கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ம்..ஆமென்!

Friday, July 13, 2007

வர்க்கம் வகுத்தல் பெருக்கல் மூலதனம் உருப்பெருக்கம் நுண்ணரசியல் அறிந்தும் யதார்த்தச்சூழலிற்கு வர மறுப்பவர்க்கும். '...என்றாலும் அகதியாய் இருந்தல் கூட ஒரு பாஸிடிவ்தானே' என காலந்தோறும் சொக்கப்பனை எரிக்கும் தேசியர்களுக்கும்...

புலம்பெயர்ந்து வாழ்தல் பற்றியும் தோல்விகள் பற்றியும்

இல்லை.
சேனாவில் நான் கழித்த
மோசமான காலமோ
அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட
இராணுவ விசாரணைக் குழுக்கள் தொடுத்த
திடீர்க் குற்றச்சாட்டுகளோ
என் முதுகில் அழுத்திய துப்பாக்கிக் கட்டையோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை
புலன் விசாரணையின் திகிலூட்டும் கறுப்பு முகமூடியோ
பயங்கரத்தின் ஓலங்கள் ஒலித்த
விளையாட்டரங்கங்கள் என்னும் துன்ப நகரமோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை.
வாழ்க்கையிலிருந்து நம்மைத் துண்டித்த
ஜன்னலின் இரும்புக் கம்பிகளோ
எங்கள் வீட்டின்மீது குவிக்கப்பட்டிருந்த கண்காணிப்போ
பதுங்கி பதுங்கி வந்த காலடியோசைகளோ
பசியில் பிளந்த வாய்க்குள் நான் சரிந்து விழுந்ததோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை.
என்னை வீழ்த்தியது
நான் உரிமை கொண்டாட முடியாத தெரு
அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தினூடு
நான் கற்றுக்கொண்ட இரவல் மொழி.
எங்களுக்குத் சொந்தமில்லாத தீர்க்கரேகைகளில்
தனித்து நிற்கும் நிச்சயமற்ற உருவம்தான்
என்னை வீழ்த்தியது.
அது கிறீன்விச் தீர்க்கரேகை பூஜ்யம் டிகிரி
எதற்கும் அருகிலில்லை.

என்னை வீழ்த்தியது இந்த அந்நிய மழை
சொற்களை மறந்து
துழாவிச் செல்லும் நினைவு
வெகுதூரத்திலுள்ள நண்பர்கள்
எங்களுக்கிடையே உள்ள இந்த அடாத பெருங்கடல் -
எனக்கு வந்த சேராத
நான் எதிர்பார்த்திருந்த கடிதங்களை ஈரமாக்குகின்ற
இந்த அடாத பெருங்கடல்.

-Maria Eugenia Calderarara (Chile)

கண்டனம்

ஒரு புல்லின் இதழுக்கு
ஊறு விளைவிக்கும் உரிமையை
என் நாட்டின் போராளிகளுக்கு
மறுக்கிறேன்
ஒரு வெடிகுண்டைக் கையாளும் உரிமையை
குழந்தைக்கு - எல்லாக் குழந்தைகளுக்கும்
மறுக்கிறேன்
ஒரு துப்பாக்கியை ஏந்தும் உரிமையை
என் சகோதரிக்கு
மறுக்கிறேன்
நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும்
என்னால் மறுக்க முடியும் - ஆனால்
அவர்களின் கண்கள்
கொலைகாரர்களின் குதிரைகள்
பாய்ந்தோடி வருவதைப் பார்க்கும்போது
இத்தனை இலட்சியங்களை
யாரால் உத்திரவாதம் செய்யமுடியும்?

பத்து வயதிலேயே ஒரு குழந்தை வீரனாவதை
எதிர்க்கிறேன்
மரங்களின் உடல்கள்
வெடிமருந்துக்குப் புகலிடமாவதை
எதிர்க்கிறேன்
எனது பழத்தோட்ட மரங்களின் கிளைகள்
தூக்குமரங்களாக்கப் பயன்படுத்தப்படுவதை
எதிர்க்கிறேன்
எனது தோட்டத்தின் ரோஜாப் பாத்திகள்
மரணதண்டனை நிறைவேற்றும்
துப்பாக்கிப் படையினரால் பயன்படுத்தப்படுவதை
எதிர்க்கிறேன்
நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும்
என்னால் எதிர்க்கமுடியும் -ஆனால்
எனது நாடு
எனது நண்பர்களோடும்
எனது இளமையோடும்
சேர்ந்து எரியும்போது
எனது கவிதைகள் ஆயுதங்களாக மாறாமல்
இருக்கமுடியுமா?

- Rachid Hussein (Palestine)

எனது நாடு எவ்வளவு சிறியது

அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க
இரண்டாயிரம் காவலர்கள் போதும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

தனிப்பட்ட வாழ்வு
அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ
அல்லது எதிர்ப்பாகவோ இருக்குமளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

எங்கள் நாட்டு அதிபரே தெருச்சணடைகளைத்
தானே நேரில் வந்து தீர்க்குமளவிற்கு
எனது நாடு அத்தனை சிறியது.

காவலரின் துப்பாக்கியுடன்
எந்தவொரு மடையனும்
இந்த நாட்டை ஆளமுடியும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது

-எர்னஸ்ட்டோ க்யுட்டிரெஸ் (Nicargua)

தென்னாபிரிக்கக் குடியுரிமை பெற ஒரு விண்ணப்பம்


நாடே:
மலைத்தொடரில் விரியும் உனது நாட்கள்
எனது வருகையை அணைத்துக்கொள்ளுமா?
எதற்காகவோ காத்திருக்கும்
வெறுமையான சுவரில் உள்ளவொரு அறையில்
நான் காத்திருக்கிறேன்
கடலிடையே தெருக்களிடையே வானத்திடையே
செல்கிறேன்;
என்னுடன் உரையாட அவற்றுக்கு நேரமில்லை.

நாடே:
உனது நிலா வெளிச்சம் என்னைப் பருகுவதற்காக
நான் தூசியாக வேண்டுமா?
எனது ஜன்னலை திறப்பதில்லை.
ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்துகொண்டிருக்கிறேன்
இரவு முழுவதும் கடல் காகங்களுடன்
நீ பேசிக்கொண்டிருப்பது
எனக்குக் கேட்கிறது;
நான் ஒளிமயமானவள்
ஒளியூடுருவ முடியாதவள்
உரத்துச் சொல்லப்படக் காத்திருக்கும்
ஒரு மந்திரச்சொல்

நாடே, எனது நிழலாக மாறு
நான் உனது உடலாக அமைவேன்.


-Karen Press (South Africa)

நன்றி: மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக் கவிதைகள்)
தமிழாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை

4 comments:

கொண்டோடி said...

"மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை" என்றபோது எழுதிய உங்கள் கவிதையையும் 'அள்ளி'ப் போடுதல் இவ்விடத்தில் பொருத்தம்.

7/13/2007 10:21:00 AM
இளங்கோ-டிசே said...

கொண்டோடி, இவ்வாறான மூன்றாமுலகத்தவர்களின் பதிவுகளை/அதனூடாக பெறப்படும் கடந்தகால வரலாற்றை விளங்கிக்கொள்ள முயலுங்கள் என்று கைகாட்டிவிட்டு அமைதியாவது நமக்கான நேரத்தை சேகரமாக்கும்.
மறுபுறம் இன்னுமே பலர் தோழர்கள், சார்த்தார் கூறியவற்றையே மறுவாசிப்புச் செய்யமுடியாத அவலநிலைக்குள் நிற்கின்றார்கள் (சார்த்தரையே பின் நகர்த்தி அல்தூசர், ஃபூகோ, டெரிடா போன்றவர்கள் வந்துவிட்டாலும், இன்னமும் மரபுமார்க்சியத்திற்குள்தான் குதிரையோட்டுவோம் என்று இவர்கள் நிற்கின்றார்கள்). சார்த்தார் அல்ஜீரியாவின் (பிரெஞ்சு) விடுதலையின் பின் எழுதிய கட்டுரைகளையாவது வாசித்திருக்கின்றார்களா தெரியவில்லை. காலனியத்துவத்திலிருந்து விடுபடும் தேசிய இனங்களை/தலைமையை ஒன்று ஏகாதிபத்தியம் இல்லாமற் ஒழிக்கும் அல்லது தனக்குள் சுவீகரித்துக்கொள்ளும் என்று சார்த்தர் விடுத்த எச்சரிக்கை குறித்து யோசித்து இவை குறித்த விவாதங்களை தமிழ்ச்சூழலில் வைத்தார்களோ தெரியவில்லை. அலண்டே, லுமும்பா போன்றவர்களின் கொலைகளிலிருந்து என்னவற்றைக் கற்று மக்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை. அவ்வாறான புள்ளிகளில் யோசிக்கும்போது, ஏன் நவீனகாலத்து தேசிய இனப்போராட்டங்கள் இடதுசாரித்துவத்தை வெளிப்படையாக முன்வைத்து போராடத்தயங்குகின்றன என்பதற்கான காரணங்கள் விளங்கக்கூடும்.

கியூபா புரட்சியின்பின்னரே தான் அங்கே கம்யூனிசம் கொண்டுவரப்பட்டதே தவிர, அதற்கு முன்னாலே காஸ்ரோ போன்றவர்களுக்கு அப்படியான எண்ணம் எதுவுமே இருக்கவில்லை என்பதும் (காஸ்ரோ அமெரிக்காவோடு நட்பாக இருக்கவிரும்புவதாய் பாஸ்டிட்டாவை அகற்றிய பொழுதுகளில் அறிக்கைகூட விட்டார் என்பதும்), கியூபாப் புரட்சியை -புரட்சியை ஏற்றுமதிசெய்தல் என்பதற்கிணங்க- வேறு எங்குமே வெற்றிகரமாக சேயால மறு உற்பத்திசெய்ய முடியாமற்போனதன அரசியல் யதார்த்த சூழ்நிலைகள் ஏன் என்பதுவும் நமது தோழர்களுக்கு புரியாதா என்ன?

இன்னும் இருக்கிறது..., ஆனால் கொஞ்சம் உரையாடத்தொடங்கினாலே நாயே, பேயே, பிசாசே என்று மார்க்ஸிசத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் (அல்லது தமக்கான சொத்தாக சுவீகரித்தவர்கள்) அடிக்க வந்துவிடுவார்கள் என்பதால்.... இப்படி எழுதியதற்கே பாதுகாப்புக்காய் ஒரு :-).

7/13/2007 03:23:00 PM
Anonymous said...

தோழர் மத்தியகுழுவின் சம்பந்தமில்லாமல் அறிக்க்கை விட்டதற்காக உங்களை கட்சியின் கொள்கைபரப்புப்பணியிலிருந்து மத்தியகமிட்டி இடைநிறுத்திவைக்கின்றது

காம்ரேட் ஐராவதம்
மத்தியகமிட்டி செயலாளர்
கம்யூனிட்டி ஆப் மனுஷநீதி

7/13/2007 06:24:00 PM
இளங்கோ-டிசே said...

நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது... :-).

7/14/2007 09:22:00 AM