கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Thursday, December 29, 2005

கடற்கரையில்
கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனாய்
பிரியமாய் சேகரிக்கின்றேன்
உனக்கான வார்த்தைகளை

வார்த்தைகள் அனைத்தும்
வன்முறையேறி
இரத்தமாய் வழிகின்றன
அல்லது
போதையேறி
போலியாய் பல்லிளிக்கின்றன

வலிக்கவும் செய்யாமல்
வருடச்செய்யும் மென்மையுமில்லாமல்
உன் திமிர்வுக்கேற்ற சொற்கள்தேடி
பாலைவனத்தில் நடக்கத்தொடங்குகையில்
நீ மணலிலும்
நான் பனியிலும்
எழுதி அழித்த வாக்கியங்கள்
நட்சத்திரங்களாகின்றன

வருடங்கள் கடந்து
வாவிகள் தாண்டி
இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
உதிர்ந்துகொண்டிருக்கும் ஒரு பருவத்தில்
நிகழக்கூடும் நமது சந்திப்பு

அப்போது விளம்புவேன்
உனக்கு;
ஆபிரிக்கன் நடனத்தையும்
ஸ்பானிய இசையையும்
ரஷ்யப் புனைவையும்
கலந்து உருவாக்கிய
ஒரு தமிழ்ச்சொல்லை.


(குட்டி இளவரசிக்கு)

உடைந்த உரையாடல்கள்

Thursday, December 22, 2005

'என்னப்பா உங்கடைபாட்டில முணுமுணுத்துக்கொண்டு என்னத்தை எழுதிக்கொண்டு இருக்கிறியள்?'
'ச் சா சா...என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.'
'இதைத்தானேயப்பா, நீர் கல்யாணங்கட்டினதிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர். உந்த மண்ணாங்கட்டி வேலையை விட்டுவிட்டு, கூகிளிலை இருந்து எடுத்துப்போட்டு உம்மடை ஆக்கம் என்று பத்திரிக்கைக்கு அனுப்பிவிடும்.'
'கூகிளிலிருந்தா? எனக்கு அப்படிச்செய்து பழக்கமில்லை.'
'அதுசரி, முந்தி யூனியில் படிக்கும்போது, நீர் கூகிளிலிருந்து உருவிப்போட்டு கட்டுரைகள் எழுத, நானும் உமக்கு அந்தமாதிரி எழுத்துத் திறமை என்டெல்லோ தவறாக நினைத்து காதலித்தனான்.'
'சரி, சரி பழையதெல்லாம் இப்ப ஏன் கிண்டுகின்றீர்? நான் பழையதெல்லாம் மறக்க முயன்று என்ரைபாட்டில் ஒரு கட்டுரை எழுதலாம் என்டு பார்க்கிறன்.... என்டாலும் நீர் வர வர எங்கடை அம்மா மாதிரிதான் கதைக்கின்றீர்?'
'எப்படியப்பா?'
'இல்லை அம்மா அடிக்கடி சொல்லுவா....உன்னைப் பெத்ததற்குப் பதிலாய் இரண்டு தென்னம்பிள்ளைகளை வைத்து தண்ணி ஊற்றியிருந்தால் இந்த நேரம் தேங்காயாவது பிடுங்கியிருக்கலாம், நான் ஒரு பன்னாடையை எல்லோ பெத்துவிட்டேன் என்று.'
'அப்படியா சொல்லுறவா? அந்த மனுசி நான் உம்மளை கலியாணங்கட்டப்போகின்றேன் என்றபோது இதை என்னிடம் சொல்லியிருந்தால் நானும் இந்த நரகத்திலிருந்து தப்பியிருக்கலாமே.'
'அவா, இதுவரை தான் பெற்ற கஷ்டம் போதும் என்றுதான் உம்மளிடம் என்னைத் தள்ளிவிடுகின்றேன் என்றவா! சரி அதைவிடும். நான் ஒரு அறிவுஜீவியாக வரவேண்டும் என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அதற்கு ஏதாவது உதவி செய்யுமன்?'
'அதற்கெல்லாம் நீர் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கவேண்டும். அடிக்கடி இச(க்) கிளப்புகளுக்கு போயிருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து நீர் போனதெல்லாம் யோகா கிளப்புகளுக்கும், கோப்பிக்கடைகளுக்கும் தான். அங்கே போயும், நீர் ஒழுங்காய் உருப்படியான விடயத்தையா செய்தனீர்? அங்கு வாற போற கேர்ல்ஸை சைட் அடித்தது மட்டுந்தானே சின்சியராய்ச் செய்தனீர்.'
'அவனவன் கவிதைகள், கட்டுரைகள் எழுதி உலகம் சுற்றும் PLAYERகளாக குதூகலித்துக் கொண்டிருக்கின்றாங்கள் என்ற பொறாமையிலை நான் வயிறெரிந்து கொண்டிருக்கிறன். நீர் என்னடா என்றால்.... என்னப்பா எங்கையப்பா அவசரமாகப் போகின்றீர்?'
'இல்லை ஏதோ player, கவிஞர் என்று கேட்டிச்சுது. அதுதான் இந்த இடியப்ப உரல் எங்கே இருக்கிறது என்று தேடப் போகின்றேன்.'
'ஏனப்பா கோபப்படுகின்றீர். கொஞ்ச நாளாய் இடியப்ப உரலுக்கு வேலை தராது நல்ல மனுசனாய்த்தானே இருக்கிறன். எதைச் சொன்னாலும் உடனே இடியப்ப உரலைத் தேடும்.'
'சரி சரி, உந்த எழுதிறது கிழிக்கிறது என்பதை விட்டு விட்டு சமைக்கிறதுக்கு வந்து ஏதாவது உதவி செய்யும்.'
(மனதுக்குள் முணுமுணுத்துபடி...) முந்தி அம்மாவோட இருக்கைக்க, றூமுக்குள்ள கணணியோடும் ரீவியோடும் பொழுதுபோக்கிக்கொண்டிருக்க, நேரந்தவறாது சாப்பாடு தேத்தண்ணி என்டெல்லாம் வரும்...இப்ப என்னடா என்றால்...
'என்னப்பா ஏதோ சொல்கிற மாதிரிக்கேட்குது...?'
'இல்லை. இன்டைக்கு கத்தரிக்காய் குழம்பு வைக்கிறதோ உருளைக்கிழங்குப் பிரட்டல் செய்கிறதோ என்று யோசித்துப்பார்த்தனான். உம்மளுக்கு என்னப்பா பிடிக்கும்?'
'சரி சரி எனக்கு ஐஸ் வைக்காமல், உம்மடை சொந்தக்காரர்களை எடுத்து உரிக்கத் தொடங்கும்.'
'என்னதையப்பா..?'
'என்னதையோ? ஏதோ தெரியாத மாதிரிக்கேட்கிறீர்.....வெங்காயம்....வெங்காயத்தை உரியும்.'

(2)
'கலகக்காரர்களை எனக்கு ஒருகாலத்தில் பிடிக்கும்!'
'ஏன் இப்ப சலித்தமாதிரி பேசுகிறாய்'
'இல்லை. கலகக்காரர்களை நேரில் அறியும் சந்தர்ப்பம் வரும்போதுதான் அவர்களின் உண்மை முகம் தெரிகின்றது.'
'என்ன நடந்தது?'
'இல்லை முந்தியொருக்கா வெங்கட்சாமிநாதன் இங்கே வந்தபோது தங்கள் எதிர்ப்பை எல்லாம் காட்டி பிரமீளுக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டிருந்தார்கள்.'
'அது நல்ல விடயந்தானே...தாம் நம்புவதை வெளிப்படையாக தெரிவித்து இருக்கின்றார்களே!'
'ஓம். எனக்கும் சந்தோசமாய்த்தான் இருந்தது. ஆனால்...'
'என்ன ஆனால்?'
அண்மையில் சு.ராவின் நினைவஞ்சலிக் கூட்டம் நடக்கும்போது, ஒருவர் சு.ராவின் விடயத்தில் பிரமீள் துரோகி என்று வெளிப்படையாக கூறினார்.'
'சொன்னவருக்கு என்றும் ஒரு கருத்து இருக்கும்தானே'
'அது இல்லை விசயம். முந்தி பிரமீளுக்கு துண்டுப் பிரசுரம் வெளியிட்டவர்களில் ஒருவரும் அங்கே இருந்தவர். அது மட்டுமில்லை... 'கவித்துவமான' ஒரு கவிதையையும் எழுதிப்போட்டு, கவிட்டைக் குனிந்து பார்க்கவும் அல்லது பசுவய்யாவின் நூற்றெட்டுக் கவிதைகளைப் பார்க்கவும் என்று அடிக்குறிப்பும் தந்து கலகமாயும் எழுதினவர். அவர் இந்தச்சமயத்தில், ஒரு சின்ன எதிர்ப்பையும் பிரமீளுக்கு ஆதரவாய் காட்டாததுதான் வியப்பாயிருந்தது'
'விளங்கேல்லை நீ என்ன சொல்ல வருகிறாய்?'
'இல்லை, ஆகக்குறைந்தது, இது ஒரு இரங்கல் நினைவுக்கூட்டம். பிரமீளும், சு.ராவும் காலமாகிவிட்டார்கள், அந்த விடயங்களை பேசவேண்டாம் என்றாவது கூறியிருக்கலாம். இல்லாவிட்டால் வேறொருசமயத்தில் இவற்றை விரிவாக விவாதிக்கலாம் என்றாவது கூறியிருக்கலாம்.'
'ம்...ம்...'
'எனக்கு இங்கிருக்கின்ற மற்ற குறூப்புக்களைவிட அவர்களில் மிகவும் நம்பிக்கை இருந்தது....எழுதுவதற்கும் நேரிலும் வித்தியாசம் இல்லாமல் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். கலகக்காரர்கள் என்றால் தாங்கள் கூறிய கருத்துக்களில் வலுவாய் டிபென்ஸ் பண்ணி நிற்கோனும். இவர்கள் கூறுவதை எல்லாம், நாங்கள் நம்பி, எப்படி வேறு தளங்களில் வேறு ஆக்களோடு விவாதிப்பது?'
'சரி சரி அதைவிடு......விம்பங்கள் என்றால் உடையத்தானே செய்யும்!'

'இப்படித்தான் இன்னொரு விம்பமும் உடைந்தது....'
'என்னென்டு...'
'இல்லை இப்ப நல்ல நாவல்களும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கின்றாரே ஒருத்தர்....'
'ஓம்...உனக்கு அந்தமாதிரி பிடித்த எழுத்தாளர்தானே அவர்.....'
'ஓமோம்...அவர்தான்.....அவரைப் பற்றி ஒரு பதிவு எழுதியவுடன் ஒரு நண்பர் தொலைபேசினார்.'
'என்ன சொன்னார்?'
'நீர் இப்படி அவனைப்பற்றி புகழோ புகழ் என்று புகழ்ந்து எழுதியிருக்கின்றீர். அவன் ஊரில் இருக்கும்போது அவனும் அவனது குடும்பமும் சாதித்திமிர் பிடித்துத் திரிந்தவர்கள்...இப்படிப்பட்ட அவனைப்புகழ்ந்து நீரெழுதுவது தலித்துக்களையே கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது......நான் ஒரு தலித்தாய் இருப்பதால் இதை அறிந்தும் அனுபவித்தும் இருக்கின்றேன் எண்டார்'
'சிலவேளை அவர் ஏதாவது காழ்ப்புணர்வில் சொல்லியிருக்கலாம்...அந்தாள் புலியின்ரை ஆளோ?'
'அப்படியெல்லாம் இல்லையடா...உடனே இப்படிப்பட்டவர்களுக்கு எதிராய்ப்பேசினால் புலியின்ரை ஆளென்டு முத்திரை எல்லாம் குத்தாதே....அவருடைய தமையனை மண்டையில் போட்டதே புலிதான்....எனவே அந்தாள் பொய் சொல்லியிருக்காது'
'சரி சரி நீ என்ன சொன்னனீ?'
'நான் சொன்னேன்... பார்த்தீங்களே அண்ணே...நான் ஒரு பதிவு எழுதும்போதுதான் இப்படி துள்ளிக்குதித்து கொண்டு வருகின்றீர்கள். இதையெல்லாம் நீங்கள் முன்னரே எழுத்தில் பதிவு செய்திருக்கவேண்டும் எல்லோ. இரண்டாயிரம் ஆண்டளவில் இலக்கியத்திலும் அரசியலிலும் நுழைகின்ற எங்கள் தலைமுறைக்கு எப்படி இதையெல்லாம் அறிய முடியும்? என்டாலும் என்னால் அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்று எழுதியதை விட்டுத்தரமுடியாது. புலம்பெயர் சூழலில் விரல் விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகள் சிலரில் அவரும் ஒருவர் என்ற கருத்தில் நான் உறுதியாக நின்றனான்'
'சரி, நீ உன்னுடைய பதிவில் எழுதிய கருத்தில்தானே உறுதியாய் நின்றிருக்கின்றாய்'
'ஆனால் இப்படிச் சொன்னாப்பிறகு அவ்வப்போது தொலைபேசும் நண்பர் இப்போது தொலைபேசுவதே இல்லை.'
'சரி சரி விடு...அங்கை பார் பச்சை கிளி ஒன்று பறந்துபோகிறது...'
'என்னடா...கலியாணம் கட்டி உனக்கு ஒரு வருசமும் ஆகிறது...இன்னும் பழைய பழக்கம் போகவில்லை...'
'இலக்கியவாதி என்றால் ஐம்பது வயதிலும் இருபது வயதுப்பிள்ளையைப் பார்க்கவேண்டும் என்றுதானே நமது பெருங்கவிகள், கோணல் பத்திக்காரர்கள் கூறுகின்றார்கள்.'
'அது சரி நீ இலக்கியவாதி ஆவது பற்றி கதை...எனக்கு மனுசியின்ரை இடியப்ப உரல் தான் கண்ணுக்குள்ளே நிற்கிறது!'
'என்னடா உன்ரை வீட்டிலும் இடியப்ப உரலா?'
'அட, நாசமாய்ப்போனவனே! கொஞ்ச நேரம் இடியப்ப உரலை மறந்து எதையாவது கதைக்கலாம் என்டால் அதையே திருப்ப திருப்ப ஞாபகப்படுத்து.'

(3)
'பெரியவர்....வாங்கோ வாங்கோ...'
'என்ன என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது மாதிரித் தெரிகிறது.'
'அப்படியில்லை....புத்தர் இயேசு என்று அடிக்கடி இங்கே வாறவையள். கடைசியாய் பிள்ளையார் கூட வந்து hip-hop ஆடிவிட்டுப் போனவர். அடுத்து நீங்கள் தானே வரவேண்டும்....அதுசரி சைபீயாவாவில் குளிர் எப்படி?'
'சைபீரியாவை நினைவுபடுத்தாதை...அவன் விசரன் ஸ்ரானின் செய்த கொலைகள் தான் ஞாபகத்துக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. Trotskyவை எல்லாம் மண்டையில் போட்டவனையெல்லாம் இன்னும் புகழ்ந்துகொண்டிருக்கிற தொண்டரடி'வால்கள்' இருப்பதைப் பார்க்க இன்னும் வலிக்கிறது.'
'சரி அதைவிடுங்கள்...எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் கலந்துதானே இருக்கிறது....'பெரியவர் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது..'
'கேள்விகளா? கேள் கேள்...எனக்கு அப்படிக்கேட்பவர்களைத்தான் பிடிக்கும்!'
(அதுதானே எனக்கு கைவந்த கலை) 'இல்லை பெரியவரே....இன்றைக்கு வருகின்ற இளைய தலைமுறை மதங்களை எப்படி இலகுவாய் உதறித்தள்ளிப் போகின்றார்களோ அதுமாதிரி மார்க்ஸிசத்தையும் விலத்தியே வைத்திருக்கின்றார்களே அது ஏன?'
'உனக்கு என்னுடைய பதில் வேண்டுமோ, இல்லை எனது தத்துவங்களை மனப்பாடம் ஆக்காக்குறையாய் அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சீடர்கள் கூறும் பதில் வேண்டுமோ...?'
'இரண்டையும் சொல்லுங்கோ...எல்லாக் கருத்துக்களையும் பகுத்தறிந்து பார்ப்பதுதானே நல்லது என்றுதானே நீங்களும் கூறியிருக்கின்றீர்கள்!'
'சீடர்கள் உடனே என்ன சொல்வார்கள் என்றால், எல்லாத்துக்கும் உலகமயமாதல்தான் காரணம் என்பார்கள்....உலகமயமாதல் அரும்பாய் முளைக்கத் தொடங்கியபோதே எனது தத்துவங்களை வைத்து கடுமையாக விவாதித்து அதை முற்றாக நிராகரித்திருக்கவேண்டும். ஆனால் வழமைபோல காலம் கடந்தபின் சுதாகரித்துவிட்டு இப்போதுதான் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்....அதற்குள் உலகமயமாதல் எங்கேயோ போய்விட்டது.'
'ஆனால் பெரியவரே, உலகமயமாதல் மூலம் பல நன்மைகள் தங்களுக்கு ஏற்பட்டதாக தலித்துக்கள் கூறுகின்றார்களே....?'
'நீதானே சொன்னாய் எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது என்று'
'சரி உஙகள் கருத்துத்தான் என்ன?'
'இதைப் பற்றிக் கதைத்தால் நான் மூலதனம் மாதிரி இன்னொரு புத்தகம் தான் எழுதவேண்டும். நான் என்னைப் பின்தொடர்பவர்களை...பின்பற்றுபவர்களை...எனது தோள்களுக்கு மேலே ஏறிநின்று இன்றைய உலகத்தைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன்...ஆனால் அவங்களில் கனபேர் என் தாளை எல்லோ பணிந்துகொண்டு கிடக்கின்றாங்கள்.'
'சரி விடுங்கோ...'தோள் கண்டோர் தோளே கண்டனர்' மாதிரி உங்கடை பாதத்தைப் பார்த்து மயங்கி அவர்கள் உஙகள் தாள்களைப் பணிந்து நிற்கின்றனர் போல.'
'கம்பர் சொன்னதை நீ கூறத்தான் ஞாபகம் வருகிறது...உங்கடை ஊர் பெரியாருக்கும் உதுதானே நிகழ்ந்தது.'
'ஓமோம்...எவரையும் திருஉருவாக்கி வழிபடத்தொடங்கினால் கடைசியில் வந்துநிற்கிற இடம் அதுவாய்த்தானே முடியும். பெரியவரே உஙகளை பற்றி அணமையில் ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றதே. ஜெர்மனி, இங்கிலாந்து என்று முதலாளித்துவ நாடுகளிலிருந்துகொண்டுதான் நீங்கள் மூலதனம் நூலை எழுதி இருக்கின்றீர்கள் என்று?'
'அது எல்லாம் விசமத்தனமானது...என் கொள்கைகளோடு விவாதிக்கமுடியாதவர்கள் எழுப்பும் போலித்தனமான குற்றச்சாட்டு இது....நீ எங்கே இருக்கின்றாய் என்பது அல்ல முக்கியம்...என்ன பேசிக்கொண்டு எழுதிக்கொண்டு இருக்கின்றாய் என்பதுதான் முக்கியம். நோம் சாம்ஸ்கியின் அனைத்து வாதங்களைக் கூட அவர் அமெரிக்காவில் வசிக்கின்றார் என்ற ஒரே காரணத்துக்காய் நிராகரிக்கமுடியும் என்பது முட்டாள்தனமல்லவா?'
'நன்றி பெரியவரே...கடைசியாய் ஒரு கேள்வி...'பின் தொடரும் நிழலின் குரல்' என்று ஒரு நாவல் வாசித்திருக்கின்றீர்களா? அதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்?'
'நீதானே முந்தி ஒருக்காய் சொல்லியிருந்தாய்....ஸ்ராலினின் கொடுங்கோலாட்சி என்று பத்துப்பக்கத்தில் எழுதவேண்டிய கட்டுரையை நூற்றுக்கணக்கான பக்கங்களை செலவழித்து அந்த எழுத்தாளர் மரங்களின் தாள்களை வீணாக்கியிருக்கின்றார். இப்படி வீணாய் மரங்களை அழிக்கவேண்டாம் என்று சூழலியல் அக்கறைகொண்ட அந்த நல்ல மனுசன், நவமார்க்ஸிசர் கோவை ஞானி, இந்த எழுத்தாளருக்கு நல்ல அறிவுரை கூறலாம்.'
'பெரியவர் உங்களோடு இப்படி உரையாடுவ்து... சிறுவயதில் சோவிய இலக்கியங்களை வாசிக்கும்போது, ஸ்ரெப்பிப்புல்வெளிகளில் பனிபொழிகின்றபோது, வின்ரர் கோட்டுடன் ஒரு பெண்ணின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடப்பது போன்ற கதகதப்பைத் தருகின்றது.'
'சரி....இந்த கதகதப்பை இலக்கியம், இசங்களின் விவாதங்கள் என்று கரைத்து மனதை இறுக்கமாக்காமல், அன்பைத் துணையிடமும் தாயிடமும் காட்டு.'
(அதுசரி, பன்னாடை வெங்காயம் என்று என்னை அம்மாவும் துணையும் 'அன்பு' பாராட்டுவது இந்த மனுசனுக்கு எங்கே தெரியப்போகின்றது என்று 'எங்கே நித்திரை எங்கே நித்திரை' என்று நான் வழமைபோல கூகிளில் தேடத் தொடங்குகின்றேன்).

Tuesday, December 20, 2005

எதை எழுதினாலும்
போலியாக இருக்கிறது
அல்லது
போலிகளைப் பேசுவதே
கலகமாகிறது

'இராணுவம் கற்பழிக்கத்தான் செய்யும்'
அற்புத தரிசனங்கள் தருபவர்கள்
வரலாற்றை எழுதவும்,
பெண்களை
சிதைத்துச்செல்பவர்கள்
திசைகள் எங்குமலைந்து
அரசியல் பேசவும்
செய்யும் விசர்ப்பொழுதில்
எதைப் பேசினாலும் எடுபடாது

தோள்கள் தினவெடுத்தால்
கொன்று குவிக்கவும்
குறிகள் விறைத்தால்
புணர்ந்து களிக்கவும்
தமிழரென நாமமது
தரணியிலே கொண்டோம்
உமக்காய்.

கொல்லுங்களடா
கொல்லுங்களடா
வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும் கிரனைட்டிலும்
அடையாளங்களைச் சிதைத்துவிட்டு
எகத்தாளமாய்ச் சிரிக்கவும் செய்யுங்களடா

வரலாற்றின்
இருண்ட குழிகளிலிருந்து
யோனிகளும் முலைகளும்
எழுந்துவந்து
பூர்வீக நிலங்களிலிருந்து
அடியோடு வேரறுக்கும்
இந்தப்பாவிகளை

சுதந்திரக்காற்று பனிப்புலத்தில்
சுழன்றடிப்பினும் களிப்புறோம்
மனிதர்களையும்
இளமையையும் தொலைத்துவிட்ட
கடந்தகாலத்துயர்
விரும்பி யாசிக்கும்
மரணத்தை

தங்கையிலும் துணையிலும்
அதிகாரம் அத்துமீறாதவரை
நுரைக்கும் பியருடன்
ஆட்டுக்கறி சுவைத்து
அனைவரும் பேசிக்கொண்டிருக்கலாம்
அரசியல் அறம்.

Dec 20/2005

(இளவயதிலேயே, உரையாடல் பலவந்தமாய் நிறுத்தப்பட்ட தர்சினிக்கு...)

வாசிப்பு

Monday, December 19, 2005

Baise-Moi (Rape Me)

ஒரு நாவலும், பார்க்காத படமும், வசீகரிக்கும் படைப்பாளியும்

'Baise-Moi', Despentes என்ற பிரெஞ்சுப் பெண்ணால் எழுதப்பட்ட நாவல். மனு(Manu) நடீன் (Nadine) என்ற இருபெண்களைச் சுற்றிக் கதை படர்கிறது. மனு, மிகவும் கொடூரமான முறையில் வன்புணரப்பட்டு வாழ்வதில் இழப்பதற்கும் பெறுவதற்கும் எதுவுமில்லை என்ற மனோநிலையில் இருக்கின்ற சமயத்தில், விலைமாதரும், நிகிலிஸ்டுமானான நடீனைச் சந்திக்கின்றார். ஆண்களால் கொடூரமாய் ஒடுக்கப்பட்டும் வறுமையில் மோசமாய் உழன்றுகொண்டிருக்கும், இவர்கள் இருவரும் அரசு/அதிகாரம் என்பவை விதித்த சட்டங்களை மீறி எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவித்தபடி பிரான்ஸின் புறநகர்ப்பகுதியில் பயணிப்பதாய் கதை விரிகிறது. ஆண்களுடன் one night stand போல உறவில் ஈடுபட்டபடி அவர்களைக் கொன்று போட்டபடி பயணித்தபடி இருக்கின்றார்கள். அதன் நீட்சியில் எதையும் இலகுவாய் துப்பாக்கி வைத்துச் செய்யலாம் என்றவகையில் அவசரமான பொழுதுகளில் ஒரு சில பெண்களைக்கூட கொன்றும் விடுகின்றனர். எதையும் இழக்கவேண்டியிருக்காது என்பது தெரிந்திருந்ததைப்போல, தங்களது வாழ்வுக்கு விரைவில் முடிவு வரும் என்பதிலும் தெளிவாக இருக்கின்றனர். இறுதியில் ஒரு கடையைப் பணத்துக்காய் கொள்ளையடிக்கும்போது அந்தக்கடைக்காரரின் துப்பாக்கியால் மனு கொல்லப்படுகின்றார். அதைத் தொடர்ந்து நடீன் என்ன செய்கின்றார் என்பது கதையின் நீட்சியில் கூறப்படுகின்றது.

இந்தக்கதை ஒரு இலக்கியப்படைப்பு என்ற வகைக்குள் வைக்கலாமா இல்லையா என்பதை விமர்சகர்களின் அசைப்போடலுக்கு விலக்கிவிட்டுப்பார்த்தால், இது நாம் இதுவரை நினைத்துபார்க்காத விளிம்புநிலை மனிதர்களின் அவல வாழ்வையும், அதன் கொதிப்பில் சட்டம்/சம்பிராதாயம் என்பவற்றை எல்லாம் மிக இலகுவாய் கடந்துகொண்டு போவார்கள் எனபதுவான ஒரு வெளியை இந்தப்புதினம் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது மனுவும், நடீனும் செய்யும் கொலைகளுக்கு எந்த motivationம் இருப்பதில்லை. அவர்களுக்கு எவரையாவது பழிவாங்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். ஓரிடத்தில் குறிப்பிட்டமாதிரி, 'Fuck me and see what happens to you' என்பதுதான் இந்தக்கதையின் நடக்கும் கொலைகளின் பலதில் பரவியிருப்பதை அவதானிக்க முடிகிறது.



இந்தக்கதையை வாசித்துக்கொண்டிருந்தபொழுதில்தான் Monster படமும் பார்க்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது. Monster (இது உண்மையில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்டது) படத்திற்கும், இந்தக்கதையும் சிலவிடயங்களில் ஒற்றுமைகளைப் பார்க்கமுடிந்தது. Monster படத்தில் உள்ளதுமாதிரி, இந்த நாவலில் உள்ள பெண்கள் லெஸ்பியனாக இல்லாததைத்தவிர அதிக வேறுபாடுகள் இல்லாமல் இரண்டையும் பொருத்திப்பார்க்கலாம்.

இந்தப் புதினத்தை வாசித்து முடிந்தபின் எழுந்த ஆவலில் நாவலின் ஆசிரியரையும் அவரோடு சம்ப்ந்தப்பட்ட பிற விடயங்களையும் இணையத்தில் தேடத்தொடங்கியபோது பல சுவாரசியமான விடயங்கள் கிடைத்தன. இந்த நாவலை இரண்டாயிரம் ஆண்டளவில் படமாக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். மேலும் இந்த நாவலாசிரியர் இதை எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 25. நாவலை எழுதியது 23 வயதில் என்றாலும், சர்ச்சைக்குரிய விடயங்கள் நாவலில் இருந்ததால் எந்தப்பதிப்பகமும் முதலில் இதை வெளியிட முன்வரவில்லை. ஆனால் வெளியிடப்பட்ட குறுகிய காலத்தில் 50 000 பிரதிகள் விற்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கவும்பட்டிருக்கிறது.

Despentes பதினேழு வயதில் விட்டை விட்டு வெளிக்கிட்டு punk இசையில் ஆர்வம் வந்து Les Berurier Noir குழுப்பாடகர்களோடு அலைந்து திரிந்து, பிறகு சில வருடங்கள் விலைமாதராயும், ராப் பாடல்கள் பாடித்திரிந்தும் இருந்திருக்கிறார். ஒரு பொழுதில் அரசியலிலும், Surrealism லிலும் ((இருப்பியல்வாதம்?), நாவல்களிலும் ஆர்வம் வந்து அவற்றில் மூழ்கி, இந்தக்கதையை தனது பெற்றோர் வீட்டிலிருந்து மூன்று வாரங்களில் எழுதி முடித்திருக்கின்றார். தனது எழுத்துக்கும் எழுத்து நடைக்கும் punkம், rapம் பெரும்பங்காற்றியிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகின்றார்.



இந்த நாவலை விட, இந்த நாவலைப்படம் எடுத்ததன் பின்னாலுள்ள இந்த நாவலாசிரியரின் உறுதியும், அவர் முன்வைத்த கருத்துக்களும்தான் என்னை அதிகம் வசீகரிக்கின்றன. இவரும், இவரது தோழியும் அந்தப்படத்தில் இன்னொரு இயக்குநருமான Trinh Thiம், இந்தப்படத்தை எடுக்க ஆரம்பிக்கின்றனர். Trian Thi 18 வயசிலேயே ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு ஒரு விலைமாதராக வாழத்தொடங்கியவர். படம் எடுக்க ஆரம்பிக்கின்றபோது, Trinh Thi ற்கு வயது 24, Despentes ற்கு வயது 31. இவர்களது படத்தின் நாயகிகளாக நடித்தவர்களும் விலைமாதராகவே இருந்தவர்கள்.

Despentes கூறுகின்றார், நாங்கள் இந்தப்படத்தில் இன்றைய காலத்தில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம் போன்றவை கூறும் வன்முறை, பாலியல் காட்சிகளுக்கு மேலாய எதுவும் காட்ட முயலவில்லை. ஆனால் நாங்களும், எமது படத்தில் நடிப்பவர்களும் விளிம்புநிலை மனிதர்களாக இருந்ததால், பிரான்ஸின் மையநீரோட்ட ஊடகங்களால், எங்களை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. மேலும் நடித்த பெண்கள், கலப்பினத்தவர்களாகவும், பாரசீக, அல்ஜீரிய பின்புலத்தில் இருந்தும் வந்ததால், அப்படியான பெண்கள் வன்புணரப்பட்டு அதற்கு பழிவாங்கப்படுவது ஜரோப்பிய வெள்ளையின ஆண்களாய் இருந்ததையும் இந்த பொதுசன ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதாகவே இருக்கின்றது என்கிறார்.

இவர் ஒரு நேர்காணலில் (2002ல்) கூறுகின்ற, ''We didn't realise just how much fear and hatred it would arouse, but it definitely stoked up a lot of nasty stuff. Not least because it's about poor, non-white women. In France, there's real conflict between the white majority and the Arabic population' என்பது எவ்வளவு உண்மையானது என்பதை சென்ற மாதம் பிரான்ஸில் நடைபெற்ற (பிரெஞ்சு) வெள்ளை நிறத்தோலாளர்களுக்கும், ஆபிரிக்கா, அரேபிய பின்னணியில் வந்தவர்களுக்கும் நடைபெற்ற கலவரங்களில் நாமும் கண்டுகொள்ளலாம். பிரான்ஸ், சுதந்திரமான கலைகளின் வெளிப்பாட்டு இடமென்பதையும், எந்த இனமும் சம உரிமையுடன் அங்கே வாழமுடியும் போன்ற கற்பிதங்களை, இந்தக்கலவரங்களும் அதன்பின்னால் நடக்கும் கைதுகளும் கிழித்துக்கொண்டுதானேயிருக்கின்றன.



இந்தப்படம் பிரான்ஸில் 1973 ஒரு படம் தடைசெய்யப்பட்டதன்பிறகு, தடைசெய்யப்பட்ட இரண்டாவது படம்; அதனால் மறைத்தே பலவிடங்களில் திரையிடவும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தப்படம் தடைசெய்யப்பட்டதன் பிரச்சினை பற்றி Despentes தெளிவாகக் கூறுகின்றார். இது ஒரு சமூகத்தின் கீழ்நிலையில் ஒடுக்கப்பட்ட பெண்களின் கதை. மேலும் இந்தப்படத்தை எடுத்த நாமும் விளிம்புநிலைப் பெண்கள் (marginal women). எந்தப்பொழுதிலும் mainstream, எதுவும் அற்ற விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய கதையாடல்களைக் கேட்க விரும்புவதில்லை. அதுவும், அந்த மக்கள் தாங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராய் ஆயுதம் எடுத்து பணத்துக்காகவும், தங்கள் குரூர திருப்திக்காகவும் கொலைகள் செய்வதை mainstream ஆல் நிச்சயம் சகித்துக்கொள்ளவேமுடியாது. உண்மையில் இவ்வாற விடயங்கள் யதார்த்தத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மையநீரோட்டங்கள் வழமைபோல இதை அலட்சியப்படுதியபடியே இருக்கின்றன.

Despentes, இந்த நாவலையும் படத்தையும் எடுத்ததன் பிறகு, பல பெண்களால், பெண்ணியப்படைப்புக்களில் விளிம்புநிலைப் பெண்களின் புதியதொரு வாசலைத் திறந்தவர் என்றும் பாராட்டப்படுகின்றார். தொடர்ந்து பல படைப்புக்களை இன்றும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார். முக்கியமாய் பாலியல் நோக்கில் ஆண் இதுவரை கொண்டிருக்கும் மேலாண்மையை நிராகரித்து, தனது பாலியல் சுதந்திரத்தைத் தானே பெண்கள் தேடும் வழிகளை Despentesன் படைப்புக்கள் தேட விளைகின்றது என்பது கவனத்திற்குரியது.

Despentes தானும் 1969 ல் பிறந்ததால் அப்போதைய காலகட்டத்திலும் பிறகும் எழுச்சி பெற்ற பெண்ணிய அமைப்புக்கள் தன்னைக் கவர்வதாகவும், தன்னை ஒரு பெண்ணியவாதியாக அடையாளம் காட்ட விரும்புவதாகவும் கூறுகின்றார். தான் தன் சுய அடையாளத்தை தேடுபவர் என்றும், தனக்கு காசு சம்பாதிப்பதிலும், அதிகாரத்தைப் பெறுவதிலும் விரும்பு உள்ளதாகவும் கூறுகின்றார். வாழ்கை ஒரு அழகு நிறைந்த வீரதீரச்செயல் எனவும், இந்தச்சமூகம் அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட வாழ்வை அல்ல அதற்கப்பால்தான் தனது தேடல் உள்ளது என்கிறார்.

இவரை ஒருவர் நேர்காணல் காணும்போது, நேர்காணல் கண்டவர் ஒரு கேள்விகேட்பார், அதற்கு Despentes பதிலளித்தவிடயம் அருமையாக இருந்தது. (கிட்டத்தட்ட நானும் அந்த நேர்காணல் கண்டவரைப்போல நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது 'புத்திசாலித்தனமாய்' யோசித்த விடயம்தான் இது)

'இந்த நாவலில் இரண்டு பெண்கள் அருகருகிலேயே எப்போதும் இருக்கின்றார்கள். பல பகுதியில் மிகவும் erotic காட்சிகளும், அவர்கள் almost naked யாய் நடனமாடுவதாய் கூடச் சித்தரிப்புக்களும் வருகின்றது. ஆனால் ஏன் அவர்களை லெஸ்பியனாய் உறவில் ஈடுபடுவதாய்க் காட்டவில்லை?'

'It’s a male problem, being homosexual and not doing it. If you are not a lesbian, you are not a lesbian. As for the dancing: it was a total joy that males in the audience are sure they’ll sleep together--and then nothing!'

இந்தப்பதிலில் இருந்து நிறைய விடயங்களை யோசித்துப் பார்க்கலாம் போலத்தோன்றுகின்றது.

Virginie Despentes was born in 1969. She is also the author of three other novels and a collection of stories, and she wrote and codirected the film version of Baise-Moi .
(back cover of the book, Baise-Moi)

மேலதிகத்தகவல் பெற உதவிய இணைய இணைப்புக்கள்:
http://observer.guardian.co.uk/life/story/0,6903,683906,00.html
http://www.geraldpeary.com/interviews/abc/baise_moi.html


Tuesday, December 13, 2005

எல்லா விம்பங்களும்
உடைய
இலையுதிர்த்த
மரங்களின் கிளைகளில்
தொங்கும்
உறைந்துபோன பனியாய்
இறுகுகின்றது மனது

ஒரு திசை முழுதும்
கண்ணாடி நிரப்பிய
அறையிலிருந்து
கதகதப்பாய் கம்பளி போர்த்தி
தெருவை இரசிக்கையில்
குளிரிலும்
ஒப்பனை கலைந்துவிடக்கூடாதென்ற அவதியில்
'வாடிக்கையாளர்' தேடும் பெண்களும்
வீடற்ற மனிதர்களும்
நீலநிறமாக்குகின்றனர்
எனது பொழுதை

எதிர்ப்புரத்து
தேவாலயத்தின் உச்சியிலிருந்து
பல்கணியில்
கரையொதுங்கிய புறாவின் சிறகுகள்
நினைவுபடுத்தும்
குளிராய் இருக்கிறதென்று
நெருக்கமாய் அணைத்தபடி நடந்த
காதலியின் வின்ரர்கோட்டினை

எல்லாக்காட்சிகளும் மாறுகின்றன
சடுதியாய்.

வீட்டற்ற ஆண்கள்
வாடிக்கையாளரைத் தேடிய
பெண்களின் கரங்களை
நேசமாய் கோர்த்தபடி செல்ல
மஞ்சள் பூக்களிடையே
வானவில் தோன்றுகின்றது
அவர்களின் குழந்தைகள் சிதறி ஓட.

மனது பேருவுவகை கொள்ள
I am rapping...
புத்தரும் இயேசுவும் தேநீரருந்தி
இரசிக்கின்றனர்
பிள்ளையாரின் hip-hop நடனத்தை

இது எப்படி சாத்தியமெனும்
மூளையின் நீயூரனொன்றில்
அம்மாவின் குரல் கரைகிறது
'நீ என் வயிற்றில் இருக்கிறாய் மகனே!'

வெளியே
உலகம் கூறிக்கொண்டது
நான் இறந்துவிட்டதாய்.

Dec 13/05

குளிரோடு வந்த ஞானம்

Wednesday, December 07, 2005

நிர்வாண விடுதியில்
சுழன்றாடிய பெண்ணின்
அடக்கிவைத்த துயராய்
பொழிகிறது பெரும்பனி

விண்வெளிக்குச் செல்லும்
பயணியாய்
ஆடைகள் புனைந்து
குளிரில் உறைந்துகொண்டிருப்பவன் முன்
கண்ணாடிச்சில்லுகளாய் தெறிக்கும்
வாழ்வின் குரூர கணங்கள்

பப்பாசிப்பழத்தை
சீவும் இலகுவாய்
கொலை கொலையாய் விழுகிறதாம்
வல்லூறுகளும் இரைகவ்வ விரும்பும்
ஊரில்

மதியம்
சோறும் கத்தரிக்காய்க்குழம்பும் உண்டால்தான்
இரவுத்தூக்கம் வருமென்பதை
மறைத்து
பெருமிதப்படலாம்
ஒரு கனடீயத்தேசியனென்று

உடல்கள் கோரமாய்ச் சிதற
குருதியுறிஞ்சும் பேய்கள் மூர்க்கமாய் விரட்ட
ஊரூராய் அகதியாய்
அலைந்த பதின்மம்
ஒரு அந்நியனாய்
நினைவின் கதவை
எப்போதாவது தட்டுகையில்
சிதைகின்றேன் மூளைவெடித்து

இராணுவம் 'ஆளுமை' காட்டி
சிதைத்துப்போன
பதின்மத்தோழிக்கு
இப்போதும் நினைவிருக்குமா
நான் நாவற்பழம் பொறுக்கிக்கொடுத்தது.

Dec 07/05

லீனா மணிமேகலையின் 'பலிபீடம்'

Thursday, December 01, 2005

பலிபீடமும், லீனா மணிமேகலை பற்றிய சில குறிப்புக்களும்

சில திரைப்படங்களைப் பார்க்கும்போது அதனோடு ஒன்றிப்போனாலும் படம் முடிந்தவுடன் இயல்புநிலைக்கு வந்துவிடமுடியும். சில படங்கள் குளத்தில் எறிந்த கல்லைப்போல படம் முடிந்தபின்னும் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். ஒரு பொழுது இயலாமையும் அடுத்தகணம் கோபமுமாய் உணர்வுநிலைகள் மாற மாற, பார்த்து முடித்த ஆவணப்படம் 'பலிபீடம்'. லீனா மணிமேகலை இயக்கிய, நாயக்கர் சாதியினரில் ஒரு உபபிரிவான கம்பளத்து நாயக்கர்களின் வாழ்வில் நசுங்கிப்போகின்ற பெண்களின் கொடூரவாழ்க்கையை இது பதிவுசெய்கின்றது.

பெருமிதம், கெளரவம் என்ற இன்னபிறவற்றைக் கலாச்சார வேலிகளாய் அமைத்து பெண்களையும், சிறார்களையும் போகப்பொருளாகவும் பண்டமாற்றாகவும் உருசித்துப் பார்த்து தமது ஆணாதிக்க மேலாண்மையை ஆழமாய்ப்பதித்தபடி அலைகின்றார்கள் இந்தச் சமூகத்து ஆண்கள். பெண்கள் என்ன எதற்கு என்று அறியாமலேயே சிறுவயதிலேயே திருமணஞ்செய்து வைக்கப்படுகின்றார்கள். பத்து பன்னிரண்டு வயதுப் பெண்களைத் திருமணஞ்செய்பவர்கள் எல்லாம் நாற்பது ஜம்பது வயதுக்கு மேற்பட்ட 'பெடியன்களாய்' இருக்கின்றார்கள். ஒரு ஆண் எத்தனை திருமணமுஞ்செய்யலாம் என்ற விரிந்த சுதந்திரத்துடனும், பெண் ஒரு திருமணத்துக்குப்பின், எந்ததிருமணமும் செய்யாது தனித்து இருக்கவேண்டும் என்றும் கட்டுப்பாடுடனும் இருக்கிறது அந்தச்சமூகம். பிள்ளைகள் கிடைக்காதவரை ஒரு ஆண் எத்தனை திருமணமுஞ்செய்துகொள்ளலாம்/'வைத்துக்கொள்ளலாம்' என்பது ஆண்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் 'வரம்'. படத்தில் 45 வயது 'குமர்ப்பெடியன்' 16 வயதில் ஒரு பெண்ணைக் கட்டிவிட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு, இன்னொரு 16 வயதுப்பிள்ளையைக்கண்டுவிட்டேன் அதையும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும் என்று அங்கலாய்க்கின்றார் (60 வயதுக் 'குமர்ப்பெடியன், 25வயதுப் பெண்ணை திருமணம் செய்திருத்தல் என்று இன்னபிற பெருமைமிகு பல செய்திகள் படத்தில் இருக்கின்றன). 'இப்படி உங்கள் மாமா சொல்கின்றாரே நீங்கள் ஒன்று கூறமாட்டீர்களா?' என்று அந்தப்பெண்ணிடம் கேட்கும்போது, 'படிச்சிருந்தால் எதையாவது கேட்கலாம். நாங்கள் தானே எதையும் படிக்கலை. அவங்கள் செய்யிறதை செய்யட்டும்' என்று அந்தப்பதின்மவயதுப்பெண் கூறும்போது மனது கனக்கிறது.

File0001

உண்மையான பெடியன்களாய் இருக்கும் இளைஞர்களுக்கும் இப்படி கிழடுகள் சிறுபெண்களைக் கல்யாணம் செயவது குதூகலமாத்தான் இருக்கிறது. பதின்மவயதுப்பெண்களை (சிலவேளைகளில் பருவமடையாத சிறுமிகளைக்கூட) கல்யாணங்கட்டும் கிழடுகள் விரைவில் மண்டையைப் போடுதல் இயல்பு என்பதால், அந்தப்பெண்களை 'வைத்துக்கொள்வது', விரும்பியநேரம் போய் சல்லாபித்து விட்டு வருவது என்று இந்த இளைஞர்களுக்கும் சமுகத்தில் நிறைந்த வசதிகள்தான் இருக்கிறது. அதனால்தான் ஒருமுறை மட்டுந்தான் பெண் திருமணஞ்செய்யலாம் என்ற நல்லதொரு சட்டத்தை கடுமையாக்கி வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் (சிலருக்கு நான்கு, ஜந்து என்று) ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருக்கின்றார்கள்.

அந்தச்சமூகத்தில் பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு படிக்க அனுப்புவதே அரிதாகவிருக்கிறது. அப்படிப் படித்தாலும் வயதுக்கு வரும்மட்டுந்தான் பாடசாலைக்குப் போகமுடியும். இந்தப்படத்தில் பேசுகின்ற பெண்கள் அனைவரும் படிக்க விரும்புகின்ற ஆசையை ஒரு கானல் கனவாய் தங்கள் வசம் வைத்திருந்து பெருமூச்சுக்களாய் வெளிப்படுத்துகின்றார்கள். இத்தனை ஒடுக்குமுறைக்கு இடையிலும் சில பெண்கள் சாதித்திமிர் (ஆண்களிலிருந்து அப்படியே உள்வாங்கி) பேசுகின்றார்கள். 'எங்கள் சாதிக்கு என்று ஒரு 'இது' (என்ன இழவோ) இருக்கிறது. வெளியிடங்களுக்குப் போனால் வேறொருத்தர் கையால் தருவதைச் சாப்பிடமாட்டோம். பொலிஸ் கூட எங்களை ஜெயில்லுக்குள் போடாது. யார் வந்தாலும் அங்கினக்க எல்லாவற்றையும் வைத்துவிட்டு வெறுங்காலோடு இங்கனக்க வரவேண்டும்' என்கின்றனர். மேலும் 'பள்ளரோ பறையரோ எங்கள் பக்கம் எட்டிப்பார்க்கவிடமாட்டோம்' என மிகப்பெருமிதமாய்க் கூறுகின்றார்கள். 'ஏன்?' என்று கேட்க, 'உயர்சாதி, தாழ்ந்த சாதி என்று ஒரு வழக்கிருக்கிறது அல்லவா? அதையெல்லாம் சும்மா விட்டுத்தந்திர முடியுமா?' என்கிறனர். இன்னும் கொடுமையாக இருப்பது பெண்களுக்கு உதிரப்பெருக்கு ஏற்படுகின்றசமயத்தில் ஊருக்கு வெளிப்புறமாய் ஒரு வெளியில் அந்தப்பெண் ஜந்தாறு நாள்களுக்கு மேல் வெயிலில் தனித்திருக்கவேண்டும். எந்தக்காரணம் கொண்டு ஊருக்குள் போகமுடியாது. உணவை அந்தப்பெண்ணின் குடும்ப உறவுப்பெண்கள் கொண்டுவந்து அதற்கென இருக்கும் பாத்திரங்களில் கொட்டிவிட்டு மட்டும் போவார்கள்.

படத்தில் காட்சிப்படுத்தப்பட்டதை, ஆணாதிக்கத் திமிரோடு பேசப்படும் வார்த்தைகளை இங்கே எவ்வளவு வலிந்து பதிந்தாலும் படத்தைப் பார்ப்பதுபோல துளியும் வராது. ஒவ்வொரு காட்சியும் பெரும் அதிர்வை, இப்படியும் நடக்கும் ஒரு ஊர் இருக்கிறதா என்று கோபப்படவைக்கின்றதாய் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றியது. இந்த ஆவணப்படம் முழுதும் பெண்களை ஏதோ குடித்துவிட்டு எறியும் பொப் கான்களைப் போல உறிஞ்சியும் பிறகு வீசியெறிந்துகொண்டும் ஆண்கள் போய்க் கொண்டேயிருக்கின்றார்கள். இந்தச்ச்மூகத்தில் 'தெய்வமும் பெண்தான் பலிபீடமும் பெண்தான்' என்ற லீனாவின் குரல் பின்னணியில் கூறியது இன்னமும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.



அந்தச்சமூகத்தின் அழுக்குகளைக்காட்டியதுடன் விடாமல், அந்தச்சமூகம் மாறுவதற்கான, சிறிதாய் அரும்பும் நம்பிக்கைத் துளிர்களையும் லீனா காட்சிப்படுத்துகின்றார். ஜம்பது வயதுக்கிழவனை தனது பதினான்கு வயதில் திருமணஞ்செய்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பெண் (பிள்ளைகள் அந்தக் கிழவனுக்குப் பிறந்தது அல்ல), எவரது துணையுமின்றி தானே உழைத்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றி வருகின்றார். எந்தப்பொழுதிலும் தனக்கு நடந்ததை தனதுபிள்ளைகளுக்குச் செய்யமாட்டேன் என்றும், அவர்களின் விரும்புக்கு மட்டும் அவர்களது வாழ்வை தெரிவுசெய்யவிடுவேன் என்று நம்பிக்கையாகக் கூறுகின்றார். இன்னொரு பெண், சிறுவயதிலேயே கட்டிக்கொடுத்த கணவன் இறக்க, 'விதவைகள்' மாதிரி வெள்ளைச்சேலை, தாலி மெட்டி எதுவுமின்றி இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதை எதிர்த்து, (ஊர் ஒதுக்கிவைக்க)வேறு ஒரு ஆணுடனும், பிள்ளைகளுடனும் அயலிலுள்ள இன்னொரு கிராமத்தில் வசித்துவருகின்றார். எனினும் தனது கிராமத்திலிருக்கும் தாயைப் பார்த்தலோ, ஊர்த்திருவிழாவில் பங்குபற்றுதலோ , இனி ஒருபொழுதும் தனக்கு வாய்க்காது என்பதைக் (ஊர்க்கட்டுப்பாடு) கண்ணீருடன் கூறுகின்றார். மேலும் தங்களுக்கு நிலமாய் இருந்த பெருஞ்சொத்தையும் அந்த ஊர் ஆண்கள் அபகரித்து தங்களை ஏதிலிகளாய்க் கைவிட்டதையும், தனது தாய் கஞ்சிக்குடிப்பதற்காய் தற்சமயம் ஊரில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கின்றார் என்றும் கூறுகின்றார். எனினும் தனது பிள்ளைகளுக்கு சிறுவயதில் திருமணஞ்செய்து வைக்கமாட்டேன் என்பதில் ம்ட்டும் உறுதியாக நிற்கின்றார்.

லீனா கூறுவதுமாதிரி, 'மாற்றங்கள் வலியானது ஆனால் வலிமையானதும் கூட' என்பதே உண்மை. அந்தக்கிராமத்துப் பெண்கள் தாங்கள் விரும்பியதைப் பேசவும் தெரிவுசெய்யவும் முடிகின்ற பொழுதுகள் விடிகின்றபோதுதான் அங்கே மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்று கூறமுடியும். ஆனால் படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அதற்காய் அந்தப்பெண்கள் அல்லறுற வேண்டிய காலங்கள் வருடங்களில் அல்ல; தசாபதங்களைத் தாண்டியும் இருக்கப்போகின்றது போலத் தோன்றுவதுதான் மிகவும் கொடூரமானது.

(2)
இப்படியொரு படத்தை லீனா எடுத்திருக்கின்றாரென்றால் அதற்காய் அவர் கஷ்டப்பட்டுத்தான் உழைத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட ஒருவருடமாய் இந்த ப்ரொஜக்யுடன் ஜந்தாறு தடவைக்கும் மேலாக அந்தக்கிராமத்துக்குள் அலைந்திருக்கிறார். ஒருமுறை தனது படச்சுருள்கள் எரியூட்டப்பட்டதாகவும், இன்னொருமுறை தான் கிட்டத்தட்ட அந்த சமூகத்து ஆண்களால் சிறைவைக்கப்ப்பட்ட நிலைக்கு வந்ததாகவும் இன்னும் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும் குறிப்பிட்டார். இப்படியான இறுகிப்போன ஒரு சமூகத்திலிருந்து இவ்வளவு விட்யங்களை தோண்டி எடுத்ததே பெரியவிடயம்போலத்தான் எனக்குத் தோன்றுகின்றது. இந்தப்ப்படம் எடுப்பதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு தனது ஊர்மக்கள் எதுவும் பேசமாட்டர்ர்கள் என்று ஊர் ராஜநாயக்கர் மறுத்தாலும், பிறகு அவருக்கு கொஞ்சம் ஜஸ் வைத்துத்தான் (படத்தில் அவரது சாதிப்பெருமையை பேச விடப்படும் இடத்தைப்பார்த்தால் தெரியும்) இது சாத்தியமானது என்றார். இதுவரை வெளியுலகத்துக்கு அவ்வளவாய்த் தெரியாத ஒரு பிரச்சினையை லீனாவும் இந்தப்படத்தோடு சம்பந்தப்பட்ட அவரது நண்பர்களும் வெளிக்கொணர்ந்தமைக்காய் நிச்சயம் பாராட்டுதலுக்குரியவர்களே,

(3)
தமிழகத்திலிருந்து யாராவது கலை இலக்கியவாதி விமானம் ஏறினால், எனக்கு இங்கே சனி பிடிக்கத்தொடங்கிவிடும். பலரை நேரில் சந்திக்கையில், இவர்களை அவர்களின் படைப்புக்களை மட்டும் வாசித்துவிட்டு சும்மாயிருந்திருக்கலாம் என்று எண்ணந்தான் அதிகமுறை வந்ததுண்டு. அதற்கு மாறாய், நல்லதொரு அனுபவமாய் லீனாவுடன் இயல்பாய் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பத்திலேயே எனக்கு 'உங்கள் கவிதைகளில் அவ்வளவு ஆர்வமில்லை, நீங்கள் எடுக்கும் ஆவணப்படங்களே என்னைக் கவர்கின்ற விடயம்' என்றுதான் அவரிடம் கூறி உரையாடத் தொடங்கினேன். 'தீர்ந்து போயிருந்தது காதல்' என்ற குறும்படம் எனக்குப்பிடித்ததையும் 'மறக்காமல்' அவரிடம் குறிப்பிட்டேன். அது தனது கவிதை நூல் வெளியீட்டுக்காய், ஒரு கவிதையை விஷ¤வலாய்க் காட்டினால் எப்படியிருக்கும் என்று முயற்சித்துப்பார்க்க அதை எடுத்ததென்றும், தனக்கு தனது கவிதைகளை படமாக எடுப்பதில் ஆர்வமில்லையெனவும் கலந்துரையாடலில் லீனா கூறினார்.



லீனா இடதுசாரிப் பின்புலத்தில் இருந்து வந்தவர் (அவரது தந்தை, தாத்தா போன்றோர் தீவிர இடதுசாரிகள் என்று தனிப்பட்ட உரையாடலில் கூறியது நினைவு). மாணவர் பருவத்திலேயே மாணவர் அமைப்புக்கள் போன்றவற்றில் இணைந்து களப்பணியாற்றியிருக்கின்றார். தெரு நாடங்களில் நடிக்கத்தொடங்கி அந்த அனுபவம் இன்று ஆவணப்படங்களை (மாத்தம்மா, பறை,விட்டுவிடுதலையாகி, அலைகளைக் கடந்து, Connecting Lines மற்றும் பலிபீடம்) இயக்கவும், குறும்படங்களில் நடிக்கவும் (வெள்ளைப்பூனை, செல்லம்மா, தீர்ந்து போயிருந்தது காதல்) அவரைக் கொண்டுவந்திருக்கின்றது. லீனாவில் எனக்குப் பிடித்த விடயம், எதையும் மறைக்காமல் தனக்குச் சரியென்றுபடுவதை வெளிப்படையாக முன்வைத்த மனப்பாங்கு.

'பறை', 'பலிபீடம்' ஆகிய படங்கள் ரொறண்டோவில் திரையிடப்பட்டு கேள்விக்கான நேரத்தில், 'நீங்கள் இப்படியான சர்ச்சைக்குரிய படங்களை எடுத்து இந்தியாவின் வறுமையை/சுரண்டல்களை வெளிநாட்டு மக்களுக்கு விற்பதான குற்றச்சாட்டு இருக்கின்றதே?' என்று கேட்கப்பட்டபோது, 'யதார்த்தத்தில் இருக்கும் கொடூரமான பிரச்சினைகளை ஏன் வெளியில் காட்டுவதற்கு நாம் தயங்கவேண்டும்? என்று எதிர்க்கேள்வியாய் லீனா கேட்டிருந்தார். அதேபோன்று, வெள்ளைப்பூனையில் சில காட்சிகளில் நடிக்கும்போது அல்லது அதை பொதுப்பார்வைக்கு திரையிடும்போது ஏதாவது அசெளகரியத்தை உணர்ந்தீர்களா என்று கேட்கப்பட்டபோது, 'இல்லை அப்படி எந்தவகையான அசெளகரியத்தையும் உணரவில்லை' என்று பதிலளித்தது, எவரது வற்புறுத்தலுமின்றி தனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன் என்ற இன்னொரு குரல் அதற்குள் மறைந்துகிடந்துபோல எனக்குத் தோன்றியது. அவ்வாறான ஒரு நிலையக் கடந்துவர அவர் எவ்வளவு தடைகளைத் தாண்டியிருக்கவேண்டும் என்பதையும் சற்று யோசித்துப்பார்க்கலாம். எனெனில் இன்னும் வெள்ளைப்பூனை தமிழகத்தில் திரையிடப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நண்பர் வட்டத்துக்கு திரையிடப்பட்டு எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால் இயக்குநனர் பிற இடங்களில் அதைத் திரையிடத் தயங்கிவிட்டார் என்றும், அப்படி ஒரு சர்ச்சைக்குரிய விம்பம் வந்துவிட்டால் தமிழகத்தில் குறும்படங்கள் எடுப்பதே கடினமாயிருக்கும் என்றும் லீனா குறிப்பிட்டார்.

(4)
பெண்ணியம், பெண் கவிஞர்கள் குறித்து அவருடைய பார்வை எப்படிப்பட்டதென என் தனிப்பட்ட உரையாடலில் அவரிடம் வினாவியிருந்தேன். மிக நிதானமாய் அவை குறித்து அவர் கலந்துரையாடியது இதமாயிருந்தது. லீனா வெளியிடும் 'திரை'யின் முதலாவது இதழ் அந்தசமயம் என் கைவசம் இருந்தது. பாலு மகேந்திராவின் பேட்டியுள்ள பக்கங்களைத் தட்டிக்கொண்டே, 'பாலுமகேந்திராவின் வாழ்க்கையும் நீங்கள் எடுத்த பலிபீடத்தைப் போல நாகரிகம் போர்த்திய இன்னொரு முகம் தான்' என்று நான் சொன்னதையும் புன்னகைத்தபடியே கேட்டுக்கொண்டிருந்தார்.




லீனா மணிமேகலை குறித்து சில சர்ச்சைகள் இருக்கின்றன என்று ஆழமும் விரிவும் இல்லாமல் கேள்விப்பட்டிருக்கின்றேன். எல்லோருக்குள்ளும் இருக்கும் அரசியலைப் போல லீனா நாளை தனது அரசியலை வெளிப்படையாக முன்வைக்கும்போது, எனது கருத்துக்களோடு அவரது விவாதப்புள்ளிகள் முரண்படுகையில் நானும் எதிர் நிலையில் நின்று பேசவும்கூடும். ஆனால் அது லீனா என்று நான் இப்போது வியந்து
கொண்டிருக்கும் ஆளுமை பற்றிய எனது எண்ணத்தில் அவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே நம்புகின்றேன்.