக, அவர்களின் அளவுக்கு மீறாக உருப்பெருப்பிக்கப்பட்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. நிச்சயமாக, இது குறித்து கடுமையான எதிர்க்கருத்துகள் இருக்குமென்று அறிவேன். ஆனால், பட்டதைச் சொல்லவிரும்புகிறேன்.
சில்வியா பாத்- ரெற் ஹியூஸ் இன் வாழ்க்கை, தனிப்பட்ட இருவரிடையேயான வாழ்க்கைச்சிக்கல் என்பதிலும் விட, பெண்-ஆண், அமெரிக்கா-இங்கிலாந்து என்ற பல கண்ணோட்டங்களிலே பார்க்கப்படுகின்றது. ரெட் ஹியூஸின் இறுதியான தொகுதி, Birthday Letters இனைப் பார்த்தால், அவர் பக்கத்து நியாயம் தரப்படுகின்றது. செல்வி, சிவரமணிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கஸ்தூரிக்கோ மாலதிக்கோ கொடுக்கப்படுவதில்லை.
எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரையை நானும் வாசித்தேன். எனக்கு என்ன தோன்றுகின்றதென்றால், தற்கொலை அல்லது அசாதாரண இறப்பு (சேகுவரா போன்றோருக்கு ஏற்பட்டது) என்பவற்றோடு மனிதர்களுக்கு ஒரு விசித்திரமான கவர்ச்சி இருக்கின்றது; கூடவே, அதிலே சம்பந்தப்பட்டவர்கள் ஏதோ சமூகப்பாதிப்பிலே அதனை மேற்கொண்டுவிட்டால், ஒரு வகையான பரிதாபமான உணர்வு ஏற்பட்டு சமயங்களிலே தெய்வநிலைப்படுத்தலும் நிகழ்ந்துவிடுகின்றது. ஆனால், சில்வியா ப்ளாத்தின் தற்கொலையிலே இருக்கும் கவர்ச்சி அவருடைய நண்பர் ஆன் ஸக்ஸ்டனின் தற்கொலையிலே ஏன் ஏற்படவில்லை என்று கவனித்தால், பெருமளவிலே அமெரிக்கர்களினதும் பெண் என்பதாலே சில்வியா பாதிக்கப்பட்டார் என்று எண்ணிக்கொள்கின்றவர்களாலும் ரெற் ஹியூஸினைக் கண்டிக்கும் ஒரு வெறுப்புணர்வே அங்கு நிலவுகின்றது. சிவரமணி குறித்தும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் அதுவே; எத்தனையோ இலங்கைப்பெண்கள், பெண்கள் என்ற வகையிலே அனுபவித்ததிலே ஒரு சிறு பங்கு துயர்கூட அவர் அனுபவித்திருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், அவர் ஒரு குறியீடாக்கப்பட்டிருப்பது அவருடைய தற்கொலையின் வகையினிலே ஒரு பெண் என்பது குறித்துத்தான். ஆத்மாநாமும் சிவரமணியும் சில்வியாவும் தற்கொலைதான் செய்துகொண்டார்கள்; ஆனால், ஆத்மாநாமை மனப்பிறழ்ச்சி என்று மட்டும் சொல்லிக்கொண்டு விடுகின்றோம்; ஆனால், சில்வியா, சிவரமணி குறித்துப் பேசும்போது அவர்களுக்குச் சமூகம் இளைத்த துரோகம் பற்றிப் பேசுகின்றோம். எவராவது ரெற் ஹியூஜின் பதிலைச் செவிமடுக்கின்றோமா என்று தெரியவில்லை. Birthday Letters வெளிவந்தபோது, என் அமெரிக்க நண்பர் சொன்னார்; "This bastrad killed an innocent american girl; he was jealous that she could have become a better poet than him." என்ன சொல்ல?
நரேன், இந்தப்படம் ஹாலிவூட் படம்தான். ஆனால் BBCயும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கின்றது என்று நினைக்கின்றேன். பெயரிலி, நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் குறித்து சற்று விரிவாக எழுத விருப்பம். தற்போது தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்ற நிலையில் இருப்பதால் நாளை எழுதுகின்றேன். நன்றி.
4/13/2005 02:39:00 AMநான் இந்தப்படத்த பார்க்கணுமான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நன்றி டி.சே.
4/13/2005 03:47:00 AMஓ!!! பார்த்து விடலாமே
4/13/2005 04:20:00 AMஇந்தப் படத்தில் எனக்கு ஆச்சரியம் Gweneth Paltrowதான். இதுவரை அவர்ர் நடித்த எந்தப் படத்திலும் ஒட்ட முடியாமல் இருந்தது.
4/13/2005 08:39:00 AMபடத்தில் வாவ் போட்ட இடம்!
டெட் அந்தப் பொண்ணுக்கு குழந்தை பிறக்கப் போகுதுன்னு சொல்வாரே! அதுவும். கடைசிக் காட்சிகளில் அந்தப் பக்கத்துவீட்டுக்காரருடன் பேசி, முத்திரை இருக்கான்னு கேட்டு, கடைசியில் சமையலறையில் Gas பரவச்செய்து தற்கொலை செய்வதுதான்.
படம் பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் தாக்கம் இருந்தது!
அதுவும் சில்வியா போன்ற ஆளுமை கொண்ட பெண், எதற்காக இப்படி என்று...
/இந்தப் படத்தில் எனக்கு ஆச்சரியம் Gweneth Paltrowதான். இதுவரை அவர்ர் நடித்த எந்தப் படத்திலும் ஒட்ட முடியாமல் இருந்தது./
4/13/2005 10:27:00 AMSliding Doors?
டி.சே படம் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆர்வமாக உள்ளது. நான் நேற்று "Meet the Fockers" பார்த்தேன். சொன்ன அளவிற்குத் திரைப்படமும் இல்லை சிரிப்பம் வரவில்லை.
4/13/2005 11:25:00 AMபெயரிலி சில்வியாவின் இந்தக் கவிதைகளை மொழிபெயருங்கள். நான் மொழி பெயர்த்து வைத்திருக்கின்றேன் திருப்தியில்லை
Daddy :
You do not do, you do not do
Any more, black shoe
In which I have lived like a foot
For thirty years, poor and white,
Barely daring to breathe or Achoo.
Daddy, I have had to kill you.
You died before I had time--
Marble-heavy, a bag full of God,
Ghastly statue with one gray toe
Big as a Frisco seal
And a head in the freakish Atlantic
Where it pours bean green over blue
In the waters off beautiful Nauset.
I used to pray to recover you.
Ach, du.
In the German tongue, in the Polish town
Scraped flat by the roller
Of wars, wars, wars.
But the name of the town is common.
My Polack friend
Says there are a dozen or two.
So I never could tell where you
Put your foot, your root,
I never could talk to you.
The tongue stuck in my jaw.
It stuck in a barb wire snare.
Ich, ich, ich, ich,
I could hardly speak.
I thought every German was you.
And the language obscene
An engine, an engine
Chuffing me off like a Jew.
A Jew to Dachau, Auschwitz, Belsen.
I began to talk like a Jew.
I think I may well be a Jew.
The snows of the Tyrol, the clear beer of Vienna
Are not very pure or true.
With my gipsy ancestress and my weird luck
And my Taroc pack and my Taroc pack
I may be a bit of a Jew.
I have always been scared of you,
With your Luftwaffe, your gobbledygoo.
And your neat mustache
And your Aryan eye, bright blue.
Panzer-man, panzer-man, O You--
Not God but a swastika
So black no sky could squeak through.
Every woman adores a Fascist,
The boot in the face, the brute
Brute heart of a brute like you.
You stand at the blackboard, daddy,
In the picture I have of you,
A cleft in your chin instead of your foot
But no less a devil for that, no not
Any less the black man who
Bit my pretty red heart in two.
I was ten when they buried you.
At twenty I tried to die
And get back, back, back to you.
I thought even the bones would do.
But they pulled me out of the sack,
And they stuck me together with glue.
And then I knew what to do.
I made a model of you,
A man in black with a Meinkampf look
And a love of the rack and the screw.
And I said I do, I do.
So daddy, I'm finally through.
The black telephone's off at the root,
The voices just can't worm through.
If I've killed one man, I've killed two--
The vampire who said he was you
And drank my blood for a year,
Seven years, if you want to know.
Daddy, you can lie back now.
There's a stake in your fat black heart
And the villagers never liked you.
They are dancing and stamping on you.
They always knew it was you.
Daddy, daddy, you bastard, I'm through.
பெயரிலி, நீங்கள் குறிப்பிடும் பல விடயங்களில் எனக்கும் உடன்பாடுண்டு. நீங்கள் கூறியது மாதிரி சிவரமணி குறியீடாகப்படுவது, அவரை முன்வைத்து ஏனைய பெண்களின் துயரங்களைப் பேசுவது இலகுவாயிருக்கும் என்பதால் மட்டுமே. சிவரமணி என்று குறிப்பிடும்போது அது அவரைப்போன்ற பல பெண்களின் துயரங்களைப் பேசுவதே என்றே நான் அர்த்தப்படுத்திக்கொள்கின்றேன். எனெனில் பாதிக்கப்படும் பெண்கள் பலர் இருந்தாலும், அநேகருக்குப் பரீட்சயமான ஒருவரை முன்வைத்து அந்த விடயத்தைப் பேசுவது இலகுவாயிருக்கும் என்பதால் என்றுதான் நினைக்கின்றேன். அவ்வாறு செய்யும்/ எழுதும்பட்சத்தில், நீங்கள் குறிப்பிட்டமாதிரி சிவரமணிக்கு தனிப்பட்ட அதிமுக்கியத்துவம் கொடுப்பதாய் தோன்றும் அபாயமிருக்கிறது.
4/13/2005 06:54:00 PM//செல்வி, சிவரமணிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கஸ்தூரிக்கோ மாலதிக்கோ கொடுக்கப்படுவதில்லை. //
உண்மைதான் (வானதியைத்தான் மாலதி என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்). மூளைச்சவரம் செய்யப்பட்டவர்கள் என்று பலரால் அடிக்கொருதரம் அழைக்கப்படுபவர்கள் மிக நல்ல கவிதைகளை எழுதியிருக்கின்றனர். இன்று பெண்போராளிகளிலிருந்து வெளிவரும் படைப்புக்கள் ஆமியைப் பொலபொலவென்று சுட்டுத்தள்ளும் இரைச்சல் நிறைந்த ஆக்கங்களல்ல. மாதவிடாயும், மெல்லியதாய் போர்க்காலத்தில் அரும்பும் காதலும், அருகிலிருந்த தோழிகளின் இழப்புகளுந்தான் ஊடுபொருளாய் கதைகளில் வருகின்றன(உதாரணங்கள் மலைமகள் கதைகள் மற்றும் வானம் வெளிச்சிரும்). அண்மையில் ஈழத்திற்குச் சென்றபோது பெண்போராளிகளுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தபோது கூட, இராணுவத்தைச் சுட்டுத்தள்ளி பெருமிதப்பட்ட சம்பவங்கள் என்று எவரும் கூற நான் கேள்விப்படவில்லை (கேட்ட கதைகளைப் பற்றி பக்கம் பக்கமாய் எழுதலாம்).
Birthday Letters வாசிக்காதபடியால் ரெட்டின் நியாயம்/அநியாயம் குறித்துச் சொல்ல முடியாதிருக்கின்றது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டமாதிரி, சில்வியாவின் தற்கொலைக்கு கொடுத்த முக்கியத்துவம் ஏன் ஆன் செக்ஸ்டனுக்கு கொடுக்கப்படவில்லை என்பது முக்கியமான அவதானம். அமெரிக்க-பிரித்தானிய பிரச்சினைகளின் நிமிர்த்தம் அதிகம் சில்வியா வெளியே வந்திருக்கின்றார் என்பது, இந்தப்படத்தைப் பற்றி எழுதவதற்கு முன்னர் இணையதளங்களில் வாசித்த பலரது கட்டுரைகளும் நிரூபிக்கின்றன (அமெரிக்க-பிரித்தானியாவில் கூட gender issues வித்தியாசமானவை என்று சில்வியா-ரெட்டை முன்வைத்து எழுதியிருக்கின்றனர், எனக்கு அது புதிய செய்தி).
உங்கள் அமெரிக்க நண்பர் ஒருபக்கச் சார்பாக சொல்லியிருந்தாலும், அவர் கூறிய பின்பகுதி சில்வியாவின் வாழ்க்கையை அறிந்தளவில் சரியெனப்பட்டது ---> //he was jealous that she could have become a better poet than him." //
..........
சரி, இவ்வளவு கூறினாலும் பெண்களின் நிலை இன்று வெளியே எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் மேலே கூறிய பலவிடயங்கல் அடிபட்டுப் போய்விடக்கூடும். அண்மையில் கலைச்செல்வனிற்காய் நடந்த நினைவஞ்சலிக்கூட்டத்தில், வெளியிடப்பட்ட அஞ்சலிக்குறிப்பில், ஒரு இலக்கியவாதி, 'என் செல்வியின் மரணம்' என்று குறிப்பிட்டு, தற்போது, '....., எனதும் இணைவை சாத்தியமாக்கியவன்' என்று எழுதுகின்றார். செல்விக்கு காதலனாய் இருந்தது, அதை வெளியே சொல்வது பிரச்சினையில்லை. ஆனால் இன்னொரு பெண்ணுடன் இருந்துகொண்டு 'என் செல்விக்கு' என்று எழுதும்போது அந்தப்பெண் ஏதோ ஒரு பக்கத்தில் காயமடையத்தானே செய்வார். சரி, அந்தப்பெண்ணுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது யாரேனும் சொல்வார்கள் என்றால், 'என் கண்ணனுக்கு' என்று முந்திய காதலை நினைவுபடுத்தி ஒரு மணமான பெண் எழுதினால் நாமெல்லோரும் சும்மா இருந்துவிடுவோமா? ஆக்ககுறைந்தது, ஒரளவு நல்ல படங்கள் என்று சொல்லப்படுகின்ற அழகியையும், ஆட்டோகிரா·ப்பையும் ஆணிற்குப்பதிலாக ஒரு பெண்ணின் பாத்திரம் இருப்பதாய் படைக்கப்படுவதற்கான சுதந்திரமோ அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ நமது தமிழ் சூழலிற்கு இல்லையென்கின்றபோது, நாம் பெண்களையும், ஆண்களையும் பலவிடயங்கலில் ஒரு தராசில் வைத்து நிறுக்கமுடியாது போலத்தான் இன்றைய பொழுதில் எனக்குத் தோன்றுகின்றது.
..........
பெயரிலி நீங்கள் கூறியவிடயத்தை விட்டு சற்று வெளியே போய்விட்டதாய் தோன்றுகின்றது. பயப்பிடாமல் எனக்குக் குட்டலாம் :-).
தோழர், தோழியருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
4/13/2005 11:10:00 PM/பெண்களின் நிலை இன்று வெளியே எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் மேலே கூறிய பலவிடயங்கள் அடிபட்டுப் போய்விடக்கூடும்
4/13/2005 11:34:00 PMஅந்தப்பெண்ணுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது யாரேனும் சொல்வார்கள் என்றால், 'என் கண்ணனுக்கு' என்று முந்திய காதலை நினைவுபடுத்தி ஒரு மணமான பெண் எழுதினால் நாமெல்லோரும் சும்மா இருந்துவிடுவோமா? ஆக்ககுறைந்தது, ஒரளவு நல்ல படங்கள் என்று சொல்லப்படுகின்ற அழகியையும், ஆட்டோகிரா·ப்பையும் ஆணிற்குப்பதிலாக ஒரு பெண்ணின் பாத்திரம் இருப்பதாய் படைக்கப்படுவதற்கான சுதந்திரமோ அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ நமது தமிழ் சூழலிற்கு இல்லை/
இவற்றினை நான் மறுக்கப்போவதில்லை - தமிழ்ச்சூழலிலே மட்டுமல்ல, பொதுவாக, எல்லாச்சூழலிலும் இதே நிலைதான்.
/யென்கின்றபோது, நாம் பெண்களையும், ஆண்களையும் பலவிடயங்களில் ஒரு தராசில் வைத்து நிறுக்கமுடியாது போலத்தான் இன்றைய பொழுதில் எனக்குத் தோன்றுகின்றது./
இதை ஓரளவுக்குத்தான் ஒத்துக்கொள்வேன்; முழுமையாக எல்லாச் சந்தர்ப்பங்களுக்குமென என்னாலே ஒத்துக்கொள்ளமுடியவில்லை; சில்வியா ப்ளாத் ரெற் ஹியூஸிலும்விட சிறப்பான கவியாகவே இருக்கட்டும். அவரின் இன்னொரு பெண்ணுடனான உறவினை எவ்விதத்திலும் நியாயப்படுத்தவும் முடியாது; ஆனால், சில அமெரிக்க ஊடகங்களும் சில பெண்ணியவாதிகளும் சில்வியா ப்ளாத்தினைக் கொன்றவன் ஹியூஸ் என்ற விதத்திலே பெரிதுபடுத்துவதை என்னாலே ஏற்கமுடியவில்லை. கணவனின் துரோகத்தினாலே செத்ததுதான் அவரை ஒரு பெண்துயரின் குறியீடு என்றாக்குமென்றால், சங்கம்புழைக்கும் மாயகோவஸ்கிக்கும் தற்கொலைச்சாவுக்கான காரணம் பெண்கள் என்று சில ஆண்பன்றிகள் தொடங்கிவிடும். சில்வியா, சிவரமணி இவர்களின் துயர்களையும் இறப்புகளையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், சில்வியாவைவிட, சிவரமணியைவிடத் துயர்பெற்றும் பேசவும் வெளிச்சொல்லவும் வழியற்ற முடக்கப்பட்ட எத்தனையோ பெண்கள், எங்கள் சுற்றுப்புறத்திலே சுற்றத்திலே இருக்கின்றார்கள். ஆனால், இவர்களின் துயர் பற்றி நாங்கள் பேசுகின்றோமா? இல்ல்லையே :-(
இந்தப் பின்னூட்டம் இங்கே சற்றுப் பொருத்தமில்லததாய் இருக்கலாம் எனினும்....
4/14/2005 07:09:00 PMடீசெ, பெயரிலி சொல்வதை நான் ஓரளவு ஒத்துக்கொள்கிறேன். //சிவரமணி குறியீடாகப்படுவது, அவரை முன்வைத்து ஏனைய பெண்களின் துயரங்களைப் பேசுவது இலகுவாயிருக்கும் என்பதால் மட்டுமே.//
எனக்கு சிவரமணியை தனிப்பட்ட முறையில் தெரியாது. எங்கோ, என்றோ ஒரு தொலைதூரத்தில் நான் அறிந்த மிகச் சொற்ப அளவில், சிவரமணியின் துயரங்களை விட பெருந்துயர் அனுபவித்த/அனுபவிக்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.
துயரம் என்பது அவரவர் தாங்குசக்தியைப் பொறுத்தது என்பது என் அபிப்பிராயம். தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் வசித்தவர்களுக்கு அன்றைய அரசியல் சமூக சூழல் விளங்கியிருக்கும். இன்றும் போலவே மிக விரக்தி தரக்கூடிய சூழ்னிலை அது. அவ்வாறான ஒரு காலகட்டத்தில் வாழ்வதற்கு survival techniques கொஞ்சம் கடைப்பிடித்தல் அவசியம். மனதை மென்மையாய் வைத்திருத்தலும், அறிவார்ந்து யோசித்தலும் இருப்பை மிகக் கடினமாக்குவதாகவே இருந்தது. சிவரமணியின் முடிவுக்கு அவர் பிழையென்று கருதியவற்றை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாமையும், எனக்கென்ன என்று விலகிப் போக முடியாமையும் காரணமாக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
அவரை அவ்வாறு சிந்திக்கத் தூண்டியவை/ தூண்டியவர்கள் பற்றி எனக்கு தெரியாது. அவர் பெரிதும் பேசப்படுவதற்கு இக்காரணிகள் காரணமாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை - பெண்களின் சுதந்திரமான் இருப்பை ஆதரிக்காத/எதிர்க்கிற சமூகத்தில் பெண்ணின் நிலைக்கு சிவரமணி ஒரு உதாரணம். மற்றும்படி துன்பங்களை அளவுகோளாய் பார்த்தால், நாம் வேறு உருவகத்தை தேட வேண்டி இருக்கலாம்.
கடந்து சென்ற யாரோ....
/என்னை பொறுத்தவரை - பெண்களின் சுதந்திரமான இருப்பை ஆதரிக்காத/எதிர்க்கிற சமூகத்தில் பெண்ணின் நிலைக்கு சிவரமணி ஒரு உதாரணம்./
4/14/2005 09:59:00 PMசிவரமணி குறித்தும் அவர் யாழ் பல்கலைக்கழத்திலே சார்ந்திருந்த படிப்புவட்டம் குறித்தும் "அறிவார்ந்து யோசித்தலும் இருப்பை மிகக் கடினமாக்குவதாகவே இருந்தது" என்பது மெய்யாக இருக்கலாம். ஆனால், சிவரமணியின் நிலைப்பாடுகளை எதிர்த்த சமூகத்திலே அந்நேர யாழ்ப்பல்கலைக்கழகத்தின் அறிவுசார்ந்த இடதுசாரிப்பெண்ணியவாதிகள் என்று சொல்லப்படுகின்றவர்கள் எவருமே இல்லையா என்பது குறித்து அவருடன் அந்தப் படிப்புவட்டத்திலே இருந்தவர்கள்தான் சொல்லமுடியும். அல்லாதவரைக்கும், சிவரமணியின் இறப்புக்கு பெண்களின் சுதந்திரத்தினை எதிர்க்கும் (ஆணாதிக்க)சமூகமே முழுக்க முழுக்கக் காரணம் என்றாகிவிடும். சில சமயங்களிலே Chandra Levy களை Gary Conditகள் மெய்யாகவே கொல்லாமலுமிருந்திருக்கலாம்.
//ஆனால், சில அமெரிக்க ஊடகங்களும் சில பெண்ணியவாதிகளும் சில்வியா ப்ளாத்தினைக் கொன்றவன் ஹியூஸ் என்ற விதத்திலே பெரிதுபடுத்துவதை என்னாலே ஏற்கமுடியவில்லை.//
4/14/2005 11:45:00 PMமுற்றுமுழுதாக ரெட் ஹியூஸில் பழியைப்போடமுடியாது தான். ஆனால் ரெட்டை சந்திக்கமுன்னர் மூன்று வருடங்களுக்கு முன் தற்கொலைக்கு முயற்சித்தவர் என்பதுவும், பிறகும் அடிக்கடி தனது தற்கொலை எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட (படம் ஓரளவு birthday letters ஜ தழுவி எடுக்கப்பட்டது உண்மையெனில், தான் நீரில் மிகு தூரம் வரை நீந்திச்சென்று தற்கொலைக்கு முயற்சித்தாயும், தக்கையைப் (cork) போல நீர் தன்னை மிதக்க வைப்பதாயும் கூறுகின்ற) சில்வியாவை ஒரளவு ரெட் ஹீயூஸ் புரிந்திருந்தால் ஆகக்குறைந்தது சில்வியாவின் வாழ்வு இன்னும் கொஞ்சக்காலமாவது நீடித்திருக்கும் போல எனக்குத்தோன்றியது. தற்கொலைகளைப் பற்றி ஓரளவு தனிப்பட்டும் அறிந்திருப்பதால், ஹீயூஸால் முற்றுமுழுதாக சில்வியாவின் மரணத்தை தடுத்துநிறுத்த முடியாதிருந்திருக்கும் என்பதுவும், அவரையே சில்வியாவின் மரணத்திற்கான 100%மான குற்றவாளி என்று விரல்நீட்ட முடியாது என்பதுவும் புரிகின்றது.
கடந்துசென்ற ஒருவர் கூறிய,
//சிவரமணியின் முடிவுக்கு அவர் பிழையென்று கருதியவற்றை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாமையும், எனக்கென்ன என்று விலகிப் போக முடியாமையும் காரணமாக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது//
உண்மைதான். அதைத்தான் பத்மா அர்விந்தும் தனது கடைசிப்பதிவில் ''If I don’t let my mind to get hurt, how can anyone hurt me?'' என்று கூறுகின்றார். ஆனால் இப்படியிருக்க எத்தனைபேரால் முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. அப்படியிருக்க முடியாதவர்களுக்கு நாமென்ன தீர்வுகளை வைத்திருக்கின்றோம் என்று யோசிக்க வேண்டும்போலத்தோன்றுகின்றது. ஆகக்குறைந்தது என்னை முன்வைத்துச் சொல்வதென்றால், எனக்கு இப்படியிருப்பதற்கான மனப்பக்குவம் இன்னமும் இல்லையென்றுதான் கூறுவேன்.
சில்வியா ப்ளாத், சிவரமணி மீது மரியாதை, பரிவு இருக்கிறது. அவர்களின் நிலையில் வாழ்ந்து பார்க்காதவரை அவர்கள் முடிவுகளுக்கு யார் காரணம் என்று அடித்துச் சொல்ல முடியாது.
4/17/2005 09:55:00 PMஆணாதிக்கம் மட்டும் தான் இவ்வாறான சோக முடிவுகளுக்கு காரணமென்று எல்லா சந்தர்ப்பங்களிலும் சொல்ல முடியாது. அதிகம் படிப்போ, உலக அறிவோ இல்லாமலேயே சிலர் பிரச்சினைகளிலிருந்து மீண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆளுமையும், பிரச்சினை நேரம் அவர்களுக்கு கிடைக்கிற நல்லாதரவும் அவர்களை மீட்டெடுத்திருக்கக் கூடும்.
என்னளவில் பெண்ணியம் பேசுவோரெல்லாம், அதைக் கடைப்பிடிப்போரல்ல. (கவனிக்க : பெண்ணியத்தை அழகாக கடைப்பிடிபவர்களும் இருக்கிறார்கள்). "அறிவுசார்ந்த இடதுசாரிப்பெண்ணியவாதிகள்" 'Comfort Zone' ஒன்றிலிருந்து கொண்டு பேசும் வெட்டிப் பேச்சாளர்களாக இருந்திருக்கலாம். அவர்களின் பேச்சை சிலர் முழுதாய் நம்பி செயலிலிறங்கியிருக்கலாம். இறங்கியவர்கள் அதற்காக பின்னர் வருந்திக் கூட இருக்கலாம்.
ஆணோ பெணோ அவரவர் சுதந்திரத்துக்கு போராடுவதென்ற முடிவை அவரவரே எடுக்க வேண்டும். ஒரு சின்ன நெம்பலும், அதை தொடர்ந்த சம்பந்தப்பட்ட நபரின் முடிவிற்கான ஆதரவும் மட்டுமே பெண்ணிய/ஆணியவாதிகளிடமிருந்து கிடைக்க வேண்டியது. சிலசமயம் பொய்யாக வாழ்வது சிலருக்கு இலகுவாயிருக்கிறது. உண்மை அறிவதற்கு ஆர்வமற்றிருக்கிறார்கள்/ பயப்படுகிறார்கள். அவர்களுக்கு உண்மையைச் சொல்லி ஏதும் பயனிருப்பதாய் நான் கருதவில்லை. பொய்யாய் வாழ்வது பிடித்திருக்கிறதென்றால், உண்மை சொல்லி அவர்கள் சொர்க்கத்தை ஏன் கலைக்க வேண்டும்?
//ஆனால் இப்படியிருக்க எத்தனைபேரால் முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. அப்படியிருக்க முடியாதவர்களுக்கு நாமென்ன தீர்வுகளை வைத்திருக்கின்றோம் என்று யோசிக்க வேண்டும்போலத்தோன்றுகின்றது.//
எனக்கு சுயநலவாதியாயிருப்பது பெரிதும் கைகொடுத்திருக்கிறது. மென்மையைத் தொலைத்துவிட்டு சுத்தமாக வேறொரு முரட்டுத் தளத்தில் வாழ்வது இலகுவாயிருந்திருக்கிறது. இடைக்கிடை 'என்ன செய்தாய்' என்று மனச்சாட்சி கேட்கையில் உறக்கமற்ற இரவொன்றை செலவழித்து, இறுதியில் மீண்டும் தனித்து எதுவும் செய்ய முடியாதென்ற வசதியான பதிலைச் சொல்லிக்கொண்டு மீண்டும் அதுவென.....
தீர்வு???????
I seriously am not against feminism or anything. Its just that I see people and not their gender. I probably am lucky to be raised/live relatively freely and have the sense to know my limits so that I won't get hurt and not hurt others (how shrewd is that :-) மற்றும்படி எனது துணை என்னை எதிர்த்துப் போராட எனது அனுமதி மறுக்கப்பட்டிருப்பது எல்லாம் ச்சும்மா... :-)
கடந்து சென்ற யாரோ....
சிவரமணி yaru?
6/13/2005 05:35:00 PMசிநேகிதி, சிவரமணி மிக இளவயதிலேயே தற்கொலை செய்து கொண்ட ஒரு கவிஞை. சிவரமணி கவிதைகள் என்று அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் விபரம் அறிய இங்கே சென்று பாருங்கள்.
6/13/2005 11:00:00 PMPost a Comment