கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்...

Sunday, December 16, 2007

Aqsa Parvez கொலையை முன்வைத்தும், பிறவும்...

இன்னொரு கலாசாரத்தை/பண்பாட்டை/பழக்கவழக்கங்களை புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பலவேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள் புதிய நாட்டின் காலநிலை/கலாசாரம்/சட்டதிட்டங்களுடன் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கிறது. போர்/பொருளாதாரம் போன்ற... என்ன காரணங்களாய் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, தமது சொந்த நாட்டைப் பிரிந்துவந்த உளைச்சலோடு புதிய சூழலுக்குத் தங்களைப் பழக்கவேண்டிய அழுத்தமும் இருக்கின்றது. மேலும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களை இன்னுமின்னும் எளிதாகச் சுரண்டிக்கொண்டிருக்கும். ஒரு வேலையில் திருப்தியான சம்பளத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களது 'கனவு வேலை'க்குப் போக எளிய பத்து வழிமுறைகளென எழுதி/பேசி உங்களுக்கு ஆசை காட்டிக்கொண்டிருக்க நீங்கள் இயந்திரமாய் மாறி மாறி இடையறாது இயங்கிக்கொண்டிருப்பது அவசியமாகிவிடுகின்றது. வாய்ப்புக்கள் திறந்தநிலையில் இருக்கையில் அவற்றை எல்லாவிதத்திலும் உபயோகப்படுத்துவதை விரும்பாமல் இருக்குமா மனித மனங்கள்?

இயந்திரத்தனமான வாழ்க்கையிற்குள் மூழ்கியிருந்தாலும் நீங்கள் தனியாள் அல்ல. உங்கள் ஒவ்வொரு அசைவும் நுட்பமாய் கவனிக்கப்படுகின்றது. திருமணவிழாக்களில்/ஒன்றுகூடலில்/ வழிபாட்டுத்தலங்களில் உங்களைப் பற்றிய கதைகள் சிறகுகளுடன் பறக்கத்தொடங்குகின்றன. இவ்வாறான கதைகள்/கிசுகிசுக்கள் உங்கள் காதிற்குள் விழத் தொடங்கும்போது உங்களது சுதந்திரமான எல்லைகளைச் சுருக்கத் தொடங்குகின்றீர்கள். அவ்வாறு ஒடுங்கத் தொடங்குகையில், அதைக் கண்காணிபாய்/அதிகாரமாய் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் செலுத்தத் தொடங்குகின்றீர்கள். அதிகாரம்/கண்காணிப்பு/ஒடுக்குதல் என்பவற்றை இலகுவாய் அது நமது கலாசாரம்/பண்பாடு என்று செப்பி அதை ஒற்றைத் தன்மைக்குள் புகுத்திவிட்டு எளிதாக நகர்ந்துவிடவும் விரும்புகின்றீர்கள்.


கூட்டுக்குடும்பம்/கூட்டுக் கலாசாரம்/உறவுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் (அவற்றினூடாக சாதி நுட்பமாக தமிழ்ச்சமூகத்தில் புகுத்தப்படுவதும் கவனிக்கத்தது) கலாசார பின்புலங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கு தனிமனித உரிமைகள், தனிப்பட்ட விருப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேலை நாடுகள் ஒரு கலாசார அதிர்வை ஏற்படுத்துகின்றன. அந்த அதிர்வை எப்படி எதிர்கொள்வது என்பதும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து எப்படி இடையறாது உயிர்த்திருத்தல் என்பதும்தான் கவனிக்கபபடவேண்டியது.

அண்மையில் கனடாவில் hijab (பர்தா?) அணியவில்லை என்ற காரணத்துக்காய் (அது முக்கிய காரணமே தவிர அதுமட்டுமில்லை காரணம்) பதினாறு வயது பெண் (Aqsa Parvez) ஒருவர் தகப்பனால் கொல்லப்பட்டிருக்கின்றார். கொல்லப்பட்ட பதின்ம வயதுப்பெண்ணின் நண்பர்கள், இந்தப்பெண் பர்தா மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் பலமுறை தகப்பனால் உடல்/உள வன்முறைக்கு ஆளாகப்பட்டிருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். மேலும் பர்தாவும், தளர்வான ஆடைகளும் அணிந்தபடி வீட்டிலிருந்து வெளிக்கிட்டு, பாடசாலையில் இறுக்கமான ஆடைகளை அணிந்தும்... பிறகு வீடு நோக்கிச் செல்லும்போது மீண்டும் பர்தா மற்றும் தளர்வான ஆடைகள் அணிபவர் அந்தப்பெண் என்றும் அவரின் நண்பர்கள் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறான முரண்பாடுகளின் நீட்சியிலேயே அந்தப்பெண் கொல்லப்பட்டிருக்கின்றார் என்று நம்பப்படுகின்றது.

இந்தக் கலாசார அதிர்வு/ மற்றும் புதிய சூழலுக்குப் பழக்கப்படுதல் என்பவை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல. புலம்பெயர்ந்த எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து ஒரேவிதமான ஸ்ரிரியோ வகை கருத்துக்களை பரப்ப விரும்பும் ஊடகங்களுக்கு..., பார்த்தீர்களா முஸ்லிம்கள் அனைவரும் இப்படித்தான் காட்டுமிராண்டித்தனமானவர்கள் எனக் கூற அவல் கிடைத்துவிட்டது. அந்த நுண்ணரசியல்தான் கனடாவில் எத்தனையோ விடயங்கள் நிகழ்ந்தும் புறக்கணித்த சி.என்.என் (CNN) இந்தச்சம்பவத்தை அடிக்கடிக் காட்டச் செய்திருக்கின்றது (அதற்காய் இஸ்லாமிய அடிப்படைவாதம் விமர்சிக்கக்கூடாது என்பதல்ல அர்த்தம்) . இந்தச் சம்பவம் நடக்கும் சில மாதங்களுக்குமுன் ஒரு தமிழ்த் தந்தை அவரது மகள் ஒரு ஆண் நண்பரோடு (இருவரும் டேட்டிங் செய்தார்களென வாசித்தாய் நினைவு) இருந்த சமயம் அவர்களை நோக்கி வானை ஏற்ற முயன்றதையும், அவரது மகள் சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றார் என்பதையும் நினைவில் இருத்தவேண்டும். சில வருடங்களுக்கு முன் வன்கூவரில், ஒரு சீக்கிய பின்புல பெண், சாதி குறைந்த ஒருவரை நேசித்ததால், மிக நுட்பமாக இந்தியாவிற்குக் கூட்டிச்செல்லப்பட்டு அவரது தகப்பனாலும், சகோதரகளாலும் கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது சிபிசி(CBC) தொலைக்காட்சியில் ஆவணபடுத்தப்பட்டு, பரவலான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டதையும் நாமனைவரும் அறிவோம். எனவே இந்த குடும்ப வன்முறை, கலாசாரவிதமாய் ஒடுக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல என்ற புரிதலோடே இவ்வாறான விடயங்களை அணுகவேண்டியிருக்கிறது (சில கனடிய ஊடகங்கள் -ரொரண்டோ ஸ்ரார் போன்றவை- முஸ்லிம் சமூகம் என்று பார்க்காது பொதுவாய் அனைத்துப்புலம்பெயர் சமூகங்களுக்கும் உரிய பிரச்சினையெனப் பேசுவது ஆறுதல் தருகின்றது).


2.
தாம் புலம்பெயர்ந்து வந்த நாட்டின் கலாசாரத்தோடு சிறிதும் மாறாமல் இருக்கப்போகின்றவர்களுக்கோ அல்லது அப்படியே புலம்பெயர்ந்து வந்து புதிய நாட்டின் கலாசாரத்தை முற்றுமுழுதாய் எந்தக்கேள்விகளுமில்லாது ஏற்றுக்கொள்பவர்களுக்கோ இவ்வாறான பிரச்சினைகள் அதிகம் இருப்பதில்லை. இரண்டு கலாசாரங்களுக்கிடையில் (தாய்நாடு X புலம்பெயர்ந்த நாடு) சிக்கிக்கொண்டு எதை எதை தமக்குரியதாக தேர்ந்தெடுப்பது என்று நினைத்து அலைக்கழிப்பவர்களுக்க்த்தான் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

இந்தக் கலாசார அதிர்வுகளை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களில் பெற்றோருக்கே முழுப்பொறுப்பு இருக்கின்றதென அவர்களை நோக்கி சுட்டுவிரல்களைக் காட்டுவதிலோ, அல்லது இந்தக்காலத்துச் சிறுசுகளே இப்படித்தானென பெருமூச்சுவிட்டபடி இளையவர்களை நோக்கி முழுதாய் குற்றஞ்சாட்டுவதிலோ.. உருப்படியாக நம்மால் எதையும் சாதிக்கப்போவதில்லை. நம் அனைவருக்கும் பொறுப்புகளும் சகிப்பத்தன்மையும் பிறரை விளங்கிக்கொள்ளலும் அவசியம் என்ற புள்ளியிலே நாம் இவற்றை அணுகவேண்டியிருக்கின்றது. பெற்றோர்கள் அனைத்துச் சுதந்திரம் கொடுத்தும், அதை எவ்வாறு எடுத்துக்கொள்வதென்று விளங்காது பிள்ளைகள் சீரழிந்துபோன நிகழ்வுகள் இங்கே நிறைய நடந்துகொண்டிருக்கின்றன. அதேவேளை புதிய சூழலுக்கு ஏற்பத்தான் தங்கள் பிள்ளைகள் மாறிகொண்டிருக்கின்றார்கள் என்று புரியாமல் பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பருவவயது மாற்றம் இன்னபிற சுழற்சி வட்டங்களுக்குள் திணறிக்கொண்டிருக்கும் பிள்ளைகள், தமது பெற்றோர்களும் தம்மை வளர்க்க வைக்க அவர்கள் வாழும்/பழகும் சூழலிற்குள் சிக்கிக்கொண்டு பல விதமான அழுத்தங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பலவேளைகளில் மறந்துவிடுகின்றார்கள். நம்மைபோன்ற கலாசார பின்புலங்களோடு வருகின்ற பெற்றோர்களில் அநேகர், பிள்ளைகள் மட்டுந்தான் தமது எதிர்காலமென நினைத்து பிள்ளைகளை வளர்க்கத் தொடங்குகின்றார்கள். எனவே பிள்ளைகள் தமது விருப்புக்களுக்கு எதிராய் சிறிது நகரும்போதுகூட உடனேயே அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்குகின்றார்கள். பிறகு இரண்டு தரப்பினரும் மன உளைச்சல்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் ஆளாகுகின்றனர்.

இங்கே, Aqsa Parvez கொல்லப்பட்டதை எதன் பொருட்டும் எவரும் நியாயப்படுத்தமுடியாது. மேலும் பர்தா அணிவது பற்றி, வ.கீதா ஒரு கலந்துரையாடலில் கூறிய கருத்தையே எனது கருத்தாகவும் இங்கே பதிவு செய்கின்றேன். பர்தா அணிவது குறித்து முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கவேண்டியது. குறிப்பாய் முஸ்லிம் பெண்களுக்குரிய தேர்வே தவிர பிறர்க்கு உரியதல்ல. ஒரு முஸ்லிம் பெண்ணேதான் அவர் hijab அணிய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அவரது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கவேண்டுமே தவிர நாங்களல்ல. இவ்வாறான தேர்ந்தெடுக்கும் ஒரு சுதந்திரமான வெளி முஸ்லிம் பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று மட்டுமே -வெளியாட்களாக- நாங்கள் வற்புறுத்தவேண்டும்.

இரண்டு சம்பவங்களை எடுத்துக்கொள்வோம்.
(1) உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலங்களில், ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்க முடிந்திருந்தது. அதில் பெற்றோர் X பிள்ளைகள் என்ற புள்ளியில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அநேகமானவர்கள் பிள்ளைகளையே பிறாண்டிக்கொண்டிருந்தார்கள். கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரு தாய், தனது மகள் இன்று நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருக்கின்றார்... ஆண்கள்/பெண்கள் என்று பலவேறு கலாசாரப்பின்புலங்கள் உள்ள நண்பர்களோடு போயிருக்கின்றார்..என்னிடம் அனுமதி கேட்டுத்தான் எனது பிள்ளை சென்றார் என்று கூறியிருந்தார். மேலும், இவ்வாறு இரண்டு தரப்பையும் அழுத்தாத புரிந்துணர்வுடன் நாம் பிள்ளைகளை அணுகவேண்டுமென அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் நமது பண்பாட்டைக் காக்கும் ஆகிருதிகள் சும்மா விடுவார்களா என்ன? இதெல்லாம் ஒரு பிள்ளை வளர்ப்பா? இப்படிப் போகின்ற பிள்ளை அங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா அதாம் இதாமென்று வானொலியில் வந்து அலட்டத் தொடங்கியிருந்தார்கள்.

(2) ஈழத்தில் பைலாப்பாட்டுக்களில் கலக்கிய ஏ.ஈ.மனோகரன், நித்தி ஆகியோர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வுக்கு போயிருந்தேன்/தோம். இவ்வாறான நிகழ்வுகளை கர்நாடக சங்கீத சபாக்களைப் போல இறுக்கமாய் இருந்து பார்ப்பதில் நம்மவர்கள் வல்லவர்கள்.. அந்நிகழ்வில் மேடையில் பாடிக்கொண்டிருப்பவர்களே -சபையின் இறுக்கத்தைப் பார்த்து- எழும்பி ஆடுங்களென அறைகூவல் விடுத்தபோது வளாக நண்பர்கள் எழும்பி ஆடத் தொடங்கியிருந்தார்கள். அப்படி ஆடிக்கொண்டிருந்தபோது பெற்றோர்/உறவினர்களோடு வந்திருந்த சில பெண்களும் தங்கள்பாட்டில் எங்களுக்கருகில் வந்து ஆடத்தொடங்கினார்கள். உடனே நமது கலாசாரக்காவலர்கள் அதெல்லாம் அப்படியிருக்கூடாதென அந்தப்பெண்களை சிறிது நேரத்திற்குள்ளே திருப்பி அனுப்பியிருந்தார்கள். இத்தனைக்கும் அந்தப்பெண்கள் தமது பெற்றோரின் அனுமதியுடன் ஆட வந்திருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பெற்ற பிள்ளைகள் மீது பெற்றோரைவிட நமது கலாசார காவலர்களுக்கு இவ்வளவு அக்கறையா என வியக்கத்தான் வேண்டியிருந்தது.

இவை எளிய உதாரணங்கள். இங்கே வரும் இலவசப்பத்திரிகையான மெட்ரோவில் ஒரு பெண் -பத்தி எழுத்தாளர்- கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. நாம் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் கூறி முழுமையான மனிதர்களாய் வளர்த்துவிட முடியாது. ஒன்றேயொன்றைத்தான் நாம் உறுதியாக... பிள்ளைகளுக்குச் செய்யமுடியும். அவர்களாய் அனுபவங்களினுடாக வாழ்வைக் கற்றுக்கொள்ளும்போது என்ன நடந்தாலும் திரும்ப வரும்போது உங்களை ஏற்றுக்கொள்வோம் எனத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டுமென்று கூறுகின்றார்.

அண்மையில் ராப் பாடகர் நாஸும் (Nash) ஒரு நேர்காணலில், இன்றைய இளைஞர்கள் எம்மைப் பார்த்து பெரியவர்கள் குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அலுப்புத்தருவது என்ன என்றால், தாங்கள் இளைஞர்களாய் இருந்தபோது தாங்கள் ஒரு தவறும் செய்யாத மாதிரி இந்தப்பெரியவர்கள் கதைத்துக்கொண்டிருப்பதுதான் என்று வெளிப்படையாக நாஸ் கூறியிருக்கின்றார். இன்றைய இளைய சமுதாயத்தைப் பற்றிக் குறை கூறும் வளர்ந்தவர்கள் - சற்று நிதானமாய் தமது கடந்துவந்த இளமைப் பருவங்களை நினைத்துப் பார்ப்பார்கள் என்றால்- பிள்ளைகளை இன்னும் நெருக்கமாய்ப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சொன்ன உதாரணத்தைப் போல, பிள்ளைகள் தாங்கள் செய்யவிரும்புவதைச் செய்யப்போகின்றோம் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்கும்போது பெற்றோர்கள் மறுத்தால் என்ன செய்வார்கள்..? அதை உடைத்து வெளியேறத்தான் செய்வார்கள். இவ்வாறு ஒரு பொதுவெளியில் ஆண்களோடு பெண்கள் ஆடுவதை மறுத்ததை நினைக்கும்போது, பெற்றோருக்குத் தெரியாது டான்ஸ் கிளப்புகளில் ஆடிக்கொண்டிருக்கும் பெண்கள்/ஆண்கள் நினைவுக்கு வருகின்றார்கள். ஒரு கட்டத்தில் கிளப்புக்களில் நிறைய மதுபானம் அருந்தியும் தாம் என்ன செய்கின்றோம் என்று அறியாது சீரழிந்துபோன பலர் இருக்கின்றார்கள். வெள்ளம் தலைக்கு மேலே வந்ததன்பிறகு ஒப்பாரி வைப்பதைவிட, ஒருவித புரிதலோடும், மெல்லிய கண்காணிப்போடும் பிள்ளைகளை அவர்களுக்குப் பிடித்ததைச் செய்யும்போது அவர்கள் சீரழியாமற் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் அல்லவா?. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

3.
அண்மையில் வந்த ஒரு பேப்பர் இதழில் (Issue 83), P.கருணாகரமூர்த்தி என்பவர் (பொ.கருணாகரமூர்த்தியும் இவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) 'இரண்டு முத்தங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அ.முத்துலிங்கத்தின் 'சுளுக்கெடுத்தவன்' கதையில் ஆரம்பித்து, அன்ரன் செக்கோவோடு முடிச்சிட்டு, ஈழத்துச் சம்பவங்களோடு அந்தக் கட்டுரை விரிகின்றது. அதில் கனகா என்ற பெயரில் இருக்கும் பெண்களைப் பற்றிய பல 'சுவாரசியமான' விடயங்களைச் சொல்கின்றார். அனுராதபுரத்தில் - பலருக்கு ஆசை நாயகியாக இருந்த sex bomb- கனகா, வடமராட்சியில் -'அட்டகாசமான மார்புகள் மற்றும் மேல்பாதியை எப்போதும் காற்றாட வைக்கும் - இன்னொரு கனகா என்று பல பேரைப் பற்றிக்கூறுகின்றார்.

(கட்டுரைக்கு அப்பால்) இதை விட ஈழத்தில் - இனப்பிரச்சினை தீவிரமாவதற்கு முன்னர்- முக்கியமாய் யாழ்ப்பாணத்தில் சிங்கள மற்றும் மலையகப்பிள்ளைகளை எல்லாவிதமாய் சுரண்டிய ஒரு 'மூத்த சமூகம்' நமக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதை நாமனைவரும் அறிவோம். போர் வந்து நம்மை அசைக்காவிட்டால் அந்த மற்றப்பக்க அத்தியாயம் தொடர்ந்து புதிது புதிது மாற்றப்பட்டு எழுதப்பட்டே கொண்டிருக்கும்.. கூடவே பல அப்பாவிகளின் வாழ்வு சீரழிக்கப்பட்டே கொண்டிருக்கும். ஆகவே எமது மூத்த தலைமுறை/பெற்றோர்கள் எந்தக்கூத்தையும் செய்யாது புனிதர்களாக இருந்தவர்களாகவுமில்லை. ஊருக்கொரு சண்டியர்களைப் பற்றி நாவலே எழுதக்கூடியவளவுக்கு சண்டியர்கள் ஒருகாலத்தில் ஈழத்தில் நிறைய இருந்திருக்கின்றார்கள் மட்டுமில்லை, இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர், சண்டியர்களும் சாதிவெறியர்களும் -ரெட் குரூப், தீனா குரூப், etc- என்று மீளவும் கோவணத்தை இறுக்கக்கட்டியபடி தலைநிமிர்ந்துமிருக்கின்றார்கள் என்பது அண்மைக்கால வரலாறு. எனவே தொடர்ச்சியாய் இவ்வாறு 'நல்ல விடயங்களை' நம்மினத்தின் மரபின் நீட்சியாய்க் கொண்டிருந்த நம் மூத்தோர்கள்தான்... அட நமது இளைய சந்ததி வீணாய்ப்போகின்றதென தொட்டதற்கெல்லாம் அலறிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதுகூடப் பரவாயில்லை, இந்த 'இரண்டு முத்தங்கள்' கட்டுரையை, கருணாகரமூர்த்தி எப்படி முடிக்கின்றார் எனப்பாருங்கள், ' ... வெட்டவெளியில் பட்டப்பகலில் ஒரு தமிழச்சி முத்தமிடுவதென்பது சற்று நெருடலைத் தந்தாலும், நான் சுளுக்கெடுக்கிறவனையும் வெகுவாக இரசித்தேன்' என்கிறார். கனகா என்கின்ற sex bomb..., காற்றாட மேற்பகுதியை தாரளமாய்த் திறந்து வைக்கின்ற வடமராட்சிக் கனகா... எல்லோரையும் தெரிந்த/இரசிக்கின்ற கருணாகரமூர்த்தியிற்கு ஒரு தமிழச்சி பட்டப்பகலில் வெட்டவெளியில் முத்தமிடுவது மட்டும் நெருடலைத் தருகின்றதே அது ஏன்? அங்கேதான் நமக்குள்ளிருக்கும் கலாசார அடிப்படைவாதம் பல்லிளிக்கத் தொடங்குகின்றது.


எங்கள் திருமணத்தில், மணப்பந்தலில் கூறைச்சேலையும் உடல்முழுக்க நகைகளையும் போட்டு வெட்கபட்டபடி இருக்கும் ஒரு மணப்பெண்ணைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், தேனிலவில் இந்தப் பெண் ஆடைகளையும் நகைகளையும் கழற்ற அனுமதிப்பாரா என்ற சந்தேகித்தால் கூட -நம் கலாசாரம் தெரியாத மேற்கத்தையவர் இப்படிக் கேட்கிறார்- பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் sex bomb கனகாக்களை எல்லாம் நன்கு தெரிந்த கருணாகரமூர்த்தியிற்கு தமிழ்ச்சி ஒருத்தி வெட்டவெளியில் முத்தமிடுவதைச் செரிக்கத்தான் கஷ்டமாயிருக்கின்றது. என்ன கொடுமையடா இது?

3.

கொல்லப்பட்ட Aqsa Parvez, வீட்டில் ஒரு ஆடை... வெளியில் பிடித்தமான ஆடை என்று அணிவது என்று அவர் மட்டுமே செயததில்லை. எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் வீட்டுக்குத்தெரியாமல் இருக்க என, பாடசாலையில் வந்து தொள்தொளவான ஆடைகள் மாற்றி -கறுப்பினத்தவர்களின் நாகரீகத்திற்கேற்ப- அணிந்ததைப் பார்த்திருக்கின்றேன். வளாகத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தாங்கள் தயாரித்தளித்த நாடகங்களில் கூட நண்பர்கள் பொதுவில் முன்வைத்திருக்கின்றார்கள். நான் காதில் கடுக்கன் போட்டுத்திரிந்த காலங்களில் - வீட்டால் அவ்வளவு பிரச்சினை வராது என்று தெரிந்தும்- ஒரு விதமான மனத்தடையோடே பெற்றோர்/சகோதரகளுக்கு முன் அதை அணியாமல் தவிர்த்திருக்கின்றேன். எனவே எல்லோரும் கலாசார அதிர்வுகளினூடாக நமக்குப் பிடித்ததைச் செய்யும்போது பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகத்தான் செய்கின்றோம்.

இந்த முஸ்லிம் பெண், வீட்டிலிருக்கமுடியாது என்று இரண்டாவது முறையாகவும் வீட்டை விட்டு வெளியேறி தனது உடமைகளை மீண்டும் சேகரிக்கச் சென்ற சமயமே கொல்லப்பட்டிருக்கின்றார். கொஞ்சம் நிதானமாகவும், வெளிப்படையாகவும் இந்த விடயத்தை இந்தப்பெண்ணின் குடும்பம் அணுகியிருந்தால் எத்தனையோ பேரின் வாழ்வு சிதையாமல் தடுத்திருக்கலாம் (குடும்பவன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் போகும் shelter ற்கு போவதான எண்ணத்தில் இந்தப்பெண் இருந்திருக்கின்றார் எனச்செய்திகள் கூறுகின்றன). சில வருடங்களுக்கு முன் இப்படித்தான் எனது தோழியொருவரின் தங்கை ஒருவர் வீட்டிலிருந்து காண்மற் போயிருந்தார். அந்தப்பெண்ணை அவர்களின் முழுக்குடும்பமே தேடிக்கொண்டிருந்தது (அந்த அந்தரமான பொழுதில் தோழியின் தாயார் என்னோடு உரையாடியபோது என்ன ஆறுதல் சொல்வதென்று தவிர்த்ததும் இப்போதும் நினைவினிலுண்டு). பிறகு தோழியின் சகோதரி ஒரு ஷெல்ட்டரின் இருக்கின்றார் என்றறிந்ததும் அந்தக்குடும்பம் நிம்மதியடைந்தது. வீட்டில் பெற்றோரால் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒடுக்குமுறை இல்லாதபோதும் இந்தப்பெண் அடிக்கடி வீட்டை விட்டு மறைவதும் வருவதுமாய் இருக்க, ஒருகட்டத்தில் ஷெல்ட்டரில் இருந்து அழைத்து வருவதை தோழியின் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் ஷெல்ட்டர் வாழ்வு நாம் நினைப்பது போல் அவ்வளவு இலகு அல்ல என்று உணர்ந்து பின்னாட்களில் அந்தப்பெண் தோழியின் குடும்பத்தோடு இணைந்துகொண்டார். இதே முறையை இந்த பாகிஸ்தானிய குடும்பத்தினர் செய்திருந்தால் ஒருவரின் வீணான மரணத்தைத் தடுத்திருக்கலாம். எங்கள் எல்லோருக்குள்ளும் அடிப்படைவாதம் இருக்கின்றது. அது மதம் சார்ந்தும் மொழி சார்ந்தும் சாதி சார்ந்தும் கூடவே வந்தபடி இருக்கின்றது. அதனுள் இருந்து எப்படி விடுபவது என்பதே நமக்கு முன்னாலுள்ள முக்கியமான கேள்வி. இந்தப்பிள்ளையும் பெற்றோரும் சமரசம் செய்யக்கூடிய ஒரு புள்ளி நிச்சயம் இருந்தேயிருக்கும். கனடா போன்ற பல்கலாசார சமூகத்தில் சகிப்பத்தன்மையோடு வாழ்கின்ற நாம் வன்முறையில்லாது எந்த விடயத்தையும் சமரசம் செய்துகொள்வதற்கான வெளி நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றது என்பதை ஏன் இலகுவில் நாமனைவரும் மறந்துபோய்விடுகின்றோம்?

எமதேயான நம்பிக்கைகள்/விருப்புக்கள் மட்டுமே மிகச்சரியாக இருக்குமென இறுக்கமடையும்போது நாம பிறர் உரையாவதற்கான வெளிகளை அடைத்தே விடுகின்றோம். நாம் எமது நம்பிக்கைளோடு, எமக்குப் பிடித்ததைச் செய்வற்கு சுதந்திரம் இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்களாயிருப்பின், அதே நம்பிக்கைகளோடு இருக்கவும் விரும்பியதைச் செய்யவும் பிறரிற்கும் உரிமை இருக்கின்றது என்பதை வசதியாய் மறந்துவிடுகிறோம். இங்கே தான் நினைத்ததே சரியென்று நினைத்த தந்தையொருவர் மகளை இழந்திருக்கின்றார், கொலைகாரர் ஆகியிருக்கின்றார். ஒரு குடும்பமே சின்னாபின்னமாகி நிற்கின்றது.

பத்து வ்ருடங்களுக்கு முன் நான் வானொலியில் கேட்ட பெற்றோர் X பிள்ளைகள் தலைமுறை இடைவெளி உரையாடல்கள் இன்று தமிழ்த் தொலைக்காட்சி வரையில் நீண்டுகொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். நிச்சயம் இதுவொரு நல்லவிடயமே. நாம் தொடர்ந்து த்லைமுறை இடைவெளிகள் பற்றியும், புதிய கலாசாரத்தைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் தொடர்ந்து உரையாடும்போதே பலவிடயங்கள் குறித்து நாம் தெளிந்துகொள்ள முடியும். ஆகக்குறைந்து ஒருவர் ஏற்கனவே செய்துவிட்ட தவறை நாம் இன்னொரு முறை திருப்பச் செய்யாது அதன் வலிகளிலிருந்து தப்பிப் போய்விடவாவதுமுடிகின்றது. நாம் எல்லோரும் பிறந்த நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தது அதைவிட செழிப்பான ஒரு வாழ்வைத்தேடித்தான்..எனவே அப்படியொரு வாழ்வை நாம் அமைக்க விரும்புகின்றபோது பலவற்றை விலத்தியும் சில்வற்றை நமது வாழ்வில் சேர்த்துக்கொள்ளலும் அவசியமாகின்றது. எந்த விடயம் என்றாலும் -அது மொழியாய் இருந்தாலென்ன, கலாசாரமாய் இருந்தாலென்ன, மதமாய் இருந்தாலென்ன- அது திணிக்கப்படாது இயல்பாய் உள்வாங்கப்படும்போதே அது நீடித்து நிற்கும். வற்புறுத்தித் திணிக்கப்படும் எதுவும் அதன் எதிர்விளைவை நாம் திணிப்பதைவிட இன்னும் மோசமாய்க் காட்டும் என்பதை ஒருபோதும் மறந்தோ/மறுத்தோ விடமுடியாது.

குறிப்புகள்:
- இதை பெற்றோர் X பிள்ளைகள் என்று இரண்டுபக்கமாய் எழுத விரும்பியிருந்தாலும், பிள்ளைகள் பக்கம் அதிகம் சார்ந்து நின்று எழுதியதாகத் தெரிகின்றது. ஒரு பெற்றோருக்கான அனுபவம் எனக்கில்லை என்பதால் இருக்கலாம்.
- ஒரு ஒழுங்கான அமைப்பிற்குள் கொண்டுவராமலே எழுத முயன்றேன். எனெனில் இவ்வாறான விடயங்களுக்கு முடிந்த முடிவென்பது எதுவுமேயில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்தும் அது தனித்துவமும் தனிப்பட்டதுமான விடயமாகும்.

- யாரோ ஒருவர், Aqsaவின் சம்பவத்தின் பிறகு, அனைவரும் முஸ்லிம்களின் ரக்ஸிகளைப் (taxi) புறக்கணிக்கவேண்டும் என எழுதியிருக்கின்றார். இவ்வாறான எதிர்ப்பிலிருக்கும் அரசியலையும் காழ்ப்புணர்வையும் நாம் மத/மொழி/கலாசார அடிப்படைவாதத்தை எதிர்ப்பதுபோல எதிர்க்கவே வேண்டும்.

அறிந்ததும் கரைந்ததும் குறித்து...

Tuesday, December 11, 2007

கரைதல்: .../.../...
ஃபிரைடா காலோ பற்றிய The Life and Times of Frida Kahlo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். Frida என்ற Salma Hayek நடித்த திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இவ் ஆவணப்படத்தில் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லைத்தான். எனினும் ஃபிரைடாவின் உறவினர்கள், மாணவர்கள், ஃபிரைடாவின் ஓவியங்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள், ஃபிரைடா உறவுகொண்டவர்கள் போன்ற மனிதர்களின் குரல்களினூடாகக் கேட்கும்போது ஃபிரைடா மீண்டும் உயிர்த்து வருவதான நினைப்பு வருகின்றது. 


இந்த ஆவணப்படத்தைப் பார்த்த சில நாட்களில் The Diary of Frida Kahlo: An intimate self-portrait என்ற ஃபிரைடாவின் அற்புதமான டயரிக்குறிப்பினை வாசிக்க முடிந்திருந்தது. ஓவியங்கள்/கவிதைகள்/உரைநடைகள் என ஃபிரைடா ஸ்பானிஸ் மொழியில் எழுதிய பக்கங்கள் அப்படியே அதில் பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது பகுதியாக ஆங்கில மொழிபெயர்ப்பும், ஃபிரைடா தனது குறிப்புகளை எழுதிய சந்தர்ப்பங்களுக்கான தொகுப்பாளரின் குறிப்புகளும் இன்னும் ஃபிரைடாவை அதிகம் அறிந்துகொள்ள வைக்கின்றன. 18 வயதில் மிகப்பெரும் விபத்தைச் சந்தித்து, கிட்டத்தட்ட 30ற்கும் மேலான அறுவைச்சிகிச்சைகளை தனது வாழ்க்கைக் காலத்தில் செய்து, கலகக்காரியாய் விளங்கிய ஃபிரைடா பற்றி முடிவில்லாது நிறைய எழுதிக்கொண்டேயிருக்கலாம். அதிக கலைஞர்களைப் போல ஃபிரைடாவும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் திறமைகளுக்காய் அடையாளங் காணப்பட்டவரல்ல. ஆனால் தனது குறுகியகால வாழ்வை (45 வருடங்கள்) கொண்டாடியவர் மட்டுமில்லாது தனது நாடு/கலாசாரம் மீது அதீத பற்றுயுடையவராகவும், ஒரு கொம்யூனிஸ்டாகவும் காலம் முழுவதும் இருந்தவர்.



ஒன்றிரண்டு விடயங்களையேனும் ஃபிரைடாவின் ஆளுமை குறித்துச் சொல்லவேண்டியிருக்கின்றது. அநேக கலைஞர்களுக்கு பிரான்ஸ், அமெரிக்கா மீதிருக்கும் மோகத்தைப்போல ஃபிரைடாவிற்கு இந்த நாடுகளுக்குச் சென்று வாழும் விருப்பு என்றுமே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகவும் அலுப்பைத்தருமிடங்கள இவைகளென நிராகரிக்கச் செய்கின்றார் எனத்தான் சொல்லவேண்டியிருக்கின்றது. அதுவும், பிரான்ஸிலுள்ள அறிவுஜீவிகள் பற்றிக்குறிப்பிடும்போது, 'இவர்கள் இரவிரவாய் கலாசாரம், புரட்சி, தத்துவம் என்று உரையாடிக்கொண்டேயிருப்பார்கள். விடியப்பார்க்கும்போது சாப்பிடுவதற்கு உணவு எதுவுமேயிருக்காது, எனெனில் இவர்களில் எவருமே வேலைக்குப்போவதில்லை' என்றும், அங்கிருக்கும் கலைஞர்களில் அநேகர் அலுப்பைத் தரக்கூடியவர்கள் எனவும் குறிப்பிட்டிருகின்றார். 


பெண்ணியம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், ஃபிரைடாவும் பெண்விடுதலைக்கு ஒரு குறியீடாய் முன்வைக்கப்பட்டார் என்று வாசித்திருக்கின்றேன். எந்த அடிப்படையில் பெண்ணியவாதிகள் ஃபிரைடாவை முன்வைத்தார்கள் என்று தெரியாதபோதும், ஆண்கள் வாழக்கூடிய வாழ்வை பெண்களும் கட்டற்ற சுதந்திரத்தோடு வாழமுடியும் என்பதற்கு ஃபிரைடா ஒரு யதார்த்த உதாரணம் என்ற புரிதலையே நான் எடுத்துக்கொள்கின்றேன் (சிமோன் தி பூவா இன்னொரு உதாரணம்). ஃபிரைடாவிற்கு -bi-sexualயாய்- பல ஆண்கள்/பெண்களோடு உறவுகளிலிருந்தாலும், அவர் அடிமனதில் ஒரு ஆணிற்காய்த்தான் (டியாகோ ரிவேரா) காலம் முழுக்க ஏங்கிக்கொண்டிருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். ...நீ எனது தோழன்/நீ எனது தந்தை/ நீ எனது துணை/ நீயே நான்/ நீயே பிரபஞ்சம்... என ரிவேராவிற்காய் உருகிக்கவிதைகளை ஃபிரைடா தனது டயரிக்குறிப்புகளில் எழுதியிருக்கின்றார்.

மற்றும் Salma Hayekன் ஃபிரைடா திரைப்படத்தில், ரொட்ஸ்கி (Trotsky), ஃபிரைடாவின் வீட்டை விட்டுப்போவதற்கு, ஃபிரைடாவோடான ரொட்ஸ்கியின் நெருக்கம் என்று காட்டப்பட்டபோதும், அது மட்டும் உண்மையாக இருக்கச் சாத்தியமில்லை. ஆரம்பத்தில் நான்காம் அகிலம்/ரொட்ஸ்கியோடு நெருக்கமாய் இருந்த ரிவேரா பின்னர் ரொட்ஸ்கியோடு முரண்படத்தொடங்கியதும் ரொட்ஸ்கி வேறிடம் நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் முரணாய், ரொட்ஸ்கியோடு ஃபிரைடாவிற்கு (ஃபிரைடாவின் சில ஓவியங்களில் ரொட்ஸ்கியிற்கும் இடமுண்டு) நெருக்கமிருந்தபோதும், மார்க்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ என்றுதான் குறிப்பிட்டு கம்யூனிசத்தை அடையாளப்படுத்துகின்றாரே தவிர, ரொட்ஸ்கியை அந்தப்பெயர்களுக்கிடையில் சேர்க்கவில்லை. இறுதிக்கால ஃபிரைடாவின் டயரிக்குறிப்புகளில் கூட ஸ்ராலினின் பெயரைக் குறிப்பிட்டு கம்யூனிசத்தைப் போற்றுகின்றாரே தவிர, ரொட்ஸ்கியைப் பற்றி எழுதிய எதையும் காணமுடியவில்லை..

ஃபிரைடாவின் ஓவியங்களே ஒரு சுயவரலாற்று நாவலுக்கு நிகரானதுதான். தன் சுயமழித்தல் மூலம் தன்னை அடையாளப்படுத்தும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மிகவும் உக்கிரம் வாய்ந்தவை. வரையப்பட்ட -150ற்கு மேற்பட்ட- ஓவியங்களில் மூன்றிலொரு பங்கு சுய ஓவியங்களே (self-portrait) என்பது கவனிக்கத்தக்கது. நிர்வாணமாய் வரையப்பட்ட ஓவியங்கள் கூட இச்சையைத் தூண்டுபவனவாயின்றி உடல் சார்ந்த வாதைகளை பார்ப்பவரிடையே படியவிடுபவை. நிர்வாண மொடல்களை வைத்து ஓவியங்கள் வரைந்த டியாகோ ரிவேராவிற்கு எதிர்ப்புள்ளியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஃபிரைடா முயன்றிருக்கின்றார் என்றும், தன் உடலை வெளிப்படையாக அதன் வலி/வாதைகளுடன் முன் வைக்கத் தயங்கவில்லை என்ற மாதிரியான வாசிப்புகளுக்கும் சாத்தியமுண்டு. அத்துடன் பிற கலைஞர்களால் நிர்வாணமாய் வரையப்படும் அதிகமான பெண்ணுடல்கள் அழகியல்தன்மையில் தான் வரையப்பட்டிருக்கின்றன/இரசிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் கவனத்திற்குரியது.

சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் மொன்ரியலில் வீடொன்று வாங்க முயற்சித்தபொழுதில், அவரோடு சேர்ந்து சில வீடுகளைப் பார்த்தபோது, சென்று பார்த்த ஒரு வீடு முழுவதும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டதைக் கண்டிருக்கின்றேன். இவ்வாறு உடல்சார்ந்த வாதையை அழுத்தமாய்ப் படிமமாக்கும் ஃபிரைடாவின் ஓவியங்களை எப்படித் தினமும் பார்த்துக்கொண்டு இயல்பான வாழ்வியலுக்குள் அலைந்து திரிய அந்த வீட்டிலிருப்பவர்களால் முடிகின்றது எனத்தான் வியந்திருக்கின்றேன்.

----------

அறிதல்: .../.../...
மனுசருக்கு சிரித்து சிரித்து ஆஸ்மா இழுக்கத் தொடங்குமா? மனம் விட்டுச் சிரித்தால் மட்டுமில்லை, நீண்ட நேரத்துக்கு தொலைபேசினால் கூட மூச்சிழுக்க அவஸ்த்தைப்பட்டு inhaler தேடவேண்டியதாகிப்போய்விடும் விசித்திரமான உடலமைப்பு எனக்குரித்தானது. சார்ளி சாப்பிளின், மொடர்ன் ரைமஸ் (modern times) பார்த்து வந்த சிரிப்பில் இரண்டு மூன்று முறை குறுகிய நேர இடைவெளியில் இன்கேலரை எடுக்கவேண்டியதாகிப்போய்விட்டது. இனியும் தொடர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால், மருந்து overdose ஆகிப்போய்விடும் என்ற பயத்தில் அரைகுறையில் நிறுத்திவிட்டு தூங்கப்போய்விட்டேன் (பிறகு இடைவெளி விட்டு விட்டு பார்த்துமுடித்தேன்). 1930களில் வந்த அந்தப்படத்தில் எவ்வளவு நவீனமாயும், நாசூக்காயும் விடயங்களைத் தட்டிக்கேட்டும் சாப்ளின் எடுத்திருக்கின்றார் என்று நினைக்கும்போது வியக்க முடியாமல் இருக்கமுடியவில்லை. மனிதர்களுக்குப் பதிலாய், இயந்திரங்கள் மாற்றீடு செய்வதை சமூக நோக்கோடு விமர்சிப்பதோடு, அதிகார அமைப்பை தொடர்ந்து கேலி செயதபடி (இங்கே பொலிஸ்) இந்தப்படத்தில் இருக்கின்றார். செம்மறியாட்டுக் கூட்டத்தைக் காட்டிவிட்டு அப்படியே சடுதியாக வேலைத்தளத்திலிருந்து வெளியேறும் மனிதக்கூட்டத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் ஆரம்பக்காட்சியே ஒரு அருமையான தொடக்கம். மந்தைக்கூட்டத்தில் இருக்கும் ஒரு கறுப்பாடு மாதிரித்தான், சாப்ளினும் சமூகத்தோடு ஒத்தியங்காத வெளியாளாக (outsider/other) இப்படம் முழுதும் -எல்லாவற்றையும் எள்ளல் செயதபடி- வருகின்றார்.



இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், படத்திற்கப்பால் இன்னொரு பிரதியாக விரியக்கூடியவை. அதுவும் மெளனக் காட்சிகளால் பார்ப்பவரை அப்படியே ஒன்றிக்க வைப்பது அவ்வளவு எளிதானதுமல்ல. இந்தப்படத்தில் பெண் பாத்திரமாய் நடிக்கும் Paulette Goddardயே நிஜவாழ்வில் சாப்ளினுக்கு துணையாக நீண்டகாலமாக இருந்தவர். இவர்களிருவரும் சேர்ந்து நடித்த இன்னொரு படம் The great dictator . Moderm Timesல் சில இடங்களில் உரையாடுவது மாதிரிக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் இறுதியில் அவையெல்லாம் வெட்டப்பட்டன என்பதும், வழமைபோல சாப்ளினின் படங்களில் அவர் தனியே போவது போலல்லாது அந்தப்பெண்ணோடு - வாழ்வு எவ்வளவு கடினமாயிருந்தாலும்- சேர்ந்து வாழ்வோமென நடந்துபோவதுடன் படம் முடிகின்றது. முதலில் எடுக்கப்பட்ட முடிவில், Paulette ஒரு கன்னியாஸ்திரியாவது மாதிரியும், சாப்ளின் தனியே பயணிப்பதாகவும் எடுக்கப்பட்டதாய் -படத்திற்குப்பின்பான காட்சிகள்- கூறுகின்றன. மொழிகளற்ற வெளியில் பலரது மனங்களை அசைத்துப்பார்த்த சாப்ளினின் படங்களைப் பார்க்கும்போது, இன்னமும் தமிழ்ச்சூழலில் சினிமா என்னும் ஊடகம் பொழுதுபோக்கிற்கு என்பதற்கு அப்பால நகராத நிலையை நினைக்கத்தான் பரிதாபமாய் இருக்கின்றது. திரைப்படங்களைப்போல, மொழிகளைத்தாண்டிச்சென்று எல்லோரோடும் உரையாடும் வலுவான ஊடகம் வேறு எதுவும் இருக்கின்றதா என்ன?

------

உரையாடல்: .../.../...
தான் சாப்பிடக்கூப்பிட்டாலின்றி உணவு மேசைக்கு ஒருபோதுமே வந்துசேராத எனது 'பெருமை' குறித்து அம்மா புலம்பிக்கொண்டிருந்தார். திரைப்படங்களை வெளியே பார்க்கப்போகும்போது மட்டுமே சாப்பிடப்போகின்றேன் என்று கேட்பவன் என்று உபரியாகவும் மெச்சிக்கொண்டிருந்தார். இப்படி 'திரைப்படம்' என்ற புள்ளியிலிருந்து அம்மாவின் கடந்த காலங்களுக்கு நனவிடை தோய்ந்து போக முடிந்திருந்தது. தானும், சித்தியுமாய் பல மணி நேரங்கள் பேருந்தில் பயணித்து யாழ் நகரத்திரையரங்குகளில் படம் பார்த்த காலங்கள் அவருக்குள் திரளத் தொடங்கியது; அப்படியே குடும்ப வரலாறுகளும்.

வெளியே ஸ்நோ பொழியத்தொடங்கியிருந்தது, சஞ்சிகையையொன்றைப் புரட்டிக்கொண்டு அம்மாவை பேசவிட்டிருந்தேன். கரையுடைத்த நதியாய் அம்மாவின் பால்ய காலங்கள நகரத் தொடங்கியிருந்தது. பல சுவாரசியங்கள் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் பனிக்குள்ளிலிருந்து இலைதுளிர்காலத்தில் துளிர்க்கும் செடிகளாய் அரும்பத்தொடங்கியிருந்தன. அம்மாவின் மாமா முறையான ஒருவர் குடியென்ற பெருங்கடலில் மூழ்கி முப்பத்தைந்து வயதிலேயே வாழ்வைத் தொலைத்திருக்கின்றார். கோர்ட்டில் வேலை செய்தபடியால் நன்கு குடித்துவிட்டு, தனது தோழர்களையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சாப்பிட வந்துவிடுவாராம். எந்த நேரமும் அவரின் துணைவியார் (அவாவை எனக்கு நினைவிருக்கிறது, சோடா மாமியென்று நாங்கள் அழைப்போம்) இரவு பகலென்று பாராது அவித்துக் கொட்டிக்கொண்டேயிருப்பாராம். குசினியை விட்டு வெளியே சோடாமாமி வருவதே அரிது என்றார் அம்மா. ஆனால் இவை அனைத்தும் அவரது துணை இறக்கும்வரை. துணை இறந்தபின் சோடா மாமி வாழ்வைக் கொண்டாடியிருக்கின்றார். எங்கள் குடும்பத்தில் அவரைப்போலத் திரையரங்குகளில் நிறையப்படம் பார்த்த ஆட்கள் குறைவு என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார் (அநேகமாய் யாழ் நகரிற்கு அவர் போனார் என்றால் என்று இரண்டு படங்களை ஒரேநாளில் பார்த்துவிட்டு வ்ருவாராம்)

அதேபோல், -ஈழத்தில்- எனக்குத் தெரிந்தவளவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இன்னொரு செய்தி ஆசசரியமாயிருந்தது. (ஆகக்குறைந்தது தனது பெயரை எழுதத தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நம்பியிருந்தேன்) எங்கள் மாமா முறையான ஒருவருக்கு கையொப்பம் இடவோ அல்லது துப்பரவாய் வாசிக்கவோ தெரியாது .... ஆனால் மனுசன் பயங்கர சுவாரசியமான மனிதராய் அவரது இளமைக்காலங்களில் இருந்திருக்கின்றார். நண்பர்களோடு சேர்ந்து இளநீர்க்குலை/ கள்ளுமுட்டி, களவாடுவது/வெட்டுவது (வீட்டில் பயங்கர அடிவிழுந்தாலும் அசட்டை செயவதில்லை) என்று பெரிய விளையாட்டு எல்லாம் செய்திருக்கின்றார். இது போதாது என்று வேள்விக்கு என்று யாரோ வளர்த்த கொழுகொழு கிடாயை ஒருமுறை இரவோடு இரவாய் களவெடுத்துக்கொண்டு போய் இவரும் இவரது நண்பர்களும் இறைச்சியடித்து விருந்துண்டிருக்கின்றார்கள். தமது கிடாயைக் காணாது, கிடாயை வளர்த்தவர்கள் மாமாவிலும் அவரது நண்பர்களிலும், ஐயம் வந்து இவர்களைத் தேடியபோது இவர்கள் நல்ல குடியோடும் விருந்துண்ட களைப்போடும் எங்கையோ படுத்துக்கிடந்திருக்கின்றார்களாம். கிடாய்க்காரன் மூளைசாலியாய் எல்லோரின் கைகளையும் பிடித்து முகர்ந்து முகர்ந்து பார்க்க -கறி வாசம் வருவதா என்று- இவர்கள் இன்னும் கண்ணை மூடிக்கிறக்கமாய் கிடந்திருக்கின்றார்கள். பிறகு நடந்தது... வழமைபோல நமக்குத் தெரிந்த கதைதான்.

அம்மா குடும்பத்தினர் முன்பு இருந்த வீடு மண்வீடானதால், வீட்டில் ஒரு அறையில் தன்னுடைய சேமிப்பையெல்லாம் ஒரு மாமா பேணிக்குள் போட்டு புதைத்துச் சேகரித்துக்கொண்டிருந்தாராம். (மண்ணில் புதைத்திருக்கும், ஆனால் தோண்டியெடுக்காமல் காசு போடலாம்/எடுக்கலாம்). காசு புதிது புதிதாய் போட்டாலும், தனது சேமிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டிருக்க, யாரோ தான் தங்கள் கைக்காரியத்தை காட்டுகின்றார்கள் என்று தெளிந்து வீட்டிலிருந்தவர்களிடம் மாமா விளக்கம் கேட்டிருக்கின்றார். எவருமே தாங்கள் எடுப்பதில்லையென 'உண்மை' பேசியிருக்கின்றார்கள். கள்ளனைப் பிடிக்கவேண்டும் என்பதற்காய் சேமிப்பு உண்டியலுக்குள் ஒரு தவளையைப் போட்டு விட்டிருக்கின்றார். இதையறியாது கைவிட்டு காரியத்தைச் செய்யப்போன இன்னொரு மாமா, அய்யோ பாம்பு என்னைக் கடித்துவிட்டதென கத்திய கத்தில் பல நாட் கள்ளன் ஒருநாள் பிடிபடுவானென -தவளையால்- பிடிபட்டாராம். இப்படி பல சுவாரசியமான கதைகளை அம்மா சொல்லிக்கொண்டே போனார். ஒரு கட்டத்தில், ஒரு நாவலாய் எழுதகூடிய அளவுக்கு உங்கள் குடும்பத்து வரலாறு சுவாரசியமாக இருக்கின்றதெனச் சொல்லிக்கொண்டேன். அம்மா புன்னகைத்துகொண்டார்; இப்போது மனதுக்குள் -அசுரக்காற்று அடிக்காது- தனித்து பூவைப்போல விழும் எனக்குப் பிடித்த பனி பொழியத் தொடங்கியிருந்தது.

-------------

பகிர்தல்: .../.../...
நாம் தொலைத்த வாழ்வு/சொந்த நாடு பற்றி எவரும் பேச/எழுதத்தொடங்கினால் நம்மைப்போல எந்த நாட்டையும் முழுதாய்ச் சொந்தங்கொண்டாட முடியாத நாடற்றவர்களுக்கு, மிகுந்த சுவாரசியமாய் இருக்குந்தானே. அப்படி இலயிப்புடன் வாசித்த ஒரு புதினம், இஸபெல் அலண்டேயின், My Invented Country: A Nostlagic Journey Through Chile. தொடர்ந்து வாசித்துக்கொண்டுபோகுபோது, சிலியில் இருக்கின்றானா அல்லது நான் பிறந்த நாட்டில்' இருக்கின்றேனா என்ற மாதிரியான உணர்வுகள் வருமளவுக்கு, கலாசாரம்/மனிதர்கள்/ நம்பிக்கைகள் பொதுவாய் இருந்தன. க்டவுள் நம்பிக்கை/சாத்திரம்/அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றில் மிகுந்த விருப்புடையதுபோல, பெண்களை ஒடுக்கிக்கொண்டும், உடலுறவு இன்னபிற பற்றி உரையாடுவதை tabooவாய் பார்ப்பதிலிருந்து அதிக ஒத்த தன்மைகள் தமிழர்களுக்கும், சிலி மக்களுக்கும் இருக்கின்றதெனத்தான் சொல்லவேண்டும். நனவிடைதோய்தலாய் இருந்தாலும், அளவுக்கதிகமாய் நாட்டுப்பாசத்தில் உருகிவிடாமல் விமர்சனங்கள் வைக்கவேண்டிய இடங்களில் இஸபெல் அலண்டே தனது நாடு பற்றி விமர்சிக்கவும் செய்கின்றார். ஸ்பானியர்கள் எவ்வாறு அங்கிருந்த பூர்வீகக்குடிகளை ஒழித்தார்கள், தங்களோடு வற்புறுத்திக் கலக்கச்செய்தார்கள் என்பது பற்றியும் விலாவரியாக இஸபெல எழுதுகின்றார்.


அவரின் மாமா முறையான சல்வடோர் அலெண்டே இடதுசாரி அரசை சிலியில் அமைத்தபோது, Paula என்ற பெண்களுக்கான க்லாசார இதழில் ஆசிரியப்பொறுப்பை இஸபெல அலண்டே ஏற்று, பெண்களுக்கான முக்கிய பிரச்சினைகளுக்கான உரையாடல்களை (domestic violence, abortion, diet, sex, etc) துணிச்சலாக -ஆண்களின் பலவிதமான விமர்சனங்களுக்கிடையில்- நிகழ்த்திக்காட்டியிருக்கின்றார் (பெண்ணியம் என்பது என்னவென்று அறியாமலே தானொரு கலகக்காரியாக -தனது தம்பிகளுக்கு கொடுக்கும் அனைத்தும் சலுகைகள் தனக்கும் கிடைக்கவேண்டுமென அடம்பிடித்த சம்பவங்களையும்/சிந்தனைகளையும் இஸபெல் நூலின் ஆரம்பக்கட்டங்களில் குறிப்பிடுகின்றார்). சல்வடோர் அலண்டேயைக் கவிழ்த்த சிஜஏயின் பெருமைகளை கிழிகிழியென்று இஸ்பெல் கிழிக்கின்றார். அதேபோல், சல்வடோர் அலண்டே முன்வைத்த சில சீர்திருத்தங்கள் அவர் நினைத்தற்கு எதிர்மாறான சில விளைவுகளை மக்களிடையே கொண்டுவந்தது என உண்மைகளைப் பேசவும் செய்கின்றார் (வாழ்க்கைச்செலவு ச்டுதியாகக்கூடியது). அலெண்டேயின் காலத்தில், ஒவ்வொரு நாளும் பாண் வாங்கப்போகும்போது பாணின் விலை அதிகரித்துக்கொண்டுபோவது இன்னபிற பிரச்சினைகளைப்பற்றியும் பேசுகின்றார். எனினும் உண்மையான அக்கறையோடு நாட்டுக்கு உழைக்க விரும்பிய சல்வடோர் அலண்டேயிற்கு உரிய இடம் கொடுக்கப்பட்டே இஸபெல எழுதுகின்றார் (இன்றைய பொழுதில் வெனிசுலாவில் சாவோஸிற்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை ஒப்பிட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கு உண்டு). பிறகு இராணுவக்கிளர்ச்சியில் General Pinochet, சிலி மக்களுக்கு சிஜஏயின் உதவியுடன் நல்லாட்சி கொடுத்தது கடந்தகாலத்தின் மறக்கமுடியாத வரலாறு. இராணுவக்கிளர்ச்சியில் தானும் கொல்லப்படக்கூடுமென்ற பயத்தில் வெனிசுலாவிற்கு இஸபெல் புலம்பெயர்கின்றார். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் அங்கே வாழ்ந்த அவருக்கு நாடு விட்டு வந்த கவலை, ஒழுங்காய் வேலை கிடைக்காத மன அழுத்தம் என்ற இன்னபிறவற்றை அகதியொருவரின் நிலையில் நின்று இஸ்பெல விபரிக்கின்றார் (இலத்தீன் அமெரிக்காவில் அநேக நாடுகளில் ஸ்பானிஷ் மொழியாக இருந்தாலும் அதன் வித்தியாசம்/கலாசாரம்/ இன்னபிற நுண்ணிய அவதானங்களை சிலி X வெனிசுலாவை வைத்து இஸபெல் எழுதுகின்றார். ஒரே மொழி/கலாசாரம் ஒன்றாகவேவிருக்கும் இஸ்பெலிற்கே இத்தனை பிரசிச்னைகள்/அழுத்தங்கள் வரும்போது மொழி/கலாசாரம் அவ்வாறு பழக்கப்டாத, புலம்பெயர்ந்த எம்மைப்போன்ற அகதிகளின் survival கதைகள் விரிவாக பதிவுசெய்யப்படக்கூடியவை.



தனது கடைசிப்பெயரில் அலெண்டே என்ற இடதுசாரியின் பெயரை வைத்துக்கொண்டும், தான் இப்போது ஏன் கலிபோர்ணியாவில் இருக்கின்றேனென வாசகர்கள் நீங்கள் கேள்விக்கேட்கக்கூடுமெனவும் கூறி இஸபெல -தனது காதலால் மட்டுமே- இடம்பெயர்ந்தேன் என்று காரணம் கூறி, தனது துணை பப்புவா நியூகினியாவில் இருந்தால் தான் அங்கேதான் வசித்துக்கொண்டிருப்பேன் எனக்கூறுகின்றார். அதைவிட அமெரிக்காவில் தான் முழுதாக ஒட்டமுடியாத காரண்ங்களை விரிவாக இந்நூலில் குறிப்பிடுகின்றார். அமெரிக்க்ர்கள் எல்லாவற்றிலும் விரைவுதான், அது உணவாயிருந்தால் என்ன, உடலுறவாயிருந்தால் என்ன? எல்லாமே வேகந்தானென எள்ளலுடன் எழுதுகின்றார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம், பிரைவேசி காப்பற்றப்படுவதில் அமெரிக்கா தனக்குப்பிடித்திருக்கின்றது எனவும், எனினும் தன்னைப்போல ஒருவர் தெருவில் இறந்துகிடந்தால் கூட அதைக்கவனிக்காமல் போகக்கூடியவர்களாய் நிறைய அமெரிக்கர்கள் இருக்கின்றார்களெனவும் இஸபெல குறிப்பிடுகின்றார். அதேபோல் அமெரிக்காவில் இருக்குகின்ற இனத்துவேசத்தைப்பற்றியும் குறிப்பிடும் இஸபெல் அதேவேளை தங்கள் நாட்டைப்போல துவேசத்தை இயல்பென (சிலி மக்களுக்கு அரபியர்கள்/ஆசியர்கள் மீது வெறுப்பிருக்கிறதென்கிறார்) ஏற்றுக்கொள்ளாது, அமெரிக்க மக்கள் அதுகுறிதத விழிப்புணர்வுடன் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அது தனக்கு நிறைவாயிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.

பலவிதமான் சுவாரசியமாய் சம்பவங்களை இப்புதினத்தில் இஸ்பெல் கூறியிருந்தாலும், சல்வடோர் அலெண்டேயைப் பற்றிக்கூறத்தொடங்கியபின் தான் நான் மிகுந்த சுவாரசியமாய் வாசிக்கத்தொடங்கினேன் இந்த நனவிடைதோயதலில் நேரடியாக வாசகரோடு உரையாடுவதான தொனியில் இஸபெல எழுதிக்கொண்டுபோவது புதினத்தோடு இன்னும் ஒன்றிணைந்துபோகின்றது. இஸபெல அலண்டேயைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலிப்பெண்மணி ஒருவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, தற்சமயம் சிலியில் பெண் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சிலியில் கலாசாரத்துக்குப்பொறுப்பான முக்கியமான பதவியில் இஸபெல் நியமிக்கபப்ட்டிருக்கின்றார் என்று கூறிக்கொண்டிருந்தார். இன்னும் எனக்கு வாசிப்பதற்கு இஸ்பெல அலண்டேயின் நாவல்கள் தன்னிடம் இருந்தாலும் -ஒரு நூலைத்தவிர- மிகுதி அனைத்தும் ஸ்பானிஸில் இருக்கின்றதென்றார் (இஸபெல் ஸ்பானிஸில்தான் எழுதுகின்றார், ஆங்கிலம் அவருக்கு அவ்வளவு பரீட்சயமில்லை). பிறகு இஸபெல அலெண்டே, Paula என்ற இளவயதில் (28 வயதில்) நோயால இறந்துபோன அவரது மகளைப் பற்றி எழுதிய நாவலான Paula பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். தான் அந்நூலை வாசித்த காலத்தில் அந்நாவலின் தாக்கத்தால் தான் அழுதுகூட இருக்கின்றேன் என்றும் இப்போதும் அந்நாவலை நினைத்தால் ஏதோ செய்கின்ற மாதிரியாய் இருக்கின்றதென்றார். இப்படி வேற்றுமொழி நண்பர்க்ளிடம் உரையாடுகின்ற சந்தர்ப்பத்தில்தான் எங்கள் மொழியிலும் நல்ல எழுத்துக்கள் இருக்கின்ற்ன எனக்கூறி உரையாட எமக்கு அவ்வளவாய் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் இல்லையென்ற உண்மை உறைக்கின்றது.
........

பார்த்தவை/வாசித்தவை பற்றிய சில பகிர்தல்கள்

Thursday, November 22, 2007

கனடாவில் பிடிக்காத விடயங்கள் எவையென்று கேட்டால் பட்டியலிடுவதற்கு நூற்றுக்கு மேலான விடயங்கள் உண்டு...ஆனால் பிடித்த விடயங்கள் எவையென்று யோசித்தால், ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்களையும், திரைப்படங்களையும் உடனேயே வாசிக்க/பார்க்க முடியும் என்பதையே முதன்மையான விடயமாய்ச் சொல்வேனென நண்பரொருவருக்குக் கூறிக்கொண்டிருந்தேன். நூலகத்திற்கு வாசித்து முடிக்கமுன்னர் திருப்பிக் கொடுக்கவேண்டிய நூற்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க, வீட்டிலிருக்கும்போது ஒன்று, சப்வேயில் பயணிக்கும்போது இன்னொன்று, மதியவுணவுவேளைகளில் மற்றொன்று என இடாலோ கால்வினோவின் The Castle of Crossed Destinies , எம்.ஜி.வசாஞ்ஜியின் The Assassin's Song, உம்பர்ட்டோ ஈகோவின் The Mysterious Flame of Queen Loana என்று 'பன்முகமாய்' -இறுதியில் மிஞ்சப்போவது எதுவுமேயில்லையெனத் தெரிந்தாலும்- வாசித்துக்கொண்டிருக்கின்றேன். மற்ற இருவரும் தமது கதையுலகில் எளிதாய் அனுமதித்த அளவிற்கு, கால்வினோ, அடர்ந்த காடுகள் தாண்டி, மொழிகள் எதுவுமின்றி அமைதியாக்கப்பட்ட கோட்டையிற்குள் அவ்வளவு எளிதாய் நுழைய அனுமதிக்கின்றாரில்லை ( Tarot சீட்டுக்கள் அடுக்குதல்/குலைத்து மீள அடுக்குதல் முறை மூலம் கதை கூறப்படுகின்றது) என்பதால் எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறு நேற்று நூலகத்திற்குச் சென்றபோது, அங்கே வேலை செய்துகொண்டிருந்த -எந்நேரமும் புன்னகைத்துக் கொண்டிருக்கும்- பெண்ணின் சிரிப்பால் உந்தப்பட்டு, மார்க்வெஸ்ஸின், 'கொலராக் காலத்தில் காதல்' (Love in the time of Cholera) நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன்.

இத்திரைப்படம், பதின்மத்தில் இழந்த காதலிற்காய், ஐம்பது வருடங்களுக்கு மேலாய் காத்திருக்கும் ஒரு ஆணின் வாழ்வைக் கூறுகின்றது. பல விதமான திருப்பங்கள், சிக்கவிழ்க்கும் முடிச்சுகள், சுவாரசியமான முடிவு என வழக்கமான சினிமாவை எதிர்ப்பார்க்கும் ஒரு இரசிகருக்கு பார்ப்பதற்கு இப்படத்தில் எதுவுமேயில்லை. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்தைய வாழ்வுமுறைக்குப் பழக்கமானோர் இன்னொரு கலாசாரத்தை விளங்கிக்கொள்ளும் சகிப்புத்தன்மையுடன் இருந்தால் மட்டுமே இப்படத்திற்குள் நுழையமுடியும். இல்லாவிட்டால் காதலிற்காய் அழுகின்றவனையும், அம்மாவோடு அளவிறந்த அன்போடு இறுதிக்காலம் வரை இருப்பவனையும் அவ்வளவு இலகுவாய் ஏற்றுக்கொண்டு இரசிக்க முடியுமா என்ன?



கதையைக் கூறத்தொடங்கினால், அது நமது தமிழ்ச்சூழலிற்கு அண்மையாக வரக்கூடிய காதற்கதைதான். ஆனால் அதை முடியும்வரை பார்க்கமுடிவது மார்க்வெஸின் கதை சொல்லும் முறைமையும், கூடவேயிருக்கும் எள்ளலுந்தான். தனது தொலைந்துபோன காதலி திரும்பிவரும்வரை வேர்ஜினிட்டியோடு(?) இருப்பேன் என்று தொடகத்தில் சிவப்பு விளக்கிற்குப்பகுதியிற்குப் போய்க்கூட எவரோடும் உடலுறவுகொள்ள மறுக்கின்ற/அடம்பிடிக்கின்ற கதையின் நாயகன், பிறகு உறவுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையோ அறுநூற்றிற்கு மேற்பட்டவை ( நாயகனின் வார்த்தைகளில் இன்னும் திருத்தமாகக் கூறுவதனால் 622). இப்படியிருந்தாலும், தனது முதற்காதலியின் நினைவால் எவரையும் முறைப்படி 'திருமணஞ் செய்யாமல் இருக்கின்றார். நாயகி ஒரு வைத்தியரைத் திருமணம் செய்து வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவரின் கணவன் எப்போது சாவான், தான் தன் காதலியோடு சேர்ந்து எப்போது வாழலாம் என்று எதிர்ப்பார்க்கின்ற -அவளைக் கவர்ந்திழுந்துக்கொண்டுபோக விரும்பாத- ஒருவர்தான் எங்களின் நாயகன். ஒருகட்டத்தில் இவருக்குப் பயம் கூட வருகின்றது, தான் தனது காதலியின் கணவனைவிட விரைவில் வயது முதிர்ந்தவனாகிக்கொண்டிருப்பதாகவும், அவரிற்கு முன் தான் இறந்து காதலியோடு வாழ முடியாமற்போய்விடுமோ என்றும்.. நாயகன் தபால் அலுவலகத்தில் வேலை செய்பவர். தனக்கு இன்னும் கிடைக்காத காதலியை மனதில் இருத்திக்கொண்டு உபதொழிலாக பிறருக்கு காதற்கடிதங்களும் எழுதிக்கொடுப்பவர். நகைச்சுவை என்னவென்றால், இவர் யாருக்காகவே கடிதங்கள் எழுதுகின்றாரோ அவர்களின் -எழுதப்படிக்கத்தெரியாத- காதலிகளே இவரிடம் கொடுத்து -இவர்தான் அக்கடிதத்தை எழுதியதை அறியாது- இவர் வாயாலே திருப்பி வாசிக்கக் கேட்பது.

ஐம்பது வருடங்களுக்கு பின்னராவது அவரது முதற்காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதை படத்தை இனி பார்க்கப்போகின்றவர்களுக்காய் விட்டுவிடுவோம். படத்தின் ஒளிப்பதிவு மிக அற்புதமாய் இருக்கின்றது. இலத்தீன் அமெரிக்கா/மெக்சிக்கோ கலாசாரத்திலிருந்து வந்த ஒரு நெறியாள்கையாளர் எடுத்திருந்தால் இந்தப்படம் இன்னும் ஆழமாய் மனதைத் தொட்டிருக்குமோ என இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றியது. அதைவிட மார்க்வெஸின் மூலப்பிரதி எழுதப்பட்ட ஸ்பானிஷ் மொழியிலேயே பாத்திரங்களை உரையாடவிட்டிருந்தால் படம் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கலாம். ஏனெனில் சில ஆங்கில உரையாடல்கள் நாடகப்பாணியாய் அந்தரமூட்டுகின்றது (சொல்லப்பட்ட வார்த்தைகளை மீண்டும் சொல்வதிலுள்ள சிக்கல்போலும்). எனினும் அப்பாவியாய் நடமாடிக்கொண்டு 'மன்மதராசனாட்டம்' வாழ்க்கையை அதன்போக்கில் இரசிக்கும் கிழவருக்கும், பிரைடாவின் ஓவியங்களையும், கஜோலையும் கலந்து குழைத்த நாயகியின் வனப்புக்குமாய்...மிகவும் இரசித்துத்தான் பார்த்தேன எனத்தான் சொல்லவேண்டும்.

----------------

சில வாரங்களுக்கு முன், We Own the Night என்ற குப்பைப் படமொன்றைப் பார்த்திருந்தேன் (பொலிஸ்/இராணுவம் போன்றவற்றை அளவுக்கதிகமாய் புனிதமாக்கும் படங்கள் என்றால் ஏன் எரிச்சல் வருகின்றது என்பது உளவியலோடு சம்பந்தப்பட்டதென் நினைக்கின்றேன்). ஆகக்குறைந்தது எனக்குப் பிடித்த கியூபாக்காரியான இவா மெண்டிஸாவது (Eva Mendes) ஒரளவாவிற்காவது நடித்திருப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தால், baby baby என்று husky குரலில் ஃபீனிக்ஸின் (Joaquin Phoenix) வாலாய் மட்டும் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து, Honey, could you please shut up your mouth...Its so annoying என்றுதான் அவரைப் பார்த்தும் சொல்லவேண்டியதாகிப் போய்விட்டிருந்தது. இதற்கு மாறாய் திரையரங்கிற்கு வந்த நாளன்றே பார்த்த American Gangster நல்ல கதையம்சமான படம் என்பதைவிட, டென்சில் வாஷிங்டன், ரஸல் குரோ போன்றவர்கள் திறமையான நடிப்பால் படத்தை இறுதிவரை சலிப்பின்றி நகர்த்திக்கொண்டு சென்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். BETயில் (Black Entertainment Television) American Gangsters என்ற seriesல் இரத்தமும் சதையுமாய் வரும் gangstersகளின் கதைகளை ஒருவர் பார்த்திருந்தால், இந்தப்படத்தில் பார்ப்பதற்கு வித்தியாசமாய் அவருக்கு எதுவுமேயில்லை (இப்படம்கூட நியூயோர்க்கில் மில்லியன் கணக்கில் hustle செய்து வாழ்ந்த ஒருவரின் சொந்தக்கதையை அடிப்படையாகக் கொண்டதுதான்). என்னைப் பொறுத்தவரை படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் ஒன்றுதான்... வியட்நாம் போர்க்காலத்தில் இந்த gangster அங்கிருந்தே போதை மருந்துகளை நல்ல 'pure quality'யாய் கடத்தியெடுத்துக் கொண்டுவந்து அமெரிக்காவில் விநியோகிக்கின்றார். அதை கடத்த அனுசரணையாக இருப்பதும் அமெரிக்க இராணுவந்தான்...போதைப் பொருட்கள் வ்ந்து இறங்குவதும் அமெரிக்க இராணுவத்தின் விமாங்களில்தான். இதையேன் சொல்கின்றேன் என்றால், வியட்நாம் போர்க்காலத்தோடு மட்டும் போதைப்பொருட்களை கடத்துவது/ உள்ளூர் மக்களை ஓபியம் செடிகளை பயிரிட ஊக்குவிப்பதென்று நமது அமெரிக்க கதாநாயகர்கள் நின்றுவிடவில்லை, அந்த வள்ளல் தன்மை இன்றுவரை ஆப்கானிஸ்தான் என்று பரவிப்ப் பெருகியுள்ளதெனச் சுட்டிக்காட்டதான்.



பிபிஸி செய்திகளைப் பார்த்துகொண்டிருந்தால், ஆப்கானிஸ்தானில் வளர்ந்துகொண்டிருக்கும் ஒபியத்தின் அளவு, அண்மைக்காலங்களில் எவ்வளவு அதிகரித்துக்கொண்டிருக்கின்றது என்ற புள்ளிவிபரங்கள் தெளிவாக விளங்கும். இதைவிட நகைச்சுவை என்னவென்றால், நமது கனடாப்படையினர் ஆப்கானிஸ்தானில் 'தீவிரவாததை' ஒழிக்கும் கடமைகளில் தீவிரமாய் ஈடுபடுகின்றார்கள்தானே. அவர்கள் அங்கே எந்தக்கேள்விகளுமில்லாது 'தீவிரவாதி'களைச் சுட்டுக்கொன்றாலும், ஓபியம் போன்றவை வளர்கின்ற இடங்களைக்காண்கின்றபோது மட்டும் அது நமக்கான வேலையில்லையென நழுவிச்சென்றுவிடுகின்றாக்ள். அதுவும் நியாயந்தான், 'தீவிரவாதிகளை' கொல்லும்போது எவருக்கும் பதில் சொல்லவேண்டியிருக்காது (நாமும் இங்கிருந்து கொண்டு ஓ.. இன்றைக்கு 'தீவிரவாதிகள்' இறந்துபோனது கொஞ்சம் குறைவாய்/கூடுதலாய் இருக்கின்றதென இழக்கப்பட்ட மனிதவுயிர்களை எண்ணிக்கையால் மட்டும் மதிப்பிட்டபடி அடுத்த வேலைக்கு நகர்ந்து கொள்ளலாம்.) ஆனால் குளுகுளுவென்று மொட்டோடும் பூவோடும் செழுமையாக வளர்ந்த ஒபியம் செடிகளை நமது வீரர்கள் அழித்தால் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஓபியத்தை வளர்க்கச் சொன்னவனுக்கு, அதை ஏற்றுமதி செய்கின்றவனுக்கு, விநியோகிப்பவனுக்கு, வாங்கிப் புகைப்பவனுக்கு என்று இடியப்பச் சிக்கல் நிறைந்த வலை அல்லவா அது? எனக்கெனனவோ போகின்றபோக்கில் புஷ் போன்றவர்கள் எண்ணெய வியாபாரத்தை மறந்துவிட்டு, போதை மருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களை விரைவில் தொடங்குவார்கள் போலவிருக்கிறது. சிஜஏயினரும், கொலம்பியா போன்ற இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் தாங்கள் போதை மருந்து வியாபாரத்திற்காய், அங்கிருக்க்கும் இடதுசாரி போராளிக்குழுக்களோடு தனவாமல், ஆபான்கனிஸ்தான் போன்ற இடங்களில் monopoly யாய் சர்வாதிகார ஆட்டங்களை நிகழ்த்தி ஆசுவாசப்படுத்தலாம் எனச் சந்தோசப்படவும் கூடும். கனடாவில், பாடசாலை மாணவர்களிடையே, சிகரெட் பிடிப்பதைவிட, போதை மருந்து பாவிக்கும் வீதம் அதிகரித்து வருகின்றதென அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.. எனவே ஆப்கானிஸ்தானில் கனடாப் படை இருப்பது கனடாவின் எதிர்காலத்திற்கு 'வளம்' சேர்ப்பதாய்த்தான் இருக்கும். இப்போதைக்கு கனடாப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிப்பெறுவதில்லையென உறுதியாய் நிற்கும் வலதுசாரிக்கொள்கையுடைய அதிவணக்கத்திற்குரிய பிரதமர் ஹார்ப்பரின் கைகளை நாமும் வலுப்படுத்தவேண்டியதுதான். இப்படியொரு குட்டி புஷ் கனடா மக்களுக்குக் கிடைப்பது அவ்வளவு எளிதா என்ன?

----------

வேல் என்றொரு வீணாய்ப்போன வீச்சரிவாள் படத்தைத் தியேட்டருக்குப் போய்ப் பார்த்தேன். எல்லாம் அஸினால் வந்த வினை. இப்படியான படங்களில்தான் அஸின் நடிக்கப்போகின்றார் என்றால், வேறு யாராவது நடிகைக்கு இரசிகனாய் மாறுவதைப் பற்றி யோசிக்கவேண்டி வருமென அஸினுக்கு எச்சரிக்கை செய்யவேண்டியிருக்கின்றது. தொப்புளை வஞ்சகமில்லாது காட்டிக்கொண்டிருக்கும் ஷ்ரேயாவுக்குக் கூட நடிப்பதற்கென படங்களில் சில காட்சிகளாவது உண்டு. அஸின் சேச்சியை விரைவில் ஆச்சிகளின்/அப்பத்தாக்களின் பட்டியலில் சேர்க்கவேண்டிய நிலைதான் வரும்போல. இதைவிட ஹரி என்ற இயக்குநரிற்கு தமிழகத்தில் யாராவது ஒருவர் கத்தியைக் காட்டி இனி வீச்சரிவாள் படம் எடுத்தாய் என்றால் சீவிடுவேன் என்று பயமுறுத்தினால் நாங்கள் கொஞ்சக்காலத்துக்கு நிம்மதியாய் இருக்கலாம்.



கற்றது தமிழ் குறித்து உயிர்மையில் சாரு எழுதியதை இடைமறித்து சிலதை எழுதலாம் என்று உயிர்மை வாசித்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு, எப்போதும் குறுக்கு கேள்விகள் கேட்டே காலம் வீணாகிக் கொண்டிருக்கின்றதென்பதால் கையரிப்பை அடக்க முயற்சித்தாலும் அடங்கமாட்டேன் என்கின்றது.. சாரு தனது விமர்சனத்தில் எழுதியது அவரது பார்வை என்ற விதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென்றாலும், அவர் பார்க்கும் பார்வையில் மட்டுமல்ல வேறு கோணங்களிலும் பார்க்கமுடியும் என்பதற்காகவேனும் சிலதைச் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் சாரு, ஏன் இந்த நாயகனுக்கு மட்டும் ஒரே துன்பமாய் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது என்று ஒரு கேள்வியைக் கேட்டு அலுப்படைந்துகொள்கின்றார் (தொடர்ந்து ஒரு மனிதனை கெடுதிகள் மட்டுமே துரத்திக்கொண்டிருக்குமா என்ன? (ப 16)). அதை, நாம் ஏன் அந்த நாயகனிற்கு மகிழ்ச்சியைக் கொண்டாடுவதை விட துன்பரமான நிகழ்வுகள்தான் அதிகம் பாதிக்கின்றது என்றொரு வாசிப்பாய்க் கொள்ளலாமே எனக் கேட்கவும் முடியுந்தானே. உதாரணத்திற்கு ஈழ/புலம்பெயர் படைப்புகள் குறித்து தமிழகத்திலிருந்து வரும் அதிக விமர்சனங்களில், ஒரே அழுகையாய்/சோகமாய்தான் இவர்கள் படைப்புக்கள் இருக்கின்றதென்ற் stereo typed குரல்களை நினைவூட்டிக்கொள்ளலாம்.. இங்கே துன்பமாய்/துயரமாய் 'மட்டுமே' ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வு இருக்கின்றதென அர்த்தப்படுத்திக்கொள்ள் முடியாது. நமக்கும் சந்தோசிக்க/நெகிழ/கொண்டாட என நிறைய விடயங்கள் நம் வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனால் அவற்றைவிட நமக்கு நமக்கான துயரங்கள்தான் அதிகம் பாதிக்கின்றது. அதனாற்றான் படைப்புக்களில் அதிகம் துயரம் தெறிக்கின்றன என்றமாதிரியான உரையாடல்களுக்கும் சாத்தியமுண்டு. தமிழகத்தில் ஆரம்பத்தில் சோகத்தை/துயரத்தை அதிகமும் படியவிட்ட தலித் படைப்புகள் வந்ததையும் பிறகு கொண்டாட்டமான பக்கங்களுள்ள தலித் அத்தியாயங்கள் பதிவுசெய்யப்படும் சூழல் கனிந்துகொண்டிருப்பதும் நமக்கு முன்னாலிருக்கும் நிகழ்கால உதாரணங்கள் (மற்றும் நல்ல இலக்கியங்கள் முகிழ்ந்த நாடுகளில் எல்லாம் போர்க்காலத்தில் அல்ல, போருக்குப்பின்னால் தான் அவ்விலக்கியங்கள் வந்திருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. இடாலோ கால்வினோ கூட, தனது முதல் நாவலான The path to the spiders' nestsஐ மூன்றாவது முறையாகத் திருத்தி வெளியிட்ட முகவுரையில் கூட முதற்பிரதியிலிருக்கும் 'குறைபாடுகளுக்கு' இரண்டாம் உலகம்காயுத்தச்சூழலிருந்து தான் வெளியே வராததும் ஒரு காரணமென்று குறிப்பிடுகின்றார்). சரி கற்றது தமிழ்ற்கு மீண்டு/மீண்டும் வருவோம், எனவே இப்படியான பார்வையில் நாயகனை அதிகம் பாதிக்கும் துயரங்களை முன்னிலைப்படுத்துவதால் சந்தோசங்களின்/கொண்டாட்டங்களின் பக்கம் மறைக்கப்பட்டிருக்கலாமென ஒருவர் விபரிக்கவும் கூடும்.


இரண்டாவதாக சாரு கவலைப்படுவது, நாயகன் சைக்கோவாக இருக்கின்றானா அல்லது சமூகம் மீதான கோபத்துடன் இருக்கின்றானா என்ற தெளிவை பாரவையாளருக்கு இயக்குநர் தரவில்லை என்பது. பின் நவீனத்துவத்தை கரைத்துக்குடித்தவர் என்று 'நம்பப்படுகின்ற' சாரு கூட இப்படியான தெளிவான எல்லைக்கோட்டை இயக்குநர் தரவேண்டும் என்று புலம்புவது நமக்கு புன்னகையை வரவழைக்கிறது. தெளிவான எல்லைக்கோடுகள் நமக்கு அவசியமா சாரு? கறுப்பு வெள்ளையாய் பார்த்து பார்த்தே பழக்கப்பட்டு எல்லாவற்றையும் ஏதோவொன்றுக்குள் குறுக்கிக்கொண்டிருப்பதற்கு எதிராய்க் 'கலகம்' செய்யவேண்டிய எண்ணங்களுடைய நபரல்லவா நீங்கள்? சமூகம் மீதான அக்கறையுடையவன் அதன் மீதான சலிப்பின் நீட்சியில் சைக்கோவாக மாறமுடியாதா என்ன? அல்லது இரண்டும் கலந்த ஒரு மனிதவுயிர் யதார்த்ததில் சாத்தியப்படாதா என்ன? 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே' என்ற மாதிரி, பாரிஸில் வாழாத வாழ்வென்ன என அடிக்கடி ஆதங்கப்படும் -பிரான்ஸில் வலதுசாரி தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தபின்னும் அந்த ஜடியா உங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை- உங்களுக்கு பிரெஞ்சு இலக்கியத்தோடு நிச்சயம் பரீட்சயமிருக்கும். இந்தப்பிரதியை வாசித்துப்பாருங்கள். அந்தப்பெணகள் ஒரு கொலையைத் தவிர்க்கமுடியாது ஆரம்பித்து பிறகு விளையாட்டாய் காரணங்களின்றி எல்லோரையும் போட்டுத் தள்ளுகின்றார்கள். அதொரு புனைவென ஒதுக்கித் தள்ளிவிடவும் கூடும். சரி அதை விடுங்கள். அண்மையில் அமெரிக்காவில் வளைகுடாப் போரில் பங்குபற்றி வந்தவர் I'm the God என்று கடிதங்களையனுப்பி காருக்குள்ளிருந்து பத்துக்கு மேற்ப்பட்டவர்களை போட்டுத்தள்ளி வாரக்கணக்குகளில் அந்த நகர் முழுவதையுமே கதி கலக்கிக்கொண்டிருக்கின்றாரே, அவர் சைக்கோகாவும் இல்லை, சமூகம் மீதான கோபத்திலுமில்லை என்றுதான் ஆரம்பப் பரிசோதனைகள் செப்பியனவே...எனவே எவரும் எப்படியிருக்கவும்/மாறவும் வாய்ப்புக்கள் உண்டு.

அதைவிடக்கொடுமையானது நீங்கள் இப்படத்தில் இப்படியான தெளிவில்லாததால் pleasure of the text இல்லை என்று குறிப்பிடுவது(இப்படத்தின் எந்த இடத்திலும் pleasure of the text என்பதே இல்லை. சம்பவங்களில் உள்ள நம்பகத்தன்மை கதையில் இல்லாமல் போனது இதற்குக் காரணமாய் இருக்கலாம் -p 21-). சாரு, நீங்கள் இதற்கு முன் விதந்தோத்திய குருவில் எந்த pleasure of the text கண்டீர்கள் என்று அகழ்ந்தெடுத்துச் சொன்னால் நாங்களும் உரையாடமுடியும். (வளர்மதி குறிப்பிட்டதுமாதிரி, பார்த்தின் pleasure of the text இலக்கியப்பிரதிகளை மட்டுமே கவனத்தில் கொண்டு எழுதப்பட்டது என்பதை விளங்கிக்கொண்டாலும்/ஏற்றுக்கொண்டாலும், சில ஆசிரியர்கள் பாடத்திட்டத்தில் மட்டுமேயுள்ளதே படி; வேறொன்றையும் படிக்கக்கூடாது என்பது மாதிரி பார்த்தின் please of the textஐ வேறிடங்களில் பிரயோகிக்க முடியாததென்ற வளர்மதியின் குறிப்புகளில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. ஆனால் அதேசமயம் வளர்மதி கூறுவது மாதிரி ஒவ்வொன்றுக்குமான வித்தியாசங்களைப் புரிந்துகொள்கின்றேன். அதனூடாகவே பார்த்தின் pleasure of the text ஐ எழுதப்பட்ட பிரதியிற்கப்பால் வேறிடங்களிலும் பொருத்திப்பார்க்க முடியுமென நம்புகின்றேன். வளர்மதி நிச்சயம் நாம் இது குறித்து தொடர்ந்து உரையாடுவோம்).சாரு மகிழ்ச்சியாய்க் கொண்டாடிய குருவில், அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட இருவர் படத்தில் இருக்கும் erotic தன்மை கூட வரவில்லையெனக் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருக்கின்றது. உதாரணத்திற்கு, மோகன்லாலிற்கு ஐஸ்வர்யா அறிமுகமாமாகும் ஹலோ மிஸ்ர(ட)ர் எதிர்க்கட்சி என்ற பாடலும், பிரகாஷ்ராஜ் தபுவிற்கு(?) மரணப்படுக்கையிலும் மறக்காது கணமணி என்று கூறுகின்ற கவிதையும் வருகின்ற இருவர் காட்சிகளிலிருக்கும் pleasure of the text
குருவில் இல்லையென்றுதான் கூறுவேன். அத்தோடு, pleasure of the text 'கற்றது தமிழில்' இருக்கின்றது என்பதை இன்னொரு கோணத்தில் ...The pleasure of the text is on the contrary like a sudden obliteration of the warrior value, a momentary desqumation of the writer's hackels, a suspension of the "heart" (of courage) p30) என்ற பார்த்தின் வரிகளை வைத்தும் ஒருவர் உரையாடமுடியும். இவற்றை வேறு வகையான பார்வைகளும் சாத்தியமுண்டு என்று கூறுவதற்காய்க் குறிப்பிடுகின்றேனே தவிர சாரு அக்கறையுடன் எழுதிய அந்த விமர்சனத்தை நிராகரிக்கும் எண்ணமேதுமில்லை என மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

----------------------

அவ்வளவு அவசியமில்லையென்றாலும், சொல்லவேண்டுமென விரும்பிய இன்னொரு விடயம்....நான் நினைத்ததுபோலவே 'அம்முவாகிய நான்' படத்திற்கு காலச்சுவடு, உயிர்மை என் எல்லாவற்றிலும் நமது சிற்றிதழ் அறிவுஜீவிகள் விளாசியிருந்தார்கள். சிலர் எதையாவது கருத்தைச் சொல்ல/எழுதப்போகின்றார்கள் என்றால் அவர்கள் எப்படிச் சொல்லப்போகின்றார்கள் என்பது முன்கூட்டியே விளங்குவதுபோல, இந்தச் சிற்றிதழ்காரர்கள் தமிழ்ப்படங்களுக்கு எப்படியொரு விமர்சனம் எழுதுவார்கள் என்பது எளிதாகப் புரிந்துவிடுகின்ற ஒரு சூத்திரந்தான். 'அம்முவாகிய நான், ஒரு ஆணாதிக்கப்பிரதி என்பதிலோ விமர்சிக்கப்படவேண்டியதில்லை என்பதிலோ மாற்றுக்கருத்துக்களில்லை. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண்களில் எத்தனைபேர் ஆணாதிக்க்கூறுகளில் அக்கறையெடுத்து விலத்தி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையே விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கின்றபோது, ஆண் குறிகளின் அசைவில் எல்லாமே அசைந்துக்கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமாவில் (அண்மையில் படமொன்றுக்காய் வெளிக்களப்படப்பிடிப்பிற்கு சென்ற நணபர் சொன்ன கதைகளிலிருந்தும்) ஆணாதிக்கக்கூறுகளற்ற ஒரு முழுமையான பிரதியை எழுதுதல் நிகழ்காலத்தில் சாத்தியமா என்பதை யோசித்துப்பார்த்தால் 'அம்முவாகிய நானை' முற்றாக நிராகரிக்கமுடியாது.

பருத்திவீரன், மொழி போன்ற படங்களை ஆகா என்று கொண்டாடிய சிற்றிதழ்களை/அறிவுஜீவிகளை லிவிங் ஸ்மைல் வித்யா போன்றோர் வைத்த விமர்சனப்புள்ளிகளை வைத்தே சிற்றிதழ்காரர்கள் கட்டியமைத்தவற்றை ஆட்டங்காணச்செய்யமுடியும். ஒரு ஆணின் பார்வையில் விளிம்புநிலை மனிதரையும் சகமனிதராய் -ஆணாதிக்கக்கூறுகளுடன் - ஏற்றுக்கொள்ள முயற்சிக்கின்ற அம்முவாகிய நானை.., இப்படி மூர்க்கமாய் சிற்றிதழ்க்காரர்களால நிராகரிக்கப்படவேண்டிய அவசியமே அற்றதுதான் எனத்தான் மீளவும் சொல்ல வேண்டியிருக்கிறது. (அண்மையில் இந்தியிலும், ராணி முகர்ஜியும், கொங்கனா சென்னும் நடித்த படமொன்று -பெயர் நினைவினில்லை- பார்த்திருந்தேன். முடிவு சற்று ஃபான்சியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாகும் ஒரு பெண்ணைப்பற்றிக் கதை என்றளவில் முக்கியமானதே)

அத்தோடு 'அம்முவாகிய நான்' வெள்ளி விழாக்கண்டு ஓடப்போவதோ அல்லது அதில் நடித்த பார்த்திபன் நட்சத்திர அந்தஸ்தோ இல்லாத நடிகராயிருப்பதால் இந்தப்படம் தமிழ்ச்சமூகத்தில் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. நாம் யாரை நோக்கி இன்னும் கடுமையாக விமர்சனங்களை வைக்கவேண்டும் என்றால் நட்சத்திர அந்தஸ்தோடு தமது படங்களில் பெண்களுக்கு கலாசாரத்தைப் போதிப்பவர்களுக்கும், கதாநாயகிகளுக்கு கையை உயர்த்தி அடிப்பவர்களுக்கும், ஒதுக்கியே விடப்பட்ட அரவாணிகளை வம்புக்கு இழுத்து கேலிச்செய்யும் காட்சிகளையும் 'நகைச்சுவை', 'தமிழ்கலாசாரம்' என்ற போர்வைக்குள் தந்துகொண்டிருக்கும் கதாநாயகர்கள்/பிரதிகள் மீதுதான். மேலும் விஜய, ரஜினி,சிம்பு போன்றோரின் ஸ்ரைலில் ஈர்க்கப்பட்டு அதைச் சிறுவயதிலிருந்தே பார்க்கும் குழந்தைகள் எப்படி இந்த விடயங்களையும் 'இயல்பாய்' உள்வாங்கி விளிம்புநிலை மனிதர்கள் குறித்து அக்கறையில்லாது வளரப்போகின்றார்கள் என்பதைக் குறித்தே நாம் உரையாடலகளை இடையறாது செய்யவேண்டியிருக்கின்றது.

பொழுதுபோக்கோ நகைச்சுவையோ என்ன இழவோ இவர்கள் தமக்கு விரும்பியதைத் தரட்டும். ஆனால் எதற்காக பெண்கள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மனிதர்களை தொடர்ந்தும் இழிவுக்குள்ளாக்குகின்றார்கள்? இவர்களும் இவர்களை இயக்கும் இயக்குநர்களுந்தான் தமிழ் சினிமாவின் தலைவிதியை நிர்ணயித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதால் இவர்கள் மீதுதான் கடுமையான விமர்சனங்கள வைக்கப்படவேண்டும். பாலா, செல்வராகவன் போன்ற இயக்குநர்கள் அதிக கவனம் செலுத்தி வளர்த்துவிட்ட சூர்யா, விகரம், தனுஷ் போன்றவர்கள் வெட்டரிவாளோடு கமர்ஷியல் வேடம் போட்டு 'சூப்பர் ஸ்டார்களாகும்' வசனங்களோடு வருவது குறித்துத்தான் நாம் அதிகம் கவலைப்படவேண்டும் (விரைவில் ஜீவாவிற்கு அப்படியொரு 'அசம்பாவிதம்' நிகழாதிருக்க கோடம்பாக்கம் பிள்ளையார் காப்பாற்றுவராக).

உதவியவை/வாசித்தவை:
(1) உயிர்மை - நவம்பர்
(2) காலச்சுவடு - நவம்பர் & ஒக்ரோபர்
(3) Pleasure of the Text, Roland Barthes
(3) அய்யனார், இ.கா.வள்ளி, ஜமாலன் போன்றோரின் 'கற்றது தமிழ்' குறித்த பதிவுகள்
(4) சன்னாசியின், Living to Tell the Tale பதிவு
(5) Critisms and Truth, Roland Barthes
(6) தியேட்டரில் பார்த்த Love in the time of Cholera, American Gangster, Vel
(7) DVD யில் நல்ல தெளிவாய் இருந்த 'கற்றது தமிழ்', 'அம்முவாகிய நான்'
(8) ஒரு பெண் அடிக்கடி எழும்பி எழும்பி ஒழுங்காய்ப் பார்க்கமுடியாது மறைத்த கள்ளக்கொப்பி 'அழகிய தமிழ் மகன்'
'

தொலைந்தவர்களின் வேர்களைத் தேடியலையும் குறிப்புகள்

Thursday, November 15, 2007

-Running in the Family மற்றும் Coming through Slaughter புதினங்களை முன்வைத்து-

1.
மொழியை, கலாசாரத்தை, குடும்பங்களை காலங்காலமாய் மக்கள் தொலைத்தபடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். போர்/பொருளாதார வசதிகள் எனப் பல காரணங்களிலிருப்பினும், உலகமயமாதலின் துரிதகதியால் இவ்வாறு இழந்துகொண்டிருப்பது வெகு சாதாரண நிகழ்வாய் இன்றையபொழுதுகளில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. எனினும் தமது கலாசார/குடும்ப வேர்களைத்தேடி -கடந்துபோன காலத்தின் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன்- சிலர் பூமிப்பந்தின் மூலைகளெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தனது தொலைந்துவிட்ட/திசைக்கொன்றாய் சிதறிவிட்ட குடும்பத்தின் வேர்களைத் தேடி மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையிற்குப் போவதை சற்றுப் புனைவுகலந்த சுயசரிதைத் தன்மையில் Running in the Familyயில் எழுதியிருக்கின்றார்.



நிகழ்காலமும், கடந்தகாலமும் ஓர் ஒழுங்கில்லாது குலைக்கப்பட்டு அடுக்கபபட்டு, கவிதைகள், எவர் சொல்கின்றார்கள் என்ற அடையாளமின்றிய உரையாடல்கள் எனப்பல்வேறு எழுத்துமுறைகளினால் கதை சொல்லப்பட்டுப் போகின்றது. குடியைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமில்லையோ என எண்ணுமளவிற்கு ஒண்டாஜ்ஜி குடும்பத்தினர் நிறையக் குடிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர்க்கான குடும்பம், பிள்ளைகளென இருந்தாலும், பல்வேறு affairs (தகாத உறவு எனச்சொல்வது அவ்வளவு சரியாக இருக்காதென நினைக்கின்றேன்) குறுக்கும் நெடுக்குமாய் முகிழ்ந்தும்/குலைந்தபடியும் இருக்கின்றன. அந்த affairsஐ எல்லாம் சாதாரணமானது என்று ஏற்றுக்கொள்ளும்படியாக குழந்தைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றார்கள். நன்றாக்க் குடித்து அடிக்கடி கற்பனையே செய்துபார்க்கமுடியாத கலகங்கள் செய்யும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் (மெர்வின் ஒண்டாஜ்ஜி) தன்னைத் தமிழரெனவே அடையாளப்படுத்த விரும்புகின்றார். பேர்கர் இனத்தவர்களாக (டச், தமிழ், சிங்களம் என்ற பல்லினக்கலப்பு) இருப்பினும், இந்துமதப்படித்தான் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் தாயினது திருமணம் நடைபெறுகின்றது.

மெர்வின் ஒண்டாஜ்ஜியின் கலகங்கள் கொழும்பிலிருந்து கண்டிக்குப் புகையிரதத்தில் பயணிப்பவர்களிடையே பிரசித்தமானது. கொழும்பில் இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் ஒருமுறை, ரெயின் புறப்பட்ட ஒரு மணித்திய்யாலத்தில் சாரதியைத்(?) துப்பாக்கிகாட்டி மிரட்டி, தனக்குத் தனியப்பயணிக்க அலுப்பாயிருக்கிறது கொழும்பிலிருந்து தனது நண்பனை அழைத்துவாருங்கள் எனக்கூறுகின்றார். நண்பர் வரும்வரை இரண்டு மணித்தியாலங்கள் ரெயின் காத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும்,வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ரெயினிலிருந்து சேற்று வயற்காணிகளுக்குள் குதிப்பது, கடுகண்ணாவை குகையிருட்டுக்குள் ஆடையைக் கழற்றி நிர்வாணமாய் நின்று ரெயினை மேலே செல்லவிடாது தடுப்பதென..., குடியோடும்/குடியின்றியும் என்று மெர்வினது அட்டகாசங்கள் மிக நீண்டவை. ஒருமுறை, அவரைக் கேகாலையிலிருந்து மதியுவுணக்க்கு மீன் வாங்கிவருகவென வீட்டிலிருந்து அனுப்ப, மனுசன் இரண்டு நாட்களின்பின், திருகோணமலையிலிருந்து ஒரு தந்தி அடிக்கின்றார். 'மீன்கள் கிடைத்துவிட்டன விரைவில் அவற்றோடு திரும்புகிறேன்...' இப்படி பயங்கர சுவாரசியமான மனிதராய் மெர்வின் ஒண்டாஜ்ஜி இருக்கின்றார். ஒரு கட்டத்திற்குப்பிறகு இவரது கலகங்களால் இவர் இலங்கைப் புகையிரதங்களில் பயணம் செய்யவே கூடாதெனற தடையே இவருக்கு எதிராக வருகின்றது.

oooooooooooo


கொழும்பின் கோடைக்காலங்களில் வெயிலிருந்து தப்புவதற்காய், மலையகப்பகுதியில் வேறு வீடுகள் வைத்து அங்கே தங்கும் வசதியுடையவர்களாய், நுவரெலியாவில் நடக்கும் குதிரைப்பந்தயங்களில் சூதாடுபவர்களாய், தமது குடும்பங்களிடையே அதிக செல்வாக்குள்ளவராய் இருப்பவர்கள் யாரென்று காட்டுவதற்காய் சொந்தமாய்க் குதிரைகள் வளர்ப்பவர்களாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பத்தினர்/உறவினர்கள் மிகுந்த வசதியுடன் இருக்கின்றார்கள். எனினும் அளவிற்கதிமான குடிப்பழக்கத்தால், ஒண்டாஜ்ஜியின் தகப்பனும் தாயும் விவாகரத்துப் பெறுகின்றார்கள். ஒண்டாஜ்ஜியின் தாயார் எந்த உதவியும் தகப்பனிடம் பெறாமல் இங்கிலாந்து சென்று உழைத்து கஷ்டங்களுடன் பிள்ளைகளை வளர்க்கின்றார் (செல்வாக்கான குடும்பம் குடிப்பழக்கம்/விவாகரத்தோடு வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது). இலங்கையை விட்டு தாய், சகோதரகள் புறப்பட்ட பின்னரும் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது பதினொரு வயது வரை இலங்கையில் இருக்கின்றார். அவரது தகப்பன் மெர்வின் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கோழிப்பண்ணையொன்றைச் சொந்தமாய் நடத்துகின்றார். விடுமுறைக்காலங்களில் தகப்பனோடும், உடன்பிறவாச் சகோதரிகளோடும் மைக்கல் ஒண்டாஜ்ஜி பொழுதுகளைக் கழிக்கின்றார்.

வேர்களைத் தேடி இருபத்தைந்து வருடங்களுப்பின் இலங்கை செல்லும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் இந்தப்புதினத்தில் ஒண்டாஜ்ஜியின் தகப்பனாரும், அவரது அம்மம்மாவுமே அதிகம் பேசப்படுகின்றார்கள். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் அம்மம்மா, இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் பல ஆண்களோடு உறவுகள் வைத்திருந்தவர். அவ்வாறான உறவுகளுக்கும்/இரகசியச் சந்திப்புக்களுக்கும் இவர்களின் வீடுகளைச் சூழவிருக்கும் கறுவாத்தோட்டங்களே உதவிபுரிகின்றது (மைக்கல் ஒண்டாஜ்ஜியின் cinnaman peeler என்ற கவிதைகூட அதை 'நாசூக்காய்ப்' பேசுகின்றது). அம்மம்மா அவ்வளவாய் பேரப்பிள்ளைகளோடு ஒட்டாதவர்; இறுதிவரை தனது சொந்தக்காலில் நின்றவர். அவரது -நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிப்போகும்- மரணம் கூட நெகிழ்வுதரக்கூடியது. அம்மம்மாவிற்கு மத்தியவயதிலேயே இடது மார்பகம் நோயின் காரணத்தால் நீககப்பட, cushion ஆன ஒருவகை செயற்கை மார்பகத்தையே பாவிக்கின்றார். அது பலமுறை தொலைந்துபோவதும், தொலைந்து போகின்ற கதைகளும் சுவாரசியமானவை. ஒருமுறை அதைக் கழற்றி வைத்திருக்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் வளர்க்கும் நாய் அதை எடுத்துச் சென்று நாசமாக்கி விடுகின்றது. மாமியாருக்கும் மருமகனுக்குமான உறவில் அவ்வளவு சுமுகமில்லையாததால், மெர்வின் ஒண்டாஜ்ஜி திட்டமிட்டே நாயைப் பழகி நுட்பமாய் பழிதீர்த்துக்கொண்டார் என்ற ஒரு கதை அக்குடும்பத்தினருக்கிடையில் இருக்கின்றது. இன்னொருமுறை, பெற்றா (Pettah) பஸ்சிலிருந்து வரும்போது, பக்கத்தில் இருக்கும் ஒரு ஆண் இடது முலையைத் தடவிக்கொண்டு வருவதையும் அதுகுறித்து பிரக்ஞையின்றி இந்தப்பெண்மணி (லைலா) தன்பாட்டில் இருப்பதையும் கண்டு பஸ்சிலிருப்பவர்கள் திகைக்கின்றார்கள்.

oooooooooooo

மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையைவிட்டு வெளியேறியபின் தனது தகப்பன் -மெர்வின்- குறித்து பிறர் கூறுவதையே இப்புதினத்தின் பிற்பகுதியில் குறிப்பிடுகின்றார். உடன்பிறவாச் சகோதரி சூஸன், மெர்வின் குறித்து மிக நெகிழ்வான பல சம்பவங்களைக் குறிப்பிடுக்கின்றார். தனனில் மிகுந்த அன்பும் அக்கறையும் உடையவராய்... தன்னோடு மிகுந்த நெருக்கமாய் தந்தையிருந்தவர் என்கின்றார் சூஸன். தனக்கு சிறுவயதில் தெரிந்த தகப்பன் வேறு, பிறகிருந்த தகப்பன் வேறு என்ற புரிதல் ஒண்டாஜ்ஜியிற்கு வருகின்றது. தன்னையும், தனது சகோதர்களைப் போலவன்றி நிதானமாய், கோபப்படாது மென்மையாப் பேசும் உடன்பிறவாச்சகோதரி சூஸனைப் பார்க்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியிற்கு தனக்குத் தனது தாயின் குணங்கள் கடத்தபட்டிருக்கவேண்டும், சூஸனிற்கு தகப்பனின் பாதிப்பிருக்கலாம் என்று நினைத்துக்கொள்கின்றார். எனினும் குடியை இறுதிவரை விடாதிருந்த மெர்வின் தனது இறப்பிற்கான ஒருவருடத்தின்முன் அனைத்திலிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்தி மிகுந்த வெறுமையுடன் பொழுதைக் கழித்திருக்கின்றாரென்ற குறிப்பும் இருக்கின்றது.

இப்புதினத்தில் ஜேவிபியின் எழுபதாம் ஆண்டு கிளர்ச்சி பற்றிய குறிப்புகள் வருகின்றது. மிக இளம்வயதில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் மதிப்புடன் நினைவுக்கூரப்படுகின்றார். சிலோன் பலகலைக்கழகம் முற்றுகையிடப்பட்டு அங்கே தஞ்சம் புகுந்திருந்த கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுவர்களில் தாங்கள் சாவதற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளும் புரட்சி பற்றிய நம்பிக்கைகளும் சிகிரியா ஓவியங்கள் போல பாதுகாப்பட்டிருக்கவேண்டுமென ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் (அவை அவ்வாறு செய்ய்ப்படவில்லை என்பது வேறுவிடயம்). சேர் ஜோன் கொத்தலாவையோடு காலையுணவு சாப்பிட்டு உரையாடியது, பாப்லோ நெருடா இலங்கையில் இருந்தபோது தங்களது வீட்டில் அவ்வப்போது வந்து விருந்துண்டவை எனப் பல விதமான சம்பவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. வில்பத்துக்காட்டில் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது குடும்பத்தோடும் உறவுகளோடும் தங்கி நின்ற சில நாட்களைப்பற்றிய குறிப்புகள் ஒரு அழகான கவிதைக்கு நிகராய் வாசிக்கப்படவேண்டியது.


இச்சுயசரிதைப் புனைவை, ஒருவித நகைச்சுவையுடன் ஆனால் வாழ்வைக் கொண்டாடுகின்றவிதமாய் மைக்கல் ஒண்டாஜ்ஜி எழுதியிருக்கின்றார். மரணங்களுக்காய் கூட அதிகம் ஒண்டாஜ்ஜி நேரமெடுத்து கவலைப்பட்டு பக்கங்களை வீணாக்கிவிடவில்லை. எப்போதும் தகப்பன்களிற்கும், மகன்களிற்குமான உறவு சிக்கலானதுதான். ஒரளவு பிள்ளைகள் வளர்ந்தவுடன் பெரும் இடைவெளியை காலம் குறுக்கே வேலியைப்போலப்போட்டுவிட்டுச் சிரிக்கத்தொடங்கிவிடுகின்றது. தமது பிரதிமையை தங்களது மகன்களில் பார்க்கத்தொடங்கி பின்னர் அவர்கள் வளர்கின்றபோது தமக்கான வீழ்ச்சி தமது மகன்களிலிருந்து தொடங்கிவிட்டதென அநேக தகப்பன்மார்கள் நினைப்பது கூட இவ்விரிசலை இன்னும் அதிகரிக்கச்செய்கின்றதெனவும் உளவியல்ரீதியான ஆய்வுகள் கூறிக்கொண்டிருக்கின்றன. எனினும் அவ்வாறான இடைவெளியே ஒவ்வொரு மகனுக்கும் தனது தகப்பனைப்பற்றி அறிந்துகொள்ளும் சுவாரசியத்தை (curioristy?) கூட்டுகின்றனபோலும். மேலும் அந்த மகன்களும் தகப்பன்களாகும்போது, தாம் தமது தகப்பன்களுக்குச் செயததையே தமது பிள்ளைகளும் தமக்குச் செய்துவிடுவார்களோ என்ற பதட்டம் பிற்காலத்தில் தந்தைமாரை ஒருவித பாவமன்னிப்புத்தொனியில் அவதானிக்க வைக்கின்றதாய் இருக்கவும் கூடும். அந்தப்பதட்டமே மைக்கல் ஒண்டாஜ்ஜியை தனது வேர்களைத் தேடி இலங்கைச் செல்லவும் பதிவு செய்யவும் தூண்டிவிட்டிருக்கவும் கூடும். பேச்சை விட எழுத்தே ஆழம் மிக்கதென ழாக் டெரிதா முன்வைத்தற்கு உதாரணமாய், ஒரு சாதாரண மனிதராய் வாழ்வின் பக்கங்களிலிருந்து நழுவிப்போயிருக்கக்கூடிய மெர்வின், மைக்கல் ஒண்டாஜ்ஜியின் மூலம் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார். புதிது புதிதாய் வாசிப்புக்கள் இப்பிரதி மீது நிகழ்த்தப்படுகின்றபோது, மீண்டும் மீண்டும் மெர்வின் நினைவுகூரப்படப்போகின்றார்.

இப்புதினத்தின் பலவீனம் என்று பார்க்கும்போது, வேர்களைத் தேடிய பயணத்தில் தகப்பன் மட்டுமே நிறைய இடங்களை ஆக்கிரமித்துவிடுவது வாசிப்பவருக்கு சிலவேளைகளில் அலுப்பைத் தரக்கூடும். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தாய் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவாகவே வருகின்றது. சிலவேளைகளில் மெர்வின் ஒண்டாஜ்ஜி போல சுவாரசியம் தரக்கூடிய ஒரு ஆகிருதியாக தாய் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். இதைவிட முக்கிய பலவீனம் என்னவென்றால், இந்நூல் ஒரு படித்த மேற்தட்டுவர்க்கப் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பம் வேர்களை ஆழப்பதித்திருந்தாலும், ஒருவித அந்நியர்களாகவே இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். கறுவாத்தோட்டம் முதல், நுவரெலியா, கண்டி என்று மலையகப்பகுதிகள் வரை சித்தரிப்புக்கள் இருந்தாலும், அந்த மலையகத் தோட்ட மக்களின் இருண்ட வாழ்வு பதிவுசெய்யப்படவேயில்லை. ஜேவிபியின் கிளர்ச்சி பற்றிக்கூட அக்கறை கொள்கின்ற ஒண்டாஜ்ஜி, பல நூற்றாண்டுகளாய் நுகத்தடி மனிதர்களாய் எல்லோராலும் கைவிடப்பட்ட அம்மக்கள் பற்றி தனது பார்வையை அக்கறையுடன் சற்றுக்கூடத் திருப்பினாரில்லை (குதிரைப் பந்தயத்தில் சூதாடுகின்ற பகுதிகளில் மட்டும் இவ் அடித்தள மக்கள் குறித்த சிறு குறிப்புகள் வருகின்றன).


2.
Coming Through Slaughter அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஜாஸ் கலைஞனைப் பின் தொடர்ந்து சென்று பார்க்கும் கதை. ஜாஸில் மிகப்பெரும் ஆளுமையாக வரவேண்டிய ஒரு கலைஞன் (Buddy Bolden) தனது 31 வயதில் மனப்பிறழ்வுக்காகி இருபது வருடங்களுக்கு மேலாய் மனநிலை வைத்தியசாலையில் கழித்து இறந்துபோவதை இப்புதினம் பேசுகின்றது. ஜாஸ் குறித்த ஆரம்பப் புரிதலகளும், நிறையப் பொறுமையும் இல்லாதவிடத்து இந்நூலை வாசித்தல் அவ்வளவு இலகுவில்லை. நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது (இதே கதை சொல்லல் முறைதான் பின்னர் Running in the familyயில் சொல்லப்பட்டாலும், இங்கு அது இன்னும் நிறைய வலைப்பின்னலகளாய்/சிக்கலாய் இருக்கின்றது). சில இடங்களில் Boldenனின் மூலமாக, வேறு சில இடங்களில் பிற பாத்திரங்கள் ஊடாக, சிலவேளைகளில் நூலாசிரியரின் பார்வையினூடாக எனக்கதை பலவேறு திசைகளில் நகர்த்தபடுகின்றது.


ஒரு ஜாஸ் கலைஞனாக இருக்கும் போல்டன் அதேவேளை ஒரு சவரத்தொழிலாளியாகவும் இருக்கின்றார். நமது ஊர்களிலுள்ள கொண்டாட்டமான/விவாதங்கள நடைபெறுகின்ற சலூன்கள் போலவே கறுப்பினத்தவர்களின் சவரக்கடைகளும் இருக்கின்றன. (Barber shop போன்ற அண்மைய கோலிவுட் படங்களும், பல ராப் பாடல்களும் இதை இன்னும் நுணுக்காய்க் காட்டுகின்றன). ஜாஸ் கலைஞர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்குமான உறவுகள் அச்சமூகத்தில் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஒவ்வொருவருடமும் கிரிக்கெட் (The Cricket) என்று நகரிலுள்ள விலைமாதர்களின் விபரங்க்ளுடன் தகவல் சஞ்சிகை கூட வெளியிடப்படுகின்றது. அவ்வாறு ஒரு விலைமாதராய் இருந்த நோராவுடன் போல்டன் வாழத்தொடங்குகின்றார். சலூன் கடை, ஜாஸ் இசைத்தலென இருக்கும் போல்டனுக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றன. அவ்வாறான காலப்பகுதியில், நோராவின் முன்னாள் காதலுலனும், 'மாமா' வேலை செய்துகொண்டிருந்த Pickett ஐ -அவருக்கு இன்னும் நோராவுடன் தொடர்பிருகிறது என்றறிந்து- கத்தியால் முகம், மார்பெங்கும் குத்தி காயப்படுத்திவிட்டு, போல்டன் தப்பியோடி இன்னொரு காதலியான ரொபினோடு வாழத் தொடங்குகின்றார். ஆனால் முரண்நகையாக ரொபின் ஏற்கனவே திருமணமானவர். ரொபின் தனது கணவனோடு இருக்கும் வீட்டிலேயே போல்டனும் வாழ்கின்றார். தனது கோபத்தை/காமம் இல்லாத பொழுதை, ரொபினின் கணவன் வெறியுடன் பியானோ வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கின்றார். ஒரு பெண்ணுடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்கியிருப்பதும், ஒரு பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பிருப்பதும் அங்கே 'வித்தியாசமாய்ப்' பார்க்கப்படுவதில்லை. போல்டனும், ரொபினும் உடலுறவு கொள்ளும்போது அது என்றுமே முழுமையுறாத உறவாய், அவர்களுக்கிடையில் வேடிக்கை பார்க்கும் ஒரு அந்நியனாய் ரொபினின் கணவனின் இசைக்கும் பியனோ இசை ஒவ்வொரு பொழுதும் வந்துவிடுகின்றது. அது எப்படியெனில், The music was his dance in the auditorium of enemies....Bullets of music delivered onto the bed we were on...(p 92). கிட்டத்தட்ட இப்படி இரண்டு வருடங்கள் தலைமறைவு வாழ்கை வாழும் போல்டனை அவரது பொலிஸ் நண்பர் வெப் (Webb) கண்டுபிடித்து மீண்டும் பழைய நகருக்கு கூட்டிவருகின்றார்.

ஏற்கனவே இருந்த போல்டனின் இசைக்குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருதிசையில் போய்விட்டதறிந்து போல்டனைத் தனிமையும் நண்பர்கள் எவருமற்ற வெறுமையும் இடைவிடாது துரத்துகின்றது. மேலும், போல்டனின் முன்னாள் காதலியான நோரா இப்போது வேறொருவரோடு சேர்ந்து வாழத்தொடங்கியிருக்கின்றார். அந்த நபர் போல்டனின் இசைக்குழுவில் இருந்தவரும், நண்பருமென அறிந்து போல்டனின் வேதனை இன்னும் கூடுகின்றது. ஒரு ஊர்வலத்திற்காய் (parade) ஜாஸை வாசிக்க நோராவில் வீட்டில் சில நாட்கள் போல்டன் தங்கியிருக்கின்றார். அப்போது அவரது முன்னாள் காதலியுடனும் பிள்ளைகளிடமும் அன்பும் நெகிழ்வுமாய் பொழுதைக் கழித்து. அந்த ஊர்வலத்தில் அற்புதமான ஜாஸ் இசையை ஒரு குழுவுடன் இணைந்து கொடுக்கின்றார். தொண்டையால் இரத்தம் பீறிட்டெழுகின்றவரை தன்னை மறந்து போல்டன் வழங்கிய அற்புதமான அந்த இசை நிகழ்வை மக்கள் நீண்டநாட்களிற்கு நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஜாஸோடு அவ்வளவு பரீட்சயமில்லாத ஒரு வாசகரைக்கூட இதை விவரிக்கையில் மைக்கல் ஒண்டாஜ்ஜி அருகில் இருந்து பார்ப்பதுபோல இழுத்துச்சென்றுவிடுகின்றார்.. அதுவும் அந்த ஊர்வலத்தில் காணும் ஒரு பெண்ணை கற்பனையில் நினைத்து உருகி அவளோடு உடலுறவு கொள்கின்ற போல்டனின் ஆசையைப்போல இசையும் அதனோடு நகர்ந்து போகின்ற வர்ணிப்பு மிக அற்புதமானது. போல்டனின் அந்த இசையின் இனிமையும், erotic தன்மையையும் பிரதியிற்குள்ளிலிருந்து அப்படியே நமக்குள்ளும் வந்திறங்கிக்கொள்கின்றது. Fluff and groan in my throat , roll of a bad throat as we begin to slow. Tired. She still covers her my eyes with hers and sees it slow and allows the slowness for me her breasts black under the wet light shirt., sound and pain in my heart as death. All my body moves to my throat and I speed again and she speeds tired again, a river of sweat to her waist her head and hair back bending back to me, all the desire in me is cramp and hard, cocaine on my cock, eternal, for my heart is at my throat hitting slow pure notes inth the shimmy dance of victory... (p 130 & 131).

தனது முப்ப்த்தொரு வயதிற்குப் பிறகு மனப்பிறழ்வுக்குள்ளாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் வைத்தியசாலையில் கழித்து போல்டன் இறந்துபோகின்றார் அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கான (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) தெளிவான காரணமோ..., திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கான தெளிவான காரணங்கள் நாவலில் குறிப்பிடப்படவில்லை (ஆனால் இந்த இருண்மைத்தன்மையே இப்புதினத்திற்கு மேலும் மெருகைக்கொடுக்கின்றது). ஜாஸ் இசையின் நுட்பங்களைக்கற்று வளர்ந்துவருகையில் போல்டன் தனது இசை தெரிந்த நண்பர்களை விட்டு விலகி, ஜாஸ் இசையில் விருப்பற்று பாலியல் தொழிலாளர்களை மட்டும் படங்கள் எடுத்துக்கொண்டு திரியும் Bellocq என்பவரோடு அதிக காலங்களைக் கழிப்பதும், பிற நண்பர்கள்போல அல்லாது இசை குறித்து எதுவும் திருப்பிக் கதைக்காத அவரோடு இரவு பகலாய் பொழுதைக் குடித்துக் கரைத்ததாலும் போல்டனுக்கு ஜாஸ் பற்றிய விருப்பு சிதறிப்போயிருகலாம் என்ற ஒரு வாசிப்பு நமக்கு கிடைக்கின்றது. இதையேதான் போல்டன் ஊரையும்விட்டு ஓடிவிட்டு திரும்பிவரும்போது நோராவும் கூறுகின்றார் Look at you. Look at what he(Bellocq) did to you..Look at you. Look at you. Godamit. Look at you (p 127). ஆனால் எல்லோரையும் விட, Bellocqயே, போல்டன் ஊரைவிட்டு ஓடியபோது அதிகம் அதிர்ச்சியடைகின்றார். மேலும், போல்டன் ஊரிற்குத் திரும்பி வரும் இரண்டு வருட இடைவெளிக்குள், Bellocq நெருப்பு மூட்டி தற்கொலையும் செய்துகொள்கின்றார்.

இந்நாவல் மிகச்சிக்கலான வாசிப்பை கோருகின்றது. ஒரே அத்தியாயத்தில் பலரின் குரல்கள் தன்னிலையில் நின்று பேசுகின்றபோது யார் பேசுகின்றார்கள் என்ற குழப்பம் வருகின்றது. அத்தோடு சில சம்பவங்களை விபரிக்கத்தொடங்கி அவை அரைகுறையிலேயே நின்றும்விடுகின்றது,. சிலவேளைகளில் சில அத்தியாங்களைத்தாண்டி அந்தச்சம்பவம் வேறொருவரின் குரலினூட நீளத்தொடங்கியும் விடுகின்றது. எல்லா சம்பவங்களுக்கும்/விபரிப்புகளுக்கும் காரணங்களைத் தேடி முடிவை எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகரை இந்தப்புதினம் ஏமாற்றத்தையும் அலுப்பையும் ஒருசேரத் தரக்கூடியது..இவற்றிற்கப்பால் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் கவித்துவம் நிரம்பிய எழுத்து சிலாகித்துச் சொல்லப்படவேண்டியதொன்று. 70களின் மத்தியில் எழுதப்பட்ட இப்புதினத்தில் இத்தனை பரிசோதனைகளை ஒண்டாஜ்ஜி செய்திருக்கின்றார் என்பது பிரதிமீதான அதிக கவனத்தைக் கோருகின்றது. அதனாற்றான் இதை இன்று வாசிக்கும் ஒருவருக்கும் பல புதிய வாசிப்பின் கதவுகளை திறக்கக்கூடியதாக இருக்கின்றது போலும். போல்டனின் ஜாஸ் இசை முறையாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், போல்டன் இன்றும் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் ஆரம்பக்கால ஜாஸ் இசையின் ஆளுமைகளில் ஒருவரெனக் கொண்டாடப்பட்டபடியும், Buddy Bolden's Blues (or Funky Butt) என்ற இசைக்கோர்வை அவரின் பெயரால் நினைவூட்டப்பட்டு இசைக்கப்பட்டபடியும் இருக்கின்றது.


(அ.யேசுராசாவிற்கு...)

புலம்பெயர் திரைப்படங்கள்

Thursday, October 25, 2007

-சில குறிப்புகள்-


புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களிலிருந்து முழுநீளத்திரைப்படங்கள் வரை பலவேறு வகைப்பட்ட திரைப்படங்களை எடுத்துவருகின்றனர். வேற்று மண்ணில் வேர்களைப் பரப்புவதிலிருந்து, புதுச்சூழலிற்கு இயைபாக்கம் அடைதல்வரையென்ற கதையாக்கப்படுவதற்கான மிகப்பெரும் வெளியிருப்பினும், நம்பிக்கை அளிக்கக்கூடிய, பிறநாட்டுச் சினிமாக்களுக்கு நிகராக வைத்து பேசப்படகூடிய பிரதிகளை இன்னமும் புலம்பெயர்ந்தவர்கள் தரவில்லையென்பது ஏன் என்பது உரையாடப்படவேண்டிய விடயமே. எனினும் தமக்கான களங்களுடனும், தமக்கான புரிதல்களுடனும் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளிலிருந்து படங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளூர்க்கலைஞர்களை மதிப்பதில்லையென்றும், நமக்கான சந்தை வாய்ப்புக்குறைவு என்றும் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையிருப்பினும், ஒரு படைப்பாளி இவற்றை எப்படி எதிர்கொள்வது/தாண்டிச்செல்வது என்பதைப்பற்றியே சிந்திக்கவேண்டுமே தவிர, ஒரே குற்றச்சாட்டுக்களை கிளிப்பிள்ளைமாதிரி தொடர்ந்து சொல்லித் தப்பித்துக்கொள்ளமுடியாது (அவ்வாறு மீறி -இன்றும் பல வருடங்களாய் நிரம்பிய அரங்குகளாய்- நிகழ்ந்துகொண்டிருக்கும் 'இசைக்கு ஏது எல்லை' என்ற இசைநிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு உரையாடல்களை ஆரம்பிக்கமுடியும்). இனி அண்மையில் பார்த்த/வெளிவந்த சில குறும்/நெடுந்திரைப்படங்களைப் பார்ப்போம்.

'கனேடியன்' என்று கனடாவில் தயாரிக்கப்பட்ட படம், இங்கிருக்கும் இளைஞர்களின் குழு வன்முறையைப் (Gang Violence) பேசமுயல்கின்ற ஒரு படமாகும். ஒரு வீட்டில் தங்கியிருக்கும் இளைஞர்கள், குழு வன்முறையில் ஈடுபடுவதை அறிந்து அவ்விளைஞர்களின் உறவுமுறையான ஒருவர் இவர்களைத் திருத்த ஈழத்திலிருந்து வருகின்றார். முழுநீளத்திரைப்படமாகையால் முதல் அரைவாசிப்பகுதி நகைச்சுவைப் பகுதிகளால் நிரப்பபட்டிருக்கின்றது (ஒரளவு, பார்ப்பவர்களை சிரிக்கவைப்பதிலும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்). எதிர்க்குழுவில் உள்ள ஒருவனால் -ஊரிலிருந்த வந்தவரின் மருமகன் முறையான- இளைஞன் கொல்லப்பட, அவ்விளைஞனின் மாமா முறையானவர் கொன்ற இளைஞனுக்கு அவனது தவறை உணரச்செய்கின்றார் என்பதே இத்திரைப்படத்தின் ஊடுபொருள். இறுதியில் எல்லோரும் நண்பர்களாக தமக்கான வன்மங்களை மறந்து மாறுகின்ற பொழுதில், கொலையாளி(?) இளைஞன் தன் விருப்பின்பேரில் பொலிசிடம் சரணடைகின்றான்.

தங்கள் நண்பனை/உறவை கொன்றவனை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளும்ம் சந்தர்ப்பத்தில், 'ஏற்கனவே ஒருவனை இழந்துவிட்டோம் இனியும் இன்னொருவனை இழக்கவேண்டுமா? ஒருவன் எப்போது தன் தவறை உணர்ந்து வருந்துகின்றானோ அப்போதே ம்ன்னிக்கப்பட்டுவிடுகின்றான்' என்று இத்திரைப்படம் முன்வைக்கும் கருத்தாடலில், இவ்வாறான இளைஞர்களின் மீதான் அக்கறையையும், பரிவையும் ஏற்றுக்கொண்டு படத்தை முடியும்வரை பார்க்கமுடியுமெனினும் இத்திரைப்படம் சில பலவீனங்களையும் கொண்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். இவ்விளைஞர் குழுக்கள் ஏன் வன்முறையாளர்களாய் உருவெடுத்தார்கள் என்பதற்கான காரணம் படத்தில் காட்ட்ப்படாததை அதொரு படைப்பாளிக்கான சுதந்திரமாய் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் குழுக்களின் சண்டைக்காட்சிகள் ஒருவித நகைச்சுவைக்காட்சியிற்கு அண்மையாகப் போய்விடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. இங்கே எடுக்கபபடும் பல முழுநீளத்திரைப்படங்களுக்கு ஏற்கனவே நிகழ்ந்ததே இத்திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருக்கின்றது. இவ்வாறானவர்கள் இன்னுமே 'தமிழ்நாட்டுச்சினிமா சட்டகம்' என்ற பெருங்கதையாடலை விட்டு வெளிவருவதற்கான நம்பிக்கைகளைத் தருவதாய்க்காணவில்லை. தென்னிந்தியத்திரைப்படங்கள் போல சினிமாப்பாடல்கள் வேண்டும் (ஆனால் தொட்டும் தொடாமலும் ஆடி நமது புலம்பெயர் தமிழ்க் கலாசாரத்தை (?) காப்பாற்றவும் வேண்டும். சண்டைக்காட்சிகளும் வேண்டும். ஆனால்.... ). இப்படத்தின் சண்டைக்காட்சிகளைப் பார்க்கும்போது இவர்கள் இங்கிருக்கும் குழு வன்முறை குறித்து எவ்வாறான ஆய்வுகளை -இப்படத்தை எடுக்கமுன்னர் செய்தார்கள்- என்பது பற்றிய கேள்விகள் எழுகின்றன. குழுக்களில் இருப்பவர்கள் தமக்கான பாதுகாப்பான பிரதேசங்கள் தவிர்த்து- பிற இடங்களில் தனித்துத்திரியமாட்டார்கள். ஆனால் இங்கே 'கெட்டவராக' சித்தரிக்கப்படுபவர் ஆரம்பக்கட்டம் தவிர்த்து படம் முழுதும் தனியாகவே திரிகின்றார். மற்றது குழுச்சண்டைகள் சும்மா சினிமாச் சண்டைகள் போல நடைபெறுவதில்லை ('சித்திரம் பேசுதடி' படத்தில் வெகு யதார்த்தமாய் இதைச் சித்தரிக்கும் காட்சியொன்று வரும்) . ஒருவன் ஒரு குழுவிடம் தனியே சிக்கினால் எப்படி அவர்கள் கூட்டமாய்ச் சேர்ந்து 'கிழிப்பார்கள்' என்பது வன்முறைக்குழுவில் இருப்பவர்களிடம் கேட்டால் விளங்கும். மேலும் வெறும் கையால் சுழற்றி சுழற்றி (பல சினிமாக்களில் சின்னவிரலால் மட்டும்கூட சுழற்றி சுழற்றி அடிப்பார்கள்) அடிக்கும் காலம் இங்கிருக்கும் வன்முறைக்குழுக்களில் எப்போதோ மலையேறிப் போய்விட்டது. இவை முக்கிய குறைபாடுகளாய் இல்லாதுவிட்டாலும், தமிழகச்சினிமாவின் பாதிப்பு அப்படியே 'அப்பட்டமாய்' தெரிகின்றன எனச்சுட்டவே இவற்றைக் குறிப்பிட விழைகின்றேன். இளைஞன் கொல்லப்பட்டவுடனேயே கொன்ற இளைஞனுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையே ஒரு காதல் 'டூயட்' வந்துவிடுகின்றது. ஒரு அவலமான சூழ்நிலையில் உடனேயே ரொமான்ரிக் சூழல் வருவது யதார்த்ததில் சாத்தியமேயில்லை. பாடலைத் திணிக்கவேண்டும் என்றிருந்தால் - ஆகக்குறைந்தது சில காட்சிகள் பிந்தியாவது- இணைத்திருக்கலாம்.

அதேபோன்று ஊரிலிருந்து மாமா வருகின்றபோது அவர் தனது பழைய காதலியொருவரைக் கனடாவில் சந்திப்பார். இருவரும் தமக்கான குடும்பம் பிள்ளைகள் என்றிருப்பவர்கள். எனினும் அவர்களுக்குள் இன்னும் இருக்கும் மெல்லிய உணர்வுகள் நகைச்சுவையுடன் நகர்த்தப்பட்டிருக்கும் (குடும்பம், பிள்ளைகள் என்று வந்துவிட்டால் பழையதெல்லாம் மறந்து/மறைந்து போகவேண்டும் என்ற கட்டாயமா என்ன?) . ஆனால் அதைக்கூட இறுதியில் ரஜினியின் ஏதோ சில பாடல்களுக்கு அவர்களிருவரையும் அபிநயம் பிடிக்கச்செய்யவைத்து ஆபாசப்படுத்தியிருப்பார்கள். இம் மென்னுணர்வுகள் இப்படியாய் குரூர நகைச்சுவைக்குள் போவதற்காய் உரியன அல்லவென உரத்துச்சொல்ல வேண்டியிருக்கின்றது. மேலும் அந்தப் பெண்மணியை மணிரத்தினத்தின் 'ப்மபாய்' பட ஸ்ரையிலில் 'எல்லாம் குலுஙக' ஓடிவரச்செய்வதெல்லாம்... மீண்டும் தமிழகச்சினிமா என்ற பெருங்கனவை இவர்களால் கலைக்கமுடியவில்லையென்பதைத் தவிர வேறென்னத்தைச் சொல்ல? எனினும் இவ்வாறான பலவீனங்களைத் தாண்டி, இங்கிருக்கும் இளைஞர்களின் ஒருபகுதியினரின் வாழ்வைப்பற்றி வெளிப்படையாக உரையாடமுயன்றிருக்கின்றது என்பதற்காய் இப்படத்தை - சில நெளிதல்களுடன் சகித்துக்கொண்டு - பார்க்கலாம்.

இதே கருத்தை, 'வினை' என்ற ஜந்து நிமிடக்குறும்படம் அழகாகக்காட்டுகின்றது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதே இதன் கருப்பொருள். இளைஞர் வன்முறைக்குழுவில் இருக்கும் ஒருவனுக்குத் தான் சுட்டுக்கொல்லப்படுவதாய் கனவொன்று வருகின்றது (ஏற்கனவே யாரையோ இந்த இளைஞன் இருக்கும் குழு சுட்டிருக்கின்றது). அது கனவுதான், தான் கொல்லப்படவில்லை என்று பதட்டத்தோடு எழும்புகின்றவனுக்கு, அவனது நண்பரொருவன் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான் என்ற தொலைபேசிச் செய்தி வருவதோடு படம் முடிந்துவிடுகின்றது. ஒரு வீட்டிற்குள்ளேயே படம் முழுதும் எடுக்கப்பட்டிருக்கின்றது. படத்தில் இருக்கும் கதாபாத்திரம் ஒன்றேயொன்றுதான். ஆனால் படம் சொல்ல்வருவது என்னவென்பது அப்படியே மனதில் பதிந்துவிடுகின்றது.



'தொடரும் நாடகம்' என்ற டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட இருபது நிமிடக்குறும்படம், புலம்பெயர்ந்தவர் வாழ்வில் சின்னத்திரைகளின் ஆதிக்கம் பற்றிப்பேசுகின்றது. சின்னத்திரை நாடகங்களுக்கு அடிமையாகும் தாயாரால் வீணாய்ப்பலிகொள்ளப்படுகின்ற சிறுவனை இதுகதைப்பொருளாக்கின்றது. சற்று உயர்வுநவிற்சியாய் எடுக்கப்பட்டிருந்தாலும், சின்னத்திரை நாடகங்களின் ஆதிக்கமும் அவ்வளவு எளிதாய் புறககணிக்க முடியாது எனபதே யதார்த்தம் ஆகும்.


'கதவுகள்' என்ற ஐந்து நிமிடக்குறும்படம். வாழ்வில் ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறுகின்றது. தனது மனைவி வீட்டை விட்டு ஒடிப்போன அவமானத்தில்(?)/துயரத்தில், தற்கொலை செய்ய முயல்கின்றார் கணவர். அதிக மாத்திரைகளை எடுப்பது, கயிற்றைக் கட்டித்தொங்குவது, மாடியிலிருந்து குதிக்க ஆயத்தமாவது என்று பல முயற்சிகளுக்கு முயன்றாலும் அவரால் தனது தற்கொலையைக் கச்சிதமாய் நிறைவேற்றமுடியாது போகின்றது. அப்படிக்குலைந்துபோகின்ற நிலையில் அறையிலிருந்த அவரின் குழந்தையின் அழுகுரல் இவரை இன்னொருவிதமாய் சிந்திக்கவைக்கின்றது. ' உன்னை விட்டுவிட்டு எப்படி நான் சாக முடிவு செய்தேன்? 'என்று தனது குழந்தையை அரவணைப்பதுடன் படம் முடிந்துவிடுகின்றது. இப்படம் சிலவிதமான அதிர்வுகளை எமக்குத் தருகின்றது. தாய் என்பவர் புனிதமான பிம்பமாக்கப்படுவதை மறுக்குகின்றது. அதாவது 'புனிதமான தாய்' குழந்தையை விட்டு ஒருபோதும் ஓடமாட்டார் என்ற கதையாடலை நிராகரிக்கின்றது (இந்தபுனிதத்தன்மை புகுத்தப்படாது விட்டிருந்தால், பல தாய்மார்கள் தமது பிள்ளைகளையும் சேர்த்து தாங்களும் தற்கொலை செய்திருக்கமாட்டார்கள்; மற்றது 'பிள்ளைகளுக்காய்..' என்ற பல தமது விருப்புக்களை வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கவேண்டி வந்திருக்காது) . இப்படத்தில் இருந்து எழும்பும் இன்னொரு அதிர்வு, தற்கொலை செய்தல் மிக எளிதானதென்ற பொதுப்புத்தி சார்ந்து சிந்திக்க முயலாதது.


'மெளனச்சுமைகள்', புலம்பெயர்ந்த தேசத்தில் பெற்றோரின் (வயது முதிர்ந்தவர்களின்) இருப்புக் குறித்துப் பேசுகின்றது. ஊரில் தனித்திருக்கும் பெற்றோரை வெளிநாட்டுக்குக் கூப்பிடும் பிள்ளைகள் எப்படி அவர்களைத் தமது சொந்த இலாபங்களுக்குப் பயன்படுத்த முனைகின்றார்கள் என்பதை இக் குறும்படம் காட்சிப்படுத்துகின்றது. வயது முதிர்ந்த காலத்தில் ஒன்றாய் சேர்ந்திருககவேண்டிய பெற்றோர்.... தாய் ஒரு மகளோடும், தகப்பன் ஒரு மகனோடும் பிரிந்துவாழ்வதன் அவலம் குறித்துக் கேள்விகளை எழும்புகின்றது.


'அஃகம்' என்ற கனடாவில் எடுக்கப்பட்ட பதினைந்து நிமிடக் குறும்படம், பதின்மவய்துப்பெண்களின் பிரச்சினையொன்றைப்பற்றிப் பேசுகின்றது. பாடசாலைக்கும் போகும்/வரும் வழியில் பதின்மவயதுக்காரியொருத்தியை, (சற்று வயதுகூடிய?) ஒரு ஆண் இடைமறித்து தொடர்ந்து உரையாட விரும்புகின்றார். அவரின் நடத்தையிற்கும், வடிவிற்கும் என்னோடான காதல்தான் பெரிய முக்கியமென அப்பெண் அந்த ஆணின் காதலை நிராகரிக்கின்றார். காதலை ஏற்பதாய் இருந்தால் மரத்தில் வைக்கும் வண்ணத்துப்பூச்சி வ்டிவான் கிளிப்பை எடுத்துப்போடவேண்டும் இல்லாவிட்டால் காதலை நீ ஏற்றுக்கொள்ளவில்லையென தான் நினைத்து அமெரிக்கா போய்விடுகின்றேன் என சற்று சினிமாத்தனமான் டயலொக்கை அந்த ஆண் கதைக்கின்றார். ஆரம்ப நாட்களில் காதலை நிராகரிக்கும்/ கிளிப்பை எடுக்காத அந்தப்பெண்ணும் அவரின் நண்பிகளுக்கும் பின்னாளில் அந்த ஆணை (அவர் அமெரிக்கா போய்விட்டாரென நினைக்கின்றேன்) தாங்கள் மிஸ் பண்ணுவதாய் கதைக்கின்றார்கள். இறுதியில் அந்தப் பெண் தனது தலைக்கு அந்தக் கிளிப்பைப் போடுவதோடு படம் முடிகின்றது. கொஞ்சம் சினிமாத்தனமான உரையாடலகளைத் தவிர்த்துப்பார்த்தால், இப்படம் பிரதிகளுக்கு அப்பால சில கேள்விகளை எழுப்ப பார்ப்பவருக்கு வெளியைத் தருவது புரியும். இதைப்போன்ற பல சந்தர்ப்பங்களில் சிக்குப்பட்ட சில நண்பர்களை எனது பதின்மங்களில் கண்டிருந்ததால் இக்குறும்படம் இன்னும் நெருக்கமாயிற்றோ தெரியாது.


இந்தப்படங்களையெல்லாம் விட நம்பிக்கை அதிகம் தந்த படம் என்றால் 'நதி' என்ற பிரான்சில் எடுக்கப்பட்ட 15 நிமிடப்படத்தைத்தான் சொல்லவேண்டும். ஒரு அகதியின் துயரை மிகத்தத்ரூபமாய் எளிமையான காட்சிகளால் சித்தரிக்கின்றது. தனது உறவினரின் பணத்தில்(கடனில்) கள்ளமாய் பிரான்சிற்கு வந்து, எந்த வேலையும் செய்யமுடியாது -வேலைசெய்யும் அனுமதிப்பத்திரம் (work permit) இல்லாதிருக்கும்- இளைஞனே இங்கே முக்கிய பாத்திரமாகின்றான். இந்த நெருக்கடியோடு ஊரிலிருந்து அம்மாவின் நோயிற்கு இன்னபிறவிற்கென பணம் அனுப்பச் சொல்லும் உறவுகள்... தங்கியிருக்க்கும் வீட்டுக்காரரும் தனக்கான அல்லல்களோடு இவனை உளவியல்ரீதியில் திட்டிக்கொண்டிருக்கின்றார். ஒருமாதிரி இன்னொருவரின் வேலை அனுமதிப்பத்திரம் பெற்று கள்ளமாய் இவ்விளைஞன் வேலை செய்ய வெளிக்கிடும்போது, அந்த தொடர்மாடிக்கட்டடத்தில் இரு இளைஞர் குழுக்கள் கைகலப்பில் ஈடுபடுகின்றனர். இதையறிந்து பொலிஸ் அங்கே வர, அவ்விரு குழுக்களும் தப்பிவிட இந்த இளைஞன் இடைநடுவில் மாட்டிவிடுகின்றான். பொலிஸார், இவனைக் கைதுசெய்து அடையாள அட்டைகளைக் கேட்கும்போது, இவன் கள்ளமாய் வந்து பிரான்சில் நிற்பது தெரிகின்றது. மேலும் அவனிடமிருக்கும் வேலை செய்யும் பத்திரமும் இன்னொருவனுடையதாக இருப்பதும் ஆபத்தாக முடிந்துவிடுகின்றது. அவ்விளைஞன் தான் உடனேயே நாடுகடத்தப்படுவதன் அவலத்தை நினைத்து அரற்றத்தொடங்குவதோடு படம் முடிகின்றது. எத்தனையோ நாடுகளின் ஆபத்தான எல்லைகளைக் கடந்து, ஏஜென்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து வந்தவர்களுக்கே இத்துயரத்தின் ஆழம் புரியும். 'உன்னிடம் இருப்பதும் சிறிலங்கா பாஸ்போர்ட்'தானே என்று கேட்பவர்கள், இவ்விளைஞர்களைப் போல சொகுசாய் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பறப்பவர்களாகவோ.... முக்கிய அரசியல் பிரமுகர்களோடு சொகுசாய் விமானத்தில் உட்கார்ந்துகொண்டு 'தாம் பேசும் அரசியலோடு' உலகம் சுற்றத்த்தொடங்கி தாம் பேசி முடிக்கும் அரசியலோடு உலகமும் சுற்றுவதை நிறுத்திச் சுருண்டு படுத்துவிடுகின்றது என்று நினைப்பவர்களாய் மட்டுமே இருக்கமுடியும். இக்குறும்படத்தில் நடித்திருந்த நடிகர்கள் மிக இயல்பாய் நடித்திருந்தார்கள். உரையாடல்கள், ஒளிப்பதிவு எல்லாம் கதையின் களத்தோடு நேர்த்தியாய் பொருந்திக்கொள்கின்றது.


இவ்வாறு புலம்பெயர் திரைப்பட முயற்சிகள் பலவேறு புலங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தாலும், இன்னும் கடக்கவேண்டிய பாதை நீண்டதாய் இருக்கின்றதென்பதே உண்மை. மேலே குறிப்பிட்ட பல படங்களில், ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு/உரையாடல்கள் என எல்லாம் ஒத்திசைந்து வந்த படங்கள் மிகக்குறைவே. திரையிசைப்பாடல்களும், சண்டைக்காட்சிகளும்... நமக்கு இந்திய வணிகச்சினிமா போல் அவசியமா என்ற கேள்வியை ஒவ்வொரு படைபாளியும் தமக்குள் எழுப்பிவிட்டு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கவேண்டும். பாடல்கள் இல்லாது மனதை வருடிச்செல்லும் ஈரான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களும், வன்முறையை அப்படியே வெளிப்படையாக பார்வைக்கு வைக்காது, ஆனால் அதன் பாதிப்புக்களை உருவாக்கிய Mr & Mrs அய்யர் போன்ற படங்களும் அங்கீகரிக்கப்பட்டு பரவலாய் பாராட்டுப்பெறுவதையும் நாம் நினைவில்கொள்ளலாம். ஒரு முழுநீளத்திரைப்படம் எடுப்பதற்கான அவசியம் ஏன் நமக்கு இப்போதிருக்கின்றது என்ற கேள்வியும் இருக்கின்றது. ஆங்கிலப்படங்கள் போல அவற்றின் கதை/களத்தைப் பொருத்து திரைப்படங்களை தயாரித்தலுக்கு, எடிங்கிறகான முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்படவும் வேண்டும். அதைவிட நாம் யாருக்காக படம் எடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்பதே முக்கியமானது. வர்த்தக தமிழ்ச்சினிமாவிற்கான காரணஙகளை மறுக்கவேண்டிய அவசிய்மில்லை. ஆனால் அவ்வாறான படங்களைப் பார்ப்பதற்கும், அது போல போலி செய்து தயாரிக்கப்படும் படங்களைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.


புலம்பெயர்வாழ்வில் இன்னும் சொல்லப்படாத பல கதைகள் புதையுண்டு கிடக்கின்றன. போலச் செய்யும்போதல்ல, நமக்கான கதையை நாமே காட்சிப்படுத்தும்போதுதான் நமது அசலான முகங்கள் வெளிப்படும். அந்த தனித்துவமான கதைகளே 'நமக்கான திரைப்படமொழியை' உருவாக்கப்போகின்றவை. அத்தோடு 'தமிழ்' என்ற சிறு எல்லைகளுக்குள் அடங்கிப்போகின்ற முயற்சிகளை -ஈரானிய/சிங்களப்படங்கள் போல- மொழிகளைத்தாண்டி பிறமொழி பேசுபவர்களிடையேயும் அதிர்வுகளை உண்டாக்கி நமக்கு பெருமை தரக்கூடியதாகவும் அவை அமையவும்கூடும்.


('கனேடியன்' என்ற திரைப்படத்தைத் தவிர மிகுதி அனைத்துக் குறும்படங்களையும் அண்மையில் நடந்த 'ஆறாவது சர்வதேச தமிழ்க் குறும்திரைப்பட விழா'விலேயேதான் பார்த்திருந்தேன். அதற்கும் நன்றி.)

சிங்களக்கவிதைகள் சில...

Friday, October 12, 2007

பாடசாலை நாட்கள்

இரட்டைச் சடைகள் பறக்க
நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன்
பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை
எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது

ஷாரினா இவ்வுலகில் எதற்கும் கவலைப்பட்டதில்லை
அவளது தந்தைக்கொரு சொந்தக்கடையிருந்தது
திருமணஞ்செய்வதே அவளது ஒரேயொரு விருப்பாயிருந்தது
அதைவிட வேறொன்றுமில்லை

நெலியா அவளது ஐரிஷ் தந்தையை அறிந்தவளில்லை
அடர்த்தியான கறுப்புக்கற்றைகள், மாதுளம்பழமான கன்னங்கள்
எல்லாப் பெடியங்களும் விரும்பக்கூடிய அழகானவளாயிருந்தாள்

லட்சுமி நானிதுவரை பார்த்திராத தடித்த கண்ணாடிகளை அணிந்திருந்தாள்
அவளது வீடு, அடிப்படை வசதிகளற்றது
போத்தல் விளக்கிலிருந்து வரும் தெளிவற்ற கதிரே
அவளது ஒளியாகவிருந்தது

அவள் ஒரு வைத்தியராகவோ வழக்கறிஞராகவோ
என்றேனும் ஒருநாள் ஆவாளென
அவளது தந்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்
அல்லது ஆகக்குறைந்தது
பல்கலைக்கழகத்திற்குச் செல்வாளென

நான் ஒரு கணமும் இன்னொரு இனத்திற்குரியவளென
(இவர்களோடு) இருந்தபொழுதில் உணர்ந்ததில்லை
நாங்கள் இளமையாக இருந்தபோது வாழ்வு இனிமையாக இருந்தது
துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததும் இல்லை

இப்போது உரத்துக்கதைத்தபடி
எனது மகள் பாடசாலையிலிருந்து நடந்துவருகின்றாள்
ஐந்துபேராய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி
இன்றைய நாளின் விசயத்தை அலசுகின்றார்கள்

'ஒரு தமிழ் கடை இன்று எரிக்கப்பட்டது' ஒருத்தி சொன்னாள்.
'கொளுத்தியது சரிதான்' என்றாள் இன்னொருத்தி.
அவர்களுக்கு ஷாரினா, நெலியா லட்சுமியின் அருகாமை
ஒருபோதும் கிடைத்ததேயில்லை.

-பிரேமினி அமீரசிங்க (From the collection, Kaleiooscope)
--------------------

கிராமத்தவரின் கதை

'நாங்கள் இப்போது மீன்கள சாப்பிடுவதில்லை' என்றாள் அவள்
'அவற்றின் வெறுமையான வயிறுகள் நாற்றமுடைய மனித உடல்களால் தினமும் நிரப்பப்படுகின்றன,
முள்ளந்தண்டுகள் நொறுக்கப்பட்ட தலைகளில்லாத இளைஞர்களின் உடலங்கள் நதியில் மிதந்து வருவதைப் பார்க்கின்றோம்'

*'புத்தா இப்போது எங்களுடன் தங்குவதில்லை' என்றாள் அவள்
'இரவில் வரும் அந்நியர்களுக்காய் அவன் பயப்பிடுகின்றான்
நேற்றும், அவனின் நண்பரொருவன் வெளியே இழுத்துச்செல்லப்பட்டான்
நாங்கள் துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்களைக் கேட்டோம், பிறகு நிசப்தம்'.

'ஒரு நல்ல விடயம், இந்த நாட்களில் சாப்பாடு வாங்குவதற்காய் கொஞ்சம் பணமிருக்கிறது
இந்தப் பிள்ளைகளின் அப்பா
இப்போது பார்ப்பதற்கு பரவாயில்லையாய் இருக்கின்றார்
எனது மகளுக்காய் இனி சீதனம் சேகரிப்பது தேவையற்றது
அவள் விரைவில் மறந்துவிடுவாள் எப்படி ஒரு இளைஞன் இருப்பான் என்பதை.

-பிரேமினி அமீரசிங்க (From the collection, Kaleiooscope)

* மகன்
---------------

கடவுளின் தனிமைப் பெண்

நானொரு வேசிப்பெண்
சமூகத்தில் எனக்கொரு மதிப்புமுமில்லை
வாழ்க்கையினூடு வழுக்கியபடி, மறக்கப்பட்டவள்;
ஒரு சுதந்திரமான வாத்து

நூறு ரூபாயிற்கு மேல்
எனது பேர்ஸில் எதுவும் இல்லை.

நேற்றிரவு ஒரு மிருகத்தோடு படுத்திருந்தேன்
அவனது பேர்ஸில் நூறு ரூபாய்த்தாளிலிருந்தது
இப்போது எனது.

நான் இன்னும் கவிதை வாசிக்கின்றேனெனது கழிவறையில்.

அந்தத் தாசிகளைப் பார்!
ஒளிரும் கனவான்களோடும் பளபளக்கும் கார்களுடனும்
அவர்கள் என்னைவிடச் சிறந்தவர்களென நினைக்கின்றார்கள்;
சேக்ஸ்பியர் காலத்தவர்களென்ற எண்ணம் வேறு -
ஜின்ஸ்பேர்க்கை வாசிப்பதால் நானொரு தாழ்த்தப்பட்டவள்

அந்த விபச்சாரன்களைப் பார்!
தந்தையின் பணத்தைக்கொண்டு வந்த ஒரு முட்டாள் பிட்சோடு போவதற்கு
இம்முதிர்ச்சியற்ற ஆண்கள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
அவள தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டிருப்பதை இவர்கள் விரும்புகின்றார்கள்
எனக்கு உண்மையிலேயே இதைப்பார்க்க வெறுப்பாயிருக்கிறது

இந்தக்காலையில் காலிமுகத்திடலில்
கடல் நிசப்தமாயிருந்தது
எனது கால்கள் நோகும்வரை நீளநடந்தேன்
தன்னைத் தொடும்படி அப்பொழுது முழுதும்
கடல் என்னை மென்மையாக அழைத்துக்கொண்டிருந்தது.
நான் ஒருபோதும் அழைப்பை ஏற்றதில்லை.

நானின்னும் கவிதை வாசித்துக்கொண்டிருக்கின்றேன் எனது கழிவறையில்.

-ருக்சன் பெரேரா (From the collection, Elysium & Other Poems)
--------------------------------

வன்மையான பிரார்த்தனை

சுருள்சுருளான இதமான ஊதுவர்த்திப்புகை
அமைதியான நினைவில் நீந்துகின்றது;.
கரங்கள் குவிந்தும் தலைகள் குனிந்தும்
பிரார்த்திக்கின்றன.

கண்ணியத்துடன் அல்லது மிகுந்த பயபக்தியுடன்
தாமரைப்பூக்களுடன் பாதச்சுவடுகள் மணலில்....
பாதச்சுவடுகள் *டகோடாவை சுற்றியென....
தோன்றுவதும் மறைவதுமாய்
தோன்றுவதும் மறைவதுமாய்

போரால் சிதைந்த நாட்டில்
அமைதி இன்னும் கொஞ்சமிருக்கிறது
பூக்களின் நறுமணம்
சாம்பிராணிக்குச்சிகள்
சாந்தக்குணங்களுடைய ஒரு பிக்கு -
அமைதி.

இங்கே கோபப்படுவது ஒருபோதும் புத்திசாலித்தனமல்ல
கோபத்துடன் பிரார்த்திப்பது நல்லதுமல்ல
இருந்தும் உறைந்துபோன நினைவுகள்
சடுதியான மழையாய் பொழிந்து அணையை உடைக்கின்றது

இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் - யாருக்கோ பிறந்த பிசாசுகள்
விசர்த்தனமான அளவுகோல்களுடன்
22 வருடங்களாய் நாட்டை முட்டாளாக்கினர் -
83லிலிருந்து, மலட்டுப்போரை நியாயப்படுத்துவன்மூலம்
நாங்கள் மூடர்களாக்கப்பட்டோம்.

எனக்கு ஞாபத்திலுண்டு
'களு ஜூலைய' -
கறுப்பு ஜூலை

கருமை கருமை கருமை.
நாங்கள் தடித்ததோல் இனவாதிகள்
கருமை, கருமை
நாங்கள் கொலைகாரர்கள்.
கறுப்பு
நான் கோயிலொன்றில் உள்ள மறு.

நான் கோபமடையமாட்டேன், நான் கோபமாயில்லை.
ஞாபகமுண்டு; இது ஒரு கோயில்
பாராளுமனறம் அல்ல.
எனினும்
இங்கேயிருப்பது இனியும் உவப்பானதல்ல,
அற்புதமான காட்சிகள் சுவையற்றதாயின; எனது
கோபம் அந்த அழகை நொடிகளில் கரைத்துச்சென்றது.

-ருக்சன் பெரேரா (From the collection,
Elysium & Other Poems)
*Dagoda
-----------------

வரலாற்றின் தடங்களில் நடத்தல்

Friday, August 24, 2007

-Woolf in Ceylon by Christopher Ondaatje-

காலனியாதிக்கத்தின் காலம் முடிந்துவிட்டதென கூறப்பட்டுக்கொண்டிருந்தாலும், காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் தொடர்ந்து பலவேறு வடிவங்களில் ஈழம், இந்தியா போன்ற நாடுகளின் கலாசாரங்களில் பிரிக்கமுடியாதவளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன. இன்றும், விரிவான அறிவும் தெளிவும் 'சுதேச' மொழிகளில் ஒருவருக்கு இருந்தாலும், அவர் ஆங்கிலத்தையும், அதனூடாக ஆங்கில இலக்கியங்களையும்/தத்துவங்களையும் அறிந்துவைத்திருந்தால் மட்டுமே, அவரது கருத்துக்கள் 'அறிஞர் குழாத்தில்' கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படக்கூடிய சூழல் தமிழ்ச்சமூகத்தில் இருக்கின்றது எனபதை நாமனைவரும் அறிவோம். நமது கல்வித்திட்டம் கூட இன்னும் முறைமையாக மாற்றியமைக்கப்படாமல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் (காலனித்துவ) பாடத்திட்டத்தின்படி அண்மைக்காலம் வரை நீட்டிக்கபட்டுக்கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.

'இலங்கையில் வூல்ப்வ்' (Woolf in Ceylon) என்ற இந்நூல், வூல்ப்வ் அரச அலுவலராக 1904-1911 காலப்பகுதிகளில் ஈழத்தில் பணியாற்றியபோது எழுதப்பட்ட குறிப்புகளை வைத்து விரிவான சம்பவங்களுடன் மீண்டும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜினால் எழுதப்பட்டிருக்கின்றது. வரலாற்றின் ஆவணங்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் வாய்ப்புக்கள் மிக அரிதாக இருக்கும் இன்றைய நமது போர்ச்சூழலில் இப்படியான காலனித்துவவாதிகளின் குறிப்புகளினூடாகத்தான் நாம் நமது நாட்டையும் ஊர்களையும் அறிந்துகொள்ள, சார்ந்து நிற்கவேண்டியிருக்கின்றது என்பது அவலமான ஒரு விடயமே. வூல்ப்வ் இலங்கையில் இருந்த காலங்களில் எழுதிய குறிப்புகளையும், இன்னபிற அவரின் படைப்புக்களையும் வாசித்த கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி (எழுத்தாளர் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் சகோதரர்) போர் நடைபெறாத 'சமாதான காலம்' எனச்சொல்லப்பட்ட 2003களில் இலங்கைக்குச் சென்று, வூல்ப்வ் பயணித்த இடங்களை வூல்ப்பின் குறிப்புகளை வைத்துக்கொண்டு மீண்டும் பார்ப்பதை/பயணிப்பதை ((revisiting?) இந்நூலில் எழுதியிருக்கின்றார். வூல்பின் 1900 காலகட்டத்தோடு, இன்றைய ஈழத்தை கிறிஸ்டோபர் ஒண்டாஜ்ஜி விரித்து எழுதிச்செல்வது வெகு சுவாரசியமான வாசிப்பை நமக்குத் தருகின்றது. மேலும், கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவரது அனுபவம் சார்ந்த சொந்தக்குறிப்புகளும் இந்நூலிற்கு இன்னும் வளத்தைச் சேர்க்கின்றது.

வூல்ப்வ் பணியாற்றிய யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, ஹம்பாந்தோட்ட (தமிழில் அம்பாந்த்தோட்டை?) போன்ற அனைத்து இடங்களுக்கும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிக்கின்றார். இலங்கைக்கு வரும்போது ஒரு ஏகாதிபத்தியவாதியாக இருக்கின்ற வூல்ப்வ் பின்னாட்களில் எப்படி தன்னைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளாராக மாறுகின்றார் என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகின்றது. கொழும்பில் இரண்டுவாரம் கச்சேரியில் வேலை செய்து விட்டு முதன்முதலாக யாழ்ப்பாணத்துக்கு வூல்ப்வ் 1904 ஆண்டளவில் போகின்றார். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் வூல்ப் -அப்போதிருந்த தொடர்ச்சியில்லாத புகைவண்டிப்பாதையால்- அனுராதபுரத்திலிருந்து ஆனையிறவு வரை மாட்டுவண்டியில் பயணிக்கின்றார் (ஏறத்தாள முப்பத்தாறு மணித்தியாலங்கள் எடுத்த பயணம் அது). யாழ்ப்பாணக் கச்சேரியில் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் வூல்பவ் மிகத்துல்லியமாய் இறுக்கமான யாழ்ப்பாணச்சமூகத்தை கணித்துமிருக்கின்றார். யாழ்ப்பாணத்தவர்களின் சாதித்திமிர், வேலிச்சண்டை உட்பட கல்வித்திமிர்வரை அனைத்தையும் தனது குறிப்புகளில் வூல்ப்வ் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று யாழ்ப்பாணம், இலங்கையில் ஏனைய பகுதிகள் விரைவில் சுவீகரித்துக்கொண்ட அய்ரோப்பிய கலாசாரத்தை போன்று இருக்காது, தனித்து நின்ற ஒரு பிரதேசமெனவும் குறிப்பிடுகின்றார். முக்கியமாய் அய்ரோப்பியப் பெருநகரங்களுக்கு இருக்கும், ஒரு பெருநகரும் அதைச் சுற்றியிருக்கும் புறநகர்ப்பகுதிகள் போன்ற அமைப்பை அமையவிடாது, யாழ்ப்பாணத்தின் எண்ணற்ற பின்னலான தெருக்களும், ஒழுங்கைகளும் தடுத்துவிடுகின்றன என்று தனது அவதானங்களை வூல்ப்வ் முன்வைக்கின்றார். அதேபோன்று கிடுகுவேலிகளுக்குள் அடங்கிவிடுகின்ற ஒரு கொண்டாட்டமற்ற சமூகம் யாழ்ச்சமூகமெனவும் எழுதிச் செல்கின்றார். மேலும் பக்கத்து வீட்டுக்காரன் எப்போது வெளியே போவான் என்று காத்துக்கொண்டிருந்துவிட்டு, தங்களது கிடுகு வேலியை மற்றவனுக்குச் சொந்தமான நிலத்தில் சில அங்குலங்களாவது நகர்த்திப்பார்க்கின்ற சமூகம் என்றும் உண்மையை உள்ளபடியும் எழுதவும் செய்கின்றார் (...these cadjan fences are famous. It is said that the people of Jaffna spend much time of their time waiting for their neighbour to go out, so that they may shift the dividing fence a few inches on to his land). யாழ்ப்பாணத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதுதான் வூல்ப்வ் 'அரியதான' தனது கண்ணன் தன்மையை (கன்னித்தன்மைக்கு ஆண்பால்..? நான் கண்டுபிடித்ததுதான்) முதன்முதலாக அங்கிருந்த ஒரு பேர்கர் (Burghar) பெண்ணிடம் இழக்கின்றார்.

வூல்ப்பிற்கு யாழ்ப்பாணம் ஒரு உவப்பான சூழ்நிலையைத் தரவில்லை. இறுக்கமான சூழலால் மட்டுமின்றி, யாழ்ப்பாணத்து உயர்தர மக்களுடன் வரும் எதிர்ப்புணவும், வூல்ப்பால் யாழை, இலங்கையில் தனக்குப் பிடித்தமான ஒரு இடமாக ஏற்றுக்கொள்ள முடியாது செய்கின்றது. இதை கிறிஸ்டோபர் ஒண்டாஜ்ஜி இன்னும் தெளிவாக தனது வார்த்தைகளில் முன்வைக்கின்றார்...My (Christopher Ondaatjee) own expression, judging from the long chapter on Jaffna in Wolf's autiobiography, is that the friction was mainly with the best-educated people, not with the majority, the village cultivators and fisher people from the coast. Imperisalism granted on the feelings of the professional men, educated in English, much more than on those of the poor and unlettered-- just as it did in imperial India.... This laid down the future aim of the colonial system of education in the sub continent: to create 'a class of persons Indian in blood and colour, but English in opinions, in morals and in intellect"). யாழ்ச்சூழலில் இருந்த சாதியை மையமாக வைத்து வூல்ப்வ், 'இரண்டு பிராமணர்கள்' (The Two Brahmans) என்றொரு கதையை எழுதியிருக்கின்றார் (பிராமணர்கள் என்பதில் அவர் வெள்ளாளர்களையும அடக்குகின்றார் எனத்தான் நினைக்கின்றேன்). சாதியில் உயர்நிலையில் இருக்கும் இரண்டு பிராமணர்களான செல்லையாவும், சிற்றம்பலமும் எப்படி தமது சாதிகளிலிருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் என்பதை இக்கதை சொல்கின்றது. செல்லையாவுக்க்கு மீன்பிடித் தொழிலில் ஆசை வந்து அதை இரகசியமாக ஒரு மீனவரிடம் இருந்து பழகுவது அவர் சார்ந்த சாதிக்குத் தெரியவர அவர் அச்சாதியிலிருந்து ஒதுக்கப்படுவதாகவும், சிற்றம்பலம் தனது வீட்டுக்கிணற்றை வெட்டித்தந்த ஒரு தாழ்த்தபட்டவருக்கு கருணையுடன் கூடக்காசு கொடுத்து அன்பு பாராட்டியதற்காக ஒதுக்கப்படுவதாகவும் இக்கதை விரித்துச்சொல்லுகின்றது. ஆனால் இப்படி தங்கள் சாதியிலிருந்து ஒதுக்கப்பட்ட இரு குடும்பத்தினரின் அடுத்த சந்ததியினர் (செல்லையாவின்) மகன் ஒருத்தரும், (சிற்றம்பலத்தின்) மகள் ஒருத்தியும் காதலிக்கும்போது கூட எப்படி அவர்களுக்கிடையில் சாதித்திமிர் மீண்டும் முளைத்தெழுகின்றது என்பதை வெளிப்படையாக வூல்ப்வ் அக்கதையில் குறிப்பிடுகின்றார் (Each family finally accuses the other of polluting the caste. "Fisher! Low-caste dog!" shouted Cittampalam. "Pariah! scaramed Chellaiya). இறுதியில் இச்சாதிய இறுக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற செல்லையாவின் மகன் ஊரைவிட்டே ஒடிப்போவதாகச் சொல்வதுடன் கதை முடிகின்றது.

யாழில் பணிபுரிகின்ற காலங்களில் தற்காலிகமாய் சில மாதங்கள் மன்னாருக்கும் சென்று வூல்ப்வ் வேலைபார்க்கின்றார். சனநெருக்கடியற்ற மன்னார் வூல்ப்பிற்கு யாழ்ப்பாணத்தைவிட அதிகம் பிடிக்கின்றது. அங்கே முத்துக்குளிக்கின்ற மீனவர் சமூகங்களும், அரேபியர்களும் அவ்வளவு இறுக்கமான சாதிய அடுக்குநிலையில் இயங்கிக்கொண்டிருக்காததையும் வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். பிறகு வேலை இடமாற்றங்காரணமாய் கண்டியிலும், இறுதியாய் ஹம்பாந்தோட்டவிலும் வூல்ப்வ் பணிபுரிகின்றார். ஹம்பாந்தோட்டாவில் உதவி அரசாங்க அதிபராக (Assistant Government Agent) பணிபுரிவதால் அவர் விரும்பிய சில விடயங்களை -முக்கியமாய் புதிய பாடசாலைகள் ஆரம்பிப்பது- அவ்வூர் மக்களுக்காய்ச் செய்யமுடிகின்றது. ஒரு தமிழ்ப்பாடசாலையும் ஹம்பாந்தோட்டாவில் வூல்ப்வ் ஆரம்பித்துவைத்தார் என்ற குறிப்பும் வருகின்றது. கண்டியில் பணிபுரிகின்ற காலத்தில் - தூக்குத்தண்டைக்கு எதிரான கருத்துடையவராக வூல்ப்வ் பின்னாட்களில் இருந்தாலும்- வூல்ப்பின் அனுமதியுடன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் ஏழெட்டுப்பேர் தூக்கிலிடப்படுகின்றார்கள். அதேபோன்று பிரிட்டிஷகாரர்கள் ஒபியம் (போதை) பயிர்களை ஹம்பந்தோட்டாவில் பயிரிடும்போது எவ்வித எதிர்ப்பும் காட்டாது அதன் மூலம் வரும் வரியைச் சேகரித்து அரசாங்க வேலைகளுக்காய் வூல்பவ் செலவிடுகின்றார். இறுதியில் ஒரு சிங்கள விவசாயின் வீட்டை -ஒரு பிரச்சினையின் நிமித்தம்- தீ மூட்டச்சொல்லும் மேலிடத்தின் பணிப்புக்கு அடிபணியாததால் அவர் -ஒருவருட கட்டாய விடுமுறையில்- திருப்பி இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றார். அதற்கடுத்த வருடத்தில் (1912) வேர்ஜினியாவை வூல்ப்வ் இங்கிலாந்தில் திருமணம் செய்கின்றார். முதலிரண்டு முறைகள் வூல்ப்வ் propose செய்தும் மறுக்கின்ற வேர்ஜினியா, மூன்றாவது முறையாக இந்தச் 'சதமில்லாத யூதரை' (penniless Jew) திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கின்றார். ஒரு வித மனப்பிறழ்வு நோயிற்கு அடிக்கடி ஆளாகும் வேர்ஜினியாவுக்கு -அவர் ஆற்றில் தற்கொலை செய்யும்வரை- தான் உண்மையாக இருந்தேன் என வூல்ப்வ் கூறிக்கொண்டாலும், வேர்ஜினியா உயிரோடு இருந்த காலங்களிலேயே வூல்ப்விற்கு, ரெக்கி (Trekkie) என்ற திருமணமான பெண்ணோடு உறவு இருந்திருக்கின்றது. அதேசமயம், சிறுபிராயத்தில் தனது உடன்பிறவாச்சகோதரர்களால் (half brothers) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான வேர்ஜினியாவுக்கும் ஆணுடான உறவு அவ்வளவு உவப்பானதாய் இருக்காததால், இடைப்பட்ட சில காலங்களில் அவரொரு லெஸ்பியனாகவும் இருந்திருக்கின்றார்.

1960களில், வூல்ப்வ் மீண்டும் இலங்கைக்கு, தனது 'தோழி' ரெக்கியோடு பயணிக்கின்றார். முன்பு தான் பணிபுரிந்த யாழ்ப்பாணம் உட்பட அனைத்து இடங்களையும் மீண்டும் பார்க்கின்றார். 1900களில் தான் பார்த்த யாழ்ப்பாணம் இப்போதும் அப்படியே மாறாதுதான் இருக்கின்றது என்று வூல்ப்வ் குறிப்பிடுகின்றார் (In Jaffna he felt the place had not changed much since his time and was told that the people there were very conservative. Even in 1960, Jaffna had a character distrinct from other towns). அதேபோன்று 1900 களிலேயே சிங்கள/தமிழ்/முஸ்லிம்/பேர்கர் மக்களுக்கு சுவிஸிலிருக்கும் ஒரு அரசாங்க அதிகார அமைப்பே சரிவரும் என்று ஒர் தெளிவான பார்வையோடு வூல்ப்வ் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் (அந்தக்காலகட்டத்தில் -1900-களில் எவ்வித தமிழ்- சிங்கள இனக்கலவரமும் தோன்றாததையும் நினைவில் கொள்ளவேண்டும்; ஆனால் கண்டியில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரங்கள நடந்ததை வூல்பவ் குறிப்பிடுகின்றார்). அதேயேதான் 1960 பயணித்தபோது, சிங்கள அரசியல்வாதியொருவரின் மேடைப்பேச்சை கேட்டபோது தனக்கு இப்படித்தோன்றியதாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார்:
Woolf mentioned listening to one Sinhalese politician "screaming in a monotonous freenzy which carried me straight back to the days before the war when turned on the wireless and heard Hitler screaming through the microphone at the frenzied Nazis".

வூல்ப்வ் எழுதிய இன்னொரு சிறுகதையான, 'நிலவால் சொல்லப்பட்ட கதை' (A Tale Told by Moonlight) ஐந்து உயர்தர வர்க்க ஆங்கிலேய ஆண்கள் ஒரு மாலைபொழுதில் இங்கிலாந்தில் ஒரு சொகுசான இடத்தில் இருந்துகொண்டு தாம் கீழைத்தேய நாடுகளில் பெற்ற அனுபவங்கள் குறித்து உரையாடுவதாய் அந்தக்கதை இருக்கின்றது. அதில் ஒரே ஒருவர் மட்டுமே இலங்கையில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பவர். அவர் அடிக்கடி தமது பேச்சில் தமிழ்-சிங்களச் சொற்றொடர்களைச் சாதாரணமாய் உபயோகித்துவிடுவார். பிறகு மற்ற நண்பர்கள் நீ என்ன சொல்கின்றாய் என்று விளக்கந்தெரியாது வினாவுகின்றபோது அந்தநபர் விரித்துச் சொல்லத்தொடங்கிவிடுவார். அதில் 'இராமேஸ்வரத்திலிந்து காசி வரை' என்ற தமிழ்ச்சொற்றொடர் கூட வரும் (இந்தியாவை முழுதும் அறிந்தவர் என்பதுதான் இதற்கு அர்த்தம் என்ற பொழிப்புரையும் அந்தக்கதையில் கொடுக்கப்படும்). அதில் 'வேசி', 'ஐயோ' போன்ற சொற்கள பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கதையின் ஒரு பகுதியாய், கொழும்பில் சிவப்பு விளக்கு ஏரியாவிலிருக்கும் ஒரு பெண்ணில் மையல் கொள்ளும் ஒரு வெள்ளையர், அந்தப்பெண்ணை அந்தப் பகுதியிலிருந்து விடுவித்து ஆங்கிலமும், மேலைக்கலாச்சாரமும் சொல்லிக்கொடுத்து தன்னோடு வைத்துக்கொள்வார். என்ன தான் சொல்லிக்கொடுத்தாலும், தன்னைப்போல ஒரு அறிவுஜீவியாக இருந்து உரையாடும் 'வரம்' அந்தப்பெண்ணுக்கு கைவரவில்லை என்ற அலுப்பில் பின்னர் அந்தப்பெண்ணைக் கைவிட்டு இங்கிலாந்திற்கு அந்த வெள்ளையர் போய்விடுகின்றார். அவர் இங்கிலாந்து போன இரண்டாவது நாளில் Celestiinahami ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கின்றார். ஆனால் இறக்கும்போதுகூட அந்தப் பரிதாபமான பெண், 'பிங்க் கலர் ஸ்கேர்ட்டும், வெள்ளை நிற ஸ்ரொக்கிங்ஸும், சப்பாத்தும்' அணிந்தபடிதான் (மேற்கத்தைய கலாசார அடையாளங்களுடன்) தற்கொலை செய்திருப்பார். இங்கே, இப்படி வெள்ளையர்கள் தங்கள் (உடல்?)விருப்புக்கு துணைகளாக்கும் பெண்களை, பின்னாட்களில் வெள்ளையர்கள் வாழும் மேற்குச்சமூகம் இப்பெண்களை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும், அதேசமயம் இப்படி வெள்ளையர்களை மணப்பதால் அல்லது அவர்களோடு திரிவதால், மீண்டும் இந்தப்பெண்களை இவர்கள் சார்ந்திருந்த சமூகம் இவர்களை உள்வாங்க மறுக்குகின்ற அவலத்தையும் நாம் நினைவில் இருத்திக்கொள்ளலாம். லியனார்ட் வூல்ப்வ், பாப்லோ நெருடா போன்றவர்களாவது ஒருவித பாவமன்னிப்புப்போல தாங்கள் கீழைத்தேயங்களில் --தமது அதிகாரத்தைப்பாவித்து-- சிதைத்த பெண்களைப்பற்றியாவது வெளிப்படையாகக் குறிப்பிடும்போது 'அட அறுவாங்கள் இதையாவது சொன்னார்களே' என்று கேட்டுக்கொள்ளமுடிகின்ற அதேசமயம், சத்தமில்லாது எல்லா அட்டூழியங்களும் செய்துவிட்டு ஆனந்தசயனம் கொள்ளும் மற்றக்கனவான்களின் கல்லறைகளைத் தட்டி எழுப்பியா நாம் அவர்களை மறுவிசாரணை செய்யமுடியும்?

இந்நூலில், வூல்ப்வ் இருந்த இடங்கள் பயணித்த பாதைகள் ஊடாக கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிப்பதுடன், இன்றைய ஈழச்சூழ்நிலை குறித்து தனது குறிப்புக்களை எழுதிச்செல்வது ஒரு நூற்றாண்டுக்கு முன்பான பழைய இலங்கையை இன்றைய ஈழத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்ப்பை வாசகருக்கு ஒண்டாஜ்ஜி வழங்குகின்றார். யாழ்ப்பாணத்தில் வூல்ப்வ் பணி புரிந்த, தங்கியிருந்த அனேக இடங்கள் போரின் நிமித்தம் இன்று சிதைவுற்ற இட்ங்களாய், அடையாளங்காணமுடியாத பகுதிகளாய், கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் அபாயகரமான பிரதேசங்களாய் இருப்பதை கிறிஸ்ரோபர் படங்களாலும் குறிப்புகளாலும் இந்நூலில் நமக்கு ஆவணப்படுத்துகின்றார். யாழ், மன்னர் உட்பட நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளுக்கும் தான் போனது பற்றி ஒண்டாஜ்ஜி விரிவாக எழுதியதோடு ஏ9 (A9) பாதையினூடாக பயணித்தபோது கண்ட போரின் வடுக்களையும் பதிவு செய்திருக்கின்றார் (ஆனையிறவில் சிதைவுற்றிருக்கும் ராங் பற்றிய (tank) குறிப்புக்கூட வருகின்றது). ஒரளவு அரசாங்கச்சார்புச் செய்திகளைத்தான் அதிக இடங்களில் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் என்றபோதும், தான் பார்த்த சிங்கள, தமிழ் மக்களிடையே அவ்வளவு வித்தியாசமோ, வெறுப்போ தெரியவில்லையெனவும். ஆனால் இலங்கை அரசாங்கமும், சிறிலங்காப் படைகளும், விடுதலைப்புலிகளுந்தான் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்று தான் விளங்கிக்கொண்டதை நூலின் இறுதியில் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார்.

யாழ் கச்சேரியின் சிதைவடைந்த நிலையைப் பற்றிக்கூறும்போது, எனக்கும் சிறுவயதில் அப்பா யாழ் கச்சேரியில் பணிபுரிந்த காலங்களில் அவரோடு சில தடவைகள் கச்சேரிக்குப் போன ஞாபகங்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. 95 000 மேற்பட்ட புத்தகங்களும், மீண்டும் பெறவே முடியாத அரிய வரலாற்று ஆவணங்களும் யாழ் நூலகத்தோடு அழிக்கப்பட்ட வரலாற்றையே -இன்றைய உக்கிரமான போர்க்காலம்- மிகச்சின்ன விடயமாக்கிக்கொண்டிருக்கும்போது, பதினைந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகள் கூட ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் பார்ப்பது போன்ற பார்வையை தருவது வியப்பில்லைத்தானே.

ஆரம்பத்தில் தான் ஒரு ஏகாதிபத்தியவாதியாக -தன்னையறிமால் இருந்திருந்தாலும்- பின்னாட்களில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருந்ததாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். இங்கிலாந்தில் தான் அமைத்த Bloomsbury group ஊடாக பிரிட்டிஷ் அரசின் காலனியாதிக்கத்துக்கு எதிராக வூல்ப்வைப் போன்றவர்கள் குரல் கொடுத்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். வூல்ப்வ் எழுதிய குறிப்புகளை அவரெழுதிய காலத்தில் வைத்தே பார்க்கவேண்டும் என்றாலும், பல இடங்களில் வூல்பவ் ஒரு ஆணாதிக்கவாதியாகவும், ஏகாதிபத்தியவாதியாகவும் இருப்பதை நாம் மறைத்துக்கொண்டு உரையாடியவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு அழிக்கப்பட்ட சிங்களக்கிராமத்தைப் பின்னணியாக வைத்து எழுதிய வூல்ப்பின் நாவலான, The Village in the Jungle காலனியாதிக்கெதிரான ஒரு புதினமாய் இன்று பல விமர்சகர்களால் பார்க்கப்படுகின்றது. அநேக காலனியாதிக்கவாதிகள் போல சாதி, தாழ்த்தப்பட்டவர்களின் அவலம் போன்ற விடயங்களை, தங்களுக்கு அவசியமான விடயங்களல்ல எனப்புறந்தள்ளாது இவ்வாறான விடயங்களை கவனத்துடன் எடுத்துக்கொண்ட வூல்ப்வ் ஒதுக்கப்படவேண்டிய ஒரு காலனியாதிக்கவாதியும் அல்ல. முக்கியமாய், ஹம்பாந்தோட்டாவில் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட பெண்ணொருவர் ஒரு வழக்கை வூல்ப்வ் முன்னிலையில் கொண்டுவருகின்றார். தாழ்த்தப்பட்ட பெண்கள், மார்பைத் தொடும் ஒரு சின்னத்துணி மட்டுமே அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், இரவிக்கை (blouse) போட தனக்கு அனுமதி தருமாறு அப்பெண் கேட்கின்றார். எனென்றால் அரிசி போன்றவை இடிக்கும்போது இரவிக்கை போடாதிருப்பதன் அசெளகரியங்களை அப்பெண் முன்வைக்கின்றார். வூல்ப்வ் அவ்வ்வூர்களின் 'கலாசாரம்/மரபுகள்' மீது தான் இடையீடு செய்வதை விரும்பவில்லை என்று கூறுகின்றபோதும், இப்பெண் விரும்பினால் அவர் அவ்வாறு இரவிக்கை போட அனுமதிக்கவேண்டும் என அவ்வூரின் தலைவரொருவருக்கு கட்டளையிடுகின்றார்.

இப்போது மீண்டும் நாம் காலனியாதிக்கம் என்ற புள்ளிக்கு வருவோம். காலனியாதிக்கம் நமக்கு நல்லதல்லாதவற்றை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நல்லதையும் நமக்குத் தந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது. ஆங்கிலம் ஆரம்பத்தில் உயர்சாதி மேல்வர்க்கங்களால் கற்கப்பட்டாலும், பின்னாட்களில் காலனியாதிக்கவாதிகளால் பரப்பப்பட்ட கிறிஸ்தவ மதம், மிஸனரிகள் மூலம் அது ஒரளவேனும் தாழ்த்தப்பட்ட மக்களையும் போய்ச்சேர்ந்து பரவலான கல்வியறிவை அவர்கள் பெற உதவிசெய்திருக்கின்றது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமே சொந்தமென உயர்சாதிகள் (முக்கியமாய் யாழ்ச்சமூகத்தில்) கொண்டாடிய அறிவு/கல்வி அனைத்துச் சமூகங்களுக்கும் பகிரப்பட்டிருப்பது நல்லதொரு விடயமே. ஆனால் அதேசமயம் ஆங்கிலத்தைக் கற்பதாலும், ஆங்கில இலக்கிய/தத்துவ உரையாடல்களை அப்படி இறக்குமதி செய்வதாலும் மட்டுமே அறிவிஜீவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நமது தமிழ்ச்சமூகம் குறித்தும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. காலனியாதிக்கத்தின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்களை வளர்த்தெடுக்கும்போது, நாம் காலனியாதிக்கத்தின் தேவையற்ற எச்சங்களை உதிர்த்துவிட்டு தேவையான மிச்சங்களோடு நகரக்கூடிய ஒரு சுமுகமான சூழல் சிலவேளைகளில் அமையவும்கூடும்.

Photos: From the book 'Woolf in Ceylon'.
(Thami: 4 ur dream fulfilled...)