கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

*பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்

Sunday, November 15, 2009

பாலஸ்தீன எதிர்ப்பு இசை
-அஹமட் ஹபீப்

தமிழாக்கம்: டிசே தமிழன்

திரைப்பட இயக்குநரும், நெறியாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகின்றார்.

பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிக்கனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புக்களில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கின்றது. சலூம் தனது பதின்ம இறுதிகளில், நியூயோர்க் பல்கலைக்கழகத்திலுள்ள கலைக் கல்லூரியில் படித்திருக்கிறார்.

2005ம் ஆண்டில் சண்டான்ஸ் திரைப்படவிழாவில், 'அரேபியர்களின் உலகம்' என்கின்ற ஒன்பது நிமிடப் படத்தை சலூம் தயாரித்து அளித்திருக்கிறார். இப்படம் எப்படி அரேபியர்கள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. எனினும், சலூம் அவரது அண்மைய படமான 'slingshot hip hop' மூலமாக அதிக கவனத்தைப் பெற்றதுடன், இப்படம் ரொறொண்டோவில் நிகழ்ந்த பாலஸ்தீனியத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த 80 நிமிட ஆவணப்படத்தில், சலூம் எவ்வாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீன ஹிப் ஹொப் கலைஞர்களின் வாழ்வும் கலையும் இருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகின்றார்.

இஸ்ரேலுக்குள் இருக்கின்ற DAM மற்றும் Lyd போன்ற குழுக்களும், காஸாவில் இருக்கின்ற P.R போன்ற குழுக்களும் தங்கள் இசையை ஒரு கலாசார எதிர்ப்பாய் அறிமுகப்படுத்துகிறார்கள்.

அல்ஜீசிராவிற்காய் இந்நேர்காணலைக் கண்டவர்: அஹமட் ஹபீப்

அஹமட் ஹபீப்: ஏன் நீங்கள் உங்கள் திரைப்படத்தை ஒருவிதமான எதிர்ப்பு எனக்கூறிக்கொள்கின்றீர்கள்?

சலூம்: அர‌புக்கார‌ர் ஒருவ‌ர், பொதுப்புத்தி ம‌ற்றும் அர‌சு/ வெளிநாட்டுக் கொள்கைக‌ளை எதிர்க்கும் ஒரு ப‌டைப்பைக் கொண்டு வ‌ருதலோ அல்ல‌து எங்க‌ள் க‌லாசார‌த்தையும் வ‌ர‌லாற்றையும் பிர‌திப‌லிக்கும் ப‌டைப்புக்க‌ளை உருவாக்குவது என்பதோ, ஒரு எதிர்ப்பினூடாக‌வே நிக‌ழ்த்த‌வேண்டியிருக்கிற‌து.

இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை தொட‌ர்ச்சியாக‌ உல‌கின் ப‌ல்வேறுபகுதிக‌ளிலுள்ள‌ திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் திரையிடும்போது, ப‌ல‌ ம‌க்க‌ள் முத‌ற்த‌ட‌வையாக‌ பால‌ஸ்தீனர்க‌ளையும், பால‌ஸ்தீனம் பற்றிய படிமங்களையும் பார்க்கின்றார்க‌ள்.இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ ராப் பாட‌க‌ர்க‌ள், பால‌ஸ்தீனர்க‌ளின் வாழ்க்கையில் புதிய‌ ய‌ன்ன‌ல் ஒன்றைத் திற‌ந்துவிடுகின்றார்க‌ள்.

இன்னொருவ‌கையில் இந்த‌ப்ப‌ட‌ம் க‌ற்பித்தலிற்கான ஓர் உப‌க‌ர‌ண‌மும் கூட‌. அமெரிக்காவிலுள்ள‌ ப‌ல‌ உய‌ர்க‌ல்லூரிக‌ள் மற்றும் க‌ல்லூரிக‌ளின் பாட‌விதான‌த்தில் இந்த‌ப்ப‌ட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து.

ப்ரோக்ளின் போன்ற‌ ப‌குதிக‌ளிலிருந்து வ‌ரும் மாண‌வ‌ர்க‌ள் ‍-முக்கிய‌மாய் க‌றுப்பின, இல‌த்தீனிய‌ இனத்தைச் சேர்ந்தவர்கள்- பால‌ஸ்தீன்ர்களின் போராட்ட‌த்தினால் க‌வ‌ர‌ப்ப‌ட்ட்டிருக்கின்றார்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பிர‌ச்சனைக‌ளுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பால‌ஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் இருந்து பாலஸ்தீன ராப் பாடகர்கள் பாடும் த‌ங்க‌ளின் வாழ்வு ப‌ற்றிய‌ கதைகளுக்கும் இடையில் தொட‌ர்புக‌ளைக் க‌ண்டுபிடிக்கின்ற‌ன‌ர். அமெரிக்காவிலிருக்கும் சில மாண‌வ‌ர்க‌ள், பால‌ஸ்தீன ராப் பாட‌க‌ர்க‌ளைக் க‌வுர‌ப்ப‌டுத்தும் முக‌மாய் ஹிப் ஹொப் பாட‌ல்க‌ளை அர‌பு-அமெரிக்க‌ க‌ல‌ப்பு இசையில் எழுதியுமிருக்கின்றார்க‌ள்.

இந்த‌ப்ப‌ட‌ம் ஒருவ‌கையான‌ 'எதிர்ப்பு' என்று கூறுவ‌த‌ற்கு இவ்வாற‌ன‌வை ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ளாகும்.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான‌ த‌டைக‌ளை இப்ப‌ட‌த்தை உருவாக்கும்போது ச‌ந்தித்திருந்திருந்தீர்க‌ள்?

சலூம்: நான் இத்திட்ட‌த்திற்காக‌ ப‌ண‌த்தைச் சேக‌ரிக்க‌த் தொட‌ங்கிய‌போது, இப்ப‌ட‌ம் பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப் இய‌க்க‌ம் ப‌ற்றிய‌து என்ப‌தை எப்போதும் நினைவுப‌டுத்திக்கொண்டு இருக்க‌வேண்டியிருந்த‌து.

அநேக‌மான‌வ‌ர்க‌ள் இப்ப‌ட‌ம் இஸ்ரேலிய‌ர்க‌ளும், பால‌ஸ்தீனர்க‌ளும் எப்ப‌டி ஹிப் ஹொப்பால் இணைகின்றார்க‌ள் என்ப‌தாக‌ இருக்குமென‌ நினைத்தார்க‌ள். ஆனால் இது பால‌ஸ்தீனிய‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌து மட்டும் என்று அவ‌ர்க‌ள் உண‌ர்ந்த‌போது, அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இந்தத் திட்டத்தில் ஈடுபாட்டைக் காட்ட‌வில்லை.

இறுதியில், என்னிட‌மிருந்த‌ ப‌ண‌ம் அனைத்தும் செல‌வழிந்து என‌து பெற்றோருட‌ன் திரும்பச்சென்று வாழ‌ வேண்டிய‌ நிலை ஏற்ப‌ட்ட‌து. அங்கே என‌து பெற்றோருக்குச் சொந்த‌மான‌ ஜ‌ஸ்கிறிம் க‌டையில் வேலை செய்திருக்கின்றேன். இவ்வாறாக‌ வேலை செய்துகொண்டு, இர‌வில் படத்தை எடிட் செய்வ‌துமாய் இருந்தேன். ஐஸ்கிறிம் பார்ல‌ரினால் வ‌ந்த‌ லாப‌ம் எல்லாவ‌ற்றையும் இந்தப்படத்திற்காய்ச் செல‌வ‌ழித்தேன்.

அத‌னால் தான், இப்ப‌ட‌ம் முடியும்போது, 'குளிர்ச்சியான ஜ‌ஸ்கிறிம் த‌யாரிப்புக்க‌ளுக்கு' என்று ச‌ம‌ர்ப்பித்திருப்ப‌தை நீங்க‌ள் காண்பீர்கள்.

இவையும், ச‌மூக‌த்தின‌தும் ம‌ற்ற‌ க‌லைஞ‌ர்க‌ளின் உத‌வி இல்லாதிருந்துவிட்டால் இப்ப‌ட‌த்திற்கு நிதியே வ‌ந்திருக்காது.

அத்தோடு இப்ப‌ட‌த்தை இஸ்ரேலில் எடுத்துக்கொண்டிருந்த‌போது, ப‌ல‌வித‌ த‌டைக‌ளைச் ச‌ந்தித்திருந்தேன். ஓர் அர‌பு அமெரிக்க‌ராய், ரெல் அவிவிலுள்ள‌ பென் குரிய‌ன் விமான‌ நிலைய‌த்திற்குப் போவ‌தென்ப‌தும் எப்போதும் மிக‌ப்பெரும் ச‌வாலான‌ அனுப‌வ‌மாக‌வும் அதைவிட‌ காஸாவிற்குள் நுழைவ‌து என்பது இன்னும் க‌டின‌மானதாக‌வும் இருந்திருக்கின்ற‌து.

நானொரு பால‌ஸ்தீனிய‌ப் பின்புல‌த்தில் இருப்ப‌தை அவ‌ர்க‌ள் அறியும்போது இது இன்னும் மோச்மாக இருந்தது. என்னை ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக தடுத்தி நிறுத்தி வைத்திருந்திருக்கின்றார்கள், சில‌ நேர‌ங்க‌ளில் ஏழு ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு மேலாக‌வும்.

இன்ன‌மும் ம‌ன‌அழுத்த‌ம் இருப்ப‌து எங்கே என்றால், நான் (இஸ்ரேலின்) உள்ளே அனும‌திக்க‌ப்ப‌டுவேனா என்ப‌தை அறிய‌முடியாம‌ல் இருக்கும்போது; எனெனில் என‌க்குத் தெரிந்த ப‌ல‌ அர‌பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இஸ்ரேலின் உள்ளே பிர‌வேசிக்கப்ப‌டுவ‌து ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒருமுறை இஸ்ரேலிய‌ அதிகாரிக‌ள் என‌து க‌ம‌ராவைத் திருப்பித் த‌ருவ‌த‌ற்கு முன் உடைத்திருக்கின்றார்க‌ள். அத‌ன் பின், நான் டேப்புக்க‌ளையோ, உப‌க‌ர‌ண‌ங்க‌ளையோ ப‌ய‌ணிக்கும்போது கொண்டு செல்வ‌தில்லை.

நாங்க‌ள் இஸ்ரேலின் இவ்வாறான‌ செய்கைக‌ள் குறித்து எந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் ஒருபோதும் கேட்ட‌தில்லை. ராச்ச‌ல் கோரி போன்ற‌ அமெரிக்க‌ குடியுரிமையுள்ள‌வர்கள் இஸ்ரேலிய‌ புல்டோச‌ர்க‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌போது கூட‌, இஸ்ரேலின் செயற்பாடுகளை -அவ‌ர்க‌ள் காஸாவிலுள்ள 'தீவிர‌வாதிகளிற்கு' எதிராக‌ச் ச‌ண்டைபிடிக்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையில் ஊட‌க‌ங்க‌ளினால் நியாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான உற‌வுக‌ள் பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேலிய‌ ராப் பாட‌க‌ர்க‌ளுக்கிடையில் இருக்கிற‌து?

சலூம்: நான் பால‌ஸ்தீனர்க‌ளும் இஸ்ரேலிய‌ர்க‌ளும் எப்ப‌டி ராப் பாட‌ல‌களினுடாக‌ ஒற்றுமையாக‌ சேர்ந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிப் ப‌ட‌ம் எடுக்க‌வில்லை எனெனில் ய‌தார்த்த‌தில் அவ்வாறான‌ ஒரு நிலை ஹிப் ஹொப்பில் அங்கே இருக்க‌வேயில்லை.

அத்துட‌ன் குறிப்பிடும்ப‌டியான‌ ஒருங்கிணைவு பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேல் ராப்ப‌ர்க‌ளிடையே இருக்க‌வில்லை. மிக‌வும் பிர‌ப‌ல்ய‌மான‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் க‌லைஞ‌ரே ஒரு வ‌ல‌து சாரி சியோனிஸ்டாக‌ இருப்ப‌தோடு, அர‌புக்க‌ளை கொல்லுமாறுதான் த‌ன‌து நிக‌ழ்வுக‌ளில் இர‌சிக‌ர்க‌ளுக்குப் பாடிக்கொண்டிருக்க்கின்றார்.

பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள‌து இர‌சிக‌ர்க‌ளும் ஒருபோதும் இஸ்ரேலிய‌ர்க‌ளையோ யூத‌ர்க‌ளையோ கொல்ல‌ச் சொல்லிப் பாடுவ‌தில்லை.

ஒரு சில‌ இஸ்ரேலிய‌ ராப்பர்க‌ள் மித‌வாதிக‌ளாக‌வும், பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப்பிற்கு ஆத‌ர‌வாக‌வும் இருப்ப‌தோடு, டாம் ம‌ற்றும் அர‌பு‍-இஸ்ரேலிய‌ ராப்ப‌ர்க‌ளோடு சேர்ந்து வேலை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கின்றார்க‌ள்.

என்கின்ற‌போதும், இவ்வாறான மிக அரிய ஒன்றிணைவுகள் எதுவும் அவ்வ‌ள‌வாய் மைய‌நீரோட்ட‌த்திலுள்ள‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் உல‌கில் பிர‌திப‌லிப்ப‌தில்லை.

அஹமட் ஹபீப்: : அர‌புப் பெண்க‌ள் க‌லைக‌ளில் அதிக‌ம் ஈடுப‌ட‌வேண்டும் என்று நீங்க‌ள் அழைப்பு விடுத்துள்ளீர்க‌ள்?

சலூம்: பெண்க‌ளின் குர‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளில் கேட்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து எப்போதும் மிக‌ முக்கிய‌மான‌து.

இளைய‌ அர‌புக்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் ஆண்க‌ளாய் இருந்தாலென்ன‌ பெண்க‌ளாய் இருந்தாலென்ன‌ இவ்வாறான‌ க‌லை ச‌ம்ப‌ந்த‌மான‌ விடய‌ங்க‌ளில், தங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பது ப‌ற்றித் த‌ம‌து குடும்ப‌ங்க‌ளுக்குக் கூறுவது என்ப‌து மிக‌வும் க‌டின‌மாயிருக்கிற‌து.

வீட்டிலிருக்க‌வும், ச‌மைக்க‌வும் சுத்த‌ம் செய்ய‌வும் வேண்டிய‌வ‌ர்க‌ள் பெண்க‌ள் என்கின்ற‌ க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌ இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் ஈடுப‌டுவ‌து என்ப‌து ய‌தார்த்த‌தில் பெண்க‌ளுக்கு இன்னும் மிக‌வும் க‌டின‌மாயிருகிற‌து. நான் என‌து பெற்றோருக்கு க‌லைப்ப‌டிப்பு ப‌டிக்க‌ப்போகின்றேன் என்று கூறிய‌போது, அவ‌ர்க‌ள் வேண்டாம், ஒரு பார்ம‌ஸிக்காரியாகவோ நூலகக்காரியாகவோ ஆகத்தான் ப‌டிக்க‌ச் சொன்னார்க‌ள்.

அவ‌ர்க‌ளைச் ச‌ம‌ர‌ச‌ம் செய்வ‌த‌ற்காய் கிராபிக் டிசைனை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அத‌னால் அவ‌ர்க‌ள் என்னை ஊக்குவித்தார்க‌ள். ஆனால் நான் தொடர்ச்சியாக ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்து அது ஊட‌க‌ங்க‌ளின் க‌வ‌ன‌த்தையும் பெற்ற‌போது அவ‌ர்க‌ள் (பெற்றோர்) என்க்கு மிக‌ உத‌வியாக‌வும் பிற‌ அர‌புப் பெற்றோர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ஓவிய‌ர்க‌ளாக‌, இய‌க்குந‌ன‌ர்க‌ளாக‌, பாட‌க‌ர்க‌ளாக‌ வ‌ர‌ ஊக்குவிக்க‌ச் சொல்லிக் கூறியிருந்தார்கள்.

பால‌ஸ்தீனக் க‌லைஞ‌ராக‌ இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ அபீர், மேடைக‌ளில் ஏறிப்பாடும்போது த‌ன‌து உற‌வின‌ர்க‌ளின் ப‌ய‌முறுத்த‌ல‌க‌ளுக்கு எதிராக‌ப் போர‌ட‌வேண்டியிருந்த‌து. அதிக‌மான‌ வேளைக‌ளில் பாடுவ‌தை இர‌க‌சிய‌மாக‌ச் செய்ய‌வேண்டியிருந்த‌து.

இவை எல்லாவ‌ற்றுக்கும் அப்பால், அபீர் எது த‌ன‌க்க்கு அதிக‌ம் பிடித்த‌தாக‌ இருந்த‌தோ அதைத் தொட‌ர்ந்து செய்துகொண்டிருந்தார்.... அது தானே பாட‌ல்க‌ளை உருவாக்கிப் பாடுவது என்பதாக இருந்தது.

ஜோர்டான், லெப‌னான், பால‌ஸ்தீனம் ம‌ற்றும் அமெரிக்காவில் இப்ப‌ட‌ம் திரையிட‌ப்ப‌ட்ட‌திலிருந்து ப‌ல‌ இளம் பெண்க‌ள் அபிரூக்கு த‌ங்க‌ள் ஆதரவையும், அபீர் செய்யும் பணிக்கான கவுரவத்தையும் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் மூல‌ம் கூறிக்கொண்டிருக்கின்றார்க‌ள். அவ‌ர்க‌ளில் அநேக‌ர் தாங்க‌ளும் அபீரைப் போல‌வே ப‌ல‌வேறு ச‌வால்க‌ளைச் ச‌ந்தித்துக்கொண்டிருப்ப‌தாக‌க் கூறியிருக்கின்றார்க‌ள். அபீருக்கு பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளிட‌மிட‌மிருந்தும் அதிக‌ அதரவு கிடைத்திருக்கின்ற‌து. அவ‌ர்க‌ள் த‌ம‌து திட்ட‌ங்க‌ளிலிருந்து அபீரை அக‌ற்றுவ‌தை ம‌றுத்த‌துட‌ன், அர‌புச் ச‌மூக‌ங்க‌ள் பெண்க‌ளை ந‌ட‌த்தும் வித‌த்தையும் விம‌ர்சித்தும் இருக்கின்றார்க‌ள்.

அர‌பு உல‌கிலுள்ள‌வ‌ர்க‌ளுக்கு, அபீர், அரிய‌பெய‌ட் போன்ற‌ இள‌ம் பெண்க‌ளைக் காட்ட‌வேண்டும் என்ப‌திலும், ஹிப் ஹொப் உல‌க‌ம் என்ப‌து அமெரிக்கா மற்றும் அர‌பு நாடுக‌ளிலிருந்து வ‌ரும் இனிப்பு பூச‌ப்ப‌ட்ட‌ பொப் இசை போன்ற‌த‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்த்த‌வேண்டும் எனவும் நான் மிகவும் விரும்பினேன்.

அஹமட் ஹபீப்: : இந்தப் படத்தை தயாரித்துக்கொண்டிருந்தபோது, எவ்வகையான மறக்கமுடியாத் தருணங்களைச் சந்தித்திருந்தீர்கள்?

சலூம்: மேற்குக் கரையில் எப்போதும் எங்கள் உறவினர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்பதனால் எனக்கு ஆக்கிரமிப்பு வாழ்வு மிகவும் பழக்கப்பட்டதாக இருந்தது.

இஸ்ரேலியர்களுடான தொடர்பு என்பது எனக்கு காவலரண்களைத் தாண்டும்போதோ, விமான நிலையத்தால் வரும்போதோ தான் இருந்திருக்கின்றது. இல்லாதுவிட்டால் அவர்கள் டாங்கிகளில் வரும்போதோ அல்லது சினைப்பர் ர(ட)வர்களில் இருக்கும்போதுதான் அவர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. எனினும் இந்தப்படம் எனக்கு இஸ்ரேலியர்களின் 1948ம் ஆண்டு ஆக்கிரமிப்பின்பின் பாலஸ்தீனர்கள் தங்கள் நிலங்களில் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்ப‌தை அறிமுகப்படுத்தியது.

இஸ்ரேலிய குடியுரிமை இருந்தும் கூட மக்கள் மிகவும் மோசமான ஒடுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் இஸ்ரேலில் உள்ளாகின்றார்கள் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

முக்கியமாக பலவேறு நிலைகளில் பாலஸ்தீனர்கள் என்ற ஒரு பொது அடையாளத்திற்குள் அடைக்கப்பட்ட்டு ஒருமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சில இளையவர்களை நான் சந்தித்தபோது அவர்களுக்கு தமது பாலஸ்தீன அடையாளம் குறித்த குழப்பம் இருந்ததுடன், த்ங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்பதும் தெரியாமல் இருந்தது.

இவையெல்லாம் சேர்ந்து ஆக்கிரமித்த மக்களைப் பல்வேறு வழிகளில் பிரிக்கின்றது. அத்துடன் மேற்குக் கரையிலும், இஸ்ரேலிலும், காஸாவிலும் வாழும் பாலஸ்தீனர்களுக்கு ஒருவரை ஒருவர் சென்று பார்ப்பது எனபது மிகவும் சிரமமாக இருக்கின்றது.

இந்தப்புள்ளியில்தான் ஹிப் ஹொப் இசை பாலஸ்தீன இளையவர்களை ஒன்றாகக் கொண்டுவருவதில் முக்கியம் பெறுகின்றது.

அஹமட் ஹபீப்: நாங்கள் உங்களின் அடுத்த திட்டமாய் எதை எதிர்ப்பார்க்கலாம்?

சலூம்: இந்தப் படத்திற்காய் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களைச் செலவழித்திருக்கின்றேன். Slingshot hip hop படம் வெளிவந்துவிட்டதால் அதன் வெற்றிக்காக உழைக்க விரும்புகின்றேன்.

இறுதியாய், நான் அரபு கலைஞர்களின் வீடியோ இசை ஆல்பங்களில் வேலை செய்ய விரும்புகின்றேன். என்னால், தரப்படும் மூன்று நிமிடங்களுக்குள் ஒரு கதையைப் பாடலில் சொல்லமுடியுமென நினைக்கின்றேன்.

இன்றையநாட்களில் பாடல்களில் ஆக்கிரமித்திருக்கும் மெழுகுவர்த்திகள், நீர் மற்றும் பெண்களைப் பயன்படுத்தும் சூத்திரங்கள் என்பவற்றுக்கு மாற்றாய் வித்தியாசமாய் செய்ய நான் விரும்புகின்றேன்.

நன்றி: அல் ஜீசிரா
(உன்னதம், Nov, 2009)

*த‌லைய‌ங்க‌த்தைப் பொருத்த‌மாய் த‌மிழாக்கித்த‌ந்த‌ வ‌ள‌ர்ம‌திக்கு ந‌ன்றி.

எதிர்ப்பே வாழ்வாய்...

Saturday, October 31, 2009

-Aimee & Jaguar ஜேர்ம‌னிய‌த் திரைப்ப‌ட‌த்தை முன்வைத்து-

வ்வொருவ‌ருடைய‌ வாழ்வும் அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்கின்ற‌ கால‌த்தையும், இருக்கின்ற‌ ச‌மூக‌ங்க‌ளையும் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. எல்லா நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும் ந‌ம்மால் எப்ப‌டி ப‌ய‌ணிக்க‌ முடியாதோ, அவ்வாறே ந‌ம்மால் எல்லோருடைய‌ வாழ்வையும் வாழ்ந்து பார்க்க‌வும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைக‌ளையும், க‌லாசார‌ப்  பின்புல‌ங்க‌ளையும் வேறுவ‌கைக‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முய‌ற்சிக்க‌ முடியும். அத‌ற்கு ந‌ம் எல்லோருக்கும் விசால‌மாய் சிந்திக்கும் ம‌னோநிலையும், தெரியாத‌தை தெரிந்து கொள்ளும் ஆர்வ‌மும், இவ‌ற்றுக்கு அப்பால் முன் முடிவுக‌ள் எதையும் எடுக்காத‌ ச‌கிப்புத்தன்மையும் அவ‌சிய‌மாகின்ற‌ன‌.

Aimee & Jaguar என்கின்ற‌ இத்திரைப்ப‌ட‌ம் இர‌ண்டாம் உல‌க‌ப்போரின்போது நட‌க்கின்ற‌ க‌தை. ஹிட்ல‌ரின் நாஸிப்ப‌டைக‌ள், அமெரிக்காவின‌தும் அத‌ன் நேச‌ப்ப‌டைக‌ளின‌தும் தாக்குத‌ல்க‌ளினால் தோல்வியுற்றுக் கொண்டிருக்கின்ற‌ கால‌க‌ட்ட‌ம்; விமான‌க்குண்டுக‌ள் அகோர‌மாக‌ ஜேர்ம‌னிய‌ ந‌க‌ர‌ங்க‌ளில் விழுந்து வெடிக்கின்ற‌ன‌. வெல்வ‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இன்ன‌மும் உள்ள‌தென‌ அதீத‌ ந‌ம்பிக்கை கொள்கின்ற‌ நாஸிப்ப‌டையின‌ர் எல்லைக‌ளில் நின்று ச‌ண்டைபிடித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்.


நான்கு குழ‌ந்தைக‌ளின் தாயான‌ லிலிக்கு (Lilly) நாஸிப்ப‌டையில் போரிட்டுக்கொண்டிருக்கின்ற‌ க‌ண‌வ‌னால், அவரின் உடல்சார்ந்த‌ வேட்கையைத் த‌ணிக்க‌ முடியாதிருக்கின்ற‌து. அந்த‌வேளையில் த‌லைம‌றைவாக‌ வாழ்ந்துவ‌ருகின்ற‌ யூத‌ப்பெண்ணான‌ பெலிசியினுட‌ன்(Felice), லிலிக்கு உற‌வு முகிழ்கின்ற‌து. தொட‌க்க‌த்தில் காத‌லும் காம‌மும் வ‌ழிய‌ வ‌ழிய‌ வ‌ருகின்ற‌ அநாம‌தேய‌க் க‌டித‌ங்க‌ள் ஒரு ஆணால் அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌தென‌ லிலி நினைக்கின்றார். பின்னாளில் அது பெலிசியினால் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌டித‌ங்க‌ளென‌க் க‌ண்டுபிடித்து பெலிசியோடு சேர்ந்து வாழ‌த்தொட‌ங்குகின்றார். இவ்வாறிருக்கையில் த‌லைம‌றைவாக‌ இருக்கும் பெலிசியின் ந‌ண்ப‌ரொருவ‌ர் நாஸி உள‌வுத்துறையால் சுட‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுகின்றார். அதிலிருந்து தொட‌ரும் விசார‌ணைக‌ளில் யூத‌ரான‌ பெலிசியையும் நாஸிக‌ள் தேட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌ர்.

இத‌ற்கிடையில் குறுகிய‌ விடுமுறையில் போர்முனையிலிருந்து திரும்பி வ‌ரும் லிலியின் க‌ண‌வ‌ன், லிலி‍-பெலிசியின் உற‌வைக் க‌ண்டுபிடிக்கின்றார். எனினும் நான்கு குழ‌ந்தைக‌ளுட‌ன் இருக்கும் லிலி த‌ன்னுட‌ன் திரும்பிவ‌ருவார் என்று க‌ண‌வ‌ன் ந‌ம்புகின்ற‌போது, லிலி த‌ன‌க்கு விவாக‌ர‌த்துத் த‌ரும்ப‌டி க‌ண‌வ‌னிட‌ம் வேண்டுகின்றார்.

விவாக‌ர‌த்துப் பெற்ற‌ பெற்ற‌ லிலியுட‌ன் பெலிசி சேர்ந்து குடும்ப‌ப் பொறுப்புக்க‌ளை எடுக்கும்போது, ஹிட்ல‌ரைக் கொல்வ‌த‌ற்கென‌ உட்க‌ட்ட‌மைப்புக்குள் நிக‌ழ்ந்த‌ Valkyrieதிட்ட‌ம் நிகழ்ந்து தோல்வியில் முடிகின்ற‌து (இந்தக் கொலைத்திட்ட‌த்தை வைத்து, அண்மையில் Tom Cruise ந‌டித்து சொத‌ப்பிய‌ ப‌ட‌ம் நினைவுக்கு வ‌ருகிற‌து) . அத‌ன்பின் நிக‌ழ்கின்ற‌ ப‌டுமோச‌மான‌ க‌ளையெடுப்பில், தாங்க‌ளும் அக‌ப்ப‌டப்போகின்றோம் என்று அஞ்சி -த‌லைம‌றைவாய் வாழும் -பெலிசியின் ந‌ண்ப‌ர்க‌ள் ஜேர்ம‌னியை விட்டு வெளியேறுகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளுட‌ன் கூட‌வே வ‌ர‌ வ‌ற்புறுத்தியும் பெலிசி, த‌ன் காத‌லியான‌ லிலியை விட்டு வ‌ர‌மாட்டேனென‌ ம‌றுக்கின்றார்.

இந்த‌ப்பொழுதிலேயே லிலியிட‌ம், பெலிசி தான் த‌லைம‌றைவாய் வாழுமொரு யூத‌ இன‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் என்ற‌ உண்மையைக் கூறுகின்றார். யூத‌ர்க‌ளைத் தேடி அழிக்கும் நாஸிக‌ளின் ப‌த‌ற்ற‌மான‌ காலக‌ட்ட‌த்தில் பெலிசியை லிலி ஏற்றுக்கொள்வ‌தோடு த‌ன‌து காத‌லியைத் த‌ன‌து பெற்றோர்க‌ளிட‌மும் அறிமுக‌ப்ப‌டுத்துகின்றார். ஓரின‌ப்பால் துணையாக‌ ம‌ட்டுமின்றி, ஒரு யூத‌ராக‌வும் இருக்கும் பெலிசியை, லிலியின் பெற்றோர் த‌ய‌க்க‌த்துட‌ன் ஏற்றுக்கொள்கின்ற‌ன‌ர்.

இறுதியில் பெலிசியின் கொல்ல‌ப்ப‌ட்ட‌ தோழியிட‌ம் க‌ண்டெடுத்த‌ த‌ட‌ய‌ங்க‌ளை வைத்து பெலிசியை லிலியின் வீட்டில் வைத்து நாஸிக‌ள் கைது செய்கின்றார். சிறையிலிருக்கும் பெலிசியை அவ்வ‌ப்போது லிலி ச‌ந்தித்தாலும் அவ‌ரால‌ பெலிசியை விடுத‌லை செய்ய‌முடியாதிருக்கின்ற‌து பின்ன‌ர் போல‌ந்திலிருந்த‌ ஒரு சித்திர‌வ‌தை முகாமில் எவ்வித‌ச் சாட்சிய‌ங்க‌ளுமின்றி பெலிசி காணாம‌ற்போய்விடுகின்றார்(கொல்ல‌ப்ப‌ட்டுவிடுகின்றார்).

பின்னாளில் த‌ன‌து முதிய‌ வ‌ய‌தில் லிலி த‌ன‌து பால்ய‌கால‌த் தோழியொருவ‌ரை முதியோர் இல்ல‌மொன்றில் ச‌ந்திக்கும்போதே இந்த‌க் க‌ட‌ந்த‌கால‌ நினைவுக‌ள் கிள‌ற‌ப்ப‌டுகின்ற‌ன‌. லிலியின் தோழி, பெலிசி கைதுசெய்ய‌ப்ப‌ட்டு காணாம‌ற்போன‌த‌ன் பிற‌கு, எவ்வாறு லிலியின் வாழ்வு க‌ழிந்த‌தென‌ வினாவுகிறார். பெலிசி கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌த‌ன் பிற‌கு தான் எந்த‌ப் புதிய‌ உற‌வுக்குள்ளும் போக‌வில்லை என்கின்ற‌ லிலி, பெலிசியோடு இருந்த‌ கால‌ங்க‌ளே உண்மையான‌ காத‌லோடு இருந்த‌ கால‌ங்க‌ளென‌க் கூறி ந‌ன‌விடை தோய்வ‌தோடு ப‌ட‌ம் முடிவ‌டைகிற‌து.


ப்ப‌ட‌ம் போரின் ப‌த‌ற்ற‌ங்க‌ளை ம‌ட்டுமில்லாது போர்க்கால‌ அழிவுக‌ளையும் காட்சிப்ப‌டுத்துகின்ற‌து. ஒரு கால‌த்தில் தேசிய‌த்தின் பேரால் வெறியூட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், அழிவுக‌ள் த‌ம் வீட்டு வாச‌ல்க‌ளில் வ‌ந்துகொண்டிருப்ப‌தைத் துய‌ர‌த்துட‌ன் பார்த்த‌ப‌டி இருப்ப‌து ம‌ன‌தில் தைக்கும்ப‌டியாக‌ காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒருகாட்சியில் குழ‌ந்தைக‌ளை மிருக‌க்காட்சிச்சாலைக்குக் கூட்டிச் செல்ல‌ப்ப‌டும்போது அங்கே மிருக‌க்காட்சிசாலையென்றிருப்ப‌து குண்டுத்தாக்குத‌லில் சிதில‌மாகிப்போன‌ ஒரு க‌ட்ட‌ட்ட‌த்தொகுதி ம‌ட்டுமே. குண்டுக‌ள் தொட‌ர்ச்சியாக‌ வீழ்ந்துகொண்டிருக்க‌, ம‌னித‌ர்க‌ள் உட‌ல‌ங்க‌ளைச் ச‌ர்வ‌சாத‌ர‌ண‌மாக‌ -வேற்றுக்கிர‌க‌வாசிக‌ள் மாதிரி- தாண்டிய‌ப‌டி ந‌ட‌மாடிக்கொண்டிருக்கின்றார்க‌ள். ஆனால் இவ்வாறாக‌ தோல்வியின் விளிம்பில் நாஸிக‌ள் நின்ற‌போதும் த‌ம‌து அதிகார‌த்தைக் கைவிடாது யூத‌ர்க‌ளை அர‌ச‌ இய‌ந்திர‌ம் வேட்டையாடிய‌படியே இருக்கின்ற‌து என்ப‌தும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று எல்லாமே கைந‌ழுவிப்போய்விட்டாலும் ஹிட‌ல‌ரின் தேசிய‌த்தின் மீது க‌டைசிவ‌ரை ந‌ம்பிக்கையிழ‌க்காது போர்முனைக்குப் போய் இற‌க்கின்ற‌ லிலியின் க‌ண‌வ‌னைப் போன்ற‌வ‌ர்க‌ளும் இருக்க‌த்தான் செய்கின்றார்க‌ள்.




த‌ம‌க்கான‌ ம‌கிழ்ச்சியை ம‌ட்டுமில்லாது த‌ம‌க்கான‌ பாலிய‌ல் விடுத‌லையைத் தேடுகின்ற‌வ‌ர்க‌ளாய் லிலியும் பெலிசியும் இருக்கின்றார்க‌ள். த‌ன‌து ம‌ர‌ண‌ம் வாச‌ல‌டியில் ஒரு நிழ‌லைப்போல‌ ம‌றைந்திருக்கிற‌து என்ப‌தைத் தெளிவாக‌ உண‌ர்கின்ற‌ பெலிசி அந்த‌ நாளைய‌ ம‌கிழ்வையோ அல்ல‌து த‌ன‌து காத‌லையோ கைவிட‌த்த‌யாரில்லாத‌வ‌ராக‌வே இருக்கின்றார். வாழ்வு என்ப‌து என்ன‌ என்கின்ற‌ கேள்வி தோழிக‌ளிடையே வ‌ரும்போது 'நான் இந்த‌ப்பொழுதைக் கொண்டாடிக்கொண்டிருப்ப‌வ‌ள் நாளையைப் ப‌ற்றி ஒருபோதும் க‌வ‌லைப்ப‌ட்ட‌தில்லை'யென‌ பெலிசி த‌ன்னைப் பிர‌க‌ட‌ன‌ம் செய்துகொள்ள‌வும் செய்கின்றார். இர‌ண்டாம் உல‌க‌யுத்த‌த்தின்போது ஜேர்ம‌னியில் கூட‌ த‌லைம‌றைவாக‌ மிக‌ப்பெரும் எண்ணிக்கையான‌ ஓரின‌ப்பால் பெண்க‌ள் இருந்த‌தை இப்ப‌ட‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்ற‌து. ஹிட்ல‌ரின் நாஸிப்ப‌டைக‌ள் யூத‌ர்க‌ளை ம‌ட்டுமின்றி ஹிப்பிக‌ள், ஓரின‌ப்பாலார் போன்ற‌ ப‌ல்வேறு விளிம்புநிலை ம‌னித‌ர்களை 'ப‌ரிசுத்த‌ இன‌ப்பெருமை'யில் க‌ண‌க்கில்லாது கொன்றொழித்த‌தை நாம் நினைவில் கொள்ள‌வும் வேண்டும். அதிகார‌ம் ம‌றுத்த‌ வாழ்க்கை முறைக்கு எதிராக‌ த‌ங்க‌ள் வாழ்வு முறையையே ஒரு போராட்டமாக‌ ஆக்கிக்கொண்ட‌ லிலியைப் போன்ற‌ எத்த‌னையோ பேர்க‌ள் கால‌ங்கால‌மாக‌ இருந்துகொண்டேதான் இருக்கின்றார்க‌ள்.


த‌மிழ் சூழ‌ல் சார்ந்து ஓரின‌ப்பால் குறித்து மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளே நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஓரின‌ப்பால் குறித்து த‌மிழில் ப‌ட‌ங்க‌ள் ஏதாவ‌து வ‌ந்திருக்கின்றதா என‌ப் பார்க்கும்போது, சும‌தி ரூப‌ன் திரைக்க‌தை எழுதி, ரூப‌ன் இய‌க்கிய‌
You 2 என்ற‌ (30-45 நிமிட‌ங்க‌ள்) ஓட‌க்கூடிய‌ ஒரு குறும்ப‌ட‌மே வ‌ந்திருக்கின்ற‌தென‌த் தோன்றுகின்ற‌து. அந்த‌ப் ப‌ட‌த்தில் ந‌டிப்ப‌த‌ற்கும் ந‌டிகைக‌ள் தேட‌ தான் மிக‌வும் கடின‌ப்ப‌ட்ட‌தாய் சும‌தி எங்கோ ஓரிட‌த்தில் கூறிய‌தும் நினைவினிலுண்டு. ந‌டிகைக‌ள் இல்லாது போன‌போது திரைக்க‌தை எழுதிய‌ சும‌தியே அதிலொரு பாத்திர‌ம் ஏற்க‌வேண்டியும் இருந்திருக்கின்ற‌து. You 2 என்கின்ற‌ இக்குறும்ப‌ட‌த்தின் க‌தை, குழ‌ந்தைக‌ளுள்ள‌ ஒரு பெண் த‌ன‌து க‌ண‌வ‌னின் வ‌ன்முறையால் பாதிக்க‌ப்ப‌ட்டு இன்னொரு தோழியின் வீட்டில் வீட்டில் சென்று வாழ‌த்தொட‌ங்குகின்றார். க‌ண‌வ‌னை க‌ண்க‌ண்ட‌ தெய‌வ‌ம் என‌ ந‌ம்புகின்ற‌ -குடும்ப‌ வ‌ன்முறையால் மிக‌ மோச‌மாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட்ட‌- பெண் க‌ண‌வ‌னிட‌ம் மீண்டும் போக‌ விரும்புகின்ற‌வ‌ராய் தொட‌க்க‌த்தில் இருக்கின்றார்.

இவ்வாறான‌ நீட்சியில் இரு தோழிக‌ளுக்குமிடையில் ஒரின‌ப்பால் உற‌வு முகிழ்கின்ற‌து. ஆனால் அந்த‌ ஓரின‌ப்பால் உற‌வில் கூட‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் இணைக‌ளுக்குக்கிடையில் வ‌ருவ‌தையே 'நீயும் கூட‌வா' என்று அந்த‌ வ‌ன்முறையால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் நினைப்ப‌தாய் ப‌ட‌ம் முடிக்க‌ப்ப‌ட்டிருக்கும். அற்புத‌மான‌ ஒளிப்ப‌திவாலும், ஆக‌ அல‌ட்ட‌லில்லாது சூட்சும‌மாய் தோழிக‌ளிடையே வ‌ரும் உற‌வைக் காட்டிய‌ இந்த‌ப்ப‌ட‌ம் குறித்து இதுவ‌ரை ஆக்க‌ப்பூர்வ‌மான‌ உரையாட‌ல்க‌ள‌ நிக‌ழ‌வேயில்லையென்ப‌து ந‌ம் கால‌த்தைய‌ சோக‌ம். ஓரின‌ப்பால் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ புரிந்துண‌ர்வுக‌க‌ளோ இல்லா ந‌ம் ச‌மூக‌த்தில், லெஸ்பிய‌ன் உற‌வுக‌ளிலும் அதிகார‌ம் நுண்ணிய‌த‌ள‌த்தில் செய‌ற்ப‌டுகின்ற‌து என்ப‌தை இப்போது காட்சிப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மா என்று இப்ப‌ட‌த்தை முன்வைத்து சில‌ கேள்விக‌ள் இருப்பினும், எதையும் எந்த‌க் கால‌த்திலும் எடுக்கும் சுத‌ந்திர‌ம் ஒரு ப‌டைப்பாளிக்கு இருக்கிற‌தென்ப‌தையும் ம‌றுக்க‌முடியாது.

4.
Amiee & Jaguar ப‌ட‌ம் நுட்ப‌மான‌ ப‌ல‌ கேள்விக‌ளைப் பார்வையாள‌ரிடையே முன்வைக்கின்ற‌து. குடும்ப‌ம் என்ற‌ அமைப்பைத் தீவிர‌மாக‌ ந‌ம்பும் ஒருவ‌ருக்கு நான்கு பிள்ளைக‌ளுட‌ன் உள்ள‌ லிலியின் பாத்திர‌ம் உவ‌ப்பாக‌ இருக்க‌ப்போவ‌தில்லை. லிலியிடம் ஒருச‌ம‌ய‌த்தில் இர‌ண்டு தெரிவுக‌ள் இருந்திருக்கின்ற‌ன‌.ச‌மூக‌த்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு த‌ன‌க்கு உவ‌ப்பில்லாத‌ வாழ்வை வாழ்வ‌து ஒன்று. த‌ன‌க்குப் பிடித்த‌தொரு வாழ்வை ச‌மூக‌ம் வ‌ரைய‌றுத்த‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளை உடைத்து வாழ்வ‌து என்ப‌து ம‌ற்றொன்று. இங்கே லிலி த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ ஒரு தெரிவை எடுக்கின்றார். ஆனால் அவ்வாறு தீர்க்க‌மான‌ முடிவுக‌ள் எடுக்க‌முடியாது ஆயிர‌ங்கால‌ ப‌ண்பாட்டுச் சுமை சும‌க்க‌வேண்டிய‌ அவ‌ல‌ம் ப‌ல‌ பெண்க‌ளுக்கு இருக்கிற‌து. த‌ன‌க்கு நெருக்க‌மாக‌வும், த‌ன‌து உட‌ல் சார்ந்த‌ ம‌ர்ம‌ங்க‌ளின் முடிச்சுக்க‌ளை அவிழ்க்க‌ கூடிய‌வ‌ராக‌வும் இன்னொரு பெண்ணே இருக்க‌முடியுமென‌க் க‌ண்டுபிடிக்கின்றார். தான் ந‌ம்பிய‌ காத‌லுக்காய் லிலி க‌டைசிவ‌ரை உண்மையாக‌வே இருக்கின்றார். த‌ன‌து துணை, த‌ங்க‌ளுக்கு எதிரிக‌ளாக‌ க‌ட்டிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ளாயிருந்தாலும், அந்த‌த் த‌டைக‌ளை மீறி பெலிசியை ஒரு யூத‌ரென‌ பின்னாட்க‌ளில் தெரிந்தாலும் முழும‌ன‌துட‌ன் ஒரு துணையாக‌ ஏற்றுக்கொள்ள‌த் த‌ய‌ங்க‌வும் இல்லை.

இந்த‌க் க‌தை, ஹிட்ல‌ரின் கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ ஒரு உண்மைக்க‌தையாகும். கிட்ட‌த்த‌ட்ட‌ 50 ஆண்டுக‌ளின்பின் இந்த‌க்க‌தையை எரிக்கா பிஷ‌ர் என்ப‌வ‌ர் நூலாக‌ எழுத‌, பின்ன‌ர் இப்ப‌ட‌மாக‌ எடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. உண்மைக‌ள் எப்போதும் அடியாழ‌ங்க‌ளில் உற‌ங்கிக்கொண்டிருக்காது. ஒருநாள் உண்மைக‌ள் வெளியே வ‌ரும்போது அதிகார‌த்திலிருந்து த‌ம‌க்கான‌ வ‌ர‌லாற்றை எழுதிய‌வ‌ர்க‌ளை மீண்டும் புதைகுழிக‌ளிலிருந்து தோண்டியெடுத்து, கேள்விக‌ளின் க‌ணைக‌ளால் நிர்வாண‌மாக்க‌ப்படுவ‌தும் நிக‌ழ்ந்து கொண்டுதானிருக்கிற‌து.

க‌றுப்பு ‍வெள்ளைப் ப‌ட‌ங்க‌ள்: அச‌ல் லிலி ம‌ற்றும் பெலிசி
(நன்றி: கால‌ம்' , இதழ்-33 )

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

Tuesday, October 06, 2009

1.
நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்
ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்
ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்...
க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து
கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது
எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌

'எல்லாமும்' இருக்கின்ற‌
யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்
சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்...
த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்
புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்
கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.

2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைக‌ளில்
பொழியும் மழை
மீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌து
க‌ன‌வுக‌ளை.

'ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை'
நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌
விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்
ஏணியில் ஏற்றிவிட‌ 'தொலைவிலொரு குர‌ல்' காத்திருந்த‌து

ப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌
ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போது
அத‌ன் க‌டைசிப்பொழுது க‌த்தரிப்பூ நிற‌த்திலிருந்த‌து
பிடித்த‌மான‌ க‌ள்ளிச்செடிக‌ளை வ‌ளர்க்க‌க்கூட‌
மூர்க்க‌மாய் ம‌றுத்துத் த‌ரிசான‌து நில‌ம் (அல்ல‌து காடு).

3.
பிற‌ருக்கான‌
ந‌ன்றிக‌ளையும் விருப்புக்க‌ளையும்
ம‌றுத‌லித்து பாவ‌ங்க‌ளின் குறுக்கும‌றுக்குமான‌
முடிவிலி வ‌லைக்குள் வீழ்ந்தா நானா?
ந‌ம‌க்கான‌ க‌ன‌வா?
காடெரிந்த‌ க‌த்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வ‌ருகையில்
காலையில் த‌ருமொரு முத்த‌மாய்
உன்துயில் க‌லைக்காது 'போய்விட‌' விரும்புகின்றேன்

'எரிப்ப‌தை விட‌ வ‌னாந்த‌ர‌த்தில் புதைப்ப‌தே விருப்ப‌மான‌து'
அன்பே, த‌ய‌வுசெய்து ம‌ற‌ந்துவிடாதே
க‌ன‌வு எண் 25ஐ.

காடு த‌ன்னை எரித்த‌துபோல‌வ‌ன்றி
அடையாளமின்றிப்போவ‌தை ம‌றுக்கின்றேன்
'இந்த‌க் க‌ன‌வுக‌ள் - ஈர‌லிப்பான‌வை நித்திய‌மான‌வை நிக‌ழ‌க்கூடிய‌வை'

ப‌ஞ்ச‌வ‌ர்ண‌க்கிளியின் வ‌ழிகாட்ட‌லோடு
க‌ன‌வுக‌ளை நிக‌ழ்த்திக்காட்ட‌
வ‌ருமொருவ‌ரின் கால‌டித்த‌ட‌ங்க‌ளுக்காய்
மித‌ந்த‌ப‌டியிருக்க‌ட்டும்
என்னுட‌ல‌ப் ப‌ச்சைய‌ங்க‌ள்.

(2009)

சே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்

Wednesday, September 02, 2009

உல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒரு க‌வித்துவ‌மான‌ ஆறுத‌லை ம‌ட்டுமே த‌ர‌க்கூடிய‌தாக‌ உள்ள‌து.
(பிரேம் -ர‌மேஷ்: க‌ட்டுரையும் க‌ட்டுக்க‌தையும்)

1.
சில‌ புத்த‌க‌ங்க‌ளை அதிக‌ ஆர்வ‌த்தோடு வாசிக்க‌த் தொட‌ங்கும்போது அவ‌ற்றிலிருந்து எடுத்துக்கொள்ள‌ எதுவுமில்லையென்ற‌ வெறுமை வ‌ந்துவிடும். எதிர்பார்ப்பில்லாது வாசிக்கும் சில‌ புத்த‌க‌ங்க‌ளோ சில‌வேளைக‌ளில் சுவார‌சிய‌மான‌ வாசிப்ப‌னுவ‌த்தை எதிர்பாராது த‌ந்துவிடுகின்ற‌ன‌. ஏற்க‌ன‌வே அங்குமிங்குமாய் உயிர்மையில் வ‌ந்திருந்த‌ க‌ட்டுரைக‌ளை வாசித்த‌ கார‌ண‌த்தால் -ஒர‌ள‌வு அசுவார‌சிய‌மான‌ நிலையிலே- தனிமையின் வ‌ழி என்னும் சுகுமார‌னின் ப‌த்தித் தொகுப்பை வாசிக்க‌த் தொட‌ங்கியிருந்தேன். ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்ட‌ புர‌ட்ட‌ புற‌க்கார‌ண‌ங்க‌ளால் சோர்ந்துபோயிருந்த‌ ம‌ன‌து நெருக்க‌மான‌ க‌ர‌ங்க‌ளினால் இத‌மூட்ட‌ப்ப‌ட்ட‌து போன்ற‌ உண‌ர்வுநிலைக்கு வ‌ந்திருந்த‌து. எத்த‌னைவித‌மான‌ ம‌னித‌ர்க‌ளை.., எத்த‌னை வித‌மான‌ உண‌ர்ச்சிநிலைக‌ளை சுகுமார‌ன் எதிர்கொண்டாரோ அவற்றையெல்லாம் வாசிக்கும் ந‌ம்மிலும் ப‌டிவ‌துமாதிரியான‌ அனுப‌வ‌த்தை இத்தொகுப்பு தோற்றுவித்திருந்த‌து. த‌ன்னை நோக‌டித்திருந்தாலும், எந்த‌ ம‌னித‌ரையும் அவ‌மான‌ப்ப‌டுத்த‌ விரும்பாத‌, அவர்க‌ளின் ப‌ல‌வீன‌ங்க‌ளை ஏற்றுக்கொள்கின்ற‌ ஒரு ப‌த்தியெழுத்தாள‌ராக‌ சுகுமார‌ன் மாறுகின்ற‌போது இன்னும் நெருக்க‌முடைய‌வ‌ராக‌ மாறிவிடுகின்றார்.


க‌விஞ‌ர்க‌ளாலும் ந‌ல்ல‌ ப‌த்தியெழுத்தாள‌ராக‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையை பிர‌மிளுக்குப் பிற‌கு துல்லியமாகக் க‌ண்ட‌றிந்த‌து கொண்டது சுகுமார‌னிட‌ம் என‌ச் சொல்ல‌லாம். இத்தொகுப்பில் கூற‌ப்ப‌டும் சில‌ (அவ‌மான‌) அனுப‌வ‌ங்க‌ள் சில‌ பொழுதுகளில் க‌ள்ளிக்காடு பால‌ச்ச‌ந்திர‌னின் சித‌ம்ப‌ர‌ நினைவுக‌ளை நினைவுப‌டுத்தியிருந்த‌து. இருவரினதும் அனுப‌வ‌ங்க‌ள் வெவ்வேறான‌வை என்றாலும், நிக‌ழும் நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ள் ஒன்றென்ப‌தால் அவ்வாறான‌ இணைப்பை என‌து ம‌ன‌து பொருத்திப் பார்த்த‌தோ என்ற‌ ச‌ந்தேக‌மும் உண்டுதான்.

வீட்டை விட்டு (இர‌ண்டு முறை) ஓடிபோத‌ல், அப்பாவைப் பிரிந்து அம்மாவோடும் ச‌கோத‌ரிக‌ளோடும் வாழ்வ‌து என்று ப‌ல‌வேறு துய‌ர‌ நினைவுக‌ளைச் சும‌ந்திருந்தாலும், அவ‌ற்றைக் கூட‌ வாழ்வில் இய‌ல்புக‌ளில் சில‌வாய் இருக்க‌க்கூடும் என்று சுகுமார‌ன் எழுதிப்போவ‌து பிடித்த‌மான‌து. ஆர்.ஷ‌ண்முக‌சுந்தர‌த்தை ச‌ந்திக்கும்போது அவ‌ர் ப‌டைப்புச் சார்ந்து க‌தைக்காது பிற‌ விட‌ய‌ங்க‌ளைக் க‌தைத்து, இல‌க்கிய‌ம் சோறு போடாது என‌ எச்ச‌ரிப்ப‌தும், காஃப்காவினால் ப‌ரிட்ச‌ய‌மாகும் சிற்றித‌ழ் வெளியிடும் ந‌ண்ப‌ரொருவ‌ர் க‌டும்போதையால் இள‌வ‌ய‌தில் இற‌ந்துபோவ‌தையும் வாசிக்கும்போது இல‌க்கிய‌ம் சார்ந்த‌ க‌ச‌ப்பே க‌விய‌த்தொட‌ங்குகின்ற‌து. ஆனாலும் இவ்வாறான‌ க‌ட‌ந்த‌கால‌ க‌ச‌ப்பான‌ நிக‌ழ்வுக‌ளையும் தாண்டி ஏதோ ஒரு ம‌ர்மமான‌ சுழ‌ல்தான் ப‌ல‌ரை இன்னுமின்னும் ப‌டைப்பில‌க்கிய‌ம் சார்ந்து தீவிரமாய் இய‌ங்க‌வைத்துக்கொண்டிருக்கின்ற‌து போலும்.
ஒரு ப‌த்திரிகையாள‌ராக‌ சில்க் சுமிதாவைச் ச‌ந்திப்ப‌தும், சுமிதா க‌விஞ‌ராக‌ இருக்கும் தனது சுய‌ம‌ரியாதையைக் கேலிப‌ண்ணிவிட்ட‌தாக‌ ப‌த்தியெழுத்தாள‌ர் ம‌ன‌ங்கோணுவ‌தும், பிற‌கு சில்க் சுமிதாவின் த‌ற்கொலை செய்த உட‌லைப் பார்க்கும்போது, எத்த‌னையோ ஆயிர‌மாயிர‌ம்பேர்க‌ளின் க‌ன‌வுக‌ளில் வ‌ந்த‌ ஒரு உட‌ல், யாருமே க‌வ‌னிக்காத‌ உட‌லமாகிப்போன‌ அப‌த்த‌த்தையெல்லாம் ம‌ன‌தில் ஊடுருவிச்செல்லும்ப‌டியாக‌ சுகுமார‌ன் எழுதியிருக்கின்றார். சுகுமார‌ன் த‌ன்ன‌ள‌வில் க‌விஞ‌ராக‌ இருப்பதோடு வெகுச‌ன‌ ஊட‌க‌ங்க‌ங்க‌ளிலும் ப‌ணிபுரிந்த‌தால் விசால‌மான‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளில் நிக‌ழ்ந்த‌ ப‌ல‌வேறு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌.

2.
த‌னிமையின் வ‌ழி தொகுப்பைவிட‌ அண்மையில் அதிக‌ம் பாதித்த‌/விய‌ந்த‌ ஒரு நிக‌ழ்வென்றால் லிவிங் ஸ்மைல் வித்யாவின‌து நான் வித்யா என்ற‌ சுய‌ச‌ரிதை நூலை முன்வைத்து ஆஹா எப்ஃ எம்மில் நிக‌ழ்ந்த‌ நேர்காண‌ல். எத்த‌னையோவித‌மான‌ அவ‌மான‌ங்க‌ளையும், துய‌ர‌ங்க‌ளையும் வித்யா பெற்றிருப்பார். ந‌ம‌து ச‌மூக‌ம் கொடுத்த‌/கொடுத்துக்கொண்டிருக்கும் வ‌லிக‌ளையும் த‌ழும்புக‌ளையும் ம‌ன‌தில் இருத்திக் காழ்ப்புக்கொள்ளாது (அவ்வாறிருப்ப‌த‌ற்கான‌ அனைத்து உரிமையும் வித்யாவிற்கும் இருந்தும்) மிக‌ நிதான‌மாய் த‌ன‌து வ‌லிக‌ளை -மெல்லிய‌ சிரிப்பால் க‌ட‌ந்து- இன்னும் திருந‌ங்கைக‌ளுக்காய் இச்ச‌மூக‌ம் மாற‌வேண்டிய‌ முக்கிய‌ புள்ளிக‌ளை அந்நேர்காணலில் தொகுத்து அளித்திருந்தார். நாம் எல்லோருமே கொஞ்ச‌ நேர‌ம் ஒதுக்கியேனும் இந்நேர்காண‌லைக் கேட்ப‌தென்ப‌து நாமின்னும் திருந‌ங்கைக‌ளை அணுக்கமாக‌ அணுக‌ உத‌வ‌க்கூடும். லிவிங் ஸ்மைல் வித்யா வெளிப்ப‌டையாக‌ த‌ன‌து சுய‌ச‌ரிதையாக‌ எழுத‌ வ‌ந்த‌து... திருந‌ங்கையாக இல்லாத‌வ‌ர்க‌ளை ம‌ட்டுமில்லை, திருந‌ங்கைக‌ள் என்று அறிந்தும் ச‌மூக‌த்தின் முன் வெளிப்ப‌டையாக‌ அறிவிக்க‌த் த‌ய‌ங்குகின்ற‌வ‌ர்க‌ளையும் பாதித்திருக்கிற‌து என்றே ந‌ம்புகின்றேன். திருந‌ங்கைக‌ளாக‌ த‌ங்க‌ளுக்கான‌ உரிமைக‌ளைக் கேட்கும்போதுகூட‌ கால‌ங்கால‌மாய் நாங்க‌ள் வைத்திருக்கும் வெளியில் த‌ங்க‌ளுக்கான இட‌த்தைக் கூடக் கோரவில்லை; த‌ம‌க்கான‌ த‌னித்துவமாயிருக்கும் ஒரு வெளியை அங்கீக‌ரிக‌க‌ ம‌ட்டுமே வித்யா போன்றோர் வேண்டுகின்றார்க‌ள்; திருந‌ங்கைக‌ள் போன்ற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ள் ம‌ட்டுமில்லை ஏனைய‌ மாற்றுப் பாலின‌த்த‌வ‌ர்க‌ளும் இதையேதான் கேட்க‌ விழைகின்றார்க‌ள்.
இன்று கூட‌ எழுத்துச்சூழ‌லில் (வ‌லைப்ப‌திவுக‌ளிலும்) திருந‌ங்கைக‌ள் பிச்சையெடுக்கின்றார்க‌ள், பொதுவெளியில் த‌ங்க‌ளைச் சுற்றிக் கூடி 'ஏடாகூட‌மாய்' கேலிசெய்கின்றார்க‌ள்' என்று இன்னும் அரிவ‌ரியில் இருப்ப‌துபோல‌ ப‌ல‌ர் எழுதும்போது/பேசும்போது அலுப்பே மிஞ்சுகின்ற‌து. அவ்வாறான‌வ‌ர்க‌ள் திருந‌ங்கைக‌ள் உட்ப‌ட்ட‌ மாற்றுப்பாலின‌த்த‌வ‌ர்க‌ள் அப்ப‌டியிருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை வித்யா மிக‌ எளிதாக‌ எல்லோருக்கும் விள‌ங்கும்ப‌டியாக‌ கூறும் இந்நேர்காண‌லை நிச்ச‌ய‌ம் கேட்டாக‌ வேண்டும்.

தானொரு திருந‌ங்கையாக‌ மாறிக்கொண்டிருப்ப‌தை அறிந்து, ஆனால் இன்ன‌மும் பொதுவெளியில் அவ்வாறாக‌ அறிவித்துக்கொள்ளாத‌ அனிதா என்றொரு திருந‌ங்கை, நான் வித்யா நூலை வாசித்தபோது த‌ன்னாலும் இச்ச‌மூக‌த்தில் த‌னித்து நிற்க‌முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையை வித்யா த‌ந்திருந்தார் என்று இந்நிக‌ழ்வில் கூறிய‌தைக் கேட்ட‌போது மிகுந்த‌ நெகிழ்வாயிருந்த‌து. இவ்வாறு வித்யாவின் இந்த‌ நூல் இன்னும் ப‌ல‌ருக்கு உத்வேக‌த்தையும்.., திருந‌ங்கைக‌ள் ப‌ற்றி அறிந்துகொண்டு நெருக்க‌ம் கொள்ள‌வும்... உத‌வியிருக்குமென‌ நினைக்கின்றேன்.

ஆணிலிருந்து பெண்ணாக‌ (M 2 F) மாறுவ‌துபோல‌, ஒரு பெண்ணாயிருந்து ஆணாய் (F 2 M) மாறுவ‌து அவ்வ‌ள‌வு சுல‌ப‌மில்லையென‌வும், மிகுந்த‌ ம‌ன‌த்திட‌ம் வேண்டியிருக்கிற‌தென‌ வித்யா குறிப்பிடுவ‌து க‌வ‌னிக்க‌வேண்டிய‌ ஒன்று. அத்தோடு இவ்வாறு பால் க‌ல‌ப்புட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ள் உரிய‌ அறுவைச்சிகிச்சை செய்யாதிருக்கும்வ‌ரை ப‌ல்வேறு ச‌ங்க‌ட‌ங்க‌ளை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிற‌து. அண்மையில் இங்கு இதுதொட‌ர்பாய் ந‌ட‌ந்த‌ தொலைக்காட்சி நேர்காண‌லில் க‌ல‌ந்துகொண்ட‌ ஒருவ‌ர் த‌ங்க‌ளுக்கு எந்த‌க் க‌ழிவ‌றைக்குச் செல்வ‌து என்ப‌தே மிக‌ப்பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌தென‌வும், ஒருமுறை த‌ன்னை காவ‌ற்துறை ப‌ல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேற்றிய‌தாக‌வும் கூறிய‌தாய் நிக‌ழ்ச்சியைப் பார்த்த‌ தோழியொருவ‌ர் கூறியிருந்தார். ஆக‌, மேற்குல‌க் நாடுக‌ளில் கூட‌ இன்ன‌மும் மாற்றுப் பாலின‌த்த‌வர்க‌ளுக்கான‌ இடைஞ்ச‌ல்க‌ள‌ க‌ளைய‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை நாம் நினைவில் கொள்ள‌வேண்டியிருக்கிறது. அண்மையில்தான் ஜ‌பிஎம்(IBM) போன்ற‌ சில‌ த‌னியார் நிறுவன‌ங்க‌ள் இவ்வாறான‌ நிலையிலிருப்ப‌வ‌ர்க‌ள் அறுவைச்சிகிச்சை செய்வ‌த‌ற்கான‌ காப்புறுதிப் பொதிக‌ளை (Insurance Packages) த‌ம‌து தொழிலாள‌ர் ந‌ல‌ங்க‌ளில் சேர்ந்திருந்திருக்கின்ற‌ன‌.

லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற‌வ‌ர்க‌ள் விரிவாக‌வும் ஆழ‌மாகவும் பேசுவ‌த‌ற்கான‌ வெளிக‌ள் எல்லா ஊட‌க‌ங்க‌ளிலும் திற‌க்க‌ப்ப‌ட‌வேண்டும். இதுவ‌ரை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்காய்ப் பேசிய‌து போல‌வ‌ன்றி, அவ‌ர்க‌ளே அவ‌ர்க‌ளின் குர‌ல்க‌ளில் (த‌லித்துக்க‌ள் போல‌) பேசுவ‌த‌ற்கான‌ சூழ‌ல் க‌னிய‌வேண்டும். இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளே சீழ்பிடித்து வீங்கிப்போயிருக்கும் ச‌முதாய‌த்தின் காய‌ங்க‌ளை ஆற்ற‌க்கூடிய‌ வ‌லிமையுடைய‌தாக‌ இருக்குமென‌ நம்புகின்றேன். மில்க்(Milk) ப‌ட‌த்தில் ஹார்வி தேர்த‌லில் நிற்கும்போது ஓரின‌ப்பாலினருக்கு ம‌ட்டுமில்லாது வ‌றுமைக்கோட்டிற்குள் வாழ்ப‌வ‌ர்க‌ள், வ‌ய‌தான‌வ‌ர்க‌ள், ஹிப்பிக‌ள் போன்ற‌வ‌ர்க‌ளின் ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளையும் முன்வைத்தே போட்டியிருக்கின்றார். வ‌லிக‌ளைப் புரிந்த‌வ‌ர்களாலே பிற‌ர‌து வ‌லிக‌ளையும் அதிக‌ம் விள‌ங்கிக்கொள்ள‌ முடியும் என்ற‌வ‌கையில் இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ள் அதிகார‌த்திற்கு வ‌ருவ‌தையும், அதிகார‌ங்க‌ளைக் கைப்ப‌ற்றுவ‌தையும் நாம் ஊக்குவிக்க‌வேண்டும்.

3.
சேகுவேராவின‌து வாழ்வின் எந்த‌ப் ப‌குதியை எடுத்தாலும் அது சுவார‌சியமாக‌ ஆழ‌மும் விரிவாக‌ நீள‌க்கூடிய‌துதான். மோட்டார் சைக்கிள் ட‌ய‌ரியாய் இருந்தாலென‌ன, கொங்கோ ட‌ய‌ரியாயிருந்தாலென்ன, க‌டைசிக்கால‌ பொலிவியா ட‌ய‌ரியாயிருந்தாலென்ன‌ எல்லாமே விய‌ப்பும் திகைப்பும் உடைய‌வை. சில‌வேளை இப்ப‌டியொரு ம‌னித‌ன் எம‌க்கு அண்மைக்கால‌த்தில் வாழ்ந்தானா என்ற‌ பிர‌மிப்பும் கூடவே வ‌ந்துவிட‌த்தான் செய்கின்ற‌து. த‌ன‌து பிர‌ச்சார‌த்திற்கென‌த்தான் Jorge G. Castañeda சேகுவாரா பற்றி எழுதினார் என்ற‌ குற்ற‌ச்சாட்டு இருந்தாலும் அதையும் மீறி அந்நூலில் கூட‌ சே த‌னித்துவ‌மாக‌ ஒளிர‌த்தான் செய்கின்றான். சூரிய‌னைக் க‌ண்டு நாய் குரைக்கின்ற‌மாதிரி த‌மிழ்ச்சூழ‌லில் சில‌ குர‌ல்க‌ள் சேயை அசிங்க‌ப‌டுத்த‌ முய‌ன்றாலும் சேயை உண்மையான‌ விருப்புட‌ன் வ‌ந்த‌டைகின்ற‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இளைஞ‌ர் இளைஞிக‌ள் இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌ர்.
சேயின‌து ம‌றைவின்போது, ஃபிட‌ல், எங்க‌ள‌ கால‌த்திற்கு அல்ல‌, இனி வ‌ரும் எதிர்கால‌த்திற்கு எல்லாவித‌த்திலும் ஒரு முன்மாதிரியே சே என‌க்கூறுவ‌து பொருத்த‌மான‌ வார்த்தைக‌ள்தான். எது என்னைச் சேயோடு அதிக‌ம் நெருக்க‌முற‌ச் செய்கின்ற‌து என்று யோசித்தால் அவ‌ன் த‌ன‌து பெருங்க‌ன‌வுக‌ளின் ப‌ல‌வீன‌ங்க‌ளை அறிந்து வைத்திருந்தான் என்ப‌தே. ஆனால் வீழ்ச்சி அடைந்துவிடுவேனே என்ப‌த‌ற்கு அஞ்சி த‌ன‌து க‌ன‌வுக‌ளைக் கைவிட‌த்த‌யாராக‌வும் இருக்க‌வில்லை என்ப‌துதான் அதிக‌ம் வ‌சீக‌ரிக்கின்ற‌து. கியூபாப் புர‌ட்சியின்போது புர‌ட்சியை ஏற்றும‌தி செய்ய‌முடியாது என்கின்ற‌வ‌ன், கொங்கோவிற்கு கியூபாக் கெரில்லாப் புர‌ட்சியின் மாதிரிக‌ளை எடுத்துச் செல்கின்றான். கொங்கோவில் த‌ன‌து வீழ்ச்சியை (ஒருக‌ட்ட‌த்தில் சாகும்வ‌ரை அங்கு இருக்க‌லாமென‌வும் முடிவு எடுக்கிறான்) ச‌ந்தித்த‌பின்னும் த‌ன‌து புர‌ட்சிக்க‌ன‌வைக் கைவிடாத‌ப‌டியால்தான் பொலிவியாவிற்குள் நுழைகின்றான். சேயை புர‌ட்சியின் நாய‌க‌னாக‌ப் பார்ப்ப‌தைவிட‌, உய‌ர்ந்த‌ ந‌ம்பிக்கைக்காய் த‌ன்னையே இழந்த‌ வீழ்ச்சியின் நாய‌க‌னாய்ப் பார்ப்ப‌தே என‌க்குப் பிடித்திருக்கிற‌து. எனெனில் வெற்றி கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு மேலே செல்ல ஏதுமில்லை. தோற்றுக்கொண்ட‌வ‌ன் த‌ன‌க்கான‌ வெற்றியை அடையும்வ‌ரை முய‌ற்சித்துக்கொண்டேயிருப்பான‌ அல்ல‌வா. என‌வே சேயை வீழ்ச்சியின் நாய‌க‌னாக‌ நினைவுகொள்ளும்போது -அவ‌ன் ஒடுக்குமுறைக‌ள் உள்ள‌ எல்லா வெளிக‌ளிலும் வ‌ழிகாட்டியாக‌ வ்ந்துவிட‌ச் செய்கின்றான்.

சேயினைப் ப‌ற்றி இர‌ண்டு பாக‌ங்க‌ளாய் எடுக்க‌ப்ப‌ட்ட‌ Steven Soderbergன் இந்நீள‌த்திரைப்ப‌ட‌ம் ஐந்து ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு ஓட‌க்கூடிய‌து. முத‌லாவ‌து பாக‌ம் சே ஃபிட‌லைச் ச‌ந்திப்ப‌திலிருந்து தொட‌ங்கி, சேயின‌து பிர‌சித்துபெற்ற‌ சான்ரா கிளாரா இராணுவ‌ வெற்றியுட‌ன் ஹ‌வானாவை நோக்கி ந‌க‌ர்வ‌துட‌ன் முடிகின்ற‌து. இர‌ண்டாம் பாக‌ம் சே பொலிவியாவில் நுழைவ‌தில் தொட‌ங்கி சேயின‌து இற‌ப்பில் நிறைவுபெறுகின்ற‌து. ஏற்க‌ன‌வே கூறிய‌துபோல‌ இது சேயின‌து முழு ஆளுமையை காட்சிப்ப‌டுத்தும் ஒரு ப‌ட‌ம‌ல்ல‌. சேயின‌து வாழ்வும் ஒரு திரைப்ப‌ட‌த்தில் அட‌ங்க‌க்கூடிய‌தும‌ல்ல‌.

முத‌லாம் பாக‌ம் தொட‌ங்கும் காட்சி சுவார‌சிய‌மான‌து. சே அமெரிக்காவில் (ஐநா ச‌பையில்) அமெரிக்காவின் ஏகாதிப‌த்திய‌த்தின் முக‌த்திரையை கிழிப்ப‌துட‌ன் ஆர‌ம்பிக்கின்ற‌து. அமெரிக்காவில் கூட‌ சேயைக் கொல்வ‌த‌ற்கான‌ சில‌ முய‌ற்சிக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌. ச‌ந்திக்கும் சென‌ட்ட‌ர்க‌ளுட‌ன், அமெரிக்கா இன்னும் Bay of Pigsஐ ம‌ற‌ந்துவிடவில்லைத்தானே என‌ சீண்டிப்பார்க‌வும் செய்கின்றார். அங்கிருந்து தொட‌ங்கும் காட்சிக‌ள் பிற‌கு பின்னோக்கி கியூபாவின் புர‌ட்சியின் ஆர‌ம்ப‌க்க‌ட்ட‌ங்க‌ளுக்கு ந‌க‌ர‌த்தொட‌ங்குகின்ற‌து. ஒரு ம‌ருத்துவ‌ராக‌ இருக்கும் சே எப்ப‌டி போராளியாக‌ மாறுகின்றார் என்ப‌தையும், சேயின‌து அந்நிய‌த்த‌ன்மையைக் க‌ளைக்க‌ எப்ப‌டி ஃபிட‌லும் ராகுலும் முய‌ற்சிக்கின்ற‌ன்ர் என்ப‌தும் க‌வ‌ன‌த்திற்குரிய‌து (இந்த‌ அந்நிய‌த்த‌ன்மையே ஏற்றுக்கொள்ள‌ உள்ளூர் ம‌க்க‌ள்/போராளிக‌ள் விரும்பாத‌தாலேயே பொலிவியாவில் சேயின‌து வீழ்ச்சி மிக‌விரைவாக‌ நிக‌ழ்கிற‌து என்ப‌தையும் நாம் நினைவுப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும்). சான்ரா கிளாராவில் ஆயுத‌த்த‌ள‌பாட‌ங்க‌ள் ஏற்றிவ‌ரும் புகைவ‌ண்டியைத் த‌க‌ர்ப்ப‌த‌ன் மூல‌ம் சே ஒரு சிறந்த‌ கெரில்லாத‌ த‌ள்ப‌தியாக‌ மாறுகின்றார். அதேவேளை குடிம‌க்க‌ளை சித்திர‌வ‌தை செய்யும்.., பெண்க‌ளைப் பாலிய்ல் வ‌ன்புண‌ர்சியிற்கு உள்ளாக்கும்... போராளிக‌ளுக்கு க‌டுமையான‌ த‌ண்ட‌னைக‌ளையே -ம‌ர‌ண‌த‌ண்ட‌னை உட்ப‌ட- கொடுக்கின்றார்.

இர‌ண்டாம் பாக‌ம் தொட‌ங்கும்போது சேயின‌து பொருளாத‌ராச் சீர்திருத்த‌ங‌கள் தோற்ப‌து குறித்தோ, ஃபிட‌லுக்கும் சேயுக்குமிடையில் முகிழும் சோவிய‌த்து X சீன‌ க‌ம்யூனிச‌ விரிச‌ல் குறித்தோ எதுவுமில்லாது ப‌ட‌ம் உட‌னேயே பொலிவியாவுக்கு பாய்ந்துவிடுகின்ற‌து. முதலாம் பாக‌த்தில் ஒரு வெற்றிக‌ர‌மான‌ கெரில்லாத் த‌ளப‌தியாக‌ இருக்கும் சே, இர‌ண்டாம் பாக‌த்தில் வீழ்ச்சிக்குரிய‌ நாய‌கனாக‌ ஆகிக்கொண்டிருப்ப‌து காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து. சேயைக் காய‌ங்க‌ளுட‌ன் பொலிவியா-சிஜ‌ஏ கூட்டில் கைதுசெய்யும்போது, 'நான் சே என்னைக் கொல்வ‌தை விட‌க் கைது செய்வ‌து ப‌ல‌ம‌ட‌ங்கு பிர‌யோச‌ன‌மான‌து' என்று உறுதியுட‌ன் கூறுவ‌தெல்லாம் ப‌ட‌த்தில் இல்லை. கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கு முன்ன‌ர் அங்கிருக்கும் உள்ளூர் ஆசிரியையுட‌ன் சே உரையாடும்போது, இத்த‌கைய‌ ப‌டுமோச‌மான‌ வ‌குப்புக்க‌ளிலிருந்தா பிள்ளைக‌ள் க‌ல்விக‌ற்கின்ற்ன‌ர்.... இவ்வாறான‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளுக்காய்த்தானே நாம் போராட் விரும்பினோம் என்று கூறுவ‌து நெகிழ்ச்சித‌ர‌க்கூடிய‌து. சேயின் பிர‌சித்த‌ம் பெற்ற‌ இறுதிவாக்கிய‌மான‌ நீங்க‌ள் என்னைக் கொல்லலாம் ஆனால் புர‌ட்சி ப‌ற்றிய‌ என‌து ந‌ம்பிக்கையை என்றைக்கும் கொல்ல‌முடியாது என்ப‌தன் சாட்சியாகத்தான் சே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

ப‌ட‌மாக‌ப் பார்க்கும்போது ப‌ல‌ போதாமைக‌ளை இத்திரைப்ப‌ட‌ம் கொண்டிருக்கின்ற‌து. அதில் முக்கிய‌மான‌து மிக‌ ஆறுத‌லாக‌ ந‌க‌ரும் திரைக்க‌தை. புர‌ட்சியின் துளி ப‌ட்டிடாத‌ மோட்டார் சைக்கிள் ட‌ய‌ரி அழ‌காக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌த்தில் சேயின‌து புர‌ட்சி பற்றிய‌ இத்திரைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை என‌த்தான் கூறவேண்டியிருக்கிற‌து. ஆனால் சேயாக‌ ந‌டித்த‌ Benicio del Toro சேயை ந‌ன்றாக‌ப் பிர‌தியெடுத்து ந‌டித்திருக்கின்றார். முக்கிய‌மாய் ஆஸ்மாவால் க‌ஷ்ட‌ப‌ப‌டும் சேயின் காட்சிக‌ள் மிக‌த் த‌த்ரூப‌மாய் இருக்கின்ற‌ன‌. சேயைப் ப‌ற்றி எத்த‌னை கோண‌த்திலும் பட‌மாய்ப் பார்த்தாலும் ஒருபோதும் அலுக்க‌ப்போவ‌தில்லை. எனெனில் உண்மையான‌ போராளிக‌ளின் வாழ்க்கை ஒரு திரைப்ப‌ட‌த்திற்குள் என்றுமே அட‌ங்குவ‌தில்லை.


(அருண்மொழிவ‌ர்ம‌னுக்கு...)
ப‌ட‌ங்க‌ள் - உரிய‌த‌ள‌ங்க‌ளுக்கு ந‌ன்றி

த‌மிழ் முகாங்க‌ள் - NY Times, Editorial

Friday, July 17, 2009


த‌மிழ்ப்புலி கெரில்லாக்க‌ளை வெற்றி கொண்ட‌தாய் அறிவிக்க‌ப்ப‌ட்டு இர‌ண்டு மாத‌ங்க‌ளின் பின்னும், இல‌ங்கை அர‌சாங்க‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் ம‌க்க‌ளை இன்ன‌மும் 'ந‌ல‌ன்புரி கிராம‌ங்க‌ள்' என‌ப்ப‌டும், ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ இராணுவ‌ விசார‌ணை முகாங்க‌ளாய்த் தெரிகின்ற‌ இட‌ங்க‌ளில் த‌ங்க‌வைத்திருக்கின்ற‌து.

மிக‌வும் கோரமான‌ போரின் இறுதிக்க‌ட்ட‌த்தில் கெரில்லாக்க‌ளால் பய‌ண‌க்கைதிக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ இங்கிருக்கும் ம‌க்க‌ளில் அநேக‌ர், முகாங்க‌ளில் இருந்து வெளியே செல்ல‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வோ, ம‌னித‌ உரிமை நிறுவனங்க‌ளாலோ அல்ல‌து ப‌த்திரிகையாள‌ராலோ அணுக‌வோ முடியாது இருக்கிறார்க‌ள்.


அர‌சாங்க‌ம், இங்கிருக்கும் அக‌திக‌ளிலிருந்து த‌மிழ்ப் புலிக‌ளைத் தாங்க‌ள் பிரித்த‌றிந்துவிட்டும், த‌மிழ்க் கிராம‌ங்க‌ளிலுள்ள‌ மிதிவெடிக‌ளை அகற்றிய‌பின்னும் ம‌க்க‌ளை (அவ‌ர்க‌ளின் சொந்த‌ இட‌ங்க‌ளுக்கு) திரும்பிச் செல்ல‌ அனும‌திப்பார்களென‌க் கூறுகின்ற‌து. இங்கிருக்கும் ம‌க்க‌ளுக்குள் முன்னாள் கெரில்லாக்க‌ள் ப‌துங்கியிருக்க‌க் கூடும். த‌மிழ்ப் புலிக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளை எவ்விதப் பெறும‌தியும் இல்லாது பாவித்திருக்கின்றார்க‌ள் என்ப‌திலும், ஆண்க‌ளையும் குழ‌ந்தைக‌ளையும் ப‌ல‌வ‌ந்த‌மாய் த‌ங்க‌ள் இய‌க்க‌த்தில் சேர்ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌திலும் எத்த‌கைய‌ அற‌மும் இருக்க‌வில்லை. ஆனால் இங்கிருப்ப‌வ‌ர்க‌ளை விசார‌ணை செய்யும் முறை நீண்ட‌கால‌த்திற்கு இழுத்த‌டித்துக்கொண்டே செல்கின்ற‌து. அநேக‌ அக‌திக‌ள் இதை த‌மிழ்ச் சிறுபான்மையின‌ருக்கு எதிரான‌ இன்னொருவ‌கையான‌ துஷ்பிர‌யோக‌மாக‌வே பார்க்கின்ற‌ன‌ர். ஒரு மூத்த‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதி, நியூயோர்க் ரைம்ஸின் லிடியா போல்கிறினுக்கு கூறுகின்ற‌போது, "இது எதிர்கால‌த்தில் இன்னொருவ‌கையான‌ பிர‌ச்சினைக்கு எளிதாக‌ வ‌ழிவ‌குக்கும். ஜ‌னாதிப‌தி ம‌கிந்த‌ ராஜப‌க்ஷா, த‌மிழ‌ர்க‌ளின் மீள்சீர‌மைப்பை உண்மையில் விரும்புகின்றார் என்றால், அவ‌ர் இப்போதே இந்த‌ ம‌க்க‌ளை அவ‌ர்க‌ளின் சொந்த‌ இட‌ங்க‌ளுக்குத் திரும்பிச் செல்ல‌ அனும‌திக்க‌ வேண்டும்" என்கிறார்.

முகாங்க‌ளிலுள்ள‌வ‌ர்க‌ளை ச‌ந்திப்பதை அர‌சாங்க‌ம் க‌டுமையாயாய்க் க‌ட்டுப்ப‌டுத்துவ‌தைப் பார்க்கும்போது, இது போரின் க‌டைசிமாத‌ங்க‌ளில் அர‌சால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தாய் ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌ துஷ்பிர‌யோக‌ங்க‌ளுக்கான‌ விசார‌ணைக‌ளைத் த‌டுப்ப‌த‌ற்கான‌ முய‌ற்சிக‌ள் போன்ற‌ ச‌ந்தேக‌த்தையே எழுப்புகின்ற‌து. இராணுவ‌ம், புலிக‌ளை மிக‌ ஒடுங்கிய‌ க‌ட‌ற்க‌ரையோர‌மாக சுற்றிவ‌ளைத்த‌போது, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளும் அக‌ப்ப‌ட்டிருந்தார்க‌ள்; ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ங்க‌ளின் கூற்றுப்ப‌டி, தொட‌ர்ச்சியாக‌ இங்கே எறிக‌ணைக‌ள் வீச‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஜ‌.நா ச‌பை, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என்று கூறுகின்ற‌து, ஆனால் எப்ப‌டி, யாரால் என்கின்ற‌ கேள்விக‌ள், சுயாதீன‌ விசார‌ணைக‌ள் இல்லாத‌தால் இருண்மையாக‌வே இருக்கின்ற‌து.

உத‌வி வ‌ழ‌ங்கும் நாடுக‌ள் ‍-ஐக்கிய‌ அமெரிக்கா, ஐரோப்பிய‌ ச‌பை, ஜ‌ப்பான் - ‍ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ அமைப்புக்க‌ள் உண‌வு, உறைவிட‌ம் ம‌ற்றும் உடைக‌ளை முகாங்களிலுள்ள‌ ம‌க்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி உத‌வி செய்துகொண்டிருக்கின்ற‌ன‌. ஆனால் அநேக‌ர் த‌மிழ‌ர்க‌ளின் நிலை குறித்து இதுவ‌ரை ம‌வுன‌மே சாதிக்கின்ற‌ன‌ர், எனெனில் இவ‌ர்க‌ள் இங்குள்ள‌ (முகாங்க‌ளின்) நிலைமைக‌ளை விம‌ர்சித்தால் தாங்க‌ள் முகாங்க‌ளிலிருந்து வெளியேற்ற‌ப்ப‌டுவார்க‌ளென‌ அஞ்சுகின்றார்க‌ள். அமைதியாக‌ இருப்ப‌த‌ற்கான‌ கால‌ம் முடிகின்ற‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌வுவ‌த‌ற்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ வ‌ழி, அவ‌ர்க‌ளுக்கான‌ சுதந்திர‌த்தை வேண்டுவ‌தும், இந்த‌ ‍நீண்ட‌ விசார‌ணைக‌ளை‍ முடிவுக்குக் கொண்டுவ‌ருவ‌தும் தான்.



Thanks: NY Times (Jul 15, 2009)
த‌மிழாக்க‌ம்: டிசே

என‌க்குத் தெரிந்த‌ முருகைய‌ன்

Sunday, July 12, 2009

('முருகைய‌னின் வாழ்வும் நினைவும்' நிக‌ழ்வில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரை)

1.
இன்று முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி நகரும்போது, சிறுவயதுகளில் படித்த பாடப்புத்தகங்களின் மூலமாக அறிமுகமாயிருப்பார் போலத்தான் தோன்றுகின்றது. ஈழத்தில் படித்த காலத்தில் பாடக்குழு உறுப்பினர்களின் பெயரில் முருகையனின் பெயர் நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கின்றது. அப்போது அறிமுகமாகிய முருகையன், இப்போது எனக்கு தெரிகின்ற பன்முகத் திறமை கொண்டதொரு படைப்பாளியாக அறிமுகமாயிருக்கவில்லை என்பதும் உண்மை.

பின்னாட்களில் வாசித்த 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' தொகுப்பின் மூலமாக முருகையன் எனக்குள் ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். எங்களுக்கென்று ஒரு நீண்ட கவிதைப் பராம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. மஹாகவி, நீலாவாணன், முருகையன், பசுபதி என்று தொடர்கின்ற வளமான மரபு எங்களுக்கு இருக்கின்றது. முருகையன் கவிஞராக மட்டுமில்லாது, நாடக ஆசிரியராக, கட்டுரையாசிரியராக,மொழிபெயர்ப்பாளராக எனப் பன்முகத்தனமையுடையவராக இருந்திருக்கின்றார். இவையெல்லாவற்றையும் விட, இன்று முருகையனின் மறைவை ஒட்டி எழுதப்படுகின்ற அஞ்சலிக்குறிப்புக்களைப் பார்க்கும்போது, முருகையன் ஓர் அற்புதமான மனிதராக வாழ்ந்திருக்கின்றார் போலத்தான் தெரிகிறது.

பட்டங்களோடும் பட்டோபங்களோடும் பலர் வாழ்ந்தாலும், அவர்களில் பலரால் நிலத்தில் காலூன்ற முடிவதில்லை; சக மனிதர்களை நேசிக்கத் தெரிவதில்லை. அந்தவகையில் பார்க்கும்போது, இவ்வாறானவர்களுக்கு எதிர்மாறாக, முருகையனும், ஏஜே கனகரட்னவும் வாழ்ந்து முடித்துவிட்டுப் போயிருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் தமது திறமைகளின் வெளிச்சத்தில் திளைக்காது, சக மனிதர்களை நேசித்துக்கொண்டு, சாதாரணமாய் வாழ்ந்த அருமையான மனிதர்கள். ஆதி மதங்களும், அண்மைக் காலத்து மார்க்சிசமும் போதித்ததும் சக மனிதர்களை உன்னைப் போல நேசி என்பதைத்தான். மதத்தையும் மார்க்சையும் வைத்து எத்தனையோ போலித்தனங்களும் பித்தலாட்டங்களும் நிகழ்ந்துகொண்டிருக்க, முருகையனும், ஏஜேவும் தங்களது வாழ்வின் மூலம், முக்கியமான ஒரு விடயத்தை சப்தமின்றி எங்களுக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றார்கள்.

முருகையனின் படைப்புக்கள் முழுதையும் நான் வாசிக்கவில்லை என்பதை இங்கே குற்றவுணர்ச்சியுடன் தான் கூறவேண்டியிருக்கின்றது. தொகுப்பாய் முருகையனை வாசித்ததைவிட உதிரிகளாய் வாசித்ததே அதிகம். கவிதைத் தொகுப்புக்கள் என்று பார்க்கும்போது அவரது 'ஆதி பகவன்' மற்றும் 'ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்' ஆகிய இரு தொகுப்புக்களை மட்டுமே வாசித்திருக்கின்றேன். இந்த நிகழ்வில் பேசுவதற்காய், முருகையனின் வேறு கவிதைத் தொகுப்புக்கள் இருக்கின்றனவா என்று சில நண்பர்களிடம் வினாவியபோது முந்தைய காலங்களில் வெளியிட்டவை இப்போது அச்சில் இல்லை என்றார்கள் அவர்கள். நான் தேடியவை, முருகையனின் 'தரிசனம்', 'நெடும்பகல்', 'நாங்கள் மனிதர்', 'வந்துசேர்ந்தன' 'அது அவர்கள்', 'மாடுகளும் கயிறுகள் அறுக்கும்' போன்ற கவிதைத் தொகுப்புக்களாகும்.

2.
முருகையனோடு உறவு என்பது எனக்கு அவரது படைப்புக்களினூடாக மட்டும் என்பதால் முருகையனை முன்வைத்து ஈழம் மற்றும் புலம்பெயர் சூழலைப்பற்றி ஒரு சில அவதானங்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

தமிழுக்கு தொடர்ச்சியான நீண்ட மரபு இருப்பதை சங்க காலத்திலிருந்து முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஒரு சமூகத்தின் செழிப்பு என்பது, அது தனது மரபிலிருந்து அகழ்ந்து, தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, தான் வாழும் காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுப்பது என்பதுதான். அவ்வாறு, நிகழ்காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாத ஒரு சமூகம், இறுதியில் முற்றுமுழுதாக அழிந்து போகின்றது; அல்லது இன்னொரு சமூகத்தோடு தன்னை இரண்டறக் கலக்கச் செய்கின்றது. இது மொழிக்கும் பொருந்தும், கலாசாரம் பண்பாடுகளுக்கும் பொருந்தும். இதைத்தான் டார்வின் 'தக்கண தப்பிப் பிழைக்கும்' என்றார். மார்க்சும் வேறொரு விதமாக, 'மாற்றம் என்பதே மாறாதது' என்றார். முருகையனும், 'வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி/அப்பாலே செல்லும் அறிவோ குறைவு/ ஓ/ இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு;/ பண்பாட்டின் பேராற் பல சோலி எங்களுக்கு' என்றொரு கவிதையில் எச்சரிக்கவும் செய்கின்றார்.

மூத்தோர்களை மதிக்காத ஒரு சமூகம் வளமையுடைய ஒரு சமூகமாக இருப்பதில்லை. இதைத்தான், ஒரு முதியவர் இறந்துபோகும்போது 'ஒரு வாசிக சாலையே அழிந்துபோகின்றது' என்றொரு சீனப்பழமொழி கூறுகின்றது. முன்னே சென்ற மூத்தோர்களின் தோளில் நின்று ஏறிப் பார்த்தாலே நாம் இன்னும் முன்னேற முடியும். ஆனால் நம் தமிழ்ச் சமூகத்தில், நாம் நம் முன்னோர்களை எந்தளவுக்கு மதித்திருக்கின்றோம்? முருகையன் போன்ற படைப்பாளிகளின் படைப்புக்களை எந்தளவுக்கு மறுவாசிப்புச் செய்திருக்கின்றோம்? இவ்வளவு ஆளுமையுள்ள முருகையனை நாம் எந்தளவுக்கு பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்?

சிவத்தம்பி அவர்கள் முருகையன் பற்றிய நினைவுக்குறிப்பில், முருகையனினதும் மஹாகவியினதும் இழப்பை பாரதி, பாரதிதாசனின் தொடர்ச்சியில் வைத்துப் பார்ப்பதாகக் கூறுகின்றார். முருகையன் முக்கியமான ஒரு புலமைத்துவ கவிஞர் (intellectual poet) என்றும் குறிப்பிடுகின்றார். அத்தோடு தனது வாழ்க்கைக்காலத்தில் முருகையனின் முழுத்தொகுப்பும் வெளிவந்து தமிழகத்திலும் அது பரவலாக அறிமுகப்படுத்தப்படுவதைப் பார்க்கவேண்டும் எனவும் பிரியப்படுகின்றார்.

3.
இப்போது சற்று காலத்தைப் பின்னோக்கி நகர்த்துவோம். எங்களுக்கு கைலாசபதி, சிவத்தம்பி, மு.தளையசிங்கம், சிவசேகரம், நுஃமான் போன்ற வலுவான விமர்சகர்களும், தத்துவப் புலமை உள்ளவர்களும் கிடைத்திருக்கின்றார்கள். இன்று சிவத்தம்பியையோ, கைலாசபதியையோ விமர்சித்து, கடந்துபோகின்ற எத்தனையோ தமிழகத்து அறிவுசார்துறையைச் சேர்ந்தவர்கள், ஈழத்து அறிவுஜீவிகளை தங்கள் எழுத்துக்களில் எங்கோ ஓரிடத்தில் அங்கீகரித்தே போகின்றார்கள். தங்களுக்கு இவ்வாறான கலை, இலக்கியங்களில் ஈடுபாடு வந்ததற்கு ஈழத்துத் திறனாய்வாளர்களும் ஒருவிதத்தில் காரணம் என்றே சிலர் கூறியும் இருக்கின்றார்கள். அந்த திறனாய்வு மரபு இப்போது எங்கே போயிற்று? ஈழத்தில் தசாப்தங்களாய் நிகழ்ந்துகொண்டிருந்த போர் ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம். ஈழத்தில் இருப்பவர்களுக்கு அது ஒருவகையில் பொருந்தவும் கூடும். ஆனால் புலம்பெயர்ந்து இருப்பவர்களிடையில் இருந்து கூட, இந்த மரபின் தொடர்ச்சி ஏன் வளர்க்கப்படவில்லை?

இந்தக் கேள்வியை ஏன் இங்கே எழுப்புகின்றேன் என்றால், அப்படியான ஒரு மரபு தொடர்ச்சியாய் வளர்ச்சி பெற்றிருக்குமானால, சிவத்தம்பி அவர்கள் இன்று கவலைப்படுவதைப் போல, முருகையனை இனியேனும் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கேள்வி வந்திருக்காது. எனெனில் இப்படியாய் வாசிக்கவும் விமர்சிக்கின்றச் செய்கின்றதுமான ஒரு மரபு வந்திருந்தால், மூத்த தலைமுறையை அது ஆழமாக வாசித்து, விரிவான தளத்தில் அறிமுகம் செய்திருக்கும். எங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தார்கள், எத்தகைய தளங்களில் செயற்பட்டார்கள் போன்ற விபரங்கள் அறியாமலே அடுத்த தலைமுறைகள் வரத்தொடங்கிவிட்டன இந்த அவல நிலைதான், இன்றைய ஈழத்து/புலம்பெயர் கவிதைகள் தேங்கிப் போய் மேலே நகரமுடியாது மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதற்கும் காரணம். இன்று கவிதை எழுதுகின்ற பெண்கள் மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். நாம் நம்மிடையே நமது படைப்பாளிகள் பற்றி விரிவான உரையாடல்களை நிகழ்த்தவே இல்லை. ஒரு குறுகிய வட்டத்தில் எமக்குப் பின்னால் ஒளிர்வது மட்டுமே சூரியன் என்று நினைத்து பிறருக்குப் பின்னால் சுழன்றிருக்கக் கூடிய பிரபஞ்சங்களைக் கைகழுவி விட்டுவிடோம் என்பதுதான் எங்களின் நிகழ்காலத்துச் சோகம்.

ஒரு காலத்தில் கவனித்தோம் என்றால், தமிழகத்தோடு எங்களுக்கு இருந்தது ஒருவகையான கொடுத்தல் வாங்கல் முறை. எங்களிடமிருக்கும் நல்லதை நாங்கள் தருகின்றோம், உங்களிடம் இருக்கும் அதி சிறந்தவைகளை நீங்களும் தாருங்கள் என்ற பரஸ்பரமான நட்புடன் இந்தக் கொடுத்தல் வாங்கல்கள் இருவழிப்பாதைகளில் நிகழ்ந்தன. ஆனால் எப்போது அவர்களிடமிருந்து பெறுவதை மட்டும் பெற்று அதை மட்டும் வைத்து திருப்திப்பட்டுக்கொள்வோம் என்று சுருங்கிக்கொண்டோமோ அப்போதே நாம் தேங்கிப் போனவர்களாய் ஆகிவிட்டோம். கொடுப்பதும் வாங்குவதும் சீராக நிகழ்ந்திருந்தால் நாம் கைலாசபதி, சிவத்தம்பி, சிவசேகரம், நுஃமான், தளையசிங்கம், என்றொரு வளமான மரபின் தொடர்ச்சியாக தமிழ்ச்சூழலில் நின்று, இன்று முருகையனைப் பெருமிதமாக வழியனுப்பிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் அவ்வாறு இல்லாததால்தான், இனியாவது முருகையன் பரவலாக விரிந்த தளத்தில் அறிமுகப்படுத்தவேண்டும் எனக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எங்களில் பலருக்கு ஒரு காலத்தில் 'கணையாழி'யில் எழுதுவது என்பது, இலக்கியத்திற்கான சிம்மாசானம் கிடைத்துவிட்டதென்ற இறுமாப்பு இருந்திருக்கின்றது. பின்னர் சு.ராவின் 'காலச்சுவடி'ல் எழுதுவது என்பது பெரும்பெறென நினைப்பு இருந்தது. இப்போது எதில் எழுதினால் இலக்கிய அரண்மனையில் தாழ்ப்பாள்கள் திறக்கும் என்று தெரியவில்லை. அதற்காய் முயற்சிப்பவர்களிடம்தான் நாம் கேட்கவேண்டும். இன்றைய ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகளில் பெரும்பாலானோர் தமது தனித்துவங்களை இழந்து, தமிழகத்துக் குழுக்களோடும் தனிநபர்களோடும் ஒட்டிக்கொள்கின்றார்கள். இந்நோய்தான் எங்களவர்களை விரிவான தளத்தில் அறிமுகப்படுத்த முடியாத வீழ்ச்சிக்கு வித்திட்டதெனக் கூறவேண்டியிருக்கிறது. இவ்வாறு தனிநபர்களையும், தமிழகத்துக் குழுக்களோடும் தங்களை அய்க்கியப்படுத்திவர்களுக்கு, தங்கள் தங்கள் பிதாமகர்களைக் காப்பாற்றவும், அவர்கள் சார்ந்திருக்கும் தத்துவச் சார்புகளை நியாயப்படுத்தவுமே இரவும் பகலுமெனப் பொழுது போய்விடுகின்றது. இதற்கு அப்பால் எப்படி தமது மூத்தோர்களையோ, சமகாலத்தவர்களையோ வாசிக்கவோ அறிமுகப்படுத்தவோ நேரம் கிடைக்கப்போகின்றது?

இப்படிக்கூறுவதால் தமிழகத்திலிருக்கும், ஈழத்து/புலம்பெயர் படைப்புக்கள் குறித்து உண்மையான அக்கறையுடையவர்களை கீழே இறக்குவதாக எண்ணவேண்டாம். நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுவது ஒருகாலத்தில் இரண்டு வகையான பாதையில் நடந்த கொடுத்தல் வாங்கல் உறவு இன்று ஒற்றைப் பாதையாக உருவாகிய அவலத்தைத்தான் கவனப்படுத்த விரும்புகின்றேன். பல தனிப்பட்ட உதாரணங்களை கூறி விரிவாக உரையாட விரும்பமிருந்தாலும், இஃதொரு நினைவுப்பகிர்தலாய் இருப்பதால் தவிர்த்துக்கொள்ள விரும்புகின்றேன். இன்றைய இணைய உலகம், தமிழை பல்வேறு தூர இடங்களிலிருந்து விரைவாக எங்கள் வாசல்களுக்கு எடுத்துவருகின்றது. பல தமிழக படைப்பாளிகள்/செயற்பாட்டாளர்கள் எங்களிடமிருந்து எங்கள் வாழ்வை அறிந்துகொள்ள தங்கள் மனங்களைத் திறந்தே வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நமது படைப்பாளிகளையும், இன்னமும் வெளிச்சம் பரவாத படைப்புக்களையும் விரிவாக நாம் தான் அறிமுகப்படுத்தவேண்டும். அதேபோன்று அவர்களிடமிருந்து வரும் நேர்மையான விமர்சனங்களையும் நாம் ஏற்று, எங்களுக்கிடையில் உரையாடல்களை நிகழ்த்திக்கொள்ளவேண்டும்.

4.
புலம்பெயர் படைப்பாளிகள் பலருக்கு தமது படைப்புக்களை எவரேனும் விமர்சனம் செய்தால் தலையிலிருந்து கால் வரை எரியத்தொடங்கிவிடுகின்றது. எத்தகைய ஒரு விமர்சனத்தை எவரொருவர் செய்தாலும், அந்தப்படைப்பு ஏதோ ஒருவகையில் விமர்சிப்பவரையும் பாதித்திருக்கின்றது என்ற மேலான எண்ணத்தைப் படைப்பாளிகள் வளர்த்துக்கொள்ளவேண்டும். 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்று ரோலன் பார்த் கூறியதுமாதிரி, வாசிப்பவருக்கும் அவர் தனக்குரிய முறையில் வாசிப்புச் செய்வதற்கு முழுச் சுதந்திரம் உண்டு எனபதைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் எதைக் கொடுக்க விரும்புகின்றேனோ அதை மட்டுமே கொடுப்பேன், கேட்பதற்கு நீ யார் என்று எதிர் வினாத் தொடுக்கத் தொடங்கினால், கிணற்றுத்தவளையாக இருப்பதற்கான தகுதியை நாம் வளர்த்துக்கொள்கின்றோம் என்றுதான் அர்த்தம்.

முருகையன் ஒரு கவிஞ்ராகவும் நாடகப் பிரதியாளராகவும் இருந்திருக்கின்றார் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர் மொழிபெயர்ப்புச் செய்வது எப்படி என்பது குறித்து நல்லதொரு நூலை எழுதியுள்ளார் என்பதை எவருமே அதிகம் கவன்படுத்தவில்லை. அதேபோன்று இலக்கியம் குறித்து அவர் எழுதியது ஒரு நூலாக வந்துள்ளது. அண்மையில் ஒரு நிகழ்வில் ஒரு படைப்பாளி, விமர்சிப்பவர்கள் Love Bite மாதிரி, கடித்த இடம் தெரியவேண்டும், ஆனால் காயம் தெரியக்கூடாது என்றொரு புதிய வியாக்கியானத்தை திறனாய்வாளருக்குக் கொடுத்திருந்தார். இப்படி இப்படிக் கடித்தால்தான் சரியென்பதற்கு, நாம் இலக்கியத்திற்கும் வந்து காதலா செய்துகொண்டிருக்கின்றோம்? கலை இலக்கியத்தில் கறாரான பார்வை இருந்தால்தானே புத்தூக்கமுள்ள படைப்புக்கள் வெளிவரும். இதோ இங்கே அருகே உட்கார்ந்திருக்கின்ற சிவசேகரம் திறனாய்வு செய்து எத்தனையோ தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. நாம் சிவசேகரத்தின் திறனாய்வோடு முரண்படலாம். ஆனால் சிவசேகரத்தின் விரிவான வாசிப்புக்கள் நம்மை அப்படைப்புக்களைத் தேடி வாசிக்கவும், நமக்கான நம் பார்வைகளையும் உருவாக்கிக் கொள்ளவும், வழிகளைத் திற‌ந்திருக்கின்ற‌ன‌ என்பதை மறுக்க முடியாது அல்லவா? திறனாய்வாளர்கள் - படைப்பாளிகள் குறித்து முருகையன் 'இன்றைய உலகில் இலக்கியம்' என்ற நூலில் எழுதியுள்ளதைப் பாருங்கள்...

"விமரிசனத்தைக் கண்டு கிடுகிடுத்து நடுங்கும் மனோபாவம் நமது பழம்பெரும் எழுத்தாளர்களிடையும் உண்டு. தங்கள் படைப்பையிட்டு யாராவது, ஏதாவது குறைவாகச் சொல்லிவிட்டால், மனம் நொந்து வாடிப்போய் விடுகிறார்கள், இவர்கள்.


எழுதத் தொடங்கும் இளைய சிறுவர்களிடம் இந்த மனப்பான்மை இருந்தாலும் பரவாயில்லை. அதனை நாம் விளங்கிக்கொள்ளலாம். அவர்களுடைய உணர்ச்சி நொய்ம்மையைக் கவுரவிக்கலாம்; அதற்கு மதிப்பளிக்கலாம். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட, பேர் பெற்ற எழுத்தாளர்களே விமரிசனத்தைக் கண்டு மிரள்வது நமது இலக்கிய உலகில் உள்ள ஒரு குறைபாடு என்றே தோன்றுகிறது.

“பிரேத பிரிசோதனை செய்வதுபோல இலக்கியத்தை ஏன் வெட்டிக் கிழிக்கிறீர்கள்? கீறிப் பிளக்கிறீர்கள்? இப்படியெல்லாம் செய்தால் அதன் உயிராற்றலாகிய ஆன்மாவின் இராகங்களை நீங்கள் கேட்க மாட்டீர்கள். கலைஞனின் சுயதருமமும் சுயேச்சையும் விகசிதமாவதைக் காண இயலாத குருடர் ஆகிவிடுவீர்கள்;;’’ இப்படியெல்லாம் முறையிடுகிறார்கள், விமரிசனத்துக்கு முகங்கொடுக்கத் தயங்கும் படைப்பாளிகள்.

இன்னும் சொல்லுவார்கள். “பூத்துக் குலுக்கும் மலரின் வாசனையை மூக்கினால் மோந்து சுகித்தல் வேண்டும். பல பல வண்ணக் காட்சியினை விழிகளால் அள்ளி விழுங்குதல் வேண்டும். அப்படிச் செய்யாமல், பூவைப் பறித்துச் சாம்பலாக்கிச் சோதனைக் குழாய்க்குள் இட்டு அமிலங்களை ஊற்றுகிறீர்களே! பூவின் அழகு உங்களுக்கு எப்படிப் புலப்படும்? கலைப்படைப்பின் புனிதப் பூரிப்பு உங்களுக்கு எப்படிப் புரியும்?’’

இவை விமரிசகனை நோக்கி விடுக்கப்படும் வினாக்கள், இவையெல்லாம் இந்த வினாக்களுக்கு விமரிசகன் தரும் விடை என்ன? ஐயா எழுத்தாளரே, முதலில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்கள் எதிரி அல்லன் நண்பன்தான். உங்கள் படைப்புக்கும் உங்கள் வாசகனுக்கும் ஒரு தொடர்பை உண்டாக்குவதற்குத்தான் முயலுகிறேன். உங்களுக்கு உதவி செய்வதுதான் என் நோக்கம். இரண்டாவதாக, பிரேத பரிசோதனையிற் கீறிக் கிழிக்கப்படும் பிணம், பின்னர் உயிர் பெற்று எழுவதில்லை. எரிந்து சாம்பலாகிறது அல்லது மக்கிச் சிதைகிறது மண்புழுவுக்கு உணவாகிறது. இரசாயனச் சாலையிலே சோதனைக்கு உள்ளாகும் பூவும், பழையபடி திரும்பப் போய் மலர்ச் செடியில் உட்காரமுடியாது; உல்லாசமாக அசைய இயலாது; ஒயிலாக வீற்றிருக்க ஏலாது. ஆனால், என்னுடைய பரீசீலனைக்கு உட்படும் உங்களுக்கு படைப்பை நான் பகுத்தாலும் சிதைத்தாலும், அட்டவணைப்படுத்தினாலும், வரைவு கீறினாலும், கம்பியீற்றருள் ஊட்டினாலும், ஒப்புநோக்கினாலும், வேற்றுமை கண்டாலும், இவை எல்லாவற்றுக்கும் பிறகுகூட, உங்கள் படைப்பு உங்கள் படைப்பாக, அப்படியே, அலுங்காமல் நலுங்காமல், முழு உயிரோடு இருக்கிறது. எல்லா வாசகர்களும் அணுகக்கூடிய நிலையில் ஊறுபடாமல் பூரணமாக மிஞ்சியிருக்கிறது. ஆகவே உங்களுடைய படைப்பு அழிந்து விட்டதே என்று நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை; கிடு நடுக்கம் கொள்ள வேண்டியதில்லை' எனத் தெளிவாகவும் சற்று நகைச்சுவையாகவும் முருகையன் எழுதியிருக்கின்றார்.

ஈழத்தில் ஏஜே கனகரட்னா, சு.வில்வரத்தினம், சோ.கிருஷ்ணராஜா, முருகையன் என்ற ஒரு தலைமுறை, முற்றுமுழுதான சரியான ஆவணப்படுத்தல்கள் இல்லாது, நினைவில் மட்டுமே எஞ்சி நிற்கக்கூடியதாக மறைந்து கொண்டிருக்கின்றது. வாழ்வுப் பெரும் நெருக்கடிகளிலிருந்து, இவ்வாறு படைப்புச் சூழலுக்கு இவர்கள் வந்தற்கும், விருப்புடன் இயங்கியதற்கும், இவர்களுக்கு சக மனிதர்கள் மீதிருந்த பரிவும் பேரன்பும் போலத்தான் தோன்றுகின்றது. முருகையன் போன்றவர்களை நாங்கள் இந்தப்பொழுதில் நினைவு கொள்வது என்பது கூட நடந்துவந்த பாதையில் நம்மை நாமே மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்து நினைவுகளின் கதகதப்பான சிறகுகளின் உள்ளே சற்று நேரம் ஓய்வெடுப்பது போன்றதுதான்.

இக்கட்டுரைக்கு உதவியவை:
(1) பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் - தொகுப்பாசிரியர்கள்: எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா
(2) இன்றைய உலகில் இலக்கியம் - முருகையன்
(3) கவிஞர் இ.முருகையன் நினைவில் - கானா. பிரபாவின் பதிவு

*xxxxxxxxx

Thursday, July 09, 2009

-மீள்ப‌திவு

1.
உன்னை உன்னிலிருந்தும் மற்றதுகளிலிருந்தும் விடுவிடுக்க நீ தொடர்ந்து உளறிக்கொண்டோ, கிறுக்கிக்கொண்டோ இருக்கவேண்டும். சுவரை வெறித்துக்கொண்டோ, நெடுந்தெருவில் காலபோன போக்கிலோ நடந்துகொள்வது சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியெனினும், அப்போதும் மூளை சித்திரவதைக்கூடமாய் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. நரம்புப்பின்னலுக்குள் நுழைந்து நுழைந்து உன்னை வருத்தும்/உருக்கும் நரம்பைப் பற்றி வேரோடு பிடுங்கியெறிவதற்காய் நீயின்னும் தீவிரமாய் யோசிக்கத்தொடங்கும்போதே இன்னுமொரு குரூரமான உலகிற்குள் நீ நுழையத்தொடங்கிவிடுகிறாய். வாழ்வின் அபத்தங்களிலிருந்து தப்பியோடுவதால் நீதான் அவற்றிலிருந்து விலகிப்போகிறாயே தவிர, அவை உன்னைப் பின் தொடராமல் இருக்கும் என்பற்கு எத்தகைய உத்தரவாதமுமில்லை. அது ஆடையில் அப்பிக்கொண்ட உருக்கப்பட்ட தாரைப்போல அகற்றமுடியாதிருக்கின்றது. உனக்கான தெரிவுகளைத் தெரிவு செய்த நீ அதற்கான விளைவுகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று இருத்தலியம் கூறக்கூடும் உனக்கான முற்பிறப்பின் பாவங்களின் ஊழ்வினையை நீ அனுபவிக்கத்தான் வேண்டுமென மதங்கள் வேறொரு திசையில் நின்று விளம்பவும்கூடும். ஆனால் உன் நிலை பரிதாபமானது, எனெனில் நீயிரண்டிலும் இல்லை. இந்த மற்றதுகள் நீ மூர்க்கமாய் நிராகரித்தவை அல்லது உன்னை அவை நிராகரித்தவை. ஆகவே நீ இவற்றைச் சொந்தம் கொண்டாடி ஒரு மூலையில் இருந்துகொண்டு இவை குறித்து எழுதப்பட்ட பிரதிகளைப் புரட்டி புரட்டி சமாதானமாகிவிடமுடியாது.

நீ சாதாரணமானவன், உனக்கான பலங்களை விட பலவீனங்களுடன் இயங்கிக்கொண்டிருப்பவன். இந்த நாளின் இந்தக்கணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்றெண்ணியபடி கழிவிரக்கமுள்ள நேற்றிலும் நிச்சயமற்ற நாளையிலும் பொழுதுகளை விரயமாக்கிகொண்டிருப்பவன். செய்யவேண்டிய காரியங்களையோ எதிர்கொள்ளவேண்டிய சவாலகளையோ தட்டிக் கழித்தபடி எனது இயல்புநிலை குலைகின்றதென முணுமுணுத்தபடி நள்ளிரவு ஆந்தைகளோடு கரியவிருளில் உனது வழிகளைத் தொலைப்பவன். நீ மிகவும் இயலாத சந்தர்ப்பங்களில் உன்னை விமர்சிக்கத் தொடங்குகின்றாய். ஆனால் அந்த வாசிப்புகள உனது தவறுகளைத் திருத்தமுடியாமல் அறிவியலிலோ ஆன்மீகத்திலோ காரணங்களை உனது விளைவுகளுக்கு தேடத் தொடங்கும்போது நீ உன்னையல்ல பிறரைத் தான் விமர்சிகின்றேனெனும் புரிதலையடைந்து மீண்டும் அபத்தங்களின் நுண்ணிய வட்டங்களுக்குள் சிக்கிவிடுகின்றாய். யாருக்கும் உயர்ந்தவனுமல்ல தாழ்ந்தவனுமல்ல என்று கூறத்தொடங்கும்போதே நீ யாருகோ உயர்ந்தவனாகவும் யாருக்கோ தாழ்ந்தவனாகவும் இருக்கத் தொடங்கிவிடுகிறாய். மதம், இனம், சாதி, காலசாரம் போன்றவற்றை மிகவும் மட்டந்தட்டியபடி, ஆனால் அப்படிக்கட்டுக்களோடு இருப்பவர்களால் எப்படி இப்படி நிம்மதியாக வாழமுடிகின்றது என்பதை உள்ளுக்குள் பிரமிக்கவும் செய்கின்றாய்.

உலகமற்ற உலகில் உண்மையற்ற உண்மையில் நீயற்ற நீ சாத்தியம்தானா என்றெல்லாம் யோசித்துப்பார்க்கத் தொடங்குகின்றாய். உண்மையற்ற உண்மை நீயற்ற நீயின் மேலேறி நின்று தொடர்ந்து பேசவிடாது தவிர்க்கச் செய்கிறது. அபத்தஙகளோடு வாழ்வது பல சிக்கலகளுக்கும் புதிர்களுக்கும் அழைத்துச் செல்லும் எனவெண்ணும் நீ உன் காலகளிலிருந்து ஆரம்பித்து உடம்பு முழுவதுமிருக்கும் மயிர்களை சிலவேளைகளில் வேதனையோடும், பல சமயங்களில் ஒருவித கிளுகிளுப்பான இன்பத்தோடும் பிடுங்கியெறியத் தொடங்குகின்றாய். அவ்வாறு செய்வதால் உனது அடையாளங்களைத் தொலைத்து உன்னைப் பின் தொடர்ந்து வரும் அபத்தப் பிசாசுகளின் நிழல்களிலிருந்து தப்பிவிடலாம் என்று நம்புகின்றாய். பின் குவிந்துகிடக்கும் மயிர்களை எரியூட்டி உனது பிரதியை அழித்துவிட்டேன் என நீ நடனமாடிக் குதூகலிக்கும்போது எரியூட்டப்பட்டவை தனக்கான பிரதியை எழுதிக்கொள்கிறது. அதில் முழுதும் உன்னைப்பற்றிய விபரங்கள் நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது உன்னை மிகவும் அச்சுறுத்துகிறது. உன் கனவுகளுக்குள் இருக்கும் கள்வனையும், காமுகனையும், போதைக்கு அடிமையாகுபவனையும் அது வெளிப்படுத்திக்கொள்ள நீ நிர்வாணமாக்கப்படுவது அறிந்து அதிர்கிறாய். மேலும் நிர்வாணம் என்பது மிகப்பெரும் விடுதலையென்ற எளிய புரிதல் கூட இல்லாது மிகவும் கோபிக்கத் தொடங்கி, இந்தப்பிரதியிற்கு எதிர்ப்பிரதியை உனது தோலைக் கிழித்து உன்னை நியாயமாக்கும் வகையில் எழுதத்தொடங்குகின்றாய். சிலவேளைகளில் உனது பிரதியிலிருந்து எழும் குரல்கள் இவை பொய்கள் என்று உரத்துக்கொடுக்கும்போது அந்தப்பக்கங்களைக் கிழித்து கிழித்து கரப்பான் பூச்சிகளைப்போல காலில் வைத்து தேய்த்தழிக்கிறாய். இவ்வாறான இரண்டு பிரதிகளுக்கு அப்பால் காலம் தன் மூன்றாவது பிரதியை எழுதுகிறது. அங்கே, ‘நீ உனக்கு நேர்மையாக இருந்தாய்’ என்ற கல்லறை வாசகம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அதைத்தாங்க முடியாத நீ கடற்கரையை நோக்கி ஓடும்போது குளிர்ப்பருவத்தின் முதல் பனி, மயிரும் தோலுமில்லாத உனது உடலில் ஒரு பெரும் வெடிகுண்டைப் போல விழுந்துவெடிக்கின்றது.. காற்று, இரத்தம் பாய்கின்ற நாடிகளில் நுழைந்து குரூரத்தின் இசையை வாசிக்கிறது. அலைகளை, கடல் துப்பித் துப்பியெறிய நீ எழுதிய இரண்டாவது பிரதி கரையத் தொடங்குகின்றது. அது ஒரு படகைப் போல மெல்ல மெல்ல அசைந்து செல்வதைப் பார்க்கையில் உனது இருத்தலை மீள நிர்மாணிப்பதற்கான கடைசித் துருப்பு என விளங்குகின்றபோதும் வெறித்தபடி நீ வாளாவிருக்கிறாய். பின், உனது மற்றவர்கள்/மற்றதுகள் உன்னையின்னும் பின் தொடர்ந்துகொண்டிருக்கும் அச்சத்தில் நீ நண்டுகள் நிறைய நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு குழியினுள் உன்னைப் புதைத்துக்கொள்கின்றாய். அங்கேயும் குடும்பம், உயர்வு/தாழ்வு, அமைப்புகள், இதுவே சிறந்ததென்கின்ற தத்துவ வியாபாரங்கள் இருப்பதைப் பார்த்து உனது வாழ்வின் அபத்தங்களுக்கு என்றுமே தீர்வில்லையெனத் தெளிவடைகிறாய். ஆனால் அங்கிருந்த நண்டுகளின் இராணி நண்டு உனது மயிர்களும் தோலுமில்லாது துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை முலைகளைப் போல உறிஞ்சத் தொடங்கும்போது நீ ஆணும்/பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வர நிலையை அடைந்துவிடுகின்றாய். உன் இதயம் உறிஞ்சப்படும் ஒவ்வொரு முறையும் நீ உலகெங்குமுள்ள மனம்பிறழ்ந்தவர்களின் துயர வாழ்வை அனுபவிக்கத் தொடங்கின்றாய். துயரங்களுக்கும், பாரிய வன்முறைக்கும் அப்பால் அவர்கள் தமக்கான உலகில் தாங்களாக வாழ்வதைப் பார்த்து அவ்ர்களில் ஒருவனாய் என்றைக்குமாய் இருந்துவிடத் துடிக்கிறாய். எனினும் அதுவாக மாறுதல் அல்ல அதுவாக ஆகுதல் என்பதே உண்மையான உனகான மீட்சி என்று கூறி இதயமுறிஞ்சிய இராணி நண்டு உன்னை குழிக்கு மேலே தூக்கியெறிந்துவிடுகிறது.

பனிவிழுந்து ஈரஞ்சிலிர்த்திருக்கும் மணலில் வந்தொதுங்கிய பாசியொன்று உன்னோடு உரையாடத் தொடங்கும்போது உனக்கு மீண்டும் மயிர்களும் தோலும் வளர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அச்சமடைகிறாய். ஒரு உச்சக்கட்ட புணர்வு தரும் இன்பத்திற்கு நிகரான உற்சாகத்தில் நீ நட்சத்திரமொன்றில் சுருக்குப்போட்டு நிலவு நாற்காலியை உதைத்துதுன் கால்களை விடுவித்து விடுதலையைத் தேடிக்கொள்கின்றாய். உனது இனி உனதல்லாத உடலம் பிரபஞ்சப் பெருவெளியில் அலையத்தொடங்குகிறது நடுநடுங்கியபடி.

2.
தொடர்ந்து துயரம் மழையைப் போல இடைவிடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது அவன் செய்வதறியாது திகைக்கத் தொடங்குகின்றான். இப்படியெல்லாம் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நடக்குமா என்று நினைத்தபடி தொடர்ந்து சிந்திப்பதே ஒரு வன்முறையாக சூனியத்திற்குள் இழுத்துச்செல்வதைப் பார்க்கச் சகிக்கமுடியாது ஒரு நீண்ட துயிலுக்கு சென்றுவிட விரும்புகின்றான். ஒரு பின்னேரப் பொழுதில் factoryயின் பின்வாசலொன்றில் நின்றபடி தனக்கு மிக நெருக்கானவருடன் ப்கிர்வதற்கு காத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் அவர் அவனைவிட இந்நிகழ்வுகளால் நிலைகுலைந்திருப்பதைப் பார்த்து தான் பகிரவிரும்பியதைப் பகிராது இருட்டாகிக்கொண்டிருக்கும் வானத்தை வெறித்தபடி வார்த்தைகளை எண்ணியெண்ணி உரையாடத் தொடங்குகின்றான். பின்னர் மனது வெடித்துவிடக்கூடுமென்ற பாரத்துடன் மின்னொளிகளால் நிரப்பப்பட்டிருக்கும் உதைபந்தாட்ட மைதானத்தின் விளிம்பில் நின்றபடி தனக்கு பிரியமானவளுக்கு தொலைபேசுகிறான். வார்த்தைகளில்லாது தடுமாறும் அவள இவ்வாறான பொழுதுகளில் அவனுக்கருகில்லாத துயரத்தை தன் பெருமூச்சுகளால் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள. இதுவரையில்லாத கடவுள் நம்பிக்கை நீ துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்காகவேனும் எனக்கு வந்துவிடக்கூடாதோ எனும் நெகிழ்வுதரும் வார்த்தைகளை அலைவரிசையில் கரைக்கிறாள். அந்த இதமான வார்த்தைகளுடன் அவன் தாண்டவக்கூத்திற்கு ஆயத்தாமாகின்றான். ‘சாவதும் ஒரு கலை’ என்று கூறிய சில்வியா பிளாத் கூட முதல்முயற்சியிலேயே நேர்த்தியாக தனது கலையை நிகழ்த்தினாரில்லை.




* முன்ன‌ர் எந்த‌த் த‌லைப்பில் ப‌திவிலிட்டேன் என்ப‌து ம‌ற‌ந்துவிட்ட‌து

வாசிப்பும், சில‌ குர‌ல்க‌ளுக்கான‌ எதிர்வினையும்

Monday, June 01, 2009

பொ.கருணாகரமூர்த்தியின் 'ஒரு அகதி உருவாகும் நேரம்' தொகுப்பை முன்வைத்து...
1. 

ந‌ம் எல்லோருக்குமே க‌தைக‌ளைக் கேட்ப‌து என்றால் பிடிக்கும். சிறுவ‌ய‌துக‌ளில் இருந்தே பாட்டிமார்க‌ள், தாய்மார்க‌ள் சொல்கின்ற‌ க‌தைக‌ளுக்கிடையில் நாம் வ‌ள‌ர்ந்துமிருப்போம். சிலர் த‌ங்க‌ள‌ க‌தைக‌ளை, த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ளோடு பேசிப் ப‌கிர்ந்துகொள்கின்றார்க‌ள். வேறு ப‌ல‌ரோ த‌ங்க‌ளுக்குள்ளேயே, க‌தைகளைச் சொல்லிக் க‌ரைத்த‌ப‌டி, வாழ்ந்து முடித்துவிட்டுப் போகின்றார்க‌ள். இன்னுஞ் சில‌ரோ எழுத்தின் மூல‌ம் த‌ங்க‌ளுக்குத் தெரிந்த க‌தைக‌ளைப் பதிவு செய்கின்றார்கள்.

சில‌ க‌தைக‌ள், நாம் வாழ்ந்திராத‌ நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ளையும் வாழ்க்கை முறைக‌ளையும், அறிமுக‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌. புதிய‌ ம‌னித‌ர்க‌ள் புதிய‌ நில‌ப‌ர‌ப்பில் புதிய‌ வாழ்க்கை முறைக‌ளோடு, ந‌ம‌க்கான‌ வாசிப்பு வெளியில் பிர‌வேசிக்கும்போது, நாம் இன்னும் உற்சாகத்தோடு, அந்த‌க் க‌தைக‌ளை வாசிக்க‌த் தொட‌ங்குகின்றோம். 'ஒரு அக‌தி உருவாகும் நேர‌ம்', என்கின்ற‌ க‌ருணாக‌ர‌மூர்த்தியின் இத்தொகுப்பு, நாம் ஏற்க‌ன‌வே அறிந்திருக்கூடிய‌ ம‌னித‌ர்களை புதிய‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளினூடாக‌ அறிமுக‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌. வித்தியாச‌மான‌ ச‌வால்க‌ளையும், த‌டுமாற்ற‌ங்க‌ளையும் இம்ம‌னித‌ர்க‌ளுக்கு புதிய‌ வாழ்க்கைமுறை கொடுக்கின்ற‌ன‌. இவ்வ‌கையான‌ நில‌ப்ப‌ர‌ப்பில் நிக‌ழும் எழுச்சிக‌ளையும் வீழ்ச்சிக‌ளையும், படைபாளி மிகுந்த‌ எள்ள‌ல் க‌ல‌ந்த‌ ந‌டையுட‌ன், வாசிக்கும் ந‌ம்மிடையே ப‌கிர்ந்துகொள்கின்றார். இங்கே, ந‌ம‌க்கு ஏற்க‌ன‌வே அறிமுக‌மான‌ ம‌னித‌ர்க‌ள் என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இக்க‌தைக‌ளில் வ‌ரும் முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளில் அநேக‌ர், த‌மிழ் பேசும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளாய் இருக்கின்ற‌ன‌ர். ம‌ற்ற‌து, எங்க‌ளைப் போல‌வே இக்க‌தைக‌ளில் வ‌ரும் ம‌னித‌ர்க‌ள் வெளிநாடுக‌ளுக்கு போராலோ, பொருளாதார‌ நிமித்த‌த்தாலோ புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள்

இத் தொகுப்பில் குறுநாவ‌ல், சிறுக‌தை, நாவ‌ல் என்கின்ற‌ ப‌ல்வேறு வ‌டிவ‌ங்க‌ளில் க‌தைக‌ள் இருக்கின்ற‌ன‌. முத‌லில் ஒர் அறிமுக‌த்திற்காய் தொகுப்பிலுள்ள‌, மூன்று க‌தைக‌ளையும் மேலோட்ட‌மாய்ப் பார்ப்போம். 'மாற்ற‌ம்' என்கின்ற‌ சிறுக‌தை, ஒரு அக்காவுக்கும் த‌ம்பிக்கும் இடையில் நிக‌ழ்கின்ற‌ க‌தை. ஊரில் இருக்கும்போது அக்கா, த‌ம்பிக்கு ஒரு முன்மாதிரியாக‌ விள‌ங்குகின்றார். த‌ம்பியின் ப‌டிப்பில் அக்க‌றை கொள்வ‌திலிருந்து, அவரது ஆளுமை வ‌ள‌ர்ச்சி வ‌ரை அக்காவின் பாதிப்பு த‌ம்பியில் இருக்கின்ற‌து. அக்கா நிறைய‌ப் புத்த‌க‌ங்க‌ள் வாசிப்ப‌வ‌ராய், அவை பற்றி விவாதிப்ப‌வ‌ராய், த‌ம்பியின் கெட்ட‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளைத் திருத்துப‌வ‌ராய் என‌ப் ப‌ல்வேறு வ‌கைக‌ளில் த‌ம்பியை வ‌சீக‌ரிப்ப‌வ‌ராய் (அக்கா) இருக்கின்றார். ஆனால் அவ்வாறிருக்கும் அக்கா, திரும‌ண‌த்தின் பின் அவ‌ர‌து விருப்புக‌ளுக்கு, எதிராக‌ மாறிப்போப‌வ‌ராய் இருப்ப‌துதான் த‌ம்பிக்குத் திகைப்ப‌ளிக்கிற‌து.

அக்கா திரும‌ண‌மாகி க‌ன‌டாவுக்குப் புலம்பெயர்கின்றார். ஜேர்ம‌னியிலிருந்து நீண்ட‌கால‌த்திற்குப் பிற‌கு அக்காவைச் ச‌ந்திக்க‌ த‌ம்பி வ‌ருகின்றார். அக்கா, முன்பு அவர் வெறுத்த‌ அசைவ‌ உண‌வை உண்ப‌வ‌ராக‌, அத்தான் புகைபிடிப்ப‌தையும், குடிப்பதையும் ஏற்றுக்கொள்ப‌வ‌ராக‌, புத்த‌க‌ங்க‌ள் வாசிப்ப‌தை மிக‌வும் குறைத்துக்கொண்டிருப்ப‌வ‌ராக‌ இருப்ப‌து க‌ண்டு தம்பிக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது. இது தான் முன்பு க‌ண்ட‌ அக்கா, அல்ல‌வென‌ த‌ம்பி நிலை குலைகின்றார். அந்த‌ அதிர்ச்சியோடே, த‌ம்பி மீண்டும் ஜெர்ம‌னிக்குப் புற‌ப்ப‌டுகின்றார் என்ப‌தோடு இந்த‌ச் சிறுக‌தை முடிகின்ற‌து. இத்தொகுப்பில் இருப்ப‌திலேயே மிக‌ எளிமையான‌ க‌தையாக‌ இதுதான் என‌க்குத் தோன்றுகின்ற‌து. இங்கே ஒரு அக்கா, தான் முந்தி நம்பிய‌ கொள்கைக‌ளுக்கு முர‌ணாக இருப்ப‌து பெரிய‌ விட‌ய‌மில்லை. முற்போக்கு முற்போக்கு என எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் எத்த‌னையோ ஆண்க‌ள், திரும‌ண‌த்தின் பின் தாங்க‌ள் சொல்லிக்கொண்டிருந்த‌ற்கு எதிரான‌ வாழ்வு வாழும்போது, பெண்க‌ள் மாறிக்கொண்டிருப்ப‌தில் விந்தை எதுவும் இருப்ப‌தாய் தோன்ற‌வில்லை.

அதிலும் ந‌ம‌து ச‌மூக‌த்தில், பெண்க‌ளுக்கான‌ இட‌த்தை எப்ப‌டிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்று நாம் ஒருகணம் நிதான‌மாய் யோசித்துப் பார்த்தோம் என்றால்,. இந்தக் க‌தையில் வ‌ரும் அக்காவின் மாற்ற‌த்தை நாம் இய‌ல்பாக‌ ஏற்றுக்கொள்ள‌ முடியும். க‌தையில் வ‌ரும் த‌ம்பி, அக்கா ஏன் இப்ப‌டி மாறிவிட்டார் என்று அக்காவை நோவ‌தைவிட்டு விட்டு, அக்காவை எவையெவை எல்லாம் மாற்றியிருக்கும் என்று புற‌ச்சூழ‌ல்க‌ளைப் ப‌ற்றி யோசித்திருப்பாராயின் அதுவே அதிக‌ நியாய‌மாயிருக்கும். ஏதோ ஒரு நேர்காண‌லில் லீலா ம‌ணிமேக‌லை சொல்வார், 'இந்த‌ முற்போக்கு பேசும் ஆண்க‌ளின் ம‌னைவிமார்க‌ள் என்ன‌ செய்கின்றார்க‌ள் என்றால், க‌ண‌வ‌ர்மார்க‌ளுக்கு வீட்டிலிருந்து, தோசை சுட்டுக்கொடுத்துக் கொண்டிருப்ப‌து ம‌ட்டுந்தான்' என்று. முற்போக்கு பேசும் ஆண்க‌ளின் துணைவிமார்க‌ளே இப்ப‌டியிருக்கும்போது, இந்த‌க் க‌தையில் வ‌ரும் அக்கா, த‌ன‌க்கு வாய்க்கும் சாதார‌ண‌ ஒரு க‌ண‌வ‌ரோடு, த‌ன‌து விருப்ப‌ங்க‌ளின்ப‌டி வாழ‌முடியுமென‌ எப்ப‌டி நாம் எதிர்பார்க்க‌முடியும்? இன்னுமே த‌மக்கான‌ துணைக‌ளை, தாங்க‌ளே தேடிக்கொள்ளும் சுத‌ந்திர‌த்தை, பெண்க‌ளுக்கு முழுதாய்க் கொடுக்காத‌ ந‌ம் த‌மிழ்ச் ச‌மூக‌த்தில், இவ்வாறான‌ அக்காவை, ப‌டைப்பாளி குற்ற‌வாளிக் கூண்டில் ஏற்றுவ‌தை அவ்வ‌ள‌வாய் ஏற்றுக்கொள்ள‌ முடியாது போல‌த்தான் தோன்றுகின்ற‌து.

'ஒரு அக‌தி உருவாகும் நேர‌ம்', வெளிநாடுக‌ளுக்கு ஆட்க‌ளை அனுப்பும் இர‌ண்டு ஏஜெண்டுக‌ளின் க‌தையைச் சொல்கின்ற‌து. அநேக‌மாய் த‌மிழ்க்க‌தைப் ப‌ர‌ப்பில், இவ்வாறு, ஆட்க‌ளை த‌லைமாற்றி அனுப்பும் ஏஜெண்டுக‌ளின் க‌தை, எதிர்ம‌றையாக‌வே சொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஆனால் இந்த‌க் குறுநாவ‌லில், ஏஜெண்டுக‌ளுக்கும் ம‌னிதாபிமான‌ம் இருக்கின்ற‌து என்று இன்னொரு ப‌க்க‌ம் சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌தில், க‌வ‌னிக்க‌த்த‌க் க‌தையாக‌ இது மாறிவிடுகின்ற‌து. க‌தை முழுவ‌துமே ச‌ட்ட‌நாத‌ன் என்ப‌வ‌ரை, எப்ப‌டியாவ‌து ஜ‌ரோப்பிய‌ நாடொன்றுக்கு இர‌ண்டு ஏஜெண்டுக‌ள் அனுப்ப‌ முய‌ற்சிப்ப‌து என்ப‌தைப் ப‌ற்றியே கூற‌ப்ப‌ட்டிருக்கும். ச‌ட்ட‌நாத‌ன் ஒரு அப்பாவி. ஒவ்வொரு முறை அனுப்பும்போதும், ஏதோ ஒன்றைப் பிழையாக‌ச் செய்துவிட்டு திரும்ப‌வும் ஏறிய‌ இட‌த்துக்கே வ‌ந்துவிடுகின்றவ‌ராக‌ இருக்கின்றார். இப்படியாக, ஐந்தோ அல்லது ஆறாவ‌து முறையாக‌ சிங்க‌ப்பூரிலிருந்து பிரான்சுக்கு ச‌ட்ட‌நாத‌னை அனுப்ப‌, இடைய்ல் வ‌ழ‌மைபோல‌ ஏதோ 'கோல்மால்' செய்த‌தால், கொழும்பில் வ‌லுக்க‌ட்டாய‌மாய் இற‌க்கிவிட‌ப்ப‌ட்டு விடுகின்றார். இத்தோடு க‌தை முடிந்துவிடுகின்ற‌து.. 'ஒரு அக‌தி உருவாகும் நேர‌ம்' ஏஜெண்டுக‌ளின் பிர‌ச்சினைக‌ளை ம‌ட்டுமில்லாது, இவ்வாறு அனுப்ப‌ப்ப‌டுப‌வர்க‌ளுக்கு உள்ள‌ கஷ்ட‌ங்க‌ளையும் விவ‌ரிக்கின்ற‌து. வெளிநாடுகளுக்கு க‌ள்ள‌மாய் வ‌ந்து இற‌ங்குவ‌து எல்லாம், அவ்வ‌ள‌வு ஒன்றும் எளிதில்லை. இவ்வாறு நாடு க‌ட‌ப்ப‌த‌ற்காய், எத்த‌னையோ பேர் த‌ங்க‌ள் உயிர்களைத் தொலைத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தையும், இன்னும் எத்த‌னையோ பேர்க‌ள் பெய‌ர‌றியாச் சிறைக‌ளில், இன்றும் வாடிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தையும் விள‌ங்கிக்கொண்டால் எங்க‌ளால் இந்த‌க்க‌தையின் பின்னாலுள்ள‌ அவ‌ல‌ங்க‌ளைப் புரிந்துகொள்ள‌ முடியும். இந்த‌க் க‌தையை அலுப்பில்லாது வாசிக்க‌, ஒருவித‌ எள்ள‌ல் த‌ன்மை க‌ல‌ந்து சொல்லியிருப்ப‌தில் க‌ருணாக‌ர‌மூர்த்தி என்ற‌ ப‌டைப்பாளி வெற்றி பெற்றிருக்கின்றார் என்றே கூற‌வேண்டும்.


2.
ஒரு நாவ‌லென‌ச் சொல்ல‌ப்ப‌ட‌க்கூடிய‌, வாழ்வு வ‌ச‌ப்ப‌டும் என்ற‌ க‌தைதான், இத்தொகுப்பிலுள்ள‌ க‌தைக‌ளில் என்னை அதிக‌ம் க‌வ‌ர்ந்த‌ க‌தையென‌ச் சொல்லுவேன். 80க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் ஈழ‌த்திலிருந்து ஜேர்ம‌னிக்கு அக‌திக‌ளாய் அடைக்க‌ல‌ங்கேட்டு, ஒரே அறையில் தங்கியிருக்கும் ஐந்தாறு இளைஞ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ க‌தைதான் இது. இன்னொருவ‌கையில் சொல்ல‌ப்போனால், இந்த‌க்க‌தை எம‌து புல‌ம்பெய‌ர் வாழ்வின் தொட‌க்க‌த்தைப் ப‌திவு செய்யும் ஒரு முக்கிய‌ ஆவ‌ண‌ம் என‌வும் சொல்லலாம். புல‌ம்பெய‌ர் வாழ்க்கை என்ப‌து பொதுவான‌ ஒன்ற‌ல்ல‌. நாம் புல‌ம்பெய‌ர்ந்த‌ ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப‌ அவை வேறுப‌டுப‌வை. உதார‌ண‌மாய் க‌ன‌டா, இங்கிலாந்து போன்ற‌வற்றுக்கு குடிபெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும், ஜேர்ம‌னி, பிரான்ஸ் போன்ற‌ நாடுக‌ளுக்கு புலம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும், இடையிலான‌ வாழ்க்கை என்ப‌து வித்தியாச‌மான‌து. க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளுக்கு குடிபெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு, ஆக‌க்குறைந்த‌து, ஏற்க‌ன‌வே க‌ற்றுக்கொண்ட‌, அடிப்ப‌டை ஆங்கில‌த்தை வைத்து, த‌ங்க‌ளைக் காப்பாற்றிக் கொள்ள‌வாவ‌து முடிந்திருந்த‌து. ஆனால் ஜேர்ம‌னி, பிரான்ஸ் போன்ற‌வற்றுக்குப் போனவர்கள், மொழியிலிருந்து எல்லாவ‌ற்றையும் புதிதாக‌வே க‌ற்றுக்கொள்ள‌ வேண்டியிருந்த‌து. ஆகவே அவ‌ர்க‌ளுடைய‌ புல‌ம்பெய‌ர்வு எம்மைவிட‌ வித்தியாச‌மான‌து ம‌ட்டுமின்றி, மிக‌வும் க‌ஷ்ட‌மான‌தும் கூட‌. என‌வே 'புல‌ம்பெய‌ர் வாழ்வு' என்ற‌ ஒற்றைவ‌ரிக்குள், எல்லோருடைய‌ வாழ்வையும், பொதுவாக‌ப் பார்க்கும் நிலையையும், நாம் மாற்ற‌வும் வேண்டியிருக்கிற‌து.

'வாழ்வு வ‌ச‌ப்ப‌டும்' நாவ‌லின் க‌தையை வாசிக்கும்போது, உட‌னே என‌க்கு நினைவுக்கு வ‌ந்த‌ இன்னொரு விட‌ய‌ம், அருந்த‌தி இய‌க்கிய‌ முக‌ம் திரைப்ப‌ட‌ம். அதுவும் இவ்வாறான‌ இளைஞ‌ர்க‌ளின் புல‌ம்பெய‌ர் வாழ்வைப் ப‌ற்றியே கூறுகின்ற‌து. இன்று ரொர‌ண்டோவில் வீதிக்கு வீதி சாப்பாட்டுக்க‌டைளில் இடிய‌ப்ப‌ம் கிடைக்கின்ற‌ன‌. ஆனால் இந்த‌ச் சாப்பாட்டுக்க‌டைக‌ள், எவ்வாறு எல்லாம் முத‌லில் ஆர‌ம்பித்திருக்கும் என்று எப்போதாவ‌து யோசித்துப் பார்த்திருப்போமா? அவ்வாறு புல‌ம்பெய‌ர் வாழ்வின் மூல‌த்தைத் தேடிப்போகின்ற‌ க‌தைதான், வாழ்வு வ‌ச‌ப்ப‌டும். எம‌து புல‌ம்பெய‌ர் வாழ்வின் ஆர‌ம்ப‌த்தை ‍-முக்கிய‌மாய் ஜேர்ம‌னிய‌ப் புல‌ம்பெய‌ர்வை‍- ப‌திவு செய்த‌து என்ற‌வ‌கையில் இது ஒரு முக்கியாமான‌ க‌தையே.

இந்நாவ‌லில் வ‌ரும் இளைஞ‌ர்க‌ளின் மூல‌மாக‌ புல‌ம்பெய‌ர் வாழ்வின் புதிய‌ வாழ்வு முறையும், இன்ன‌மும் கைவிடப்படாத ஊரின் நினைவுகளும் சித்தரிக்கப்படுகின்றன. இந்த‌ நாவ‌லில் வ‌ரும் எல்லாப் பாத்திர‌ங்க‌ளும் அவ‌ர‌வ‌ர் இய‌ல்பில் சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌ர். ப‌ல‌மும் ப‌ல‌வீன‌ங்க‌ளும் கொண்ட‌வ‌ர்க‌ளே ம‌னித‌ர்கள். எழுச்சிக‌ளும் வீழ்ச்சிக‌ளும் இல்லாத‌ ம‌னித‌ வாழ்க்கை என்ப‌து ஒரு போதும் சாத்திய‌மில்லை. இவற்றோடு இந்தக்கதையில், நாம் எல்லாவற்றையும் இழந்து அக்திகளாக வந்திருந்தாலும், இன்னமும் வாழ விருப்பும் உயிர்த்தலைப் படைப்பாளி அழகாகப் பதிவு செய்கின்றார். அவலங்களுக்கும், தத்தளிப்புக்களுக்கும் இடையில், வந்துபோகின்ற அருமையான தருணங்களை, நகைச்சுவையாக கருணாகரமூர்த்தி சொல்லிப் போவதுதான், இந்நாவலோடு, இன்னும் நம்மை நெருக்கம்டைய வைக்கிறது போலும்.

சில‌ ப‌ல‌வீன‌ங்க‌ளும் இந்நாவ‌லில் இல்லாம‌லில்லை. முக்கிய‌மாய் இக்கதையில் வ‌ரும், அத்வைத‌னை, ப‌டைப்பாளி க‌தாநாய‌க‌த் தோற்ற‌த்தோடு க‌ட்டிய‌மைக்க‌ முய‌ற்சிப்ப‌தை சுட்டிக்காட்ட‌ வேண்டியிருக்கிற‌து. அத்வைத‌னின் பாத்திர‌த்தை வித்தியாச‌ப்ப‌டுத்திக் காட்டுவ‌த‌ற்கும், அவ‌ரை ஒரு நாய‌க‌த்த‌ன்மைக்கு க‌ட்டிய‌மைப்ப‌த‌ற்கும் வேறுபாடுக‌ளுண்டு. ந‌வீன‌த்துவ‌ சூழ‌லில், அத்வைனின் பாத்திர‌ம் பாராட்ட‌ப்ப‌ட்டிருக்க‌கூடும். பின் ந‌வீன‌த்துவ‌ சூழ‌ல் பற்றி அறிந்த ஒரு ப‌டைப்பாளி, அத்வைனை மாசு ம‌றுவ‌ற்ற‌வ‌ராக‌ ஏன் காட்ட முய‌ற்சிக்கின்றார் என்ற‌ கேள்வியை எழுப்ப‌ வேண்டியிருக்கிற‌து. ம‌ற்ற‌து இந்நாவ‌லில் சில‌ இட‌ங்க‌ளில் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து அப்ப‌டியே ஆங்கில‌த்தில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. சில‌ இட‌ங்க‌ளில் ஆங்கில‌த்தில் உரையாட‌ல் நிக‌ழும்போது அடைப்புக்குறிக்குள் த‌மிழில் த‌ர‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இன்னும் வேறு சில‌ இட‌ங்க‌ளில் ஆங்கில‌ உரையாட‌லை அப்ப‌டியே த‌மிங்கிலிஷில் எழுத‌ப‌ட்டிருக்கின்ற‌து (தமிங்கிலிஷ் என்று எதைக் குறிப்பிடுகின்றேன் என்றால், ஆங்கில உரையாடலை அப்படியே ஆங்கிலத் தமிழில் எழுதுவதை). ஒரு நாவ‌லில், இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் ப‌டைபாளி க‌வ‌ன‌ங்கொள்ள‌வேண்டும். மூன்று வடிவ‌ங்க‌ளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உரையாட‌ல்க‌ளை எழுதியிருந்தால், வாசிப்ப‌வ‌ருக்கு அதிக‌ம் இடைஞ்ச‌லிருக்காது என்று ந‌ம்புகின்றேன்.

ம‌ற்ற‌து இந்த‌ நாவ‌லின் ஆர‌ம்ப‌த்தில் வ‌ரும் பைபிள் வாச‌க‌மான‌, 'சோர‌ம் போத‌லும் பிற‌ரைச் சோர‌ம் போக‌த் தூண்டுத‌லும் பாவ‌மாகும்' என்ப‌தோடு வரும் முர‌ண்பாடு. முத‌லில் ஏன் ப‌டைப்பாளி இவ்வாச‌க‌த்தை இந்நாவ‌லுக்குப் பாவிக்கின்றார் என்ப‌தில் கேள்விக‌ளுண்டு. இர‌ண்டு பெண்க‌ள் த‌ங்கள் வாழ்வைத் தாங்கள் விரும்பியபடி தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். அதை எப்ப‌டி நாங்க‌ள் சோர‌ம் போகின்றார்க‌ள் என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ முடியும்? ம‌ற்ற‌து 'க‌ற்பு', 'சோர‌ம்' போவ‌து பற்றியெல்லாம், இன்னும் இந்த நூற்றாண்டிலும் உரையாடிக்கொண்டிருப்ப‌து அவ‌சியமா என்ப‌து ப‌ற்றிய‌து. சாதியின் பெய‌ரால், ம‌த‌த்தின் பேரால், இன‌த்தின் பேரால் எத்த‌னையோ ம‌னித‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டும் ஒடுக்க‌ப்ப‌ட்டும் கொண்டிருக்கும்போது சோர‌ம் போவ‌து எல்லாம் பெரிய‌ விட‌ய‌ங்க‌ளா என்ன‌? எப்படி அகராதியில் நாம் புதிய வார்த்தைகளைக் காலத்துக்குக் காலம் சேர்க்கின்றோமோ, அவ்வாறே நமது வழக்கிலுள்ள தேவையற்ற சொறகளான, கற்பு, சோரம் போதல் போன்றவற்றையும் அகராதிகளிலிருந்து அகற்றவும் வேண்டியிருக்கிறது.

இவ்வாறான‌ சில‌ குறைக‌ளைத் த‌விர்த்துவிட்டுப் பார்த்தால், வாழ்வு வ‌ச‌ப்ப‌டும் நாவ‌ல் த‌மிழ் இல‌க்கிய‌ப் ப‌ர‌ப்பில் புதிய‌ க‌தைப்ப‌ர‌ப்பைத் திற‌ந்துவிட்ட‌, முக்கிய‌மான‌ ஒரு படைப்பு என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம்.

3.

இப்போது இந்த‌த் தொகுப்பின் க‌தைக‌ளைத் த‌விர்த்து வேறு சில‌ விட‌ய‌ங்க‌ளைப் பார்ப்போம். இத்தொகுப்பில் க‌தைக‌ளுக்குள் நுழைய‌முன்ன‌ர் இர‌ண்டு அணிந்துரைகளையும், க‌ருணாக‌ர‌மூர்த்தியின் முன்னுரையையும் க‌ட‌ந்துவ‌ர‌வேண்டியிருக்கிற‌து. அதுவும் க‌ருணாக‌ர‌மூர்த்தியின் உரை, தொகுப்பிலுள்ள‌ க‌தைக‌ளைப் ப‌ற்றி பேசுகின்ற‌ன‌. முன்னுரையில் பின் ந‌வீன‌த்துவ‌ சூழ‌ல் ப‌ற்றி அறிந்திருக்கும் இந்தப் ப‌டைப்பாளி கூட‌, த‌ன‌க்கான‌ பிர‌தியை வாச‌க‌ர் க‌ண்ட‌றிவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌த்தை ம‌றுப்ப‌து போன்ற‌ தோற்ற‌ப்பாட்டை முன்னுரையில் கொடுக்கின்றார். அதுவாவ‌து ப‌ர‌வாயில்லை, ஜெய‌மோக‌ன் த‌ன‌து உரையில் வ‌ழ‌மைபோல‌ 'பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌வ‌ர் ப‌டைப்புக்க‌ள் த‌ட்டையான‌து ஒற்றைத் த‌ன்மையான‌து' என்று திருவாய் மொழிகின்றார். ஜெய‌மோக‌னின் திருவாக்குக‌ள் குறித்து நாம் அதிக‌ம் அல‌ட்டிக்கொள்ள‌த் தேவையில்லை. ஆனால் என்ன‌ பிர‌ச்சினையென்றால் க‌ருணாகர‌மூர்த்தியிய்ன் 96க‌ளில் வெளியிட‌ப்ப‌ட்ட‌ இத்தொகுப்பில் கூறிய‌து மாதிரி, 2000ன் ஆர‌ம்ப‌த்தில் நான் உட்ப‌ட‌, பிற‌ ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ருட‌ன் விவாதித்த‌ ப‌திவுக‌ள் விவாத‌க் க‌ள‌த்திலும், இப்ப‌டியே கூறியிருக்கின்றார். அண்மையில் கூட‌ இந்தக்கருத்துக்களை மீண்டும் எங்கையோ கூறிய‌தாய் வாசித்த‌து நினைவு. இவ‌ர் இப்ப‌டி கிளிப்பிள்ளையாக‌, காலங்காலமாய் ஒன்றையே ஏன் ஒப்புவித்துக்கொள்கின்றார் என்ப‌துதான், என‌க்குப் புரியாத‌ புதிராக இருக்கிறது. ஈழ‌த்தில‌க்கிய‌மோ, புல‌ம்பெய‌ர் இல‌க்கிய‌மோ பெரிதாக‌ச் சொல்லும்ப‌டியாக‌ எதையும் சாதிக்கவில்லை என்றாலும், ஜெய‌மோக‌ன் ஒப்பாரி வைப்ப‌துபோல‌ அவ்வ‌ள‌வு கீழான‌தாக‌வும் இல்லை.

ஜெய‌மோக‌னுக்கு கைலாச‌ப‌தி, சிவ‌த்த‌ம்பி என்றால் வேம்ப‌ங்காய் சுவைதான் நினைவுக்கு வ‌ரும். ஆக‌வே அவ‌ர்க‌ள் முன்மொழிந்த‌ முற்போக்கு இல‌க்கிய‌த்தையும், க‌ணேச‌லிங்க‌த்தையும் ஒருபிடி பிடிக்காவிட்டால் ஜெய‌மோக‌னுக்கு இரவுகளில் நித்திரை வ‌ருவ‌தில்லைப் போலும். ஆனால் என்ன‌ ப‌ரிதாப‌ம் என்றால் ஈழ‌த்தில‌க்கிய‌மோ, புல‌ம்பெய‌ர் இல‌க்கிய‌மோ, அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தை தாண்டி எங்கையோ ந‌க‌ர்ந்துவிட்ட‌து. இன்றைய‌ க‌டும் போர்ச் சூழ‌லுக்குள்ளிலிருந்து இராக‌வ‌ன், திசேரா, ம‌ல‌ர்ச்செல்வ‌ன் போன்றோர் எழுதிக்கொண்டிருப்ப‌தை ஜெய‌மோக‌ன் அறிந்திருப்பாரா தெரியாது, அல்ல‌து புல‌ம்பெய‌ர்ச்சூழ‌லில் -த‌மிழ‌க‌த்தில் அவ்வள‌வாய் அறிமுக‌மாகாத‌- பார்த்திப‌ன், மைக்க‌ல், சித்தார்த்த‌ 'சே' குவேரா, நிருபா போன்ற‌வ‌ர்க‌ள் எழுதிக்கொண்டிருப்ப‌தை வாசித்திருக்கின்றாரா என்றும் கேள்விகள் கேட்க‌வேண்டியிருக்கிற‌து.

முத‌லில் ஜெய‌மோக‌ன், விஷ்ணுபுர கால‌த்தைத் தாண்டி, இன்றைய‌ கால‌த்துக்கு வ‌ந்து ஈழத்திலக்கியம் குறித்த த‌ன‌து வாசிப்பை நீட்சிப்பாரானால், அவரது கிளிப்பேச்சுக்க‌ளை நாம் கேட்டுக் கொண்டிருக்க‌வேண்டிய‌ தொல்லையிருக்காது. மேலும் ஜெயமோகன் பல இடங்களில் முன்வைப்பதைப் போல, ஒரு படைப்பாளி தொடர்ச்சியாகவோ அல்லது நிறையவோ எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஒரு பாடலே, நூற்றாண்டுகள் தாண்டியும் கணியன் பூங்குன்றனை நாம் நினைவில் வைத்துக்கொள்ளப் போதுமாய் இருக்கிறது. அவ்வாறே பல ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் நாம் நினைவில் வைக்கக்கூடிய சில ந‌ல்ல‌ படைப்புக்களையாவது தந்திருக்கின்றார்கள். வேண்டுமானால், தலையணை சைஸில் புத்தகம் எழுதுகின்றவன்/ள் மட்டுமே படைப்பாளி என்று ஜெயமோகன் கூறுவாராய் இருந்தால், 'ஆம் அய்யா, நாம் எதையுமே படைக்கவில்லை' என்று இரண்டு கைகளையும் உயர்த்திவிடவேண்டியதுதான். இங்கே ஜெயமோகனைப் பற்றி அதிகம் உரையாடத்தேவையில்லை. ஆனால் அவருக்கு எங்கு எங்கெல்லாம் இடங்கிடைக்கிறதோ அங்கே எல்லாம் கிளிப்பிள்ளையாக இப்படிப் பேசிக்கொண்டிருப்பதை சகித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதற்காகவேனும் அவரது நண்பர்கள் அதிகமுள்ள இவ்வாறான இடங்களிலாவது நாம் எதிர்வினை செய்யவேண்டியது அவசியமாகின்றது.

க‌ருணாக‌ர‌மூர்த்தியின் வாழ்வு வ‌ச‌ப்ப‌டும், நாவல் எழுதப்பட்டு கிட்ட‌த்த‌ட்ட‌ 25 வ‌ருட‌ங்க‌ளாகின்ற‌து. இன்றும் அந்த‌ப்பிர‌தியை சுவார‌சிய‌மாக‌ வாசிக்க‌க்கூடிய‌தாக‌வும், புதிய‌து போன்றும் இருக்கின்ற‌தென்றால் இந்த‌ நாவ‌லுக்கு இன்றும் ஒரு முக்கிய இடமுண்டு என்றேதான் எடுத்துக் கொள்ள‌வேண்டும். க‌ருணாக‌ர‌மூர்த்தியை, எஸ்.பொ, அ.முத்துலிங்க‌ம் என்கின்ற‌ ஒரு தொட‌ர்ச்சியில் வைத்துப் பார்க்கின்றேன். இவ‌ர்க‌ளுக்கு இடையில் இருக்க‌க்கூடிய‌ பொதுத்த‌ன்மை என்ன‌வென்றால் இவ‌ர்க‌ள் ப‌டைப்பில் இய‌ல்பாய் வ‌ந்துவிடுகின்ற‌ எள்ள‌ல் மற்றும் நகைச்சுவைத் தொனிகளாகும். ஒரு வாச‌க‌ரை அலுப்ப‌டைய‌ச் செய்யாது, சுவார‌சிய‌மாக வாசிக்க‌ச் செய்ய‌க்கூடிய‌ எழுத்தாற்ற‌ல் இவ‌ர்க‌ளிட‌மிருக்கின்ற‌து. அந்த‌த் தொட‌ர்ச்சியில் வ‌ருப‌வ‌ர் ஷோபாசக்தி. இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒரு தொட‌ர்ச்சி என்கின்றேனே த‌விர‌, இவ‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ருக்கும் இருக்க‌க்கூடிய‌ த‌னித்துவமான‌ வேறுபாடுக‌ளையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது என்ப‌தையும் நினைவூட்டிக்கொள்கின்றேன்.

'த‌மிழின் சிற‌ப்பு தொன்மையில் இல்லை தொட‌ர்ச்சியில் இருக்கிற‌து' என்பது எவ்வளவு அழகான ஒரு வாக்கியம். அந்த‌வ‌கையில் இன்று புதிதாய் எழுத‌ப்போகின்ற‌வ‌ர்க‌ளுக்கு எம் முன்னோடிக‌ளில் வழிகாட்டல்கள் அவசியமாகின்றது. அந்த முன்னோடிகளின் கரம் பிடித்து அவர்கள் நடந்த பாதையில் நடந்து, அதற்கப்பாலும் அவர்களைத் தாண்டிப் போவதே, புதிதாய் எழுதுகின்றவர்களுக்கு முன்னாலுள்ள ச‌வாலாகும். எஸ்.பொ, தேவ‌காந்த‌ன், அ.முத்துலிங்க‌ம், பொ.கருணாக‌ர‌மூர்த்தி என்கின்ற‌ நீளும் ப‌ட்டிய‌ல் எம் முன்னே விரிந்து கிடக்கிறது. இம்முன்னோடிக‌ளின் எழுத்துக்க‌ளைத் தொட‌ர்ந்து வாசித்து ப‌ல‌வ‌ற்றைக் க‌ற்றுக்கொள்வ‌தும், தேவையில்லாத‌ சில‌வ‌ற்றை நிராக‌ரிப்ப‌துமே இவர்களுக்கு நாம் கொடுக்க‌கூடிய‌ அதி கூடிய ம‌திப்பாய் இருக்கும்.
(பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புகள்: ஆய்வும் அறிமுகமும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

ந‌ன்றி:
கோடை இணைய‌ இத‌ழ்

'கால‌ம்' இத‌ழில் வெளிவ‌ந்த‌ க‌தை

Tuesday, May 26, 2009


ஹேமா அக்கா
-இள‌ங்கோ


'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.

பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி. இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌கால‌த்தில் கூட‌, இப்ப‌டி அள்ள‌ அள்ள‌க்குறையாத‌ ந‌ல்ல த‌ண்ணியும், தார‌ள‌மாய் ல‌க்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன‌ ச‌னிய‌னுக்கு நீங்க‌ள் ச‌ண்டை பிடிக்கிறிய‌ள் என்றொரு ஆமிக்கார‌ன் ச‌ன‌த்தை செக்பொயின்றில் வைத்து ப‌ரிசோதித்துப் பார்க்கும்போது கேட்ட‌தாயும் ஒரு க‌தையிருந்த‌து. அவ‌ன் அப்படிகேட்ட‌திலையும் பிழையில்லைத்தான். ந‌ல்ல‌ தோட்ட‌க்காணிக‌ள், நிறைய‌ ப‌னைம‌ர‌ங்க‌ள், ஆடு மாடுக‌ள் என்று எங்க‌ள் ஊரிலை ச‌ன‌ங்க‌ள் இருந்த‌போது அவ‌னுக்கு அப்ப‌டித் தோன்றிய‌தில் பிழையுமில்லை.

நாங்க‌ள் க‌த்து க‌த்தென்று க‌த்த‌ அண்டை அய‌லிலிருந்த‌ ச‌ன‌மெல்லாம் கிண‌ற்ற‌டியில் கூடிவிட்ட‌து. விழுந்த‌ கிண‌று ஒரு ப‌ங்குக்கிண‌று. ஆனால் ப‌ங்கிருக்கிற‌வைய‌ள், இல்லாத‌வைய‌ள் என்று ஊரிலையிருக்கிற‌ எல்லாச் ச‌ன‌மும் அதைத்தான் பாவிக்கிறவையள். எங்க‌ள் ஊரின் மண், ச‌ன‌ம் சாதி பார்க்கிற‌ மாதிரி வ‌ஞ்ச‌ம் எதுவும் செய்த‌தில்லை. யார் தோண்டினாலும் ந‌ல்ல‌ த‌ண்ணியைத் த‌ந்துகொண்டிருந்த‌து. இல‌ங்கை ஆமியின் ஒபரேஷ‌ன் லிப‌ரேச‌னோடு தொட‌ங்கிய‌ பொம்ம‌ர‌டியிலிருந்தும், ப‌லாலியிலிருந்தும் காங்கேச‌ந்துறையிலிருந்தும் அடிக்கின்ற‌ ஷெல்ல‌டியிலிருந்தும் த‌ப்புவ‌த‌ற்கென‌, நானும் அம்மாவும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் எங்க‌ள் வீட்டு செவ்விளநீர் ம‌ர‌த்தடிப் ப‌க்க‌மாய் வெட்ட‌த் தொட‌ங்கிய‌ ப‌ங்க‌ருக்குள்ளேயே ஆற‌டி வ‌ர‌முன்ன‌ரே தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்ந்திருக்கின்ற‌து. 'டொங்கு டொங்கு' என்று அலவாங்கு போட‌ உறுதியாயிருக்கும் சுண்ணாம்புக் க‌ல்லுக்குள்ளிலிருந்து எப்ப‌டித்தான் இப்ப‌டி ந‌ல்ல‌ சுவையான‌ த‌ண்ணீர் வருகின்ற‌தென்ப‌து என‌க்கும் அந்த‌ வ‌ய‌தில் சரியான வியப்பாய்த்தானிருக்கும். ஹேமாக்கா விழுந்த‌ கிண‌று த‌ண்ணிய‌ள்ளுகின்ற‌ கிண‌று என்றப‌டியால் அந்த‌ள‌வு ஆழ்ப்ப‌மில்லை. ஆன‌ப‌டியால் த‌ப்பிவிட்டா. இப்போ யோசிக்கும்போது ஹேமாக்கா தான் உயிரோடும் இருக்கோனும், ஆனால் அதேச‌ம‌ய‌ம் த‌ன‌து எதிர்ப்பையும் காட்ட‌வேண்டுமென‌ ச‌ம‌யோசித‌மாய் யோசித்துத்தான் இந்த‌க்கிண‌ற்றுக்குள்ளை குதித்திருப்பா போல‌... இல்லை, த‌ன் உயிரை மாய்த்துக்கொள்ள‌ வேண்டும் என்று நினைத்திருந்தால் அவா தன் வீட்டுக்கு இர‌ண்டு வீடுக‌ள் தாண்டிக்கிட‌ந்த‌ ஆழ்ப்பமான‌ கிண‌த்துக்குள்ளையெல்லோ குதித்திருக்க‌வேண்டும். அந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதித்தால் ச‌ன‌ம் உயிரோடு த‌ப்ப‌முடியாத‌ள‌வுக்கு அந்த‌ மாதிரி ஆழ்பப‌மாயும், அடியில் நிறைய‌ப் பாசியுமாயும் அது இருந்தது.

'ஹேமாக்கா வெளியே வாங்கோ, வெளியே வாங்கோ' என்று நாங்க‌ள் கிண‌த்துக்க‌ட்டைச் சுற்றி குஞ்சைப் ப‌ருந்திட்டைப் ப‌றிகொடுத்த கோழி மாதிரி க‌த்திக்கொண்டிருந்தோம். ஹேமாக்கா என்ன‌ க‌ட் வும‌னா இல்லை சுப்ப‌ர் வும‌னா... சும்மா அப்ப‌டியே 'விர்ர்' என்று கிண‌த்துக்குள்ளையிலிருந்து ப‌ற‌ந்துவ‌ர‌. யாரோ ஒராள் ந‌ல்ல‌ மொத்த‌மான‌ க‌யிறையெடுத்து கிண‌த்துக்குள்ளை விட‌ அவா அதைப் பிடித்து ஏறி வ‌ர‌மாட்டேனென‌ அட‌ம்பிடித்துக்கொண்டிருந்தா. அவாவை எப்ப‌டி வெளியே எடுக்கிற‌து என்று எல்லோருக்கும் பெரிய‌ பிர‌ச்சினையாய்ப் போயிட்டுது. அதைவிட‌ ப‌ர‌ப‌ர‌ப்பாய் வ‌ந்த‌ ச‌ன‌மெல்லாம் ஏன் இந்த‌ப் பெட்டை கிண‌த்துக்குள்ளை குதித்தாள், அத‌ற்கான‌ கார‌ண‌ம் என்ன‌வென்று ஆராய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. பொழுதும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் இருள‌த்தொட‌ங்கிவிட்ட‌து. ஹேமாக்காவும் கீழே விட்ட‌ க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு மேலேயேறி வ‌ர‌மாட்டென‌ அட‌ம்பிடித்துக்கொண்டு உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறா. யாராவ‌து பெடிய‌னை கிண‌த்துக்குள்ளை இற‌க்கி அவ‌னைப் பிடித்துக்கொண்டு ஹேமாவாக்காவை தூக்க‌லாமெண்டாலும், ஹேமாக்கா ஒரு கும‌ர்ப்பெட்டையாயிருப்ப‌து 'க‌ற்பு' சார்ந்த‌ பிர‌ச்சினையாக‌வும் ச‌ன‌த்துக்கு இருக்கிற‌து. வ‌ய‌துபோன‌ கிழ‌டுக‌ளை இற‌க்க‌லாந்தான். ஆனால் ஹேமாக்காவின் பார‌த்தை த‌ங்க‌டை தோளிலை தாங்கிக்கொண்டு க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறுவ‌த‌ற்குள் கிழ‌டுக‌ளுக்கு சீவ‌ன் இருக்குமா என்ப‌தும் கேள்விக்குரிய‌துதான். ஒரு த‌ற்கொலை முய‌ற்சி த‌ப்பித்துவிட்ட‌து என்ற நிம்ம‌திப்பெருமூச்சை தெரிந்தே செய்கின்ற‌ ஒரு கொலையில் ப‌ரீட்சித்துப் பார்க்க‌ எவ‌ருக்கும் அவ்வளவாய் உட‌ன்பாடில்லை. என‌வே கிழ‌வ‌ர்க‌ளையும் இற‌க்க‌முடியாது. ஆக‌ இவ்வாறாக‌ ஹேமாக்காவை வெளியே எடுப்ப‌து பெரும் சிக்க‌லாகிவிட்ட‌து. வெளியே நிற்கிற‌ ச‌ன‌ம் என்ன‌ செய்வ‌து என்று கையைப் பிசைந்துகொண்டிருப்ப‌தைப் பார்த்துப் பார்த்து ச‌லித்தே ஹேமாக்கா தான் இந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதிக்கமுன்ன‌ர் த‌ன் முடிவை ஆழ‌ ம‌றுப‌ரிசீல‌னை செய்திருக்க‌லாம் என்று கூட நினைத்திருக்க‌லாம்.

க‌டைசியாய், இர‌ண்டுப‌க்க‌மும் கையிருக்கிற‌ க‌திரையிலை நான்கு க‌யிறைக் க‌ட்டி ஒரு பெட்டியை இற‌க்கிற‌மாதிரித்தான் க‌திரையை இற‌க்கிச்சின‌ம். ஹேமாக்கா க‌திரையிருந்து நாலு க‌யிற்றில் இர‌ண்டு க‌யிற்றைக் கையிர‌ண்டாலும் பிடிக்க‌, வெளியிலிருந்து ச‌ன‌ம் தூக்க‌த்தொட‌ங்கிச்சினம். சூர‌ன்போரிலை சூர‌னையும் முருகையும் அங்கால் ப‌க்க‌ம் இங்கால் ப‌க்க‌ம் ஆட்டுகின்ற‌ மாதிரி கிண‌த்தின்றை உட்சுவ‌ரிலை அடிப‌ட்டு அடிப‌ட்டு ஹேமாக்கா வெளியே வ‌ந்திருந்தா. அவாவைப் பார்க்க‌ச் ச‌ரியாய்ப் பாவ‌மாயிருந்த‌து. ம‌ழைக்கால‌த்திலை ந‌னைகின்ற‌ கோழிக்குஞ்சுக‌ள் மாதிரி பாவாடை ச‌ட்டை எல்லாம் ந‌னைந்து கூனிப்போயிருந்தா. அத்தோடு ச‌ன‌மெல்லாம் ஒரு மாதிரியாய்ப் பார்த்த‌ பார்வை அவாவையின்னும் கூனிக்குறுக‌ச் செய்திருக்கும்.

2.
ஹேமாக்கா கிண‌ற்றில் விழுந்த‌ற்கான‌ கார‌ண‌த்தை ச‌ன‌ம் அல‌சிப் பிழிவ‌த‌ற்கு முன்ன‌ரே என‌க்கு அத‌ற்கான‌ கார‌ண‌ம் தெரிந்திருந்த‌து. உண்மையிலேயே ச‌ன‌ம் ஹேமாக்காவைக் குற்ற‌வாளிக்கூண்டில் ஏற்றினால் நானுமோர் சாட்சியாக‌ ஏறத்தான் வேண்டியிருக்கும். ஆனால் அவ்வாறான பொழுதில் மவுனமாய் இருந்திருப்பேனே த‌விர‌ ஹேமாக்காவிற்கு எதிராய் எதுவும் சொல்லியிருக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொல்வேன். எனெனில் ஹேமாக்கா அவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வா; என‌க்கும் அவாவை எங்க‌டை அமமாவிற்கு பிற‌கு அப்ப‌டிப் பிடிக்கும்.

எங்க‌ள் வீட்டையும், ஊரிலையிலிருந்த‌ ப‌ள்ளிக்கூட‌த்தையும் பிரிப்ப‌து ஒரு ரோட்டுத்தான். க‌ல்லு நிர‌ப்பி தார் ஊற்றி ச‌ம‌த‌ள‌மாய் அமைப்ப‌துதான் தெருவென்றால், இதைத் தெருவென்றே கூற‌முடியாது. ஒரு வெள்ள‌வாய்க்காலாய் இருந்து கால‌ப்போக்கில் பரிணாமடைந்து ஒரு ஒழுங்கையாகிவிட்ட‌து என்றுதான் சொல்ல‌வேண்டும். ம‌ழை பெய்து வெள்ள‌ம் ஓடுகின்ற‌ வேலையில் வாழைக்குற்றியில் வ‌ள்ள‌ம் விடுவ‌த‌ற்கு மிக‌ உக‌ந்த‌ இட‌மென‌ச் சொல்ல‌லே இன்னும் சால‌ச் சிற‌ந்த‌து. அவ்வாறு எங்க‌ள் வீடுக‌ளையும், ப‌ள்ளிக்கூட‌த்தையும் பிரிக்கின்ற‌ ஒழுங்கையினூடு நீங்க‌ள் செல்வீர்க‌ளாயின் 'ட‌'வ‌டிவில் நீங்க‌ள் வ‌ல‌து கைப்ப‌க்க‌மாய் திரும்பினால் ஒரு ஹொஸ்ட‌லைக் காண்பீர்க‌ள். அங்கேதான் தூர‌ இட‌ங்க‌ளிலிருந்து வ‌ந்து பெடிய‌ன்க‌ள் ப‌டித்துக்கொண்டிருப்பார்க‌ள். ஹொஸ்ட‌லிலிருந்து பின்ப‌க்க‌மாய் ஒழுங்கைக்குள் நுழைவதற்கு இருக்கும் கேற் எப்ப‌வும் பூட்டிய‌ப‌டியேதான் இருக்கும். என‌வே ஹெஸ்ட‌லுக்குப் போவ‌த‌ற்கோ அல்ல‌து அங்கிருந்து வெளியே வ‌ருவ‌த‌ற்கோ நீங்க‌ள் உய‌ர‌ம் பாய‌த‌லில் தேர்ச்சி பெற்ற‌வ‌ராக‌ இருக்க‌வேண்டும். எனெனில் ம‌திலேறிக் குதிக்க‌வேண்டும். என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் ஹொஸ்ட‌லில் ப‌ட‌ம் போடும்போது, ப‌ட‌ம் தொட‌ங்கிய‌பின் இருட்டோடு இருட்டாய் உள்ளே மதிலேறிக்குதித்துப் போய்விடுவோம். ப‌ட‌ம் தொட‌ங்க‌ப்போகின்ற‌தென்றால் ஹொஸ்ட‌லில் இருக்கும் அண்ணாமார்க‌ள் விசில‌டிப்பார்க‌ள். நாங்க‌ள் முன்னேறிப்பாய்வ‌த‌ற்குத் த‌யாராய் ஹொஸ்ட‌ல் ம‌தில‌டிக்க‌டியில் நின்றுகொண்டு இருப்போம். ஆனால் நாங்கள் சிறுவர்களாயிருந்ததால் மதிலில் ஏற்றிவிடுவதற்கு யாரினதோ உதவி தேவையாகவிருக்கும். இவ்வாறாக‌ நிறைய‌ப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்திருக்கின்றோம், சில‌ அண்ணாக்களின் பிற‌ந்த‌நாள் கொண்டாட்டங்க‌ளில் க‌ல‌ந்துகொண்டிருக்கின்றோம்.

ஹொஸ்ட‌லிருக்கும் பெடிய‌ங்க‌ளுக்கு சில‌வேளைக‌ளில் க‌ர‌ண்டில்லாவிட்டால் குளிக்க‌த் த‌ண்ணியில்லாது போய்விடும். அப்போது ம‌டடும் பின்ப‌க்க‌ கேற் திற‌க்க‌ப்ப‌ட்டு எங்க‌ள் வீட்டுக்கிண‌றுக‌ளில் குளிக்க‌ ஹொஸ்ட‌ல் நிர்வாக‌த்தால் அனும‌திக்க‌ப்ப‌டுவார்க‌ள். ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்டால், எங்க‌டை ஊரும் அல்லோல‌க‌ல்லோல‌ப்ப‌ட்டுவிடும். இன்னும் குறிப்பாக‌ச் சொல்ல‌ப்போனால், ஊரிலையிருக்கிற‌ கும‌ர்ப்பெட்டைய‌ளுக்குத்தான் உள்ளூற‌ ம‌கிழ்ச்சி த‌தும்பியோடியபடியிருக்கும். அதுவ‌ரை வீட்டிலை அம்மாமார் 'பிள்ளை த‌ண்ணிய‌ள்ளிக்கொண்டு வாங்கோ' என்றால் ஓடிப்போய் ஒளித்துக்கொள்ப‌வ‌ர்க‌ள் கூட ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்றால் வாளியோடு கிண‌த்த‌டிக்கு அடிக்க‌டி போவதும் வருவதுமாய் இருப்பார்கள். கிண‌த்த‌டியில் விழிக‌ளும், புருவ‌ங்க‌ளும் நிக‌ழ்த்துகின்ற‌ உரையாட‌ல்க‌ளுக்கு காப்பிய‌ங்க‌ளின் சுவை கூட‌ நிக‌ரான‌வையா என்ப‌து ச‌ந்தேக‌ந்தான். தாங்க‌ள் இர‌க‌சியாய்ப் பெண்க‌ளால் இர‌சிக்க‌ப்ப‌டுகின்றோம் என்று, ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ளுக்கும் ந‌ன்கு தெரியும். என‌வே ஹொஸ்ட‌லை விட்டு வ‌ரும்போது ஏதோ பெரிய‌ ஊர்வ‌ல‌ம் வாற‌ மாதிரி க‌த்திக் குழறி த‌ங்க‌ளை வ‌ர‌வை ப‌றைசாற்றிக்கொண்டே வ‌ருவார்க‌ள். இன்னுஞ்சில‌ர் உற்சாக‌த்தின் மிகுதியில் சேர்ட் எல்லாம் க‌ழ‌ற்றி கையில் வைத்த‌ப‌டி, த‌ம‌து 'ஆண்மையை' காட்டமுய‌ற்சிப்பார்க‌ள். அந்த‌ நேர‌த்தில் எத்த‌னையோ வீடுக‌ளின் வாச‌ல்க‌ளில் இருந்து வெளிவ‌ந்த‌ பெருமூச்சுக்களின் வெப்ப‌த்தில் அடுப்புக‌ளில் தீ கூட‌ ப‌ற்றியெரிந்திருக்க‌லாம்.

இப்ப‌டி குளிக்க‌ வ‌ந்த‌ பொழுதிலோ அல்ல‌து வேறு ச‌ந்த‌ர்ப்ப‌த்திலோதான் ஹேமாக்காவிற்கும் சசி அண்ணாவுக்கும் நேச‌ம் முகிழ்ந்திருக்க‌வேண்டும். அவ‌ர்க‌ளுக்கிடையிலான‌ ஊடாட்டட‌ங்க‌ளுக்கு நானொரு தூதுவ‌னாக‌ மாற‌வேண்டியிருந்த‌து. க‌டித‌ப்ப‌ரிமாற்ற‌ங்க‌ள், உட‌ன‌டிச் செய்திக‌ள், திட்ட‌ மாற்ற‌ங்க‌ள் என்று ப‌ல்வேறு ப‌ரிணாங்க‌ளில் ஊழிய‌ம் செய்து அவ‌ர்க‌ளின் காத‌லுக்கு நானொரு த‌விர்க்க‌முடியாத‌ தீவிர‌ தொண்ட‌னானேன். இவ்வாறான‌ ஊழிய‌ங்க‌ளுக்கு ஹேமாக்கா த‌ங்க‌டை வீட்டில் நின்ற‌ மரங்களிலிருந்து விளாம்ப‌ழ‌ங்க‌ள், தோட‌ம்ப‌ழ‌ங்க‌ளையும், ஆல‌ம‌ர‌த்த‌டிச் ச‌ந்தியிலிருந்த‌ முருக‌ன் விலாஸில் எட்னா, க‌ண்டோஸ் வ‌கையான‌ சொக்கிலேட்டுக்க‌ளையும், வாய்ப்ப‌ன்க‌ளையும் போண்டாக்க‌ளையும் ச‌ன்மான‌மாக‌ அளித்து த‌ன‌து அன்பையும் ம‌திப்பையும் வெளிப்ப‌டுத்தியிருந்திருக்கிறார்.

ஒருநாள் இப்ப‌டித்தான் ஹேமாக்காவும், சசியண்ணாவும் ஹெஸ்ட‌ல் ம‌திலடியில் ச‌ந்திப்ப‌தாய் ஏற்பாடு. வ‌ழ‌க்க‌ம்போல‌ நிக‌ழ்வ‌துபோல‌ ஹேமாக்கா என்னை ம‌திலால் தூக்கிப்பிடிக்க‌ நான் விசில‌டித்து சசிய‌ண்ணாவுக்கு சிக்ன‌ல் அனுப்பினேன். இவ்வாறான ச‌ந்திப்புக்க‌ள் ந‌ல்லாய்ப் பொழுதுப‌ட்டு, இர‌வு மூடுகின்ற‌ ஏழும‌ணிய‌ள‌வில்தான் ந‌ட‌க்கும். அப்போதுதான் ஒழுங்கைக்குள் ச‌ன‌ ந‌ட‌மாட்ட‌ம் குறைவாயிருக்கும். அத்தோடு ச‌ன‌ம் த‌ற்செய‌லாய்க் க‌ண்டாலும் யாரென்று முகம் பார்ப்பதற்குள் த‌ப்பியோடக்கூடிய‌தாக‌வும் இருக்கும். நான் ம‌திலுக்குள்ளால் எட்டிப்பார்த்து சசிய‌ண்ணா வாறாரா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். குர‌லை வைத்துத்தான் அடையாள‌ம் காண‌க்கூடிய‌ள‌வுக்கு அன்று ந‌ல்ல‌ இருட்டு. என்னுடை விசில் ச‌த்த‌ம் கேட்டு வ‌ந்த‌ சசிய‌ண்ணா என்னுடைய கையைப் பிடித்தார். ஆனால் இப்ப‌டி ஒருநாளும் இறுக்க‌மாய்ப் பிடிப்ப‌தில்லையே என்று 'ஆ... கை நோகின்ற‌தென்று' நான் சொல்ல‌, 'யாரடா நீ உன‌க்கென‌ன‌ இந்த‌ நேர‌த்திலை இங்கே வேலை?' என்று ஒரு குர‌ல் கேட்ட‌து. இது நிச்ச‌யமாய் சசிய‌ண்ணாவின் குர‌லில்லை. 'ஐயோ இது ஹொஸ்ட‌ல் வோட‌னின்ரை குர‌லெல்லோ' என்று என‌க்கு உட‌ம்பு ந‌டுங்க‌த் தொட‌ங்கிவிட்ட‌து. த‌ப்பியோட‌லாம் என்றால் ம‌னுச‌ன் கையை விடுகிற‌தாகவும் இல்லை. அங்காலை ஹேமாக்கா என்ரை காலைத் தூக்குபிடித்துக்கொண்டு நிற்கிறா. 'எத‌ற்க‌டா இப்ப‌ விசில‌டித்தாய்?' என்று அந்த‌ ம‌னுச‌ன் உறுமுகிற‌து. ப‌க‌ல் வேளைக‌ளில் நாங்க‌ள் ப‌க்க‌த்திலையிருக்கிற‌ ப‌ற்றைக் காணிக்குள்ளை கிரிக்கெட் விளையாடும்போது ரெனிஸ் போல் சில‌வேளைக‌ளில் ஹொஸ்ட‌லுக்குள் விழுவ‌துண்டு. அவ்வாறான‌ த‌ருண‌ங்க‌ளில் நாங்க‌ள் ம‌திலுக்கு இங்காலை நின்று 'ப‌ந்தை எடுத்துத்தாங்கோ' என்று க‌த்துவோம். அப்ப‌டியொருத்த‌ரும் எடுத்துத் த‌ர‌ இல்லையெண்டால் நாங்க‌ளாகவே ம‌திலேறிக் குதித்து ப‌ந்தை எடுப்போம். அப்ப‌டி இற‌ங்கியெடுக்கும்போது வோட‌னின் க‌ண்ணில்ப‌ட்டால் ப‌ந்து எடுக்க‌வ‌ந்தோம் என்று சொல்லித் த‌ப்பிவிடுவ‌துண்டு. இப்ப‌ வோட‌ன் என்ரை கையைப் பிடித்துக்கொண்டு 'யார‌டா நீ யாற்றை மோன‌டா நீ'? என்று வெருட்ட‌, என‌க்கு எல்லா அறிவும் கெட்டு, 'ரெனிஸ் போல் விழுந்துவிட்ட‌து எடுக்க‌வ‌ந்த‌ன்' என்டு வாய்த‌வ‌றி உள‌றிவிட்டேன். இந்த‌ இருட்டுக்குள்ளை யார்தான் ரெனிஸ் போல் தேட‌ வ‌ருவாங்க‌ள், வேறேதோ விவகார‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து என்று வோட‌னுக்கு இப்ப‌ ந‌ல்லா விள‌ங்கிட்டுது. ச‌னிய‌ன் பிடித்த‌ ம‌னுச‌ன் என்னை விடுவ‌தாயில்லை. இனியும் இப்ப‌டிக்காரண‌ஞ் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லாவ‌ற்றையும் போட்டுக் கொடுக்க‌வேண்டிவ‌ரும் என்ற‌நிலையில் ச‌ட்டென்று வோட‌னின் பிடியிலிருந்து ஒரு கையை உத‌றியெடுத்து ந‌ல்லாய் 'நொங்கென்று' அவ‌ற்றை த‌லையில் குட்டினேன். ம‌னுச‌னுக்கு நொந்திருக்க‌வேண்டும்; மற்றக் கையின் பிடியைத் த‌வ‌ற‌விட்டார். நானும் ஹேமாக்காவும் பேய் ஒன்று எங்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌மாதிரி பின்ன‌ங்கால் த‌லையில்பட எங்க‌டை வீடுக‌ளுக்கு ஓடிப்போய்ச் சேர்ந்திருந்தோம்.

எப்ப‌டிப் ப‌த்திர‌மாய் பொத்தி பொத்தி வைத்தாலும் எந்த‌ விஷ‌ய‌ம் என்றாலும் ஒருநாள் வெளியே வ‌ர‌த்தானே செய்யும். அப்ப‌டித்தான் ஒருநாள் ஹேமாக்கா-சசிய‌ண்ணா காத‌லும் ஹேமாக்கா வீட்டுக்குத் தெரிய‌வ‌ர. இர‌ண்டு நாளாய் வீட்டில் அறைக்குள் வைத்து ஹேமாக்காவிற்கு செம அடி. அவா பிடிவாத‌மாய் சசிய‌ண்ணாவைத்தான் காத‌லிப்ப‌ன், க‌லியாண‌ங்க‌ட்டுவன் என்று நின்றிருக்கிறா. இர‌ண்டு நாளாய் அறைக்குள்ளையே பூட்டிவைத்திருக்கின‌ம். இனி பிடிவாத‌த்தை விட்டுவிட்டுவாள் என்று நினைத்து மூன்றாம் நாள் வெளியே விட‌த்தான் ஹேமாக்கா இப்ப‌டி கிண‌த்துக்குள்ளை குதித்திருக்கிறா. இப்ப‌ ஹேமாக்காவின் காத‌ல் ஊருல‌க‌த்திற்கு எல்லாம் தெரிய‌வ‌ந்துவிட்ட‌து. இப்ப‌டியாக ஹேமாக்கா-சசியண்ணா விடயத்தில் ஒரு முடிவும் காண‌முடியாது இழுப‌றியாக‌ போன‌போதுதான் இந்திய‌ன் ஆமிப் பிர‌ச்சினை வ‌ந்த‌து. ப‌ள்ளிக்கூட‌மெல்லாம் பூட்ட‌ ஹொஸ்ட‌லிலிருந்த‌ பெடிய‌ங்க‌ளும் த‌ங்க‌ள் த‌ங்க‌ள் ஊருக‌ளுக்குப் போக‌த் தொட‌ங்கிட்டின‌ம். ஹேமாக்காவின் பெற்றோருக்கும் 'அப்பாடா இந்த‌ப்பிர‌ச்சினை இப்படிச் சுமுக‌மாய் முடிந்துவிட்ட‌தே' என்று பெரிய‌ நிம்ம‌தி. ஊர்ச்ச‌ன‌த்தின் வாய்க‌ளும் இப்போது ஹேமாக்காவின் க‌தையைவிட‌ இந்திய‌ ஆமிப்பிர‌ச்சினையைப் ப‌ற்றித்தான் அதிக‌ம் மென்று துப்பத் தொட‌ங்கிவிட்ட‌து. சண்டை தொடங்கியதால், என‌க்கும் ப‌ள்ளிக்கூட‌ம் இல்லையென்றப‌டியால் நானும் ஹேமாக்கா வீட்டிலைதான் அதிக‌ம் பொழுதைக் க‌ழிக்கத்தொடங்கினேன். இந்தியன் ஆமிக்கும் புலிக‌ளுக்கும் ச‌ண்டை தொட‌ங்கி எங்க‌டை ஊர்ச் ச‌ன‌மெல்லாம் உண‌வில்லாது ச‌ரியாய்க் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில். ம‌க்க‌ளைத் த‌ங்க‌ளுக்குள் உள்ளிழுக்க‌வேண்டுமென்றால் அவ்வ‌ப்போது நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌வேண்டுமென்று -உல‌க‌த்திலுள்ள‌ எல்லா அதிகார‌ அர‌சுக‌ளும் நினைப்ப‌துபோல‌- இந்திய‌ன் ஆமியும் த‌ங்க‌டை முகாங்களுக்குச் ச‌ன‌த்தைக்கூப்பிட்டு சாமான்க‌ள் கொடுப்பான‌கள். ஒரு வீட்டிலையிலிருந்தும் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ பெடிய‌ள் பெட்டைக‌ளை இந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கு அனுப்புவ‌தில்லை; 'எதுவுமே' ந‌ட‌க்கால‌மென்ற‌ ப‌ய‌ந்தான். ஆக‌வே ப‌த்துவ‌ய‌சுக்குள்ளையிருந்த‌ என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள்தான் ஆமிக்கார‌ன் த‌ருகின்ற‌ நிவார‌ண‌த்துக்கு கியூவிலை நிற்ப‌ம். ஒருமுறை ஆமிக்கார‌ன் த‌ன்ரை ஹெல்மெட்டாலை அள்ளிய‌ள்ளி கோதுமை மாவை நிவார‌ணமாகத் தந்த‌பொழுதில்தான், காவ‌லில் நின்ற‌ இன்னொரு ஆமிக்கார‌ன் என்னைக் கூப்பிட்டு ஒரு கூலிங் கிளாஸைத் த‌ந்தான். என‌க்கென்டால் அந்த‌மாதிரிச் ச‌ந்தோச‌ம். அவ்வ‌ள‌வு பேர் கியூவிலை நிற்கேக்கை என‌க்கு ம‌ட்டும் ஆமிக்கார‌ன் கூலிங்கிளாஸ் தாறானென்டால் நான ஏதோ வித்தியாச‌மானவனாய்த்தானே இருக்க‌வேண்டும். நான் ஊருக்குள்ளை ஓடிப்போய் ஒவ்வொர் வீட்டிலையும் ஏறியிற‌ங்கி ஆமிக்கார‌ன் என‌க்கு 'கூல்டிங்' கிளாஸ் த‌ந்துவிட்டான் என்று பெருமைய‌டித்துக்கொண்டிருந்தேன். 'அது 'கூல்டிங்' கிளாஸ் இல்லைய‌டா கூலிங் கிளாஸ்' என்று ஹேமாக்கா தான் திருத்தினா. 'உங்க‌ளுக்கு ஒரு கூல்டிங் கிளாஸ் கிடைக்க‌வில்லை என்று பொறாமை அதுதான் நான் சொல்வ‌தை நீங்க‌ள் பிழையெண்டிறிய‌ள்' என்று நான் சொல்ல‌ ஹேமா சிரித்துக்கொண்டிருந்தா. ஹேமாக்கா சிரிக்கிற‌து எவ்வ‌ள‌வு அழ‌கு. அவாவின்ரை ப‌ற்க‌ளின் விம்பம் கூலிங் கிளாஸில் தெறிப்ப‌தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் நானும் ஹேமாக்காவும் அவ‌ங்க‌டை வீட்டிலை தனியே இருக்கேக்கை இந்தியன் ஆமிக்கார‌ன்க‌ள் செக்கிங்குக்கு என்டு வ‌ந்தாங்க‌ள். செக்கிங்கில் வ‌ந்த‌ ஆமிக்கார‌ங்க‌ளில் என‌க்கு கூலிங்கிளாஸ் த‌ந்த ஆமிக்கார‌னுமிருந்தான். நான் அப்போதும் அந்த‌ கூலிங்கிளாசை என்னோடுதான் வைத்திருந்தேன். அந்த‌ ஆமிக்கார‌ன், bomb bomb என்றான். எங்கையோ குண்டை ஒளித்துவைத்திருக்கின்றம் என்டு ஐமிச்சத்தில் அவன் தேடுகின்றான் போல‌ என்று முதலில் நினைத்தேன். No Sir No Bomb என்று ஹேமாக்கா த‌ன‌க்குத் தெரிந்த‌ ஆங்கில‌த்தில் சொன்னா...ஆமிக்கார‌ன் bomb bomb என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருந்தான். you bomb என்றான்....ஹேமாக்கா bomb ஒளித்துவைத்திருக்கிறா என்றமாதிரி அவாவோடை மார்பைப் பிடித்தான்....அக்காவிற்கு என்ன செய்வ‌தென்டு திகைப்பு....நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற‌ன் என்று ஆமிக்காரனுக்கு நினைவுக்கு வ‌ந்திருக்கோனும். you bomb you bomb என்று சொல்லிக்கொண்டு முன்னாலிருந்த‌ அறைக்குள்ளை ஹேமாக்காவைக் கொண்டு போனான்...நான் விளையாடுகின்ற‌மாதிரி பாவனை செய்துகொண்டு ஓர‌க்கண்ணால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த‌ அறைக்கு உள்ளே கொக்கி போட்டு மூடினால்தான் பூட்ட‌ப்ப‌டும். ஆமிக்கார‌னுக்கு 'செக்கிங்குக்காய்' அடுத்த‌ வீட்டுப் போகும் அவ‌ச‌ர‌மோ அல்ல‌து கொக்கி போட்டு அறையை மூடினால் நான் க‌த்தி சனத்தைக் கூட்டிடுவேனே என்று நினைத்தானோ தெரியாது...மெல்லிய‌தாய் க‌தவைச் சாத்தினான்...அதனால் அறை முழுதாய் மூடப்ப‌டாது கொஞ்ச‌ம் நீக்க‌லுட‌ன் திற‌ந்த‌ப‌டியிருந்த‌து. you bomb bomb என்டு ஹேமாக்காவின் ச‌ட்டையைக் க‌ழ‌ற்ற‌ச் சொன்னான். பிற‌கு அக்காவைச் சுவ‌ரோடு அழுத்தியபடி ஆமிக்கார‌னின் பின்புற‌ம் அங்குமிங்குமாய் அசைவ‌தும‌ட்டுமே தெரிந்த‌து. ஆமிக்கார‌ன் 'செக்கிங்' முடித்துப்போன‌போது என‌க்கு அவ‌ன் த‌ந்த‌ கூலிங்கிளாஸ் பிடிக்க‌வில்லை. வீட்டை அதைக் கொண்டுபோய் அம்மம்மா பாக்கு இடிக்கிற‌ க‌ட்டையாலை அதை அடித்து உடைத்தேன்.

இந்திய‌ன் ஆமி வெளிக்கிட‌, வ‌ந்த‌ பிரேம‌தாசாவின் ஆட்சிக்கால‌த்தில் சசிய‌ண்ணா ஒருநாள் எங்க‌ள் ஊருக்கு வ‌ந்திருந்தார். எல்லாச் ச‌னிய‌னும் இந்திய‌ன் ஆமிக்கால‌த்தோடு ஒழிந்துவிட்ட‌தென‌ நினைத்த‌ ஹேமாக்காவின் பெற்றோருக்கு, சசிய‌ண்ணா த‌ன‌க்கு ஹேமாக்காவைக் க‌லியாண‌ங்க‌ட்டித்த‌ர‌க்கேட்ப‌த‌ற்காய் வ‌ந்திருந்த‌து அதிர்ச்சியாயிருந்த‌து. ஏற்க‌ன‌வே எடுத்த முடிவையே திரும்ப‌வும் சொன்னார்க‌ள். 'ஏலாது' என்று ஹேமாக்காவின் பெற்றோர் உறுதியாய்ச் சொன்ன‌தோடு, சசிய‌ண்ணா திரும்பி அவ‌ருடைய ஊருக்குப் போய்விட்டார். எல்லாம் சுமுகமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்த‌ ஒருபொழுதில் ஹேமாக்காவைக் காண‌வில்லையென்று ஊரெல்லாம் தேட‌த்தொட‌ங்கியது. பிற‌கு ஹேமாக்கா சசிய‌ண்ணாவோடு சேர்ந்து ஓடிப் போய்விட்டா என்ப‌து எல்லோருக்குந் தெரிய‌வ‌ந்த‌து. 'ஏன் ஹேமாக்கா இங்கேயிருக்காது தூர இட‌த்திற்கு ஓடிப்போன‌வா?' என்று அம்மாட்டை நான் கேட்ட‌த‌ற்கு, 'சும்மா வாயை மூடிக்கொண்டிரு' என்றுதான் அம்மா அந்த நேரத்திலை சொன்னா. பின்னாட்க‌ளில் அப்ப‌டி ஹேமாககா ஓடிப்போன‌த‌ற்கு சசிய‌ண்ணாவும் ஹேமாக்காவும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற‌ கார‌ண‌த்தை அறிந்தேன். ஊரிலையிருந்து ச‌ன‌ம் கொழும்புக்குப் போய்விட்டு வ‌ருகின்ற‌போது ஹேமாக்காவும், சசிய‌ண்ணாவும் கிளிநொச்சிப் ப‌க்க‌மாய் இருக்கின‌ம் என்று த‌க‌வ‌லை அறிந்து சொல்லிச்சு. நாள‌டைவில் ஹேமாக்காவை ம‌ற‌க்க‌ வைக்கும்ப‌டி போர் எங்க‌டை ஊர்ப்ப‌க்க‌மாய் திரும்ப‌வும் உக்கிர‌மாக‌த் தொட‌ங்கிய‌து.

4.
95ம் ஆண்டு யாழில் நிக‌ழ்ந்த‌ பெரும் இடம்பெய‌ர்வின்போது எங்க‌ளுக்கு முத‌லில் அடைக்க‌லந்த‌ந்த‌து ஹேமாக்க‌வும் சசிய‌ண்ணாவுந்தான். காட்டையும் குள‌த்தையும் அண்டியிருந்த‌ அவைய‌ளின்றை ம‌ண்ணால் மெழுகிப் பூசியிருந்த‌ வீடு உண்மையிலேயே அந்த‌ நேர‌த்திலே சொர்க்க‌மாய்த்தானிருந்த‌து. சில‌ மாத‌ங்க‌ள் ஹேமாக்கா வீட்டையிருந்துவிட்டு நாங்க‌ள் த‌னியே இன்னொரு இட‌த்திற்குப் போயிருந்தோம். ஆனால் அதிக‌மாய் ஒவ்வொரு பின்னேர‌மும் நான் ஹேமாக்கா வீட்டுப்பக்கமாய் வ‌ந்துபோய்க்கொண்டிருந்தேன். ப‌தின்ம‌ங்க‌ளில் நான் இருந்த‌ ப‌ருவ‌ம். எல்லாவ‌ற்றையும் மூர்க்க‌மாய் நிராக‌ரித்துக்கொண்டு நான் ம‌ட்டும் சொல்வ‌து, செய்வ‌தே ச‌ரியென்று உடும்புப்பிடி பிடித்துக்கொண்டிருந்த‌ கால‌ம‌து. நானும் சசிய‌ண்ணாவும் அடிக்க‌டி அர‌சிய‌ல் பேசிச் சூடாகிக் கொண்டிருப்போம். அவ‌ருக்கு எங்க‌டை பிர‌ச்சினையில் நிதான‌மாய் இந்தியாவை அணுகியிருக்க‌வேணும் என்ற‌ ஒரு எண்ண‌ம் இருந்த‌து. அதாவ‌து இந்தியாவோடு அணுச‌ர‌ணையாய் இருந்திருந்தால் எங்க‌ளின் பிர‌ச்சினை எப்ப‌வோ தீர்ந்திருக்குமென்ப‌து அவ‌ருடைய‌ அசைக்க‌முடியாத‌ ந‌ம்பிக்கை. எங்க‌ளின் இந்த‌ முர‌ண் அர‌சியல் விவாத‌ங்க‌ளை சில‌வேளைகளில் செவிம‌டுக்கிற‌ ஹேமாக்கா, 'உங்க‌ள் இர‌ண்டுபேராலையே ஒரு விச‌ய‌த்துக்கு பொதுவான‌ முடிவுக்கு வ‌ர‌முடியாது இருக்கும்போது எப்ப‌டித்தான் எங்கடை ச‌ன‌த்துக்கு எல்லாம் பொதுவாய் வாற‌ தீர்வு கிடைக்க‌ப்போகின்ற‌தோ தெரியாது' என்று சிரித்துக்கொண்டு சொல்லுவா.

ஒருநாள் இப்ப‌டித்தான் வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌ல் பேசி நான் மிக‌வும் கொந்த‌ளித்துக்கொண்டிருநத‌ நேர‌ம். அந்த‌ நேர‌த்தில் சசிய‌ண்ணாவை அடித்தால் கூட‌ப் ப‌ர‌வாயில்லை என்ற‌மாதிரி அவர் மீதான கோப‌ம் நாடி ந‌ர‌ம்புக‌ளில் ஏறிக்கொண்டிருந்த‌போது என்னைய‌றியாம‌லே, 'நீங்க‌ள் ஒரு ம‌னுசரே, எங்கடை ஹேமாக்காவை இந்திய‌ன் ஆமி கெடுத்தாப்பிற‌கும் அவ‌ங்க‌ளைச் ச‌ப்போர்ட் ப‌ண்ணிக்கொண்டிருக்கிறிய‌ள்' என்றேன். என‌க்கே நான் என்ன‌ சொன்னேன் என்று அறிய‌முடியாத‌ உண‌ர்ச்சியின் கொந்த‌ளிப்பு. யாரோ க‌ன்ன‌த்தில் ப‌டாரென்று அறிந்த‌மாதிரி ச‌ட்டென்று எங்கள் எல்லோருக்குள்ளும் தாங்கிக்கொள்ள‌வே முடியாத‌ மிக‌ப்பெரும் ம‌வுன‌ம் கவிழ்ந்திருந்தது. அதுவரை வாஞ்சையோடு என்னைப் பார்க்கும் ஹேமாக்காவின் விழிக‌ள் அப்ப‌டியே உறைந்துபோயிருந்த‌ன. என்ன‌ வித‌மான‌ உண‌ர்ச்சியென்று இன‌ம்பிரித்தறியா முடியாத‌ள‌வுக்கு நான் குற்ற‌த்தின் க‌ட‌லுக்குள் மூழ்க‌த்தொட‌ங்கியிருந்தேன். எதுவுமே சொல்லாம‌ல் எவ‌ரிட‌மும் முறையாக‌ விடைபெறாது நான் வீட்டை போய்ச் சேர்ந்திருந்தேன்.

அடுத்த‌ நாள் விடிய‌ அம்மா, 'டேய் த‌ம்பி ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா என்டு ச‌ன‌ம் சொல்லுது... ஓடிப்போய் என்ன‌ நடந்ததெண்டு பார்த்திட்டு வா' என்று ப‌ட‌பட‌வென்டு கையால் த‌ட்டி எழுப்புகிறா. நான் வோட‌ன் என்னைப் பிடிக்க முயன்ற பொழுதை விட‌ வேகமாய் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அறிய‌ சைக்கிளையெடுத்துக்கொண்டு ஓடுகின்றேன். ஹேமாக்காவுக்கு ஒன்றும் ந‌ட‌ந்திருக்க‌க்கூடாது என்று எங‌கள் ஊர் வைர‌வ‌ரை நேர்ந்துகொண்டு சைக்கிளை வேக வேகமாய் உழக்குகின்றேன். ஹேமாக்காவை குள‌த்துக்குள்ளாலை இருந்து தூக்கிக்கொண்டு வ‌ருகின‌ம். 'ஐயோ ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா எல்லோரும் ஓடிவாங்கோ' என்று, சிறுவனாய் இருக்கும்போது நான் கத்தியது மாதிரி இப்போது க‌த்த‌முடியாது நான் உறைந்துபோய் நிற்கின்றேன். சசிய‌ண்ணா என் கையைப்பிடித்துக்கொண்டு, 'இந்திய‌ன் ஆமி உம்ம‌ளை கெடுத்த‌து ப‌ற்றி இதுவ‌ரை ஏன் என்ன‌ட்டை சொல்லேலை என்டு ம‌ட்டுந்தான் கேட்ட‌னான் வேறொன்றுமே கேட்க‌வில்லை. ஒன்டுமே பேசாம‌ல் இருந்த‌வா இப்ப‌டிச் செய்வா என்டு நான் க‌ன‌விலையும் நினைத்துப் பார்க்க‌வில‌லை' என்று ந‌டுங்கும் குர‌லில் சொல்லிக்கொண்டு இருந்தது என‌க்கு யாரோ பங்கருக்குள்ளிலிருந்து முணுமுணுப்பதுபோலக் கேட்கிற‌து. 'ஹேமாக்கா எழும்புங்கோ நான் வ‌ந்திருக்கின்றேன். உங்க‌ளுக்குத் தெரியுமா உங்க‌ளுக்கு அண்டைக்கு ஆமி அப்ப‌டிச் செய்த‌தைப் பார்த்த‌போது நான் அவ்வளவு காலமும் க‌வ‌ன‌மாய்ப் பொத்திவைத்திருந்த‌ கூலிங்கிளாசையே உடைத்து நொறுக்கின‌வ‌ன்.... நீங்க‌ள் எப்ப‌வும் எங்க‌டை ஹேமாக்காதான். எழும்புங்கோ...எழும்புங்கோ' என்டு ம‌ன‌ம் விடடுக்குழ‌றி அழ‌வேண்டும் போல‌ இருக்கிற‌து. கொலைக‌ளைச் செய்த‌வ‌ர்க‌ளால் ம‌ன‌தை லேசாக்க‌ அழ‌முடிய‌வதில்லை; உள்ளுக்குள்ளேயே ம‌றுகி உருகி த‌ங்க‌ளின் பாவ‌ங்கள் எப்ப‌வாவ‌து க‌ரையாமாட்டாதா என்று காலம் முழுதும் ஏங்கிக் கொண்டிருக்க‌வேண்டிய‌துதான்.



ந‌ன்றி: கால‌ம் (2009)