நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

வண்ணத்துப்பூச்சியைப் புணர்ந்தவன்

Friday, August 03, 2007

*யசோதராவிற்காய்
வீடு திரும்பிய புத்தர்
நயாகராவின் வண்ணத்துப்பூச்சிககாட்டில் மீண்டுமலையக்கண்டேன்
பிரதிகளில் என்னைக்கொன்று மிதக்கவைத்த நீ
தொடர்ந்து பின்தொடர்வதற்கு
தன்னிடம் சிலிக்கனால் உருப்பெருப்பிக்கப்பட்ட
முலைகள் எதுவும் இல்லையென்றார் சினத்துடன்.
**வைன்கோப்பை-நீலோற்பலமொட்டு-விளாங்காய்
கவிதைகள் நிரம்ப வாசிக்க
புத்தர் எப்போது தமிழ்படித்தாரென
அகழ்வாராய ***கந்தரோடைக்குப் பயணித்திருந்தேன் இருளில்.

ஒருநாள்;
கிழக்கில் தமிழரின் அடையாளமழித்து
சாந்தத்தை வெற்றியின் சின்னமாக்கும் வாளேந்திய சிங்கங்களுக்கெதிராய்
புத்தரின் ஒளிரும் குறியை அறுத்தெறிந்து
எனதல்லாத எனது ஊரில் பிணங்கள்தின்றபடியலையும்
மரநாய்களுக்கு காணிக்கையாக்கினேன்
பின்
த்மிழனெனும் தூயவாதம் பேசி
முஸ்லிம்களைத் துரத்திய பெருந்துயரொழிக்க
வண்ணத்துப்பூச்சியொன்றை
வெறியுடன் புணரத்தொடங்கினேன்
எவர்க்கும் சொந்தமில்லாது எவனாகவோ ஆகுமென்னை
யசோதரா
புத்தரையும் வண்ணத்துப்பூச்சியையும் சிதைத்தற்காய்
ஒரு குற்றவாளியென தூக்குக்கயிரை மாட்டிவிடுகின்றாள்.

இப்படித்தான்
எங்கள் நாட்டில் சமாதானம் வருவதற்காய்
ஒரு சுன்னத்துச்செய்யப்பட்ட தமிழ்ப்பவுத்தன்...
பைத்தியமாகி அலைந்தானெனும் குறிப்பு
அம்பனையின் பதுங்குகுழியிலிருந்த மண்டையோடென்றில் பதியப்பட்டிருந்தது.

* தொடர்புடைய முன்பு
எழுதப்பட்ட கவிதை
** சேரன், திருமாவளவன், செழியன் கவிதைகளில் இச்சொற்கள் முலைகளுக்கு உவமிக்கப்படுகின்றன
*** தொல்பொருள் அகழ்வராய்வுகள் நடைபெற்ற இடம். தமிழர்கள் பவுத்தர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கான அடையாளங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.


(அய்யனாருக்கு...)

6 comments:

Sri Rangan said...

.//..ஒருநாள்;
கிழக்கில் தமிழரின் அடையாளமழித்து
சாந்தத்தை வெற்றியின் சின்னமாக்கும் வாளேந்திய சிங்கங்களுக்கெதிராய்
புத்தரின் ஒளிரும் குறியை அறுத்தெறிந்து
எனதல்லாத எனது ஊரில் பிணங்கள்தின்றபடியலையும்
மரநாய்களுக்கு காணிக்கையாக்கினேன்
பின்
த்மிழனெனும் தூயவாதம் பேசி
முஸ்லிம்களைத் துரத்திய பெருந்துயரொழிக்க
வண்ணத்துப்பூச்சியொன்றை
வெறியுடன் புணரத்தொடங்கினேன்
எவக்கும் சொந்தமில்லாது எவனாகவோ ஆகுமென்னை
யசோதரா
புத்தரையும் வண்ணத்துப்பூச்சியையும் சிதைத்தற்காய்
ஒரு குற்றவாளியென தூக்குக்கயிரை மாட்டிவிடுகின்றாள்.//
டி:சே,நீண்ட நேரம் இக்கவிதையை வாசித்துபடி உங்களது தளத்தில் இருந்தேன்.ஒரு மணி நேரம் இருக்கும்.இந்தக் கவிதைமனதை எங்ஙனம் புரிவது?பெரிய சிக்கல்.நாம் இயலாமையோடு வாழ்கிறோம்.நமது தேசத்தில் நடைபெறும் அரசியல் நம்மைப் படுகுழியில் தள்ளியபடி நமது தடயங்களையே இல்லாதாக்கி வருகிறது.எம்மிடம் படிமம் மட்டுமே "நமது ஊரை-தேசத்தை"உணர்வுக்குள் கொணர்ந்தபடி...எனவேதாம்"எனதல்லாத எனது ஊரில் பிணங்கள்தின்றபடியலையும்
மரநாய்களுக்கு காணிக்கையாக்கினேன்"இந்த வசனம்-உணர்வு,உண்மை நம்மை வருத்துகிறது.இது எமக்குள் கிடந்தும் பிராண்டும் உணர்வு நிலை.இதை ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் என்னால் மிகக் காட்டமாகவுணர முடியும்.நமது பிறந்த மண்ணின் படிமங்கள் மீண்டும்,மீண்டும் அந்த மண் குருதியால் சேறாகும் காட்சியாகி மனதைக் குடைகிறது.படிமத்துக்குள் இருக்கும் என் தேசம்-ஊர் சித்திரை மாதம்,சோழகம் வீசிச் செடிகள் பேய் ஆட்டம் போடும் அழகு.வேம்பு பூத்துக் குலங்கிக் கொண்டுண்டு மணக்கும் வாசம்.இப்படிக் கனவுகளாகப் படிமத்துள் விரிய,நாம் இருக்கிறோம்-வாழ்கிறோம்!உங்கள் வார்த்தைகள் ஒரு பெரிய உண்மையோடு வருகிறது.அதாவது,நாம் தேசம் தொலைத்தவர்கள்.இதற்குள் பல பொருளுண்டு.பெத்தவளை,உடன் பிறந்ததுகளை,சுற்றத்தைச் சூழலை,இப்படிப் பலவாக விரியும்.தேசம் இவையெல்லாவற்றையும் உள்ளடிக்கியது.அதனால் உருகுகிறோம்.உங்கள் கவிதை பேசும் உணர்வுகளைக் கொணர்கிறது.


ஸ்ரீரங்கன்.

8/03/2007 03:34:00 PM
Ayyanar Viswanath said...

முத்தத்தை விட வலிமையானதாய் இருக்கிறதே டிசே

8/04/2007 02:45:00 AM
த.அகிலன் said...

ம்..... இன்னமும் சிந்தித்துக்கொண்டேயிருக்கிறேன் கவிதை குறித்து...தீராத உணர்வுகளை விழுங்கி புரண்டு கொண்டிருக்கிறது மனசுக்குள் ஒரு கூட்டுப்புழு....

8/06/2007 03:34:00 AM
இளங்கோ-டிசே said...

ஸ்ரீரங்கன், உங்கள் பின்னூட்டம் இன்னும் விரிவான தளத்துக்கு சிந்தனையை விரிய வைக்கின்றது. நன்றி.
......
அய்யனார் & அகிலன்: நன்றி.

8/09/2007 09:19:00 AM
Anonymous said...

//த்மிழனெனும் தூயவாதம் பேசி
முஸ்லிம்களைத் துரத்திய பெருந்துயரொழிக்க//

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய கோரம் தொடர்பில் அச்செயலின் வன்மம் வெளிப்படையாகப் பீறி பரவலாக நாற்றமெடுத்தது தான் தமிழ் மேலாண்மைவாதிகளுக்கு சங்கடத்தையும் வருத்தத்தையும் தருவித்ததே தவிர முஸ்லிம்களின் அவலத்திலிருந்து கிளர்வதல்ல அவர்களது கவலை என்பதான பொருள்பட முஸ்லிம்களில் சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுத் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.

9/19/2007 07:17:00 AM
இளங்கோ-டிசே said...

மூடன், நீங்கள் குறிப்பிடும் புள்ளி நியாயமானதுதான். அதேவேளை, 'ஈழத்தில் போர்தீண்டாத எந்த் ஊரையும் பார்க்கமுடியாது' என்று ஓரிடத்தில் எழுதியபோது ஈழத்திலிருக்கும் நண்பரொருவர் -தனிப்பட்ட மெயிலில்-அவ்வாறு போர் தீண்டாத சில கிழக்கு மாகாண முஸ்லிம் கிராமங்கள் உண்டென எழுதியது நினைவுக்கு வருகின்றது. எதையும் பொதுப்புள்ளியில் வைத்து உரையாடமுடியாது என்பது மட்டும் புரிகின்றது. தனது ஊரில் வாழ மறுக்கப்பட்டவன் அதேபோன்று ஊரைவிட்டுத் துரத்தப்பட்டவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்கின்றதையே குறிப்பிட விழைந்தேன். எனினும் எல்லா விதமான வாசிப்புக்களும் சாத்தியமே. நன்றி.

10/04/2007 10:51:00 AM