கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Tuesday, December 20, 2005

எதை எழுதினாலும்
போலியாக இருக்கிறது
அல்லது
போலிகளைப் பேசுவதே
கலகமாகிறது

'இராணுவம் கற்பழிக்கத்தான் செய்யும்'
அற்புத தரிசனங்கள் தருபவர்கள்
வரலாற்றை எழுதவும்,
பெண்களை
சிதைத்துச்செல்பவர்கள்
திசைகள் எங்குமலைந்து
அரசியல் பேசவும்
செய்யும் விசர்ப்பொழுதில்
எதைப் பேசினாலும் எடுபடாது

தோள்கள் தினவெடுத்தால்
கொன்று குவிக்கவும்
குறிகள் விறைத்தால்
புணர்ந்து களிக்கவும்
தமிழரென நாமமது
தரணியிலே கொண்டோம்
உமக்காய்.

கொல்லுங்களடா
கொல்லுங்களடா
வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும் கிரனைட்டிலும்
அடையாளங்களைச் சிதைத்துவிட்டு
எகத்தாளமாய்ச் சிரிக்கவும் செய்யுங்களடா

வரலாற்றின்
இருண்ட குழிகளிலிருந்து
யோனிகளும் முலைகளும்
எழுந்துவந்து
பூர்வீக நிலங்களிலிருந்து
அடியோடு வேரறுக்கும்
இந்தப்பாவிகளை

சுதந்திரக்காற்று பனிப்புலத்தில்
சுழன்றடிப்பினும் களிப்புறோம்
மனிதர்களையும்
இளமையையும் தொலைத்துவிட்ட
கடந்தகாலத்துயர்
விரும்பி யாசிக்கும்
மரணத்தை

தங்கையிலும் துணையிலும்
அதிகாரம் அத்துமீறாதவரை
நுரைக்கும் பியருடன்
ஆட்டுக்கறி சுவைத்து
அனைவரும் பேசிக்கொண்டிருக்கலாம்
அரசியல் அறம்.

Dec 20/2005

(இளவயதிலேயே, உரையாடல் பலவந்தமாய் நிறுத்தப்பட்ட தர்சினிக்கு...)

23 comments:

Anonymous said...

பதிந்தது:Balaji-paari.

வார்த்தைகள் இல்லை இந்த காட்சி தரும் கனத்தை பகிர.

20.12.2005

12/20/2005 04:02:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//(இளவயதிலேயே, உரையாடல் பலவந்தமாய் நிறுத்தப்பட்ட தர்சினிக்கு...) //

:((

-Mathy

12/20/2005 04:30:00 PM
Anonymous said...

பதிந்தது:என்னார்

கவிதைச் சாடல் கைவந்த கலை நண்பருக்கு நன்றாக உள்ளது நும் வசைக் கவிதை

21.12.2005

12/20/2005 07:26:00 PM
Anonymous said...

பதிந்தது:சதீஷ்

நன்றாக எழுதி உள்ளீர்கள்1
- சதீஷ்.

21.12.2005

12/20/2005 09:09:00 PM
Anonymous said...

பதிந்தது:சதீஷ்

பதிந்தது:சதீஷ்

நன்றாக எழுதி உள்ளீர்கள்1
- சதீஷ்.

21.12.2005

21.12.2005

12/20/2005 09:10:00 PM
Thangamani said...

//தங்கையிலும் துணையிலும்
அதிகாரம் அத்துமீறாதவரை
நுரைக்கும் பியருடன்
ஆட்டுக்கறி சுவைத்து
அனைவரும் பேசிக்கொண்டிருக்கலாம்
அரசியல் அறம்.//

அரசியல் அறம் என்பதை விட 'மார்க்சிஸிம்' என்று சொல்லியிருக்கலாம். இன்றைய தேதியில் வெட்டுகிற வாளிலும், குனிகிற தலையிலும் கடவுளுக்கு அடுத்தபடியாய் இலங்குகிற கருத்தொன்று இருக்கிறதெனில் அது மார்க்ஸிஸம்தான். அதிலும் பீர் குடிக்கிற மார்க்ஸிசம் விசேசமென்பதறிக.

12/20/2005 09:24:00 PM
வானம்பாடி said...

////தங்கையிலும் துணையிலும்
அதிகாரம் அத்துமீறாதவரை//

ஹ்ம்ம்... கனக்கிறது.

12/21/2005 03:30:00 AM
வன்னியன் said...

தர்சினி பற்றியோ நடந்த சம்பவம் பற்றியோ சிறுகுறிப்புக்கூட இல்லாத பட்சத்தில் உமக்கு வழமையாக வரும் பின்னூட்டங்கள்தான் வந்துகொண்டிருக்கும்.
மறுபக்கத்தில், இவ்வரிய கவிதையை, குறிப்பிட்ட அந்தவொரு சம்பவத்துள் குறுக்கிவிடக்கூடாதென்ற பரந்த மனப்பான்மையும் நியாயமானதுதான்.

12/21/2005 04:35:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

டி.சே இதையும் அரசியலாக்க வெட்கமாகவிருக்கிறது ஆனால் கேட்க நினைக்கும் ஒரு கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

நாட்டில் இவ்வளவும் நடக்கும்போது மூடிக்கட்டிக்கொண்டு இருந்துவிட்டு ஆமி ஆப்பீசர் தாக்கப்படும்போது மட்டும் விழித்தெழுந்து குய்யோ முறையோ இதுவோ தமிழர் பாரம்பரியம் என்று கட்டுரை வடிப்பவர்களையும்.

இது எதைப்பற்றியும் பேசாமல் வருடா வருடம் முஸ்லிம்கள் யாழை விட்டு விரட்டப்பட்டதை மட்டும் நினைவுகூர்வதன் மூலம் தங்களை முற்போக்காளராகக் காட்டிக்கொள்பவர்களையும் பார்த்து உங்கள் கவிதை கேள்வியெழுப்புகிறது அது அவர்களுக்குப் புரியுமா?

12/21/2005 05:21:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே
....
தங்கமணி, தத்துவங்களிலிருந்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ளலாம் என்பதைவிட, தத்துவங்களை மட்டுமே வாழ்வு நெறியாகக் கொண்டு அதற்குள் அமிழ்ந்து போகின்றவர்களைப் பார்க்க பீதியாக இருக்கிறது. அதைவிட சாதாரண மனிதர்களாய் உணர்வுகளையும், கோபத்தையும் காட்டவேண்டிய சந்தர்ப்பத்தில் கூட, தமது தத்துவ சட்டகத்துக்குள் உள்படாது என்று நினைத்து மெளனித்திருப்பவர்கள் பற்றி என்ன கூற :-(?

12/21/2005 09:34:00 AM
இளங்கோ-டிசே said...

வன்னியன், தர்சியினின் விடயம் வெளியே வந்திருக்கின்றது, வெளியே கூறமுடியாது உள்ளே குமுறிக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்? நேற்று இதை எழுதுகின்றவேளையில், தர்சினியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காய் அனுப்பப்பட்டதாய்தான் வாசித்தேன். கொலை செய்து உடலை மறைத்தவர்கள், அதற்கு முன் என்ன செய்திருப்பார்கள் என்று போருக்குள் இருந்த நமக்கு ஒன்றும் தெரியாததுமல்ல. எனினும் அது குறித்து வெளிப்படையாக அறிக்கை வரமுன்னர் (இங்கேதான் என்ன ஆதாரம் என்று கேட்ட பல 'மனிதாபிமானிகள் இருக்கின்றார்களே)அதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் இந்தச் செய்தியை (Tharsini raped before murder- Medical Report) வாசித்தேன்.
சொல்வதற்கு எதுவுமேயில்லை.

12/21/2005 09:48:00 AM
இளங்கோ-டிசே said...

ஈழநாதன், ஒவ்வொரு மனிதர்களும் தமக்குரிய நம்பிக்கைகளுடன் விமர்சங்களுடனும் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தாலும், சிலவிடயங்களில் நமது அரசியல். நம்பிக்கைகள் என்பவற்றை சற்று விலத்தி ஒற்றுமையாக குரல்கொடுக்கலாம். தர்சினியின் விடயத்திற்கோ, யாழில் வளாக மாணவர்கள், பேராசிரியர்கள் தாக்கப்பட்டது போன்றவற்றிக்கோ சாதாரண மனிதராய் எதிர்ப்புக் காட்டலாம். 'மனிதம் உருவழிகையில் நிஷ்டை கலைக்காதவர்கள்' என்று கவிதை எழுதியவர்களுக்கும், அந்த வரிகளை தாரக மந்திரம் ஆக்கியவர்களுக்கும் இப்போதும் மனிதம்தான் அழிகிறதென்ற புரிதல் வந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும் :-(?

12/21/2005 10:19:00 AM
Sri Rangan said...

டி.ஜே.,
தத்துவங்களிலிருந்து எவரும் வாழ்வைப் புரிவதில்லை.வாழ்வைப் புரிவதால்தாம் தத்துவங்கள் உருவாகின்றன.எனவேதாம் தத்துவங்கள் அந்தவாழ்வின் மனிதவிரோதமான பகுதிகளை எங்ஙனம் அகற்றுவதென்று கூறுகிறது.எனவே அத்தகைய தத்துவங்கள் நோக்கி-மனிதவிரோதங்களை அகற்றுவதற்கான போரைச் செய்ய முனைவர்கள் அமிழ்ந்து போகிறார்கள்.

தமிழ் மக்கள்மீது சிங்கள இராணுவம் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்குவது மாதிரித்தாம்,தமிழர்களில் உள்ள மேல்சாதிய வேளாளர்களும் தலித்துவ மக்களை உடல் ரீதியாகவும்,பால் ரீதியாகவும் அடக்கி ஒடுக்கி வருகிறார்கள்.இன்றுவரை இது தொடர்கதையாகிறது.இதுபற்றி இத்தத்தளத்தில் எத்தனை நபர்கள் போராடுகிறீர்கள்?

நாளாந்தம் ஆயுதக் குழுக்கள் எத்தனை பத்துத் தமிழ் பேசும் மக்களைப் படுகொலை செய்கிறார்கள்!


இது பற்றிப் பாராபட்சமின்றி எவர் போராடுகிறார்?


இவ்வளவு அராஜகமான சூழலுக்கான காரணம்யாது? இதை எந்தவகைக் கண்ணோட்டத்தோடு முறியடிக்க முடியும்?


இன்னும் அப்பாவிகளை உயிர்ப்பலியெடுக்க முனையும் போர் பற்றி உங்கள் நிலையென்ன?இதிலிருந்து விடுபடாது இத்தகைய இராணுவ-இயக்க அட்டகாசங்கள் ஒழிந்துவிடுமா?



பொதுவான தளத்தில் தனிநபர்கள் கருத்துகளிட்டு இதை எதிர்க்கவேண்டுமெனும் நீங்கள்> இயக்கங்கள் செய்த பாலியல் வன்முறைகளுக்காகப் படுகொலைகளுக்காகக் கோபப்பட்டு>எதிர்த்து-அம்பலப்படுத்தி,எத்தனை பதிவுகள் போட்டுள்ளீர்கள்? இங்கே தனிநபர் பயங்கரவாதமாக மாற்றப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் நாளாந்த சமூக சீவியமானது தன்னளவில் சமூகவிரோதச் சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது.இதை சமூகத் தளத்தில் இருத்தி வைத்திருக்கும் இன்றைய போராட்ட இயக்கங்களின் அதீத இயக்கவாத நலனாது எந்தத் திசையில் மக்களை அழைத்துச் செல்கிறதென்பது தெரிந்தும் உங்கள் பேனைகள் என்ன சொல்கின்றன-சொன்னவை?

கோணேஸ்வரியின் சாவுக்கும் அவளது உடலைச் சிதறடித்த விதத்துக்கும் எத்தனை தமிழ் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள்?இதைச் செய்யும் இராணுவத்துடன் ஒன்றாகப் பயணித்து,உண்டு குடித்து அரசியல் செய்யும் தமிழர்களும்-இயக்கங்களும் இருக்கும் வரை இத்தகைய மனித விரோத நடவடிக்கை தொடர்கதைதாம். அதனால்தாம் நாம் இப்படிச் சொல்கிறோம்:



>>>>அச்சமும்
அவலமும் அவரவர்க்கு வந்தால்...

அன்புக் குழந்தைகளே!
நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்
என்னிடமில்லை,

கவித்துவமற்ற மொழியூடு
வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை
வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர

நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி
ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு
எம்மிடம் எந்த மந்திரமுமில்லை

இரண்டும் கெட்டான் பொழுதுகளை
மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்
ஒரு அழகிய தீவை
உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை

நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள்
நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள்
முகட்டு உச்சியில் குண்டொலிகளையும்
தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும்
செவிகளால் கேட்கிறீர்கள்

நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும்
குளிரில் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும்
என் செவிகளினூடாகவும் கேட்கிறேன்

கண்கள் விரிகிறது
அவற்றைப் பார்த்துவிட,
எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை!

ஓலமும் எங்கோ நெடும் தொலைவில்

பரிகாசிகின்ற இதழ்களிலிருந்து மெல்லிய 'ச்சீ' ஒலி
இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும்
சாவினது நிழல் விழுந்து கிடக்கிறது
அதனது நீண்ட விரல்கள் எனதருகில் புதையும்படி

எப்படி இந்தக் குழந்தைப் பருவம்...
கண்களை இறுக மூடிப் பெருமூச்சு விடுவதைத்தவிர
வேறெதையும் என்னால் செய்ய முடியாது,

அன்னையை இழந்த சேயும்,
சேயை இழந்த அன்னையும் சில காலத்து சோகச் சுவட்டில்,
அதுவரையும் இந்த பயங்கர உலகத்தை துடைத்தெறிந்து
புதிய ஆறுதலைப் பிரகாசிக்க வைப்தற்கான
எல்லாக் காரியத்தையும் நீங்களே கைகளிலெடுங்கள்

எனது மெழுகு திரியோ
மிகவும் தன்னையுருக்கி கீழ்விழுந்தெரிகிறது!
ஆழிப் பேரலை கூத்தாடிக் குடித்த உங்கள் பள்ளித் தோழர்களுக்காவும்
எனக்காகவும்,

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்
ஒரு விடியலிலாவது இந்த வடுவைத் தொலைத்த நாளாக
புதிய பொழுது மலாரது போய்விடுமோவென்ற
நெஞ்சத்து ஏங்கலில் ,

உங்கள் தோளோடு கைகோர்த்து தும்பி பிடித்திடவும்,
பள்ளியிலிருந்து தேவாரம் பாடவும்...
பார்க்கின்ற இடமெல்லாம் பால்ய காலத்து சிவாவும்,
கௌரியுமாக நீங்களும் நானும்,இன்னும் பலருமாய்...

மேகங்களுக்குப் பின்புறம்
எங்கோ நெடும் தொலைவில் நாம் புதிய மனிதர்களாக
மண்டியிட்டுக் கிடக்க
இந்த உலகத்து மானுடர்களெல்லாம் நமக்காக பிராத்தனையிலீடுபட
அனைத்து நித்யங்களும் மௌனித்துக் கொள்கின்றன

இனி எவரும் வரமாட்டார்கள்
இந்த அற்ப உலகத்து நியமங்களை உங்கள் முதுகினிலேற்றி
நாளைய தமது சுகத்திற்கான கனவுகளாக விதைத்து
அறுவடை செய்வதற்கான முனைப்புடன்

மேசைகளில்'மற்றவர்களினது தவறுகளாக'கொட்டி
கடைவிரித்தவர்கள் இப்போ
அவற்றைக் குருதியால் எண்ணிக்கொள்ள அவர்களும்,நீங்களும்,
மற்றவர்களுமாக புதைகுழி நிரம்பிக் கொள்கிறது

என்றபோதும் ,
குழந்தைகளே இன்னுமொரு முறை சொல்வேன்:
நம்பிக்கைதரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை.<<<<<




அடுத்து தங்கமணி,>>>>>அரசியல் அறம் என்பதை விட 'மார்க்சிஸிம்' என்று சொல்லியிருக்கலாம். இன்றைய தேதியில் வெட்டுகிற வாளிலும் குனிகிற தலையிலும் கடவுளுக்கு அடுத்தபடியாய் இலங்குகிற கருத்தொன்று இருக்கிறதெனில் அது மார்க்ஸிஸம்தான். அதிலும் பீர் குடிக்கிற மார்க்ஸிசம் விசேசமென்பதறிக.<<<<< உங்களைப் போல கோடிக்கணக்கான முதலாளியக் குரங்குகளும் இதைத்தாம் சொல்கிறார்கள்!கொஞ்சமும் மாற்றமின்றி அதை வாந்தியெடுக்கும் உங்களுக்கும் இந்தப் பிரச்சினையிருப்பது இப்போதுதாம் எமக்குத் தெரிகிறது. பீர் குடிக்க வைக்கும் முதலாளியத்துக்குள் வாழும் மார்க்சியர்கள் மட்டும் பீர் குடிப்பது தப்பபென்று(உங்கட பாணியில விஷேசம்) எந்தத் தீர்ப்பும் எவரும் வைக்கிற சுகம் இருக்கே அதுதாம் இந்த நூற்றாண்டின் நகைச் சுவை.யாரு குசு விட்டாலும் மார்க்சியம் பற்றிக் காயவிட்டால் உங்களைப் போன்ற 'பெரியவர்'களுக்கு அரிப்பு ஆறாது! அந்த 'அரிப்பு' சுயமாக உங்களுக்கு மட்டும் வருவதில்லை.இந்த அமைப்பில் மற்றவர்களின் தலையில் வண்டியோட்ட முனையும் ஆண்டான்(ள்)... எல்லாப் பெருச்சாளிகளுக்கும்தாம் வருகிறது.இதற்குத் தங்கமணியென்ற மனிதனும் விதிவிலக்கல்ல. இன்னுமிருந்தால் எடுத்துவிடுங்கோ நாங்களும் உங்கட 'அறிவு'வாதக் கண்ணோட்டங்களைப் படிக்கத் தயாராகவும்-ஆவலோடும் இருக்கிறோம்.

12/21/2005 11:10:00 AM
இளங்கோ-டிசே said...

சிறிரங்கன், உங்களுக்கு விரிவாக பதில் எழுத விருப்பம். ஆனால் இந்த விடயத்தோடு இந்தக்கணத்தில் உரையாடமுடியாது. எழுதினாலும் உணர்ச்சிவசப்படுவதாய்த்தான் போகும்.

நிற்க.
நீங்கள், பொடிச்சி ஒருமுறை குறிப்பிட்டதுபோல, ஒன்றைப்பேசும்போது 'மற்றதை' ஏன் பேசவில்லை என்று கேள்விகளோடு வருகின்றீர்கள். ஆனால் நீங்கள் எதையாவது பதிவாய் எழுதும்போது இதே கேள்விகளோடு மற்றப்பக்கத்தை ஏன் எழுதவில்லை என்று புலிகளின் ஆதரவாளர்கள் கேட்கும்போது உங்களைப் போன்றவர்கள் கோபப்படுகின்றீர்கள் என்பதுவும் வியப்புத்தான்(ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி).

நான் எழுப்பும் கேள்வி மிக எளிமையானது. இந்த விடயத்திற்கு உங்கள் எதிர்வினை என்ன? இந்த விடயங்கள் குறித்து நீங்கள் எங்கும் எதையாவது பதிவு செய்திருக்கின்றீர்களா? ஆகக்குறைந்தது நீங்கள், நான் இதை நேற்று எழுதியதிலிருந்து பலமுறை எனது தளத்துக்கு வந்திருக்கின்றீர்கள் என்று வெப் கவுண்டர் கூறுகின்றது. இப்போது தங்கமணியும் நானும் எழுத, உணர்ச்சிவசப்படும் நீங்கள் ஏன் இவற்றை (பின்னூட்டங்கள்) நாங்கள் எழுதமுன்னர் எதையும் பேச/பதிய முன்வரவில்லை? இதிலிருந்து நீங்களும் உங்கள் தத்துவங்களில் அமிழ்ந்து போனவர் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 'தத்துவத்தை' நாங்கள் விமர்சிக்க, ஓடிவரும் நீங்கள் ஒரு பெண்ணின் வாழ்வு குரூரமாக குலைக்கப்பட்டது தெரிந்தும் மவுனமாக இருக்கவில்லையா?

ஒரு சின்ன உதாரணத்தைக் கூறி விலகிகொள்கின்றேன். ஒரு படத்தில் ஒரு நாயகன், மூன்றாம் உலக நாடுகளை மீட்சி செய்வதற்காய், பெரிய பெரிய தத்துவங்கள் எல்லாம் கதைத்துக்கொண்டிருப்பான். அப்போது நாயகி கூறுவார், இப்போது மெக்சிக்கோவுக்கு வசதி வாய்ப்பு அற்ற சிறார்களுக்கு பென்சிலகள் அனுப்புவதற்கு வழிகள் தெரிந்தால் பேசு, இல்லாவிட்டால் அமைதியாக இரு. உனது தத்துவங்களை பிறகொரு பொழுதில் பேசுவோம் என்பாள். அதைத்தான் நானும் கூறவிளைவது......பிரச்சினைகளின் ஆழ அகலங்களை பிறகொருபொழுதில் அலசி ஆராய்வோம்; அது தவறே இல்லை (அதைதான் ஈழநாதனுக்கான பதிலிலும் குறிப்பிட்டிருந்தேன்).

இந்த விடயத்துக்கு உங்களைப்போன்றவர்களின் இந்தக்கணத்து எதிர்வினை என்ன என்பதுதான் எனக்கு முக்கியம்; நேற்றுச் சொன்னதோ நாளை கூறுப்போவதோ பற்றியோ அல்ல.

வாழ்க்கையிலிருந்துதான் தத்துவம் உருவாகியிருக்கின்றன என்பது சரி. ஆனால் வாழ்க்கையின் மாற்றத்திற்கேற்ப தத்துவங்களும் மாற்றமடையும் என்பதைத்தான் உங்கள் 'மார்க்ஸிசப்பெரியவரும்' கூறியிருக்கின்றார். ஆனால் உங்களைப்போனறவர்கள் அப்படியே ஏற்கனவே எழுதப்பட்ட தத்துவங்களில் உங்களைப் பதித்துவிடுகின்றீர்களே தவிர, இன்றைய வாழ்க்கையிலிருந்து எதையும் எடுத்து வளம் சேர்ப்பதாய்க் காணோம் (What I'm kindly suggesting to you pepole is , Get out of your philosophy cage and walk into reality first). நீட்சேயினதும், மார்க்ஸிசனதும் (ஏங்கல்ஸினதும்) 'தத்துவங்கள்தான்',கிட்லரையும், ஸ்ராலினையும் உருவாக்கியது என்பது நீங்கள் அறியாததுமல்ல. தத்துவங்கள் அல்ல, இலக்கியங்கள் கூட பக்கதிலிருக்கும் சக மனிதனைப் புரிந்துகொள்ளாவிட்டால், இவற்றை எல்லாம் உதறிப்போவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

12/21/2005 02:54:00 PM
Sri Rangan said...

டி.ஜே. இங்கே பங்களைக் குறித்தெவரும் பேசுவதில்லை.அராஜகத்துக்கு இருப்பது அடக்கு முறையென்ற ஒரு முகமே!ஆனால் இங்கெழுந்த கேள்வியானது உங்களது இருப்பின்மீதான கேள்வி.அதாவது எனது தளத்தில் கிறுக்கப்பட்ட எந்த எழுத்தைப் பார்த்தாலும் அதுள் அடிநாதமாக இருப்பது மனிதவதை குறித்த எழுத்துக்களே!எனது தேசத்தையும்,மக்கள் படும் அவலத்தையும் பேசாத எந்தக் குறிப்பையும் பார்க்க மாட்டீர்கள்.எப்போதும் அராஜகத்தின் பக்கம் நடுநிலையாக நின்று விவாதிக்காது,ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் சார்ந்து கருத்து வைப்பவன் நான்.எனவேதாம் புலியையும்,மற்றைய அராஜக இயக்கங்களையும்-இலங்கை இனவாத அரசையும் அதன் பின்னாலுள்ள அந்நிய நாடுகளையும்,இவர்களை அண்டிப் பிழைக்கும் புத்திஜீவிகளையும் என்னால் விமர்சிக்க முடிகிறது.இங்கே தர்சினியின்மீதான பாலியற் பலாத்தகாரம்-படுகொலை,இந்த இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் புதிதில்லை!இது திடீரென நடந்தவொன்றாக நீங்கள் கவிதை எழுதுவதால் எமக்குக் கருத்திட முடியவில்லை.தினமும் இதைத்தாம் நாம் எமது அன்றாடப் பதிவுகளில் எழுதிக் கொண்டு வருகிறோம்.தினமும் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு முகங் கொடுத்துத் தமது உயிரையும் உடமைகளையும்,வாழ்வையும் இழப்பதைப் பதிவுகளாக்கும் நாம்,இதை எங்ஙனம் அகற்ற முடியுமெனவும் கருத்துகளிடுகிறோம்.இலங்கை இராணுவத்தைப் பற்றிய மதிப்பீடுகளை நாளொரு வண்ணம் தமது அரசியலுக்கேற்றபடி வர்ணிக்கும் கயமையான தமிழ் இயக்கங்கள்போல் நாம் இரட்டை வேஷம் போடுபவர்களில்லை.இலங்கையின் அடக்கு முறை வன்முறைஜந்திரம் நமது கிராமங்களில் நிலை கொள்ளதக்க போராட்ட வியூகமானது எங்ஙனம்,எவரால் மேற்கொள்ளப் பட்டது?


இலங்கையின் அரச ஆதிக்கத்தை உடைத்தெறிய முடியாத தத்துவார்த்த வறுமையாளர்கள் தினமும் முகாமுக்குள் முடங்கிய வன்முறைஜந்திரத்தை நொட்டி,நொட்டி அவர்களைப் படையெடுத்துப் பலமான இராணுவமாகவும்,தேச பக்த இராணுவமுமாக ஆக்கினார்கள்.அன்றைக்கே இது தவறானது,கூலிப்படையை 'தேச பக்த படையாக்கும்' இந்தத் தாக்குதலும், தவறான போராட்டமும் நம்மை இன்னும் அடிமையாக்குமென நாம் எழுதினோம்.இது இன்று விடிகிறது.எந்தவொரு மக்கள் ஸ்தாபனமும் ஒரு பெரும் நிலப்பரப்பையோ அல்லது படையையோ வைத்திருந்தாலும் அது வெற்றிபெறாது.எதிரியின்'அரச ஆதிக்கத்தை'உடைக்காது எந்தத் தேசமும் விடுதலையானதாக வரலாறில்லை.துஷ்டர்களை வீட்டுக்குள் வரவழைத்துவிட்டு வீட்டின் சுதந்திரம் போனதாகப் புலம்பிப் பிரஜோசனமில்லை!


நாம் உணர்ச்சி வசப்படுவதுமில்லை,குருட்டுத்தனமாக மதிப்பீடுகளை உருவாக்குவதுமில்லை.


இத்தகைய அரசியல் பார்வை எமக்குக் கிடையாது.


ஆயுதப் போராட்டத்துக்கு முன் நமது சனங்கள் எத்தகைய வாழ்வோடு இருந்தார்கள்-அவர்களிடமிருந்த சுதந்திரம் எத்தகையது என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.இன்றைய தமிழ் ஆயுதக் குழுக்களால் நமது வாழ்வின் நிலையென்ன-வாழ்விடங்களின்,சமூக சீவியத்தின் நிலையென்ன என்பதை தர்சினி போன்றோரின் மரணங்கள் சொல்கின்றன.


இதன் பின்னாலுள்ள அரசியலை மாற்ற வக்கற்ற எந்த எழுத்தாலும் இத்தகைய கொலைகளைத் தடுத்திட முடியாது,இதை நாம் ஊர்மிலாவைப் படுகொலை செய்த இயக்கத் தலைவரின் அரசியலில் இருந்து ராஜினியீறாகக் கோணேஸ்வரி, மற்றும் இதே புங்கிடுதீவில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் தர்சினியைப்போல் பாலியல் வல்லுறவுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட கோவில் பூசகரின் மகள் வரை இலங்கை இராணுவத்தின் அரசியலையும் புரிந்து கொண்டே கூறுகிறோம்!


இனியும் மரணிக்கக் காத்திருக்கும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தியே கோருகிறோம்:

>> 'தமிழ் மக்களின் வாழ்வானது(உங்கள் பாணியில் பென்சில்...)இலங்கை-இந்திய அரசுகளின் நலன்களையும் மையப்படுத்திய அரசியல் பேச்சு வார்த்தையூடாகவே இனிமேல் மேன்மையுற முடியும்.ஆதலால் ஈழமென்ற பொய்க்கோசம் தொலைத்து உலக நடப்பைப் புரிந்துகொண்டு மக்களின் வாழ்வை முதன்மைப் படுத்திய தீர்வுக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைத்து (ஐக்கிய இலங்கைக்குள் இனங்கள் பரஸ்பரம் ஒற்றுமையுடன் வாழும் தீர்வு) பிரச்சனையைத் தீர்க்க அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒற்றுமைப்பட்டு-ஏகப்பிரதிநித்துவ மனதை தவிர்த்து அரசியலை முன்னெடுப்பது மட்டுமே இன்றைய யதார்த்தமான நகர்வாகும்'.<<


இதைத் தவிர்த்து இராணுவத்தைப் பழைய பாணியில் நொட்டிக் கொள்வோமானால் இத்தகைய படுகொலைகளைச் சிங்களப் பாசிச இராணுவம் செய்யும். இந்தக் கொலைக்கு முன் சிங்களப் பாசிச இராணுவத்தை மக்கள்(?!:-) )கிளைமோர்த் தாக்குதல் நடாத்திக் கொன்றதை ஞாபகப் படுத்துங்கள்.அதே பழைய பாணீ.கிரமத்தில் குண்டெறிய-இராணுவம் சாக, அதே சிங்களப் பாசிச இராணுவம் கூட்டாக வந்து கிராமத்தைத் துவஷம் செய்த கொடுமை...


நமது மக்களின் அழிவைப்பற்றிய புரிதலுக்கு எனக்கு நீங்கள் 'பொடிச்சியை' உதாரணப்படுத்துவது தேவையற்றது. அந்தளவுக்கு நாம் குருட்டுப்பார்வையோடு,தேனீ இணையத்தளம் போன்றோ அன்றி புலிகளால் பழிவாங்கப்பட்ட இயக்கத்தவர்போன்றே அரசியல் நடாத்தவில்லை.நாம் ஒடுக்கப்படும் மக்களின் நலனை முதன்மைப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பவர்கள்.எமது எழுத்துக்கள் தினமும் இதையே பேசும்.எப்பவாவது கிணற்றுக்குள் இருந்து வெளிவந்தவன்போன்று திடீர் எதிர்ப்புகள் காட்டுபவர்கள் நான் இல்லை,டி.ஜே!


என்னுடைய பதிவுகள் இது குறித்துத் தினமும் பேசுகிறது.எனவே தர்சினியைப் பற்றிய தனிப் பதிவினால் மட்டும் இலங்கையரசின் பாசிசப் போக்கை-அதை நிகழச் செய்யும் தமிழரின் சேட்டைமிகு அரசியலை கண்டிக்க வேண்டியதில்லை!


இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்கான எழுத்துகளையே நாம் அவசியமென்கிறோம்.கண்டிப்பை எவரும் செய்யலாம்.ஆனால் எமது மக்களின் ஜனநாயகத்தைப்பற்றி ஒரு சிலரே எழுதுகிறார்கள்.நான் அதில் ஒருவன்.எனக்குப் புலிமீதோ அல்ல மற்றைய இயக்கங்கள்மீதோ,இலங்கை அரசுமீதோ பக்கச் சார்வு கிடையாது,மாறாக நமது மக்கள் நலமே பிரதானம்.எனவே அவர்களைச் சார்ந்து மேற்கூறியவர்களின் அமைப்பு நலன்-வர்க்க நலன் ,அது சார்ந்த இராணுவ முன்னெடுப்புகளை அம்பலமாக்கி,இத்தகைய போராட்டச் செல் நெறியேதாம் இத்தகைய கொலைகளுக்கு அடிப்படைக் காரணமானதென்று நிறுவுவோம்.அதைச் செய்தே வருகிறோம்.->இது வே எனது 'பீர் மார்க்சியம்'!<

12/21/2005 03:05:00 PM
Anonymous said...

பதிந்தது:நண்பன்

டிசெ

கவிதையில் தெரியும் கழிவிரக்கம் தேவை தானா?

கவிதையில் சொல்ல விரும்பும் வலியும் வேதனையும் பொத்தம் பொத்ஹுவாகப் புரிகிறது. ஆனால் - அந்த தர்சினியை முன்னரே தெரியாதவர்கள் எப்படியென்று விளங்கிக் கொள்வது? இன்னமும் கூட கொஞ்சம் விரிவான பின் குறிப்புக் கொடுத்திருக்கலா

22.12.2005

12/21/2005 03:27:00 PM
இளங்கோ-டிசே said...

சிறிரங்கன், கருத்துக்களுக்கு நன்றி. நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கினற புள்ளிகள் வேறுவேறு என்பதால், இவை குறித்து தொடர்ந்து உரையாட விருப்பமில்லை.
//நாம் ஒடுக்கப்படும் மக்களின் நலனை முதன்மைப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பவர்கள்.எமது எழுத்துக்கள் தினமும் இதையே பேசும்.எப்பவாவது கிணற்றுக்குள் இருந்து வெளிவந்தவன்போன்று திடீர் எதிர்ப்புகள் காட்டுபவர்கள் நான் இல்லை//
சிறிரங்கன், இந்த நம்பிக்கை உங்களில் இருப்பதால்தான் உங்களுடன் தொடர்ந்து உரையாடுகின்றேன். இல்லாவிட்டால் வேறு சிலருக்குச் செய்ததுமாதிரி விலத்திப் போயிருப்பேன். நன்றி.
....
நண்பன்,
பின்னூட்டத்துக்கு நன்றி. இந்த விடயம் அனேகருக்குத் தெரிந்திருக்கும் என்றுதான் நினைதேன். வன்னியன் குறிப்பிடத்தான் அப்படியில்லை என்பது புரிந்தது. இதை எழுதியது கூட, செய்தி அறிந்து பதட்டம் வந்துபொழுதில்தான். இந்த விடயம் வலைப்பதிவுகளினூடாக வெளியே வரவேண்டும் என்பதுவும், எனது பதட்டத்தைக் குறைக்கவுமே இதை எழுதத்தொடங்கினேன். 'கவிதை' குறித்த எல்லா விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கின்றேன். நன்றி.

12/21/2005 03:54:00 PM
Sri Rangan said...

இதுவரையான தங்களின் கருத்துகளிலிருந்து மட்டுமல்ல, ஏலவே நாம் வேறுவேறான புள்ளிகளிலேயே நிற்பதை நானறிவேன்.என்றபோதும் நடைமுறை "தமிழர் அரசியலை"ப் பின்தள்ளிய- போராட்டத்தை,அதன் வியூகத்தை,வர்க்க நலனை,வர்க்க சமூகத்தின் வர்க்க அரசியலை,அது சார்ந்த மனித வதையை >>விரிந்த மனதோடு<< பார்க்காத எந்த எழுத்தும் பொய்யானது-போலியானதென்பதை நாம் புரிவதற்கான உரையாடலே இஃது!அவ்வளவுதாம்.நன்றி.

12/21/2005 04:32:00 PM
Thangamani said...

ஸ்ரீரங்கன்:

நான் மார்க்சியத்தின் மேல் விரோதம் கொண்டவன் அல்லன். விடுதலையின் சாவிகளில் ஒன்றாக இயலுமானவரை அதைப்பயன்படுத்த நான் முயன்றிருக்கிறேன்; மனித வரலாற்றில், சமூக விடுதலையில், தனிமனித மதிப்பீடுகளில் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள், மாற்றங்களை அனுபவித்துக்க்கொண்டே அதை எதிர்க்கும் பலரைப்போன்றதல்ல என்னுடைய கருத்து. இந்து ராம் தொடங்கி தமிழின எதிர்ப்புணர்வின் குவிமையமாக மார்ச்சியம் மாற்றப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். முதலில் மார்க்சியத்தின் மேல் பெருங்காதல் கொண்ட உங்களைப்போன்றவர்கள் அதை இந்த சக்திகளிடமிருந்து விடுவியுங்கள். ஏனெனில் அவர்கள் இதை ஒரு கேடயமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பதை நானும் அறிவேன்.

மற்றபடி இங்கு கவிதையில் பீர் எனப்படுவது மதுவல்ல. அது ஆடம்பரத்தின், மேட்டிமைத்தனத்தின், விலகிநின்று செயல்படும் அறிவுச் சுயமைத்துனத்தின், நுகர்பொருள் வாதத்தின் குறியீடென்றே நான் கொள்கிறேன். அவ்வகையிலேயே அதைக் குறித்து என் கிண்டலைச் சொன்னேன். மற்றபடி மது எனக்கு எதிரானதல்ல.

நன்றி.

12/21/2005 04:37:00 PM
Anonymous said...

See these posts.

http://pooraayam.blogspot.com/2005/12/blog-post.html

http://pooraayam.blogspot.com/2005/12/blog-post_21.html

12/21/2005 04:40:00 PM
Anonymous said...

பதிந்தது:Arun Kamal

அய்யா, நான் தமிழகம் சார்ந்தவன். இப்பொழுது, மலேசியாவில் பணி புரிந்து கொண்டிருக்கிறேன். என் சூழல் எந்தவித பேரிடரையும் சந்தித்ததில்லை. என்னால் வேறென்ன செய்ய முடியும் - வெறும் இரஙல்களையும் இரு துளி கண்ணீரையும் தருவது தவிர? என் இள வயதில் இருந்து தமிழகச் சராசரியாளனாய் ஈழத்தமிழர் போராட்டத்துக்கு ஆதரவு என்ற நிலையில் இருப்பவன். இப்பொழுது, உங்கள் கவிதையும் அதற்கான பின்புலத்தையும் படித்த பின்னர்(ரும் கூட), - உண்மையை நேரடியாக ஒப்புக்கொள்ள வெட்கமாக இருக்கிறது - "கையறு நிலை கடையன்" ஆகத்தானே இருக்க வேண்டியிருக்கிறது?

24.12.2005

12/24/2005 01:29:00 AM
இளங்கோ-டிசே said...

அருண் கமல்,
//உண்மையை நேரடியாக ஒப்புக்கொள்ள வெட்கமாக இருக்கிறது - "கையறு நிலை கடையன்" ஆகத்தானே இருக்க வேண்டியிருக்கிறது?//
எனது நிலையும் அப்படித்தான். சொந்த நாட்டைவிட்டு எப்பவோ தப்பிவந்துவிட்டு இவையெல்லாம் பேசுவதற்கு நியாயம் இருக்கிறதா என்ற கேள்வி எப்போதும் எனக்குள்ளும் அசைந்துகொண்டிருக்கிறது. எனினும் சிலவிடயங்கள் இவற்றையெல்லாம் விலத்தி எதையாவது பதிவு செய்யவேண்டும் என்ற மன அவசத்தைத் தருகின்றது.
....
உங்களைப்போன்ற உண்மையான அக்கறை உள்ளவர்களின் கனிவு, அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு சுபீட்சத்தை விரைவில் கொண்டுவந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்!

12/24/2005 09:15:00 PM