கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

துயரத்தை மீளவும் இசைத்தல்

Sunday, July 08, 2007

-பெலினியின் *Amarcordஐ முன்வைத்து-


பதின்மம் நம் எல்லோரிடமும் சிறகுகளுள்ள ஒரு பறவையைப் போல வந்தடைகிறது. பலர் அதன் சிறகுகளைக்கொண்டு இன்னும் உயர உயரப்பறந்துகொண்டும் வேறு பலர் அந்தச் சிறகுகள் முறிய இப்பருவத்தை எப்படிக் கடப்பதென்னும் கவலையுடனும் வாழ்வின் சாட்சிகளாகின்றனர். எப்படியெனினும் கடந்தபோனால் மீண்டும் வராத பதின்மம் நிறைய நனவிடை தோய்தலைகளைக் கொண்டுவருகின்றது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெலினியின் (Fedrico Fellini) Amarcord, ஒருவன் பதின்மத்திலிருந்து இளைஞனாக மாறும் பருவத்தைக் காட்சிப்படுத்துகின்றது. பதின்மங்களுக்கு ஒரு தொடர்ச்சி இருப்பதில்லை. கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத ஒரு குழப்பகரமான வாழ்விற்குள் நம்மைப் பதின்மம் தள்ளிவிடுவதை பெலினியும் ஒரு நேர்கோட்டுக் கதைசொல்லலில்லாது துண்டு துண்டுகளாய்க் காட்சிகளை நகரத்தபடியிருக்கின்றார்.




நகரத்தை விட்டு சற்று ஒதுக்கியுள்ள ஒரு கடற்கரை கிராமமே இப்படத்தின் பின்புலமாகின்றது. ரிற்றா என்ற பதின்ம வயதுடையவனே முக்கிய பாத்திரமாகின்றான். ஒரு கிராமத்து வாழ்வுக்குரிய அழகோடும் கசப்புகளோடும் வெகுளித்தனங்களோடும் இப்படம் விரிகின்றது. இறுக்கமுள்ள கத்தோலிக்கத் தேவாலயம் இக்கிராம மக்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றதெனினும், கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் ரிற்றா முதலான பையன்கள் இந்த இறுக்கங்களைத் தமது குழப்படிகளால் கடந்து போய்விடுகின்றார்கள். பாடசாலையில் ஒழுக்கத்தையையும், பொறுமையையும் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு அதை வைத்தே ஒழுங்கைக் குலைக்கச் செய்து அந்தமாதிரி நக்கலடிக்கின்றார்கள் ரிற்றாவும் அவரது நண்பர்களும்.

அநேக கிராமங்களில் வயது வித்தியாசமின்றி எல்லோர் மனதையுன் சுண்டியிழுக்கும் ஒரு சில பெண்கள் இருப்பார்கள். 'கன்னியிவள் கடைக்கண் காட்டிவிட்டால் வெண்ணிலவையும் தரைக்குக்கொண்டுவரும்' மிதப்போடு பல இளைஞர்கள் அந்தப்பெண்களின் பின்னால் அலைந்தபடியிருப்பார்கள். இப்படியாக இளைஞர்களைத் தாங்கள் தேவதைகளாகக் கவர்ந்திழுக்கின்றோம் என்று நன்று தெரிந்தும், தெரியாதபடி -எதற்கும் இடங்கொடுக்காமல்- தங்களைப்பற்றிய புனைவு வழிப்பட்ட இரகசியங்களைப் பெருக்கச் செய்தபடி குறும்புகளுடன் அந்தப்பெண்கள் நகர்ந்தபடி இருப்பர்கள். அவ்வாறான பெண ஒருத்தி (Gradisca) இப்படத்திலும் வருகின்றார். அவரில் இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ரிற்றாவிற்கும் மையலுண்டு. அவரோடு காதலுற்று களிப்பது போன்ற கனவுகள் எல்லாம் ரிற்றாவிற்கும் வந்துபோகின்றது.

பெலினி காட்டுகின்ற ரிற்றாவின் வீடென்பதுகூட நம்மைப்போன்ற பலருக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு குடும்ப அமைப்புத்தான். தங்கள் பிள்ளைகள் மீது அளவிறந்து அன்பைக்காட்டும் பெற்றோர், எல்லோரையும் ஒருகாலத்தில் அதிகாரத்தில் மேய்த்து அந்தக் காலங்கள் வழக்கொழிந்து போய் தன் வார்த்தைகள் அம்பலத்தில் ஏறாததை நகைச்சுவையாக்கிபடி இருக்கும் ரிற்றாவின் தாத்தா, எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்தபடி/கேட்டபடி தனக்கான உலகில் இயங்கும் மாமா, வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் சேஷ்டைகள் செய்து வாங்கிக்கட்டிக்கொள்ளும் தாத்தா, அப்பாவின் மீதிருக்கும் கோபத்தில் திரைப்படம் பாரத்துக்கொண்டிருக்கும்போது அவரின் தொப்பிக்குள் சிறுநீர் கழிக்கும் ரிற்றா என்று இந்தப்படத்தின் குடும்ப அமைப்பும் அதன் உறுப்பினர்களும் நமக்கு நெருக்கமாகக்கூடியவர்கள். இப்படி இந்தப்பாத்திரங்களினூடாகவும், நிலப்பின்னணியினூடாகவும் ஒரு இத்தாலிய (கிராமத்தின்) வாழ்க்கை முறையை பெலினி மிக நேர்த்தியாக சித்தரிக்கின்றார்.


அதிலும் உணவருந்தும் ஒரு காட்சியில், அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரிற்றாவின் பெற்றோருக்குள் சண்டை மூள்கிறது. பிள்ளைகள் மற்றும் குடுமப உறவுகள் -இவற்றையெல்லாம் கேட்டு மரத்துப்போன சூழ்நிலையில்- சண்டையினால் எந்தச் சலனமுமில்லாது தங்கள்பாட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 'இந்த மனுசனோடு என்னோடு வாழமுடியாது நான் சாகப்போகின்றேன்' என்று வேதனையோடு ரிற்றாவின் தாயார் குளிக்கும் அறைக்குள் சென்றுவிடுகின்றார். 'நீ செத்தால் நான் தனியே இருப்பேனா?' என்று ரிற்றாவின் தகப்பன் தன் வாயைக் கரங்களால் கிழித்து தற்கொலை செய்யப்போவதாய் அடம்பிடிப்பார் (மிகுந்த நகைச்சுவையுடன் பெலினி இதைக் காட்சிப்படுத்தியிருப்பார்). பிறகு தற்கொலை செய்து 'சாகமுடியாத' கொடுமையை தன் தலையில் கையால் அடி அடியென்று அடித்துக்கொண்டிருப்பார். திடீரென்று இதையெல்லாம் பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற உணர்வு வர, கோபத்துடன் மேசையிலிருக்கும் சாப்பாட்டை ரிற்றாவின் தகப்பன் தூக்கியெறிவார்.

எப்படி திருச்சபைகளின் மீதான தன் விமர்சனத்தை மெல்லிய நகைசுவையுடன் பெலினி காட்டினாரோ அதைப் போன்று குடும்பம் என்ற அமைப்பால் ஏற்படும் வன்முறையையும் இத்திரைப்படத்தில் வெளிப்படையாகக் காட்டுகின்றார். ரிற்றாவின் தகப்பனின் சகோதரர் ஒருவர் மனம்பிறழ்ந்தவராக இருப்பதும், அவரோடு சுற்றுலா போகின்ற வேளையில் மரம் ஒன்றில் ஏறி நின்றுகொண்டு ஒரு பெண் தனக்கு வேண்டும் என்று கேட்டு அவர் அடம்பிடித்து மரத்தை விட்டு இறங்காத இன்னொரு காட்சியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தனித்த ஒற்றை மரம், பின்னால் நீளும் வெறுமையான வானம், நீண்ட சமதரை என்று பல்வேறு குறியீடுகள் வரக்கூடியதாய் பெலினி அக்காட்சியை எடுத்திருப்பார்)

முஸோலினியின் பாஸிசக் காலத்திலேயே ரிற்றாவின் பதின்மம் இருக்கின்றது. குறிம்பிடும்படியான அரசியல்/இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடாமலே சும்மா சில வார்த்தைகள் முசோலினியைப் பற்றிப் பேசியதற்காகவே ரிற்றாவின் தந்தையார் சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நெடுநேரமாய் வீடு திரும்பாத கணவனை ரிற்றாவின் தாயார் தேடுவதும், சித்திரவதைக்குள்ளான அவரது உடலின் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்து குளிக்கவைப்பதும் போன்ற காட்சிகள் -எத்தனை பிணக்குகள் இருந்தாலும்- அதற்கப்பாலிருக்கும் அற்புதமான மானுட நேசிப்பை ரிற்றாவின் பெற்றோரின் மூலம் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றது.


இப்படத்தில் பதின்ம வயதினருடைய வாழ்வியல்முறை இயல்புகெடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெடியங்கள் பாத்ரூமில் புகைபிடிப்பது, செக்ஸை பற்றி கிளுகிளுப்பாய் கதைப்பது, காரொன்றுக்குள் அமர்ந்துகொண்டு தமக்குப் பிடித்த பெண்களை நினைத்தபடி சுயமைத்துனம் செய்வது (அப்படி சுயமைத்துனம் செய்வதை அவர்கள் திருச்சபைக்குச் சென்று பாவமன்னிப்பு கேட்பது, அந்நிகழ்வை ஒருவித இன்பத்துடன் கேட்டு பாவமன்னிப்பு வழங்கும் மதகுரு போன்ற நுண்ணிய விமர்சனங்களும் அடங்கும்), தங்களை விட வயது கூடிய பெண்களின் உடல் அங்கங்களை விபரித்து தங்களுக்குள் மகிழ்ந்துகொள்வதென பதின்மர்களுடைய பருவம் இயல்பாய் விரித்து வைக்கப்படுகின்றது.

அவ்வூரில் எல்லோருடைய கனவுக்கன்னியாக இருக்கும் பெண் (Gradisca) முஸோலினியின் அதிகாரத்திலிருக்கும் அதிகாரியொருவருக்கு விடுதியொன்றில் தன்னைக் கொடுக்கின்றார். இறுதியில் அந்தப்பெண் அப்படியான ஒரு அதிகாரியைத் திருமணஞ்செய்து அவ்வூரைவிட்டே போகின்றார். அப்படிப் போகும்போது திரும்பி தன் ஊரைப் பார்த்து பூக்கொத்தை எறிவதும் அதையெடுக்கக்கூட ஒருவரும் இல்லாத தனிமையும், அந்தப்பெண் ஊரைவிட்டுப் போகும் காரை சின்னப்பையன்கள் மட்டுமே கொஞ்சத் தூரம் தூரத்திக்கொண்டிருக்கும் துயரமும் மனதை அசைத்துப் பார்க்கக்கூடியவை.

பெலினி, திருச்சபைகளையும், குடும்ப அமைப்பையும், முசோலினியின் பாஸிசத்தையும் ஒருவித எள்ளல்தொனியுடனே விமர்சிக்கின்றார். கடுமையான மொழியில்/காட்சிகளில் இவற்றை ஏன் முவைக்கவில்லை என்று பெலினியை நோக்கிக் கேட்கலாம் என்றாலும் இப்படம் ஒரு பதின்மனுடைய வயதில் விரிவதால் அவனுக்குள் எற்படும் பார்வைகளைத்தான் பெலினி காட்டுகின்றார் என்றும் வேறொருவர் பெலினியின் சார்பில் நின்று உரையாடவும்கூடும். படத்தில் பனி -பூக்களாய்- விழ ஆரம்பிக்கின்ற காட்சியும், அதுபோல வசந்தம் தொடங்குவதான காட்சியும் மிக அற்புதமானவை. 70 களில் எடுக்கப்பட்ட இப்படத்தில் இப்படி நுட்பமாக கமரா தன் கலைவண்ணத்தைக் காட்டுகின்றது என்று நினைக்கும்போது வியப்புத் தோன்றாமல் இருக்கமுடியாது.

படத்தின் ஆரம்பம், ஊரே சேர்ந்து ஒரு விழாவை உற்சாகமாய்க் கொண்டாடுவதில் ஆரம்பித்து, இறுதிக் காட்சி Gradiscaவின் திருமணம் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் மிகச்சொற்பானவர்கள் பங்குபற்றுவதுடன் முடிகின்றது. இங்கே Gradiscaவின் திருமணம் என்பதே வாழ்வின் வீழ்ச்சிக்கான குறியீடுதான். மெல்லியதாய் மழைவருவதும், ஒரு இசைஞன் இசைக்கும் வாத்திய இசை -அது- எவரும் அசட்டை செய்யாத நிசப்தத்தில் அமிழ்ந்துபோவதான இறுதிக்காட்சிகள் மனதைச் சலனமடையச்செய்பவை.

முக்கியமாய், எல்லோரும் தலையின் மேல் வைத்துக்கொண்டாடிக்கொண்டிருந்த பெண்ணை(Gradisca) முசோலினியின் ஆட்சியிலுள்ள அதிகாரி ஒருவர் திருமணம் செய்துகொண்டு அந்தப்பெண்ணை ஊரைவிட்டு அழைத்துச்செல்லும்போது, அந்த ஊரின் உயிர்ப்பும் மெல்ல மெல்லமாய் கரைந்துபோவதான உணர்வு எமக்கு வந்துவிடுகின்றது. மேலும், இதை இன்னொருவிதமாய் ரிற்றா தனது பதின்மத்திலிருந்து இளைஞனாக மாறுவதான காலத்துடன் இணைத்தும் பார்க்கக்கூடியது. பதின்மத்தைப் போல கொண்டாடக்கூடியதான ஒரு காலம் இனி இளைஞனாகையில் சாத்திமில்லை என்ற குறியீடாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

2.

என்னுடைய பதின்மம் ஓரிடத்தில் நிரந்தரமாய் கழியவில்லை. அப்படி ஓரிடத்தில் கழியாததால் பலதைத் தவறவிட்டிருக்கின்றேன் என்ற கவலையுமிருக்கிறது. பதின்மம் - யாழ், கொழும்பு, ரொரண்டோ என்று சிதறிப்போனதில், புதிய இடங்களுக்கு என்னைத் தயார்ப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடவே காலம் கழிந்ததால் பதின்மத்தைக் கொண்டாட முடியாமற்போய்விட்டது. அதைவிட பதின்மத்துக்குள் வருவதிற்குள்ளேயே போர் என்னைப்போன்றவர்களை பெரியவர்களாக அடித்து அடித்து பழுக்கச்செய்திருந்தது. போரே வாழ்வான காலத்தில் சுவாரசியமான விடயங்களுக்கும் ஊரில் (யாழில்) குறைவில்லைத்தான்.

எங்கள் ஊரிலும் எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தார். அவரின் பெற்றோர்கள் அப்போதே ஜரோப்பா நாடொன்றுக்கு குடிபெயர்ந்ததால் இவர் அவரின் தாத்தாவோடு வசித்துக்கொண்டிருந்தார். எங்கள் வீட்டிற்கு அருகில்தான் பாடசாலை. அங்கே பல்வேறு ஊர்களிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்படிப் படித்துக்கொண்டிருந்த ஒருவரோடு இவருக்கு காதல் முகிழ்ந்தது. எங்கள் வீடிருக்கும் ஒழுங்கையில் நின்று ஹொஸ்டலின் பின்பக்க மதிலால் இவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்தப்பெண்ணுக்கு வெளிநாட்டுப் பயணம் சாத்தியமானபோது, காதலித்த பையனுடன் ஓடுவதற்குத் தீர்மானித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்தப்பெண் செமையாக அடிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஒருநாள், நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது இவர் கிணற்றில் குதித்திருந்தார். நாங்களும் 'ஐயோ ...... அக்கா கிணற்றுக்குள் குதித்துவிட்டா, எல்லோரும் ஓடிவாங்கோ' என்று கத்தியபடி கிணற்றை நோக்கி ஓடியிருந்தோம். ஆனால் எங்கள் வீட்டுக்கருகில் இருந்த மற்றதொரு ஆழ்ப்பம் (ஆழம்) கூடவாயிருந்த கிணற்றுக்குள் விழாது ... அக்கா ஏன் இந்த ஆழம் குறைந்த கிணற்றில் குதிக்க முடிவுசெய்தார் என்பது விரிவாக விவாதிக்கக்கூடிய புள்ளிதான். பிறகு அந்த அக்கா கிணற்றிலிருந்து வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடித்ததும், கதிரையை எல்லாம் இறக்கி கயிறு கட்டி மேலே எடுத்தது என்று மிகவிரிவாகச் சிலாகிக்கக்கூடியவை (உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வருகின்ற இதே கிணற்றில், வளாகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் அண்மையில் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு மீட்கப்பட்டதையும் இங்கே சேர்த்து வாசிக்கவேண்டும்).

அதேபோன்று பதின்மம் ஆரம்பிக்க முன்னர் நடந்த நினைவில் என்றும் அகலமுடியாத சம்பவமும் ஒன்றுண்டு. இந்திய இராணுவ காலத்தில், இந்திய இராணுவமும், அதைச் சார்ந்து நின்று துணை (தமிழ்) இராணுவமும் எங்கள் அண்ணாவைக் கொண்டுபோய் சித்திரவதை செய்தது. அடியென்றால் செம அடி. அண்ணாவை எப்படி விடுவிப்பதென்று எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்ற சமயம். ஒருமாதிரி ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்த எங்கள் உறவுக்காரர் மற்றும் சிலரின் முயற்சியால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அண்ணா அடிகளுடன் திரும்பிவந்தபோதுதான், முதன்முதலாய் எனது பெற்றோர்கள் எங்களுக்கு முன்னால் அழுததைப் பார்த்திருந்தேன். உடலில் பட்ட சித்திரவதைகளுக்கு ஒழுங்காய் மருந்துகொடுக்க முடியாத காலம் அது. சாப்பிடுவற்காய் இருந்த சோற்றைச் சூடாக்கி துணித்துண்டுக்குள் கட்டி ஒத்தடம் கொடுத்ததாயும் நினைவு. அண்ணா எங்களுடன் தொடர்ந்திருந்தால், உயிருடன் பார்ப்பதே சாத்திமில்லை என்ற நிலையில், அவரை கஷ்டப்பட்டு பலாலியில் விமானம் ஏற்றி மாமியொருவர் வசித்துவந்த சிலாபத்திற்கு அனுப்பியிருந்தோம். அப்போதிருந்த பணநெருக்கடிக்காலத்தில் ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ நாங்கள் சேகரிக்கப்பட்ட கஷ்டமும், அண்ணாவை பலாலி விமான நிலையத்திற்கு ஊரிலிருந்து எப்படி கவனமாய்க் காரொன்றில் கொண்டுபோய்ச் சேர்த்தோம் என்பதும் ஒரு சிறுகதையாக எழுதக்கூடிய சேதிகள்.

பெலினி சித்தரிக்கின்ற திரைப்படத்தைப்போலத்தான் எங்கள் பலரது பதின்மங்களும் துண்டு துண்டாக பல்வேறு திசைகளுக்குச் சிதறியிருந்தன. ஆனால் கொண்டாட்டத்தை விட, வேதனைகளும் வலிகளும் நிறைந்திருந்தவை அவை. இப்போதும் கூட பின் தொடரும் அத்துயரங்களிலிருந்து தப்பும் வழிதெரியாது அதை சாமர்த்தியமாய் வேறு விடயங்களில் புதைத்துவிட்டு புன்னகையைப் பலவந்தமாய் அணிந்திருப்பவர்கள் நாங்கள். ஆனால், எங்களைப்போன்ற பதினமங்களை கழிக்ககாதவர்கள், சொகுசான மேலைத்தேச இடங்களிலிருந்து (சிலவேளை இந்திய இராணுவத்தை அனுப்பிய தேசத்திலிருந்தும்) கறுப்பின மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் அறிவுரை கூறுவதுபோல மேலிடத்திலிருந்து 'மனிதர்களாகுங்கள்' என்று கீதாவுபதேசங்கள் தரும்போது, அடுத்த பிறப்பிலாவது(?) எங்களைப்போன்ற போர் நடக்கும் நாடுகளில் நீங்களும் பிறந்து உங்கள் வாழ்வைக் கழித்துப்பாருங்கள் என்று மனதிற்குள் சபித்துவிட்டு மெளனமாய் நகர்ந்து செல்வதைத் தவிர வேறு வழிகள் எங்களுக்கு இருப்பதேயில்லை.


*Amarcord - I remember என்று ஆங்கிலத்தில் அர்த்தம் வரக்கூடியது.

18 comments:

இளங்கோ-டிசே said...

youtubeல் துண்டு துண்டாக இப்படத்தின் காட்சிகளைப் பார்க்கமுடியும்.

உணவருந்தும் காட்சிக்கு: http://www.youtube.com/watch?v=E7fpMqe4uls

7/08/2007 11:27:00 PM
Anonymous said...

நன்றி டிசே,

தூவானமாய் மறைந்து போய்விடும் பருவமொன்றைப் பற்றிய உங்கள் பதிவு மனதை நிறைத்துவிட்டது.

அந்தக் காலத்தின் குறும்புகள் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியனவா என்ன..:-)

படத்தைப் பற்றிய அறிமுகம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுவதோடு, அண்மையில் பார்த்த Europa Europa படத்தினை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது. அதில் Hitler தொடக்கம் ஸ்டாலின் வரை அனைவரும் விமர்சிக்கப்படுகிறார்களென்றும் சொல்லமுடியாது.. இவர்களின் ஆட்சியின் கீழ் தனது அடையாளங்களைத் துறந்தேனும் உயிர்வாழ விரும்பும் ஒரு இளைஞனின் போராட்டங்களை அவலம் நிறைந்த நகைச்சுவைத் தொனியுடன் பதிவுசெய்வதாக அமைந்திருந்தது நினைவுக்கு வருகிறது.

survival.. அதுதான் முக்கியமாகிப் போகிறது அநேக சந்தர்ப்பங்களில்.

7/09/2007 03:29:00 AM
Ayyanar Viswanath said...

Fedrico Fellini யின் Nights of Cabiria படம் பார்த்திருக்கிறேன்.அன்பிற்க்கான தேடல்களை துரோகத்தின் வன்மங்களை வெகு நேர்த்தியாக பதிவித்திருப்பார் ... Maria 'Cabiria' Ceccarelli வாக நடித்த Giulietta Masina அவரது மனைவியாம் :)

திருச்சபைகளின் மீதான விமர்சனத்தை மிகவும் குரூரமாக அப்பட்டமாக முன் வைத்திருப்பார் Pasolini
அவரின் டெமகட்ரான் படம் பாருங்கள்/க்கிறீர்களா?

பதின்மங்களை கொண்டாடுவதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் டிசே எல்லாம் கிட்டிய இந்த வயதில் பதினம ஆசைகள் குறுகுறுப்புகள் மென்மையும் கனவும் விழிப்புமாய் ஒரு அற்புத மனத்தை தேடி அலைந்து சலித்துப்போய் அடர்த்தியாயான கவிதைகளில் அல்லது கழிவிரக்கத்தில் புதைந்து போய் விடுகிறோம் அல்லது றேன்.
உங்களின் நினைவுகளின் பகிர்தல்கள் கசப்பையும் துயரையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்த தவறவில்லை

7/09/2007 07:15:00 AM
Unknown said...

பதின்மத்தில் எல்லோருக்கும் ஒரு தேவதை
இருக்கத்தான் செய்வாள். இருந்தாலும் தங்களின் பதின்மத்தில் சூழல் ஏற்படுத்திய
துயரங்களை புரிந்துகொள்ள முடிகிறது.

7/09/2007 09:11:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
.....
அநாமதேய நண்பர்: பதின்மம் மின்னலாய் மட்டுமில்லை சிலவேளைகளில் கடக்கவே முடியாத ஆறாகவும் போய்விடுவதுண்டு.
.....
அய்யனார்: நீங்கள் குறிப்பிட்ட இரு படங்களையும் பார்க்கவில்லை. பார்க்க முயற்சிக்கின்றேன். பெலினியின் இந்தப்படத்தோடு 81/2 மட்டுமே பார்த்திருக்கின்றேன். அவ்வளவாக அது என்னைக் கவரவில்லை. இப்படத்தில் கூட பெலினி தனது பதின்மத்தைத்தான் காட்சிப்படுத்தியிருக்கின்றார் என்று எங்கையோ வாசித்தது நினைவு.
.....
சந்துரு: பதின்மத்தில் ஒரு தேவதை மட்டுமா? காணும் பெண்கள் எல்லாம் தேவதைகளாக மிதக்க வைக்கின்ற பருவமல்லவா பதின்மம் :-).

7/09/2007 01:42:00 PM
Chandravathanaa said...

படத்தில் தொடங்கி உங்கள் வாழ்க்கையின் சில வேதனைகளையும் சொல்லி விட்டீர்கள் டிசே.
எமது நாட்டவர்கள் பலருக்கும் பொருத்தமான பதின்ம விடயங்கள்.
மனதைத் தொட்டது.

பந்தி பிரித்து எழுதியது வாசிக்க சுலபமாக இருந்தது.

7/13/2007 05:12:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி சந்திரவதனா.
...
இந்தப்பதிவுக்கு மூன்றாவது பகுதியாய், தமிழ்ச்சூழலில் எடுக்கப்பட்ட பதின்மர்களைப் பற்றிய சில படங்கள் குறித்து எழுதியிருந்தேன். பதிவின் நீளம் காரணமாய் அதை அமுக்கியாயிற்று.

7/14/2007 01:45:00 PM
Chandravathanaa said...

அந்த மூன்றாவது பகுதியையும் இதன் தொடர்ச்சியாக இன்னனொ புதிய பதிவில் போடலாமே.

7/14/2007 03:59:00 PM
பிச்சைப்பாத்திரம் said...

அன்பு டிசே,

பட அறிமுகத்திற்கு நன்றி. கேள்விப்பட்டிருக்கிறேனெனினும் இன்னும் பார்க்கும் வாய்ப்பில்லை. உங்கள் பதிவு உசுப்பேற்றியிருக்கிறது. பதிவின் கடைசி பத்திகளில் பொதிந்துள்ள வேதனையை உணர முடிகிறது. என்று விடியுமோ?

7/16/2007 08:19:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி சுரேஷ் கண்ணன்.
....
உண்மையான அக்கறையில் வந்துவிழும் வார்த்தைகள் தரும் நெகிழ்வு இதமானது. நன்றி.

7/17/2007 12:00:00 AM
இளங்கோ-டிசே said...

சந்திரவதனா, இதுதான் அந்த மறைக்கப்பட்ட பகுதி. இன்னும் விரிவாக எழுத நினைத்திருந்தேன். சோம்பலில் இத்தோடு முடித்துவிட்டேன் :-).
...........
தமிழ்ச்சூழலில் அண்மையில் வெளிவந்த (அல்லது நான் பார்த்த) பதின்மர்களுடைய படங்களைப்பற்றி யோசிக்கத்தொடங்கினேன். துள்ளுவதோ இளமை என்ற பதின்மர்களின் உணர்வுகளை வியாபாரமாக்கிய படத்தின் வெற்றி, தொடர்ந்து இவ்வாறான படங்களை நிறைய மறு உற்பத்தி செய்தது. கஸ்தூரி ராஜா அந்த சூத்திரத்திலிருந்து இன்றும் கூட விடுபடவில்லை என்பது அண்மையில் வந்த அவரின் ஒரு படத்திலும் துல்லியமாய்த் தெரிந்தது (பெயர் நினைவினில்லை). துள்ளுவதோ இளமையின் வெற்றி, அக்காலகட்டத்தில் தயாரிப்பில் இருந்த -இன்னொரு வியாபாரக் கலைஞரான ஷங்கரின் வெற்றியைப் பாதிக்கும் போல ஒரு பதட்டதை-
போ(பா)ய்சிஸ்கு ஏற்படுத்தியயெனினும் தெலுங்கு போன்ற பிற மொழிகளில் ஓடி அது வெற்றியைக் குவித்திருந்தது.

இப்போது 'துள்ளுவதோ இளமை', 'பாய்ஸ்' என்ற இருபடங்களை உரையாடலுக்கு எடுத்துக்கொள்வோம் (இவற்றின் வெற்றி மறு உற்பத்தி செய்த படங்களை இவற்றின் நீட்சிக்குள் வைத்துக்கொள்ள முடியும்). இவ்விரு படங்களும் உண்மையாகவே பதின்மர்களுடைய வாழ்வியலைப் பிரதிபலித்ததா? துள்ளுவதோ இளமையின் வீழச்சியென்பது, எல்லாவற்றையும் இறுதியில் ஒரு அறிவுரையில் கூற ஆரம்பிக்கும்போது தொடங்கிவிடுகின்றது. ஆனால் பதிமர்களுடைய வாழ்வை அது சிறிதேனுமாவது பிரதிபலிக்கவில்லையா என்று வினா வரக்கூடும். துள்ளுவதோ இளமையோ அல்லது பாய்ஸோ பதின்மர்களுடைய வாழ்வைப் பிரதிபலிக்கத்தான் செய்கின்றன. ஆனால் இப்படங்கள் அவை பிரதிபலிக்கும் உணர்வுகளுக்கு உண்மையாக இருந்தனவா என்பதே நமக்கு முன்னாலுள்ள வினா. பதின்மம் நல்லதும், நல்லது அல்லாதனவும் கலந்திருக்கும் ஒரு பருவம். நல்லனதல்லவற்றை எல்லாம் படம் முழுதும் காட்டிவிட்டு இறுதியில் மட்டும் இப்படி பதின்மர்கள் இருப்பதற்குக் காரணம் இதுதான் என்று ஒரு பொழிப்புரை வழங்குவது மட்டும் எந்த விதத்தில் நியாயமானதாகும்? (இங்கே நல்லது/நல்லன அல்லவை என்று பிரிப்பதுகூட சிக்கலானவை, ஒரு எளிய புரிதலுக்காய் பொதுப்பார்வையில் உருவாக்கப்பட்ட பார்வைகளையும் இங்கே குறிப்பிட விளைகின்றேன்)

போய்ஸ் படத்தில் 'மாமியார்களை' உரசுவதில் காட்டும் கவனத்தை, ஷங்கர் விலைமாதரை வீட்டுக்கு பதின்மர்கள் அழைத்து வந்தபோதும் -தமிழ் கலாசாரப்படி - கற்புள்ள ஆம்பிளைகளாக விட்டுவிடுவதில் யதார்த்த்தை தந்திரமாய் மறைத்துக்கொள்கின்றார் 'டிஷ்யூமில்' சசி காட்டுகின்ற, திருமணத்திற்கு முன் ஏற்கனவே உடலுறவு கொண்ட ஆணின் கதாபாத்திரத்தைப் போன்ற ஒருவரைக் காட்டக்கூட ஷங்கருக்கு தமிழ்க் கலாசாரம் அந்தளவுக்கு பயமுறுத்துகின்றது. இவ்வளவு அட்டகாசம் செய்யும்..., பெற்றோர் வீட்டிலில்லாதபோது விலைமாதரை காசு சேர்த்து அழைக்கும் பையன்கள் அதில் மட்டும் கோட்டை விடுவார்கள் என்றால்....? பார்ப்பவர்கள் இளிச்ச்வாயன்களாய் இருப்பார்கள் என்பதில் ஷங்கருக்கு இருக்கும் நம்பிக்கைதான் எத்தகை பெரியது? அட, ஐந்து பையன்களில் ஒரு பையன் கூட விலைமாதரோடு சல்லாபிக்காமல் இருக்கமாட்டானா என்ன? ம்...நமது தமிழ்ச்சூழலில் விரைவில் பாலியற்தொழில் போகின்றபோக்கில் இப்படியான 'நல்ல பையன்களால்' இல்லாமற்போய்விடும் போலும்.

இதே சமயத்தில் (எனக்கு பிடித்த இரு தமிழ் இயக்குனர்கள் என்றவகையில் பாலா மற்றது) செல்வராகவனின் படங்கள் மிகு அழகாக பதிமர்களுடைய வாழ்வை காதல் கொண்டேனிலும், 7/G ரெயின்போ காலனியிலும் பதிவு செய்திருக்கின்றது (தந்தை கஸ்தூரி ராஜாவின் இப்படியான பதின்மர்களுடைய உணர்வுகளை கிளுகிளுப்பான படங்களாய் எடுத்து எங்களைக்கொல்லும் பாவங்களை மகன் செல்வராகவன் கழுவிக்கொள்கின்றார் என்றும் எடுத்துக்கொள்ளலம்). ரெயின்போ காலனியில் பதின்மர்களுடைய வாழ்க்கை யதார்த்திற்கு அண்மையாய் மிக நுணுக்கமாய் சித்தரிக்கப்பட்டிருப்பட்டிருக்கும். பையன்கள் மட்டுமில்லை அதில் வருகின்ற சோனியா அகர்வாலின் பாத்திரமும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. எனக்கும் உன்க்கும் பிடித்திருக்கிறது -திருமணத்திற்கு முன்- உடலைப் பகிர்வது பெரிய விடயமில்லையெனப் பகிர்வதிலாகட்டும், நீ ஒழுங்காய் பாடங்களைப் படித்து சித்தி பெற்றால்தான் நேசிப்பேன் என்று கூறியும், என்னால் எதையும் ஒழுங்காய்ப் படிக்கமுடியவில்லை என்று பரீட்சையை அரைகுறையில் எழுதிவிட்டு வருபவனை சோனியா பலவீனங்களுடன் ஏற்றுக்கொள்வதிலாகட்டும், யதார்த்தம் அப்படியே இவற்றில் பிரதிபலிக்கின்றது.

பாய்ஸ், துள்ளுவதே இளமைக்கு நகரப்பூச்சு பூசிய படம். நடுத்தரவர்க்கதிலிருந்து மேற்தட்டுக்கு பன்னாட்டு நிறுவங்களினூடாகப் போக முயற்சிக்கும் இளைஞர்/யுவதிகளை ஒரளவு அது அடையாளப்படுத்துகின்றது என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதில்கூட, அந்தப் பதின்மர்கள் படும் கஷ்டத்தை, அவர்கள் தமது சூழலுக்குள் (இங்கே நகரம்சார்ந்த) படும் அவதிகளை, உடல் சார்ந்த பிரச்சினைகளைக்கூட வெளிப்படையாகப் பேசவில்லை என்பது அதன் பலவீனமே. ஷங்கருக்குத் தெரிந்தது நக்சலைட்டுக்களை கேவலப்படுத்துவதும் (அதேன் போராளிகள் என்றாலே இறுக்கமானவர்களாயும் மூர்க்கமானவர்களாயும் இருக்கின்றார்கள்? போராளிகள் பற்றிய இன்னொரு சித்தரிப்பான மணிரத்தினம் 'சாரின்' கன்னத்தில் முத்தமிட்டாலேயும் இங்கே நினைவு கொள்ளலாம்). ஷங்கர் மணிரத்தினம் போன்றர்களுக்கு போராளிகள் நிஜத்தில் எப்படியிருப்பார்கள் என்பதைப் புரியவைப்பதற்காகவேனும் தெலுங்கானப் போராளிகளோ அல்லது அஷாம்/மணிப்பூரின் இருக்கும் போராளிகளோ கொஞ்ச நாட்களாவது இவர்களைக் கடத்திக்கொண்டுபோவார்களாக.

உண்மையில் 'துள்ளுவதோ இளமையோ', 'பாய்ஸோ' பதின்மப் பருவங்களின் நிறைவேறாத ஆசைகளுக்கு தீனிபோடுகின்ற படமே தவிர வேறெந்த வித்தியாசமான அனுபவங்களையும் தரவில்லை. முக்கியமாய் பதின்மத்தைக் கடந்துவிட்டு பதின்மப்பருவத்தைத் திரும்பிப்பார்க்கின்ற ஒருவனுக்கு அவற்றிலிருந்து எடுத்துக்கொள்ள எதுவுமேயில்லை என்றேதான் கூறவேண்டும். ஆனால், இவை எப்படி வெற்றிப்படங்களாய் ஓடின/ஓடுகின்றன என்பதற்கு ஒரு உதாரணம் தரலாம். கொழும்பில் வயது வந்தோருக்கான படங்கள் ஓடிய தியேட்டர்களுக்கு ஒருமுறை கூடச்சென்று பார்க்காத - நிறைவேறாத ஆசை- எனக்குள் பதின்மங்களில் இருந்தது. கனடா வந்த புதிதில் இங்கே காமா (அசோக்குமாரின் படம்; பெயர் சரியா?) என்றொரு கொஞ்சம் கிளுகிளுப்பான் படம் ஓடுகின்றதென்று தெரிந்து இப்போதாவது என் ஆசை நிறைவேறப்போகின்றதே என்ற உணர்வில் சென்றிந்தேன். ஒருவிதமான கனவுநிலைக்குள் அமிழ்த்திக்கொண்டிருக்கும் பதின்மன் ஒருவனுக்கு, நாயகி கடற்கரையில் மெல்லிய ஆடைகளில் நனைவதும், முலைகள் குலுங்க குதிரையில் ஓடிவருவதும் இன்னொருவிதமான பரவச நிலைக்கு கொண்டுபோகத்தானே செய்யும்? எனவே பதின்மர்கள் வந்து தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார்கள் (அப்படியான ஒருநிலையில் பாய்ஸும், துள்ளுவதோ இளமையும் வெற்றிப்படங்களானது பெரிய அதிசயமுமில்லை). இவ்வாறான படங்கள் எந்த மொழியிலும் ஓடும். அதற்கான கூட்டம் தொடர்ந்து இருந்துகொண்டேயிருக்கும். ஹொலிவூட்டில் அண்மைக்கால உதாரணம், அமெரிக்கன் பை (American Pie)வகைப் படங்கள். ஆனால் இன்று பதின்மத்தைத் தாண்டிய ஒருவன், தனது பதிமத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இவ்வாறான படங்கள் தனது உண்மையான பதின்மத்தைப் பிரதிபலிக்கவில்லை என்ற சலிப்போடு இப்படங்களை உதறித்தள்ளியபடி நகர்ந்தபடியிருப்பான்.

7/17/2007 12:45:00 AM
Chandravathanaa said...

நன்றி டிசே.
துள்ளுவதோ இளமை பார்த்தேனோ, என்பது ஞாபகத்தில் இல்லை.
´Boys´ அத்தனை தூரம் பேசப்பட்டதால் பார்க்க வேண்டும் என்று நினைத்துப் பார்த்தேன்.
கணினியில் தரவிறக்கம் செய்ததில்... ஏனோ கொப்பி சரியாக அமையவில்லை. ஆனாலும் பார்த்தேன்.

அத்தனை பேசப்படுவதற்கு அங்கொன்றையும் நான் காணவில்லை. பெண்கள் மீதான பாலியல் வன்முறையை வில்லன் செய்வது காட்சியாக்கப் படும் போது, அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவர்கள் அதையே கதாநாயக வடிவில் வந்தவர்கள் செய்யும் போது இதை எப்படிக் காட்சிப் படுத்தலாம் என்று கேட்பார்கள் போன்றதொரு பிரமையே அந்த விமர்சனங்களூடான எனது பார்வைக்குத் தெரிந்தது. இது பற்றி ஒரு பதிவு போட நினைத்துப் போடாமலே விடுபட்டு விட்டது.

இந்தப் படத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல பதின்மத்தைப் பிரதிபலிக்கக் கூடிய விதமாக ஒன்றும் சரியாக அமையவில்லை. பதின்மம் - கனவா நனவா என்று புரியாத - ஒரு மயக்க நிலையில் எம்மை வைத்திருப்பது. ஆனால் அங்கு முழுக்க முழுக்க இப்படியான விரசங்கள்தான் நிறைந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.

முடிந்தால் இவை பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்

7/17/2007 01:04:00 AM
இளங்கோ-டிசே said...

. பதின்மம் - கனவா நனவா என்று புரியாத - ஒரு மயக்க நிலையில் எம்மை வைத்திருப்பது. ஆனால் அங்கு முழுக்க முழுக்க இப்படியான விரசங்கள்தான் நிறைந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை./
சந்திரவதனா, இதுதான் நான் சொல்ல விரும்பிய முக்கியபுள்ளி. ஆனால் அனேக -பதின்மர்களை சித்தரிக்கின்ற- தமிழ்ப் படங்களில் பாலியல் விருப்புகள் மட்டுமேதான் பதின்மர்களுடைய வாழ்க்கையாக அடையாளப்படுத்தப்படுவதுதான் அபாயகரமானது. பெலினியின் இப்படத்தில் கூட, ரிற்றா தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்ணிடம் தன் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளப்போவார். அவ்விரு பாத்திரங்களினூடாக பெலினி இதை எப்படிக் காட்சிப்படுத்துகின்றார் என்பது கவனிப்புக்குரியது. தமிழ்ச்சூழலில் படங்களில் மட்டுமில்லை, பிற படைப்புக்களில் கூட பதின்மர்களுடைய வாழ்வு முறை சரியாக இன்னமும் சித்தரிக்கப்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.. அத்தோடு பதின்மம் பெண்களுக்கு ஆண்களைப் போன்று இருப்பதில்லை. அது முற்று முழுதாக வேறுவிதமானது. அந்தவகையில் நிருபாவின் சிறுகதைத் தொகுப்பு ஒரளவு பெண்களுடைய பதின்மங்களை அடையாளப்படுத்துகின்றது என நினைக்கின்றேன். உடலில் ஏற்படும் மாற்றங்கள், அதை எப்படித் தங்களுக்குள் சமநிலைப்படுத்துவது (இவ்வாறான மாற்றங்களை மிகுந்த வலி/வெறுப்புகளுடன் தாங்கள் பதின்மங்களில் எதிர்கொண்டதாய் சிலர் தோழியர் கூறியது நினைவு), அவ்வாறான திடீர் மாற்றங்களுடன் எப்படி வெளிச்சமூகத்தை எதிர்கொள்வது என்பன போன்ற மிகுந்த சிக்கல்கலுடையது பெண்களுடைய பதின்மம். (உங்களைப்போன்ற பெண்கள்)இவ்வாறான விடயங்களை எழுதவேண்டும்; அது பெண்களுக்கான புரிதல்களாக மட்டுமில்லாது, ஆண்கள் பெண்களை விளங்கிக்கொள்கின்ற புள்ளிகளாகவும் இருக்கக்கூடும்

ஒருகாலத்தில் சங்கரராமசுப்பிரமணியன் எழுதிய முலைகள் பற்றிய கவிதையை இதுவல்லவோ கவிதையென நினைத்துக்கொண்டாடிக்கொண்டிருந்தேன் (அதில் இடது முலைக்கு ஒரு பெயர், வலது முலைக்கு இன்னொரு பெயரென சூட்டி முலைகளைப் பற்றி மட்டுமே அதில் அவர் எழுதியிருப்பார்). பின்னாட்களில் தோழியொருவர் தனக்கு முலைகள் வளரத்தொடங்கிய காலங்களில் முலைகளை மிகவும் வெறுக்கத்தொடங்கியிருந்தேன் என தனது பதின்ம அனுபவங்களினூடாகக் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி வெளியே போகும் பல சமயங்களில் ஏற்படும் சங்கடங்களினால் இவற்றைக் கழற்றிவைத்துவிட்டுப் போகும் ஒரு வாய்ப்பு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமெனவும் பல தடவைகள் யோசித்ததாகவும் கூறியிருந்தார். இவ்வாறு இன்னும் பல விடயங்களை அறிந்தபோது சங்கரராமசுப்பிரமணியனின் கவிதையை மீள்வாசிப்புச் செய்யும் நிலை ஏற்பட்டது; முன்பு தந்திருந்த ஒரு பரவசநிலையை அது பின்னர் தந்திருக்கவில்லை (அப்படி எழுதுவது தவறு என்று சொல்லவரவில்லை). இதை பெண்ணியம் குறித்து எவ்வளவு அக்கறையுடன் ஆண்கள் பேசினாலும் பெண்கள் பேசுவது போல நேர்மையாகவும் வலிமையாகவும் இருக்காது என்ற புள்ளியோடும் இணைத்துப் பார்க்கலாம்.

சரி, கூட எழுதிவிட்டேன் என்று நினைக்கின்றேன்;இத்தோடு நிறுத்திக்கொள்கின்றேன்.:-).

7/17/2007 09:11:00 AM
Chandravathanaa said...

டிசே
இதற்கு விரிவான பதில் தர வேண்டும் என்று நினைத்ததில் சில நாட்களைக் கடத்தி விட்டேன்.
இன்றும் கூட விரிவான பதிலுக்கு நேரம் இடம் தரவில்லை. பின்னர் விரிவான பதிலை இங்கேயோ எனது பதிவிலோ தருகிறேன்.


உங்கள் தோழி குறிப்பிட்ட - மிகவும் வெறுக்கத் தொடங்கியிருந்தேன் - என்ற கூற்று என்னைப் பலவாறு சிந்திக்க வைத்தது. அப்படி வெறுப்பவர்கள் மிகக்குறைவு என்பதே என் கருத்து. வெறுப்பதற்கு வேறு ஏதாவது உளவியல் காரணங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

மிகவும் கூச்சம்(சொல்லில் வடிக்க முடியாத...) அளவு கடந்த வெட்கம்... போன்ற உணர்வுகளே சாதாரணமான பெண்களுக்கு இருந்திருக்கின்றன. உங்கள் பதிவின் பின் ஜேர்மனிய நண்பிகளுடன் பேசிப் பார்த்தேன். அவர்களின் வாழ்க்கை முறை வேறு என்றாலும் அவர்களுக்கும் அந்த - அளவு கடந்த கூச்சமும் வெட்கமும் - இருந்திருக்கிறது. அவர்களது பிள்ளைகளும் பதின்மம் தொடங்கும் வயதில் அப்படியான கூச்சத்துடன் நடந்ததை இவர்கள் அவதானித்துள்ளார்கள்.

நிரூபாவின் தொகுப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவரின் பல கதைகளை வெவ்வேவேறு புத்தகங்களிலிருந்து வாசித்திருக்கிறேன். அனேகமான ஒவ்வொரு பெண் குழந்தையும் பதின்மத்தை நெருங்க முன்னும், நெருங்கும் போதும்--- என்று அனுபவித்தவையே அவை. பதின்மம் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் - கனவா நனவா என்று தெரியாத மயக்க நிலையில் வைத்திருப்பதே - . ஆனால் அந்த மயக்கமும் கனவும் ஒரு புறம் இருக்க, மிக அவஸ்தையான காலங்கள் ஆக்கப் படுவது அவர்களைச் சுற்றியுள்ளவர்களாலேயே. அதற்கு நிரூபா எழுதிய கதைகள் மிக மிக யதார்த்தமான உதாரணங்கள். யாரும் எழுதாத, ஏன் பெற்ற தாயிடமே சொல்லத் தயங்குகின்ற விடயங்களை நிரூபா வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். அவைகள் ஒரு பெண்ணின் பதின்மத்தை பக்கத்திலிருந்து ஒரு ஊசியால் குத்திக் குத்தி ரணப்படுத்துவது மட்டுமல்லாமல் வலியில் துடிக்க வைப்பது போன்ற நிகழ்வுகள்.

பதின்மத்தின் உணர்வுகள், பதின்மம் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாத வயதில் கனவில் மிதக்க வைப்பது. அதைத் துயரம் மிகுந்த, அருவருப்பான பொழுதுகளாகப் பார்க்க வேண்டிய நிலை சில பெண்களுக்கு ஏற்படுவதற்குக் காரணம் நிரூபா எழுதிய கதைகளில் வருபவையே.

வீட்டில் பெற்றேரால் உறவுகளால் விதிக்கப் படும் அதிக கட்டுப்பாடுகளும் பெண்களின் பதின்மத்தின் சிறகுகளை முறித்தெறிவது போன்றது. அந்தக் கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் கூட வீட்டுக்குள்ளேயே கட்டுடைப்புகள் நடப்பதைக் கவனத்தில் கொள்வதில்லை.

இபை பற்றியும், பெண்களின் பதின்மம் பற்றியும் எழுத முடிந்தால் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

7/20/2007 01:16:00 AM
Jazeela said...

டிசே- சந்திரவதனா பின்னூட்டங்கள் பதிவின் சுவாரஸ்யத்தையே மிஞ்சிவிட்டது. //பதின்மம் பெண்களுக்கு ஆண்களைப் போன்று இருப்பதில்லை. // இது உண்மையா? இருவருக்கும் ஒரே வகையான உணர்வுகள்தான் ஆனால் பெண்கள் அடக்கி வாசிக்கிறார்கள் அவ்வளவுதான். ஆண்கள் ரொம்ப வெளிப்படையெனலாம். எனக்கு தெரிந்து பதின்மம் வயதில் மட்டுமல்ல அதனை கடந்த பிறகும் எத்தனையோ ஆண்கள் அதே நினைப்போடு திரிகிறார்கள்.

//கொழும்பில் வயது வந்தோருக்கான படங்கள் ஓடிய தியேட்டர்களுக்கு ஒருமுறை கூடச்சென்று பார்க்காத - நிறைவேறாத ஆசை- எனக்குள் பதின்மங்களில் இருந்தது. // இதை படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. மன்னிக்கவும். இந்த மாதிரியான எண்ணங்களுக்கு 'பதின்மம்' என்ற முகமூடி போடப்படுகிறதோ என்பது என் எண்ணம்.

7/20/2007 08:57:00 AM
இளங்கோ-டிசே said...

சந்திரவதனா,
/வீட்டில் பெற்றேரால் உறவுகளால் விதிக்கப் படும் அதிக கட்டுப்பாடுகளும் பெண்களின் பதின்மத்தின் சிறகுகளை முறித்தெறிவது போன்றது/
உண்மைதான். பதின்மப்பெண்களுக்கு அவர்கள் வயதொத்த பெடியங்களோடு கவனமாகவும் அவதானமாகவும் இருக்கச் சொல்லிக்கொடுக்கும் (தமிழ்ச்)சமூகம் குடும்பத்துக்குள்ளிருக்கும் உறவுகளைப் பற்றியும், வயது முதிர்ந்தவர்கள் குறித்தும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்று அதிகவேளைகளில் சொல்லிக்கொடுக்கத் தவறிவிடுகின்றன. .நிரூபாவோடு ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபோது, அவரது தொகுப்பை வாசித்தபின் எனது கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தேன். 'ஒரு பெண்ணுடைய வாழ்வு முறையை அதிகமாய் உங்களது கதைகள் அடையாளப்படுத்தினாலும், -ஒரு பெண் பருவமடைவதற்கு முன் கூறப்பட்ட விடயங்களை- எனது சிறுவயதுச் சம்பவங்களோடு இணைத்துப் பார்க்கக்கூடியதாய் இருந்தது என்று நிரூபாவிடம் கூறியதாய் நினைவு. பருவமடையும் பெண்களை பிறகு நம் சமூகம் அவர்கள் இயல்பாய் இருக்க விரும்பும் நிலையிலிருந்து எங்கோ தூர அடித்துத் துரத்தியல்லவா விடுகின்றது?
...........................

---- //பதின்மம் பெண்களுக்கு ஆண்களைப் போன்று இருப்பதில்லை. // இது உண்மையா? இருவருக்கும் ஒரே வகையான உணர்வுகள்தான் ஆனால் பெண்கள் அடக்கி வாசிக்கிறார்கள் அவ்வளவுதான். ஆண்கள் ரொம்ப வெளிப்படையெனலாம். எனக்கு தெரிந்து-----

ஜெஸிலா, நீங்கள் கூறுவதைத்தான் நானும் கூறவிரும்பினேன். ஆனால் தெளிவாகச் சொல்லவில்லை என நினைக்கின்றேன். உணர்ச்சிகள் இன்னபிற என்பதில் எல்லா மானிட உயிர்களும் அவ்வளவாய் வித்தியாசப்படப்போவதில்லை. ஆண்களைப்போல பெண்களுக்கு பதின்மம் இருப்பதில்லையென்பதில் நான் கூற விழைந்தது, நம் சமூகம் பதினமமடைந்த பெண்களுக்கு கொடுக்கும் அழுத்தங்களையும், கண்காணிப்பையும்தான். இவ்வறான கண்காணிப்போ அழுத்தங்களோ ஒரு ஆணுக்கு கொடுக்கப்படுவதில்லைத்தானே..? உதாரணத்திற்கு சந்திரவதனா குறிப்பிடுகின்ற, 'பருவமடையும்போது அநேக பெண்கள் வெட்கப்படுவதுபோல' ஆண்கள் தமது பருவ உடல் வளர்ச்சியைப் பார்ப்பதில்லை; அநேக ஆண்களுக்கு அதொரு பெருமிதத்தைத்தான் கொடுக்கின்றது. சமூகத்தில் எல்லாச் சொற்களும், 'அவன் ஆணெல்லவோ, நீ அப்படியில்லை..' என்று ஆரம்பித்துதானே பெண்களை நோக்கிய அழுத்தங்கள் ஆரம்பிக்கும்.. அவ்வாறானபட்சத்தில் என்ன செய்யமுடியும்? அடக்கித்தானே வாசிக்கமுடியும்..

-----//கொழும்பில் வயது வந்தோருக்கான படங்கள் ஓடிய தியேட்டர்களுக்கு ஒருமுறை கூடச்சென்று பார்க்காத - நிறைவேறாத ஆசை- எனக்குள் பதின்மங்களில் இருந்தது. // இதை படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. மன்னிக்கவும். இந்த மாதிரியான எண்ணங்களுக்கு 'பதின்மம்' என்ற முகமூடி போடப்படுகிறதோ என்பது என் எண்ணம்.----

பதினமத்தை ஒரு முகமூடியாக்கவில்லை. ஆனால் எப்போதும் 'முதன்முதல்' என்பதில் ஒருவித ஆர்வம் இருக்குமல்லவா? பதினமம் என்பது உடனே எமக்கான எல்லா வாசல்களையும் திறந்துவிடுகின்றதான் உணர்வு வந்துவிடுகின்றதுதானே. அதைத்தான் குறிப்பிட விழைந்தேனே தவிர, பதின்மத்தை இவ்வாறான உணர்வுகளுக்கு ஒரு முகமூடியாக்கும் எண்ணமில்லை. பிறகு இதற்கும் கஸ்தூரி ராஜாவின் படங்களுக்கும் வித்தியாசமில்லாது போய்விடுந்தானே (அவர் எல்லாவற்றுக்கும் பதின்மத்தை முகமூடியாக்கித் தப்பித்துவிடுவார்). மற்றும்படி இவ்வாறான படங்கள் பார்ப்பது தவறு/கலாசாரச்சீரழிவு என்று கூறப்படுகின்ற (பலரின்) கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை.

7/20/2007 10:24:00 AM
Chandravathanaa said...

டிசே
இந்தக் கதையை முன்னரே வாசித்தீர்களோ தெரியவில்லை.
எனது தங்கை எழுதிய கதை. 2002இல் அல்லது 2003இல் ஊடறுவில் பிரசுரமானது.
பதின்மம் பற்றி ஓரளவு நாசூக்காகச் சொல்லப் படுவது. எனக்குப் பிடித்த
கதைகளில் ஒன்று.

இதை எப்போதோ இங்கு சுட்டி கொடுக்க விரும்பினேன். இன்றுதான் சில மாதங்களாக
இழுபட்ட ஒரு வேலையை முடித்து, சாதாரணத்துக்குத் திரும்பியிருக்கிறேன்.
நினைவு வந்தது. தருகிறேன். விரும்பினால் வாசித்துப் பாருங்கள்.

http://manaosai.blogspot.com/2007/08/blog-post.html

8/06/2007 12:55:00 AM
இளங்கோ-டிசே said...

சந்திரவதனா. இக்கதையை ஏற்கனவே வாசித்ததாய் நினைவு. உங்களால் இன்னொருமுறை வாசிக்க முடிந்திருந்தது. நன்றி.
.....
இவ்வாறான கதைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு வந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும் என்று யோசிக்கத்தான் முடிகின்றது. போதும் போதுமென்றளவுக்கு ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் -அங்குமிங்குமாய் இருக்கும் கவிதைகள்- ஈழத்தவராலும்/தமிழகத்தவர்களாலும் தொகுத்து வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இனி இவ்வாறான சிறுகதைகள் தொகுக்கப்படல்தான் முக்கியமானது. இரண்டாயிரம் ஆண்டளவில், கனடாவிலிருக்கும் எழுத்தாளர்களின் கதைகளை எஸ்.பொ தொகுத்து வெளியிடுவதற்காய் நண்பரொருவர் கதைகள் சேகரித்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகின்றது. பிறகு என்ன நடந்ததோ தெரியாது.

8/13/2007 02:06:00 PM