Aqsa Parvez கொலையை முன்வைத்தும், பிறவும்...
இன்னொரு கலாசாரத்தை/பண்பாட்டை/பழக்கவழக்கங்களை புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பலவேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள் புதிய நாட்டின் காலநிலை/கலாசாரம்/சட்டதிட்டங்களுடன் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கிறது. போர்/பொருளாதாரம் போன்ற... என்ன காரணங்களாய் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, தமது சொந்த நாட்டைப் பிரிந்துவந்த உளைச்சலோடு புதிய சூழலுக்குத் தங்களைப் பழக்கவேண்டிய அழுத்தமும் இருக்கின்றது. மேலும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களை இன்னுமின்னும் எளிதாகச் சுரண்டிக்கொண்டிருக்கும். ஒரு வேலையில் திருப்தியான சம்பளத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களது 'கனவு வேலை'க்குப் போக எளிய பத்து வழிமுறைகளென எழுதி/பேசி உங்களுக்கு ஆசை காட்டிக்கொண்டிருக்க நீங்கள் இயந்திரமாய் மாறி மாறி இடையறாது இயங்கிக்கொண்டிருப்பது அவசியமாகிவிடுகின்றது. வாய்ப்புக்கள் திறந்தநிலையில் இருக்கையில் அவற்றை எல்லாவிதத்திலும் உபயோகப்படுத்துவதை விரும்பாமல் இருக்குமா மனித மனங்கள்?
இயந்திரத்தனமான வாழ்க்கையிற்குள் மூழ்கியிருந்தாலும் நீங்கள் தனியாள் அல்ல. உங்கள் ஒவ்வொரு அசைவும் நுட்பமாய் கவனிக்கப்படுகின்றது. திருமணவிழாக்களில்/ஒன்றுகூடலில்/ வழிபாட்டுத்தலங்களில் உங்களைப் பற்றிய கதைகள் சிறகுகளுடன் பறக்கத்தொடங்குகின்றன. இவ்வாறான கதைகள்/கிசுகிசுக்கள் உங்கள் காதிற்குள் விழத் தொடங்கும்போது உங்களது சுதந்திரமான எல்லைகளைச் சுருக்கத் தொடங்குகின்றீர்கள். அவ்வாறு ஒடுங்கத் தொடங்குகையில், அதைக் கண்காணிபாய்/அதிகாரமாய் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் செலுத்தத் தொடங்குகின்றீர்கள். அதிகாரம்/கண்காணிப்பு/ஒடுக்குதல் என்பவற்றை இலகுவாய் அது நமது கலாசாரம்/பண்பாடு என்று செப்பி அதை ஒற்றைத் தன்மைக்குள் புகுத்திவிட்டு எளிதாக நகர்ந்துவிடவும் விரும்புகின்றீர்கள்.
கூட்டுக்குடும்பம்/கூட்டுக் கலாசாரம்/உறவுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் (அவற்றினூடாக சாதி நுட்பமாக தமிழ்ச்சமூகத்தில் புகுத்தப்படுவதும் கவனிக்கத்தது) கலாசார பின்புலங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கு தனிமனித உரிமைகள், தனிப்பட்ட விருப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேலை நாடுகள் ஒரு கலாசார அதிர்வை ஏற்படுத்துகின்றன. அந்த அதிர்வை எப்படி எதிர்கொள்வது என்பதும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து எப்படி இடையறாது உயிர்த்திருத்தல் என்பதும்தான் கவனிக்கபபடவேண்டியது.
அண்மையில் கனடாவில் hijab (பர்தா?) அணியவில்லை என்ற காரணத்துக்காய் (அது முக்கிய காரணமே தவிர அதுமட்டுமில்லை காரணம்) பதினாறு வயது பெண் (Aqsa Parvez) ஒருவர் தகப்பனால் கொல்லப்பட்டிருக்கின்றார். கொல்லப்பட்ட பதின்ம வயதுப்பெண்ணின் நண்பர்கள், இந்தப்பெண் பர்தா மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் பலமுறை தகப்பனால் உடல்/உள வன்முறைக்கு ஆளாகப்பட்டிருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். மேலும் பர்தாவும், தளர்வான ஆடைகளும் அணிந்தபடி வீட்டிலிருந்து வெளிக்கிட்டு, பாடசாலையில் இறுக்கமான ஆடைகளை அணிந்தும்... பிறகு வீடு நோக்கிச் செல்லும்போது மீண்டும் பர்தா மற்றும் தளர்வான ஆடைகள் அணிபவர் அந்தப்பெண் என்றும் அவரின் நண்பர்கள் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறான முரண்பாடுகளின் நீட்சியிலேயே அந்தப்பெண் கொல்லப்பட்டிருக்கின்றார் என்று நம்பப்படுகின்றது.
இந்தக் கலாசார அதிர்வு/ மற்றும் புதிய சூழலுக்குப் பழக்கப்படுதல் என்பவை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல. புலம்பெயர்ந்த எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து ஒரேவிதமான ஸ்ரிரியோ வகை கருத்துக்களை பரப்ப விரும்பும் ஊடகங்களுக்கு..., பார்த்தீர்களா முஸ்லிம்கள் அனைவரும் இப்படித்தான் காட்டுமிராண்டித்தனமானவர்கள் எனக் கூற அவல் கிடைத்துவிட்டது. அந்த நுண்ணரசியல்தான் கனடாவில் எத்தனையோ விடயங்கள் நிகழ்ந்தும் புறக்கணித்த சி.என்.என் (CNN) இந்தச்சம்பவத்தை அடிக்கடிக் காட்டச் செய்திருக்கின்றது (அதற்காய் இஸ்லாமிய அடிப்படைவாதம் விமர்சிக்கக்கூடாது என்பதல்ல அர்த்தம்) . இந்தச் சம்பவம் நடக்கும் சில மாதங்களுக்குமுன் ஒரு தமிழ்த் தந்தை அவரது மகள் ஒரு ஆண் நண்பரோடு (இருவரும் டேட்டிங் செய்தார்களென வாசித்தாய் நினைவு) இருந்த சமயம் அவர்களை நோக்கி வானை ஏற்ற முயன்றதையும், அவரது மகள் சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றார் என்பதையும் நினைவில் இருத்தவேண்டும். சில வருடங்களுக்கு முன் வன்கூவரில், ஒரு சீக்கிய பின்புல பெண், சாதி குறைந்த ஒருவரை நேசித்ததால், மிக நுட்பமாக இந்தியாவிற்குக் கூட்டிச்செல்லப்பட்டு அவரது தகப்பனாலும், சகோதரகளாலும் கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது சிபிசி(CBC) தொலைக்காட்சியில் ஆவணபடுத்தப்பட்டு, பரவலான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டதையும் நாமனைவரும் அறிவோம். எனவே இந்த குடும்ப வன்முறை, கலாசாரவிதமாய் ஒடுக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல என்ற புரிதலோடே இவ்வாறான விடயங்களை அணுகவேண்டியிருக்கிறது (சில கனடிய ஊடகங்கள் -ரொரண்டோ ஸ்ரார் போன்றவை- முஸ்லிம் சமூகம் என்று பார்க்காது பொதுவாய் அனைத்துப்புலம்பெயர் சமூகங்களுக்கும் உரிய பிரச்சினையெனப் பேசுவது ஆறுதல் தருகின்றது).
2.
தாம் புலம்பெயர்ந்து வந்த நாட்டின் கலாசாரத்தோடு சிறிதும் மாறாமல் இருக்கப்போகின்றவர்களுக்கோ அல்லது அப்படியே புலம்பெயர்ந்து வந்து புதிய நாட்டின் கலாசாரத்தை முற்றுமுழுதாய் எந்தக்கேள்விகளுமில்லாது ஏற்றுக்கொள்பவர்களுக்கோ இவ்வாறான பிரச்சினைகள் அதிகம் இருப்பதில்லை. இரண்டு கலாசாரங்களுக்கிடையில் (தாய்நாடு X புலம்பெயர்ந்த நாடு) சிக்கிக்கொண்டு எதை எதை தமக்குரியதாக தேர்ந்தெடுப்பது என்று நினைத்து அலைக்கழிப்பவர்களுக்க்த்தான் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
இந்தக் கலாசார அதிர்வுகளை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களில் பெற்றோருக்கே முழுப்பொறுப்பு இருக்கின்றதென அவர்களை நோக்கி சுட்டுவிரல்களைக் காட்டுவதிலோ, அல்லது இந்தக்காலத்துச் சிறுசுகளே இப்படித்தானென பெருமூச்சுவிட்டபடி இளையவர்களை நோக்கி முழுதாய் குற்றஞ்சாட்டுவதிலோ.. உருப்படியாக நம்மால் எதையும் சாதிக்கப்போவதில்லை. நம் அனைவருக்கும் பொறுப்புகளும் சகிப்பத்தன்மையும் பிறரை விளங்கிக்கொள்ளலும் அவசியம் என்ற புள்ளியிலே நாம் இவற்றை அணுகவேண்டியிருக்கின்றது. பெற்றோர்கள் அனைத்துச் சுதந்திரம் கொடுத்தும், அதை எவ்வாறு எடுத்துக்கொள்வதென்று விளங்காது பிள்ளைகள் சீரழிந்துபோன நிகழ்வுகள் இங்கே நிறைய நடந்துகொண்டிருக்கின்றன. அதேவேளை புதிய சூழலுக்கு ஏற்பத்தான் தங்கள் பிள்ளைகள் மாறிகொண்டிருக்கின்றார்கள் என்று புரியாமல் பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பருவவயது மாற்றம் இன்னபிற சுழற்சி வட்டங்களுக்குள் திணறிக்கொண்டிருக்கும் பிள்ளைகள், தமது பெற்றோர்களும் தம்மை வளர்க்க வைக்க அவர்கள் வாழும்/பழகும் சூழலிற்குள் சிக்கிக்கொண்டு பல விதமான அழுத்தங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பலவேளைகளில் மறந்துவிடுகின்றார்கள். நம்மைபோன்ற கலாசார பின்புலங்களோடு வருகின்ற பெற்றோர்களில் அநேகர், பிள்ளைகள் மட்டுந்தான் தமது எதிர்காலமென நினைத்து பிள்ளைகளை வளர்க்கத் தொடங்குகின்றார்கள். எனவே பிள்ளைகள் தமது விருப்புக்களுக்கு எதிராய் சிறிது நகரும்போதுகூட உடனேயே அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்குகின்றார்கள். பிறகு இரண்டு தரப்பினரும் மன உளைச்சல்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் ஆளாகுகின்றனர்.
இங்கே, Aqsa Parvez கொல்லப்பட்டதை எதன் பொருட்டும் எவரும் நியாயப்படுத்தமுடியாது. மேலும் பர்தா அணிவது பற்றி, வ.கீதா ஒரு கலந்துரையாடலில் கூறிய கருத்தையே எனது கருத்தாகவும் இங்கே பதிவு செய்கின்றேன். பர்தா அணிவது குறித்து முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கவேண்டியது. குறிப்பாய் முஸ்லிம் பெண்களுக்குரிய தேர்வே தவிர பிறர்க்கு உரியதல்ல. ஒரு முஸ்லிம் பெண்ணேதான் அவர் hijab அணிய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அவரது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கவேண்டுமே தவிர நாங்களல்ல. இவ்வாறான தேர்ந்தெடுக்கும் ஒரு சுதந்திரமான வெளி முஸ்லிம் பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று மட்டுமே -வெளியாட்களாக- நாங்கள் வற்புறுத்தவேண்டும்.
இரண்டு சம்பவங்களை எடுத்துக்கொள்வோம்.
(1) உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலங்களில், ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்க முடிந்திருந்தது. அதில் பெற்றோர் X பிள்ளைகள் என்ற புள்ளியில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அநேகமானவர்கள் பிள்ளைகளையே பிறாண்டிக்கொண்டிருந்தார்கள். கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரு தாய், தனது மகள் இன்று நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருக்கின்றார்... ஆண்கள்/பெண்கள் என்று பலவேறு கலாசாரப்பின்புலங்கள் உள்ள நண்பர்களோடு போயிருக்கின்றார்..என்னிடம் அனுமதி கேட்டுத்தான் எனது பிள்ளை சென்றார் என்று கூறியிருந்தார். மேலும், இவ்வாறு இரண்டு தரப்பையும் அழுத்தாத புரிந்துணர்வுடன் நாம் பிள்ளைகளை அணுகவேண்டுமென அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் நமது பண்பாட்டைக் காக்கும் ஆகிருதிகள் சும்மா விடுவார்களா என்ன? இதெல்லாம் ஒரு பிள்ளை வளர்ப்பா? இப்படிப் போகின்ற பிள்ளை அங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா அதாம் இதாமென்று வானொலியில் வந்து அலட்டத் தொடங்கியிருந்தார்கள்.
(2) ஈழத்தில் பைலாப்பாட்டுக்களில் கலக்கிய ஏ.ஈ.மனோகரன், நித்தி ஆகியோர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வுக்கு போயிருந்தேன்/தோம். இவ்வாறான நிகழ்வுகளை கர்நாடக சங்கீத சபாக்களைப் போல இறுக்கமாய் இருந்து பார்ப்பதில் நம்மவர்கள் வல்லவர்கள்.. அந்நிகழ்வில் மேடையில் பாடிக்கொண்டிருப்பவர்களே -சபையின் இறுக்கத்தைப் பார்த்து- எழும்பி ஆடுங்களென அறைகூவல் விடுத்தபோது வளாக நண்பர்கள் எழும்பி ஆடத் தொடங்கியிருந்தார்கள். அப்படி ஆடிக்கொண்டிருந்தபோது பெற்றோர்/உறவினர்களோடு வந்திருந்த சில பெண்களும் தங்கள்பாட்டில் எங்களுக்கருகில் வந்து ஆடத்தொடங்கினார்கள். உடனே நமது கலாசாரக்காவலர்கள் அதெல்லாம் அப்படியிருக்கூடாதென அந்தப்பெண்களை சிறிது நேரத்திற்குள்ளே திருப்பி அனுப்பியிருந்தார்கள். இத்தனைக்கும் அந்தப்பெண்கள் தமது பெற்றோரின் அனுமதியுடன் ஆட வந்திருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பெற்ற பிள்ளைகள் மீது பெற்றோரைவிட நமது கலாசார காவலர்களுக்கு இவ்வளவு அக்கறையா என வியக்கத்தான் வேண்டியிருந்தது.
இவை எளிய உதாரணங்கள். இங்கே வரும் இலவசப்பத்திரிகையான மெட்ரோவில் ஒரு பெண் -பத்தி எழுத்தாளர்- கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. நாம் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் கூறி முழுமையான மனிதர்களாய் வளர்த்துவிட முடியாது. ஒன்றேயொன்றைத்தான் நாம் உறுதியாக... பிள்ளைகளுக்குச் செய்யமுடியும். அவர்களாய் அனுபவங்களினுடாக வாழ்வைக் கற்றுக்கொள்ளும்போது என்ன நடந்தாலும் திரும்ப வரும்போது உங்களை ஏற்றுக்கொள்வோம் எனத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டுமென்று கூறுகின்றார்.
அண்மையில் ராப் பாடகர் நாஸும் (Nash) ஒரு நேர்காணலில், இன்றைய இளைஞர்கள் எம்மைப் பார்த்து பெரியவர்கள் குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அலுப்புத்தருவது என்ன என்றால், தாங்கள் இளைஞர்களாய் இருந்தபோது தாங்கள் ஒரு தவறும் செய்யாத மாதிரி இந்தப்பெரியவர்கள் கதைத்துக்கொண்டிருப்பதுதான் என்று வெளிப்படையாக நாஸ் கூறியிருக்கின்றார். இன்றைய இளைய சமுதாயத்தைப் பற்றிக் குறை கூறும் வளர்ந்தவர்கள் - சற்று நிதானமாய் தமது கடந்துவந்த இளமைப் பருவங்களை நினைத்துப் பார்ப்பார்கள் என்றால்- பிள்ளைகளை இன்னும் நெருக்கமாய்ப் புரிந்துகொள்ள முடியும்.
மேலும் சொன்ன உதாரணத்தைப் போல, பிள்ளைகள் தாங்கள் செய்யவிரும்புவதைச் செய்யப்போகின்றோம் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்கும்போது பெற்றோர்கள் மறுத்தால் என்ன செய்வார்கள்..? அதை உடைத்து வெளியேறத்தான் செய்வார்கள். இவ்வாறு ஒரு பொதுவெளியில் ஆண்களோடு பெண்கள் ஆடுவதை மறுத்ததை நினைக்கும்போது, பெற்றோருக்குத் தெரியாது டான்ஸ் கிளப்புகளில் ஆடிக்கொண்டிருக்கும் பெண்கள்/ஆண்கள் நினைவுக்கு வருகின்றார்கள். ஒரு கட்டத்தில் கிளப்புக்களில் நிறைய மதுபானம் அருந்தியும் தாம் என்ன செய்கின்றோம் என்று அறியாது சீரழிந்துபோன பலர் இருக்கின்றார்கள். வெள்ளம் தலைக்கு மேலே வந்ததன்பிறகு ஒப்பாரி வைப்பதைவிட, ஒருவித புரிதலோடும், மெல்லிய கண்காணிப்போடும் பிள்ளைகளை அவர்களுக்குப் பிடித்ததைச் செய்யும்போது அவர்கள் சீரழியாமற் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் அல்லவா?. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
3.
அண்மையில் வந்த ஒரு பேப்பர் இதழில் (Issue 83), P.கருணாகரமூர்த்தி என்பவர் (பொ.கருணாகரமூர்த்தியும் இவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) 'இரண்டு முத்தங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அ.முத்துலிங்கத்தின் 'சுளுக்கெடுத்தவன்' கதையில் ஆரம்பித்து, அன்ரன் செக்கோவோடு முடிச்சிட்டு, ஈழத்துச் சம்பவங்களோடு அந்தக் கட்டுரை விரிகின்றது. அதில் கனகா என்ற பெயரில் இருக்கும் பெண்களைப் பற்றிய பல 'சுவாரசியமான' விடயங்களைச் சொல்கின்றார். அனுராதபுரத்தில் - பலருக்கு ஆசை நாயகியாக இருந்த sex bomb- கனகா, வடமராட்சியில் -'அட்டகாசமான மார்புகள் மற்றும் மேல்பாதியை எப்போதும் காற்றாட வைக்கும் - இன்னொரு கனகா என்று பல பேரைப் பற்றிக்கூறுகின்றார்.
(கட்டுரைக்கு அப்பால்) இதை விட ஈழத்தில் - இனப்பிரச்சினை தீவிரமாவதற்கு முன்னர்- முக்கியமாய் யாழ்ப்பாணத்தில் சிங்கள மற்றும் மலையகப்பிள்ளைகளை எல்லாவிதமாய் சுரண்டிய ஒரு 'மூத்த சமூகம்' நமக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதை நாமனைவரும் அறிவோம். போர் வந்து நம்மை அசைக்காவிட்டால் அந்த மற்றப்பக்க அத்தியாயம் தொடர்ந்து புதிது புதிது மாற்றப்பட்டு எழுதப்பட்டே கொண்டிருக்கும்.. கூடவே பல அப்பாவிகளின் வாழ்வு சீரழிக்கப்பட்டே கொண்டிருக்கும். ஆகவே எமது மூத்த தலைமுறை/பெற்றோர்கள் எந்தக்கூத்தையும் செய்யாது புனிதர்களாக இருந்தவர்களாகவுமில்லை. ஊருக்கொரு சண்டியர்களைப் பற்றி நாவலே எழுதக்கூடியவளவுக்கு சண்டியர்கள் ஒருகாலத்தில் ஈழத்தில் நிறைய இருந்திருக்கின்றார்கள் மட்டுமில்லை, இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர், சண்டியர்களும் சாதிவெறியர்களும் -ரெட் குரூப், தீனா குரூப், etc- என்று மீளவும் கோவணத்தை இறுக்கக்கட்டியபடி தலைநிமிர்ந்துமிருக்கின்றார்கள் என்பது அண்மைக்கால வரலாறு. எனவே தொடர்ச்சியாய் இவ்வாறு 'நல்ல விடயங்களை' நம்மினத்தின் மரபின் நீட்சியாய்க் கொண்டிருந்த நம் மூத்தோர்கள்தான்... அட நமது இளைய சந்ததி வீணாய்ப்போகின்றதென தொட்டதற்கெல்லாம் அலறிக்கொண்டிருக்கின்றார்கள்.
அதுகூடப் பரவாயில்லை, இந்த 'இரண்டு முத்தங்கள்' கட்டுரையை, கருணாகரமூர்த்தி எப்படி முடிக்கின்றார் எனப்பாருங்கள், ' ... வெட்டவெளியில் பட்டப்பகலில் ஒரு தமிழச்சி முத்தமிடுவதென்பது சற்று நெருடலைத் தந்தாலும், நான் சுளுக்கெடுக்கிறவனையும் வெகுவாக இரசித்தேன்' என்கிறார். கனகா என்கின்ற sex bomb..., காற்றாட மேற்பகுதியை தாரளமாய்த் திறந்து வைக்கின்ற வடமராட்சிக் கனகா... எல்லோரையும் தெரிந்த/இரசிக்கின்ற கருணாகரமூர்த்தியிற்கு ஒரு தமிழச்சி பட்டப்பகலில் வெட்டவெளியில் முத்தமிடுவது மட்டும் நெருடலைத் தருகின்றதே அது ஏன்? அங்கேதான் நமக்குள்ளிருக்கும் கலாசார அடிப்படைவாதம் பல்லிளிக்கத் தொடங்குகின்றது.
எங்கள் திருமணத்தில், மணப்பந்தலில் கூறைச்சேலையும் உடல்முழுக்க நகைகளையும் போட்டு வெட்கபட்டபடி இருக்கும் ஒரு மணப்பெண்ணைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், தேனிலவில் இந்தப் பெண் ஆடைகளையும் நகைகளையும் கழற்ற அனுமதிப்பாரா என்ற சந்தேகித்தால் கூட -நம் கலாசாரம் தெரியாத மேற்கத்தையவர் இப்படிக் கேட்கிறார்- பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் sex bomb கனகாக்களை எல்லாம் நன்கு தெரிந்த கருணாகரமூர்த்தியிற்கு தமிழ்ச்சி ஒருத்தி வெட்டவெளியில் முத்தமிடுவதைச் செரிக்கத்தான் கஷ்டமாயிருக்கின்றது. என்ன கொடுமையடா இது?
3.
கொல்லப்பட்ட Aqsa Parvez, வீட்டில் ஒரு ஆடை... வெளியில் பிடித்தமான ஆடை என்று அணிவது என்று அவர் மட்டுமே செயததில்லை. எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் வீட்டுக்குத்தெரியாமல் இருக்க என, பாடசாலையில் வந்து தொள்தொளவான ஆடைகள் மாற்றி -கறுப்பினத்தவர்களின் நாகரீகத்திற்கேற்ப- அணிந்ததைப் பார்த்திருக்கின்றேன். வளாகத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தாங்கள் தயாரித்தளித்த நாடகங்களில் கூட நண்பர்கள் பொதுவில் முன்வைத்திருக்கின்றார்கள். நான் காதில் கடுக்கன் போட்டுத்திரிந்த காலங்களில் - வீட்டால் அவ்வளவு பிரச்சினை வராது என்று தெரிந்தும்- ஒரு விதமான மனத்தடையோடே பெற்றோர்/சகோதரகளுக்கு முன் அதை அணியாமல் தவிர்த்திருக்கின்றேன். எனவே எல்லோரும் கலாசார அதிர்வுகளினூடாக நமக்குப் பிடித்ததைச் செய்யும்போது பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகத்தான் செய்கின்றோம்.
இந்த முஸ்லிம் பெண், வீட்டிலிருக்கமுடியாது என்று இரண்டாவது முறையாகவும் வீட்டை விட்டு வெளியேறி தனது உடமைகளை மீண்டும் சேகரிக்கச் சென்ற சமயமே கொல்லப்பட்டிருக்கின்றார். கொஞ்சம் நிதானமாகவும், வெளிப்படையாகவும் இந்த விடயத்தை இந்தப்பெண்ணின் குடும்பம் அணுகியிருந்தால் எத்தனையோ பேரின் வாழ்வு சிதையாமல் தடுத்திருக்கலாம் (குடும்பவன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் போகும் shelter ற்கு போவதான எண்ணத்தில் இந்தப்பெண் இருந்திருக்கின்றார் எனச்செய்திகள் கூறுகின்றன). சில வருடங்களுக்கு முன் இப்படித்தான் எனது தோழியொருவரின் தங்கை ஒருவர் வீட்டிலிருந்து காண்மற் போயிருந்தார். அந்தப்பெண்ணை அவர்களின் முழுக்குடும்பமே தேடிக்கொண்டிருந்தது (அந்த அந்தரமான பொழுதில் தோழியின் தாயார் என்னோடு உரையாடியபோது என்ன ஆறுதல் சொல்வதென்று தவிர்த்ததும் இப்போதும் நினைவினிலுண்டு). பிறகு தோழியின் சகோதரி ஒரு ஷெல்ட்டரின் இருக்கின்றார் என்றறிந்ததும் அந்தக்குடும்பம் நிம்மதியடைந்தது. வீட்டில் பெற்றோரால் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒடுக்குமுறை இல்லாதபோதும் இந்தப்பெண் அடிக்கடி வீட்டை விட்டு மறைவதும் வருவதுமாய் இருக்க, ஒருகட்டத்தில் ஷெல்ட்டரில் இருந்து அழைத்து வருவதை தோழியின் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் ஷெல்ட்டர் வாழ்வு நாம் நினைப்பது போல் அவ்வளவு இலகு அல்ல என்று உணர்ந்து பின்னாட்களில் அந்தப்பெண் தோழியின் குடும்பத்தோடு இணைந்துகொண்டார். இதே முறையை இந்த பாகிஸ்தானிய குடும்பத்தினர் செய்திருந்தால் ஒருவரின் வீணான மரணத்தைத் தடுத்திருக்கலாம். எங்கள் எல்லோருக்குள்ளும் அடிப்படைவாதம் இருக்கின்றது. அது மதம் சார்ந்தும் மொழி சார்ந்தும் சாதி சார்ந்தும் கூடவே வந்தபடி இருக்கின்றது. அதனுள் இருந்து எப்படி விடுபவது என்பதே நமக்கு முன்னாலுள்ள முக்கியமான கேள்வி. இந்தப்பிள்ளையும் பெற்றோரும் சமரசம் செய்யக்கூடிய ஒரு புள்ளி நிச்சயம் இருந்தேயிருக்கும். கனடா போன்ற பல்கலாசார சமூகத்தில் சகிப்பத்தன்மையோடு வாழ்கின்ற நாம் வன்முறையில்லாது எந்த விடயத்தையும் சமரசம் செய்துகொள்வதற்கான வெளி நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றது என்பதை ஏன் இலகுவில் நாமனைவரும் மறந்துபோய்விடுகின்றோம்?
எமதேயான நம்பிக்கைகள்/விருப்புக்கள் மட்டுமே மிகச்சரியாக இருக்குமென இறுக்கமடையும்போது நாம பிறர் உரையாவதற்கான வெளிகளை அடைத்தே விடுகின்றோம். நாம் எமது நம்பிக்கைளோடு, எமக்குப் பிடித்ததைச் செய்வற்கு சுதந்திரம் இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்களாயிருப்பின், அதே நம்பிக்கைகளோடு இருக்கவும் விரும்பியதைச் செய்யவும் பிறரிற்கும் உரிமை இருக்கின்றது என்பதை வசதியாய் மறந்துவிடுகிறோம். இங்கே தான் நினைத்ததே சரியென்று நினைத்த தந்தையொருவர் மகளை இழந்திருக்கின்றார், கொலைகாரர் ஆகியிருக்கின்றார். ஒரு குடும்பமே சின்னாபின்னமாகி நிற்கின்றது.
பத்து வ்ருடங்களுக்கு முன் நான் வானொலியில் கேட்ட பெற்றோர் X பிள்ளைகள் தலைமுறை இடைவெளி உரையாடல்கள் இன்று தமிழ்த் தொலைக்காட்சி வரையில் நீண்டுகொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். நிச்சயம் இதுவொரு நல்லவிடயமே. நாம் தொடர்ந்து த்லைமுறை இடைவெளிகள் பற்றியும், புதிய கலாசாரத்தைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் தொடர்ந்து உரையாடும்போதே பலவிடயங்கள் குறித்து நாம் தெளிந்துகொள்ள முடியும். ஆகக்குறைந்து ஒருவர் ஏற்கனவே செய்துவிட்ட தவறை நாம் இன்னொரு முறை திருப்பச் செய்யாது அதன் வலிகளிலிருந்து தப்பிப் போய்விடவாவதுமுடிகின்றது. நாம் எல்லோரும் பிறந்த நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தது அதைவிட செழிப்பான ஒரு வாழ்வைத்தேடித்தான்..எனவே அப்படியொரு வாழ்வை நாம் அமைக்க விரும்புகின்றபோது பலவற்றை விலத்தியும் சில்வற்றை நமது வாழ்வில் சேர்த்துக்கொள்ளலும் அவசியமாகின்றது. எந்த விடயம் என்றாலும் -அது மொழியாய் இருந்தாலென்ன, கலாசாரமாய் இருந்தாலென்ன, மதமாய் இருந்தாலென்ன- அது திணிக்கப்படாது இயல்பாய் உள்வாங்கப்படும்போதே அது நீடித்து நிற்கும். வற்புறுத்தித் திணிக்கப்படும் எதுவும் அதன் எதிர்விளைவை நாம் திணிப்பதைவிட இன்னும் மோசமாய்க் காட்டும் என்பதை ஒருபோதும் மறந்தோ/மறுத்தோ விடமுடியாது.
குறிப்புகள்:
- இதை பெற்றோர் X பிள்ளைகள் என்று இரண்டுபக்கமாய் எழுத விரும்பியிருந்தாலும், பிள்ளைகள் பக்கம் அதிகம் சார்ந்து நின்று எழுதியதாகத் தெரிகின்றது. ஒரு பெற்றோருக்கான அனுபவம் எனக்கில்லை என்பதால் இருக்கலாம்.
- ஒரு ஒழுங்கான அமைப்பிற்குள் கொண்டுவராமலே எழுத முயன்றேன். எனெனில் இவ்வாறான விடயங்களுக்கு முடிந்த முடிவென்பது எதுவுமேயில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்தும் அது தனித்துவமும் தனிப்பட்டதுமான விடயமாகும்.
- யாரோ ஒருவர், Aqsaவின் சம்பவத்தின் பிறகு, அனைவரும் முஸ்லிம்களின் ரக்ஸிகளைப் (taxi) புறக்கணிக்கவேண்டும் என எழுதியிருக்கின்றார். இவ்வாறான எதிர்ப்பிலிருக்கும் அரசியலையும் காழ்ப்புணர்வையும் நாம் மத/மொழி/கலாசார அடிப்படைவாதத்தை எதிர்ப்பதுபோல எதிர்க்கவே வேண்டும்.
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்தக் கட்டுரையில் உள்ள பல விஷயங்கள் (இசுலாம் சமூகத்தவரை ஊடகங்கள் அடிப்படைவாதிகளாகவும் சகிப்புத் தன்மையற்றவர்களாகவும் கட்டமைக்க முயல்வது, கண்காணிப்பு / ஒடுக்குதல், கலாச்சார போலீஸ்) இங்கும் நடப்பவைதான்.
12/20/2007 06:08:00 AMநிறைய உணர்ந்து கொள்ள முடிந்தது, டி.ஜே, நன்றி.
நன்றி சுந்தர்.
12/21/2007 10:46:00 AM....
(1) அண்மையில் வைத்தியரைப் பார்ப்பதற்காய் காத்துக்கொண்டிருந்தவேளையில், ஒரு fashion சஞ்சிகையில், இங்கிலாந்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரையும் 'பயங்கரவாதிகளாக' கட்டியமைக்கும் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அந்தக்கட்டுரையில் உள்ள இனத்துவேசத்தைவிட, முற்றுமுழுதாக நவநாகரீக ஆடைகள்/அலங்காரம் பற்றி மிகுதி அனைத்துக்கட்டுரைகளும் இருக்க, இப்படியான ஒரு கட்டுரை ஏன் புகுத்தப்பட்டது என்ற நுண்ணரசியல் பற்றித்தான் அதிகம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
(2) இம்மாத -மார்கழி- உயிர்மை சஞ்சிகையில் இலண்டன் வாழ் தமிழ்மக்களின் 'பெருமைகள்' சிலது குறித்து இளைய அப்துல்லா எழுதியிருக்கின்றார். உண்மைகள் எதுவெனினும் அவைகுறித்து வெளிப்படையாக பேசப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவுமில்லையெனினும், புலம்பெயர்ந்தவர்கள் குறித்து அந்தக்கட்டுரையிலிருக்கும் அபத்தங்கள் சிலவற்றையாவது குறிப்பிடவேண்டியிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் செய்யும் 'தில்லுமுல்லுகளால்' இங்கிலாந்து அகதிகளின் நிலையை இன்னும் இறுக்குகின்றது என இளைய அப்துல்லா எழுதுகின்றார். முதலில் இலண்டனில் இருக்கும் ஈழத்தமிழரில் எத்தனை வீதத்தினர் இந்தத் தில்லுமுல்லுகள் செய்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும். ஏற்கனவே சில இடங்களில் குறிப்பிட்டமாதிரி, மேலைத்தேய நாடுகள் வெள்ளைத்தோலர்கள் குற்றமிழைக்கையில் அது தனிப்பட்டவர்களின் குற்றங்களாகவும், புலம்பெயர்ந்தவர்கள்/அகதிகள் எவரும் குற்றமிழைக்கையில் அவர் சார்ந்திருக்கும் முழுச்சமுகத்தின் குற்றமாகவும் கட்டமைக்கும் சிந்தனைமுறைகள் ஆய்வுக்குரியது. இங்கே நாங்கள் அடிக்கடி நகைச்சுவையாகச் சொல்லும் சம்பவந்தான் நினைவுக்கு வருகின்றது. 1988ல் பென் ஜோன்சன் 100 மீற்றர் ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் பெற்றபோது அவர் கனடியர் என ஊடகங்களால் கொண்டாடப்பட்டார். பிற்கு போதைமருந்து பாவித்தார் என்ற காரணத்தால் பதக்கம் பறிக்கப்பட்ட்போது கனடியர் என்ற சொந்தம்கொண்ட்டாடிய ஊடகங்களே அவரை ஒரு ஜமேக்கன் என எழுதித்தள்ளின. இப்படித்தான் பல விடயங்களின் அரசியல் இங்கே இருக்கின்றன.
இளைய அப்துல்லாவின் கட்டுரையில் உள்ள அபத்தத்தை இன்னும் சுட்டுவதனால், இத்தாலி மாஃபியாவின் தேடப்படும் பல பெருந்தலைகள் இங்கே ரொரண்டோ, மொன்றியலில் சொகுசாக இருந்துகொண்டு, இன்னும் தமது தொழிலைத் திறம்பட நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவர்கள் குற்றவாளிகள்... எனவே இருக்கும் மற்ற இத்தாலியர்களும் குற்றவாளிகள், இத்தாலியில் இருந்து குடிபெயரும் அனைவரையும் சந்தேகிக்கவேண்டும்/அவர்களுக்கான ச்ட்டங்களை இறுக்கவேண்டும் என்று சொல்ல முடியு,மா என்ன? இங்கு அண்மைக்காலங்களில் நடந்த பல போதைப்பொருள் க்டத்தல்/க்ஞ்சா மரங்களை வளர்த்தலில் சில சீக்கியர்களும் பிடிபட்டிருக்கின்றாரக்ள். உடனே இங்கிருக்கும் சீக்கியர்களால சட்டம் ஒழுங்கு குலைகிறது. எனவே புதிதாய் இந்தியாவிலிருந்து வரும் சீக்கியர்களுக்காய் சட்டங்களை இறுக்கவேண்டும் என்று சொல்வது அபத்தமாகவல்லவா இருக்கும்? ஒரு பத்திரிகையாளராகவும் இருக்கும் இளைய அப்துல்லா, இந்த விடயங்களை ஒர் இலண்டன் பொலிஸ் அதிகாரி சொல்கின்றார் என்றால் இந்தச் சூட்சும அரசியல் குறித்து முதலில் அவரிடம் திருப்பிக்கேள்வி கேட்டுவிட்டு எழுதியிருந்தால் இன்னும் நன்றாகவிருந்திருக்கும்.
இன்னொரு இடத்தில் இளைய அப்துல்லா , இலண்டனிலிருக்கும் இந்துக்கோயில்களுக்குள் ஒற்றுமையில்லை....ஒற்றுமையாயிருந்து இளைஞர்களை வழிநடத்தவேண்டும் என்று எழுதுகின்றார். நானறிந்தவரை ஈழத்திலேயே சைவ/இந்துக்கோயில்கள் ஒரு அளவுக்கு மேல் மக்களைப்பற்றிச் சிந்தித்ததோ.. மக்களை ஒன்றுதிரட்டியதோ இல்லை. அப்படியிருக்கும்போது புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் இந்து/சைவக்கோயில்கள் மக்க்ளுக்காய் சிந்திக்கமுன்வருமா என்ன? அதைவிட ஆபத்தானது அவர்களை அப்படி இளைஞர்களை ஒன்றுதிரட்ட அனுமதிப்பது என்பது. தமிழ்நாட்டில் ஆர்.ஆர்.எஸ் போன்றவை இளைஞர்களிடம் அடிப்படைவாததைப் புகுத்துவதைப்போல புலம்பெயர் சைவ/இந்துக்கோயில்களும் அதுபோல் ஆகிவிடும் மோசமான நிலைமையும் உண்டு. இங்கிலாந்தில் சில பள்ளிவாசல்களில் இவ்வாறான இஸ்லாமிய அடிப்படைவாதம் பரப்பப்படுகின்றது என்பதை அறியாதவரா இளைய அப்துல்லா? இவ்வாறு சில இளைஞர்கள் புலம்பெயர்ந்த சீரழிந்துபோகின்றபோது, சக மனிதர்களாய் -ஆகக்குறைந்தது தமிழர்களாய்- சேர்ந்து குரல் கொடுக்கலாமே தவிர, இவ்வாறான இந்து/சைவ அடையாளங்களுக்குள் நின்று உரையாடத் தேவையில்லை. அது மிகவும் ஆபத்தாய்ப் போய்முடியுமென்றே உரத்துச்சொல்லவேண்டியிருக்கிறது
//அதைக் கண்காணிபாய்/அதிகாரமாய் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் செலுத்தத் தொடங்குகின்றீர்கள். அதிகாரம்/கண்காணிப்பு/ஒடுக்குதல் என்பவற்றை இலகுவாய் அது நமது கலாசாரம்/பண்பாடு என்று செப்பி அதை ஒற்றைத் தன்மைக்குள் புகுத்திவிட்டு எளிதாக நகர்ந்துவிடவும் விரும்புகின்றீர்கள். //
1/06/2008 03:52:00 AMஎத்தனை உண்மை !!!
இம்மனோபாவம் தான் கலாச்சாரம்/மதம்/பண்பாட்டுக்கான நுகர்வோர்களை (அடிமைகளை) பெரும்பான்மையாய் உருவாக்கி வைத்திருக்கிறது
|இளைய அப்துல்லா |
8/04/2008 10:57:00 AMஅன்புடன் தமிழன் வணக்கம்
நான் இன்றுதான் இந்த வெப் சைட்டை பார்த்தேன். நல்லது. நான் எனது அனுபங்கள்சார்ந்துதான் எழுதினேன்.
1 இந்து ஆலயங்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். அவை சமூகத்தை விட்டு விட்டு வேறு நோக்கங் கொண்டு செயல்படுகின்றன அது உங்களுக்கு தெரியாததல்ல.
2 ஈழத்தமிழர்கள் என்று சொல்ல வரும் போது ஒரு ஈழத்தமிழர் பல ஈழத்தமிழர் என்ற பிரச்சனை இல்லை. நான் ஒரு இலங்கைத்தமிழன் அத்தோடு முஸ்லிம் இந்த இரண்டு அடையாளங்கள் எனது பெயரோடு பாஸ் போட்டோடு என்னோடு எனக்கு பின்னால் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஒரு காரணம் மட்டும் என்னை இமிகிறேசன் அதிகாரி ஸ்ரான்ஸ்டட் ஏயார் போட்டில் 1 மணிநேரம் தாமதப்படுத்தினார். முதலாவது கேட்ட கேள்வி நீ ஒரு புலிகள் சப்போட்டரா? அடுத்தது நான் வசிக்கும் பகுதியில் முஸ்லிம்களின் நடத்தைகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தெரிவி.
100 இற்கு 3 4 பேர் குழப்பக்காரராக இருந்தால் 100 பேருக்கும் பிரச்சனைதான். எங்களையும் பக்கி என்றுதான் வெள்ளை ஏன் கறுப்பரும் ஏசுகிறார் என்னத்துக்கு.
Post a Comment